கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்

Loading

ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானத்தை பாசிசத் தன்மையிலான தமிழ்த் தேசியத்துக்கு ஓர் அடையாளமாகச் சொல்ல முடியும். அவர் இங்குள்ள 30 சத மொழிச் சிறுபான்மையரையும் ஒட்டுமொத்தமாக வெளியே நிறுத்தும் தேசியவாதத்தை முன்வைத்தவர். அதில் பார்ப்பனர்களை உள்ளடக்கியதோடு, இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர். மதச் சிறுபான்மையைப் பற்றி அவர் ஒன்றும் பேசவில்லையாயினும் அவரது பார்ப்பனிய ஆதரவு, இந்து மத அடையாளத்திற்கான அழுத்தம் என்பன இயல்பாகவே மதச் சிறுபான்மையினரை ஒதுக்கின.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தப் போக்கு முழு வீச்சுடன் எழுந்தது. பெங்களூரு குணா என்பவர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றொரு புத்தகம் எழுதினார். அப்பட்டமான வரலாற்றுப் புரட்டுகளுடன் கூடிய அந்த நூல் இங்கிருந்த கொடுமையான மன்னர் ஆட்சிகளையெல்லாம் பொற்காலம் என்றது. இங்குள்ள மொழிச் சிறுபான்மையினர்தான் தமிழ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிற ஓர் அப்பட்டமான பொய்யை முன்வைத்தது. அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியது. வெறும் இரண்டரை சதமாக இருந்து கொண்டு பல மடங்கு அதிகமான அரசுப் பணிகளை எல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களையும் பிற உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் அது விமர்சிக்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான தமிழர்களாம். இவர்கள் இலக்காக்கித் தாக்கியதெல்லாம் இந்த 30 சதம் அளவு உள்ள மொழிச் சிறுபான்மையினரைத்தான்.

சரி, யார் அந்த மொழிச் சிறுபான்மையினர்? தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளைப் பேசுகிற சாதியினர்; உருது மொழி பேசும் முஸ்லிம்கள்; மார்வாரிகள் முதலானோரைத்தான் அவர்கள் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான மொழிச் சிறுபான்மையினர் என்றனர்.

இதில் ஒரு சிறு பகுதியாக உள்ள மார்வாரிகள் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் தமிழகத்தையே பல காலமாகத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிற சாதாரண மக்கள். இவர்களுள் பெரும்பாலானோர் இப்போது தமிழையே தாய்மொழியாகக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தமிழ் மீடியத்திலேயே படிக்க வைத்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது என்றால் எங்கே போவார்கள்? நமது பண்பாட்டை ஏற்றுக்கொண்டு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களில் பெரும்பாலானோர் கூலிகளாகவும், சாதாரண பணிகளிலும் இருப்போர். பிற தமிழ்ச் சாதிகளாக இவர்களால் அடையாளம் காட்டப்படுகிறவர்களைப் போலவே பொருளாதார நிலை உடையவர்கள். இந்த மொழிச் சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கவேண்டும், இட ஒதுக்கீடு போன்ற பலன்கள் இவர்களுக்குச் சென்று சேரக் கூடாது என்கிறார்கள். இங்கே நம்மோடு வாழ்ந்து நமது மலத்தை அள்ளி, இங்குள்ள சாக்கடைகளைச் சுத்தம் செய்து வாழ நேர்ந்த நம் அருந்ததியர் இனச் சகோதரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாதெனச் சொல்கிறார்கள். குணா இதை வெளிப்படையாகச் சொன்னவர்.

அது மட்டுமல்ல தலித் மக்களின் விடுதலைக்காக முன்னின்று, உலக அளவில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கருக்கு இங்கு ஊரெங்கும் சிலைகள் திறக்கப்படுவதை, “அம்பேத்கராம்! மராட்டியருக்கு இங்கு சிலைகள் ஏன்” எனக் கேட்டவர்கள் இவர்கள். இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். மார்வாரிகளைப் பற்றியும் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுள் எல்லோரும் பெரிய வணிகர்களாக இருப்பதில்லை. அவர்களிலும் எளிய மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர் ஒருவர் BSNL-ல் வேலை செய்கிறார். அடித்தளச் சாதியைச் சேர்ந்தவர் அவர், மனைவி ஒரு மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்.

நம்முடைய தமிழர்கள் இங்கிருந்து கூலிகளாகவும் வணிகர்களாகவும் சென்று எத்தனையோ நாடுகளில் வசிக்கின்றனர், இலங்கையில் மலையகத்தில் இருக்கிறார்கள், மலேசியாவில், மொரிஷியசில், சிங்கப்பூரில் எல்லாம் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் அரச மொழிகளுள் ஒன்று. அவர்களை எல்லாம் அந்தந்த நாடுகள் திருப்பி அனுப்புவது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமா?

கி.ராஜநாராயணன் என ஒரு தமிழ் எழுத்தாளரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழின் ஆக முக்கியமான எழுத்தாளர். நவீன தமிழுக்கு வளம் சேர்த்தவர். கரிசல் மண்ணில் புழங்கப்படும் தனித்துவமான தமிழ்ச் சொற்களுக்கு அகராதி உருவாக்கிய தமிழறிஞர் அவர். அவருடைய மூதாதையர் எத்தனையோ தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்தவர்கள். அவரை இன்று திருப்பி அனுப்புவது முடியுமா, சரியா, நியாயமா? அல்லது அவரது குடும்பத்தாரை இரண்டாம் தர மக்களாக, உரிமையற்றவர்களாக நடத்துவது என்றால்… எத்தனை கொடூரமான மனித உரிமை மீறல்கள் இவை.

இங்கு வாழும் பிற மொழியினர் எல்லோரும் தமிழகத்தைச் சுரண்டி வளம் கொழிப்பவர்கள் அல்ல. இவர்களால் ஒரிஜினல் தமிழர்கள் எனச் சொல்கிற எல்லோரும் இங்கு கூலி வேலை செய்து துன்புறுபவர்களும் அல்ல. எல்லா மக்களிலும் பணக்காரர்களும் உள்ளனர், ஏழை எளியோரும் உள்ளனர். குடந்தை, மதுரை போன்ற இடங்களில் சௌராஷ்டிரர்கள் உள்ளனர். மிகவும் அடித்தள நெசவாளிகள் அவர்கள். ஆம்பூர், வாணியம்பாடி முதலான பகுதிகளில் வசிக்கும் உருது முஸ்லிம்கள் எல்லோரும் தோல் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அல்ல. தோல் தொழிற்சாலைகளில் பெரிய பதவிகளில் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்கள்தான் உள்ளனர். தோலைச் சுரண்டித் தூய்மைப்படுத்துவது முதலான தூய்மைக் குறைவான வேலைகளில் எவ்வளவோ உருது முஸ்லிம்கள் பணியில் உள்ளனர். இவர்களையெல்லாம் உருது பேசுபவர்கள் என்பதற்காகவே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குதல் நியாயமா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்படி மொழிவாரி தேசியம் பேசும் ம.பொ.சி, குணா, சீமான், மணியரசன் போன்றோர் தமிழ்நாட்டில் தற்போது வாழ்கிற மக்களில் இப்படியான ‘தமிழர்கள் அல்லாதவர்களை’ அடையாளம் காண என்ன வழியைக் கையாள்கிறார்கள்? அது பெரிய கொடுமை.

சாதி அடிப்படையில் அவர்கள் ஒரிஜினல் தமிழர்களை இனம் காண்கிறார்களாம். எந்தச் சாதிமுறை, தீண்டாமை ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்தச் சாதிமுறையை இவர்கள் இந்த நோக்கில் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

உன் சாதியைச் சொல் நீ தமிழனா, இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். நீ ஒரு அருந்ததியன், சௌராஷ்டிர நெசவாளி, உருது முஸ்லிம் என்றால் தமிழன் இல்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் சாதியில் நீ நாயக்கராக இருந்தால் நீயும் தமிழன் இல்லை. மண்வெட்டிக் கூலி தின்னும் ஓட்டர்களாக இருந்தால் அவர்களும் தமிழர்கள் இல்லையாம். அவர்கள் எத்தனை ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு, இலவசக் கல்வி முதலியன கூடாதாம்.

மக்களை இப்படிச் சாதி அடிப்படையில் கூறுபோடும் இவர்கள் மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டர்களாகவும் உள்ளனர். தமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை ஆகியவற்றையெல்லாம் புகுத்திய ராஜராஜ சோழன்தான் இவர்களின் திரு உரு (icon). கொடும் ஏற்றத் தாழ்வுகளும், சாதிமுறையும், தீண்டாமையும் தலைவிரித்தாடிய சோழர் காலம் அவர்களைப் பொருத்தமட்டில் பொற்காலம்.

கூர்ந்து பார்த்தால் இவர்கள் தமிழுக்கும் உண்மையானவர்களாக இல்லை என்பது புலப்படும். எண்ணாயிரம் என்கிற இடத்தில் சோழர் காலத்தில் இருந்த கல்வி நிலையம் குறித்து எல்லோரும் பீற்றிக் கொள்வார்கள். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத் திட்டம் முழுக்க முழுக்க சமஸ்கிருதமாகவே இருந்தது.

இவர்கள் இப்படி மொழி அடிப்படையில் தமிழர்களைக் கூறுபோடுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மத அடிப்படையிலும் இவர்கள் தமிழர்களைப் பிரித்து நிறுத்துகிறார்கள்.

பார்ப்பனிய ஒதுக்கல்களுக்கும், வருண சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராக மலர்ந்த சீர்திருத்த மதங்களான பௌத்தம், சமணம் ஆகியவற்றை இவர்கள் வட இந்திய மதங்கள் எனப் புறந்தள்ளுகின்றனர். அதன் மூலம் வருண சாதி அமைப்பை வலியுறுத்திய சனாதனப் பார்ப்பன மதத்தையே இவர்கள் தமிழர்களின் மதமாக முன்வைக்கிறார்கள். பார்ப்பனியமும் வடநாட்டிலிருந்து இங்கு வந்ததுதான் என்பதைப் பற்றி இவர்கள் இம்மியும் கவலைப்படுவதில்லை. இவர்களின் இந்தக் கணக்குப்படி இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியனவும் அந்நிய மதங்கள்தான். ஆனால் தமிழின் சிகரங்களாக உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எனச் சொல்லப்படுபவையும், கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் இலக்கண நூல்களும் இவர்களால் வட இந்திய மதங்கள் எனச் சொல்லப்படக் கூடிய பௌத்த, சமணப் புலவர்களால் உருவாக்கப்பட்டதுதான். கிறிஸ்தவம் இங்கு அச்சைக் கொண்டு வந்தது; நம் மக்களுக்குக் கல்வியைத் தந்தது. முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மதுரைப் பல்கலைக் கழகம் ஐந்து தொகுதிகளாக நூல்கள் வெளியிட்டுள்ளது.

இஸ்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கு நம்மோடு வாழும் மதம். கிறிஸ்தவம் ஐநூறு ஆண்டுகளாகத் தமிழிலிருந்தும் தமிழர்களிடத்திலிருந்தும் பிரிக்க இயலாமல் ஒன்றுகலந்த மதம். இன்று தமிழகத்தில் தடம் இல்லாமல் போனாலும் பௌத்தம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் செழித்திருந்த மண் இது. இன்று தமிழ் பவுத்தம் என்றொரு ஆய்வுத்துறையே உருவாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பின் குறியீடாக அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட மதம் அது. இத்தனையையும் ஒதுக்கிவிட்டு என்ன சொல்கிறார்கள் இவர்கள், என்ன செய்கிறார்கள் இவர்கள்?

இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் தமிழர்களை ஒன்றிணைக்கும் தேசியமல்ல. சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் தமிழர்களைக் கூறுபோடும் தேசியம். “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என ஊரெங்கும் சொல்லித் திரிந்த பெரியாரை இவர்கள் ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களால் கொண்டாடப்படும் பார்ப்பனியத்திற்கு உறுதியான எதிரியாக அவர் இருந்தார் என்பதுதான் அவர்களின் எரிச்சல்.

இவர்கள் பேசுவது மக்களை சாதி, மதங்களுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தமிழ்த் தேசியம் அல்ல. மாறாக மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம். இது இன்று இந்த நாட்டில் உருவாகி வரும் கொடூரமான மதவாத பாசிசத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

Related posts

Leave a Comment