கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதீனாவில் நோன்பும் பெருநாளும்

Loading

இஸ்லாமிய ஆண்டின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சவூதி அரேபியாவின் பல இடங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்த எனக்கு, மதீனாவின் நான்காண்டுப் பணியின்போது கிடைத்த ரமளான் நோன்பும் பெருநாளும் என் வாழ்வில் மறக்க முடியா நினைவுகளைப் பதித்துள்ளன. அந்த நினைவலைகளின் ஒரு சிறிய பிரதிபலிப்பே இக்கட்டுரை.

“மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர, மற்றப் பள்ளிகளில் தொழுவதைவிட எனது இந்த மஸ்ஜிதில் தொழுதால், ஆயிரம் மடங்கு கூடுதலாக நன்மை கிடைக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: சஹீஹுல் புகாரீ)

இம்மை-மறுமைக்கான பொன்னான வாய்ப்பு, எனக்கு மதீனாவில் பணியாற்றக் கிடைத்ததாகும். அதிலும் குறிப்பாக, புனித ரமளானில் கழித்த நாட்கள் – குறிப்பாக மஸ்ஜிதுன் நபவீயில் கழித்தவை – அவற்றின் மேன்மையைச் சொல்லால் வடிக்க முடியாது! ‘ரவ்ளத்துல் முஷர்ரஃபா’வும் ‘ஜன்னத்துல் பகீஉ’ எனும் பொது மண்ணறையும் அவற்றின் புனிதத்துவத்தால் கண்களைப் பனிக்கச் செய்யும்! ‘உஹ்து’ மலை, ‘கந்தக்’ பகுதி, ‘மஸ்ஜிது குபா’, ‘மஸ்ஜிது கிப்லத்தைன்’ முதலான இடங்கள் நபி வரலாற்றைப் பசுமையாக மனத்தில் பதிய வைக்கும்.

மதீனத்து மக்களுள் பெரும்பாலோரின் நளினத் தன்மை குறிப்பிடத் தக்க ஒன்றாகும். ஹரமை கண்ணியப் படுத்துவதும், அதில் இபாதத்துகளில் ஈடுபடுவதும், அதில் நோன்பு துறப்பதும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதும் ஆகியவற்றில் மதீனாவாசிகளுக்கு நிகர் அவர்களேதாம் என்பது மிகைக் கூற்றன்று!

ரமளானின் ‘அஸ்ர்’ தொழுகை முடிந்தவுடன் ‘மஸ்ஜிதுன் நபவீ’ கலைகட்டத் துவங்கிவிடும்! எதற்காக? நோன்பு துறக்கும் ஏற்பாட்டிற்காக! ஒவ்வொரு குடும்பமும் செல்வந்தர்களும் வணிகர்களும் போட்டியிட்டுக்கொண்டு மஸ்ஜிதுக்குள் இடத்தைப் பிடித்து, ‘சுஃப்ரா’ விரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவை அவர்களுக்காகவா? இல்லை. நோன்பாளி விருந்தினர்களுக்காக!

அண்மையில் விரிவுபடுத்திக் கட்டப்பெற்ற உள் பள்ளி, வெளிப் பள்ளி முழுவதும் உணவு விரிப்பால் நிறைந்து, வெள்ளைக் கோடு போட்டது போல் இருக்கும். நோன்பு துறப்பதற்கான பண்டங்களுள் ஒன்றுகூட ‘ஹரம்’ நிர்வாகத்திலிருந்து இருக்காது! எல்லாம் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலிருந்து கொண்டுவந்த பண்டங்களேயாகும். பெரும்பாலும் மதீனத்தில் விளைந்த பேரீத்தம் பழங்களும் ரொட்டிகளும் தயிரும் அதனோடு சேர்த்துண்ணத் தக்க ஒரு விதமான ருசிப் பொடியும், ஜம்ஜம் தண்ணீரும்தான் நோன்பு துறக்கும் உணவுகள்.

நாம் உளூச் செய்துவிட்டுப் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பே – வெளியில் நடந்து வந்துகொண்டிருக்கும்போதே – நம்மை அன்புடன் எதிர்கொண்டு அழைப்பதற்காக இளைஞர்களும் இல்லப் பணியாளர்களும் வெளியில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அவர்களுள் யாராவது நம் கையைப் பிடித்துவிட்டால், அவர்களிடமிருந்து தப்புவது கடினம். நம்மை அன்புடன் அழைத்துக்கொண்டு, பள்ளிவாசலுக்குள் நீண்ட தூரம் கூட்டிச் செல்வார்கள். அவர்களுக்குரிய இடத்தில் கொண்டுபோய் அமர்த்திவிட்டு மீண்டும் ‘ஆள் பிடிக்க’ விரைந்துவிடுவார்கள். சில வேளைகளில், இரண்டுபேர் நம் கையைப் பிடித்துவிடுவார்கள். அப்போது அங்கே நடப்பது அன்பு இழுபறிதான்!

மதீனத்துச் செல்வந்தர்கள் சிலர் பிரியாணி, ‘கப்ஸா’ சோறு முதலியவற்றைப் பள்ளிவாசலுக்கு வெளியில் வைத்து, ‘சபீல்.. சபீல்’ என்று கூப்பிட்டு விநியோகம் செய்வார்கள். அவற்றைப் பெற்று நோன்பு துறந்து மகிழக் கூட்டம் ஒரு பக்கம் அலைமோதும். தயிர், ஜூஸ் முதலியவையும் பங்கிடப்படும். இவற்றையெல்லாம் பள்ளிக்கு வெளியில்தான் வைத்துச் சாப்பிட முடியும்.

இனி, நாம் உள்ளே என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். வெள்ளைப் ‘ப்லாஸ்டிக்’ விரிப்பில் எதிரெதிராக ஒழுங்கான வரிசையில் நோன்பாளிகள் அமர்ந்திருப்பர். அவர்களுக்கு முன் ரொட்டி (bread), தயிர், பேரீத்தம்பழம், தண்ணீர் எல்லாம் தாராளமாக வைக்கப்பட்டிருக்கும். ‘அதான்’ சொல்லும் நேரம் நெருங்க நெருங்க துஆவும் இஸ்திகுஃபாரும் மஸ்ஜிதை ஆட்கொள்ளும். ‘அதான்’ (பாங்கு) தொடங்கியவுடன் நோன்பு துறப்பதும் தொடங்கிவிடும்.

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள். ஒன்று, அவர் நோன்பு துறக்கும்போது. மற்றொன்று, அவர் தன் இரட்சகனை (மறுமையில்) சந்திக்கும்போது” என்ற நபிமொழியின் முழுப் பொருளையும் அங்குதான் நாம் பார்க்கலாம். அத்துணை மகிழ்ச்சி! பரக்கத்தான மதீனத்துப் பேரீத்தம் பழமும் மக்கத்து ‘ஜம்ஜம்’ தண்ணீரும் கொண்டு நோன்பு துறப்பது பேரருளல்லவா, பெருமகிழ்ச்சிக்கு உரியதல்லவா?

ஐந்தாறு நிமிடங்களில் நோன்பு துறப்பு முடிந்து, அனைவரும் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள். எஞ்சிய உணவுப் பொருள்களையும் ‘சுஃப்ரா’வையும் ஓரிரு நிமிடங்களில் அகற்றிவிடுவார்கள் மதீனாவாசிகளின் பணியாட்கள்! உணவுப் பொருட்கள் சிந்துமா? ஊஹூம். அந்தப் பேச்சுக்கே இடமில்லை! அதுதான் அங்கே காணப்படும் ‘பியூட்டி’ என்று கூறலாம்.

நோன்பாளிகளின் தாகத்தைத் தீர்க்க, ரமளான் மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 150 டேங்கர் லாரிகளில் மக்காவிலிருந்து ‘ஜம்ஜம்’ தண்ணீர் 400 கிலோ மீட்டர் தொலைவுள்ள மதீனாவுக்குக் கொண்டு வரப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம். நம் கண்கள் வியப்பால் விரிகின்றன.

மதீனாவில் உள்ள மற்ற பள்ளிகளில் தொழுவதைவிட மக்கள், குறிப்பாக வெளி நாட்டுக்காரர்கள், மஸ்ஜிதுன் நபவீ’யில்தான் ‘தராவீஹ்’ தொழ விரும்பித் தொலைவிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். நம் நாட்டுப் பள்ளிகளில் ‘ஹாஃபிளு’கள் தராவீஹில் குர்ஆன் ஓதுகிறோம் என்று, ‘ஓடுகிறார்கள்’. மதீனாவில் மற்ற ‘வக்து’களைவிடத் துரிதமாக ஓதத்தான் செய்கிறார்கள்; ஆனால், ஓதும் அழகும் அமைதியான ஓசை நயமும், கேட்போர் மனங்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

‘தராவீஹ்’ அல்லாமல், ரமளானின் பிந்திய பத்து நாட்களில் ‘கியாமுல் லைல்’ எனும் இரவுத் தொழுகையும் நடைபெறும். நடு இரவு ஒன்றரை மணிக்குத் துவங்கும் இத்தொழுகைக்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக மஸ்ஜிதுன் நபவீ’க்கு வந்து தொழுவார்கள்.

புனித ரமளான் முடிந்து, ‘ஷவ்வால்’ முதல் நாளாகிய நோன்புப் பெருநாள் அறிவிப்பாகி, மதீனா முழுவதும் பேரொளியும் பெருமகிழ்வும் பொங்கும். நாங்கள் பெருநாள் ‘சுப்ஹு’க்கு முன் குளித்துவிட்டு, ஹரமுக்குச் செல்வோம். ‘சுப்ஹு’த் தொழுகை முடிந்த பின்னர் இருந்த இடத்தை விட்டு நகர்ந்தால், மீண்டும் அந்த இடம் கிடைக்காது. அதனால், அந்த இடத்திலேயே அம்ர்ந்துவிடுவோம், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் பெருநாள் தொழுகையை எதிர்பார்த்து! மதீனாவாசிகளும் தம் வெள்ளுடை அணிந்த ‘வில்தான்’களோடு (சிறுவர்களோடு) வந்து குழுமிவிடுவார்கள்.

ஒரு பெருநாளன்று என்னருகில் தொழுது அமர்ந்திருந்த அரபித் தந்தையர் தம் பிள்ளைகளை முடுக்கிவிட்டார்கள். அப்பிஞ்சுகளும் ஆர்வத்துடன் எழுந்து, அருகில் இருந்தோர் அனைவருக்கும் பேரீத்தம் பழத்தையும் ‘கஹ்வா’வையும் பகிர்ந்தளிப்பதில் பம்பரமாகச் சுழன்றார்கள். அதனைக் கண்டபோது, எனக்குக் கீழ்க்காணும் இறைவசனங்கள் நினைவுக்கு வந்தன:

و يطوف عليهم غلمان لهم كانهم لولو مكنون (الطور – ٥٢

يطوف عليهم ولدان مخلدون بأكواب واباريق وكأس من معين (الواقعة – ٥٦

அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
(ஸூரத்துத் தூர்: 24)

என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.
(ஸூரத்துல் வாகிஆ: 17)

எனது நாவு இந்த இறைவசனங்களை அசை போட்டது. அந்த மகிழ்ச்சிக்குரிய இளங்காலைப் பொழுதில், ஆனந்தத்தால் என் கண்கள் பனித்தன!

சுமார் ஆறரை மணிக்கெல்லாம் அறிவிப்புச் செய்யப்பட்டது. அதன் பின் பெருநாள் தொழுகை தொடங்கிற்று. அதனைத் தொடர்ந்து அருமையான, உருக்கமான ‘குத்பா’ தொடங்கிற்று. இமாம் அவர்களின் கணீரென்ற கம்பீரமான குரலில் அமைந்த அந்த ‘குத்பா’, இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் கடமைகளின் சாரமாக அமைந்தது. ‘குத்பா’ முடிந்த பின், அறிமுகமானவர்களும் அறிமுகமில்லாதவர்களும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டனர்.

பள்ளியை விட்டு வெளியில் வந்தவர்களை, “ஜியாரா..! ஜியாரா..!” என்று அரபி ‘டாக்ஸி’ ஓட்டுநர்கள் அழைத்தார்கள். அவர்களுடன் சென்றால், குறுகிய நேரத்தில் மிகச் சில இடங்களை மட்டுமே காட்டுவர். மதீனாவில் அனுபவமுள்ள நம்மவர்களோடு, செலவைப் பாராமல், ‘உஹ்து’ மலை, அகழ்ப்போர் நடந்த இடம், மஸ்ஜிது ‘கிப்லத்தைன்’, ‘குபா’ மஸ்ஜிது, மஸ்ஜிது ‘ஜும்ஆ’ ஆகிய மதீனாவின் புனித இடங்கள் தவிர, அதிலிருந்து 200 மைல் தொலைவிலுள்ள ‘பத்ர்’ போர் நடந்த இடத்துக்கும் சென்று வரலாம்.

இப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள உண்மை!

Related posts

Leave a Comment