கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 1

Loading

என்னுடன் நெருக்கமாக நட்பு கொண்டவர்கள் அல்லது என்னிடம் நெருங்கி வந்தவர்கள் பலரிடம் (இந்த வார்த்தையை மிகுந்த தயத்திற்குப் பிறகே பயன்படுத்துகிறேன். ஒருவேளை இதில் மிகைப்படுத்துதலும் இருக்கக்கூடும்) ஒருவிதமான மனப்பிறழ்வைக் கண்டிருக்கிறேன். என்னுடைய பேச்சில் எழுத்தில் அவர்களுக்கு ஒருவித ஆறுதல் இருப்பதால்தான் என்னவோ அவர்கள் என்னிடம் நெருங்கி வந்திருக்கிறார்கள்போலும். நான் இப்படி மனம் குறித்து தொடர்ந்து எழுத அவர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கக்கூடும். அல்லாஹ்வே நன்கறிவான். திட்டமிட்டு இப்படி எழுத வேண்டும் என்று நான் எழுதவில்லை. என் மனதை அரித்துக் கொண்டிருந்த அல்லது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்பொருட்டே நான் இவற்றையெல்லாம் எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.

மனம்சார்ந்த பிரச்சனைகளை பலரும் வெளியில் சொல்ல தயங்குகிறார்கள். மனம்சார்ந்த பிரச்சனைகள் குறித்து சமூகம் உருவாக்கி வைத்துள்ள பிம்பமே அதற்குக் காரணம். பெரும்பாலோர் அவற்றை பைத்தியத்தின் வகைகளாகவே எண்ணுகிறார்கள். ஏதோ ஒரு சூழலில் மனிதன் மனதளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். தொடர் அழுத்தங்கள், திடீரென அவனை வந்தடையும் அதிர்ச்சிகள் என ஒவ்வொன்றும் மனதளவில் அவனைப் பாதிக்கவே செய்கின்றன. சில தற்காலிகமாக இருந்துவிட்டு மறைந்துவிடுகின்றன. சில நிரந்தரமாக தங்கிவிடுகின்றன.

எளிய நம்பிக்கைகள் பல சமயங்களில் மனிதனைக் காப்பாற்றிவிடுகின்றன. இதனால்தான் சிலர் கூறுகிறார்கள், எந்த நம்பிக்கையும் அற்று நாத்திகனாக இருப்பதைவிட தவறான நம்பிக்கையில் இருந்துவிடுவது சிறந்தது. நானும் இந்தக் கருத்தையே முன்மொழிகிறேன். நான் இந்தக் கருத்தை தவறான நம்பிக்கையை ஆதரிப்பதற்காக சொல்லப்பட்ட கருத்தாகக் கருதவில்லை. மாறாக சரியான நம்பிக்கைதான் ஒருவனை முழுமையாகக் காப்பாற்றும். ஆனால் நாத்திகத்துடன் ஒப்பிடும்போது அது பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஆன்மிகத்தின் மையமே மனம்தான். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது ஒன்றே மிகச் சிறந்த வழி. லௌகீகம் கலக்காத உண்மையான ஆன்மீகம் உங்கள் ஆன்மாவுக்கான ஒத்தடம். உங்களின் ஆன்மா உயர வேண்டுமெனில் அது தேவையற்ற கவலைகளிலிருந்தும் பயங்களிலிருந்தும் விடுபட வேண்டுமெனில் அது நிம்மதியை உணர வேண்டுமெனில் ஆன்மீகத்தின் பக்கம் அடைக்கலம் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

மனதில் உள்ள புழுக்கங்களை நம்பத்தகுந்த யாரிடமாவது வெளிப்படுத்துவன் மூலமும் அவற்றின் அழுத்தங்களிலிருந்து ஓரளவு நம்மால் விடுபட முடியும். மனிதன் பேசிப் பேசி பலவற்றிலிருந்து விடுபட முடியும். பேச வேண்டிய சமயத்தில் பேசாமல் இருந்தால், வெளிப்படுத்த வேண்டிய சமயத்தில் வெளிப்படுத்தாமல் இருந்தால் உங்களையும் அறியாமல் புலம்பும் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுவீர்கள். மனம் ஓரளவுதான் சுமைதாங்கும். அதற்குப் பிறகு எந்தவொன்றும் அதில் தங்காமல் வெளிப்படத் துவங்கிவிடும். அதிகப் பாராத்தால் அழுத்தப்படும் எந்தவொன்றும் உடைந்துவிடுவது இயல்புதானே? நீங்கள் அவற்றை சரியான முறையில் வெளிப்படுத்தவில்லையென்றால் அவை வேறு ஏதேனும் வடிவில் வெளிப்பட்டே தீரும். அவை காரணமேயின்றி நீங்கள் அடையும் கோபம், வெறுப்பு ஆகியவற்றின் வடிவிலும் வெளிப்படலாம்.

தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ளத்தக்க நல்ல நம்பகமான நண்பர்களைப் பெற்றிருப்பவர்கள் பாக்கியவான்கள். தம் பேச்சுகளை காதுகொடுத்துக் கேட்கும் நல்ல மனிதர்களை பெற்றிருப்பவர்களும் பாக்கியவான்கள்தாம். சமூகத்தில் ஒன்றுகலந்து வாழ்வோரைவிட தனியாக வாழ்பவர்கள்தாம் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள். அவர்கள் ஒருவர் மற்றவருடன் இணையும்போதுதான் முழுமையடைகிறார்கள். இங்கு எந்த மனிதாலும் யாரையும் சாராமல் தனித்து வாழ முடியாது. கூட்டுவாழ்க்கை சில சிரமங்களை ஏற்படுத்தக்கூடியதுதான் என்றாலும் தனித்து வாழ்வது அதைவிட அதிகமான சிரமங்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக்கூடியது.

மனம்தான் மனிதனின் மையம். அதன் ஆரோக்கியம் முழு உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்க வல்லது. அதன் நோய் முழு உடலையும் நோயுறச் செய்யும் ஆற்றலுடையது. “அது சீரடைந்துவிட்டால் முழு உடலும் சீரடைந்துவிடும். அது கெட்டுவிட்டால் முழு உடலும் கெட்டுவிடும்” என்ற நபிமொழியை இந்தரீதியாகவும் அணுகலாம்.

மனித மனதின் புரிந்துகொள்ள முடியும் பக்கங்களைக் காட்டிலும் புரிந்துகொள்ள முடியாத பக்கங்களே அதிகம். ஆன்மீகப் பயிற்சிகளின் மூலமே மட்டுமே மனதை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும். நம்பிக்கையே அதன் மிகப் பெரிய பலம். காரணமேயின்றி ஒருவரை நேசிக்கவும் காரணமேயின்றி ஒருவரை வெறுக்கவும் நம்மால் முடிகிறது. நேசத்திற்கும் வெறுப்பிற்குமான காரணங்களைக்கூட நம்மால் கண்டடைய முடியவில்லை. மன ஒத்திசைவிற்கும் மன விலகலுக்கும் நாம் கூறும் காரணங்களை சிறிது காலத்திற்குள் நாமே பொய்ப்பித்து விடுகிறோம்.

ஆழம் செல்லச் செல்ல நாம் முன்முடிவுகளை, தர்க்கங்களை நாம் கைவிட்டு விடுவோம். முன்முடிவுகளை, தர்க்கங்களை நாம் கைவிடும் தருணமே நாம் பக்குவமடையும் தருணம். அப்போதுதான் யாரையும் நம்மால் திருப்திபடுத்த முடியாது, நம்மைப் போன்றவர் மட்டுமே நம்முடன் இணைகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்கிறோம்.

யாருக்கு ஞானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு விடுகிறதோ அவர் தர்க்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார். மற்றவர்கள் இறுதிவரை தர்க்கித்து தர்க்கித்து ஓய்கிறார்கள். சலிப்பும் வெறுமையும் அவர்களை தின்னத் தொடங்கும்போதுதான் அவர்கள் தர்க்கத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்கள்.

நமக்குப் பிடித்தமான செயல்களில் நாம் ஈடுபடும்போது நம்மை நாமே மறந்துவிடுகின்றோம். அது ஒரு அற்புதமான மனநிலை. கிட்டத்தட்ட அது ஒரு தியானம் போன்றது. ஆனால் அந்தச் செயல் நாம் பாவம் என எண்ணும் ஒன்றாக இருந்துவிடக்கூடாது. அதற்குப் பின்னால் ஏற்படும் குற்றவுணர்வு அந்த இன்பத்தை மறக்கடித்து விடும். ஒரு மனிதனின் மன ஆரோக்கியத்திற்கும் இத்தகைய செயல்பாட்டுக்கும் மத்தியில் வலுவான தொடர்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

வாசிப்பது, எழுதுவது எனக்குப் பிடித்தமான செயல்பாடுகள். வாசிக்கும்போதும் எழுதும்போதும் கிட்டத்தட்ட இன்னொரு உலகிற்குள் நான் சென்றுவிடுகிறேன். அது நான் வாழும் உலகைவிட முற்றிலும் புதுமையான வேறொரு உலகு. அங்கு எல்லாவற்றையும் விலகி நின்று பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் உள்ளபடியே அணுக முடிகிறது. அங்கு கவனச் சிதறலோ களைப்போ சலிப்போ எனக்கு ஏற்படுவதில்லை. என் மனநிலையை சரியான அளவில் தக்கவைத்துக்கொள்வதற்கும் அந்த உலகிற்கும் தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். என் அழுத்தங்களைப் போக்குவதற்கு என் வெறுமையை நிரப்புவதற்கு என் சலிப்புகளிலிருந்து விடுபடுவதற்கு நான் அந்த உலகின் பக்கமே தஞ்சம் அடைகிறேன்.

சில மனிதர்கள் வருமானம் குறைவாக இருந்தாலும் தங்களின் பணிகளை உதறிவிட்டு வேறு பணிகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. காரணம் அந்தப் பணிகளில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடே. வெறுமனே அந்தப் பணிகள் வருமானம் தரக்கூடிய ஒன்றாக மட்டுமே இருக்காது. அதைத் தாண்டி அவர்களின் மனதின் வெறுமையை வாழ்வின் சலிப்பை போக்கக்கூடியவையாக இருக்கும். வெறுமனே வருமானத்திற்காக மட்டுமே ஒரு மனிதனால் நீண்ட நாட்கள் ஒரு பணியில் ஈடுபட முடியாது. அந்தப் பணியில் அவனுக்கு ஆர்வமும் மனநிறைவும் இருக்க வேண்டும். இல்லையெனில் அது அவனுக்கு ஒரு சித்ரவதையாக மாறிவிடும். கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாத பணியில் வெறுமனே வருமானத்திற்காக மட்டுமே ஈடுபடுவதும் ஒருவகையான சித்ரவதைதான்.

மனிதர்களுக்குள் இருக்கும் வெவ்வெறு வகையான ஆர்வங்களும் திறமைகளும் இந்த உலகின் சமநிலையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒவ்வொருவரும் தன்னியல்பாக தங்களுக்கு விதிக்கப்பட்ட பணிகளை நோக்கியே செல்கிறார்கள். தங்களுக்கான இடங்களையே அவர்கள் நிரப்புகிறார்கள்.

எந்தவொன்றையும் நேர்மறையாக அணுகும் மனநிலை உண்மையில் பெரும் அருட்கொடை. அந்த மனநிலை வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு எல்லாவற்றையும் நேர்மறையாக அணுகும்போது சில இழப்புகள் ஏற்படவும் செய்யலாம். அந்த இழப்புகளைவிட கிடைக்கும் பயன்கள் அதிகம். எல்லாவற்றுக்கும் முதலாக தேவையற்ற பயத்திலிருந்தும் கவலைகளிலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் மனம் அமைதியடையும். இந்த அமைதி சாதாரண ஒன்றல்ல. இதுதான் சீரான இயக்கத்திற்கான அடிப்படை. பயமும் கவலைகளும் சந்தேகங்களும் மனதில் குடிகொண்டுவிட்டால் மனிதனால் எந்தவொன்றிலும் மனமொன்றி ஈடுபட முடியாது. எந்தவொன்றையும் அவனால் திருப்தியுடன் அனுபவிக்கவும் முடியாது. அவை அவனுடைய மனதில் முள்ளாய் குத்திக்கொண்டேயிருக்கும்.

வெள்ளை மனம்கொண்ட மனிதர்களை பிழைக்கத்தெரியாதவர்கள், இளிச்சவாயன்கள் என்று சமூகம் எள்ளி நகையாடலாம். அது நயவஞ்சர்களை, துரோகிகளை, ஏமாற்றுக்காரர்களை திறமையானவர்கள் என்று கொண்டாடவும் செய்யலாம். சமூகம் உருவாக்கிய இந்த போலி பிம்பங்களுக்கும் மன அமைதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிஜ கோட்டையும் கடற்கரை மணலில் வரையப்பட்ட மணற்கோட்டையும் ஒன்றாகிவிடுமா என்ன? நிஜமும் பாவனையும் ஒன்றாகிவிடுமா என்ன?

மனிதனின் மனதில் ஏற்படும் தலைகீழ் மாற்றம் மிக மிக ஆச்சரியமானது. அது எதிர்பாரா ஒரு விபத்து போன்றது. ஆம், உண்மையில் அது மனதில் நிகழும் ஒரு வகையான விபத்துதான். அது ஒட்டுமொத்தமாக அவனை வேறொரு மனிதனாக மாற்றிவிடுகின்றது. எங்கிருந்து அந்த மாற்றம் நிகழ்கிறது? அது நிகழ்வதற்கான காரணிகள் என்னென்ன என்பதை நாம் அறிய மாட்டோம். அதுவரை நல்லவர் என்று சமூகத்தில் அறியப்பட்டவர் தீடீரென வேறொரு திசையை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார். எது அவரை அப்படித் தள்ளுகிறது என்பதும் ஏன் அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதும் புரியாத புதிர். சமூகத்தில் தீயவர் என்று அறியப்பட்டவர், தவறான பாதைகளில் தட்டழிந்து திரிந்தவர் திடீரென சரியான பாதையின் பக்கம் வருவதும் அப்படித்தான் நிகழ்கிறது. ஆச்சரியமான இந்த தலைகீழ் மாற்றங்களுக்குப் பின்னால் செயல்படும் இறைநியதியை நாம் அறிய மாட்டோம்.

“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும் மறுவுலகிலும் எனக்குப் பொறுப்பாளனாக இருக்கின்றாய். உனக்குக் கட்டுப்பட்ட நிலையில் நீ என்னை மரணிக்கச் செய்வாயாக” என்று திருக்குர்ஆன் கற்றுத்தரும் பிரார்த்தனையை மீண்டும் மீண்டும் நினைவுறுகிறேன். இந்த பிரார்த்தனை மனிதனின் மாறும் அந்த இயல்பையே சுட்டிக் காட்டுவதாகக் கருதுகிறேன். மனிதனின் இறுதி நிலை முக்கியமானது. அதுதான் அவனை சுவனத்திற்குரியவனா அல்லது நரகத்திற்குரியவனா என்பதை முடிவு செய்கிறது.

சிலர் தாங்கள் அடைந்த மாற்றத்தை உணர்கிறார்கள். அது தவறான மாற்றமாக இருப்பின் அதிலிருந்து பாதுகாக்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். மாற்றத்தை விரும்பும் மனிதனிடம் முதலில் வெளிப்படுவது பிரார்த்தனைதான். பிரார்த்தனை ஒரு மனிதனுக்குள் நிகழ்த்தும் செயல்பாடு ஆச்சரியமானது. அது கொஞ்சம் கொஞ்சமாக வலுவான செயல்பாடாக மாற்றமடைந்துவிடும். பலர் அதனையே அறிவின் முதிர்ச்சி என்று எண்ணி அதற்கான நியாய வாதங்களை அடுக்குகிறார்கள். மனிதன் ஒரு செயலைத் தொடர்ந்து செய்யும்போது இயல்பாகவே அதற்கான நியாய வாதங்கள் அவனிடம் சேகரமாகி விடுகின்றன. மிக மிக மோசமான நிலை, தான் தவறான பாதையில் செல்லத் தொடங்கிவிட்டேன் என்பதை அவன் உணர முடியாத நிலைதான்.

மனிதனின் மனவுலகம் விசித்திரங்கள் நிரம்பியது. அங்கு என்ன நிகழப் போகிறது என்பதை சம்பந்தப்பட்ட மனிதன்கூட அறிய முடியாது. அங்கு நிகழ முடியாதது என்று எதுவும் இல்லை. சமூகத்தில் நல்ல மதிப்புடனும் பெயருடனும் வாழ்ந்து வரும் ஒருவர் தீடிரென குற்றவாளியாக நம் முன்னால் நிற்கும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம். அவரிடமிருந்து இப்படியொரு செயல் எப்படி வெளிப்பட்டது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம். திடீரென அவரது மனதில் உருவாகி மிகைக்கும் சில எண்ணங்கள் அவரை அந்த எல்லைவைரை கொண்டு நிறுத்திவிடலாம். திட்டமிட்டு தவறு செய்பவர்கள் ஒரு வகையினர். திடீரென தோன்றும் எண்ணத்தால் தவறில் விழுபவர்கள் மற்றொரு வகையினர். முதல் வகையினர் சமூக விரோதிகள். இரண்டாம் வகையினரை அப்படி கூற முடியாது. அந்த இரண்டாம் வகையினரில் யார் வேண்டுமானாலும் உள்ளடங்கலாம். ஆனாலும் அவர்கள் செய்த தவறுக்காக மனம் வருந்துவார்கள், அதனை எண்ணி வெட்கப்படுவார்கள். அதனை நியாயப்படுத்தும்விதமாக ஒரு வார்த்தைகூட சொல்ல மாட்டார்கள்.

மனிதனுடைய கற்பனைக்கு எல்லையே கிடையாது. கற்பனையால் அவன் எந்த எல்லை வரையிலும் செல்ல முடியும். மனிதன் நிஜவுலகில் தன்னால் நிகழ்த்த முடியாததையெல்லாம் மனவுலகில் கற்பனை செய்துகொள்கிறான். அவன் விரும்பிச் செல்லும் கற்பனை உலகு போன்று அவன் விரும்பாமல் இழுத்துச் செல்லப்படும் உலகும் உண்டு. அதுதான் விசித்திரங்கள் நிரம்பிய உலகு. அங்குதான் அவனையும் அறியாமல் பல செயல்கள் நிகழ்ந்துவிடுகின்றன.

நபியவர்கள் கற்றுத்தந்த பின்வரும் பிரார்த்தனையும் அந்த உலகைக் குறித்தே எச்சரிக்கிறது என்று கருதுகிறேன்: “அல்லாஹ்வே! உன் அருளை வேண்டுகிறேன். கண்சிமிட்டும் நேரம்கூட என்னை என் மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே. என் விவகாரங்கள் அனைத்தையும் சீர்படுத்துவாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.” அவர்கள் கற்றுத்தந்த இன்னொரு பிரார்த்தனையில் இடம்பெற்றுள்ள ‘உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே’ என்ற வார்த்தை மனதின் நிலையற்ற தன்மையை இன்னும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுவதாக உணர்கிறேன்.

Related posts

Leave a Comment