கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 2

Loading

நற்செயல்களின் மீது நமக்கு ஆர்வம் ஏற்படுவதும் அவற்றை நிறைவேற்றிய பிறகு திருப்தி ஏற்படுவதும் மிகப்பெரிய அருட்கொடை. ஆர்வம் இல்லாமல் எந்தவொரு செயலிலும் நம்மால் மனமொன்றி ஈடுபட முடியாது. வணக்க வழிபாடுகளில் நம் மனம் லயிக்க வேண்டும். வெறுமனே அவை சடங்குகளாக, கடமைகளாக நிறைவேற்றப்படக்கூடாது. நம் உள்ளம் நற்செயல்களில், வணக்க வழிபாடுகளில் ஆர்வம் இல்லாமல் தூர விலகினால் தன்னியல்பாக அது தீய செயல்களின் பக்கம் சாய ஆரம்பித்துவிடும். ஒரு நற்செயல் இன்னொரு நற்செயலின் பக்கம் இட்டுச் செல்லும். அதுபோன்றுதான் ஒரு தீய செயலும் இன்னொரு தீய செயலின் பக்கம் இழுத்துச் செல்லும்.

நற்செயல்களைச் செய்ய நமக்கு ஆர்வம் இல்லையெனில் வணக்க வழிபாடுகளில் நம் மனம் லயிக்கவில்லையெனில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக வேறு திசையின் பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மனம் இங்கும் அங்கும் ஊசலாடக்கூடியது. ஆரம்பத்தில் நாம் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. நற்செயல்களில் ஈடுபடுவதற்கு மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு செயலையும் நாம் தொடர்ந்து செய்யும்போது நம் உள்ளம் அதற்கு பழக்கப்பட்டுவிடுகிறது.

எந்தவொன்றையும் நாம் உடனடியாக மாற்றிவிட முடியாது. எந்தவொன்றும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றப்பட வேண்டும். மனித மனம் எந்தவொன்றையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது. அது எந்தவொன்றையும் உடனடியாக விட்டுவிடவும் செய்யாது. முதலில் மனம் அதற்காக தயார்செய்யப்பட வேண்டும். செல்வதற்கு இடையூறுகள், தடைகள் இல்லாதவாறு பாதை சீர்செய்யப்பட வேண்டும். பிறகு பயணம் இலகுவாகிவிடும்.

தன் இச்சைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய மனிதனுக்கு ஞானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். அவனது அகப்பார்வை கூர்மையடைந்துவிடும். ஞானம் வழங்கப்பட்டவர் பெரும் நன்மைகள் வழங்கப்பட்டவர் ஆவார். மனத்தெளிவு இவ்வுலகின் சொர்க்கம். அதுதான் ஞானத்தின் ஊற்று. சுகபோகிகளுக்கு ஞானம் எட்டாக்கனி.

நம் உள்ளத்தில் எந்த உணர்வு மிகைக்குமோ அது வெளிப்பட்டே தீரும். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னியல்பாக அது வெளிப்பட்டு விடுகிறது. மனிதனால் அதனை மறைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. அவனது செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் நேசமோ வெறுப்போ இன்னபிற உணர்வுகளோ வெளிப்படாமல் இருப்பது அரிதிலும் அரிது.

ஒருவன் காதல்வயப்பட்டுள்ளான் என்பதையோ தீவிர வெறுப்பில் உழன்று திரிகிறான் என்பதையோ நம்மால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவனுடைய காதலும் வெறுப்பும் அவனுடைய பேச்சிலோ செயல்பாட்டிலோ மட்டுமல்லாமல் அவனுடைய முகத்திலும் அப்பட்டமாக வெளிப்பட்டுவிடும். சமநிலை குலைந்தவர்களின் கருத்துகளை நாம் பொருட்படுத்தக்கூடாது. அவர்கள் கொண்டிருக்கும் காதலும் தீவிர வெறுப்பும் அவர்களின் சாட்சியங்களை செல்லாதவையாக ஆக்கிவிடுகின்றன.

காதல்வயப்பட்டுள்ளவன் எதையும் பொருட்படுத்துவதில்லை. அவனுடைய காதல் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதைக் குறித்தும் அவன் சிந்திப்பதில்லை. எதிர்ப்புகளும் வசைகளும் அவனை அவனுடைய பாதையில் இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டே செல்கின்றன. அவற்றிலிருந்தே அவன் தனக்கான நியாய வாதங்களை உருவாக்கிக் கொள்கிறான். அவன் தன் நோக்கத்தை அடைய மூர்க்கத்துடன் முன்னேறிக்கொண்டே செல்வான். தீவிர வெறுப்புடையவனும் அப்படித்தான். தன் வெறுப்பால் தன் குடும்பத்திற்கோ சமூகத்திற்கோ தீங்கு ஏற்படும் என்று தெரிந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படாமல் அவன் ஓய்வதில்லை. தனிமனிதன் ஒருவனையோ, அமைப்பையோ ஒரு சமூகத்தையோ பழிவாங்க வேண்டும் என்ற வெறி அவனுடைய கண்ணைக் குருடாக்கி அறிவை மழுங்கடித்துவிடுகிறது.

நிச்சயம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். அப்போதுதான் அவனால் அவனுடைய தவறுகளை, சின்னத்தனங்களை, தேவையில்லாமல் அவன் செய்த பிடிவாதங்களை உணர முடியும். ஆனாலும் அவனால் கடந்த காலத்தை மீட்டுக் கொண்டுவர முடியுமா என்ன? அவன் அடையும் வருத்தமும் அவன் முன்வைக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கையும் அவனை அவனுடைய வருத்தங்களிலிருந்து மீட்டுக் கொண்டுவர உதவலாம். மிகக் குறைவான மனிதர்களே எல்லாவற்றிலிருந்தும் அறிதல்களைப் பெற்றுக் கொண்டு உன்னத நிலையை நோக்கிச் செல்கிறார்கள்.

நம்பிக்கையாளனின் உள்ளம் இளகிய உள்ளம். ஈமானுக்கு உள்ளத்தை இளக்கும் ஆற்றலுண்டு. ஈமான் உள்ளத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றிவிடுவதால் உள்ளம் இளகிவிடுகிறது. அது நேசிக்கவும் நேசிக்கப்படவும், இரக்கம் காட்டவும் இரக்கம் காட்டப்படவும் தகுதியான உள்ளமாக மாறிவிடுகிறது. இறையச்சத்தால் நம்பிக்கையாளர்கள் அழுகிறார்கள். தங்கள் பாவங்களை எண்ணி வருந்தும்போது அவர்கள் அழுகிறார்கள். இறைவனின் சான்றுகளை, சத்தியத்தைக் காணும்போது மகிழ்ச்சியில் அவர்கள் அழுகிறார்கள்.

பாறையைப்போல கடினமான உள்ளம் ஈமானற்ற உள்ளத்தின் அடையாளமாகும். பாவங்கள் அதனை கடினமாக்கிவிடுகின்றன; அதில் துருவாய் படிந்துவிடுகின்றன; அதன் ஈரத்தை இல்லாமலாக்கி வறண்டதாக ஆக்கிவிடுகின்றன. வறண்ட நிலம் விளைச்சலுக்குத் தகுதியற்றாக ஆகிவிடுகிறது. இறுகிய உள்ளம் எல்லாவற்றையும் இலாபத்தை அடிப்படையாக் கொண்டு அணுக ஆரம்பிக்கிறது. இலாபமே அதன் நோக்கம். இலாபமே அதனை செயல்படத் தூண்டும் காரணி. அதனால் இலாபத்தைத் தாண்டி வேறு எதனையும் யோசிக்க முடியாது.

உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது சாத்தியமாகிறது. உள்ளுணர்வுகள் கடத்தப்படுகின்றன. எப்படி அவை கடத்தப்படுகின்றன? என்பதை நாம் அறிய மாட்டோம். நாம் அதனை உணர்கிறோம். அது எங்கிருந்து கிடைத்தது என்பதை அறியாமலேயே கடந்தும் விடுகின்றோம். நம் தர்க்க அறிவுக்குப் புரியாததைக் குறித்து நாம் எதுவும் பேசுவதில்லை.

ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான, தனக்குப் பிரியமுள்ள இன்னொரு ஆன்மாவிடம் மொழியின்றி பேசுகிறது. அது என்ன சொல்ல, என்ன செய்ய விரும்புகிறது என்பதை சொல்லாமலேயே அறிந்துகொள்கிறது. நாம் பேசும் மொழி நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். பல சமயங்களில் அது உள்ளத்திற்கு மாற்றமானவற்றையும் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தின் மொழி அப்படியல்ல. அது உள்ளதை உள்ளபடியே உணர்த்திவிடும்.

பல சமயங்களில் நாம் தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டு உள்ளத்தின் மொழியை கவனிக்கவே செய்கிறோம். அது நம்மை வழிநடத்தவும் செய்கிறது. உலகாயதவாதிகள் தர்க்க அறிவின் துணைகொண்டு எளிதில் வீழ்த்தப்பட்டு விடுவார்கள். சாக்குப்போக்குகள் அவர்களுக்கு உண்மைக் காரணங்களாகத் தெரிகின்றன. உள்ளத்தின் குரல் அவர்களுக்கு ஒரு ஊசலாட்டமாகத் தோன்றும் போலும்.

நமக்கு உரியவர்களை கண்ட மாத்திரத்தில் நீண்ட நாட்கள் அவர்களுடன் பழகியதுபோன்று நாம் உரிமை பாராட்டத் தொடங்கி விடுகின்றோம். அந்தத் தொடர்பு எங்கிருந்து தொடங்கியது என்பதை நாம் அறிய மாட்டோம். எத்தனையோ மனிதர்களின் தொடர்பு அதேபோன்று தொடங்கியிருந்தாலும் அவர்களின் தொடர்பு மட்டும் நமக்கு தனித்துவமானதாகத் தெரிகிறது. உள்ளங்களுக்கு மத்தியில் காணப்படும் இந்த இணைப்பே உள்ளத்தின் மொழியை சாத்தியமாக்குகிறது.

Related posts

Leave a Comment