கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்!

Loading

வணக்கம்.

அன்பிற்குரிய‌ முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌ன‌ம் திற‌ந்த‌ மட‌ல்‘ என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களாக உலா வந்துகொண்டிருக்கும் கடிதத்திற்குப் பதில் கடிதமாக இதனைக் கொள்ளலாம். தமிழக முஸ்லிம்களைக் குறித்து மிகத் தட்டையான புரிதல் கொண்டவரால் மட்டுமே அப்படியான கடிதத்தை எழுதியிருக்க முடியும். வாக்கு வங்கியாக மட்டுமே தமிழக முஸ்லிம்களை அணுகும் தாழ்வு மனப்பான்மை கொண்ட முஸ்லிம்கள் சிலரும் அந்தக் கடிதத்தை தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

அதை எழுதியவர், முஸ்லிம்களின் இன்றைய ’இழிநிலைக்குக்’ காரணம் முஸ்லிம்கள் மட்டுமே என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார். ’வாங்க பாய்’ என்று கண்ணியமாக அழைக்கப்பட்ட முஸ்லிம்கள், தற்போது சில மேடைகளில் ‘துலுக்கப் பயலுகள்’ என்று அழைக்கப்படுவதற்கும், மாமன் மச்சானாகப் பழகிய இந்துக்கள் முஸ்லிம்களைத் தற்போது அச்சத்துடன் அணுகுவதற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ் மட்டும் இல்லை என்கிறார் அவர். தற்கால திமுக, மதிமுக முஸ்லிம்களும் இதனை ஏற்றுக் கொண்டு பகிர்ந்து வருகின்றனர். ஹெச். ராஜாவை எம்.எல்.ஏவாக்கி அழகுபார்த்தவர்களும், மோடியை 2014ம் ஆண்டு பிரதமராக்கத் தீவிரமாக பாடுபட்டவர்களும் இந்த அறிவுரையைத் தூக்கி வந்திருக்கின்றனர்.

’ஒரு கை ம‌ட்டும் வீசினால் ஓசை வ‌ருமா?’ என்ற கேள்விக்கு அடுத்ததாகத் தன்னை நாத்திக கம்யூனிஸ்ட் தந்தைக்கும், இஸ்லாமியத் தாய்க்கும் பிறந்தவராகவும், தன் வாழ்வில் இவ்விரு பக்கங்களையும் கண்டிருப்பதாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் கடிதத்தை எழுதியவர். இயங்கியல் குறித்து சிறிதளவும் பார்வையில்லாத ஒருவர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்? இங்குள்ள மற்ற சமூகங்கள் அடைந்துள்ள மாற்றங்களையும் கணக்கில் கொள்ளாமல், தமிழக முஸ்லிம் சமூகத்தைத் தனியாகப் பிரித்து அணுகவே முடியாது. உலகமயமாக்கலுக்குப் பிறகு அனைத்து சமூகங்களுமே மாற்றத்தைத் தழுவின. இதில் முஸ்லிம் சமூகத்தை மட்டும் பிரித்து, anatomy வகுப்பு எடுப்பதே முதலில் தவறு.

முஸ்லிம்கள் தமிழ்க் கலாச்சாரத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தும் இந்தக் கடிதம், அதற்குத் துணையாக சூஃபி ஞானிகளின் தர்காக்களை அழைத்துக் கொள்கிறது. லிப்யாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய உமர் முக்தார் சூஃபி அறிஞர் தானே? இவர்களைப் பொறுத்தவரை, சூஃபியிஸத்தை ஏற்று, பாடல்களைப் பாடிக் கொண்டும், கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டும், ஆன்மிகத்தை மட்டுமே பேச வேண்டும்; அரசியலற்றவர்களாகவும் உதிரிகளாகவும் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்கு செலுத்திவிட்டு, மறுப்பு ஏதும் பேசக் கூடாது. நிற்க.

கலாச்சார ரீதியான வேறுபாடுகள்தான் மோதலுக்கு ஒட்டுமொத்த காரணம் என்பதுதான் இவர்கள் சொல்ல வருவதா? சீக்கியர்கள் பெரிய தாடியும் தலைப்பாகையும் வைத்துக்கொண்டு பொதுச்சமூகத்தோடு இணையாததுதான் அவர்கள் மீது எண்பதுகளில் நடந்த வன்முறைக்குக் காரணம் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அரசியல் ரீதியான பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணங்கள் அரசியல் ரீதியானதுதானே அன்றி கலாச்சார ரீதியான வேறுபாடுகள் அல்ல. அப்படி கலாச்சாரக் காரணங்களைக் காட்டுபவர்கள் பாதிக்கப்படுபவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

அடுத்ததாக அரேபியாவிற்கு வேலைக்குப் போனவர்களைக் குறிவைத்திருக்கிறார் இதனை எழுதியவர். அரேபியாவிற்குச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் உழைப்பதற்காகச் சென்றார்கள்; தேர்தல் வழியாக மக்களைச் சுரண்டி, பணம் ஈட்டி, முதலீடு செய்வதற்காக அல்ல. தொண்ணூறுகளுக்குப் பிறகு இந்திய அரசு மீதும், முஸ்லிம்களை எதிரிகளாகச் சித்தரித்து நிகழ்த்தப்பட்ட நடவடிக்கைகள் மீதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை உருவாகியிருந்தது. ’உனக்கு ஏன் அவநம்பிக்கை வருகிறது?’ என்பது உங்கள் கேள்வியாக இருக்குமாயின், அதற்கு என்னால் பதில் அளிக்க முடியாது.

தமிழகத்தில் இந்துத்துவா வளர்ந்ததற்கு முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டி அதற்கு வஹ்ஹாபிசம் என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறது இந்தக் கடிதம். இது முஸ்லிம்களின் மத ரீதியான விவாதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் அவர்களது உரிமை மீட்பு அரசியலோடு முடிச்சுப்போடுவதாகும். எண்பது, தொண்ணூறுகளில் நடந்த சீர்திருத்தவாதப் பிரச்சாரம் என்பது ஏனைய மதத்தினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அல்ல. அது தங்களது மத நடவடிக்கைக்குள் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பன குறித்துப் பேசிய ஒன்று.

முஸ்லிம் அரசியல் இயக்கங்களை முன்னெடுத்தவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்குமான உரிமை சார்ந்த அரசியலைத்தான் பேசினார்கள். அது மட்டுமல்ல, இன்று தமிழ்நாட்டில் தமிழ் அரசியல் என்று அழைக்கப்படும் எல்லா கோரிக்கைகளோடும் தங்களை இணைத்துக்கொண்டே தான் முஸ்லிம் சமூக உரிமைகளுக்கான அரசியலையும் முன்னெடுத்தார்கள். ’பிற‌ ம‌த‌த்தின‌ர் ம‌த்தியில் ஒரு வெறுப்பு க‌ல‌ந்த‌ அன்னிய‌த்தை நீங்க‌ளே விதைத்தீர்க‌ள்’ என்று இந்தக் கடிதம் சுட்டிக்காட்டுவது இதைத் தானா?

’வன்கொடுமை குற்றங்கள் நடைபெறுவதற்குப் பெண்களின் உடை தான் காரணம்’ என்ற வாதத்தைப் போலவே, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகக் காட்டுவதன் மூலம், கடந்த காலங்களில் இங்கு வளர்த்தெடுக்கப்பட்ட இந்துப் பெரும்பான்மைவாதம் குறித்துப் பேசத் தவறுகிறார்கள்.

இந்தியப் பிரிவினை, பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பரிமாற்றம் ஆகியவை நிகழ்ந்த பிறகு, சோம்நாத் கோவிலுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் முதல் சமீபத்தில் ‘மக்கள் விருப்பத்தை ஏற்று ராமாயணம் ஒளிபரப்பப்படும்’ என்று அறிவித்த இந்திய ஒன்றிய அரசு வரை, 70 ஆண்டுகளாக இந்திய அரசு பார்ப்பன நலன்களுக்கான கருவியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடர் நிகழ்வுகளின் நீட்சியாகப் பெரும்பான்மைவாதம் இங்கு தலைதூக்கி இருப்பதோடு, மத்தியில் நாஜி அரசாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் தான், தேர்தல் வெற்றியை மட்டும் விரும்பும் திமுக தன்னை இந்துக்களின் கட்சியாக முன்னிறுத்துவதை அணுக வேண்டும். அதிமுகவிற்கு அந்தப் பிரச்னை இல்லை. அது சங் பரிவாரின் அங்கமாகவே செயல்பட்டு வருகிறது.

திமுகவிற்கு வாக்கு செலுத்தாத முஸ்லிம்களையும், திமுகவுடன் இணைந்து செயல்படாத இஸ்லாமிய அமைப்புகளையும் விரோதிகளாகவும், பிற்போக்கானவர்களாகவும் சித்தரிக்கும் போக்கு இங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கமாக, முஸ்லிம்களுக்கு இவர்கள் மட்டுமே அறிவுரை கூறி வந்திருக்கின்றனர். இந்த முறை இவர்களுக்கு, உலகமயமாக்கலுக்குப் பிறகு பிறந்த ஒரு முஸ்லிம் இளைஞனாக சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறேன்.

இந்து நாஜிக்களைத் தேர்தல் அரசியலில் வீழ்த்திவிட முடியாது. முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் உங்கள் கட்சித் தலைமைகளிடம் தமிழக கிராமங்கள் முழுவதும் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு எதிராக அரசியல் வகுப்புகள் நடத்தச் சொல்லுங்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜெர்மனியில் நடைபெற்ற denazification போன்ற திட்டங்களை வெகுமக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லுங்கள். தேர்தல்களுக்காக மறக்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர்ப்பை, மீண்டும் கையில் எடுக்கச் சொல்லுங்கள். சாதியவாதிகளைத் திருப்திபடுத்துவதற்காக தலித்துகளுக்கு அதிகாரத்தை மறுப்பதையும், இந்துப் பெரும்பான்மைக் கூட்டு மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு அதிகாரத்தை மறுப்பதையும் எதிர்த்து, கட்சியிலும், தேர்தலிலும் அதிகாரம் வழங்கக் கோரி முறையிடுங்கள்.

தமிழகத்தின் வெகுசில அரசியல் குடும்பங்களிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குங்கள். ரஜினிகாந்த் போன்ற சங்கிகளுக்குத் திரைப்படத் தயாரிப்பு மூலம் நிதியுதவி செய்யாமல் இருங்கள். ஒரு தேர்தல் அரசியல் கட்சி இவற்றையெல்லாம் செய்ய முடியாது என்பது உங்கள் பதிலாக இருக்குமானால், தேர்தல் லாப நஷ்ட கணக்குகளை மட்டும் பேசுங்கள். முஸ்லிம்களை வெறும் பாதிக்கப்பட்டவர்களாகவோ எதிரிகளாகவோ மட்டுமே பார்ப்பதையும், முஸ்லிம்களின் மீட்பராக உங்களை நீங்களே முன்னிறுத்தும் மனநிலையையும் விட்டுத்தள்ளுங்கள்.

அமைப்பாகத் திரள்வதும், தனது உரிமைக்காகப் போராடுவதும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு சமூகத்திற்குமான உரிமை. அதில் உங்கள் அறிவுரைக் கழிவுகளைக் கொட்ட வேண்டாம்.

நன்றி,

தமிழ்நாட்டில் இருந்து ஒரு முஸ்லிம் இளைஞன்.
25/04/2020

Related posts

Leave a Comment