தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

  1. அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
  2. படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
  3. அவன் அளவிலாக் கருணையாளன்; இணையிலாக் கிருபையாளன்.
  4. தீர்ப்பு நாளின் அதிபதி.
  5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.
  6. எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக.
  7. அது நீ யாருக்கெல்லாம் அருள்புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. அது உன் கோபத்திற்கு ஆளானோரின் வழியுமல்ல; தவறான வழியில் சென்றோரின் வழியுமல்ல.

ஏழு வசனங்களைக் கொண்ட இந்த சிறிய அத்தியாயத்தை ஒரு முஸ்லிம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் பதினேழு தடவையாவது  ஓதுகிறான். அவன் சுன்னத்தான தொழுகைகளைத் தொழும்போது அதன் எண்ணிக்கை இருமடங்காகிவிடுகிறது. கடமையாக்கப்பட்ட, சுன்னத்தான தொழுகைகள் அல்லாமல் உபரியான தொழுகைகளை அவன் தொழுதால் அதன் எண்ணிக்கை பன்மடங்காகிவிடுகிறது. புகாரீ மற்றும் முஸ்லிமில் வந்துள்ள நபிமொழியின்படி இந்த அத்தியாத்தை ஓதாமல் தொழுகை இல்லை.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக உபாதா இப்னு சாமித் அறிவிக்கிறார், “திருக்குர்ஆனின் அல்பாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை கூடாது.”

இந்த அத்தியாயம் இஸ்லாமியக் கொள்கையின், கண்ணோட்டத்தின் அடித்தளங்களையும் மனித உணர்வுகளின், ஆர்வங்களின்  அடிப்படையான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. அவற்றின்மூலம் தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இது ஓதப்படுவதன் நோக்கமும் இதுவன்றி தொழுகை கூடாது என்று கூறப்பட்டதன் நோக்கமும் தெளிவாகிறது.

இந்த அத்தியாயம் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்ற வசனத்தோடு தொடங்குகிறது. இது ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள வசனமா? அல்லது ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் சொல்லப்படுகின்ற திருக்குர்ஆனின் ஒரு வசனமா? என்பதில் கருத்து வேறுபாடு காணப்பட்டபோதிலும் இது இந்த அத்தியாயத்தின் வசனங்களில் ஒன்று என்பதையே நான் சரியெனக் காண்கிறேன். இதனோடு சேர்த்துதான் இந்த அத்தியாயம் ஏழு வசனங்களைக் கொண்டதாகக் கணக்கிடப்படுகிறது. பின்வரும் இறைவசனமும் இதனையே உறுதிப்படுத்துகிறது, “நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம்.”

தன் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்யுமாறு அல்லாஹ் தன் தூதருக்கு செய்தி அறிவிக்கிறான். திருக்குர்ஆனில் முதன்முதலாக அருளப்பட்ட வசனம் “உம் இறைவனின் பெயரால் படிப்பீராக” என்பதாகும். அது இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகளுள் ஒன்றான, “அல்லாஹ்வே முதலும் முடிவுமானவன். அவனே வெளிப்படையானவனும் மறைவானவனுமாவான்” என்பதோடு ஒத்துப் போகிறது. அவனே உண்மையானவன். அவனிடமிருந்தே ஒவ்வொன்றும் தம் இருப்பைப் பெற்றுக் கொள்கின்றன. ஒவ்வொன்றும் அவனிடமிருந்தே தொடங்குகின்றன. ஆகவே ஒவ்வொன்றும் அவனது பெயரால்தான் தொடங்கப்பட வேண்டும்.

அவனது பண்புகளான “அர்ரஹ்மான், அர்ரஹீம்” ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது. அவை அருளின், கருணையின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியவை. இந்த இரண்டு பண்புகளும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியவை. அதிலும் குறிப்பாக ‘அர்ரஹ்மான்’ என்ற வார்த்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ‘அர்ரஹீம்’ என்ற வார்த்தை அடியார்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஈமானிய நோக்கில் ‘அர்ரஹ்மான்’ என்ற வார்த்தையை அடியார்களில் யாருக்கும் பயன்படுத்தக்கூடாது. இரண்டில் எது செறிவான பொருளைத் தருகிறது என்பதில் கருத்துவேறுபாடு இருந்தாலும் இந்த இரு பண்புகளையும் ஒன்றுசேர்த்து அல்லாஹ்வுக்குப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். நாம் இந்தப் புத்தகத்தில் இதுபோன்ற கருத்துவேறுபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவில்லை. சுருக்கமாக இந்த இரு பண்புகளும் உள்ளடக்கியுள்ள அருள், மற்றும் கருணையின் வடிவங்களைக் காணலாம்.

அல்லாஹ்வின் பெயரைக் கொண்டும் அது உள்ளடக்கியுள்ள அவனது ஏகத்துவம் மற்றும் அவனுடன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டும் ஆரம்பம் செய்வது இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் முதல் அடிப்படையைத் தெளிவுபடுத்துகிறது.

“அர்ரஹ்மான், அர்ரஹீம்” என்ற இரு பண்புகளும் உள்ளடக்கியுள்ள கருணையின், அருளின் பொருள்கள், வடிவங்கள் அனைத்தும் இந்தக் கண்ணோட்டத்தின் இரண்டாவது அடிப்படையைத் தெளிவுபடுத்துகின்றன. அதன்மூலம் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையே உள்ள தொடர்பின் உண்மைநிலை தெளிவுபடுத்தப்படுகிறது.

அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்த பிறகு மனிதன் தன்னையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வை புகழ்ந்தவாறு முன்னோக்குகிறான். “படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”

“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று நம்பிக்கையாளன் கூறுவது அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படும்போது அவனது உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான உணர்வாகும். அவனது இருப்பே உள்ளத்தில் நன்றியுணர்வை பொங்கச் செய்யும் இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றுதான். ஒவ்வொரு நிமிடமும் நொடியும் இறைவனின் அருட்கொடைகள் படைப்புகள் அனைத்தின்மீதும் – குறிப்பாக இந்த மனிதனின்மீது – பொழிந்தவண்ணம்தான் உள்ளன. ஆகவே ஒவ்வொரு செயலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே’ என்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும். “அவனே அல்லாஹ். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. ஆரம்பத்திலும் இறுதியிலும் அவனுக்கே புகழனைத்தும்.”

இவ்வாறு நம்பிக்கைகொண்ட அடியான் தன் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினாலும் அவன்மீது அல்லாஹ் பொழியும் அருட்கொடையைப் பாருங்கள்: அவன் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறினால் அதன் காரணமாக அவனுக்கு எழுதப்படும் ஒரு நன்மையானது எடைத்தட்டுகள் அனைத்தையும் மிகைத்துவிடுகிறது. நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார், “அல்லாஹ்வின் அடியார்களில் யாரேனும் ஒருவர், “என் இறைவா! உன் முகத்தின் கண்ணியத்திற்கேற்ப, உன் ஆட்சியதிகாரத்தின் பிரமாண்டத்திற்கேற்ப உனக்கே புகழனைத்தும்” என்று கூறினால் இரு வானவர்களும் வியப்புற்று அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி விடுகிறார்கள். ஆகவே அவர்கள் வானத்தை நோக்கி ஏறி “எங்கள் இறைவா! உன் அடியான் ஒரு சொல் கூறியுள்ளான். அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறார்கள். அவன் தன் அடியான் கூறியதை நன்கறிந்துகொண்டே “என் அடியான் என்ன கூறினான்?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் கூறுவார்கள், “என் இறைவா! உன் முகத்தின் கண்ணியத்திற்கேற்ப, உன் ஆட்சியதிகாரத்தின் பிரமாண்டத்திற்கேற்ப உனக்கே புகழனைத்தும் என்று உன் அடியான் கூறினான்.” அல்லாஹ் அவர்கள் இருவரிடமும் கூறுவான், “என் அடியான் கூறியவாறே எழுதுங்கள். அவன் என்னைச் சந்திக்கும் நாளில் நான் அதற்காக அவனுக்குக் கூலி வழங்குவேன்.”(இப்னு மாஜா)

புகழ்ந்தவாறு அல்லாஹ்வை முன்னோக்குவது அவன் நினைவுகூரப்படுவதனால் நம்பிக்கையாளனின் உள்ளத்தில் தோன்றக்கூடிய இயல்பான உணர்வின் வெளிப்பாடாகும். இந்த வசனத்தின் அடுத்த பகுதியான ‘ரப்புல் ஆலமீன்’ இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் மற்றொரு அடிப்படையான அம்சத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்ததோடு மட்டுமல்லாமல் பராமரித்துக் கொண்டும் இருக்கின்றான் என்பதாகும். அரபி மொழியில் ‘ரப்’ என்ற வார்த்தைக்கு உரிமையாளன், அதிகாரம் செலுத்துபவன் என்று பொருள். அதாவது சீர்திருத்தும்பொருட்டும் பண்படுத்தும்பொருட்டும்  ஒரு பொருளின்மீது அதிகாரம் செலுத்துவன். அவன் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள படைப்புகள் அனைத்தையும் பரிபாலிக்கிறான், பராமரிக்கிறான். அவன் அவற்றையெல்லாம் படைத்து அப்படியே வீணாக விட்டுவிடவில்லை. அவையனைத்தையும் கண்காணிக்கிறான், நிர்வகிக்கிறான், பரிபாலிக்கிறான். அவற்றில் தேவையான சீர்திருத்தங்கள் செய்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள படைப்புகள் அனைத்தும் அவனது கண்காணிப்பில், பாதுகாப்பில்தான் உள்ளது. படைப்பாளனுக்கும் படைப்புகளுக்குமிடையேயுள்ள தொடர்பு ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நிலையிலும் என்றென்றும் நீடிக்கக்கூடியது.

இந்த பரிபாலிக்கும் தன்மையே அனைத்தையும் தழுவிய பரிபூரணமான ஏகத்துவத்தின் தெளிவையும் இந்த உண்மையினுடைய சரியான வடிவத்தின் தெளிவின்மையால் தோன்றக்கூடிய போலியையும் வேறுபடுத்தும் அம்சமாகும். மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் ஒருவனே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும் அவனைத்தவிர பல கடவுள்களும் தங்களின் வாழ்க்கையில் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்று நம்புகிறார்கள். இது வியப்பூட்டக்கூடிய, சிரிப்பூட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும் அத்தகைய நம்பிக்கையாளர்கள் எல்லா காலகட்டங்களிலும் காணப்பட்டத்தான் செய்கிறார்கள்.

தங்களின் பல்வேறு கடவுள்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்த இணைவைப்பாளர்களைக் குறித்து குர்ஆன் நமக்குக் கூறுகிறது: “அவர்கள் எங்களை அல்லாஹ்விடம் சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே நாங்கள் அவர்களை வணங்குகிறோம்.” அதேபோன்று வேதக்காரர்களைக் குறித்து அது கூறுகிறது: “அவர்கள் தங்களின் மதகுருமார்களையும் துறவிகளையும் அல்லாஹ்வைவிடுத்து கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள்.” இஸ்லாம் இந்த உலகிற்கு வந்தபோது பூமியில் பரவியிருந்த அறியாமைக்கால கொள்கைகளில் பல்வேறு கடவுள்கள் நிரம்பி வழிந்தன. அவர்கள் பெரிய கடவுள்களுடன் சிறிய கடவுள்களையும் உருவாக்கி வைத்திருந்தார்கள்.

இறைவன் படைப்புகள் அனைத்தையும் பரிபாலித்துக் கொண்டிருக்கிறான் என்று இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள விசயமே இஸ்லாத்தின் சீரான அமைப்பையும் அதைத்தவிர மற்றவற்றின் சீரற்ற அமைப்பையும் வேறுபடுத்தும் அம்சமாகும். அதனால் படைப்புகள் அனைத்தும் அந்த ஒரே இறைவனையே முன்னோக்குகின்றன. அவனது அதிகாரத்தை மட்டுமே ஏற்று தம்முடைய தோளில் சுமந்து கொண்டிருக்கும் பல்வேறு கடவுள்களை அகற்றி விடுகின்றன. அவற்றால் ஏற்பட்ட குழப்பத்திலிருந்தும் தடுமாற்றத்திலிருந்தும் விடுதலையடைகின்றன. பின்னர் இந்த படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் நிரந்தரமான பாதுகாப்பில், பராமரிப்பில், அரவணைப்பில் நிம்மதியடைகின்றன. இந்தப் பாதுகாப்பும் பராமரிப்பும் ஒரு நொடிகூட அவர்களைவிட்டு அகன்றுவிடுவதில்லை. அது அரிஸ்டாட்டிலின் கடவுள் கோட்பாட்டைப் போலல்ல. அவர் கூறுகிறார், “இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து பின்னர் அதனை அப்படியே விட்டுவிட்டான். அவன் தன்னைத்தவிர வேறெதையும் குறித்து சிந்திக்க மாட்டான்.” இதுதான் தத்துவ உலகில் உயர்ந்த தத்துவமாகக் கருதப்படுகிறது!

இஸ்லாம் இந்த உலகிற்கு வந்தபோது கொள்கைகள், கண்ணோட்டங்கள், தத்துவங்கள், புராணங்கள், யூகங்கள், பழக்கவழக்கங்கள், புனிதங்கள் ஆகியவற்றின் பெரும் குவியல்கள் மண்டிக்கிடந்தன. சத்தியம் அசத்தியத்தோடு, சரியானவை தவறானவையோடு, மார்க்கம் மூடநம்பிக்கைகளோடு விரவிக்கிடந்தன. இந்த குவியல்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட மனித மனம் யூகங்களிலும் காரிருளிலும் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது. எதன்மீதும் அது நிலையாக இருக்கவில்லை.

அந்தக் காரிருளில் வழிகாட்டியோ வெளிச்சமோ எதுவும் இல்லாமல் இருந்தது. அதுதான் இறைவனைக் குறித்தும் அவனது பண்புகள் குறித்தும் அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்தும் மனித சமூகத்தை சூழ்ந்திருந்த கண்ணோட்டங்களாகும்.

இறைவனைக் குறித்தும் அவனது பண்புகள் குறித்தும் சரியான கண்ணோட்டத்தில் மனித மனம் நிலைபெறாதவரை அது பிரபஞ்சத்தைக் குறித்தும் தன்னைக் குறித்தும் தன் வாழ்க்கையைக் குறித்தும் சரியான கண்ணோட்டத்தில் நிலைபெற முடியாது.

மனித சமூகத்தில் மண்டிக் கிடக்கும் இந்தக் குவியல்களை அறியாமல் சரியான கண்ணோட்டத்தில் மனித மனம் நிலைபெற வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. இஸ்லாம் உலகிற்கு வந்தபோது அவை மனித மனதில் துருவாக படிந்துகிடந்தன. (அடுத்து வரும் அத்தியாயங்களில் திருக்குர்ஆன் அவற்றையெல்லாம் குறித்து விரிவாகப் பேசுகிறது.)

ஆகவேதான் இஸ்லாம் முதலில் மனித மனதை தீய கண்ணோட்டங்களிலிருந்து விடுவித்து அல்லாஹ்வைக் குறித்தும் அவனது பண்புகள் குறித்தும் படைப்புகளுடன் அவன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்தும் படைப்புகள் அவனுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்தும் சரியான கண்ணோட்டத்தை அதில் நிலைபெறச் செய்வதின்பால் கவனம் செலுத்தியது.

அனைத்தையும் தழுவிய, பரிபூரணமான, இணைவைப்பின் எந்தச் சாயலும் கலக்காத தூய ஏகத்துவமே இஸ்லாம் கொண்டுவந்த கண்ணோட்டத்தின் அடிப்படையாகும். அது மனித மனதில் நிலைபெற்று அதில் படிந்திருந்த அழுக்குகளையெல்லாம் துடைத்தெறிந்தது. எந்த வகையிலும் யூகம் உள்நுழையாதவாறு எல்லா வகையான அழுக்குகளிலிருந்தும் அதனைத் தூய்மைப்படுத்தியது. இவ்வாறு இஸ்லாம் அல்லாஹ்வின் பண்புகள் குறித்து, குறிப்பாக அவனது பரிபாலிக்கும் தன்மை குறித்து இதுபோன்ற தெளிவோடு உறுதியான வார்த்தையைக் கூறியது. மனிதனின் உள்ளத்திலும் நடத்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் இந்தப் பண்பைக் குறித்துதான் மதக் கண்ணோட்டங்கள், மெய்யியல் கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் எல்லாம் கடும் தடுமாற்றத்தில் வீழ்ந்து கிடந்தன.

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின்  பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

இந்தக் கொள்கையின் அழகும் பரிபூரணமும் ஒத்திசைவும் இது கூறும் எதார்த்தத்தின் எளிமையும் இதைத்தவிர மற்ற கொள்கைகள், மெய்யியல் கண்ணோட்டங்கள், புராணங்கள் ஆகியவற்றின் குவியல்களை -அவற்றிலும் குறிப்பாக இறைவனைக் குறித்தும் பிரபஞ்சத்தைக் குறித்தும் அவை கூறும் கண்ணோட்டங்களை- ஆராய்ந்து பார்க்கும்போதுதான் இன்னும் தெள்ளத் தெளிவாகும். அப்போது இஸ்லாமியக் கொள்கை மனித உள்ளத்திற்கும் அறிவிற்கும் வழங்கப்பட்ட மாபெரும் அருட்கொடையாக வெளிப்படும். அழகும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் மனித இயல்போடு இயைந்து போகும் அதன் தன்மையும் கொண்ட மாபெரும் அருட்கொடையாக வெளிப்படும்.

“அவன் அளவிலாக் கருணையாளன் இணையிலாக் கிருபையாளன்.”

அருளின், கருணையின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய இந்த இரு பண்புகளும் அத்தியாயத்தின் நடுவில் இறைவனின் படைத்துப் பராமரிக்கும் தன்மையோடு இணைந்து தனித்த வசனமாக மீண்டும் வந்துள்ளது, அவனுக்கும் அவனது படைப்புகளுக்கும் இடையேயுள்ள நிரந்தரமான தொடர்பின் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக. அவனுக்கும் அவனது படைப்புகளுக்கும்  இடையேயுள்ள தொடர்பு படைப்புகளின் உள்ளத்தில் நன்றியுணர்ச்சியை பொங்கச் செய்யும் அருளையையும் கருணையையும் அடிப்படையாகக் கொண்டது. அவனது அருளை அனுபவிக்கும் உள்ளத்தின் இயல்பான வெளிப்பாடுதான் அவனுக்கு நன்றி செலுத்துவதும் அவனைப் புகழ்வதும்.

இஸ்லாம் கூறும் இறைவன் கிரேக்க கடவுளான ஒலிம்பிக்கைப்போல (Olympic) தன் அடியார்களை எதிரிகளை விரட்டுவதுபோன்று விரட்டுவதில்லை. யூதக்கண்ணோட்டங்கள் கூறுவதுபோன்று அவர்களைப் பழிவாங்குவதற்காக சதித்திட்டம் தீட்டுவதில்லை. (யூதர்களின் பழைய ஏற்பாடு ஆதியாகமம் பதினொன்றாவது அதிகாரத்தில் பின்வருமாறு வந்துள்ளது:

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. மக்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் சிநெயார் தேசத்தில் சமபூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். அப்போது அவர்கள், நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாக செங்கல்லும் சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.

பின்னும் அவர்கள், நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

மனுஷபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் காண கர்த்தர் இறங்கினார். அப்போது கர்த்தர், இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாய்  இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கு அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம்’ என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார். அப்போது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.

பூமியெங்கும் வழங்கிய பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதன் பெயர் பாபேல் எனப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்.”)

“தீர்ப்பு நாளின் அதிபதி”

மறுமை நாளின் மீதான நம்பிக்கை மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும். அந்த நாளில் அதிகாரம் அனைத்தும் அவன் கைவசமே இருக்கும். அது கூலி வழங்கப்படும் நாளாகும். மனிதர்களில் பெரும்பாலோர், அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை ஏற்றுக்கொண்டபோதிலும் கூலி கொடுக்கப்படும் நாளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களில் சிலரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது:

“தூதரே! வானங்களையும் பூமியையும் படைத்தது யார்? என்று நீர் அவர்களிடம் கேட்டால்  நிச்சயம் அவர்கள் ‘அல்லாஹ்’ என்றுதான் கூறுவார்கள்.” (31:25)

“அவர்களிடம் அவர்களிலிருந்தே எச்சரிக்கை செய்பவர் வந்துள்ளதைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். “இது ஆச்சரியமான விசயமே!  நாம் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா? இவ்விதம் எழுப்பப்படுவது சாத்தியமற்ற ஒன்று!” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.” (50:2,3)

மறுமை நாளின்மீது நம்பிக்கைகொள்வது இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும். அது மனிதனின் சிந்தனையிலும் உள்ளத்திலும் இந்த உலகத்திற்கு அப்பால் இன்னொரு உலகைத் தோற்றுவிக்கிறது. அதனால் அவன் இவ்வுலக தேவைகளை நிறைவேற்றுவதிலேயே மூழ்கிவிட மாட்டான். அவனது சிந்தனை இவ்வுலக தேவைகளையும் மிகைத்து விசாலமாகி விடுகிறது. தன்னுடைய குறுகிய வாழ்நாளுக்குள் தன் முயற்சியின் விளைவைப் பெற்றுவிட வேண்டும் என்று அவன் பதற்றம்கொள்ள மாட்டான். அவனால் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வுலகிலோ மறுவுலகிலோ அவன் விதித்த கூலியை எதிர்பார்த்தவாறு, சத்தியத்தில் நிலைத்திருந்தவாறு நிம்மதியுடன் நன்மையின்மீதான நம்பிக்கையுடன்  திறந்த மனதோடு செயல்பட முடிகிறது. ஆகவே அடிப்படையான இந்த அம்சம் ஒரு மனிதன் தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை, தெரிவு செய்யும் உரிமையைப் பயன்படுத்தி தனது இன்பங்கள் மற்றும் ஆசைகளுக்கு மட்டும் அடிமையாக இருக்கிறானா? அல்லது உலகியல் மதிப்பீடுகள், அறியாமைக்கால கண்ணோட்டங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இறைக்கண்ணோட்டத்தை, இஸ்லாமிய வாழ்வியலைக் கடைப்பிடித்து உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறானா? என்பதை அறிந்துகொள்வதற்கான உரைகல்லாகவும் இருக்கின்றது. அது அல்லாஹ் தன் அடியார்களுக்கு நாடிய உயர்ந்த இடத்தையும் அவன் விரும்பாத பிழையான, திரிக்கப்பட்ட கண்ணோட்டங்களையும் வேறுபடுத்தும் அம்சமாகவும் இருக்கின்றது.

மனிதனின் கண்ணோட்டத்தில் இந்த அடிப்படையான அம்சம் நிலைபெறாதவரை, இந்த உலகில் பெறப்படும் கூலியே இறுதியானது அல்ல, இந்த குறுகிய வாழ்க்கைக்கு அப்பால் இன்னொரு உலகமும் இருக்கிறது என்பதை உறுதியாக அவனது உள்ளம் நம்பாதவரை இறைவனின் உயர்ந்த வழிமுறையின்மீது மனித வாழ்வு நிலைபெற முடியாது.

மறுமைநாளை நம்பக்கூடியவர்களும் அதனை மறுக்கக்கூடியவர்களும்  சமமாக மாட்டார்கள். அவர்களின் உணர்வுகளும் பண்புகளும் செயல்பாடுகளும் வேறு வேறாகத்தான் இருக்கும். இருவரும் வேறு வேறான படைப்புகளைப் போன்றவர்கள். இந்த உலகில் அவர்களால் இணைந்து செயல்பட முடியாது. மறுமைநாளில் பெறக்கூடிய கூலியிலும் அவர்களால் இணைய முடியாது.

“உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்”

இதுவும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள முந்தைய அடிப்படைகளிலிருந்து உருவாகிவருகின்ற அடிப்படையான அம்சமாகும். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அவனிடமே தவிர வேறு யாரிடமும் உதவி தேடக்கூடாது.

இது மனிதன் எல்லா வகையான அடிமைத்தளைகளிலிருந்தும் விடுதலையடைவதையும் அவன் எல்லா வகையான அடிமைத்தளைகளிலும் சிக்கிக்கொள்வதையும் வேறுபடுத்தும் அம்சமாகும். இந்த அடிப்படையான அம்சம் மனிதனை யூகங்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்து வகையான அடிமைத் தளைகளிலிருந்தும் விடுவிக்கிறது. அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் எனில் அவனிடம் மட்டுமே உதவி தேடப்பட வேண்டும். அவனை மட்டுமே வணங்கும் மனித மனம் சக மனிதர்கள், பழக்கவழக்கங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் அடிமைத்தளையிலருந்து தம்மை விடுவித்துக் கொள்கிறது.

இங்கு மனித ஆற்றல்களையும் இயற்கையின் ஆற்றல்களையும் குறித்து ஒரு முஸ்லிமின் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. மனித ஆற்றல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனது மார்க்கத்தைப் பின்பற்றும் நேர்வழிபெற்ற மனித ஆற்றல். அவன் அதனுடன் நட்பு கொண்டு நன்மையான, வாய்மையான செயல்களிலும் சீர்திருத்தங்களிலும் அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். மற்றொன்று அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளாத, அவனது மார்க்கத்தைப் பின்பற்றாத வழிகெட்ட ஆற்றல். அவன் அதனுடன் போர் புரிய வேண்டும். அதற்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும்.

வழிகெட்ட இந்த ஆற்றல் பெரும்பான்மையாக அல்லது பலம்பொருந்தியதாக இருப்பதைக் கண்டு ஒரு முஸ்லிம் பயந்துவிடக் கூடாது. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளாத அந்த ஆற்றல் தன் உண்மையான பலத்தை இழந்துவிடும். அதன் பலத்தைப் பாதுகாக்கும் நிரந்தரமான உணவையும் இழந்துவிடும். அது தன் வட்டப்பாதையிலிருந்து பிரிந்து சென்ற கோளைப்போன்றதாகிவிடும். அந்த கோள் பிரிந்தவுடனேயே தன் வெப்பத்தையும் ஒளியையும் இழந்துவிடும். அது எவ்வளவுதான் பெரியதாக இருந்தாலும் சரியே. அதே சமயத்தில் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருக்கும் ஆற்றல் தன் பலத்தையும் வெப்பத்தையும் ஒளியையும் பெற்றுக் கொண்டேயிருக்கும். “எத்தனையோ சிறு கூட்டங்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு பெரும் கூட்டங்களை மிகைத்திருக்கின்றன.” அல்லாஹ்வுடன் தொடர்பில் இருக்கும் ஆற்றல் தனக்குத் தேவையான பலத்தையும் கண்ணியத்தையும் அவனிடமிருந்து பெற்றுக் கொண்டேயிருக்கும்.

இயற்கையின் ஆற்றல்களுடன் ஒரு முஸ்லிம் நட்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவற்றைக் கண்டு அவன் அஞ்சவோ பகைக்கவோ வேண்டியதில்லை. மனித ஆற்றலும் இயற்கையின் ஆற்றலும் அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்து வெளிப்படக்கூடியவை, அவனது நாட்டத்திற்கு கட்டுப்பட்டவை. இயக்கத்திலும் நோக்கத்திலும் இரண்டும் ஒன்றுக்கொன்று உதவக்கூடியவை, ஒத்திசைவைக் கொண்டவை.

நம்பிக்கையாளனின் கொள்கை அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது, அவனுக்கு உதவியாளனாக, நண்பனாக அமையும்பொருட்டே அல்லாஹ்தான் இந்த ஆற்றல்களையெல்லாம் படைத்தான், என்று; அவற்றைக் குறித்து சிந்தித்தாலே அவற்றின் நட்பைப் பெற்றுவிடலாம், அவற்றோடு பழகிவிடலாம், என்று; அவற்றுடன் சேர்ந்து அவர்கள் இருவரும் தங்களின் இறைவனான அல்லாஹ்வை முன்னோக்கலாம், என்று. அவன் அவற்றைக் குறித்து சிந்திக்கவில்லையெனில், அவற்றுடன் பழகவில்லையெனில், அவற்றின் விதிகளை அறிந்துகொள்ளவில்லை எனில் அவை சில சமயங்களில் தீங்கிழைக்கவும் செய்யலாம்.

அறியாமைக்கால ரோமானியரின் வாரிசான மேற்கத்தியர்கள் ‘இயற்கையின் ஆற்றல்களை பயன்படுத்திவிட்டோம்’ என்று கூறுவதற்குப் பதிலாக ‘இயற்கையை மிகைத்து விட்டோம்’ என்றார்கள். இந்த சொல்லாடல் இறைவனுடன், அவனுக்குப் பதிலளிக்கும் பிரபஞ்சத்தின் ஆன்மாவுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட அறியாமைக் கால கண்ணோட்டத்தை அவர்கள் கொண்டுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் நம்பிக்கையாளனின் உள்ளமோ அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அவனது இறைவனுடனும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்துடனும் தொடர்பு கொண்டிருக்கும். அதனுடன் மிகைத்தல், ஆதிக்கம் செலுத்துதல் அல்லாத வேறு வகையான தொடர்பே உள்ளது என்பதை அது அறியும். அல்லாஹ்தான் இந்த ஆற்றல்கள் அனைத்தையும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக குறிப்பிட்ட நியதிகளின்படி படைத்துள்ளான் என்பதையும் அவன் மனிதனுக்கு அவற்றையெல்லாம் வசப்படுத்தி அவற்றின் இரகசியங்களையும் விதிகளையும் அறிவதை இலகுபடுத்தித் தந்துள்ளான் என்பதையும் வசப்படுத்தப்பட்டுள்ள அந்த ஆற்றல்களிலிருந்து பயனடையும் மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடியவனாக இருக்க வேண்டும் என்பதையும் நம்பிக்கையாளன் அறிவான். ஏனெனில் அல்லாஹ்தான் அவற்றை அவனுக்கு  வசப்படுத்தித் தந்தான். அவன் அவற்றின்மீது ஆதிக்கம் கொள்ளவில்லை. “பூமியிலுள்ள அனைத்தையும் அவன் உங்களின் பயன்பாட்டிற்காக வசப்படுத்தித் தந்துள்ளான்.”

இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொண்ட நம்பிக்கையாளனின் உள்ளம் இயற்கையின் ஆற்றல்களைக் குறித்து யூகங்களால் நிரப்பப்படுவதில்லை. அவற்றைக் கண்டு அஞ்சுவதுமில்லை. அது அல்லாஹ் ஒருவனின்மீது நம்பிக்கைகொண்டு அவனையே வணங்குகிறது. அவனிடமே உதவி தேடுகிறது. அவன் படைத்த இந்த படைப்புகளைக் குறித்து சிந்தனை செலுத்துகிறது. அவற்றுடன் நட்பு கொண்டு அவற்றின் இரகசியங்களை அறிந்துகொள்கிறது. அன்பான, பழக்கப்பட்ட நண்பனுடன் வாழ்வதுபோன்று அவற்றுடன் வாழ்கிறது. உஹது மலையைப் பார்த்து நபியவர்கள் கூறியது எவ்வளவு மிகச் சிறந்த கூற்று! அவர்கள் உஹது மலையைப் பார்த்துக் கூறினார்கள், “இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் இந்த மலையை நேசிக்கிறோம்.” முதல் நம்பிக்கையாளரான முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து வெளிப்பட்ட அன்பும் நேசமும் கலந்த வார்த்தைகள் இவை.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் இந்த அடிப்படையான அம்சங்களையும் வணக்க வழிபாடும் உதவிதேடுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதையும் நிலைநிறுத்திய பிறகு அவற்றின் செயல்முறை விளக்கமாக இந்த அத்தியாயத்தின் முழு இயல்பையும் பிரதிபலிக்கும் வகையில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

“எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அது நீ யாருக்கெல்லாம் அருள்புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. அது உன் கோபத்திற்கு ஆளானோரின் வழியுமல்ல; தவறான வழியில் சென்றோரின் வழியுமல்ல.”

அல்லாஹ்வே! நேரான வழியை அறிந்துகொள்ளும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக. அந்த வழியை அறிந்துகொண்டபிறகு அதில் நிலைத்திருக்கும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக.

அறிதலும் அதில் உறுதியாக நிலைத்திருத்தலும் அல்லாஹ் வழங்கிய வழிகாட்டலின், அவனது அரவணைப்பின், அருளின் விளைவாகும். அல்லாஹ் மட்டுமே உதவி செய்ய முடியும் என்ற கொள்கையின் விளைவே இந்த பிரார்த்தனை. நம்பிக்கையாளன் தன் இறைவனிடம் முதலில் நேர்வழியை வேண்டித்தான் உதவி கோருகிறான். அந்த நேர்வழியே இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனது நிம்மதிக்குப் பொறுப்பேற்கக்கூடியது. உண்மையில் அது மனிதனின் இயக்கத்திற்கும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் மத்தியில் ஒத்திசைவை ஏற்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் நியதிகளின்பால் மனிதனின் இயல்பு வழிகாட்டப்படுவதாகும்.

இந்த நேரான வழியின் இயல்பு தெளிவுபடுத்தப்படுகிறது. அது நீ யாருக்கெல்லாம் அருள்புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. சத்தியத்தை அறிந்தும் அதனைவிட்டு விலகி உன் கோபத்திற்கு ஆளானோரின் வழியுமல்ல. சரியான வழியை அறியாமல் தவறான பாதையில் சென்றோரின் வழியுமல்ல. அது நேரான பாதையில் செல்லும் பெரும் பாக்கியம் பெற்றோரின் வழி.

இது ஒவ்வொரு தொழுகையிலும் மீண்டும் மீண்டும் ஓதப்படக்கூடிய அத்தியாயமாகும். இதுவன்றி தொழுகை இல்லை. மிகச் சிறிய இந்த அத்தியாயம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படையான அம்சங்களையும் அந்தக் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுப்பூர்வமான இயக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.

நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறுகிறார், “அல்லாஹ் கூறுகிறான், “நான் தொழுகையை எனக்கும் என் அடியானுக்கும் இடையே சரிபாதியாக பங்கிட்டுக் கொண்டேன். அதில் பாதி எனக்குரியது. பாதி என் அடியானுக்குரியது. என் அடியானுக்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும். அடியான், “படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினால் “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “அவன் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன்” என்று கூறினால், “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “தீர்ப்பு நாளின் அதிபதி” என்று கூறினால், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்” என்று கூறினால், “இது எனக்கும் என் அடியானுக்கும் உரியதாகும். என் அடியானுக்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அது நீ யாருக்கெல்லாம் அருள்புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்கு ஆளானோரின் வழியுமல்ல, தவறான வழியில் சென்றோரின் வழியுமல்ல” என்று கூறினால், “இது என் அடியானுக்குரியது. என் அடியானுக்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும்” என்று அல்லாஹ் கூறுகிறான். (முஸ்லிம்)

இந்த ஆதாரப்பூர்வமான நபிமொழி மீண்டும் மீண்டும் இந்த அத்தியாயம் ஓதுவதற்காக தெரிவு செய்யப்பட்டதன் நோக்கங்களை விளக்கலாம்.

Related posts

Leave a Comment