தொடர்கள் மொழிபெயர்ப்பு 

அல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

முன்னுரை

இந்த அத்தியாயம்  ஹிஜ்ரத்திற்குப் பிறகு மதீனா வாழ்வின் ஆரம்ப காலத்தில் இறங்கிய அத்தியாயங்களில் ஒன்றாகும். இது குர்ஆனின் மிகப் பெரிய அத்தியாயமாகும். இதன் வசனங்கள் தொடர்ச்சியாக அருளப்படவில்லை. இது முழுமையடைவதற்கு முன்னரே வேறு சில அத்தியாயங்களும் அருளப்பட்டன என்பதே சரியான கருத்தாகும். இதன் வசனங்களும் மதீனாவில் அருளப்பட்ட வேறு அத்தியாயங்களின் சில வசனங்களும் அருளப்பட்ட காரணிகளைப் பார்க்கும்போது – இந்தக் காரணிகள் உறுதியானவையாக இல்லாவிட்டாலும் – மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்கள் தொடர்ச்சியாக ஒரேயடியாக அருளப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு அத்தியாயம் நிறைவடைவதற்கு முன்னரே மறு அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டன. அருளப்பட்ட காரணிகள் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களையே அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து வசனங்களையும் அல்ல. திருக்குர்ஆனில் இறுதியாக அருளப்பட்ட வசனங்களும் – வட்டி குறித்த வசனங்கள் – இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களோ மதீனா வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் அருளப்பட்டவை.

ஒரு அத்தியாயத்திலுள்ள வசனங்கள் ஒன்றிணைக்கப்பட்டதும் அவற்றுக்கு வழங்கப்பட்ட வரிசையும் இறைவழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார், “நான் உஸ்மான் இப்னு அஃப்ஃபானிடம் கேட்டேன், நூற்றுக்குக் குறைவாக வசனங்களைக் கொண்ட அன்ஃபால் என்ற அத்தியாயத்தையும் நூற்றுக்கு அதிகமான வசனங்களைக் கொண்டு தவ்பா என்ற அத்தியாயத்தையும் ஒன்றுசேர்த்து விட்டீர்களே? அவற்றுக்கிடையே ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ கூட எழுதவில்லையே? மிகப் பெரிய ஏழு அத்தியாயங்களில் ஒன்றாக அதனை ஆக்கிவிட்டீர்களா? எது உங்களை அவ்வாறு செய்யத் தூண்டியது?” அதற்கு உஸ்மான் கூறினார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரே சமயத்தில் பல்வேறு அத்தியாயங்களின் வசனங்கள் அருளப்பட்டன. நபியவர்களுக்கு வசனங்கள் அருளப்பட்டபோது அவர்கள் எழுதக்கூடியவரை அழைத்து “இந்த வசனத்தை குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தோடு சேர்த்து எழுதுங்கள்” என்று கூறுவார்கள். அன்ஃபால் மதீனா வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் அருளப்பட்ட அத்தியாயமாகும். ‘தவ்பா’ இறுதியாக அருளப்பட்ட குர்ஆனின் அத்தியாயமாகும். இரண்டு அத்தியாயங்களிலுமுள்ள கருத்துகளும் ஒன்றையொன்று ஒத்துப்போகக்கூடியவை. நபியவர்கள் மரணிக்கும்வரை அவற்றைக்குறித்து எதையும் தெளிவுபடுத்தவில்லை. அதனால்தான் இரண்டையும் இணைத்து எழுதிவிட்டேன். இரண்டிற்கும் இடையே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்கூட எழுதவில்லை. அதனை ஏழு பெரிய அத்தியாயங்களில் ஒன்றாக ஆக்கிவிட்டேன்.” (திர்மீதி)

இந்த அறிவிப்பு நபியவர்களின் வழிகாட்டுதலின்படியே ஒவ்வொரு அத்தியாயத்திலும் வசனங்கள் வரிசைப்படுத்தப்பட்டன என்பதை தெளிவுபடுத்துகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களில் வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார்கள். அவர்கள் ரமலான் மாதத்தில் வானவர் ஜிப்ரீலை சந்திக்கும்போது இன்னும் அதிகமாக வழங்குவார்கள். அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீலை சந்தித்து குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். நபியவர்கள் வேகமான காற்றைவிட விரைவாக நன்மைகளைச் செய்பவர்களாக இருந்தார்கள்.” (புகாரீ) மற்றொரு அறிவிப்பில் நபியவர்கள் குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் கற்றுத் தந்தவாறே அவருக்கு ஓதிக்காட்டினார்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை அவற்றின் வரிசைப்படியே ஓதினார்கள் என்பது தெளிவாகிறது.

திருக்குர்ஆனின் நிழலில் வாழ்பவர் அதன் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்து விளங்குவதைக் காண்பார். தனித்தன்மைவாய்ந்த உயிருள்ள ஆன்மாவுடன் வாழ்வதுபோல அந்த அத்தியாயத்தின் ஆன்மாவுடன் நம்பிக்கையாளனின் உள்ளம் வாழ்கிறது. அது குறிப்பிட்ட ஒரு தலைப்பை அல்லது பல தலைப்புகள் கொண்ட ஒரு மையத்தைப் பெற்றிருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழல் அதன் தலைப்புகள் அனைத்தையும் சூழ்ந்திருக்கும். அது அதன் தலைப்புகள் அனைத்தையும் தழுவி அவற்றுக்கிடையே ஒத்திசைவை ஏற்படுத்தியிருக்கும். அது குறிப்பிட்ட வகையான ராகத்தையும் கொண்டிருக்கும். அவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது குறிப்பிட்ட தலைப்பின் சூழலுக்கேற்பவே இருக்கும். இது திருக்குர்ஆனின் அத்தியாயங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும். அடிப்படையான இந்த அம்சத்தைவிட்டும் இதுபோன்ற பெரிய அத்தியாயங்கள் விலகியிருக்காது.

இந்த அத்தியாயம் பல தலைப்புகளை உள்ளடக்கியது. ஆனால் அவையனைத்தும் இரண்டு பெரும் தலைப்புகளை உள்ளடக்கிய ஒரே மையத்தில் ஒன்றிணைகின்றன. அது ஒருபுறம் மதீனாவில் இஸ்லாமிய அழைப்பைக் குறித்த இஸ்ராயீலின் மக்களின் நிலைப்பாட்டையும்  இறைத்தூதரையும் வளர்ந்துவரும் இஸ்லாமிய அமைப்பினரையும் அவர்கள் எதிர்கொண்டமுறையையும் பற்றிப் பேசுகிறது. அந்த நிலைப்பாட்டின்படி அவர்கள் நயவஞ்சகர்களோடும் இணைவைப்பாளர்களோடும் கொண்ட தொடர்புகள் அனைத்தையும் குறித்தும் பேசுகிறது. மற்றொரு புறம், வளர்ந்து வரும் இஸ்லாமிய அமைப்பினரின் நிலைப்பாடு, இஸ்ராயீலின் மக்கள் தங்களுக்கு இடப்பட்ட பொறுப்பிலிருந்து விலகியிபிறகு, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை அவர்கள் மீறிய பிறகு அந்தப் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைத் தயார்படுத்துவது,  இஸ்ராயீலின் மக்கள் சறுக்கிய பாதைகளை எடுத்துரைத்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டுவது ஆகியவற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்த இரு பெரும் தலைப்புகளைக்கொண்ட மையத்தைச் சுற்றியே இந்த அத்தியாயத்தின் தலைப்புகள் அனைத்தும் சுழல்கின்றன.

ஒருபுறம் அத்தியாயத்தின் மையத்திற்கும் அதன் தலைப்புகளுக்கும்  இடையேயுள்ள தொடர்பை அறிந்துகொள்ளவும் மறுபுறம் மதீனா வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் அழைப்புப் பணியின் இயக்கத்தையும் இஸ்லாமிய அமைப்பின் வாழ்வையும் அது எதிர்கொண்ட சூழல்களையும் அறிந்துகொள்ளவும் இந்த அத்தியாயம் இறக்கப்பட்ட சூழல்களை சுருக்கமாகப் பார்த்துவிடுவது அவசியமாகும். அன்று  இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.

பாதுகாப்பான தளத்தை  தேடி…

மதீனாவை நோக்கி நபியவர்களின் ஹிஜ்ரத் – புலம்பெயர்வு வலுவான  முன்னேற்பாடுகளுக்குப் பிறகு முழுமையடைந்தது. மக்காவில் இருந்த சூழல் அங்கிருந்து புலம்பெயர்ந்து செல்வதை கட்டாயமாக்கியது.  இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லாஹ் விதித்த பாதையில் தொடர்ந்து இயங்குவதற்கு புலம்பெயர்வு அவசியமான ஒன்றாகியது. நபியவர்களின் மனைவி கதீஜா மற்றும் நபியவர்களைப் பாதுகாத்து வந்த அபூதாலிப் ஆகிய இருவரின் மரணத்திற்குப் பிறகு குறைஷிகளின் எதிர்ப்பும் பிடிவாதமும் இன்னும் அதிகமாகிவிட்டது. எந்த அளவுக்கெனில் அவர்கள் மக்காவிலும் அதனைச் சூழ இருக்கின்ற பகுதிகளிலும் அழைப்புப் பணியை கிட்டத்தட்ட ஸ்தம்பிக்கச் செய்துவிட்டார்கள். ஆயினும் அத்தனை எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியிலும் தனிமனிதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். குறைஷிகளின் இந்த நிலைப்பாட்டினால் மக்காவிலும் அதனைச் சூழ இருக்கின்ற பகுதிகளிலும் அழைப்புப் பணி நின்றுவிட்டதாகவே கருதப்பட்டது. மற்ற அரபுக்கள் நபியவர்களுக்கும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் – அவர்களில் அபூசுஃப்யான், அபூலஹப், அம்ரு இப்னு ஹிஷாம் ஆகியோர் முக்கியவமானவர்கள் – இடையே நடக்கும் இந்த மோதலின் முடிவை எதிர்பார்த்தவர்களாக இருவருடனும் இணையாமல் விலகியிருந்தார்கள். அன்றைய அரேபியாவில் குலம்சார்ந்த அமைப்பிற்கு வழங்கப்பட்ட பெரும் முக்கியத்துவத்தினால் அரபுக்கள் சொந்த குலத்தாரால் எதிர்க்கப்பட்ட ஒருவரின் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். அதிலும் குறிப்பாக அப்போது மார்க்க தலைமைபீடமாக கருதப்பட்ட கஅபாவை அவரது குலத்தார்தாம் நிர்வகித்து வந்தார்கள் என்பதும் முக்கியமான காரணமாகும்.

அதனால்தான் நபியவர்கள் இந்தக் கொள்கையைப் பாதுகாப்பதற்கும் சுதந்திரமான சூழலைப் பெறுவதற்கும் மக்காவை விடுத்து வேறோரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். மக்காவில் நிறுத்தப்பட்ட இந்த அழைப்புப் பணியைத் தொடரவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும் விரும்பினார்கள். இதைத்தான் நான் ஹிஜ்ரத்திற்கான முக்கிய காரணியாகக் கருதுகிறேன்.

இஸ்லாமிய அழைப்பிற்கு உகந்த தலைமையிடமாக மதீனா தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் வேறு பல இடங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஹபஷாவும் கவனத்தில் கொள்ளப்பட்டது.  ஆரம்ப கட்ட முஸ்லிம்கள் ஹபாஷாவை நோக்கி புலம்பெயர்ந்து சென்றார்கள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்று கூறுவதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் பலத்தையோ குலப் பாதுகாப்பையோ பெறாத அடிமைகளும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்களும்தாம் முதலில் சென்றிருப்பார்கள். ஆனால் நிகழ்ந்ததோ அதற்கு மாறானது. கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பலவீனமான அடிமைகள் அங்கிருந்து புலம்பெயர்ந்து செல்லவில்லை. குடும்பப் பாதுகாப்பைப் பெற்ற பலமான மனிதர்களே புலம்பெயர்ந்து சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஜஃபர் இப்னு அபீதாலிப், (இவரது தந்தை அபூதாலிபும் ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் நபியவர்களுக்குப் பாதுகாப்பளித்துக் கொண்டிருந்தார்கள்) சுபைர் இப்னு அவ்வாம், அப்துற்றஹ்மான் இப்னு அவ்ஃப், அபூசலமா அல்மக்சூமீ, உஸ்மான் இப்னு அஃப்ஃபான் மற்றும் எவ்வித தொல்லையையும் சந்திக்காத கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆகியோரும் அடங்குவார்கள். இந்த புலம்பெயர்வுக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். பெருமதிப்பைப் பெற்ற குறைஷிக்குலத்தின் ஆண்களும் பெண்களும் தங்களின் கொள்கையைப் பாதுகாக்கும்பொருட்டு நெருங்கிய உறவுகளையெல்லாம் விட்டுச் செல்கிறார்கள் என்ற விசயம் குலம்சார்ந்து வாழக்கூடிய அந்த மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து சென்றவர்களில் இஸ்லாத்தை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த நிராகரிப்பாளர்களின் தலைவர் அபூசுஃப்யானின் மகளும் இருந்தார். ஆயினும் இதுபோன்ற காரணங்கள் இஸ்லாமிய அழைப்பிற்கு உகந்த தலைமையிடத்தைத் தேடித்தான் அவர்கள் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்று கூறுவதற்குத் தடையாக இருக்காது. இதனோடு நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றதையும் இணைத்துப் பார்த்தால் நாம் கூறுவதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அவர் அங்கிருந்த பாதிரியார்களின் எதிர்ப்பினால்தான் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பகிரங்கப்படுத்தவில்லை. இதுகுறித்து ஆதாரப்பூர்வமான செய்திகள் ஹதீஸ் புத்தகங்களில் காணப்படுகின்றன.

அதேபோல தாயிஃப் நகரை நோக்கி நபியவர்கள் சென்றது, சுதந்திரமான அல்லது குறைந்தபட்சம் இஸ்லாமிய அழைப்பிற்கு எதிர்ப்பில்லாத ஒரு தலைமையிடத்தைத் தேடிச் சென்றதாகவே தெரிகிறது. ஆனால் அவர்களின் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த தலைவர்கள் நபியவர்களை மோசமான முறையில் எதிர்கொண்டார்கள். நபியவர்களுக்கு எதிராக தங்களின் சிறுவர்களையும் பைத்தியக்காரர்களையும் ஏவி கல்லெறியச் செய்தார்கள். அவர்கள் நபியவர்களின் பாதங்களிலிருந்து இரத்தம் வடியும் அளவுக்குக் கல்லெறிந்தார்கள். இறுதியில் நபியவர்கள் உத்பா, ஷைபா ஆகிய இருவருக்கும் சொந்தமான ஒரு தோட்டத்தில் அடைக்கலம் புகுந்தார்கள். அங்குதான் நபியவர்களின் நாவு உளத்தூய்மையான, ஆழமான பின்வரும் பிரார்த்தனையை உச்சரித்தது:

“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பற்று இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிளெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே, நீதான் பலவீனமானவர்களைப் பாதுகாப்பவன், நீதான் என்னைப் பாதுகாப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காரியத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையென்றால் இந்த கஷ்டங்களையெல்லாம் நான் பொருட்படுத்த மாட்டேன். ஆயினும் நீ வழங்கும் ஆரோக்கியத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்களெல்லாம் வெளிச்சமாயின, இம்மை மற்றும் மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். நீ திருப்தியடையும்வரை நான் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே, பாவத்திலிருந்து தப்பிப்பதும் நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உன் அருள் இல்லாமல் இல்லை.”

பெரியதொரு  திருப்புமுனை

அல்லாஹ் தன் தூதருக்கு அவர் எதிர்பாராத புறத்திலிருந்து உதவி செய்தான். முதலாவது அகபா உடன்படிக்கையும் இரண்டாவது அகபா உடன்படிக்கையும் நிகழ்ந்தது. அந்த இரண்டிற்கும் இந்த அத்தியாயத்தின் முன்னுரையாக நாம் பேசப் போகும் தலைப்பிற்கும் மதீனாவில் இஸ்லாமிய அழைப்பைச் சுற்றிக் காணப்பட்ட சூழல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

அவற்றின் சுருக்கம் பின்வருமாறு: நபியவர்கள் மதீனாவை நோக்கி புலம்பெயர்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னால் ஹஜ் உடைய காலத்தில் கஸ்ரஜ் குலத்தாரைச் சேர்ந்த சில நபர்களை சந்தித்தார்கள். பொதுவாக நபியவர்கள் ஹஜ்ஜுக்கு வரக்கூடிய குழுக்களிடம் தம்மையும் தமது அழைப்பையும் எடுத்துரைப்பவர்களாக இருந்தார்கள். மதீனாவில் வசிக்கும் – அவ்ஸ், கஸ்ரஜ் என்ற – இரு குலத்தாரும் அவர்களுடன் வசிக்கும் யூதர்களிடமிருந்து “ஒரு தூதர் வரக்கூடிய காலம் நெருங்கி விட்டதெனவும் அவர் வந்துவிட்டால் அவருடன் சேர்ந்து யூதர்கள் அரபுக்கள் அனைவரையும் மிகைத்து விடுவார்கள் என்றும் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் இந்த அழைப்பைச் செவியுற்ற கஸ்ரஜ் குலத்தார் தங்களிடையே பேசிக் கொண்டார்கள், “அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இந்த நபியைக் கொண்டு யூதர்கள் உங்களை அச்சமூட்டுகிறார்கள். ஆகவே இந்த விசயத்தில் அவர்கள் உங்களை முந்திவிடக்கூடாது. அவரது அழைப்பிற்கு உடனே பதிலளித்துவிடுங்கள்.” பின்னர் அவர்கள் நபியவர்களிடம் கூறினார்கள், “நாங்கள் எங்களுக்குப் பின்னால் எங்கள் சமூகத்தையும் எங்களுடன் பகைமை கொண்டுள்ள சமூகத்தையும் விட்டு வந்துள்ளோம். அல்லாஹ் உங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான் என நம்புகிறோம்.” அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் திரும்பிச் சென்றபோது அவர்களுக்கும் இந்த அழைப்பை எடுத்துரைத்தார்கள். அனைவரும் இந்த விசயத்தில் திருப்தியடைந்தார்கள்.

அடுத்த வருடம் ஹஜ் உடைய காலம் வந்தபோது அவ்ஸ், கஸ்ரஜ் இரு குலத்தாரும் ஒன்றிணைந்து நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்தார்கள். நபியவர்கள் அவர்களுக்கு மார்க்க விவகாரங்களை கற்றுக் கொடுப்பவர்களையும் அவர்களுடன் அனுப்பினார்கள்.

அதற்கு அடுத்த வருடம் இரு குலத்தாரிலிருந்தும் பெரும் தொகையினர் நபியவர்களை சந்தித்து ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸின் முன்னிலையில் தங்கள் உயிர்களையும் செல்வங்களையும் பாதுகாப்பதுபோன்று நபியவர்களைப் பாதுகாப்பதாக அவர்கள் உறுதிமொழி அளித்தார்கள். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் செய்தி பின்வருமாறு: “அகபா ஒப்பந்தம் நடைபெற்ற இரவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா நபியவர்களிடம், “நீங்கள் உங்கள் இறைவனுக்காகவும் உங்களுக்காகவும் விரும்பியவாறு நிபந்தனை இடுங்கள்” என்று கூறினார். அதற்கு நபியவர்கள், “நான் என் இறைவனுக்காக இடும் நிபந்தனை, நீங்கள் அவனை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு இணையாக வேறு யாரையும் ஆக்கக் கூடாது என்பதாகும். நான் எனக்காக இடும் நிபந்தனை, நீங்கள் உங்கள் உயிர்களையும் செல்வங்களையும் பாதுகாப்பதுபோன்று என்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “நாங்கள் இவ்வாறு செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “சுவனம் கிடைக்கும்” என்றார்கள். அதற்கு அவர்கள், “எத்துணை இலாபகரமான வியாபாரம்! நாங்கள் இதனைத் திரும்பப் பெறவும் மாட்டோம், வேறு ஒரு அணியிடம் இதனை ஏற்றுக்கொள்ளுமாறு கோரவும் மாட்டோம்” என்று கூறினார்கள்.”

இவ்வாறு இஸ்லாம் பலம்பெற்றது. அது மதீனாவில் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. எந்த அளவுக்கெனில் அங்கு இஸ்லாம் நுழையாத வீடே இல்லை என்றாகிவிட்டது. அதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் எல்லாவற்றையும் மக்காவில் விட்டுவிட்டு தங்களின் கொள்கையைப் பாதுகாக்கும்பொருட்டு மதீனாவை நோக்கி புலம்பெயரத் தொடங்கினார்கள். அங்கு தங்களுக்கு முன்னரே நம்பிக்கைகொண்டு வசிக்கும் அந்த மக்களிடம் மனித சமூகம் இதுவரை காணாத விட்டுக்கொடுக்கும் பண்பையும் சகோதரத்துவத்தையும் பெற்றார்கள். பின்னர் நபியவர்கள் தங்களுடைய தோழருடன் அங்கு  புலம்பெயர்ந்து சென்றார்கள். தாம் தேடிக்கொண்டிருந்த பாதுகாப்பான, சுதந்திரமான தலைமையிடத்தை நோக்கி புலம்பெயர்ந்து சென்றார்கள். நபியவர்கள் அங்கு சென்றடைந்த அந்த நாளிலிருந்துதான் இஸ்லாமிய ஆட்சி தொடங்கிறது.

மிகச் சிறந்த சமுதாயத்தின் உருவாக்கம்

இந்த முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளைக் கொண்டே மிகச் சிறந்த முதல் தலைமுறை உருவானது. திருக்குர்ஆன் அவர்களைக் குறித்து பல இடங்களில் புகழ்ந்து கூறுகிறது. இங்கு இந்த அத்தியாயம் ஈமானின் அடிப்படையான அம்சங்களை நிறுவுவதைக் கொண்டு தொடங்குகிறது. அவை உண்மையான நம்பிக்கையாளர்களின் பண்புகளாக வெளிப்படுகின்றன. ஆயினும் அவை முதலில் மதீனாவில் அச்சமயத்தில் இருந்த அந்த முஸ்லிம்களின் பண்புகளாகத்தான் வெளிப்படுகின்றன. “அலிஃப் லாம் மீம். இது இறைவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும். அவர்கள் அல்லாஹ் அறிவித்த மறைவான விசயங்களை நம்புகிறார்கள். தொழுகையை நிறைவேற்ற வேண்டிய முறைப்படி நிறைவேற்றுகிறார்கள். நாம் வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவும் செய்கிறார்கள். அவர்கள் உமக்கு அருளப்பட்ட வேதத்தின்மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களின்மீதும் நம்பிக்கைகொண்டுள்ளார்கள். இவர்கள்தாம் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள நேரான வழியில் இருப்பவர்கள்; இவர்கள்தாம் வெற்றியாளர்கள்.”

பின்னர் அவற்றுக்கு அடுத்தபடியாக நிராகரிப்பாளர்களின் பண்புகளைக் காண்கிறோம். அவர்கள் நிராகரிப்பின் அடிப்படையான அம்சங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவை முதலில் அங்கு இஸ்லாமிய அழைப்பை எதிர்கொண்ட நிராகரிப்பாளர்களின் பண்புகள்தாம். அவர்கள் மக்காவில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி அல்லது மதீனாவில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி. “நிராகரிப்பாளர்களை நீர் எச்சரிப்பதும் அல்லது எச்சரிக்காமலிருப்பதும் ஒன்றுதான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களின்மீதும் செவிப்புலன்களின்மீதும் முத்திரையிட்டுவிட்டான். அவர்களுடைய பார்வைகளின்மீது திரை உள்ளது. அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.”

அதேபோன்று அங்கு இன்னொரு பிரிவினரும் இருந்தார்கள். அவர்கள்தாம் நயவஞ்சகர்கள். அவர்கள் நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அமைந்த சூழல்களினால் தோன்றியவர்கள். புலம்பெயர்வுக்குப் பிறகு அங்கிருந்த சூழல்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். மக்காவில் இவர்கள் காணப்படவில்லை. மக்காவில் இஸ்லாம் பலத்தையோ ஆட்சியையோ பெற்றிருக்கவில்லை. மக்காவாசிகள் பயந்து தங்களை வேறு விதமாக வெளிப்படுத்தும் அளவுக்கு அங்கு எந்தக் கூட்டமும் இருக்கவில்லை. அதற்கு மாறாக இஸ்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மார்க்கமாக இருந்தது. உண்மையாகவே இந்தக் கொள்கையை விரும்பியவர்கள்தாம் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் அதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய முன்வந்தார்கள். அதன் பாதையில் ஏற்படக்கூடிய எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள். ஆனால் மதீனாவின் நிலைமையோ இதற்கு மாறானது. அது ‘இறைத்தூதரின் நகரம்’ என்று அழைக்கப்பட்ட நாளிலிருந்தே இஸ்லாம் அங்கு பலத்தைப் பெற்ற ஒன்றாகத்தான் இருந்தது. ஆகவே இஸ்லாத்தை விரும்பாதவர்கள்கூட தங்களை வேறுவிதமாக வெளிப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர். அதிலும் குறிப்பாக பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றபிறகு மதீனாவில் இருந்த குலத் தலைவர்கள் தங்களை வேறு விதமாக வெளிப்படுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். ஏனெனில் அவர்களின் மக்கள் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆகவே அவர்களுக்கு மத்தியில் தங்களின் அந்தஸ்தையும் இடத்தையும் தக்கவைப்பதற்கு அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுபோல் காட்டிக்கொள்ள வேண்டியதாயிற்று.  அவர்களில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலும் ஒருவர். இஸ்லாத்திற்கு முன்னர் இவரது கூட்டத்தார் இவருக்கு முடிசூட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். ‘

அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே இந்த நயவஞ்சகர்களின் பண்புகளைக் குறித்து அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வரிகளிலிருந்து, அது இஸ்லாத்தை வெளிப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட தலைவர்களைத்தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. கர்வம்கொண்டவர்களைப்போல அவர்களும் ‘மூடர்கள்’ என்றுதான் கூறினார்கள். “மனிதர்களில் சிலர், “நாங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல. அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்ற எண்ணுகிறார்கள். அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதனை அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் அதனை இன்னும் அதிகப்படுத்திவிட்டான். பொய்யுரைத்துக் கொண்டிருந்ததனால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. “பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “நாங்கள் அமைதியை ஏற்படுத்தக்கூடியவர்கள்தாம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். எச்சரிக்கை! இவர்கள்தாம் குழப்பவாதிகள். ஆயினும் இவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. “மற்ற மக்கள் நம்பிக்கைகொண்டதைப் போல நீங்களும் நம்பிக்கைகொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கைகொண்டதைப்போல நாங்களும் நம்பிக்கைகொள்ள வேண்டுமா?” என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும் இவர்கள் அறிந்துகொள்வதில்லை. அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் “நாங்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்கள் ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது “நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். அவர்களுடைய வரம்பு மீறலில் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறான். இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களின் வியாபாரம் பயனளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. அவர்களின் உதாரணம், வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பு மூட்டிய ஒருவனைப் போன்றது. அது அவர்களைச் சுற்றி ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்துவிட்டான். எதையும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டுவிட்டான். அவர்கள் சத்தியத்தை செவியேற்க முடியாத செவிடர்கள், சத்திய வார்த்தையைப் பேச முடியாத ஊமையர்கள், பார்க்க முடியாத குருடர்கள். அவர்கள் நேர்வழியின் பக்கம் திரும்ப மாட்டார்கள். அல்லது அவர்களின் உதாரணம், காரிருளில் இடிமின்னலுடன் வானிலிருந்து பொழியும் மழையைப் போன்றது. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி அவர்கள் தம் காதுகளில் விரல்களைத்  திணித்துக் கொள்கிறார்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான். அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடக்கிறார்கள். இருள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்போது நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப்புலனையும் பார்வைகளையும் பறித்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.”

உள்ளங்களில் நோயுடைய நயவஞ்சகர்களின்மீது தொடுக்கப்படும் இந்தத் தாக்குதல்களினூடே ‘ஷைத்தான்களை’ நோக்கியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அத்தியாயத்தின் முன்பின் வசனங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அது யூதர்களைத்தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. அத்தியாயத்தின் அடுத்து வரக்கூடிய வசனங்கள் அவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. அவர்கள் இஸ்லாமிய அழைப்பை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை சுருக்கமாகக் காணலாம்:

மதீனாவில் யூதர்கள்தாம் இஸ்லாமிய அழைப்போடு முதலில் மோதல்போக்கை மேற்கொண்டார்கள். அங்கு வாழ்ந்த அவ்ஸ், கஸ்ரஜ் என்னும் அரபுக் கோத்திரங்களுக்கு மத்தியில் வேதக்காரர்களாக இருந்த யூதர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார்கள். இணைவைப்பாளர்களான அரபுக்கள் யூதர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களிடம் இருந்த வேதத்தின் காரணமாக அவர்களை தங்களைவிட அறிவாளிகளாக, ஞானமுள்ளவர்களாகக் கருதினார்கள். அங்கு யூதர்கள் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரிடையே பிரிவினையை, சண்டையை மூட்டிவிடும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்கள் – இத்தகைய சூழலில்தான் யூதர்கள்  தங்களின் கீழடி வேலைகளை தொடர்ந்து செய்கிறார்கள் – இஸ்லாம் வந்தபோது அவர்கள் அனுபவித்த வந்த இந்த சலுகைகள் அனைத்தும் பறிபோனது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடிய, அதில் சரி எது, தவறு எது என்பதை சுட்டிக்காட்டிக்கூடிய வேதத்தைக் கொண்டுவந்தது. அங்கு வாழ்ந்த அரபுக்களிடையே காணப்பட்ட பிரிவினையைப் போக்கி அவர்களை ஒன்றிணைத்தது. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தார் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒன்றிணைந்தார்கள். அன்றிலிருந்து அவர்கள் புலம்பெயர்ந்து வந்த ‘முஹாஜிர்களுக்கு’ உதவி செய்த ‘அன்சாரிகள்’ என்று அறியப்பட்டார்கள். மனித சமூகம் இதுவரை அறிந்திராத அளவுக்கு அவர்களிடையே இணக்கமும் சகோதரத்துவமும் பொங்கியது.

யூதர்கள் தங்களை ‘அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தினர்’ என்றும் தூதர்கள் தங்களிலிருந்தே அனுப்பப்படுவார்கள் என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள். இறுதித் தூதரும் தங்களிலிருந்தே தோன்றுவார் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அரபுக்களிலிருந்தே ஒரு தூதர் வந்தபோது அவரை அரபுக்களோடு மட்டும் சுருக்க நினைத்தார்கள். இணைவைப்பாளர்களைவிட வேதத்தைக்குறித்து யூதர்கள்தாம் நன்கறிந்தவர்கள் என்ற அடிப்படையில் தூதர் அவர்களை அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் முதலில் அழைப்பு விடுப்பதைக் கண்டபோது அவர்கள் கர்வம் கொண்டார்கள். தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதை இழிவாகக் கருதினார்கள்.

அவர்கள் நபியவர்களைப் பார்த்து கடும் பொறாமை கொண்டார்கள். இருமுறை அவர்கள் பொறாமை கொண்டார்கள். அல்லாஹ் நபியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள்மீது வேதத்தை இறக்கியபோதும் – அவர் உண்மையான தூதர் என்பதை அவர்கள் உறுதியாக அறிந்திருந்தார்கள் – மதீனாவில் அவர்கள் அடைந்த விரைவான வெற்றியின்போதும். தவிர அவர்கள் கொண்ட பொறாமைக்கும் அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாட்டிற்கும் மற்றுமொரு காரணமும் இருக்கிறது. அது அறிவுத் தளத்தில் தாம் பெற்றிருந்த தலைமையையும் வியாபார இலாபத்தையும் வட்டியின்மூலம் கிடைக்கும் இலாபத்தையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சமாகவும் இருக்கலாம் அல்லது புதிய அழைப்பிற்கு பதிலளித்து இஸ்லாமிய சமூகத்தில் கரைந்துவிடுவோமோ என்ற அச்சமாகவும் இருக்கலாம்.

இந்த காரணங்களால் யூதர்கள் இஸ்லாமிய அழைப்போடு இந்த வகையான நடத்தையை மேற்கொண்டிருக்கலாம். அதனை இந்த அத்தியாயம் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக சில வசனங்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். என்னை அஞ்சுங்கள். நான் அருளியுள்ள இந்த குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக ஆகிவிடாதீர்கள். என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள். என்னையே அஞ்சுங்கள். அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைத்துவிடாதீர்கள். தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். தொழுகைக்காக குனிபவர்களுடன் சேர்ந்து நீங்களும் குனியுங்கள். பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்துவிடுகிறீர்களா? நீங்களோ வேதத்தை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா?” (2:40-46)

அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகள் நினைவூட்டப்பட்ட பிறகு அவர்கள் தங்களின் தூதர் மூசாவுடன் மேற்கொண்ட நடத்தையைக் குறித்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் எவ்வாறு நன்றிகெட்டத்தனமாக எதிர்கொண்டார்கள் என்பதைக் குறித்தும் அவர்கள் எவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்ட வேதத்திற்கு மாற்றமாக நடந்துகொண்டார்கள் என்பதைக் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது. அவற்றினூடாக முஸ்லிம்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கையும் செய்யப்படுகிறது:

“நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? அவர்களில் ஒரு பிரிவினர் இறைவாக்குகளைச் செவியேற்று புரிந்துகொண்ட பின்னரும் வேண்டுமென்றே அதனை மாற்றிவிடுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால், “நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துக் கொண்டால் “அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பதை அவர்களிடம் கூறி விடுகிறீர்களே! அதைக் கொண்டு அவர்கள் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக வாதாடுவதற்காகவா? உங்களுக்கு அறிவு இல்லையா?” என்று கேட்கிறார்கள்.” (2:75,76)

“குறிப்பிட்ட சில நாட்களைத்தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். தூதரே! நீர் கேட்பீராக: “அப்படியொரு வாக்குறுதியை அல்லாஹ்விடமிருந்து பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின்மீது புனைந்து கூறுகிறீர்களா?” (2:80)

“அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய வேதம் இறைவனிடமிருந்து அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக வெற்றியளிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அறிந்துகொண்டிருந்த ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள்  நிராகரித்துவிட்டார்கள். நிராகரிப்பாளர்களின்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.” (2:89)

“அல்லாஹ் அருளிய இவ்வேதத்தின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்களுக்கு அருளப்பட்டவற்றின் மீதுதான் நாங்கள் நம்பிக்கைகொள்வோம்” என்று கூறி அதற்குப் பின்னால் வந்த இந்த வேதத்தை  நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ சத்தியமானதாகவும் அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.” (2:91)

“அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து வந்தபோது வேதம் வழங்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதவர்களைப்போன்று இறைவேதத்தை தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்துவிட்டார்கள்.” (2:101)

“வேதம் வழங்கப்பட்டவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒரு நன்மை அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள்.” (2:105)

“வேதக்காரர்களில் பெரும்பாலோர் நீங்கள் நம்பிக்கைகொண்டபின் எப்படியாவது உங்களை நிராகரிப்பாளர்களாக்கிவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். சத்தியம் அவர்களுக்குத் தெளிவான பின்னரும் பொறாமையினால்தான் இவ்வாறு விரும்புகிறார்கள்.” (2:109)

“யூதர்கள் அல்லது கிருஸ்தவர்களைத்தவிர வேறு யாரும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அது அவர்களின் கற்பனைகளேயாகும்….” (2:111)

யூதர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றாதவரை உம்மைக் குறித்து ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள்.” (2:120)

குர்ஆனின் நிரந்தரமான சான்றுகளில் ஒன்று, அவர்களைக் குறித்து அது கூறும் பண்புகள் இஸ்லாத்திற்கு முன்னரும் பின்னரும் வந்த அவர்களின் எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தக்கூடியவையாக இருப்பதுதான். அது நபியவர்களின் காலகட்டத்திலுள்ள யூதர்களை விளித்து உரையாடுகிறது, மூசாவின் காலகட்டத்திலுள்ளவர்களிடம் உரையாடுவதுபோன்று. அவர்களின் இயல்பும் இவர்களின் இயல்பும் அவர்களின் பண்புகளும் இவர்களின் பண்புகளும் ஒத்தவையாகவே காணப்படுகின்றன. எல்லா காலகட்டங்களிலும் அவர்கள் சத்தியத்துடன் இவ்வாறுதான் நடந்துகொள்கிறார்கள். ஆகவேதான் திருக்குர்ஆன் மூசாவின் காலகட்டத்திலிருந்த யூதர்களை விளித்து உரையாடிக் கொண்டிருக்கும்போதே மதீனாவில் இருந்த யூதர்களின்பால் திரும்பிவிடுகிறது. ஒரே சமயத்தில் இரண்டு தலைமுறைகளையும் விளித்து உரையாடுகிறது. இங்குதான் குர்ஆனின் வார்த்தைகள் உயிர்பெறுகின்றன. அவை இன்றைய முஸ்லிம் சமூகத்தையும் யூதர்களையும் விளித்து உரையாடுவதைப்போன்று உள்ளன. யூதர்கள் அப்போது இந்த கொள்கையை எவ்வாறு எதிர்கொண்டார்களோ அப்படித்தான் இப்போதும் எதிர்கொள்கிறார்கள். எப்போதும் எதிர்கொள்வார்கள். நிரந்தரமான இந்த வார்த்தைகள் முஸ்லிம் சமூகத்திற்கு நிரந்தரமான எச்சரிக்கையை வழங்குகிறது. அன்று அவர்களின் முன்னோர்களை யூதர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்களோ அப்படித்தான் இன்றும் அவர்களையும் எதிர்கொள்வார்கள். வடிவங்கள்தான் வேறு வேறு. ஆனால் அவர்களின் இயல்பும் நோக்கமும் ஒன்றுதான்.

அத்தியாயத்தின் மையக்கரு

இந்த பண்புகளை, எச்சரிக்கைகளை உள்ளடக்கிய இந்த அத்தியாயம்,  இஸ்ராயீலின் மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமையிலிருந்து விலகிய பிறகு பூமியில் இந்த கொள்கையைச் சுமப்பதற்காக முஸ்லிம் சமூகத்தைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாம் முன்னரே கூறியவாறு ஹிஜ்ரத்திற்குப் பிறகு இந்த அழைப்பை முதலில் எதிர்கொண்ட அந்த மக்களின் பண்புகளைக் கொண்டே இந்த அத்தியாயம் தொடங்குகிறது. ஆரம்பத்தில் யூதர்களைக் குறித்து ‘ஷைத்தான்கள்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னால் அவர்களைக் குறித்து மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் இவ்வகையான மக்களைத்தான் இஸ்லாமிய அழைப்பு எதிர்கொண்டது. பின்னர் இந்த அத்தியாயம் இறுதிவரை ஒரே மையம் கொண்ட இருவேறு தலைப்புகளில் பயணிக்கிறது. இது வெவ்வெறு தலைப்புகளைக் கொண்டபோதிலும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

இறையச்சமுடையவர்கள், நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் என மூன்று வகையான மக்களைக் குறித்தும் அவற்றுக்கிடையில் யூதர்களை ‘ஷைத்தான்கள்’ என்றும் கூறிய பிறகு மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்படியும் அவன் தன் அடியார்மீது அருளிய வேதத்தின்மீது நம்பிக்கைகொள்ளும்படியும் அழைப்பு விடுக்கப்படுவதையும் அந்த வேதத்தின்மீது சந்தேகம் கொள்பவர்கள் அதுபோன்ற ஒன்றைக் கொண்டுவருமாறு அறைகூவல் விடுக்கப்படுவதையும் நிராகரிப்பாளர்கள் நரகத்தைக் கொண்டு அச்சமூட்டப்படுவதையும் நம்பிக்கையாளர்கள் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்படுவதையும் காண்கிறோம். பின்னரும் மனிதர்களால் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிக்க முடிகிறது? என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

“நீங்கள் எப்படி அல்லாஹ்வை நிராகரிக்கிறீர்கள்?! நீங்களோ உயிரற்றவர்களாக இருந்தீர்கள். அவன்தான் உங்களுக்கு வாழ்வளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்து மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்துள்ளான். பின்னர் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” (2:28,29)

இந்த பூமியிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காகவே ஆக்கப்பட்டுள்ளன என்று கூறியதன் பின்னர் பூமியில் ஆதம் பிரதிநிதியாக ஆக்கப்பட்டதன் சம்பவம் தொடங்குகிறது:

“உமது இறைவன் வானவர்களிடம் “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.” ஆதம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்ட பிறகு ஆதமுக்கும் ஷைத்தானுக்கும் இடையே நடக்கும் நிரந்தரமான போரைக் குறித்து குறிப்பிடப்படுகிறது: “நாம் கூறினோம், “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.”

இதற்குப் பிறகு இந்த அத்தியாயத்தின் வசனங்கள் இஸ்ராயீலின் மக்களுடன் நீண்ட தூரம் பயணிக்கின்றன. சிலவற்றை நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவற்றினூடே அவர்களிடமுள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தில் பிரவேசித்து விடும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அதனுடன் இறைத்தூதர் மூசாவின் காலம்தொட்டே அவர்கள் செய்த தவறுகளும் அவர்களின் மோசமான நடத்தைகளும் நினைவூட்டப்படுகின்றன. இவை கிட்டத்தட்ட அத்தியாயத்தின் ஒரு பாகத்தை ஆக்கிரமித்து விடுகின்றன.

இவற்றினூடே இஸ்ராயீலின் மக்கள் தங்கள் தூதரையும் வேதத்தையும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அவர்கள்தாம் இந்த அழைப்பை முதலில் நிராகரித்தார்கள். அசத்தியத்தை சத்தியத்தோடு கலந்தார்கள். பிற மக்களை நன்மை செய்யும்படி – இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி – தூண்டிவிட்டு தங்களைத்தாங்களே மறந்துகொண்டார்கள். இறைவாக்கைச் செவியுற்று அதனைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரும் திரித்தார்கள். நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் நாங்களும் நம்புகின்றோம் என்று கூறிக்கொண்டும் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துக் கொண்டால் இந்த உண்மையை முஸ்லிம்களிடம் வெளிப்படுத்தி விடக்கூடாது என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டும் இருந்தார்கள். நம்பிக்கையாளர்களை மீண்டும் நிராகரிப்பாளர்களாக்கிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்கள். இதனால்தான் அவர்கள் நாங்கள் மட்டுமே நேர்வழிபெற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். முஹம்மது நபிக்கு வஹியைக் கொண்டுவந்த ஜிப்ரீலுக்கு எதிராக தங்களின் பகைமையை வெளிப்படுத்தினார்கள். முஸ்லிம்களுக்கு நன்மை கிடைப்பதை வெறுத்தார்கள். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேராதா என்று காத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொள்கையில் சந்தேகம் உண்டுபண்ணுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். நயவஞ்சகர்களின் நயவஞ்சகத்தனத்திற்கு மூலதாரமாகவும் இணைவைப்பாளர்களை ஊக்கம் அளிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

பின்னர் அத்தியாயம் அவர்களின் இந்த செயல்களுக்கு எதிரான கடுமையான தாக்குதல்களை முன்வைக்கிறது. இவ்வாறுதான் அவர்கள் தங்கள் தூதர் மூசாவுடனும் இன்னபிற தூதர்களுடனும் நடந்துகொண்டார்கள் என்பதை நினைவூட்டுகிறது. அவர்கள் அனைவரையும் ஒரே தலைமுறையாக, ஒத்த இயல்புடையவர்களாகக் கருதி விளித்து உரையாடுகிறது.

இறுதியில், “அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள், அவர்கள் கோணலான இயல்புடையவர்கள்” என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. அதேபோன்று “நாங்கள் இப்ராஹீமின் வாரிசுகள். நாங்கள்தாம் நேர்வழிபெற்றவர்கள்” என்ற அவர்களின் வாதத்திற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இப்ராஹீமின் மார்க்கத்தின்படி நடப்பவர்களே அவரது உண்மையான வாரிசுகள். அதன்படி யூதர்கள் தங்களின் கடமையை விட்டுவிலகி அவரது மார்க்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டதால் முஹம்மது நபியும் அவரைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும்தாம் அவரது வாரிசுகளாவர் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. பூமியின் பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அது இப்ராஹீமும் அவரது மகனான இஸ்மாயீலும் செய்த பிரார்த்தனையின் வெளிப்பாடேயாகும்.

அவர்கள் இருவரும் இறையில்லத்தின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்தபோது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: “எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்குவாயாக. எங்கள் சந்ததிகளிலிருந்து முற்றிலும் உனக்கு அடிபணிந்து வாழும் ஒரு சமூகத்தை ஏற்படுத்துவாயாக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக. எங்களை மன்னித்து விடுவாயாக. நிச்சயமாக நீ பெரும் மன்னிப்பாளனாகவும் இணையிலாக் கிருபையாளனாகவும் இருக்கின்றாய். எங்கள் இறைவா! அவர்களுக்கு உன் வசனங்களை எடுத்துரைத்து வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவர்களுக்கு அனுப்புவாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றாய்.” (2:128,129)

அதன் பிறகு வசனங்கள் நபியவர்களை நோக்கியும் முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் திரும்புகின்றன. பிரதிநிதித்துவ பணியை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்ட இந்தச் சமூகத்தின் வாழ்வு எந்த அடித்தளங்களால் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்தும் இந்த சமூகம் எவ்வாறு தனித்துவமிக்க வழிமுறையைப் பெற்றுள்ள சமூகமாக இருக்கிறது என்பதைக் குறித்தும் பேசுகின்றன.

அவை இந்த சமூகம் முன்னோக்க வேண்டிய கிப்லாவை நிர்ணயம் செய்வதைக் கொண்டு தொடங்குகின்றன. இப்ராஹீமும் இஸ்மாயீலும் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக சேர்ந்து கட்டிய இறையில்லமே அவர்கள் முன்னோக்க வேண்டிய கிப்லாவாகும். இந்த கிப்லாவைத்தான் நபியவர்கள் விரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் கூறவில்லை. “தூதரே! உமது முகம் அடிக்கடி வானத்தை நோக்கித் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் – முன்னோக்கு திசையின் பக்கமே நாம் உம்மைத் திருப்பி விடுவோம். ஆகவே நீர் உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்பிக் கொள்வீராக. நீர் எங்கிருந்த போதிலும் உம் முகத்தை அதன் பக்கமே திருப்புவீராக.”

பின்னர் இந்த அத்தியாயம் முஸ்லிம் சமூகத்திற்குத் தேவையான இறைவழிகாட்டுதல்களைப் பற்றிப் பேசுகிறது. பின்னர் அவர்களுக்குப் பின்வரும் விசயங்கள் தெளிவுபடுத்தப்படுகிறது: 1. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறந்தவர்கள் அல்ல, மாறாக அவர்கள் உயிருடன் உள்ளார்கள். 2. பசி, பயம், உயிரிழப்பு, விளைபொருளின் குறைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது தீங்கான ஒன்றல்ல, அவற்றின்மூலம் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள். அவற்றைப் பொறுமையுடன் எதிர்கொள்பவர்கள் அல்லாஹ்வின் அருளையும் கருணையையும் பெறுவார்கள். 3. ஷைத்தான் மனிதர்களை வறுமையைக் கொண்டு அச்சமூட்டுகிறான், மானக்கேடான காரியங்களைச் செய்யுமாறு தூண்டுகிறான். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பையும் அருளையும் வாக்களிக்கிறான். 4. அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாக இருக்கின்றான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி  ஒளியின் பக்கம் கொண்டுவருகிறான். நிராகரிப்பாளர்களுக்கு ஷைத்தான்களே தோழர்களாக இருக்கிறார்கள். அந்த ஷைத்தான் அவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கிறான்.

பின்னர் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவும் பானமும் தடைசெய்யப்பட்ட உணவும் பானமும் தெளிவுபடுத்தப்படுகிறது. நன்மை என்பது வடிவங்களைப் பொறுத்து அல்ல. அதன் உண்மை நிலையைப் பொறுத்ததே என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. பழிவாங்குதல், நோன்பு, மரண சாசனம், ஜிஹாது, ஹஜ், திருமணம், விவாகரத்து, தர்மம், வட்டி, கடன், வியாபாரம் ஆகியவற்றைப் பற்றிய சட்டங்களும் தெளிவுபடுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் வசனங்கள் மூசாவுக்குப் பிறகு வந்த இஸ்ராயீலின் மக்களைக் குறித்தும், இறைத்தூதர் இப்ராஹீமைக் குறித்தும் பேசுகின்றன. ஆயினும் முதல் பாகத்திற்குப் பிறகு அத்தியாயத்தின் மையம் முஸ்லிம் சமூகத்தைக் கட்டமைப்பதையும் இந்தக் கொள்கையைச் சுமப்பதற்காக அதனைத் தயார்படுத்துவதையும் அது அல்லாஹ்வின் வழிகாட்டுதலைக் கொண்டு பூமியில் பிரதிநிதித்துவம் செய்வதையும் பிரபஞ்சத்தைக் குறித்தும் தம் இறைவனுடன் அது கொண்டுள்ள தொடர்புகள் குறித்துத் தெளிவுபடுத்தும் கண்ணோட்டத்தை வழங்குவதையும் சுற்றியே சுழல்கிறது.

இறுதியில் அத்தியாயத்தின் முடிவு அதன் ஆரம்பத்தோடு இணைகிறது. ஈமானியக் கண்ணோட்டத்தின் இயல்பும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்த இந்தச் சமூகம் தாம் பார்க்காத தூதர்கள் அனைவரின்மீதும் வேதங்கள் அனைத்தின்மீதும் கொண்ட நம்பிக்கையும் தெளிவுபடுத்தப்படுகிறது. “இந்த தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். நம்பிக்கையாளர்களும் அதன்மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின்மீதும் அவனது வானவர்கள்மீதும் அவனது வேதங்களின்மீதும், அவனது தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டுள்ளார்கள். “நாங்கள் அவனது தூதர்களில் எவருக்கிடையிலும் வேற்றுமை காட்ட மாட்டோம்” என்றும் “செவியேற்றோம், கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவா! நாங்கள் உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறோம். உன்னிடமே நாங்கள் திரும்ப வர வேண்டியுள்ளது” என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ் எவர்மீதும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர பொறுப்பை ஏற்றுவதில்லை. அவர் சம்பாதித்ததன் பலன் அவருக்கே. அவரது செயலின் விளைவும் அவருக்கே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறிழைத்து விட்டாலோ எங்களை தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்னிருந்தோர் மீது சுமத்தியதைப் போன்று எங்கள்மீதும் சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களால் சுமக்க முடியாத சுமையை எங்கள்மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள்மீது கருணை காட்டுவாயாக! நீயே எங்களின் பாதுகாவலன். எனவே நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக” என்று பிரார்த்தனை செய்வார்கள்.”

ஆரம்பமும் முடிவும் ஒன்றிணைகிறது. அத்தியாயத்தின் தலைப்புகள் நம்பிக்கையாளர்களின் பண்புகளில் இரு பண்புகளிடையே ஒன்றிணைகிறது.

Related posts

Leave a Comment