திருக்குர்ஆனின் நிழலில் – முன்னுரை
[திருக்குர்ஆன் ஓர் நித்தியத்துவப் பிரதி. அருளப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா விரிவுரைகள் அதற்கு. உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவை தொடர்ந்த படியேதான் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில். அற்புதமான தரிசனங்களை தந்தபடியே இருக்கும். மனிதன் தனது சிந்தனை என்ற பிஞ்சுக் கைகளால் இறைஞானப் பெருங்கடலை அள்ளிப்பருகி விடுவதற்கான அசாத்திய முயற்சி. இலக்குகளை அடையுந்தோறும் நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாப் பயணம்.
அத்தகைய திருக்குர்ஆன் வியாக்கியான மரபில் சையித் குதுபின் ‘திருக்குர்ஆனின் நிழலில்’-க்கு மறுக்கமுடியாத ஓர் இடம் எப்போதும் உண்டு. முன்முடிவுகளின்றி காலியான திறந்த மனத்தோடு திருக்குர்ஆனுடன் உரையாடி, உறவாடி அவர் தன் நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்ட ஒளியை ஏனைய மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள எடுக்கப்பட்ட பிரயத்தனத்தில் உதித்த இந்த தஃப்சீரை அழகுற தமிழுக்கு பெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம், வல்ல இறைவனின் உதவியை மட்டுமே நம்பி….]
அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
திருக்குர்ஆனின் நிழலில் வாழ்வது மிகப்பெரிய அருட்கொடை. அனுபவித்தவரே அதனை அறிந்துகொள்வார். அது வாழ்நாளை அதிகரிக்கச் செய்கின்ற, தூய்மைப்படுத்துகின்ற அருட்கொடை.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. குறிப்பிட்ட காலம்வரை திருக்குர்ஆனின் நிழலில் வாழும் பெரும் பாக்கியத்தை அவன் எனக்கு அருளினான். என் வாழ்வில் அனுபவிக்காத அருட்கொடைகளையெல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவித்தேன். வாழ்நாளை அதிகரிக்கச் செய்கின்ற, தூய்மைப்படுத்துகின்ற அருட்கொடைகளை அதில்தான் அனுபவித்தேன்.
இந்தக் குர்ஆனின்மூலம் அல்லாஹ் பேசுவதை செவியேற்றவனாக வாழ்ந்தேன். மிகச்சிறிய, அற்ப அடியான் நான்… மனிதனுக்கு வழங்கப்பட்ட இந்த உயர்ந்த கண்ணியம் எத்தகையது? இந்தக் குர்ஆன் வழங்கும் உயர்வு எத்தகையது? இந்த மனிதனுக்குப் படைப்பாளன் எத்தகைய கண்ணியமான இடத்தை வழங்கியுள்ளான்?
திருக்குர்ஆனின் நிழலில் வாழ்ந்தேன், உயர்ந்த இடத்திலிருந்து, பூமியில் நிரம்பி வழியும் அறியாமையை, இங்குள்ளவர்களின் அற்ப நோக்கங்களை, குழந்தைத்தனமான அறிதல்களை, கண்ணோட்டங்களை, ஆசைகளைப் பார்த்தவனாக. பெரியவர்கள் குழந்தைகளின் விளையாட்டுகளை, செயல்களைப் பார்ப்பதைப்போல. இந்த மக்களுக்கு என்னவாயிற்று?! என்று ஆச்சர்யப்படுகிறேன். இவர்கள் ஏன் சகதியில் உழன்று திரிகிறார்கள்?! வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும், தூய்மைப்படுத்தும் உயர்ந்த அழைப்பிற்கு செவிகொடுப்பதில்லை?!
திருக்குர்ஆனின் நிழலில், மனித வாழ்க்கைக்கு அது வழங்கும் அனைத்தையும் தழுவிய, தூய்மையான, பரிபூரணமான கண்ணோட்டத்தை அனுபவித்தவாறே வாழ்ந்தேன். அதனோடு இந்த உலகில் மனித சமூகம் உருவாக்கிக் கொண்ட கண்ணோட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன், ஏன் இவர்கள் தூய்மையான, மிக உயர்ந்த, பிரகாசமான இந்த கண்ணோட்டத்தை விட்டுவிட்டு காரிருளில் அழுக்கடைந்த இந்த சகதியில் சிக்கித் தவிக்கிறார்கள்?
திருக்குர்ஆனின் நிழலில் வாழ்ந்தேன், அல்லாஹ் நாடியபடி நடக்கும் மனிதனின் செயல்பாட்டிற்கும் அல்லாஹ் படைத்த இந்தப் பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்குமிடையே காணப்படும் அழகிய ஒத்திசைவை உணர்ந்தவாறு. பின்னர் மனித சமூகம் இந்தப் பிரபஞ்சத்தின் விதிகளை விட்டுத் தடுமாறித் திரிவதை, அதற்கு போதிக்கப்படும் தீய போதனைகளுக்கும் அல்லாஹ் படைத்த அதன் இயல்புக்குமிடையே நிகழும் மோதலைக் காண்கிறேன். எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன், எந்த ஷைத்தான் அதனை இவ்வாறு தடுமாறச் செய்து நரகப் படுகுழியில் தள்ளினான்?
அந்தோ! மனித சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பே!
திருக்குர்ஆனின் நிழலில் வாழ்ந்தேன், வெளிப்படையாக தெரிவதைவிட இந்தப் பிரபஞ்சம் பெரியது என்பதைக் கண்டுகொண்டவனாக. உண்மையில் அது மிகப் பெரியது, பல பகுதிகளை உள்ளடக்கியது. அது வெளிப்படையான உலகை மட்டும் உள்ளடக்கியதல்ல. வெளிப்படையான, மறைவான உலகை உள்ளடக்கியது. இவ்வுலகையும் மறுவுலகையும் உள்ளடக்கியது. மனித சமூகம் நீளமான இந்தப் பள்ளத்தாக்கில் பயணிக்கக்கூடியது. மரணம் இந்தப் பயணத்தின் முடிவல்ல. அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை நோக்கிய இடம்பெயர்வு. இந்த உலகில் மனிதன் பெறுவது முழுமையானதல்ல. அது அவன் பெறக்கூடிய முழுமையான பங்கின் ஒரு பகுதிதான். இங்கு அவன் பெறாததை அங்கு அவன் முழுமையாகப் பெற்றுக் கொள்வான். அங்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படாது. யாருடைய செயலும் வீணாக்கப்படாது. இந்த பூமியில் அவன் செய்யும் பயணம் உயிரோட்டமான, நன்கு பழக்கப்பட்ட, அன்பான நண்பர்கள் உலகில் அவன் செய்யும் பயணம்தான். உயிரோட்டமான இந்தப் பிரபஞ்சம் படைப்பாளனின் கட்டளைகளைப் பெற்று அவனுக்குப் பதிலளிக்கிறது. அவன்பால் முன்னோக்குகிறது. அவன் பக்கமே நம்பிக்கையாளனின் ஆன்மாவும் உள்ளச்சத்துடன் முன்னோக்குகிறது.
“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே கட்டுப்படுகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன” (13:15)
அனைத்தையும் தழுவிய, பரிபூரணமான, சரியான இந்தக் கண்ணோட்டம் மனித உள்ளத்தில் ஏற்படுத்தும் நிம்மதியும் நம்பிக்கையும் எத்தகையது?!
திருக்குர்ஆனின் நிழலில் வாழ்ந்தேன், மனித சமூகம் அறிந்துள்ள எல்லா வகையான மதிப்பீடுகளைவிடவும் மனிதன் அதிகம் கண்ணியம் வாய்ந்தவன் என்பதைக் கண்டுகொண்டவனாக. மனிதன் அல்லாஹ்வின் ‘ரூஹ்’ ஊதப்பட்டவன். “நான் மனிதனை முழுமையாக்கி அவனுள் என் ஆன்மாவை ஊதியதும் நீங்கள் அவனுக்குச் சிரம்பணிய வேண்டும்…” அதன்மூலமே அவன் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டான். “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன் என்று உம் இறைவன் வானவர்களுடன் உரையாடியதை நினைவுகூர்வீராக…” இந்த பூமியிலுள்ள அனைத்தும் அவனுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளன. “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான்…”
மனிதனுக்கு வழங்கப்பட்ட இந்த அளவு கண்ணியத்தோடு மனித சமூகத்தை ஒன்றிணைக்கும் வலுவான தொடர்பாக இறைவனிடமிருந்து மனிதன் பெற்ற ஆன்மாவையே இறைவன் ஆக்கியுள்ளான். அல்லாஹ்வின் விசயத்தில் அவர்கள் கொண்ட கொள்கையே அவர்களை ஒன்றிணைக்கிறது. நம்பிக்கையாளனின் கொள்கையே அவனது நாடு, சமூகம், குடும்பம் அனைத்துமாகும். அவர்கள் கால்நடைகளைப்போல தீவனத்தையோ அடைபடும் இடத்தையோ அடிப்படையாகக் கொண்டு இணைவதில்லை.
நம்பிக்கையாளன் மிகப் பழமையான பரம்பரைக்குச் சொந்தக்காரன். காலம் என்னும் பள்ளத்தாக்கில் பயணிக்கக்கூடியவன். அவன் நூஹ், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூபு, யூசுஃப், மூசா, ஈசா, முஹம்மது (இவர்கள் அனைவரின்மீதும் அல்லாஹ் அருள்புரிவானாக) ஆகியோரால் வழிநடத்தப்பட்ட கண்ணியமான கூட்டத்தினரில் ஒருவன்.
“உங்களது இந்த சமூகம் ஒரே சமூகம்தான். நானே உங்களின் இறைவன். எனவே என்னையே அஞ்சுங்கள்.”
காலம் என்னும் நீளமான பாதையில் பயணிக்கும் இந்த கண்ணியமான கூட்டம் வெவ்வெறு காலகட்டங்களில், இடங்களில் வாழ்ந்தாலும் ஒத்த நிகழ்வுகளையும் அனுபவங்களையுமே எதிர்கொள்கிறது. அது வழிகேட்டையும் காரிருளையும் தீய இச்சையையும் அநியாயத்தையும் வரம்புமீறலையும் எதிர்கொள்கிறது. ஆயினும் அது நிலைகுலையாமல் உறுதியாக மன அமைதியோடு இறைவனின் உதவியையும் அவன் அளித்த வாக்குறுதியையும் எதிர்பார்த்தவாறு பயணிக்கிறது.
“சத்தியத்தை நிராகரித்தவர்கள் தங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையெனில் எங்களுடைய ஊரிலிருந்து உங்களை வெளியேற்றி விடுவோம்.” இறைவன் அந்த தூதர்களுக்கு வஹி அறிவித்தான்: “அநியாயக்காரர்களை நிச்சயம் நாம் அழித்திடுவோம். அவர்களுக்குப் பின் உங்களை பூமியில் வசிக்கச் செய்வோம். இது என் முன்னால் நிற்பதை அஞ்சியவருக்கும் என் எச்சரிக்கையைப் பயந்தவருக்கும் உரியதாகும்.”
ஒரே மாதிரியான நிகழ்வு, ஒரே மாதிரியான அனுபவம், ஒரே மாதிரியாக மிரட்டப்படுதல், ஒரே மாதிரியான உறுதியான நம்பிக்கை… இவைதான் அந்த திருக்கூட்டத்தின் அடையாளங்கள். இறுதியில் அந்த நம்பிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் விளைவும் ஒன்றுதான். அவர்கள்தாம் மிரட்டப்பட்டார்கள், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இந்த உலகில் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்வு என்று எதுவும் இல்லை என்று திருக்குர்ஆனின் நிழலில்தான் நான் அறிந்து கொண்டேன்.
“நாம் ஒவ்வொன்றையும் ஒரு அளவோடுதான் படைத்துள்ளோம்”
“அவனே ஒவ்வொன்றையும் படைத்து அவற்றின் விதியை நிர்ணயம் செய்தான்”
ஆயினும் அவற்றில் மறைந்திருக்கும் ஆழமான நோக்கங்கள் குறைபாடுடைய மனிதக் கண்களுக்குத் தெரிவதில்லை.
“ஒரு பொருள் நன்மையாக இருக்க நீங்கள் அதனை வெறுக்கக்கூடும். ஒரு பொருள் தீமையாக இருக்க நீங்கள் அதனை விரும்பக்கூடும். அல்லாஹ்வே நன்கறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.”
மனிதர்கள் அறிந்த காரணங்களின்படி விளைவுகள் ஏற்படலாம் ஏற்படாமலும் இருக்கலாம். அவர்கள் உறுதியானதாகக் காணும் முன்னேற்பாடுகள் எதிர்பார்த்த விளைவுகளைத் தரலாம் தராமலும் இருக்கலாம். காரணிகளோ முன்னேற்பாடுகளோ விளைவுகளை உருவாக்குவதில்லை. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான இறைநாட்டமே விளைவுகளை உருவாக்குகிறது. அதுதான் காரணிகளையும் முன்னேற்பாடுகளையும் உருவாக்குகிறது.
“இதற்குப் பின்னர் அல்லாஹ் ஏதேனும் புதிய சூழலை உண்டாக்கக்கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்”
நம்பிக்கையாளன் காரணிகளைக் கடைப்பிடிக்கிறான். ஏனெனில் அவற்றைக் கடைப்பிடிக்கும்படி அவன் கட்டளையிடப்பட்டுள்ளான். அல்லாஹ்வே விளைவுகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வின் அருள், நீதி, நோக்கம் ஆகியவற்றின்மீது முழுமையாக நம்பிக்கைகொள்வதே பாதுகாப்பான இடமாகவும் ஊசலாட்டங்கள் மற்றும் சந்தேகங்களிலிருந்து விடுபடும் வழியாகவும் இருக்கின்றது.
“ஷைத்தான் உங்களை வறுமையைக் கொண்டு அச்சமூட்டுகிறான். மானக்கேடானவற்றைச் செய்யுமாறு தூண்டுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருளையுமே வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
திருக்குர்ஆனின் நிழலில் மன அமைதியோடு, நிம்மதியோடு வாழ்ந்தேன். ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு விசயத்திலும் அல்லாஹ்வின் ஆற்றலை உணர்ந்தவனாக வாழ்ந்தேன். அவனது அரவணைப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தேன். செயல்படத் தூண்டும் அவனது பண்புகளை உணர்ந்தவனாக வாழ்ந்தேன்.
“துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பைச் செவியேற்று அவனது துன்பத்தைப் போக்குபவன் யார்?…”
“அவன் தன் அடியார்களின்மீது ஆதிக்கம் கொண்டவனாக இருக்கின்றான். அவன் ஞானம் மிக்கவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
“அல்லாஹ் தன் விசயத்தில் மேலோங்கியே தீருவான். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.”
“மனிதனுக்கும் அவனது உள்ளத்திற்கும் மத்தியில் அல்லாஹ் குறுக்கிட்டு விடுகிறான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.”
“அவன் தான் நாடியதைச் செய்யக்கூடியவன்.”
“யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ அவருக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான். அவர் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு அவன் வாழ்வாதாரத்தை வழங்குவான். யார் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவான்.”
“எந்த உயிரானாலும் அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.”
“அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனில்லையா? அவனை விடுத்து மற்றவர்களைக்கொண்டு இவர்கள் உம்மை பயமுறுத்துகிறார்கள்.”
“அல்லாஹ் யாரை இழிவுபடுத்தி விடுவானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது.”
அல்லாஹ் யாரை வழிதவறச் செய்துவிடுவானோ அவருக்கு யாராலும் நேர்வழிகாட்ட முடியாது.”
இந்தப் பிரபஞ்சம் நிலையான விதிகளின்றி குருட்டுத்தனமாக இயங்குவதற்காக விட்டுவிடப்படவில்லை. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான இறைநாட்டமே அதனை இயக்குகிறது. தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான். தான் நாடியதைத் தேர்ந்தெடுக்கிறான். இவ்வாறாக அல்லாஹ்வின் கை செயல்படுகிறது. ஆனால் அது அதற்கேயுரிய தனித்துவமான முறையில்தான் செயல்படுகிறது. நாம் அவசரப்பட்டு அல்லாஹ்வுக்கே ஆலோசனை சொல்லக்கூடாது என்பதை அறிந்துகொண்டேன்.
இறைமார்க்கம் மனித சமூகத்தின் ஒவ்வொரு சூழலுக்கும் அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கும் ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அது இந்த பூமியில் வாழும் மனிதனுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அது மனிதனின் இயல்பையும் அவனுக்கு வழங்கப்பட்ட ஆற்றல்களையும் அவனது பலம் மற்றும் பலவீனங்களையும் மாறக்கூடிய அவனது நிலைகளையும் கவனத்தில் கொள்கிறது. அது இந்த மனிதனின்மீது தீய எண்ணம் கொண்டு பூமியில் அவன் நிறைவேற்ற வேண்டிய பணியை இழிவாகக் கருதவோ அல்லது ஏதேனும் ஒரு வடிவத்தில் அவனது மதிப்பைக் குறைத்துவிடவோ செய்யாது. அவன் தனி மனிதனாக அல்லது கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்தாலும் சரியே. அவ்வாறே அது அவனுக்கு வழங்கப்பட்ட ஆற்றலுக்கு மேலாக, அவன் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு மேலாக அவனை உயர்த்தி கனவுலகில் சஞ்சரிக்கவும் செய்யாது. இந்த இரு நிலைகளிலும் அவனது இயல்பின் அடிப்படையான அம்சங்கள் சட்டத்தின்மூலம் உருவாக்கப்படும் அளவுக்கு அல்லது எழுத்தின்மூலம் அகற்றப்படும் அளவுக்கு மேலாட்டமானவை என்று அது கருதுவதில்லை. அது மனிதன் என்பவன் அவனது இயல்புகள், ஆசைகள், ஆற்றல்கள் ஆகியவற்றுடன் கூடியவன் என்பதை ஏற்றுக்கொள்கிறது. அவனது விரல் பிடித்து அவனது அமைப்பிற்கேற்ப, அவனுக்கு வழங்கப்பட்ட பணிக்கேற்ப அவனுக்கு விதிக்கப்பட்ட உயர் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
இந்த மார்க்கம் மனிதனை, அவனது இயல்பை, அவனது அடிப்படையான பண்புகளை மதிக்கிறது. அல்லாஹ்வின்பால் செல்லும் நேரான வழியில் அவனை அழைத்துச் செல்கிறது. இதன்மூலம் இறைவனால் வழங்கப்பட்ட இந்த மார்க்கம் நீண்ட காலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது – இந்த மனிதனைப் படைத்தவன், இந்தக் குர்ஆனை அருளியவனே அதனை அறிவான் – ஆகவேதான் அது தனது உயர்ந்த நோக்கத்தை அடைவதற்கு தவறான வழியைத் தேர்ந்தெடுக்காது, அவசரப்படவும் செய்யாது. அதற்கு முன்னால் நீண்ட காலமும் விசாலமான களமும் உள்ளது. தனி மனிதனின் ஆயுட்காலம் அதற்கு எல்லையாக அமைந்துவிடுவதில்லை, மரணவேளை நெருங்கி விட்டவனின் ஆசை அதனை அவசரத்தில் ஆழ்த்தி விடுவதுமில்லை. மற்ற கொள்கைகளையுடையவர்கள் தங்களின் காலத்திற்குள்ளேயே அவற்றைச் செயல்படுத்திவிட வேண்டும் என்றிருப்பார்கள். அவர்களால் இயல்பான, நிதானமான போக்கை மேற்கொள்ள முடியாது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சண்டைகளும் பிரச்சனைகளும் அநியாயமும் இழப்புகளும் மிகுந்த பாதையாகத்தான் இருக்கும். அவர்கள் வகுத்த மதிப்பீடுகளை அவர்களே உடைத்துவிடுவார்கள். அவர்களின் விவகாரங்கள் சீர்குலைந்து விடும். இறுதியில் அவர்கள் உருவாக்கிய கொள்கைகளை, கண்ணோட்டங்களை அவர்களே அழித்துவிடுகிறார்கள். மனித இயல்புக்கு முன்னால் அவர்களின் உருவாக்கப்பட்ட கண்ணோட்டங்கள் நிலைக்க முடியாமல் அழிந்துவிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மிக எளிதாக மனித இயல்போடு இணைந்து செல்கிறது. சில சமயங்களில் அதனை முன் செல்ல வைக்கிறது. சில சமயங்களில் அதனை பின்னால் வர வைக்கிறது. அது வழிதவறும்போது அதனைச் சரியான வழியில் செலுத்துகிறது. அது அதனை நசுக்கி அழித்து விடுவதில்லை. அது மனித இயல்புடன் சேரும் இலக்கை நன்கறிந்த, நம்பிக்கைமிகுந்த அறிவாளிபோல செயல்படுகிறது. முதல் தவணையில் அது நிறைவேற்றாவிட்டால் இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது பத்தாவது அல்லது நூறாவது அல்லது ஆயிரமாவது தவணையிலாவது நிறைவேற்றிவிடும். காலம் நீளமானது. நோக்கமோ தெளிவானது. இலக்கை நோக்கிய பயணமோ மிக நீண்டது. அது உயரமான மரத்தைப் போன்றது. அதன் வேர்கள் பூமியில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அதன் கிளைகள் உயர்ந்து பரவியுள்ளது. அது போன்றுதான் இஸ்லாமும். நிதானமாக, இலகுவாக திருப்தியுடன் அது நீண்டுகொண்டே செல்லும். பின்னர் அல்லாஹ் எது நாடினானோ அதுவே நிகழும்.
பூமியில் விதைக்கப்படும் ஏதேனும் ஒரு விதையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அது மண்ணில் புதைந்துவிடலாம், அதன் சில பகுதியை பூச்சிகள் தின்றுவிடலாம். கடும் வெப்பத்தினால் அது எரிந்துவிடலாம், வெள்ளத்தினால் அது மூழ்கடிக்கப்படலாம். ஆயினும் அகப்பார்வையுடைய திறமையான விவசாயி அது நிலைத்திருந்து வளர்ச்சியடையும் என்பதையும் எல்லா தடைகளையும் தாண்டி அது மேலோங்கும் என்பதையும் அறிவான். அதனால் அவன் பதற்றம் கொள்வதில்லை, அவசரப்பட்டு இயற்கைக்கு மாறான வழிமுறைகளை மேற்கொள்வதுமில்லை. அது போன்றதுதான் இறைமார்க்கமும். “அல்லாஹ்வின் வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.” இறைமார்க்கத்தின்படி இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பில் சத்தியமே அசலானதாகும். அது நோக்கமற்ற வீணான ஒன்றோ சாதாரணமான ஒன்றோ அல்ல.
அல்லாஹ்வே உண்மையானவன். அவனிடமிருந்தே ஒவ்வொன்றும் தமக்கானதைப் பெற்றுக் கொண்டன. “அல்லாஹ்தான் உண்மையானவன். அவனை விடுத்து அவர்கள் அழைக்கின்றவை யாவும் பொய்யானவையே என்பதே இதற்கான காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும் மிகப் பெரியவனாகவும் இருக்கின்றான்.” அவன் இந்தப் பிரபஞ்சத்தை நோக்கத்துடன் படைத்துள்ளான். அவன் படைப்புகளோடு வீணானவை கலந்துவிட முடியாது.
“இவற்றையெல்லாம் அல்லாஹ் வீணாகப் படைக்கவில்லை.”
“எங்கள் இறைவா! நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. அவ்வாறு படைப்பதைவிட்டும் நீ தூய்மையானவன்.”
சத்தியம்தான் இந்தப் பிரபஞ்சத்தை சீரான நிலையில் வைத்திருக்கக்கூடியது. அது சத்தியத்தைவிட்டு விலகிவிட்டால் சீர்குலைந்து நாசமாகிவிடும்.
“சத்தியம் அவர்களின் மன இச்சைகளைப் பின்பற்றியிருந்தால் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையிலுள்ள அனைத்தும் அழிந்து போயிருக்கும்.”
ஆகவே சத்தியம் வெளிப்பட்டே தீர வேண்டும். அது அசத்தியத்தை அடியோடு அழித்துவிட வேண்டும். வெளிப்படையான காட்சிகள் இதற்கு மாறாகத் தெரிந்தாலும் இறுதியில் சத்தியமே வெல்லும்.
“மாறாக நாம் சத்தியத்தால் அசத்தியத்தை அடிக்கின்றோம். அது அசத்தியத்தின் தலையை உடைத்து விடுகிறது. அசத்தியம் அழிந்து விடுகிறது.”
நன்மையும் நேர்மையும் சிறந்தமுறையில் செயலாற்றுவதும் சத்தியத்தைப்போன்று அசலானவை, பூமியில் நிலைத்து நிற்கக்கூடியவை.
“அவனே வானத்திலிருந்து நீரை இறக்கினான். ஆறுகள் அதன் அளவுக்கேற்ப நிரம்பி வழிகின்றன. வெள்ளம் வந்து மேலெழும் நுரையைச் சுமந்து செல்கிறது. ஆபரணங்கள் அல்லது வேறு சாதனங்களைச் செய்வதற்காக மக்கள் நெருப்பில் உருக்கும்போது இதேபோன்றுதான் நுரை மேலெழுகிறது. இவ்வாறே அல்லாஹ் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உதாரணம் கூறுகிறான். நுரையோ காய்ந்து காணாமல் போய்விடுகிறது. மக்களுக்குப் பயனளிப்பது மட்டுமே பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.”
“தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத்தைக் கூறியுள்ளான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதனுடைய வேர் பூமியினுள் ஆழப்பதிந்துள்ளது. அதன் கிளைகளோ வானளாவ உயர்ந்து நிற்கிறது. அது தன் இறைவனின் கட்டளைப்படி எப்பொழுதும் கனிகளை அளித்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் படிப்பினை பெறும்பொருட்டு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். தீய வார்த்தைக்கு உதாரணம் பூமியின் மேற்பகுதியிலிருந்து பிடுங்கப்பட்டுள்ள உறுதியற்ற தீய மரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையின்மூலம் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துகிறான். அநியாயக்கார்ர்களை அவன் வழிதவறச் செய்துவிடுகிறான். அவன் தான் நாடியதைச் செய்யக்கூடியவன்”
இந்தக் கண்ணோட்டம் அளிக்கும் நிம்மதி எத்தகையது?! அது மனித உள்ளத்தில் எத்தகைய அமைதியை ஏற்படுத்துகிறது? சத்தியம், நன்மை, நேர்மை ஆகியவற்றின்மீது எத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது?! அது உள்ளத்திற்கு அளிக்கும் பலம் எத்தகையது?!
நான் குறிப்பிட்ட காலம்வரை திருக்குர்ஆனின் நிழலில் வாழ்ந்த பிறகு அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையைப் பெற்றேன். இந்த மனித சமூகம் அல்லாஹ்வின்பால் திரும்பாமல் சீரான வாழ்வை, நிம்மதியை, அமைதியை, உயர்வை, தூய்மையை அடைய முடியாது என்பதையும் பிரபஞ்ச விதிகளுடன் வாழ்வின் இயல்புடன் ஒத்திசைவைப் பெற முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டேன்.
திருக்குர்ஆனின் நிழலில் வெளிப்படுவது போன்று அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்கான ஒரே வழிதான், ஒரே வடிவம்தான் உள்ளது. அதைத்தவிர வேறு வழியோ வடிவமோ இல்லை. அது வாழ்வின் அனைத்துப் பகுதிகளோடும் மனித சமூகத்திற்காக தன் வேதத்தில் அல்லாஹ் வகுத்துத் தந்த வழிமுறையின் பக்கம் திரும்புவது. வாழ்வின் எல்லா விவகாரங்களுக்கும் அந்த வேதத்தையே நீதிபதியாக ஆக்குவது. அவ்வாறு இல்லையெனில் இந்த பூமியில் குழப்பம் பெருகி தீமை மலிந்து மனித சமூகம் அழிவு என்னும் சகதியில் அகப்பட்டுக் கொள்ளும். அல்லாஹ்வை விடுத்து மனஇச்சை வணங்கும் தெய்வமாக ஆக்கப்பட்டுவிடும்.
“தூதரே! அவர்கள் உம் அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லையெனில், அவர்கள் தம் மனஇச்சைகளைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்றி தன் மனஇச்சையைப் பின்பற்றுபவனைவிட வழிகெட்டவன் யார்? அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழிகாட்டுவதில்லை.”
வேதத்தில் அல்லாஹ் வகுத்துத் தந்த வழிமுறையின்படி தீர்ப்பளிப்பது உபரியானதோ அல்லது விரும்பினால் செய்யலாம் என்பதோ அல்ல. மாறாக அதுதான் ஈமான். அதுவன்றி ஈமான் இல்லை.
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விசயத்தில் தீர்ப்பளித்து விட்டால் நம்பிக்கைகொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அதில் தெரிவு செய்யும் உரிமை இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாதவர் வெளிப்படையான வழிகேட்டில் உள்ளவராவார்.”
“பின்னர் மார்க்கத்தின் தெளிவான வழிமுறையில் நாம் உம்மை நிலைத்திருக்கச் செய்தோம். எனவே நீர் அதனைப் பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைக்கு நீர் இணங்கிவிடாதீர். இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு எந்தப் பலனையும் அளிக்க மாட்டார்கள். அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ் அவனை அஞ்சக்கூடியவர்களின் தோழனாவான்.”
ஆம். விசயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது அடிப்படையான கொள்கை சார்ந்த விசயம். அது மனித சமூகத்தின் நிம்மதி சார்ந்த அல்லது துர்பாக்கியம் சார்ந்த விசயம்.
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனித சமூகம் தம் இயல்பை மூடியுள்ள பூட்டுகளை அவன் தந்த சாவிகளால் மட்டுமே திறக்க முடியும். தம்மைத் தாக்கும் நோய்க்கூறுகளை அவன் அளிக்கும் மருந்துகளால் மட்டுமே அழிக்க முடியும். அவன் அவர்களுக்கு வகுத்துத் தந்த மார்க்கம் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும் எல்லா வகையான நோய்களுக்கும் நிவாரணமாகவும் இருக்கின்றது.
“நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே நாம் குர்ஆனில் அருளுகின்றோம்.”
“நிச்சயமாக இந்தக் குர்ஆன் நேரான வழியைக் காட்டுகிறது.”
ஆனால் மனித சமூகம் பூட்டுக்கான சாவியை அதனை உருவாக்கியவனிடம் கேட்கவோ நோயாளியை அவனது படைப்பாளனிடம் கொண்டு செல்லவோ தம் விசயத்தில் அவன் பக்கம் திரும்பவோ விரும்பவில்லை. அது தம் அன்றாட உலக வாழ்வில் ஒரு கருவியை, இயந்திரத்தை உருவாக்கியவனிடமே அதனைப் பழுது பார்க்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கிறது. ஆனால் அந்த வரையறையை தம் சொந்த விசயத்தில் செயல்படுத்த மறுக்கிறது. தம்மைப் படைத்தவனிடம் தமக்கான வழிகாட்டலைப் பெற மறுக்கிறது. மனித சமூகத்தைப் படைத்தவன்தான் அதனைக் குறித்த அனைத்தையும் நன்கறிவான். “படைத்தவன் அறிய மாட்டானா என்ன? அவன் நுட்பமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
அதனால்தான் வழிதவறிய, தடுமாறித்திரிந்த மனித சமூகம் துர்பாக்கிய நிலையை அடைந்தது. அது தம்மைப் படைத்தவனின் பக்கம் திரும்பாதவரை நேர்வழியை, அமைதியை, நிம்மதியை அடைய முடியாது.
மனித சமூகத்திற்கு வழிகாட்டும் பொறுப்பிலிருந்து இஸ்லாம் அகற்றப்பட்டது மனித சமூக வரலாற்றில் நிகழ்ந்த பேரிழப்பாகும். அது போன்றதொரு இழப்பை மனித சமூகம் இதுவரை அறிந்ததில்லை!.
பூமியில் குழப்பம் மிகுந்து, மனித வாழ்வு சீர்கெட்டு, தவறான வழிகாட்டுதலால் மனித சமூகம் பெரும் வேதனையை அனுபவித்த பிறகுதான் இஸ்லாம் வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. “மனிதர்கள் செய்த தீவினைகளினால் நிலத்திலும் நீரிலும் குழப்பம் பரவிவிட்டது.” இந்தக் குர்ஆனைக் கொண்டு, குர்ஆன் கொண்டு வந்த புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு, அந்தக் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படும் வழிமுறையைக் கொண்டு இஸ்லாம் மனித சமூகத்தை வழிநடத்தியது. உண்மையில் அது மனிதனுக்கு அவனது முந்தைய பிறப்பைவிட புதிய பிறப்பாக இருந்தது. இந்தக் குர்ஆன் மனித சமூகத்திற்கு பிரபஞ்சம், வாழ்க்கை, மதிப்பீடுகள் ஆகியவற்றைக்குறித்த புதிய கண்ணோட்டத்தை வழங்கியது. அது மனித சமூகத்திற்காக தனித்துவமிக்க எதார்த்தமான சமூக அமைப்பை உருவாக்கிக் காட்டியது. குர்ஆனின் இந்தக் கண்ணோட்டத்திற்கு முன்னர் இப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பை அவர்களால் கற்பனைகூட செய்ய முடியாமலிருந்தது. ஆம்! அது தூய்மை, அழகு, கண்ணியம், உயர்வு, எளிமை, எதார்த்தம், நேர்மறையான அணுகுமுறை, சமநிலை, ஒத்திசைவு ஆகியவற்றை ஒருசேரப் பெற்றிருந்தது. மனித சமூகம் அதுபோன்ற ஒன்றை கற்பனையில்கூட கண்டதில்லை. திருக்குர்ஆனின் நிழலில், அதன் வழிமுறையில் மனித வாழ்வில் அதனை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டான்.
பின்னர்தான் அத்துயரமான சம்பவம் நிகழ்ந்தது. மீண்டும் ஜாஹிலிய்யாவை – இஸ்லாத்தைத்தவிர ஏனைய கொள்கைகளை – பதவியில் அமர்த்துவதற்காக வழிகாட்டும் பொறுப்பிலிருந்து இஸ்லாம் விலக்கப்பட்டது. அதன் உலகாயத சிந்தனை வடிவத்தால் மனித சமூகம் கவரப்பட்டது, சிறு குழந்தைகள் வண்ண வண்ண ஆடைகளால், விளையாட்டுப் பொருள்களால் கவரப்படுவதைப்போல.
வழிகெட்ட மனிதகுல விரோதிகளில் ஒரு பிரிவினர், இறைமார்க்கத்தை ஒருபுறமும் மனிதனின் உலகியல் கண்டுபிடிப்புகளை மறுபுறமும் வைத்து மக்களிடம் கூறினார்கள், தெரிவு செய்யுங்கள், என்று!. “நீங்கள் இறைமார்க்கத்தை தெரிவு செய்வதாக இருந்தால் மனிதனின் உலகியல் கண்டுபிடிப்புகளைவிட்டுத் தூரமாகி விடுங்கள் அல்லது இவற்றைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இறைமார்க்கத்தைவிட்டுத் தூரமாகி விடுங்கள்.”
மிக மோசமான தந்திரம் இது. இரண்டையும் இவ்வாறு ஒப்பிடவே முடியாது. இறைமார்க்கம் மனிதக் கண்டுபிடிப்புகளுக்கு எதிரானதல்ல. அது கண்டுபிடிப்புகளை வலியுறுத்துகிறது. மனிதனின் சிந்தனையை ஒழுங்குபடுத்தி சரியான திசையின்பால் செலுத்துகிறது. அது, மனிதன் பூமியில் பிரதிநிதித்துவ பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக. அல்லாஹ் அவனுக்கு வழங்கிய இந்த அந்தஸ்து, திறமைகள், ஆற்றல்கள் அவன்மீது விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றும்பொருட்டு வழங்கப்பட்டதாகும். இந்த பிரபஞ்ச விதிகள் அவனுக்காக வசப்படுத்தப்பட்டது, அவன் வாழ்வதற்கும் செயல்படுவதற்கும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதற்குமேயாகும். ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் இறைவழிபாடாக, அவனது அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மனிதனது சொல்லும் செயலும் இறைதிருப்தியை மையப்படுத்தியே இருக்குமானால் அவையனைத்தும் அவனது பிரதிநிதித்துவ பணிகளில் உள்ளடங்கியதாகிவிடும்.
ஒருபுறம் இறைமார்க்கத்தையும் மறுபுறம் உலகியல் கண்டுபிடிப்புகளையும் வைப்பவர்கள் தீய நோக்கமுடையவர்கள், கெட்டவர்கள். அவர்கள் வழிகேட்டிலும் தடுமாற்றத்திலும் களைப்படைந்துபோன மனித சமூகத்தை, அழிவிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின்பால் அடைக்கலம் தேட விரும்பும் மனித சமூகத்தை இஸ்லாத்தை நெருங்க விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள்.
இன்னொரு சாரார் இருக்கிறார்கள். அவர்களின் நல்லெண்ணத்தை நம்மால் குறைகூற முடியாது. ஆனால் சரியான, ஆழமான புரிதல் இல்லாதவர்கள். நவீன கண்டுபிடிப்புகளும் மனிதனின் வெற்றிகளும் அவர்களை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டன. இந்த பிரமிப்பு அவர்களின் உணர்வில் பிரபஞ்ச ஆற்றல்களுக்கும் ஈமானிய மதிப்பீடுகளுக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்திவிட்டது. இயற்கை விதிகள் ஈமானிய மதிப்பீடுகளால் பாதிப்படையாமல் அதன் பாதையில் அப்படியே சென்று கொண்டிருக்கிறது என்றும் அது இயல்பான தன் விளைவுகளை தந்துகொண்டிருக்கிறது என்றும் மனிதர்கள் நம்பிக்கைகொண்டாலும் நிராகரித்தாலும் இறைமார்க்கத்தைப் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் எண்ணுகிறார்கள்.
இது தவறான எண்ணமாகும். இரண்டிலும் இறைவன் அமைத்த விதிகள் ஒன்றுபோலவே செயல்படுகின்றன. ஈமானிய மதிப்பீடுகளும் பிரபஞ்ச விதிகளைப் போன்று அவன் அமைத்த விதிகள்தாம். நம்பிக்கையாளனின் பார்வையில் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. இதுதான் திருக்குர்ஆனின் நிழலில் வாழும் மனித மனதில் திருக்குர்ஆன் அளிக்கும் சரியான கண்ணோட்டமாகும். அது வேதம் வழங்கப்பட்டவர்களின் வழிகேட்டைக் குறித்தும் அதனால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்தும் கூறும்போது உருவாக்கும் கண்ணோட்டத்தைப் பாருங்கள்.
“வேதக்காரர்கள் நம்பிக்கைகொண்டு இறையச்சத்துடன் நடந்திருந்தால் நாம் அவர்களின் பாவங்களை அகற்றி அருட்கொடைகள் நிறைந்த சுவனச் சோலைகளில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்திருப்போம். அவர்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும் தங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதையும் பின்பற்றியிருந்தால் தங்களுக்கு மேலிருந்தும் கீழிருந்தும் புசித்திருப்பார்கள். அவர்களில் சிலர் நேரான வழியில் இருக்கின்றனர். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் தீய காரியங்கள் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.”
நூஹ் தம் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை நினைவூட்டும்போதும் அது இந்தக் கண்ணோட்டத்தையே உருவாக்குகிறது. “நான் அவர்களிடம் கூறினேன், “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பெரும் மன்னிப்பாளனாக இருக்கின்றான். அவன் உங்கள்மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். உங்கள் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அருள்வளத்தை உண்டாக்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்கி ஆறுகளையும் ஓடச் செய்வான்.”
மனிதர்களின் அக உலகிற்கும் புற உலகிற்கும் தொடர்பு ஏற்படுத்தும்போதும் அது இந்தக் கண்ணோட்டத்தையே உருவாக்குகிறது. “எந்தச் சமூகமும் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாதவரை அல்லாஹ் அதனுடைய நிலையை மாற்றுவதில்லை.”
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வது, உறுதியாக நின்று அவனை வணங்குவது, அவன் தந்த சட்டத்தை உலகில் நடைமுறைப்படுத்துவது என அனைத்தும் அல்லாஹ்வின் விதிகளை நடைமுறைப்படுத்துவதாகும். அவை நேர்மறையான, செயலூக்கம் நிறைந்த பிரபஞ்ச விதிகள் வெளிப்படுகின்ற மூலத்திலிருந்து வெளிப்பட்டவையாகும். அவற்றின் விளைவுகளை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.
சில சமயங்களில் வெளிப்படையான தோற்றங்களைக் கண்டு ஈமானிய மதிப்பீடுகளைத் தவிர்த்து இயற்கை விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும் என்று எண்ணி விடுகிறோம். அவ்வாறு பின்பற்றும்போது ஆரம்பத்திலேயே அதன் விளைவுகள் வெளிப்படுவதில்லை. ஆனால் முடிவில் உறுதியாக அது தோல்வியைத்தான் தரும். இஸ்லாமிய சமூகம்கூட இத்தகைய எண்ணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அது ஈமானிய மதிப்பீடுகளுடன் பிரபஞ்ச விதிகளையும் பின்பற்றியபோது எழுச்சி பெறத் தொடங்கியது. ஈமானிய மதிப்பீடுகளை விடுத்து பிரபஞ்ச விதிகளை மட்டும் அது பின்பற்றியபோது சரிவையே சந்தித்தது. எந்த அளவுக்கெனில் இறுதியில் இரண்டையும் கைவிட்டு அதள பாதாளத்தில் விழுந்தது.
மற்றொரு புறம் உலகியல் கலாச்சாரம் பலமான ஒரு இறக்கையால் மட்டும் பறந்து கொண்டிருக்கிறது. அதன் மறு இறக்கையோ முழுவதுமாக ஒடிந்துள்ளது. அது உலகியல் கண்டுபிடிப்புகளில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அது மற்றொரு புறம் அங்குள்ள அறிவாளிகளே அஞ்சும் அளவுக்கு மனிதத் தன்மையை இழந்து பதற்றத்திலும் தடுமாற்றத்திலும் உள நோய்களிலும் உழன்று கொண்டிருக்கிறது. தங்களின் நோய்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்தான இறைமார்க்கத்தின் பக்கம் அவர்கள் திரும்ப மாட்டார்களா!
மக்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள சட்டமும் பிரபஞ்சத்தில் காணப்படும் முழுமையான விதிகளுள் ஒரு பகுதிதான். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் மனிதர்களின் இயக்கத்திற்கும் இடையே காணப்படும் ஒத்திசைவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். இறைச்சட்டம் என்பது ஈமானின் வெளிப்பாடு. அது தன் அடித்தளமின்றி தனித்து நிற்காது. அது இறைவனுக்குக் கீழ்ப்படியும் சமூகத்தில் நடைமுறைப்படுத்துவற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இறைவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அது பிரபஞ்சத்தின் இருப்பு, மனிதனின் இருப்பு ஆகியவை குறித்து இஸ்லாம் கூறும் கண்ணோட்டத்துடனும் அது மனிதனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் இறையச்சம் அவனது உணர்வில் ஏற்படுத்தும் தூய்மை அவனது மதிப்பீடுகளில் ஏற்படுத்தும் முக்கியத்துவம் அவனது பண்பில் ஏற்படுத்தும் உயர்வு, அவனது நடத்தையில் ஏற்படுத்தும் உறுதி ஆகியவற்றுடனும் சேர்ந்து முழுமையடையக்கூடியது. இவ்வாறு இறைவன் அமைத்த விதிகளுக்கிடையே – அது பிரபஞ்ச விதிகளாக இருக்கட்டும், ஈமானிய மதிப்பீடுகளாக இருக்கட்டும் – பரிபூரணமும் ஒத்திசைவும் காணப்படுகிறது. அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் அமைத்த விதிகள்தாம்.
மனிதனும் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றல்களுள் ஒருவன்தான். அவனது செயல், நாட்டம், நம்பிக்கை, நேர்மை, வழிபாடு, இயக்கம் ஆகியவை இந்தப் பிரபஞ்சத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல்கள்தாம். அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திற்காக அல்லாஹ் அமைத்த விதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் ஒத்திசைவுடன் செயல்படுகின்றன. அவை ஒத்திசைவுடன் ஒன்றிணைந்து செயல்படும்போது அதற்கான பலன்களை முழுமையாகத் தருகின்றன. அவை பிரிந்து ஒன்று மற்றொன்றுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும்போது சீர்குலைவும் குழப்பமும் மனிதர்களிடையே நாசமும் துர்பாக்கியமும் பரவி விடுகின்றன. “எந்தச் சமூகமும் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்கள்மீது பொழிந்த அருட்கொடையை மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.”
மனிதனின் செயலுக்கும் அவனது உணர்வுக்கும் இறைவன் அமைத்த விதிகளின் எல்லைக்குள் நிகழும் நிகழ்வுகளுக்கும் இடையே நிலையான தொடர்பு இருக்கின்றது. இந்த ஒத்திசைவை, தொடர்பை அழிப்பதின்பால் அழைப்பவன், மனிதர்களுக்கும் அல்லாஹ் அமைத்த விதிகளுக்குமிடையே குறுக்கிட எண்ணுபவன் அவர்களை இறைவனின்பால் செல்லக்கூடிய நேரான வழியிலிருந்து தடுக்க நினைக்கும் மனிதகுல விரோதியாகத்தான் இருப்பான்.
இவை திருக்குர்ஆனின் நிழலில் குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்ததனால் நான் அடைந்த தாக்கங்கள் மற்றும் என் எண்ணங்களாகும். அல்லாஹ் இவற்றைக் கொண்டு பயனடையச் செய்யலாம், நேர்வழிகாட்டலாம்.
சையித் குதுப்