கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கீழைத்தேயவாதம்: இஸ்லாத்தின் மீதான கருத்தியல் போர்

Loading

உலக வரலாற்று இயங்கியலில் எண்ணிலடங்காத கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பெளதீக, உயிரியல் நிலைகளைத் தாண்டி பூகோள சுபீட்சத்துக்கு வழிகாட்டியதும்; இன, நிற, மொழி சார் பல்வகைமைகளுக்கு அப்பால் மனித வர்க்கத்தின் மீதான பூரண ஆர்ப்பரிப்பைக் கொண்டதுமான கொள்கை எது என்ற வினாவைத் தொடுத்தால் அதில் இஸ்லாம் தவிர்ந்து மற்றமை இருப்பதற்கான பதில் இருக்காது. அவ்வாறே, இஸ்லாம் தனது உலகம் தழுவிய இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள கடந்து வந்த பாதைகளின் உக்கிரத்தன்மையும் அதனால் இஸ்லாம் நடத்திய ஜீவமரணப் போராட்டமும் வார்த்தை வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவை. இதனையே அறிஞர் ஹபன்னகா அல்-மைதானி “இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்திருக்காவிட்டால் எப்போதோ அழிந்து போயிருக்கும்” எனக் குறிப்பிடுகிறார்.

அவ்வாறே இஸ்லாம் இன்றும் பல்கோண சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச அரங்கில் இஸ்லாத்துக்கெதிராக காய் நகர்த்தப்படும் கருத்தியல் கட்டமைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் மறைகரங்கள் பற்றிய பின்னணியையும், அவர்களது அச்சுறுத்தல்களையும், அதன் தாக்க விளைவுகளையும், அவர்கள் கைக்கொள்ளும் முறைவழிகளையும் அடையாளப்படுத்தும் சிறு முயற்சியே இவ்வாக்கம்.

உலகளவில் தன்னை ஒரு பலமிக்க அரசியல் சக்தியாக இருத்திக் கொண்ட மார்க்கமே இஸ்லாம். நபிகளின் தூதுத்துவ ஆட்சியில் ஊற்றெடுத்த அதன் அரசியல் வரலாறு அடுத்ததாக நேர்வழிநின்ற கலீஃபாக்களின் (குலபா உர்-ராஷிதீன்) பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய கிலாபத் ஆட்சியைக் கண்டது. அதேவேளை உமைய்யாக்கள் காலம் (ஹி. 41-132) மன்னராட்சிக்கு மாற்றமுற்றதுடன், அடுத்து வந்த அப்பாஸியக் காலம் (ஹி.132-656) கவின் கலைகளினதும் பயின் கலைகளினதும் வளர்ச்சிக்கு தீனிபோட்டதனைக் குறிப்பிட முடியும். இங்கேயே பல்வேறு அரசியல் சிந்தனைகளின் வருகையும் கூடவே இடம்பெற்றது. அக்காலப்பிரிவுகளில் இஸ்லாமிய உலகம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத கலாச்சார மற்றும் சிந்தனா ரீதியான படையெடுப்புக்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1258 பாக்தாதின் வீழ்ச்சியும் தாத்தாரிய படையெடுப்பும் அதன் அறிவுக்கருவூலத்தை துடைத்தெறிந்தது. பிற்காலத்தில் உஸ்மானிய உதயமானது 17ம் நூற்றாண்டு வரை அசைக்கமுடியாத உறுதி கொண்டிருந்ததெனினும் மதச்சார்பற்ற தலைமைத்துவமும் கல்வி மற்றும் அறிவியலின் புறக்கணிப்பும் வினைத்திறனில்லாத இராணுவச் செயற்பாடுகளும் அதன் உறுதியை அசைத்துப் பார்த்தன.

தூதுத்துவத்தில் உதயமான இஸ்லாமிய அரசியலின் வரலாற்றோட்டம் 1924ல் தற்காலிகமாக அஸ்தமித்தது. 18ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இந்த சரிவினையே மேற்குலக முதலைகள் தமது கோரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக மாற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தையும் காலனித்துவ அடக்குமுறையையும் படிப்படியாக முஸ்லிம் நாடுகள் மீது திணித்தனர். அதனூடாகவே அல்ஜீரியா, மொரோக்கோ, துனீஷியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பிரான்ஸிடமும் இந்தோனேஷியா ஒல்லாந்தரிடமும் எகிப்து பிரிட்டிஷிடமும் துருக்கி ரஷ்யாவிடமும் லிபியா இத்தாலியிடமும் இரையாகின.

காலனித்துவம் (Colonization)

மூன்றாம் உலக நாடுகளின் நிலப்பகுதிகளை மேற்கத்தேய சக்திகள் பலாத்காரமாக பெளதீக ரீதியில் பிடித்து வைத்து அதன் வளங்களை சுரண்டி வந்த வரலாற்றுக் காலகட்டம்.

இதன் தொடர்ச்சியில் சென்ற நூற்றாண்டின் முன்னரைப் பகுதிகளில் ஐரோப்பிய காலனியத்திலிருந்து முஸ்லிம் நாடுகள் முற்றுமுழுதாக விடுதலையடைந்த போதும் அதன் தயாரிப்பில் உருவான ‘கீழைத்தேயவாதம்’ (Orientalism) எனும் அறிவுக் காலனியத்திலிருந்து விடுதலையடையவில்லை.

’காலனித்துவம்’, ’கீழைத்தேயவாதம்’ ஆகிய கருத்தியல்கள் வரலாற்றில் மறைந்துபோன விடயங்களாயிற்றே இப்போது அதனை பேசுபொருளாக்குவதற்கு என்ன தேவை இருக்கிறது என்கிறீர்களா? உண்மையில் , காலனித்துவம் காற்றில் கரைந்து போய்விடவுமில்லை; கீழைத்தேய ஆய்வுகள் முற்றுப்பெறவுமில்லை. பெயர்களும் வடிவங்களும் சில செயற்பாட்டுத் தளங்களும் மாறியிருக்கின்றனவே தவிர அதன் ஆக்கிரமிப்புக் குணமும் அயோக்கியத்தனமும் மாறவில்லை.

தொடர்ந்தும் “இஸ்லாமிய நாகரீகம் vs மேற்கத்தேயம்” என்ற எளிமைப்படுத்தப்பட்ட இரட்டை எதிர்நிலைகளில்(Binary Opposition)வைத்து அனைத்து விடயங்களையும் நோக்கும் பாமர புரிதலின் பங்காளர்களாக நாம் இருந்து விட முடியாது. எதனையும் அதனதன் மெய்ப்பொருள் கண்டே ஏற்கவோ, நிராகரிக்கவோ, விமர்சிக்கவோ வேண்டும்.

கீழைத்தேயவாதம் என்றால் என்ன ?

நவ காலனித்துவ பின்னணியில் மேற்கத்தேய கல்வியியல் அறிஞர்கள் முற்றிலும் தம்முடைய நோக்கிலிருந்து (மேற்கத்தேயம் அல்லது யூத-கிறிஸ்தவம் ஊடாக கொண்டுள்ள முன்முடிவுகள்) தமது அளவுகோள்களையும் முறைமைகளையும் பயன்படுத்தி கீழைத்தேய நாடுகளின் இனம், மொழி, வரலாறு, கலாச்சாரம், மதம் போன்ற துறைகளில் நடத்தும் ஆய்வு. குறிப்பாக, இஸ்லாத்தின் மீதும் அதன் நாகரீகம், வரலாறு, கலைகள், அரபுமொழி என்பவற்றிலேயே அதிகமான ஆய்வுகளை கீழைத்தேயவாதிகள் செய்துள்ளனர்.

“ஆசிய நிலப்பகுதி சார்ந்தது என்றாலே அது புதிய, புதிரான, மானிடத்தின் ஆதி நிலையில் உள்ளதனால் வளர்ச்சியடையாத ஒன்று என அடையாளப்படுத்தப்படுவதோடு; கீழைத்தேய நாடுகளுக்குரிய ஒவ்வொறு புதிய பொருளும் வகைப்படுத்தப்பட்டு, குறிக்கப்பட்டு(codified) அவற்றுக்குரிய இடத்தில் வைக்கப்பட்டன. மேலும் கீழைத்தேயவாதம் “கீழைத்தேயம்” என்ற கருத்தியலை முழுக்க முழுக்க பிரதிகளின் தொகுப்பாலான பிரபஞ்சமாக கற்பிதங்களை உருவாக்குகிறது. பிரதிகளினாலான இப்பிரபஞ்சத்தில் (ஆசியா) உருவான கருதுகோள்கள் நேரடி அனுபவங்களையும் விட பலம்பெற்றவை. எந்தளவுக்கெனில் ஆசிய பகுதிகளுக்கு செல்ல நேரிடும் ஒரு கீழைத்தேயவாதி அக்கருதுகோள்களிலிருந்து விலகிய நிலைமையை நேரடியாக கண்டால் கூட அவை கீழைத்தேய மக்களுக்குரிய தேங்கிய அல்லது திரிந்த நிலைமையாக எடுத்துக் கொள்ளும் அளவு அதன்கற்பிதங்கள் அமைந்திருந்தன”

என்பது கீழைத்தேயவாதிகளுடைய ஆய்வுகளின் பாரதூரத்தை விளக்கும் நடுநிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.

கீழைத்தேயவாதிகளில் பலர் கிறிஸ்தவ பிரச்சார இயக்கங்களின் கைக்கூலிகளாகவும் ஸியோனிச வலைப்பின்னல்களை சேர்ந்தவர்களாகவுமே உள்ளனர். கீழைத்தேய ஆய்வு என்ற பொதுவெளியில் குறிப்பாக இஸ்லாமிய அரங்கில் முகாமிட்டு இஸ்லாத்தை அகலமாக கற்று அறிவார்ந்து அணுகி அதில் சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி அதனை செல்லாக்காசாக மாற்றும் செயற்பாடுகளே திரைமறைவில் இடம்பெறுகின்றன.

இதனை La Conquete du Monde Musliman எனும்பிரதியில் La Chatelar என்ற கிறிஸ்தவ மதகுரு இப்படி எழுதுகிறார்,

“முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பலவீனமடையச் செய்வதில் நம்முடைய பிரச்சாரகர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை என்றபோதிலும் மேற்கத்தேய மொழிகள் வாயிலாக கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புவதாலும் ஐரோப்பாவில் பிரசுரிக்கப்படுகின்ற சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றோடு முஸ்லிம்களை ஒன்றிணைப்பதினாலும் மேற்குலகத்தோடு சங்கமிக்கச் செய்யலாம். அது முஸ்லிம்கள் லோகாயுத துறையில் முன்னேற வழிகோலும்; அப்போதே இதுவரை முஸ்லிம்களின் தனித்துவத்தை பாதுகாத்த இஸ்லாமிய கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் சீர்குலைக்க முடியும்; தமது இலட்சியத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றிகாணவும் முடியும்.”

இஸ்லாமிய வரலாற்றில் கீழைத்தேயவாதம்

உமைய்யாக் காலப்பகுதியிலேயே இஸ்லாத்தைக் கற்று அதனை செல்லுபடியற்றதாக்கும் சதிச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. உமைய்யாக் கால “யஹூனா” அப்பாசியக் கால “பஹ்தீஸ்” ஆகியோரே கீழைத்தேயவாதிகளின் ஆரம்ப கர்த்தாக்களாவர் என்ற கருத்தினை இஸ்ஸத் இஸ்மாயில் தஹ்தாவி அவர்கள் தனது ‘அத்-தஃப்ஸீர் வல் இஸ்திஷ்ராக்’  எனும் பிரதியில் குறிப்பிடுகிறார்.

13ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் மானிட அறிவியலின் முடிசூடா மன்னர்களாக இருந்த முஸ்லிம்களிடமே அறபு மொழியிலான பெறுமதிமிக்க அறிவியல்சார் நூல்கள் காணப்பட்டன. இக்காலகட்டத்தில் அந்தலூஸுக்கு (ஸ்பெய்ன்) பயணித்த கிறிஸ்தவ அறிஞர்கள் அங்குள்ள அறிவியற் துறைகளையும் அறபு மொழியையும் கற்றுத்தேர்ந்தனர். அவ்வாறு இஸ்லாமிய நாடுகளில் கற்ற கிறிஸ்தவ அறிஞர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பியபோது அங்கிருந்த அறிவியல் வறட்சியையும் நாகரீகப் பற்றாக்குறையையும் கண்டு கல்விசார் விருத்தியின் தேவையை உணர்ந்ததால் அராபியக் கல்வி முறையிலான கலாசாலைகளை அமைத்ததோடு மாணவர்களை அறிவியற் துறைகளின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதற்காக அறபு மொழியையும் கற்பித்தனர். இன்னும் சிலர் அறபுமொழி நூல்களை தமது தாய் மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்தனர்.

இவ்வாறு ஓர் வளர்ச்சிக் கட்டத்தை அடைகின்ற போது இஸ்லாத்தை கற்று அதனுள் சந்தேகங்கள், குளறுபடிகளை ஏற்படுத்த அதனை கருவறுக்கும் நோக்கம் கொண்ட சிலர் கருதினர். இதன் தொடர்ச்சியாகவே மேற்கத்தேய காலனித்துவம் 18ம் நூற்றாண்டில் அனைத்து முஸ்லிம் நாடுகளையும் ஆட்கொண்ட போது இஸ்லாமிய கலாசாலைகளிலிருந்த பல்தொகையான நூல்களை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்று தமது தீவிரமான ஆய்வு நடவடிக்கைகளை அப்பிரதிகளில் முடுக்கிவிட்டனர். இக்காலப் பகுதியிலேயே கீழைத்தேயவாதம் என்கிற காலனியக் குழந்தை அதன் உரிய வடிவங்களுடன் பிறப்பெடுக்கிறது.

தொலைந்து போன இஸ்லாமிய இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை கண்டெடுத்து மீள்பதிப்பித்தமை, இஸ்லாமிய வரலாற்றுத் தகவல் மூலங்களை தரம்பிரித்து அணுகிட வசதியாக அட்டவணைப்படுத்தியமை, கணக்கற்ற ஆய்வுகளை மொழிபெயர்த்தமை மற்றும் விமர்சனங்களால் இஸ்லாமிய மரபை செழுமைப்படுத்தியமை ஆகிய கீழைத்தேயவாதிகளின் அரும்பங்களிப்புக்களை மறுதலிக்கவோ புறமொதுக்கவோ முடியாது. இத்தகைய பங்களிப்புக்களை, அலவி மாலிகி தனது “அல்-முஸ்தஷ்ரிகூன் பைனல் இன்சாப் வல் அஸபிய்யா” எனும் பிரதியில் கூறுவது போன்று, கீழைத்தேயவாதிகளில் ‘நேர்மையாளர்களே’ மேற்கொண்டனர்.

தீவிரவாதிகள் (Extremist)

இஸ்லாத்தை வேரோடு களைய வேண்டும் என்ற நோக்குடன் ஆராய்ந்து அதில் குளறுபடிகளையும் திரிபுகளையும் ஏற்படுத்தியவர்கள்.

நேர்மையாளர்கள் (Righteous)

பொதுவாக கீழைத்தேய நாடுகளின் ஆய்வியற் துறைகளையும்; இஸ்லாமியக் கோட்பாடுகளையும் ஆராய்ந்து அவற்றை உண்மை வடிவத்துடன் முன்வைத்தவர்கள். இவர்களில் சிலரே இஸ்லாமிய சிந்தனைகளாலும் அதன் கலைகளின் தார்ப்பரியங்களாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.

கீழைத்தேய வழிமுறைகள்

  1. இஸ்லாமிய ஆதார பனுவல்கள் பற்றிய புனைவுகளைக் கொண்ட நூல்கள் வெளியீடு.
  2. இஸ்லாத்தை குரூரமாக சித்தரிக்கும் சஞ்சிகைகள், சினிமாக்களின் தயாரிப்பு.
  3. அனாதை இல்லம், அகதி முகாம், பாடசாலைகள் முதலியவற்றுக்கு கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களை அனுப்பி உதவிகள் வழங்குதல்.
  4. இஸ்லாமிய கலைக்களஞ்சியங்களை வெளியிடல்.
  5. முஸ்லிம் மூளைசாலிகள், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி; அவர்களது கலாபீடங்களில் பயிலவைத்தல்.
  6. கீழைத்தேய திட்டங்களை வகுக்கும் ஆலோசனை மாநாடுகள் நடத்துதல்.
  7. இஸ்லாமிய நாடுகளில் பல்கலைக் கழகங்களை நிறுவுதல், பாடதிட்டங்களை வடிவமைத்தல், விசேச விரிவுரைகள் நிகழ்த்துதல். உதாரணம்:
    எகிப்து   –  பிரான்ஸிய கல்வி நிலையம், நத்வதுல் கதாப், தாருஸ்ஸலாம் அமெரிக்க பல்கலைக்கழகம்
    லெபனான்–செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம்
    சிரியா– லைக் பாடசாலைகள், தாருஸ்ஸலாம்

கீழைத்தேய ஆய்வின் பொதுப்பண்புகள்

  1. இறைவேத வெளிப்பாட்டின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குட்படுத்தல்.
  2. இஸ்லாமிய ஆதார பனுவல்களின் நம்பகத்தன்மையை உதாசீனம் செய்தல்.
  3. இஸ்லாத்தை வெறுமனே ஆய்வுப் பொருளாக மாத்திரம் சுருக்குதல்.
  4. இஸ்லாம் மீது தனிப்பட்ட பற்றுறுதி கொண்டிருப்பதை பிற்போக்குத்தனமாக கட்டமைத்தல்.
  5. நபிகளின் வாழ்வியலை விமர்சனங்களால் களங்கப்படுத்தல்.
  6. கிறிஸ்தவமயமாக்கல், மதஒதுக்கல் சிந்தனைகளை முஸ்லிம்களிடத்தில் பரப்புதல்.

அண்மைக்காலமாக சர்வதேச அரங்கில் பெண்ணிலைவாத கருத்துக்கள் கூர்மையடைந்து இஸ்லாம் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதற்கும், நபிகள் பற்றிய பிழையான பிரதிமைகள் முன்வைக்கப்படுவதற்கும், இஸ்லாமிய அரசியலின் எதிர்கால இருப்பு குறித்த சந்தேகங்கள் ஏற்படுவதற்கும் பின்னால் இருக்கின்ற சூத்திரதாரிகள் கீழைத்தேயவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய உம்மத்துக்கு துணைநிற்காத, அதன் நாகரீக தனித்துவத்திற்கு சேறு பூசக்கூடிய, சடவாதம் தழுவிய உலகாயத சிந்தனைகளை பூஜிக்கும் தலைசிறந்த மூளைசாலிகள் (?) பெருந்திரளானோர் கீழைத்தேய ஆய்வாளர்களின் அணியில் கைக்கோர்த்திருப்பதும்; ஏனைய முஸ்லிம்களுக்கு மத்தியில் அக்கருத்தியல் கட்டமைவுகளுக்கு ஏற்புமைகள் உண்டாகியிருப்பதும் ஆபத்தான அறிகுறியாகும். உதாரணம்:-  தாஹா ஹுஸைன், தெளபீக் மூஸா, அஹ்மத் அமீன், சல்மான் ருஷ்தி, முஸ்தக்பதுல் பீ மஜ்ர், அல்பரா, தரஜிஃ, பாறுக் கதாலி, போன் ஜரூல், பேணி சீனக், தக்து நாளத், தஸ்லீமா நஸ்ரின், மலாலா யூசுப்.

எந்த விடயத்தையும் அறிவார்ந்து அணுகும் புத்திஜீவித்துவ நூற்றாண்டில் சேமிப்பிலிருக்கும் மேம்போக்கான சிந்தனைகளையும் கருத்துக்களையுமே கொண்ட அழைப்பியல் முறைமை தொடர்ந்தும் செரிமானமாகாது என்பதுடன் ஆரோக்கியமற்றதுமாகும்.

எனவே, இஸ்லாத்தை அதன் தூய்மையும் செழுமையும் மாசுபடாமல் நவ யுகத்திற்கு ஈடுகொடுத்து நடைபயிலக் கூடிய அமைப்பில் சமர்ப்பிக்கின்றவர்களாக நாம் நம்மை தயார்படுத்த வேண்டிய தேவை உணரப்படுகின்றது. இஸ்லாத்தின் பேரொளிக் கீற்றுகளை அழிக்கும் அராஜக சக்திகளிலிருந்து அதனை பாதுகாக்க நாம் களமிறங்குவோமாயின்,

அவர்கள்அல்லாஹ்வின்ஒளியை தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்துவிட நாடுகின்றனர். ஆனால், நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப்பூ ரணமாக்கியே தீருவான்.

எனும் இறைவேத சுபசோபனம் நமக்கு உரமூட்டும்.

முஸ்லிம்களே! குர்ஆனைச் சுமந்து கொண்டு உலகை வலம் வாருங்கள். உலகுக்கு பின்னால் அலைவது எமது பண்பல்ல, நமது கொள்கையின் பின்னால் உலகை ஈர்ப்பதுதான் நமது கடமை – மெளலானா மெளதூதி (றஹ்)

Related posts

Leave a Comment