தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம்.. அதில் எட்டாவது பகுதி கீழே.]

மனிதச் சிந்தனை இந்தக் கண்ணோட்டத்தை உருவாக்காவிட்டாலும் அது மனிதனின் செயல்படும் தளத்திற்கு எதிரானதல்ல. அதனைப் பெற்று அதனடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே மனிதனின் பணி. நாம் ஏற்கனவே முன்னுரையில் குறிப்பிட்டவாறு இதனை தீர்மானிக்கப்பட்ட வேறு வகையான மதிப்பீடுகளைக்கொண்டு மதிப்பிடவோ வேறொரு கண்ணோட்டத்தைக்கொண்டு அணுகவோ முடியாது. மனிதன் தனக்குத் தேவையான மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டே அவன் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையான விசயங்களை அவன் இறைவேதத்திலிருந்தே பெற வேண்டும். வேறு எந்த ஒன்றிலிருந்தும் அவற்றைப் பெறக்கூடாது. இது ஒன்றே அவனது நிகழ்கால வாழ்க்கையில் அவன் காணும் சிந்தனைகள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவுகோல். இதன்மூலம் அவன் சரியானதையும் தவறானதையும் அறிந்துகொள்ளலாம்.

“நீங்கள் ஏதேனும் ஒரு விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்வின் பக்கமும் தூதரின் பக்கமும் திருப்புங்கள்.” (4:59)

அதே சமயத்தில் மனித சிந்தனை இந்தக் கண்ணோட்டத்தின்படி மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. இறைவனிடமிருந்து பெற்ற இந்தக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும் புரிந்துகொள்ளும் பொறுப்பும் தம்மைச் சுற்றிக் காணப்படும் கண்ணோட்டங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை இதனடிப்படையில் அணுகும் பொறுப்பும் மனித சிந்தனைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவன் இதனோடு எதையும் இணைத்துவிடவோ இதிலிருந்து எதையும் குறைத்துவிடவோ கூடாது. இஸ்லாமிய பயிற்சித் திட்டத்தின் (தர்பிய்யா) வழிமுறை மனித சிந்தனைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து, அதனைச் சீர்படுத்தி செயல்பாட்டின்பால் உந்தித் தள்ளுகிறது… (பார்க்க, மன்ஹஜுத் தர்பிய்யா அல்- இஸ்லாமிய்யா – முஹம்மது குதுப்)

மனிதனின் அறிவு மட்டுமே இந்தக் கண்ணோட்டத்தைப் பெறக்கூடியது அல்ல. மாறாக அதுவும் பங்குபெறுகிறது. இறைவனிடமிருந்து வந்த இந்தக் கண்ணோட்டத்தின் தனித்தன்மையே, அது மனிதனை ஒட்டுமொத்தமாக விளித்து உரையாடுகிறது. அவ்வாறே அது அவனது உணர்வெல்லைக்குள் பிரவேசிக்கிறது. மனிதன் அதன் இயல்பை, உண்மை நிலையை அல்லது அது எப்படிப்பட்டது என்பதை முழுமையாக அறிந்துகொள்ளாவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வது அவனுக்குக் கடினமாக இருக்காது. ஏனெனில் அது அவனது அறிவெல்லைக்குள் அடங்கியதாகவே இருக்கும். அதை அவனால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த எளிய உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்கும் தர்க்கம் இதுதான்: இந்தக் கண்ணோட்டம் எடுத்துரைக்கும் விசயம் – இறைவனின் உள்ளமையைக்குறித்து, அவனது பண்புகளைக்குறித்து, படைப்புகளோடு தொடர்பு கொண்டுள்ள அவனது நாட்டம்குறித்து – மனிதனின் புரிந்துகொள்ளும் ஆற்றலைவிட விசாலமானது, மிகப் பெரியது. அது பரிபூரணத்துவமும் நிரந்தரத்துவமும் பெற்றது. மனிதனோ மற்ற படைப்புகளைப்போன்று இடம் மற்றும் காலத்தின் எல்லைகளுக்கு உட்பட்டவன்தான். அந்த எல்லைகளை அவனால் ஒருபோதும் தாண்ட முடியாது.

“மனித, ஜின்  கூட்டத்தார்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை உங்களால் கடந்து செல்ல இயலுமானால் கடந்து செல்லுங்கள். ஆயினும் வலிமையின்றி உங்களால் கடந்து செல்ல இயலாது.” (55:33)

“பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனோ பார்வைகளை அடைந்துகொள்கிறான். அவன் நுட்பமானவனும் அனைத்தையும் அறிந்தவனுமாவான்.” (6:103)

ஆகவே ஒரு மனிதனின் அறிவு மற்றும் உணர்வாற்றலால் இந்த எல்லைகளுக்கு அப்பாலுள்ளவற்றை உணர்ந்துகொள்ள இயலாது. அவன் செய்ய வேண்டியது, அனைத்தையும் அறிந்த  இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வது, தன் இயல்பின் எல்லைகளுக்குள்ளிலிருந்து, தான் நிறைவேற்ற வேண்டிய பணியின் எல்லைக்குள்ளிலிருந்து பெற்றுக்கொள்வது ஆகியவைதான்.

இறுதியாகக் கூறிய இந்த வாசகத்தை நாம் இன்னும் விரிவாகக் கூறுகிறோம். மனிதன் – அவனது இயல்பின்படி – வழிநடத்தப்படுபவனே. அவன் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பரிபூரணமானவனோ நிலையானவனோ அல்ல. ஆகவே அவனது இயல்புக்கேற்ப அவனது புரிந்துகொள்ளும் திறனும் வரம்புக்குட்பட்டதே. அவன், நிறைவேற்ற வேண்டிய பணியின்மூலம் வரம்புக்குட்பட்டவன்தான். பூமியில் இறைவனின் பிரதிநிதியாக இருந்து வணக்க வழிபாட்டை அவனுக்கு உரித்தாக்குவதன் முழுப்பொருளையும் நிலைநிறுத்துவதே அவன் நோக்கமாகும். (இதுகுறித்து பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணலாம்). அவனுக்கு வழங்கப்பட்ட இந்த பணிக்கேற்பவே புரிந்துகொள்ளும் திறனும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு அவனது பணிக்கு அவசியமற்ற பல விசயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் உண்மை நிலையை, தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அவனுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான சாத்தியத்தை புரிந்துகொள்ளும் ஆற்றல் அவனுக்கு வழங்கப்பட்டாலும், இறைவன் தான் விரும்பியதைச் செய்யும் வரம்பற்ற அதிகாரமுடையவன் என்பதை அறிந்துகொள்வதும் மனிதன் சுய அதிகாரமற்ற அவனது படைப்புதான் என்பதை அறிந்துகொள்வதும் அதற்குத் தடையாக அமைந்துவிடுகின்றன. ஆகவே என்றும் நிலைத்திருப்பவனும் எல்லாவற்றையும் சூழ்ந்தறிந்தவனுமாகிய அந்த இறைவனின் தனித்தன்மைகளை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.

திருக்குர்ஆன் மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத சில விசயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. அவற்றின் உண்மைநிலையை, அவை எப்படிப்பட்டவை என்பதை மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை; அவன் ஆற்ற வேண்டிய பணிக்கு அவசியமில்லாதவை. அதேபோன்று இவ்வகையான விசயங்களை நம்பிக்கையாளர்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பதையும் திருக்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

அவற்றுள் இறைவனைக்குறித்த உண்மை நிலையும் ஒன்றாகும். மனிதனால் அதனைப் புரிந்துகொள்ள முடியாது. வேறு எந்த ஒன்றைக் கொண்டும் அதனைக் கணிக்கவோ ஒப்பிடவோ முடியாது.

“பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனோ பார்வைகளை அடைந்துகொள்கிறான். அவன் நுட்பமானவனும் அனைத்தையும் அறிந்தவனுமாவான்.” (6:103)

“அவனைப்போன்று எதுவும் இல்லை…” (42:11)

“ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்…(16:74)

அவற்றுள் இறைவிருப்பமும் அது படைப்புகளோடு எந்த வகையில் தொடர்புகொண்டுள்ளது என்பதும் ஒன்றாகும்.

“என் இறைவா! எனக்கு எவ்வாறு மகன் பிறப்பான்? நானோ முதியவனாகி விட்டேன். என் மனைவியோ மலடியாக இருக்கிறாள்” என்று அவர் வினவினார். அதற்கு அவன், “இவ்வாறே தான் நாடியதை அல்லாஹ் செய்துவிடுகிறான்” என்று கூறினான்.” (3:40)

“மர்யம், “என் இறைவா! எந்த ஆணும் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அவன், “அப்படித்தான். அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால் ”ஆகு” என்றுதான் அதற்குக் கூறுவான். அது ஆகிவிடும்” என்று கூறினான்.” (3:47)

இவ்வாறு அதன் உண்மை நிலையைக்குறித்த விளக்கமின்றிதான் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அது மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அதன் உண்மை நிலையைக்குறித்து அறிய, தெளிவுபடுத்த விரும்புபவர்கள் தடுமாறித் திரிகிறார்கள். ஏனெனில் அதனை மனிதனின் செயலோடு ஒருபோதும் ஒப்பிட முடியாது.

அவற்றுள் ‘ரூஹ்’ குறித்த உண்மை நிலையும் ஒன்றாகும். ‘ரூஹ்’ என்பதை உயிர் அல்லது ஜீப்ரீல் அல்லது வஹி என எந்தப் பொருளில் எடுத்துக் கொண்டாலும் சரி.

“அவர்கள் ‘ரூஹை’க்குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக, “ரூஹ் என் இறைவனின் கட்டளைப்படி இருக்கின்றது. அதுகுறித்து சிறிதளவு அறிவுதான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.” (17:85)

அவற்றுள் மனித அறிவுக்கு எட்டாத மறைவான விசயங்களும் ஒன்றாகும். அல்லாஹ் அனுமதித்த அளவைத்தவிர வேறு எதனையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.

“அவனே மறைவானவற்றை அறிந்தவன். தான் மறைவாக வைத்திருப்பவற்றை யாருக்கும் அவன் வெளிப்படுத்துவதில்லை. ஆயினும் அவன் நாடிய தூதரைத்தவிர… (72:26,27)

“தூதரே! நீர் கூறுவீராக: “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாகவோ மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ உங்களிடம் நான் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் கூறவில்லை. எனக்கு இறைவனிடமிருந்து வஹியாக அறிவிக்கப்படுவதையே நான் பின்பற்றுகிறேன்.” (6:50)

அவற்றுள் மறுமைகுறித்த விசயமும் ஒன்றாகும்.

“மறுமை பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். கருவறையில் உள்ளதையும் அவன் அறிகிறான். தான் நாளை என்ன சம்பாதிப்பார் என்பதை எவரும் அறிய மாட்டார். தான் எந்த பூமியில் மரணிப்பார் என்பதையும் எவரும் அறிய மாட்டார். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமானவனாகவும் இருக்கின்றான்.” (31:34)

“அவர்கள் மறுமைநாளைக்குறித்து ‘அது எப்போது நிகழும்’ என்று உம்மிடம் கேட்கிறார்கள். அதனைக்குறிப்பிட்டு நீர் என்ன செய்வீர்? அதனைப்பற்றிய முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதனை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்… (79:42-46)

மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் போன்ற விசயங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை அல்லாஹ்வே தெளிவுபடுத்துகிறான்.

“அவனே உமக்கு வேதத்தை அருளினான். அதில் சில வசனங்கள் தெளிவான பொருள்தரக்கூடியவையாக இருக்கின்றன. அவையே வேதத்தின் அடிப்படையாகும். வேறு சில வசனங்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன. உள்ளங்களில் கோளாறு உள்ளவர்கள் குழப்பத்தை நாடியும் அதனுடைய விளக்கத்தைத் தேடியும் தெளிவாக புரிந்துகொள்ள முடியாதவற்றுக்குப் பின்னால் அலைகிறார்கள். ஆயினும் அவற்றின் விளக்கத்தை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறிய மாட்டார். இதற்கு மாறாக அறிவுமுதிர்ச்சி பெற்றவர்கள், “நாங்கள் இதன்மீது நம்பிக்கைகொண்டோம். இவையனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான்” என்று கூறுவார்கள். எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் உள்ளங்களைத் தடுமாறச் செய்துவிடாதே. எங்களுக்கு உன்னிடமிருந்து கருணையை வழங்குவாயாக. நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய்.” (3:7,8)

மனித அறிவால் அல்லது மனித உணர்வாற்றலால் புரிந்துகொள்ள முடியாத இந்த விசயங்களைத்தவிர மற்றவற்றைக்குறித்து இந்தக் கண்ணோட்டத்திற்கேற்ப அக உலகிலும் புற உலகிலும் சிந்தனை செலுத்தும்படியும் கவனம் செலுத்தும்படியும் அவன்  அழைப்பு விடுக்கப்படுகிறான். மனித உணர்வாற்றலைப் பொருட்படுத்தி, அதனை விழிப்படையச் செய்து, அதன் சிந்தனை செய்யும் வழிமுறையைச் சீர்படுத்தி, செயல்பாட்டின்பால் உந்தித் தள்ளி, மூட நம்பிக்கைகள், யூகங்கள் மற்றும் சோதிடர்களின் பிடியிலிருந்து மனிதனை விடுவித்ததோடு மட்டுமல்லாமல் அவனது ஆற்றல் தேவையற்ற விசயங்களில் வீணாவதைவிட்டும் பாதுகாத்த ஒரு மார்க்கம் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே.

மனிதர்களிலும் பிரபஞ்சத்திலும் காணப்படும் இறைநியதிகளின் பக்கம், இந்தப் பிரபஞ்சம் மற்றும் மனித இயல்பின் பக்கம், அதில் பொதிந்துள்ள ஆற்றல்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான அதன் தனித்தன்மைகளின் பக்கம், வரலாற்றில் பதிவாகியுள்ள மனித வாழ்வில் காணப்படும் இறைநியதிகளின் பக்கம் இஸ்லாத்தைத்தவிர வேறு எந்த மார்க்கமும் மனிதனின் கவனத்தைத் திருப்பவில்லை. இவற்றிலெல்லாம் இஸ்லாம் எடுத்துரைத்த அளவு வேறு எந்த மார்க்கமும் எடுத்துரைக்கவில்லை.

மனிதனின் சிந்திக்கும், முடிவெடுக்கும் வழிமுறையை இஸ்லாம் எவ்வாறு சீர்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்:

“உனக்கு அறிவில்லாத விஷயங்களைப் பின்பற்றாதே. நிச்சயமாக செவிப்புலன், பார்வை, உள்ளம் ஆகிய ஒவ்வொன்றுக்காகவும் மனிதன் விசாரிக்கப்படுவான்.” (17:36)

“நம்பிக்கையாளர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சில சந்தேகங்கள் பாவமாகும்.” (49:12)

“அவர்களில் பெரும்பாலோர் யூகத்தைத்தான் பின்பற்றுகிறார்கள். சத்திய விவகாரங்களில் யூகம் எப்பயனையும் அளிக்காது.” (10:36)

“இதுகுறித்து அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் பொய்யுரைக்கிறார்கள்.” (43:20)

மனிதர்களிலும் பிரபஞ்சத்திலும் காணப்படும் இறைவனின் சான்றுகளின்பால் கவனம் செலுத்தும்படி மனிதனைத் தூண்டுவதைப் பாருங்கள்:

“தூதரே! நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைக் கவனித்துப் பாருங்கள்….” (10:103)

“உறுதியான நம்பிக்கை கொண்டோருக்குப் பூமியில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் கவனிக்க மாட்டீர்களா?” (51:20,21)

“இதுதான் சத்தியம் என்பது அவர்களுக்குத் தெளிவாகும்பொருட்டு பிரபஞ்சத்தின் பல பாகங்களிலும் அவர்களுக்குள்ளேயும் விரைவில் நாம் நம் சான்றுகளைக் காட்டுவோம்….” (41:53)

முன்னர் வாழ்ந்த மக்கள் அடைந்த விளைவுகளை எடுத்துரைத்து மனித வாழ்வில் செயல்படும் இறைநியதிகளின்பால் கவனத்தைத் திருப்புவதைப் பாருங்கள்:

“தூதரே! நீர் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து, அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தொடங்கினான் என்பதையும் பின்னர் அவன் மனிதர்கள் மரணித்தபிறகு விசாரணைக்காக எவ்வாறு அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.” (29:20)

“அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அந்த சமூகங்கள் இவர்களைவிட பலம்பெற்றவையாக இருந்தன. அவர்கள் விவசாயத்திற்காகவும் கட்டடம் கட்டுவதற்காகவும் பூமியைப் பண்படுத்தி அதனை இவர்களைவிட அதிகம் செழிப்பாக்கினார்கள். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளோடு வந்தார்கள். ஆயினும் அவர்கள் நிராகரித்தார்கள். அல்லாஹ் அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள். பின்னர் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி தீய செயல்கள் புரிந்தவர்களின் முடிவு தீயதாகவே அமைந்தது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை பொய் எனக்கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.” (30:9,10)

“நாம் இஸ்லாத்தை பரவச் செய்து, முஸ்லிம்களுக்கு வெற்றியளித்து நிராகரிப்பாளர்களின் நாட்டை அதன் ஓரங்களிலிருந்து குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் அடியார்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். எவராலும் அவனுடைய தீர்ப்பை நீக்கவோ மாற்றவோ முடியாது. அவன் விசாரணை செய்வதில் விரைவானவன்.” (13:41)

இதுபோன்ற உதாரணங்கள் திருக்குர்ஆனில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றிலிருந்துதான் மனித உணர்வாற்றலைச் சீர்படுத்தி அதனை சரியானவற்றின்பால் முன்னோக்க வைக்கும் முழுமையான வழிமுறை பெறப்படுகிறது. பின்வரும் அத்தியாயங்களில் இதற்கான ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.

Related posts

Leave a Comment