தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம்.. அதில் ஏழாவது பகுதி கீழே.]

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்

“அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வைவிட அழகிய மார்க்கம் உடையவர் யார்?”

மற்ற எல்லா கண்ணோட்டங்களைவிடவும் இஸ்லாமியக் கண்ணோட்டத்திற்கென்று தனித்தன்மைகள் இருக்கின்றன. அவையே அதற்கு தனித்துவமிக்க ஒரு வடிவத்தை அளிக்கின்றன. அது வேறு எந்த கண்ணோட்டத்துடனும் ஒன்றுகலக்காது. வேறு எதனிடமிருந்தும் தனக்கானதைப் பெற்றுக்கொள்ளாது.

இந்த தனித்தன்மைகள் வெவ்வேறானவை. ஆயினும் அவையனைத்தும் ஒரேயொரு தனித்தன்மையில் ஒன்றிணைகின்றன. அதிலிருந்தே மற்ற தனித்தன்மைகள் அனைத்தும் உருவாகி வருகின்றன. அது ‘இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம்’ என்பதாகும்.

அது தனது தனித்தன்மைகள் மற்றும் அடிப்படைகளுடன் இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டமாகும். அதன் தனித்தன்மைகள் மற்றும் அடிப்படைகளுடன் மனிதன் அதனை முழுமையான வடிவில் பெற்றான். அது, தன் புறத்திலிருந்து அவன் எதையேனும் சேர்க்க வேண்டும் என்பதற்காகவோ நீக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக அதனடிப்படையில் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு அது முழுமையான வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

அது தன்னளவில் வளர்ச்சியோ மாற்றமோ அடையாது. மாறாக மனித சமூகமே அதன் அரவணைப்பில் வளர்ச்சியடையும். அதனடிப்படையில் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு முன்னேற்றமடையும். ஏனெனில் இந்தக் கண்ணோட்டத்தை உருவாக்கியவன்தான் மனிதனையும் உருவாக்கியவன். அவனே மனிதனைப் படைத்துப் பரிபாலிப்பவன். தான் படைத்த மனிதனின் இயல்பையும் கால ஓட்டத்தில் வளர்ச்சியடையும் அவனது வாழ்க்கையின் தேவைகளையும் அவன் அறிகிறான். அவனே இந்தக் கண்ணோட்டத்தில், வளர்ச்சியடையும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவற்றையும் வைத்துள்ளான்.

இறைவழிகாட்டுதலின்றி மனிதர்களால் உருவாக்கப்பட்ட கண்ணோட்டங்கள், சட்டங்கள், வழிமுறைகள் ஆகியன அடிப்படையிலேயே வளர்ச்சியையும் மாற்றத்தையும் வேண்டிநிற்கின்றன. சில சமயங்களில் அதன் வளர்ச்சியடையும் தேவைகளுக்கேற்ப ஒட்டுமொத்த முழுமையான மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. ஏனெனில் இந்தக் கண்ணோட்டங்கள், வழிமுறைகள், அமைப்புகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அவர்களால் தாங்கள் வாழும் சூழல்கள், காலங்கள், தேவைகள் ஆகியவற்றுக்கேற்பவே சிந்திக்க முடியுமே தவிர அவற்றைத் தாண்டி சிந்திக்க முடியாது. அத்தோடு அவர்களின் பலவீனம், அறியாமை, இச்சைகள் மற்றும் அவர்கள் அடையும் பாதிப்புகள் ஆகியவையும் சேர்ந்துகொள்கின்றன.

ஆனால் இஸ்லாமியக் கண்ணோட்டம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கண்ணோட்டங்களைவிட அடிப்படையிலேயே வேறுபடுகிறது. அது இறைவனால் உருவாக்கப்பட்டது. ஆகவே அது தன்னளவில் வளர்ச்சியையோ மாற்றத்தையோ வேண்டி நிற்காது. அதனை உருவாக்கியவன் காலங்கள் மற்றும் இடங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன். அறியாமை, பலவீனம், இச்சைகள் ஆகிய குறைபாடுகள் இல்லாதவன். அவன் எல்லா இடத்திற்கும் காலகட்டத்திற்கும் உகந்த ஒரு கண்ணோட்டத்தை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்காக உருவாக்கியுள்ளான். அது என்றும் நிலையானது. மனித சமூகம் அதன் அரவணைப்பில் வளர்ச்சியடையும், முன்னேற்றமடையும்.

இயக்கம் இந்தப் பிரபஞ்சத்தின் விதிகளுள் ஒன்றாகும். அதேபோன்று அது மனித வாழ்க்கையின் விதிகளுள் ஒன்றாகும். அது எந்தவித கட்டுப்பாடுகளோ ஒழுங்குகளோ அற்ற இயக்கம் அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் என அனைத்தும் ஓர் ஒழுங்கின்படியே இயங்குகின்றன. அவை தமக்கான வரையறைகளை, எல்லைகளை தாண்டிச் செல்வதில்லை. இவ்வாறே மனித வாழ்வும் நிலையான ஓர் ஒழுங்கின்படியே இயங்க முடியும். இல்லையெனில் அது அழிவையும் நாசத்தையுமே சந்திக்கும், தம் வட்டப்பாதையிலிருந்து விலகிச் செல்லும் நட்சத்திரங்களைப்போல. இறைவனிடமிருந்து வந்த இந்தக் கண்ணோட்டம் நிலையானது. மனித வாழ்வு இதனைச் சுற்றியே இயங்குகிறது. இதன் அரவணைப்பில் மனித வாழ்வு வளர்ச்சியடைகிறது; முன்னேற்றமடைகிறது.

இது பரிபூரணமானது; கூடுதல் குறைவை ஏற்றுக்கொள்ளாது. இது இறைவனால் உருவாக்கப்பட்டது. அவனைத்தவிர மற்றவர்களால் உருவாக்கப்பட்டவற்றுடன் ஒன்றிணையாது. மனிதனால் அதில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ளவோ அதற்கு இணையாக எதையேனும் கொண்டுவரவோ முடியாது. அது மனித சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் வந்துள்ளது. மனிதனின் உள்ளத்தோடு, அறிவோடு, அவனது வாழ்வோடு, நிகழ்காலத்தோடு இணைந்து கொள்வதற்காக வந்துள்ளது. மனிதனின் சக்திகள் அனைத்தையும் தட்டி எழுப்புவதற்காக, அவற்றை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதற்காக வந்துள்ளது. அதன் வரையறையில், வழிகாட்டலில் அவை நல்ல பலன்களைத் தருகின்றன; அவை தேவையற்ற விசயங்களில் வீணடிக்கப்படுவதைவிட்டும் அவற்றின் இயல்புகளிலிருந்து தடம்புரள்வதைவிட்டும் பாதுகாக்கப்படுகின்றன.

அது தனக்கு வெளியிலிருந்தோ வேறொரு கொள்கையிடமிருந்தோ எதையும் இரவலாகப் பெறாத அளவுக்குத் தேவையற்றது. மாறாக அது தன் கொள்கைள், சிந்தனைகள், வழிமுறைகள் ஆகியவற்றோடு மனித வாழ்வில் தனித்து நிற்கக்கூடியது. மனித வாழ்வையும் பிரபஞ்ச வாழ்வையும் ஒன்றிணைக்கக்கூடியது; இரண்டிற்குமிடையே ஒத்திசைவை ஏற்படுத்தக்கூடியது.

அது அனைத்தையும் உள்ளடக்கிய சமநிலையான கண்ணோட்டம். அது முதலில் மனிதனின் எல்லாப் பகுதிகளையும் கவனத்தில் கொள்கிறது. பின்னர் அவற்றுக்கிடையே சமநிலையையும் ஒத்திசைவையும் ஏற்படுத்துகிறது. அது மனித சமூகத்தின் எல்லா காலகட்டங்களையும் கவனத்தில்கொண்டு அவையனைத்திற்குமிடையே சமநிலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதனை உருவாக்கியவன்தான் மனிதனையும் உருவாக்கியவன். தான் உருவாக்கியதைப்பற்றி அவன் நன்கறிவான். இந்த மனித சமூகத்தைக்குறித்து, இதனைச் சூழவுள்ள சூழல்களைக்குறித்து அவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அப்படிப்பட்டவன்தான் அதன் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய, அதன் எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய, சமநிலையான சரியானதொரு கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்காக உருவாக்கித் தந்துள்ளான்.

அது ஒன்றே எல்லா காலகட்டத்திற்கும் இடத்திற்கும் மனிதனுக்கான அளவுகோல். அவன் தன் கண்ணோட்டங்கள், வழிமுறைகள், அமைப்புகள், கலாச்சாரங்கள், ஒழுக்கங்கள், செயல்கள் ஆகியவற்றை அதனைக்கொண்டே அளவிட வேண்டும். அதன்மூலம் அவன் சத்தியத்திலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறான்? இறைவனைவிட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கிறான்? என்பதை அறிந்துகொள்ளலாம். அதைத்தவிர வேறு எதையும் அவன் அளவுகோலாக, உரைகல்லாக ஆக்கிவிடக்கூடாது. அவன் தன் மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்மூலம் அவன் தன் அறிவையும் உள்ளத்தையும் உணர்வுகளையும் ஒழுங்குகளையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். தன் எல்லா விவகாரங்களிலும் அதன் பக்கமே அவன் திரும்ப வேண்டும்.

“உங்களிடையே ஏதாவதொரு விசயத்தில் பிணக்கு ஏற்பட்டால் அதனை அல்லாஹ்விடமும் தூதரிடமும் கொண்டுசெல்லுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் இதுவே சரியானதும் சிறந்த முடிவுமாகும்.” (4:59)

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படையான இந்த தனித்தன்மையிலும் இதிலிருந்து வெளிப்படும் மற்ற எல்லா தனித்தன்மைகளிலும் இதன் தனித்துவமும் இயல்பும் தெளிவாகப் புலப்படுகிறது. தனித்துவமிக்க இந்த கண்ணோட்டத்தோடு வேறு வழிமுறைகளை, அளவுகோல்களை இரவலாகப் பெற்று இணைக்க முனைவது அடிப்படையான தவறுகளில் ஒன்று என்பதும் தெளிவாகிறது.

இந்த நூலின் அடுத்துவரும் பக்கங்களில் இதனைக்குறித்து தெளிவாகக் காணலாம். எல்லா இஸ்லாமிய ஆய்வுகளிலும் வழிமுறைகளிலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இந்த அடிப்படையான விசயத்தை நிறுவுவதோடு தற்போது நிறுத்திக்கொள்வோம். இதுதான் நாம் வேறுபடும் பாதை.

இந்த அடிப்படையான தனித்தன்மைகுறித்தும் இதிலிருந்து வெளிப்படும் மற்ற தனித்தன்மைகள்குறித்தும் கொஞ்சம் விரிவாகக் காணலாம்.

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம்

தூதரே! நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டியுள்ளான்.”

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் முதல் தனித்தன்மை, அது இறைவனிடமிருந்து வந்தது என்பதுதான். இதுதான் அதன் தனித்தன்மைகளின் மூலாதாரம். அது இறைவனிடமிருந்து வஹியாக (வேதவெளிப்பாடாக) அறிவிக்கப்பட்ட கண்ணோட்டமாகும். இதுதான் அதனை இறைவன், பிரபஞ்சம் மற்றும் மனிதன் குறித்து மனிதச் சிந்தனைகள் உருவாக்கிய மெய்யியல் கண்ணோட்டங்களிலிருந்தும் மனித யூகங்கள் மற்றும் உணர்வுகளால் உருவாக்கப்பட்ட சிலைவழிபாட்டுக் கண்ணோட்டங்களிலிருந்தும் வேறுபடுத்தக்கூடியது.

இஸ்லாமியக் கண்ணோட்டம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்த இயல்பான நிலையில் நிலைத்திருக்கும் ஒரே கண்ணோட்டம் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். இதற்கு முன்னர் இறைவனிடமிருந்து வந்த மார்க்கங்களெல்லாம் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டுவிட்டன. நாம் முந்தைய பக்கங்களில் கூறியவாறு அவற்றின் வேதங்களில் விளக்கங்கள், கண்ணோட்டங்கள் மற்றும் மனிதன் கண்டுபிடித்த விசயங்கள் புகுத்தப்பட்டன. அவற்றின் இயல்புகள் அடியோடு சிதைக்கப்பட்டன. இஸ்லாம் மட்டுமே அதன் இயல்பு நிலையில் இன்றளவும் நீடித்திருக்கிறது. அதன் தூய ஊற்றில் அழுக்குகள் படியவில்லை. சத்தியம் அசத்தியத்தோடு ஒன்றுகலக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்,

“நிச்சயமாக நாமே இந்தக் குர்ஆனை அருளினோம். நாமே இதனைப் பாதுகாப்போம்.” (15:9)

ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உண்மையே இந்தக் கண்ணோட்டத்தை தனித்துவமிக்கதாக ஆக்குகிறது.

மெய்யியல் கண்ணோட்டத்தையும் மார்க்க கண்ணோட்டத்தையும் வேறுபடுத்தும் அடிப்படைக் காரணி, மெய்யியல் கண்ணோட்டங்கள் மனிதச் சிந்தனையின் வெளிப்பாடுகளே. அவை பிரபஞ்சத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்க மனிதன் மேற்கொண்ட முயற்சியின் விளைவுகள். அவை அவனைச் செயல்படத் தூண்டாத உறைந்த அறிவாகவே எஞ்சிவிடுகிறது. ஆனால் மார்க்க கண்ணோட்டம் என்பது மனதிலிருந்து வெளிப்பட்டு உணர்வுகளோடு ஒன்றி வாழ்வோடு கலந்துவிடும் ஒன்றாகும். அது மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமிடையே, மனிதனுக்கும் பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்குமிடையே உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்துகிறது.

இது பொதுவான மார்க்க கண்ணோட்டம் ஏற்படுத்தும் விளைவு. அதிலும் குறிப்பாக இறைவனிடமிருந்து மனிதனுக்குக் கிடைத்த இஸ்லாமியக் கண்ணோட்டம் தனித்துவமிக்கதாக விளங்குகிறது. சிலைவழிபாட்டுக் கோட்பாடு அல்லது மெய்யியல் கோட்பாட்டைப் போன்று அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. அது அவனைப் படைத்த இறைவனால் அவனது ஒட்டுமொத்த பகுதிகளையும் விளித்து உரையாடுவதற்காக வழங்கப்பட்ட கண்ணோட்டமாகும். அதனைப் பெற்று அதனடிப்படையில் தன்னைக் கட்டமைத்துக்கொள்வதே அவன் செய்ய வேண்டிய பணியாகும்.

இந்தக் கண்ணோட்டத்தை நம்மிடம் கொண்டுவந்த இறைவேதமான திருக்குர்ஆன் மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையாகும். இதனைக் கொண்டு அனுப்பப்பட்ட தூதருக்கோ மற்ற தூதர்களுக்கோ இதனுடைய உருவாக்கத்தில் எந்தப் பங்குமில்லை. இதனைக் கொண்டு நேர்வழி பெறவும் நேர்வழிகாட்டவும் அவர் இறைவனிடமிருந்து இதனைப் பெற்றார். இந்த வழிகாட்டலும் இறைவனின் அருட்கொடையேயாகும். அது உள்ளங்களை விசாலமடையச் செய்கிறது. தூதரின் பணி, இந்தக் கண்ணோட்டத்தை உள்ளவாறே – கூடுதல் குறைவின்றி, மனிதச் சிந்தனையை கலக்காமல் – எடுத்துரைத்துவிடுவதுதான். அதன்மூலம் உள்ளங்களுக்கு வழிகாட்டுவது, அதற்காக நெஞ்சங்களை விசாலமடையச் செய்வது தூதரின் கட்டுப்பாட்டில் உள்ள விசயம் அல்ல. அதற்கான அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.

“தூதரே! இவ்வாறே நம் கட்டளையின் வாயிலாக குர்ஆனை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, நம்பிக்கை என்றால் என்ன என்பதை நீர் அறியாதிருந்தீர். ஆயினும் அதனை நாம் ஒளியாக்கி நம் அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் நேரான வழியைக் காட்டுகிறீர். அது அல்லாஹ்வின் வழியாகும். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. அறிந்துகொள்ளுங்கள், அவனிடமே அனைத்து விவகாரங்களும் திரும்புகின்றன.” (42:52,53)

“மறைகின்ற நட்சத்திரத்தின்மீது சத்தியமாக, உங்கள் தோழர் வழிகெடவுமில்லை, தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் மன இச்சைப்படி பேசுவதுமில்லை…(53:1-4)

“தூதர் ஏதேனும் விசயத்தை நம்மீது புனைந்து கூறியிருந்தால் நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம், பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் இதிலிருந்து நம்மைத் தடுக்க முடியாது.” (69:44-47)

“நீர் விரும்புவோருக்கு நேர்வழி அளித்திட உம்மால் முடியாது. ஆயினும் தான் நாடியோருக்கு அல்லாஹ் நேரான வழியை அளிக்கிறான். நேர்வழி பெறக்கூடியவர்களை அவன் நன்கறிந்தவன்.” (28:56)

“தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துரைத்து விடுவீராக. அவ்வாறு நீர் செய்யாவிடில் அவனது தூதை நிறைவேற்றியவராக நீர் ஆக மாட்டீர்.” (5:67)

“யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவரது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்குகிறான். யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடுகிறானோ அவரது இதயத்தை வானத்தில் ஏறுபவரைப்போன்று இறுக்கமாக ஆக்கிவிடுகிறான்…” (6:125)

இந்தக் கண்ணோட்டத்தின் உறுதியான இந்த மூலமே இதற்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. அதுவே இந்தக் கண்ணோட்டம் குறைபாடுகள், அறியாமை, இச்சைகள் ஆகியவற்றைவிட்டும் தூய்மையானது என்பதற்கான உறுதியான ஆதாரம் – மனிதனால் உருவாக்கப்பட்ட கண்ணோட்டங்கள், தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவை ஒருபோதும் இவ்வகையான குறைபாடுகளைவிட்டும் தூய்மையாக இருக்க முடியாது – மேலும் அதுவே இந்தக் கண்ணோட்டம் மனித இயல்புக்கு உகந்தது என்பதற்கும் மனிதனின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியது என்பதற்குமான ஆதாரம். ஆகவே மனித வாழ்க்கையைச் சீராக்கக்கூடிய, அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வழிமுறை இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வெளிப்பட முடியும். இதனடிப்படையில்தான் அது நிலைத்து நிற்க முடியும்.

Related posts

Leave a Comment