ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 1)
[ஹஜ் உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாடுகள் விசயத்தில் அவற்றின் வழிமுறைகளை விளக்கி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாமறிவோம். ஆனால் அவற்றின் நோக்கம், தத்துவம், உணர்வு என்று வரும்போது வெகு அரிதானவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. அந்த வகையில் அலீ ஷரீஅத்தி எழுதிய ஹஜ் எனும் ஆக்கம் அற்புதமானவொன்று. அதன் மொழிபெயர்ப்பை ‘மெய்ப்பொருள்’ தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் இரண்டாவது பதிவு கீழே. மொழிபெயர்ப்பு: பண்ணாமத்துக் கவிராயர்]
வெறுமை குடிகொண்ட வெற்றுத் தத்துவத்தை நிராகரித்தல்
இன்று வாழ்க்கை (அது இருக்க வேண்டியதைப் போலல்லாமல்) சோம்பல் மண்டிய, இலட்சியமற்ற வெறும் சக்கர சுழற்சியாக உள்ளது. பகலில் தொடங்கி இரவில் முடிவதாகவும், இரவு விடியலோடு மறைவதாகவும் அர்த்தமற்று ஊசல்போல் ஆடிக் கொண்டிருக்கிறது. அதேவேளை இந்த கறுப்பு வெள்ளை ‘எலிகள்’ நாம் மடியும் வரை நமது வாழ்வின் இழைகளை அறுத்துக் கொண்டிருப்பதை மனிதன் ஓயாமல் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
வாழ்க்கை (நாம் வாழுகின்ற வகையில்) ஒரு நாடக மேடையாகும். குறிக்கோளற்ற இவ்விரவு பகல்களை மனிதன் பார்த்துக் கொண்டிருக்கிறான். உண்மையில் எவ்வளவு முட்டாள்தனமான நாடகம் இது! தேவையேற்படும்போது தேவைகளை எதிர்கொள்ள வேண்டுமென எதிர்பார்த்துப் போராடுகின்றாய். எனினும் அதனை அடைந்துகொண்டதும் உனது கடந்தகால முயற்சிகளை வேடிக்கையோடு நோக்குகின்றாய். என்ன அர்த்தமற்ற வாழ்க்கைத் தத்துவம்?!
அன்றாட ஜீவிதத்தில் மனிதன் திசையற்றவனாகின்றான். வாழ்வது மட்டுமே அவனது குறிக்கோள். வாழும் உடம்பில் ஆன்மா செத்துக் கிடக்கின்றது. எனினும் ஹஜ்ஜின் அனுபவம் ஆரோக்கியமற்ற இந்நிலையை முற்றிலும் மாற்றிவிடுகின்றது.
ஹஜ் செய்யத் தீர்மானித்து அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது ஹஜ்ஜை மேற்கொள்ளும் நீ உனது வீட்டில் அமைதியாக சயனித்திருக்கின்றாய். ஹஜ்ஜின் எண்ணம் மனதை ஆட்கொண்டதும் நீ விழித்தெழுந்து உனது அன்றாடச் சூழலிலிருந்து அகல்கின்றாய்.
நெறிகுறியற்ற போக்கின் எதிர்மறையே ஹஜ். அது தீய சக்திகளின் வழிகாட்டலினால் சபிக்கப்பட்ட விதிக்கு எதிராகக் கிளர்ச்சி கொண்டெழுவதாகும். ஹஜ்ஜை நிறைவேற்றுதல் புதிர்களின் சிக்கலான வலையிலிருந்து நீ தப்புவதற்கு துணைபுரியும். புரட்சிகரமான இச்செயல் நித்தியத்துவம் நோக்கி, எல்லாம் வல்ல அல்லாஹ்வை நோக்கி நீ இடம்பெயர்வதற்கான சுதந்திரமான பாதையை உனக்கு வெளிப்படுத்தும்.
வீட்டை விட்டு வெளிப்படு. ‘அல்லாஹ்வின் இல்லத்தை’ (பைத்துல்லாஹ்) அல்லது ‘மக்களின் இல்லத்தை’ (பைத்துந்நாஸ்) போய் தரிசி. நீ யாராக இருப்பினும் ஒரு மனிதன்; ஆதத்தின் மகன். பூமியில் அல்லாஹ்வின் நண்பன். அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் உறவினன். அவனுடைய நம்பிக்கைப் பொறுப்பாளன். இயற்கையின் மீது அவனால் விதிக்கப்பட்ட எஜமானன். அல்லாஹ்வின் மாணவன். அல்லாஹ் உனக்கு நாமங்களைக் கற்பித்தான். தனது ஆவியிலிருந்து அவன் உன்னைப் படைத்தான்.1 உனக்கு விசேஷப் பண்புகளை வழங்கினான். அவனால் பாராட்டப்பட்டவன் நீ; அவனது மலக்குகள் உன் முன் சிரம்சாய்த்தனர். இவ்வுலகும் அதில் காணப்படும் சகலமும் மனிதனுக்காக அளிக்கப்பட்டுள்ளன. இறைவன் உனது ‘இல்லத்துணையாகி’ எப்போதும் உன்உனோடிருந்து உனது செயல்கள் யாவற்றையும் கவனித்து வருகிறான். அவன் எதிர்பார்த்தபடி நீ வாழ்கின்றாயா?
அல்லாஹ் விசுவாசிகளின் இருதயங்களில் இருக்கின்றான். (நபிமொழி)
உண்மையாளர்கள் யார் என்பதையும், பொய்யர்கள் யார் என்பதையும் அல்லாஹ் நிச்சயமாக அறிவான். (திருக்குர்ஆன் 29:3)
அவனுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்பவரை அல்லாஹ் அறிவான். (திருக்குர்ஆன் 57:25)
பூமியிலுள்ளவற்றை நாம் அலங்காரமாக்கி வைத்திருப்பது எவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள் என்பதை நாம் சோதித்து அறிவதற்காகத்தான். (திருக்குர்ஆன் 18:7)
உங்களில் சிறந்தவர் யாரென உங்களை சோதிப்பதற்காக வாழ்வையும் மரணத்தையும் உண்டாக்கியவன் எவனோ அவனே வல்லமை மிக்கோன், மன்னிப்போன். (திருக்குர்ஆன் 67:2)
காலப்போக்கினாலும் மனித உரிமைகளையும் கடமைகளையும் புறக்கணிக்கும் சமூக அமைப்பின் பல்வேறு சக்திகளது செல்வாக்கினாலும் உனது சுபாவம் மாறியுள்ளது. வாழ்க்கையின் மாற்றங்களினால் பாதிக்கப்பட்டு மனமுறிவேற்பட்டு உனக்கே நீ அந்நியனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் மாறிவிட்டாய். அசலில் நீ பூமியில் அல்லாஹ்வின் நம்பிக்கைப் பொறுப்பாளனாகும் கடமையை தோளில் தாங்க வேண்டியவனாக இருந்தாய். இப்பணியை நிறைவேற்றுவதற்கான சாதனமாகவே காலம் உனக்குக் கருவியாக வழங்கப்பட்டது. ஆனால் இப்பரிசை கவனயீனமாகப் பயன்படுத்தியதால் நீ தோற்றாய்!
காலத்தின் மீது ஆணையாக! மனிதன் நஷ்டவாளியாகி விட்டான். (திருக்குர்ஆன் 103:2-3)
வாழ்க்கை என்பது இதுதான். ஆனால் யதார்த்தமாகச் சொல்வதாயின், உன் சாதனையென்ன? உன் ஆக்கபூர்வமான பங்களிப்புகள் யாவை? நீ அடைந்த இலாபமென்ன? விலைமதிக்க முடியாத வருடங்கள் பல வீணாகிவிட்டன. எனினும் நீ யார்?
பூமியில் அல்லாஹ்வின் நம்பிக்கைப் பொறுப்பாளனே, அல்லாஹ்வின் பிரதிநிதியே! பணம், காமம், பேராசை, ஆக்கிரமிப்பு, நேர்மையின்மை முதலியவற்றின் பால் நீ திரும்பிவிட்டாய். சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் தனது ஆவியை உன்னுள் ஊதுவதற்கு முன் நீயிருந்த தாழ்ந்த நிலைக்கு திரும்பிச் சென்றுவிட்டாய். அல்லாஹ்வின் ஆவி இப்போது எங்கே?
மனிதா, இச்சீரழிந்த நிலையிலிருந்து நீ எழுச்சி பெற்றெழு! மெல்ல மெல்ல நிகழும் இந்த மரணத்தை விட்டு உன்னை துண்டித்துக் கொள்!
உன் சுற்றுச்சூழலை விட்டு வெளியேறு. புனித பூமிக்குப் போ. அங்கு உளத்தூண்டுதல் தரும் மஸ்ஹர் வானத்தின் கீழ் அல்லாஹ்வை நீ எதிர்கொள்ளக் கூடும். நீ அனுபவித்துவந்த அந்நியத்தன்மை உன்னை விட்டு விலகும். இறுதியாக, உன்னை நீ அறிந்து கொள்வாய்!
அல்லாஹ்வை நோக்கிச் செல்லல்
பெரும் சங்கைக்குரிய துல்ஹஜ்1 மாதத்தின் போது ஹஜ் வருகின்றது.1 மக்கத்து திருபூமி அமைதியாக சாந்தமுற்று விளங்குகின்றது. அச்சம், வெறுப்பு, சண்டை இவற்றுக்குப் பதிலாக பாதுகாப்பு மிக்க சமாதான பூமியாகத் திகழ்கிறது அப்பாலைவனம். எல்லாம் வல்ல இறையை மக்கள் சுதந்திரமாக வணங்குவதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகின்றது அங்கே.
இப்றாஹீமின் அறைகூவல் உங்கள் செவிகளில் விழவில்லையா?
ஹஜ்ஜுக்காக மக்களை அழையும்! கால்நடையாகவோ அல்லது இளைத்த ஒட்டகத்திலோ அவர்கள் உம்மிடம் வருவார்கள். தொலைவிலிருந்தும் அவர்கள் உம்மிடம் வருவார்கள். (திருக்குர்ஆன் 22:27)
ஏ களிமண்ணே,2 அல்லாஹ்வின் ஆவியைத் தேடி அதனை பின்தொடர்ந்து செல். அவனது அழைப்பை ஏற்றுக்கொள். அவனை ‘காண்பதற்காக’ உனது வீட்டை விட்டுக் கிளம்பு. அவன் உனக்காக காத்திருக்கிறான்.
அல்லாஹ்வின் ஆவியை அணுகுவதை நோக்கமாகக் கொள்ளாவிடின் மனித வாழ்க்கை வீணாகிவிடும். அல்லாஹ்விடமிருந்து உன்னைத் தூரமாக்கும் தேவைகள், பேராசைகள் யாவற்றையும் உதறியெறி. எனவே, முடிவற்ற மானிட இடப்பெயர்வான ஹஜ்ஜில் சேர்ந்து கொள். சர்வ வல்லோனான அல்லாஹ்வை சென்று ‘காண்’.
ஹஜ் செய்ய புறப்படுமுன் உங்கள் கடன்களை எல்லாம் செலுத்திவிடல் வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் மீது உங்களுக்குள்ள வெறுப்பும் கோபங்களும் மறைந்துவிடல் வேண்டும். ஓர் உயில் எழுதப்படுதல் வேண்டும். இவை யாவும் (எல்லோருக்கும் ஒருநாள் சம்பவிக்கப் போகிற) மரணத்துக்கு ஆயத்தம் செய்யும் பயிற்சியாகும். இச்செயல்கள் யாவும் உங்களது சொந்தப் பொருளாதார நெருக்கடியின்மையை உத்தரவாதம் செய்கின்றன. இறுதி விடைபெறும் கடைசி நேரமும், மனிதனின் வருங்காலமும் இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது.
நித்தியத்துவத்தில் சேர இப்பொழுது நீ விடுதலை பெற்றுவிட்டாய். மறுமையில் ‘உன்னால் எதுவும் செய்ய முடியாத’ நிலையில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் ‘உனது கண்கள், காதுகள், இருதயம் நீ செய்தவைகளையிட்டு சாட்சி பகரும்’.
நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயல்களைப் பற்றி நியாயத் தீர்ப்பு நாளில்) விசாரிக்கப்படும். (திருக்குர்ஆன் 17:36)
நீங்களும் உங்களின் ஒவ்வொரு அவயமும் உங்கள் செயல்களுக்காக பொறுப்பாவீர்கள். நீங்கள் இந்த ‘திருந்தும் இல்லத்தில்’ இருக்கும்போது, ‘நீதியின் இல்லத்துக்கு’ ஆயத்தமாகுங்கள். மரணிப்பதற்கு முன் மரித்து விடுங்கள். ஹஜ்ஜுக்குச் செல்லுங்கள்.
இணையற்ற எல்லையற்ற பரிபூரணனான அல்லாஹ்விடம் நீ திரும்பிச் செல்வதையே ஹஜ் உருவகிக்கின்றது. அவனிடம் திரும்பிச் செல்வதானது பூரணத்துவம், நன்மை, அழகு, சக்தி, அறிவு, மதிப்பு, சத்தியம் இவற்றை நோக்கிச் செல்லும் திட்டவட்டமான இயக்கத்தை குறிக்கின்றது. நித்தியத்துவத்துக்கான உனது பாதையில் அல்லாஹ்வை அணுக உன்னால் ஒருபோதும் முடியாது. அவன் நேர்வழியை உனக்கு காட்டுவானேயொழிய உனது பயண முடிவாக அவன் ஆகமாட்டான்.
இஸ்லாம் சூஃபிசத்திலிருந்து வித்தியாசமானது. ஒரு சூஃபி ‘அல்லாஹ்வின் பெயரால்’ வாழ்ந்து ‘அல்லாஹ்வுக்காக’ மரணிக்கின்றான். ஆனால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை அடைய முயற்சிக்கிறான்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்) நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்குச் சொந்தமானவர்கள்; அவனிடமே நாம் திரும்பிச் செல்கிறோம். (திருக்குர்ஆன் 2:156)
எல்லா விவகாரங்களும் அல்லாஹ்வையே சார்கின்றன. (திருக்குர்ஆன் 42:53)
நமது இலட்சியம் ‘மறைதல்’ (ஃபனா) அல்ல, ‘மலர்தல்’. இவ்வாறு செய்வது ‘அல்லாஹ்வுக்காக’ அல்ல, ‘அல்லாஹ்வை நோக்கி’ ஆகும். அல்லாஹ் உன்னை விட வெகு தொலைவில் இல்லை. எனவே அவனையடைய முயற்சி செய்! அல்லாஹ் உன்னைவிட உனக்கு நெருக்கமானவனாக இருக்கின்றான்.
நாம் அவனது உயிர் நரம்பை விடவும் அவனுக்கு நெருக்கத்தில் இருக்கிறோம். (திருக்குர்ஆன் 50:16)
மறுபுறம், அல்லாஹ்வைத் தவிர மற்ற யாவுமே அடைய முடியாத தொலைவிலுள்ளன.
மனிதனே, வானவர்கள் (மலக்குகள்) அனைவரும் உனக்கு மண்டியிட்டனர். எனினும் காலப்போக்கில் சமூகச் செல்வாக்கின் காரணமாக, நீ பெரிதும் மாறிவிட்டாய். ‘எல்லாம் வல்ல அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்க மாட்டேன்’ என்ற உன் வாக்குறுதியை நீ காப்பாற்றவில்லை. அதற்கு மாற்றமாக, விக்கிரகங்களுக்கு நீ அடிமையாகி விட்டாய். இவ்விக்கிரகங்கள் மனிதன் சிருஷ்டித்தவை.
மற்றைய மனிதர்களுக்கு விசுவாசம், சுயநலம், கொடுமை, அறியாமை, இலட்சியமின்மை, அச்சம், பேராசை முதலிய குணங்களால் ஆன சுபாவமே உன் இயற்கையாகி விட்டது. இவ்வாழ்க்கை உனக்கு மிருகப் பண்புகளை வழங்கி விட்டது. இப்பொழுது நீயோர் ‘ஓநாய்’ போன்று, ‘நரி’ போன்று, ‘எலி’ போன்று, ‘செம்மறியாடு’ போன்று ஆகிவிட்டாய்!3
மனிதனே, உனது துவக்க நிலைக்குத் திரும்பிவிடு. ஹஜ்ஜுக்குப் போ. மிகச் சிறந்த படைப்பாக உன்னைப் படைத்த உனது மிகச் சிறந்த நண்பனை போய்ப் பார். அவன் உனக்காக காத்திருக்கிறான். அதிகார மாளிகைகளை, செல்வப் புதையல்களை, தவறான வழியில் இட்டுச் செல்லும் ஆலயங்களை விட்டு நீங்கு. ஓநாயை மேய்ப்பவனாகக் கொண்ட மந்தையிலிருந்து4 நீ விலகு. அல்லாஹ்வின் இல்லத்தை (பைத்துல்லாஹ்) அல்லது மக்களின் இல்லத்தை (பைத்துந்நாஸ்) தரிசிப்பதற்காகச் செல்லும் கூட்டத்துடன் ‘மீக்காத்தில்’ சேர்ந்து கொள்.
குறிப்புகள்
- துல்ஹஜ் – இஸ்லாமிய நாட்காட்டியில் ஆண்டின் கடைசி மாதம்
- மனிதன் சேறு அல்லது களிமண்ணிலிருந்தும், மனிதனது இருதயத்தில் தூண்டப்பட்ட அல்லாஹ்வின் ஆவியிலிருந்தும் சிருஷ்டிக்கப்பட்டான். அல்லாஹ்வின் அவையின்றி மனிதன் வெறும் களிமண்ணேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன்)
- குறியீட்டுச் சொற்கள்: ‘ஓநாய்’ காட்டுமிராண்டித் தனத்தையும் ஒடுக்குமுறையையும் குறிக்கின்றது. ‘நரி’ கபடத்தையும், ‘எலி’ கள்ளத்தனத்தையும், ‘செம்மறியாடு’ அடிமைத்தனத்தையும் குறிக்கின்றது.
- நூலாசிரியர் இங்கு இன்றைய சமூகங்களில் பெரும்பாலானவற்றை குறிப்பிடுகின்றார். ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையாளர்களாகவும் (ஓநாய்கள்), மக்களோ மிருகங்களை விடவும் கேவலமான முறையில் நடத்தப்படுபவர்களாகவும் உள்ளார்கள்.
மீக்காத்தில் பிரவேசித்து ஒன்றாதல்
காட்சி மீக்காத்தில்1 துவங்கிறது. இக்கட்டத்தில் நடிகன் (மனிதன்) உடைமாற்றிக் கொள்ள வேண்டும். ஏன்? ஒருவரின் உடை அவரையும் அவரது குணநலன்களையும் மறைத்து விடுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், மனிதன் உடையை அணிவதில்லை. உடை அவனை மறைக்கின்றது.
உடைகள் என்பவை மோஸ்தர், மனச்சாய்வு, அந்தஸ்து, வித்தியாசம் முதலிவைகளை குறிக்கின்றன. அவை புறக்கோலமான எல்லைகளை உருவாக்கி மனிதர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு இடையே காணப்படும் இந்த வேறுபாடு பேதம் பாராட்டுவதற்கு வழிவகுக்கின்றது. மேலும், ‘நாம்’ என்றல்லாமல் ‘நான்’ என்கிற முனைப்பு தலை தூக்குகின்றது. ‘எனது’ இனம், ‘எனது’ வர்க்கம், ‘எனது’ கோத்திரம், ‘எனது’ குழு, ‘எனது’ அந்தஸ்து, ‘எனது’ குடும்பம் என்ற அர்த்தத்திலேயே இந்த ‘நான்’ என்பது உபயோகிக்கப்படுகின்றது; ‘மனிதன்’ என்ற அர்த்தத்தில் அல்ல.
இவ்வாறு ஏராளமான ‘எல்லைகள்’ நமது வாழ்வில் உருவாக்கப்பட்டுள்ளன. காபிலின்2 வழித்தோன்றல்கள், கொலைஞர்கள், கொடியவர்கள் ஆதத்தின் குடும்பத்தை பிளவுறச்செய்து மனித இனத்தின் ஐக்கியத்தை கூறுபோட்டு விட்டார்கள். இதன் விளைவாக பின்வரும் ஏற்றத்தாழ்வுகள் தோன்றின.
ஆண்டான்-அடிமை, ஒடுக்குவோன்-ஒடுக்கப்படுவோன், காலனியவாதி-காலனியத்தால் நசுக்குண்டவன், சுரண்டுவோன்-சுரண்டப்படுவோன், வலியோன்-எளியோன், பணக்காரன்-ஏழை, போஷாக்குடையோன்-போஷாக்கற்றோன், கௌரவிக்கப்படுவோன்-இழிவுபடுத்தப்படுவோன், மகிழ்வோன்-துன்புறுவோன், கனவான்-பாமரன், நாகரிகன்-அநாகரிகன், கீழையோன்-மேலையோன், அறபி-அஜமி3 முதலியன.
மானிடப் பிறவி இனங்களாக, தேசங்களாக, வர்க்கங்களாக, துணை வர்க்கங்களாக, குழுக்களாக, குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் அவ்வவற்றுக்குரிய தனி அந்தஸ்தை, சிறப்புகளை, பெயர்களைக் கொண்டுள்ளது. எதற்காக? ‘தன்னை’ காட்டுவதற்காகத்தான். இவ்வளவு ‘ஒப்பனைகளும்’ அதற்காகத்தான்.
இனி, உடைகளைக் களைந்து விடு. அவற்றை மீக்காத்தில் விட்டுவிடு. வெறும் வெள்ளைத் துணியால் ஆன ‘கஃபன்’4 அணிந்து கொள். மற்றவர்களை போலவே நீயும் அணிந்திருப்பாய். ஒரே கோலம் தோன்றுவதைப் பார். சமுத்திரத்தில் சேரும் நீர்த்துளி போல் நீயும் ஆகி விடு.
அகம்பாவம் கொள்ளாதே. இங்கு நீயிருப்பது மற்றெவரையும் சந்திப்பதற்காக அல்ல.
எளிமையாய் இரு.
நீ அல்லாஹ்வை சந்திக்கப் போகிறாய்.
உன்னுடைய அழிந்துவிடக்கூடிய தன்மையைப் புரிந்தகொண்ட ஒருவனாக இரு.
அல்லது, அழிந்துவிடக்கூடிய ஒருவன் தன்னுடைய ‘இருப்பை’ உணர்வது போல இரு.
மீக்காத்தில் உனது இன-கோத்திர வித்தியாசமின்றி அன்றாட வாழ்வில் நீயணிந்த ஆடைகளைக் கழற்றியெறி.
ஒரு ஓநாயாக (கொடூரத்தின், ஒடுக்குமுறையின் சின்னமாக)…
ஒரு எலியாக (கள்ளத்தனத்தின் சின்னமாக)…
ஒரு நரியாக (வஞ்சகத்தின் சின்னமாக)…
ஒரு செம்மறியாடாக (அடிமைத்தனத்தின் சின்னமாக)…
நீ பூண்டிருந்த போர்வைகளைக் கழற்றியெறி.
இவை யாவற்றையும் நீக்கிவிட்டு ஒரு ‘மனிதனாக’, ஒரு ‘ஆதமாக’ நீ துவக்கத்தில் பூண்டிருந்த கோலத்தை; ‘மரணித்த’ ஒருவனாக இறுதியில் நீ பூணப்போகிற கோலத்தை பூண்டு கொள்!
இரு துண்டுத் துணிகளால் உன்னைப் போர்த்திக் கொள். ஒன்று உன் தோளை மறைக்கும். மற்றது உன் இடுப்பை சுற்றியிருக்கும். விசேஷ மோஸ்தரோ, விசேஷ துணிவகையோ உபயோகிக்கப்படுவதில்லை. சாதாரண வெள்ளைத் துணியால் ஆன உடை. எல்லோரும் இதே உடையையே (இஹ்றாம்) அணிந்திருப்பர். தோற்றத்தில் ஏற்றத்தாழ்வு தெரியாது.
உலகின் எல்லாப் பாகங்களிலும் இருந்து ஹஜ் யாத்திரை செல்லும் பயணக் கூட்டங்கள் மீக்காத்தில் ஒன்று கூடும். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அவை ஒன்று கூடும். அல்லாஹ்வை நோக்கி செல்லும் பாதையில், மனிதன் வெறுமனே ‘இருப்பதற்காக’ அல்ல; அவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி ‘மாறுவதற்காக’.
வானங்கள் பூமியின் ஆட்சியாளனான அல்லாஹ்வை நோக்கியே பயணம் (திருக்குர்ஆன் 24:42)
என்ன அற்புதம்! எல்லாமே நகர்கின்றது. பரிணாமம், மரணத்திலிருந்து ஜனனம், ஜனனத்திலிருந்து மரணம், முரண்பாடு, மாற்றம், திசைப்பாடு.
அவன் சொரூபத்தை தவிர எல்லாமே அழிந்துவிடும் (திருக்குர்ஆன் 55:27)
அல்லாஹ்வே தனித்தவன், பரிபூரணன், நித்தியன்.
வானங்களிலும் பூமியிலுமுள்ள ஒவ்வொரு படைப்பினமும் அவனிடமே (தம் தேவைகளை) கேட்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் (புதுப்புது) பொலிவுடன் (ஒளிர்கிறான்). (திருக்குர்ஆன் 55:29)
ஹஜ் ஒரு இயக்கமாகும். மனிதன் அல்லாஹ்வை நோக்கித் திரும்புவதற்கு தீர்மானிக்கிறான். அவனது அகந்தை, சுயநலப் போக்குகள் யாவும் மீக்காத்தில் புதைக்கப்பட்டு விடுகின்றன. மனிதன் தனது மரணத்தை காண்கிறான். தனது சவக்குழியை தரிசிக்கிறான். மனித வாழ்வின் இறுதி இலக்கு அவனுக்கு ஞாபகமூட்டப்படுகின்றது. அவன் மீக்காத்தில் மரணத்தை அனுபவித்து உயிர்த்தெழுகிறான். அதன் பின்னர் மீக்காத்துக்கும் மீஆதுக்கும் இடையே பாலைவனத்தில் அவன் தன் பணியைத் தொடர வேண்டும்.
இக்காட்சி இறுதித் தீர்ப்பு நாளைப் போன்றதாகும். ஒரு தொடுவான விளிம்பிலிருந்து மறுஎல்லை வரை ‘வெண்ணிற வெள்ளம்’ பாய்கிறது. சகல மக்களும் கஃபன் அணிந்திருக்கின்றனர். எவரையும் இனம்கண்டுகொள்ள முடியாது. உடல்கள் மீக்காத்தில் விடப்பட்டு விட்டன. இங்கு ஆன்மாக்கள் இயக்கப்படுகின்றன. பெயர்கள், இனங்கள், சமூக அந்தஸ்துகள் எதுவும் இப்பிரம்மாண்ட கூட்டுக் கலவையில் இனங்காட்டுவதில்லை. உண்மையான ஐக்கியத்தின் சூழல் ஆட்சி செலுத்துகிறது. அல்லாஹ்வுடைய ஐக்கியத்தின் மானிடக் காட்சி இது.
அச்சம், ஆனந்தம், பரபரப்பு, வசீகரம், மலைப்பு, பரவசம் யாவும் தோன்றுகின்றன. அல்லாஹ் அதன் மையத்தில் (கிப்லா)5 இருக்கிறான். மனிதன் மட்டுமே தன்னை காட்டிக் கொள்கிறான். அவன் ஒரு திசையில் அல்லாஹ்வை நோக்கியிருக்கிறான். இப்பாலைவனத்தில் சமூகங்கள், குழுக்கள் யாவும் ஒரே கூட்டாக சங்கமிக்கின்றன. ஒரே கஅபாவையே அவை நோக்குகின்றன.
‘உன்னை’ ஒரு தனி மனிதனாகக் காட்டும் உடைகள், அடையாளங்கள் யாவற்றையும் அகற்றிய பின் நீ கூட்டத்தின் இதய பீடத்தில் நுழையலாம். இஹ்றாம்6 கோலத்தில் உனது வாழ்வை பற்றி ஞாபகமூட்டுபவைகளை நீ மறந்து விடு.
ஒவ்வொருவரும் ‘உருகிக் கரைந்து’ ‘மனித இனமாக’ வடிவெடுக்கின்றனர். அகந்தைகள், தன்னிச்சை போக்குகள் புதைக்கப்பட்டு விடுகின்றன. கூட்டம் ஒரு ‘மக்களாக’, ‘உம்மாவாக’7 மாறுகின்றது. சகல ‘நான்’களும் மீக்காத்தில் மரணித்து விட்டன. ‘நாம்’ பரிணமிக்கின்றது.
மினாவை விட்டு கிளம்பும்போது நீ உம்மத்தோடு ஒன்றிணைந்துவிட வேண்டும். இப்றாஹீம் செய்தது இப்படித்தான். இப்றாஹீமைப் போல் நீயும் நடிக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றாய்.
நிச்சயமாக இப்றாஹீம் ஓர் உம்மத்தாக இருந்தார். அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த ஒருவராக இருந்தார். அவர் சிலை வணக்கக்காரர்களை சேர்ந்தவராக இருக்கவில்லை. (திருக்குர்ஆன் 16:120)
இறுதியில், ஒருவரே யாவரும்; யாவரும் ஒருவரே! யாவரும் சரிநிகர் சமானம். பலதெய்வக் கொள்கை கொண்ட சமுதாயம் ஏகதெய்வ அல்லது தௌஹீத் என்ற கொள்கை பூண்ட சமுதாயமாக மாற்றப்படுகின்றது. இதுவே உம்மத் அல்லது நேர்வழி நடக்கும் சமுதாயம் ஆகும். இச்சமுதாயம் சம்பூரணமுற்றதாக, உற்சாக உத்வேகம் கொண்டதாக, இஸ்லாமியத் தலைமையால் (இமாமத்) வழிநடத்தப்படுவதாக இருக்க வேண்டும்.
ஹஜ் செய்யும் ஒவ்வொருவரும் தம்மிடத்திலிருந்து அல்லாஹ்வின்பால் முகம் திருப்புகின்றார். அல்லாஹ்வின் உணர்வு அவரை ஆட்கொள்கிறது. நீ நிலையற்ற வாழ்க்கையிலிருந்து மறுமையை நோக்கிச் சென்றுள்ளாய். முழுமையான நிஜங்களுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு நீ தள்ளப்பட்டுள்ளாய். அறியாமையையும் ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு மேலோங்கி, நீ பிரக்ஞையாலும் நீதியாலும் உணர்வூட்டப்பட்டுள்ளாய். பலதெய்வக் கொள்கையை நிராகரித்து ஏகதெய்வக் கொள்கையை (தௌஹீத்) ஏற்றுள்ளாய்.
ஹஜ் செய்வதற்கு முன் மனிதர்கள் தம் மனிதப் பண்புகளைப் புறக்கணித்திருந்தனர். அதிகாரம், செல்வம், குடும்பம், தேசம், இனம் என்பவற்றால் அவர்கள் அந்நியாமாக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கை வெறுமனே ‘காலந்தள்ளுவதாகவே’ இருந்தது. இறுதியாக ஹஜ்ஜின் அனுபவம் வாழ்வின் தத்துவத்தை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவியது. இப்போது அவர்கள் ஒருவரையொருவர் கூட்டாக ‘ஒன்று’ எனவும், தனித்தனியாக ‘மனிதன்’ எனவும் காண்கின்றனர். வேறு எவ்விதமாகவும் காண்பதில்லை.
குறிப்புகள்
- மீக்காத் அல்லது துல்ஹுலைஃபா – இமாம் அலீ (ரழி) தோண்டிய தண்ணீர்க் கிணறுகளான ஆபார் அலீக்கு அருகே மதீனாவுக்கு தெற்கே எட்டு மைல்கள் தொலைவில் உள்ளது. நபிகளார் (ஸல்) அங்கிருந்துதான் தன்னுடைய ஹஜ்ஜை ஆரம்பித்தார்கள்.
- காபில் ஒடுக்குபவனைக் குறிப்பதற்காகவும், ஆபில் ஒடுக்கப்பட்டவனைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அஜமி – பாரசீகர் அல்லது அரபியல்லாதோர்
- கஃபன் – பிணத்திற்கு அணிவிக்கும் உடை
- முஸ்லிகள் தொழுகையின்போது நோக்கும் (கஅபாவை நோக்கிய) திசை
- இஹ்றாம் – புனித யாத்திரிகர்களின் உடை. இச்சிறப்பு உடை அணிந்ததிலிருந்து களையும்வரை அந்த யாத்திரிகர் இருக்கும் நிலையையும் அது குறிக்கும்.
- உம்மத் – பொது இலக்குகளுக்காக ஒன்றுபட்டு உழைக்கும் இலட்சிய சமுதாயம்