டெல்லி 2005 குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டது 67 பேர் அல்ல, 69 பேர்
![]()
கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட காஷ்மீரை சேர்ந்த முஹம்மது ஹுசைன் பாஸிலி, முஹம்மது ரபீக் ஷா ஆகியோர் குற்றமற்றவர்கள் என 11 ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 67 பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டை கூட்டிக்கொள்ள வேண்டும். தற்போது விடுதலை ஆகியுள்ளவர்களே அந்த இருவர். 11 ஆண்டுகால கடுங்காவல் சிறையில் தனது வாழ்வைத் தொலைத்த இருவருக்கும் நீதிமன்றங்கள் எவ்வளவு இழப்பீடுகளை வழங்கினாலும் அவை ஈடாகுமா ? சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்தினால், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகி இன்று நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று நடப்பது இதுவே முதல் முறை அல்ல. ஆயிரமாயிரம் முஸ்லீம் இளைஞர்கள் இவ்வாறுதான் இந்தியச் சிறைச்சாலைகளில் அடைப்பட்டு வாடிக் கொண்டிருக்கின்றனர். டெல்லி தொடர்குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் எதிராக எந்தவிதமான சாட்சியங்களோ, ஆதாரங்களோ சிறு துளியளவிலும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குறிப்பாக, சம்பவம் நடந்த தினத்தன்று முஹம்மது ரபீக் ஷா, ஸ்ரீநகரில் தனது கல்லூரியின் வகுப்பறையில் இருந்தார் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்து வெளிவருவதற்கு 11 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
ரபீக் ஷாவுக்காக வாதாடிய வழக்குரைஞர் ரெபிக்கா மெம்மன் ஜான் கூறுகையில்,
“குற்றம் சுமத்தப்பட்ட நபர் தனது வகுப்பறையில் இருந்தார் என அதிகாரப்பூர்வமான கடிதம் பல்கலைக்கழகத்திலிருந்து டெல்லி சிறப்புப் புலனாய்வுக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை அவர்கள் நீதிமன்றத்திடமிருந்து மறைத்தே வழக்கை நடத்தியிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஆதாரம் சிறப்புப் புலனாய்வுத்துறையிடம் இருக்கிறது என ரபீக் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட பின்னரே அது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே அவை புலனாய்வுக்குழுவிடம் கிடைத்துள்ளது என்பது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியினை வைத்து தெரிந்து கொள்ள முடிகின்றது.”
இவ்வாறான தீர்ப்பை பெற்ற வழக்குகளில் இதுவே முதலாமவது வழக்கும் இல்லை என்றும், டெல்லி சிறப்பு புலனாய்வுத்துறை விசாரித்த வழக்குகளில் 70 சதவிகிதமான வழக்குகளில் இவ்வாறே தீர்ப்பு வந்துள்ளதை மனிஷா சேதி என்பவர் KAFKALAND என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். “நாம் இந்த கட்டுரையில் சிறப்புப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களை மட்டுமே குறிப்பிடுகின்றோம். இஸ்லாத்திற்கு எதிரான போக்கு மலிந்து கிடக்கும் இக்காலகட்டத்தில், சிறுபான்மையினர் குறிவைத்து கைது செய்யப்படுவதைக் கண்டிப்பது கடினமானவொரு காரியமாக மாறியிருப்பதாக” அவர் கூறுகிறார்.
இதுபோன்ற கொடூர செயல்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், டெல்லி மாநகர காவல்துறையை சார்ந்த தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அப்பாவிகளை கைது செய்வதும், சாட்சியங்களை மறைப்பதும், உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விடுவதுமாக இவர்கள் மீதான புகார்ப் பட்டியல் நீள்கிறது.
கடந்த மே மாத இறுதியில், 23 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு நிசாருதீன் அஹமது என்பவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட நிகழ்வே இன்னும் மறக்காத நிலையில், மற்றுமிருவர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருப்பது, நீண்ட காலமாகச் சிறையில் இருப்பவர்களின் நிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளிற்கு பேட்டி அளித்த நிசார் அஹமது இப்படிக் குறிப்பிடுகிறார்:
“நான் சிறை செல்லும்போது எனக்கு வயது 20. இன்று 43 வயதில் விடுதலையாகி உங்கள் முன்னாள் நிற்கின்றேன். நான் கைது செய்யப்படும் வேளையில் எனது இளைய சகோதரியின் வயது 12. இன்று அவளுடைய மகளின் வயது 12. எனது மருமகளுக்கு அப்போது ஒரு வயது. இப்போது அவளுக்குத் திருமணமும் நடந்துவிட்டது. என் உறவினர் ஒருவர் என்னை விட இரண்டு வயது இளையவர். இன்று அவள் பாட்டி ஆகிவிட்டாள்.”
ஒரு தலைமுறையே எனது வாழ்வில் இருந்து தப்பி விட்டதே என்று கண்கள் குளமாக விவரிக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எனது தந்தை நூருத்தீன் அஹமது எங்களுடைய விடுதலைக்காகப் போராடி தன்னிடமிருந்த செல்வமனைத்தையும் இழந்துவிட்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு அவர் மரணமடையும்வரை எங்கள் விடுதலை பற்றி அவருக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை. இப்போது அவர் இல்லாமல் எங்களுக்கு எதுவுமே இல்லை. யோசித்துப் பாருங்கள், தான் பெற்ற மகன்கள் இருவரும் சிறையில் இருக்க ஒரு தந்தைக்கு என்ன நிம்மதி இருந்திருக்க முடியுமென்று.”
இப்போது நம் முன்னர் இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இன்னும் எத்தனை காலம்தான் திறமையற்ற, ஊழல் மயப்பட்ட, பாரபட்ச போக்கு கொண்ட புலனாய்வுத்துறை, காவல்துறை அதிகாரிகளை, முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற கைதுகளைச் செய்ய அனுமதிக்கப் போகிறோம்? இரண்டு காஷ்மீரிகள் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் கழிக்க காரணமாக இருந்த சிறப்புப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க அனுமதியில்லாதிருப்பது ஏன்?
குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிவிட்ட இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத்தர அந்த அதிகாரிகளால் முடியும். ஆனால் அதுபோன்ற பொருளாதார வசதியோ பலமோ பாதிக்கப்பட்டவர்களிடத்தில் இல்லை. இது போன்றவை நீதித்துறை மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடத்தில் இல்லாமல் போவதற்வே வழி வகுக்கும் என்பதினால், நீதிமன்றங்கள் தானாக முன் வந்து இதுபோன்ற திறமையற்ற, ஊழல்மயப்பட்ட காவல்துறை அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதிலும் பலம் பெற வேண்டும்.
******
www.jantakareporter.com ல் Tarique Anwar பெயரில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தழுவல் இது. மூலக் கட்டுரையின் அரைவாசிப் பகுதி தன்னுடைய முகநூல் பதிவிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பிரதி செய்யப்பட்டுள்ளது என்று ஜே.என்.யூ. மாணவர் உமர் காலித் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

