தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)

Loading

மனிதனுக்கு வழங்கப்பட்ட முதல் சோதனை

“ஆதமுக்கு சிரம்பணியுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத்தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள்.

பூமியில் குழப்பம் செய்து இரத்தம் சிந்தும் இந்த படைப்பிற்கு அல்லாஹ் அளித்த மிக உன்னதமான கண்ணியம். ஆயினும் அது வானவர்களைவிட உயர்ந்த நிலையை அடையும் இரகசியங்களையும் பெற்றிருக்கிறது. அதற்கு அறிவு என்னும் இரகசியம் வழங்கப்பட்டுள்ளது. தான் விரும்பும் பாதையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனுடைய கலப்பான இந்த இயல்பும் தான் விரும்பும் பாதையைத் தெரிவு செய்வதற்கு அது பெற்றுள்ள சுதந்திரமும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியினால் அது அல்லாஹ்வைச் சென்றடைவதும்… இவையனைத்தும் அதற்கு வழங்கப்பட்ட இரகசியங்களின் சில பகுதிகள்.

வானவர்கள் அனைவரும் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்தார்கள்.

“இப்லீஸைத்தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். அவன் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்து நிராகரிப்பாளர்களில் ஒருவனாகிவிட்டான்.”

இங்குதான் தீமையின் படைப்பு முழுவடிவத்துடன் வெளிப்படுகிறது. பெரும் கண்ணியம் வாய்ந்த இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறான். சிறப்பிற்குரியவரின் சிறப்பை ஏற்றுக்கொள்ளாமல் கர்வம்கொள்கிறான். கர்வம் அவனைப் பாவத்தில் நிலைநிறுத்தி புரிதலுக்குத் தடையாக அமைந்துவிடுகிறது.

வசனத்திலிருந்து இப்லீஸ் வானவர்களைச் சார்ந்தவன் அல்ல என்பது தெரிய வருகிறது. அவன் அவர்களுடன் இருந்தான். அவன் அவர்களைச் சார்ந்தவனாக இருந்திருந்தால் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்க மாட்டான். அவர்களின் முதல் பண்பே, “அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள். தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்” என்பதுதான். வாக்கிய அமைப்பும் அவன் அவர்களைச் சார்ந்தவன் அல்ல என்பதையே காட்டுகிறது. “அஹ்மதைத்தவிர இன்னாரின் மகன்கள் வந்தார்கள்” என்பது போன்ற வாக்கிய அமைப்புதான் அது.

குர்ஆனின் வேறொரு வசனத்திலிருந்து அவன் ‘ஜின்’ இனத்தைச் சார்ந்தவன் என்பது தெளிவாகிறது. அல்லாஹ் ஜின்களை நெருப்பால் படைத்துள்ளான். இது அவன் வானவர்களைச் சார்ந்தவனில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இங்குதான் நிரந்தரமான போராட்டக்களம் வெளிப்படுகிறது. அது இப்லீஸின் வடிவில் வெளிப்படும் தீய படைப்பிற்கும் பூமியில் இறைவனின் பிரதிநிதிக்குமிடையே நடக்கும் போராட்டம். மனித மனதில் நடக்கும் நிரந்தரமான போராட்டம். மனிதன் தன் விருப்பப்படி தன் இறைவனிடம் அளித்த வாக்குறுதிக்கு எந்த அளவு விசுவாசமாக நடந்துகொள்கிறானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் நன்மை மிகைக்கும். அவன் எந்த அளவுக்கு தன் மன இச்சைக்குக் கட்டுப்பட்டு இறைவனைவிட்டுத் தூரமாகின்றானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் தீமை மிகைக்கும்.

“நாம் கூறினோம்: “ஆதமே, நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.”

அவர்கள் இருவருக்கும் ஒரு மரத்தைத்தவிர சுவனத்தின் பழங்களெல்லாம் உண்ண அனுமதிக்கப்பட்டிருந்தன. அது மனித வாழ்வில் தடைசெய்யப்பட்ட விசயங்களுக்கான குறியீடாக இருக்கலாம். தான் விரும்பியதைச் செய்யும் மனிதனையும் ஓட்டிச் செல்லப்படும் விலங்குகளையும் வேறுபடுத்தும் அம்சமே மனிதனின் நாட்டம்தான். சுதந்திரமாகச் செயல்படும் உரிமை வழங்கப்பட்டு குறிப்பிட்ட பொருளை நெருங்கக்கூடாதென அவனுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. தடையை மீறுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டும் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியின்படி அதைவிட்டுத் தவிர்ந்திருக்கும் மனிதனே விலங்குகள் உலகிலிருந்து வேறுபட்டு நிற்கிறான். இறைவனுக்கு அளித்த வாக்குறுதியைப் பொருட்படுத்தாமல் விலங்குகளைப் போன்று உண்டுகளிப்பவர்கள் மனித உருவங்களில் வெளிப்பட்டாலும் அவர்களும் விலங்குகள் உலகைச் சார்ந்தவர்களே!

“ஆனால் அந்த மரத்தின்மூலம் ஷைத்தான் அவ்விருவரையும் சறுகச் செய்தான். அவர்கள் இருந்த சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியெறச் செய்தான்.”

இந்த வாசகம் வரைந்துகாட்டும் சித்திரம் எவ்வளவு அற்புதமானது! “அவர்கள் இருவரையும் அவன் சறுகச் செய்தான்” என்ற வாசகம் குறிப்பிட்ட அந்த செயலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஷைத்தான் சுவனத்தைவிட்டு அவர்கள் இருவரையும் சறுகச் செய்வதையும் அவர்கள் கால்தடுமாறி சறுக்கி விழுவதையும் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது.

அச்சமயம் அனுபவம் நிறைவடைகிறது. ஆதம் தம் வாக்குறுதியை மறந்துவிட்டார். ஷைத்தான் வழிகெடுக்கும் முயற்சிக்கு முன்னால் பலவீனப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் வாக்கும் உண்மையானது. அவன் எழுதிய விதி தெளிவானது.

“நாம் கூறினோம்: “இங்கிருந்து இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். பூமியில் குறிப்பிட்ட நாள்வரை தங்குமிடமும் வாழ்க்கை வசதிகளும் உங்களுக்கு உண்டு.”

அது, மறுமைநாள்வரை ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையேயான போராட்டம் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட களத்தில் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிவிப்பாக இருந்தது.

ஆதம் தம் தவறிலிருந்து மீண்டு எழுந்தார். இறைவனின் அருள் அவரைத் தழுவிக் கொண்டது. அவன் பக்கம் மீளக்கூடியவர்களை அது எப்போதும் தழுவிக் கொள்ளவே செய்யும்.

“ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். அவன் அவரை மன்னித்துவிட்டான். அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்பவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”

அல்லாஹ்வின் இறுதி வாக்கும் அவன் ஆதமிடமும் அவரது மக்களிடமும் பெற்ற நிரந்தரமான வாக்குறுதியும் நிறைவடைந்தது. அவன் அவர்களுக்கு பூமியில் பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கி வாக்குறுதி பெற்றான். அதில்தான் அவர்களின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது.

“நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.”

நிரந்தரமான போராட்டம் அதன் உண்மையான களத்தின்பால் இடம்பெயர்ந்தது. இனி அந்தப் போராட்டம் ஒருநிமிடம்கூட நிற்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். மனித சமூகத்தின் ஆரம்ப கட்டத்திலேயே அவன் அறிந்துகொண்டான், அவன் வெற்றிபெற விரும்பினால் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் தனக்குத் தானே இழப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் எவ்வாறு இழப்பை ஏற்படுத்திக்கொள்வது என்பதையும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள்

பின்னர் நாம் சம்பவத்தின் ஆரம்பத்தை நோக்கித் திரும்பலாம். அல்லாஹ் வானவர்களிடம் கூறினான், “நான் பூமியில் பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன், என்று.”

அப்படியானால் அந்த முதல் நிமிடத்திலிருந்தே ஆதம் இந்த பூமியின் படைப்பாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார். பிறகு ஏன் அந்த தடுக்கப்பட்ட மரம்? எதற்காக அவர் சோதிக்கப்பட்டார்? ஏன் பூமியில் இறக்கப்பட்டார்? அவர் அந்த முதல் நிமிடத்திலிருந்தே பூமியின் படைப்பாகத்தானே படைக்கப்பட்டார்!? நான் கருதுவது என்னவென்றால், இந்த அனுபவம் பூமியின் பிரதிநிதியாக ஆக்கப்பட்டவருக்கு ஒரு பயிற்சியாக, முன்னேற்பாடாக இருந்திருக்கலாம். அது அவருக்குள் இருக்கும் மறைமுகமான ஆற்றல்களை விழிப்படையச் செய்யக்கூடியதாக இருக்கலாம். வழிகேட்டை எதிர்கொள்ளும் விதம், அதன் விளைவு, அதனால் ஏற்படும் வெட்கம், எதிரியை அறிந்துகொள்ளுதல், பாதுகாப்பான இடத்தின்பால் அடைக்கலம் தேடுதல் ஆகியவற்றுக்கான பயிற்சியாக இருக்கலாம்.

தடுக்கப்பட்ட மரத்தின் சம்பவம், இன்பங்களைக் காட்டி ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டம், வாக்குறுதியை மறந்து பாவம்செய்தல், பின்னர் போதையிலிருந்து மீண்டு எழுதல், வெட்கப்படுதல், மன்னிப்புக் கோருதல் ஆகியவை யாவும் மனித வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய நிலையான அனுபவங்கள். இறையருளின் தேட்டம், இந்த படைப்பு தம் பிரதிநிதித்துவ பூமிக்கு இந்த அனுபவத்தோடும் நிலையான போராட்டத்திற்கான முன்னேற்பாடோடும் அறிவுரையோடும்  இறங்க வேண்டும் என்பது. இதுபோன்ற அனுபவங்களைத்தான் அது மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்.

இந்தச் சம்பவம் எங்கு நிகழ்ந்தது? சிறிதுகாலம்வரை ஆதமும் அவரது மனைவியும் வாழ்ந்த சுவனம் என்பது என்ன? அந்த வானவர்கள் யார்? இப்லீஸ் என்பவன் யார்? அல்லாஹ் அவர்களுக்கு எவ்வாறு கட்டளையிட்டான்? அவர்கள் அவனுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள்? இவையும் இவைபோன்ற கேள்விகளும் அல்லாஹ் மட்டுமே அறிந்து மறைவான விசயங்களாகும். மனிதர்கள் இவற்றை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவன் அறிவான். எனவேதான் அவற்றை அறிந்துகொள்ளும் ஆற்றலை அவன் அவர்களுக்கு வழங்கவில்லை. பூமியில் நமக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ பணிகளை நிறைவேற்றுவதற்கு நாம் இவைபோன்ற மறைவான விசயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அல்லாஹ் மனிதனுக்கு வசப்படுத்தித் தந்த பிரபஞ்ச விதிகளின் அளவுக்கேற்ப அதன் இரகசியங்களை அவனுக்கு அறிவித்துக் கொடுத்துள்ளான். அவனுக்கு அறிவித்துக் கொடுக்காத மறைவான விசயங்கள் அவனுக்குத் தேவையற்ற, பயனற்ற விசயங்களாகும். பிரபஞ்சத்தின் எத்தனையோ இரகசியங்களை கண்டுபிடித்த பின்னரும்கூட மனிதனால் அடுத்த நிமிடம் என்ன நிகழும்? என்பதைக் குறித்து எதுவும் அறிய முடியவில்லை. அறிவதற்குரிய எந்த வகையான கருவிகளைக் கொண்டும் அவனால் அடுத்த நிமிடம் என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அவனிடமிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்று மீண்டும் அவன் பக்கம் திரும்புமா? அல்லது அதுவே அவனது இறுதி மூச்சாகிவிடுமா? இவைபோன்ற மறைவான விசயங்களை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை அவனது பிரதிநிதித்துவ பணிகளுக்கு அவசியமானதல்ல. மாறாக அவை வெளிப்படுத்தப்பட்டால் அவனுடைய பணிகளுக்கு இடையூறாகக்கூட அமையலாம். மனிதனால் அறிய முடியாத இவைபோன்ற மறைவான விசயங்கள் இன்னும் பல இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் அறிய மாட்டார்.

ஆகவே மனிதன் இதுபோன்ற விசயங்களில் மூழ்கிவிடக்கூடாது. ஏனெனில் அவற்றை அவனால் அறிய முடியாது. அவற்றின் உண்மைநிலையை அறிவதற்காக செய்யப்படும் முயற்சிகள் அனைத்தும் பயனற்ற, வீணான முயற்சிகளேயாகும். அவற்றால் மனிதனுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

இவ்வாறு மனித அறிவிற்கு மறைவானவற்றை அறிந்துகொள்ளும் ஆற்றல் வழங்கப்படாததனால் கர்வம்கொண்டு அவற்றை நிராகரிப்பது சரியாகாது. ஒன்றை நிராகரிப்பதற்கும் அதுகுறித்த அறிவு அவசியம். இங்கு அவற்றை அறிந்துகொள்வது மனித அறிவால் இயலாத ஒன்று. அது அவன் நிறைவேற்ற வேண்டிய பணிக்கு அவசியமானதும் அல்ல.

யூகங்களுக்கோ அனுமானங்களுக்கோ நம்மை ஒப்புக் கொடுப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஆனால் அதைவிட ஆபத்தானது நாம் அறியாதவற்றை, நம்மால் அறியமுடியாதவற்றையெல்லாம் மறுப்பது. நிச்சயமாக இது தான் உணர்ந்ததை மட்டுமே நம்பும் விலங்குகள் உலகத்திற்கு நம்மை இட்டுச் சென்றுவிடும்.

ஆகவே மறைவான இந்த விசயங்களை அறிந்தவனிடமே அவற்றை ஒப்படைத்துவிடுவோம். அவன் நமக்கு அறிவித்த அளவே போதுமானது. அதுதான் நம் வாழ்க்கையைச் சீர்படுத்தக்கூடியது. மனிதனைக் குறித்து, பிரபஞ்சம் குறித்து, இரண்டிற்குமிடையே காணப்படும் தொடர்புகள் குறித்து, மனிதனின் இயல்பு மற்றும் அவனது மதிப்பீடுகள் குறித்து இந்தச் சம்பவம் உணர்த்தும்  அடிப்படையான உண்மைகளை நாம் காணலாம். அதுதான் மனித சமூகத்திற்கு பயனளிக்கக்கூடியது, நேரான வழியைக் காட்டக்கூடியது.

பூமிக்குத் தலைவனாக மனிதன்

திருக்குர்ஆனின் நிழலுக்கு ஏற்றவாறு சுருக்கமாக, விரைவாக இந்த கண்ணோட்டங்களையும் அடிப்படையான உண்மைகளையும் பார்த்துவிடலாம்.

ஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாமியக் கண்ணோட்டம் மனிதனுக்கு அளிக்கும் இந்த உயர்ந்த அந்தஸ்து வானவர்கள் உலகில் செய்யப்பட்ட ‘மனிதன் பூமியின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டுள்ளான்’ என்ற அறிவிப்பிலிருந்தே தெளிவாகிறது. அதேபோன்று வானவர்கள் அந்த மனிதனுக்குச் சிரம்பணியுமாறு பணிக்கப்பட்டதிலிருந்தும் சிரம்பணியாத இப்லீஸ் விரட்டப்பட்டதிலிருந்தும் ஆரம்பத்திலும் இறுதியிலும் மனிதனுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் அரவணைப்பிலிருந்தும் தெளிவாகிறது.

மனிதனைக் குறித்த இந்த பார்வையிலிருந்து கண்ணோட்ட உலகிலும் எதார்த்த உலகிலும் பெரும் முக்கியத்துவமுடைய விசயங்கள் வெளிப்படுகின்றன.

  1. மனிதனே இந்த பூமியின் தலைவன். இதிலுள்ள அனைத்தும் அவனுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. எனில் இந்த பூமியிலுள்ள எல்லாவற்றையும்விட அவன் மதிப்புவாய்ந்தவன், கண்ணியமிக்கவன். இதிலுள்ள ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்காக அவனை அடிமையாக்கி விடக்கூடாது. அவனது மதிப்பை எந்தவொன்றையும்விட குறைத்து மதிப்பிடக்கூடாது. அவனது மனிதத்தன்மையின் எந்த அடிப்படையான அம்சங்களுக்கு எதிராகவும் வரம்புமீறி விடக்கூடாது. இந்த உலகிலுள்ள அனைத்தும் அவனுக்காக, அவனது இருப்பை நிலைநிறுத்துவதற்காக படைக்கப்பட்டவைதாம். ஆகவே எதனுடைய மதிப்பும் அவனது கண்ணியத்தைக் குலைத்துவிடக்கூடியதாக, அவனது மதிப்பைக் குறைத்துவிடக்கூடியதாக இருக்கக்கூடாது.
  2. மனிதன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணியே முதன்மையான பணி. அவன்தான் அதன் வாழ்வியல் வடிவங்களில் தொட்ர்புகளில் மாற்றத்தை, வளர்ச்சியை ஏற்படுத்துகிறான். அவன்தான் அதன் பயணத்திற்குத் தலைமையேற்றுச் செல்கிறான். பொருள்முதல்வாத கண்ணோட்டங்கள் கூறுவதுபோன்று உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களோ உற்பத்தியைப் பங்கிடும் அமைப்புகளோ அல்ல. அவை இயந்திரங்களின் வளர்ச்சிக்கேற்ப மனிதனை, அவன் ஆற்ற வேண்டிய பணிகளை இழிவாகக் கருதுகின்றன.

நிச்சயமாக குர்ஆனியப் பார்வை இந்த மனிதனை பூமியில் பணிபுரியும் பிரதிநிதியாக ஆக்குகிறது. பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ பணி வானங்களுடன், காற்றுகளுடன், மழைகளுடன், நட்சத்திரங்களுடன், சூரியனுடன் என பலவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்விற்காக, அவனது பிரதிநிதித்துவ பணிக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்த அந்தஸ்திற்கும் பொருள்முதல்வாத கண்ணோட்டங்கள் மனிதனுக்கு அளிக்கும் இழிவான இடத்திற்குகுமான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாகும்!

மனிதனைக் குறித்த இஸ்லாமியப் பார்வையும் பொருள்முதல்வாதப் பார்வையும், தாம் ஆட்சி செய்யும் அமைப்பின் இயல்பிலும் மனிதத் தன்மையின் அடிப்படையான அம்சங்களை கண்ணியப்படுத்துவது மற்றும் குறைத்து மதிப்பிடுவதிலும் மனிதனைக் கண்ணியப்படுத்துவது மற்றும் இழிவுபடுத்துவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனிதனைக்குறித்து பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்கள் கொண்டுள்ள இத்தகைய பார்வையின் விளைவே,  உற்பத்தியைப் பெருக்கும்பொருட்டு அது மனிதனின் கண்ணியத்தை, அவன் நிறைவேற்ற வேண்டிய பணியை குறைத்து மதிப்படுகிறது, அவனை அற்ப உயிரியாகக் கருதுகிறது.

அதேபோன்று இஸ்லாம் மனிதனைக்குறித்து அவனது பணிகள் குறித்து கொண்டுள்ள உயர்ந்த பார்வையிலிருந்தே ஒழுக்கவியல் மதிப்பீடுகளின் உயர்வும் நற்பண்புகளின் உயர்வும் அவனது வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் நம்பிக்கை, நேர்மை, உளத்தூய்மை ஆகிய மதிப்பீடுகளின் உயர்வும் வெளிப்படுகின்றன. இந்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டே அவன் தன் பிரதிநிதித்துவ பணிகளை ஆற்ற வேண்டும். “என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.” இந்த மதிப்பீடுகள் எல்லா வகையான உலகியல் மதிப்பீடுகளைவிடவும் உயர்வானவை, கண்ணியமிக்கவை. உலகியல் மதிப்பீடுகள் அனைத்தும் உயர்வான இந்த மதிப்பீடுகளுக்குக் கட்டுப்பட்டவையே. இவைதான் அசலானவை. ஆகவேதான் இவை மனித மனதை தூய்மையின்பால், உயர்வின்பால் உந்தித் தள்ளுகின்றன. இதற்குமாறாக பொருள்முதல்வாத கண்ணோட்டங்கள் ஆன்மீகரீதியான எந்த மதிப்பீடுகளையும் பொருட்படுத்துவதில்லை. அவை உற்பத்திப் பெருக்கத்திற்காக, இலாபத்தை சம்பாதிப்பதற்காக எல்லா வகையான மதிப்பீடுகளையும் வீணாக்கிவிடும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனின் நாட்டத்திற்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடம் அவன் அளித்த வாக்குறுதி, அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, வழங்கப்படும் கூலி ஆகியவை அவனது நாட்டத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையே காட்டுகின்றன. அவன் தன் விருப்பப்படி இறைவனிடம் அளித்த வாக்குறுதியைப் பேணி தன் மன இச்சைக்குக் கட்டுப்படாமல் அவனை வழிகெடுப்பதற்காக செய்யப்படும் முயற்சிகளை வென்றுவிட்டால் வானவர்களைவிட உயர்வான இடத்தைப் பெற்றுவிடுகிறான். அப்படியல்லாமல் அவன் விரும்பி தன் மனஇச்சைக்குக் கட்டுப்பட்டு நேர்வழியை விடுத்து வழிகேட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டால், தன் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டால் அவன் மிகவும் கேடுகெட்டவனாகிவிடுகிறான். நிச்சயமாக இந்த சம்பவத்தில் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கண்ணியத்தின் ஒரு பகுதி பளிச்செனத் தென்படுகிறது. அதேபோன்று இது மனிதனின் உயர்வையும் தாழ்வையும் நற்பாக்கியத்தையும் துர்பாக்கியத்தையும் சுதந்திர நாட்டம் வழங்கப்பட்ட மனிதனின் அந்தஸ்தையும் ஓட்டிச் செல்லப்படும் விலங்கின் கீழ்மையையும் வேறுபடுத்திக் காட்டும் நிரந்தரமான நினைவூட்டலாகவும்  இருக்கின்றது.

இச்சம்பவம் படம்பிடித்துக் காட்டும் மனிதனுக்கும் ஷைத்தானுக்குமான போராட்டத்தின் நிகழ்வுகளில் போராட்டத்தின் இயல்பைக் குறித்த நிரந்தரமான நினைவூட்டல் உள்ளது. நிச்சயமாக அது அல்லாஹ்வின் வாக்குறுதிக்கும் ஷைத்தானின் வழிகெடுத்தலுக்கும், ஈமானுக்கும் நிராகரிப்பிற்கும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும், நேர்வழிக்கும் தவறான வழிக்கும் இடையே நடைபெறும் போராட்டம். இங்கு மனிதன்தான் போராட்ட களம். அவன்தான் இலபாமடையக்கூடியவன், நஷ்டமடையக்கூடியவன். இதில் அவனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிரந்தர அம்சமும் அவன்தான் களத்தில் நிற்கும் வீரன், அவன் அந்தக் களத்தில் வெற்றியையும் தோல்வியையும் பெறக்கூடியவன் என்ற நிரந்தரமான அறிவுரையும் உள்ளது.

இறுதியில் பாவம் மற்றும் பாவமன்னிப்பைக் குறித்த இஸ்லாமியச் சிந்தனை தெளிவுபடுத்தப்படுகிறது. தனிமனிதன் செய்யும் பாவத்திற்கு அவன்தான் பொறுப்பு. அது அவனைத்தான் பாதிக்கும். தனிமனிதனின் பாவமன்னிப்புக் கோரிக்கையினால் அவனுக்குத்தான் நல்லது. எவ்வித மூடுமந்திரங்களும் குழப்பங்களும் அற்ற மிகத் தெளிவான கண்ணோட்டம் இது. திருச்சபை கூறுவதுபோல மனிதன் பிறக்கும்போதே பாவியாகப் பிறக்கவில்லை; இறைவன் புறத்திலிருந்து அதற்குப் பரிகாரமும் இல்லை. அவர்களின் கூற்றுப்படி, ஆதமுடைய மக்களை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காகவே ஈசா(அலை) சிலுவையில் அறையப்பட்டார்.  ஒருபோதும் இல்லை. ஆதமின் பாவம் அவரது தனிப்பட்ட பாவம். பாவமன்னிப்புக் கோரி அவர் மிக இலகுவாக அதிலிருந்து விடுபட்டுவிட்டார். அவரது சந்ததியில் பாவம் செய்தவர்தான் பாவியாவார். பாவமும் பாவமன்னிப்புக் கோரிக்கையும் அவரவர் சம்பந்தப்பட்டது. அதனால் மற்றவர்களுக்கு பாதிப்போ இலாபமோ இல்லை. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த பாவத்தை மட்டுமே சுமப்பான். இது மிகத் தெளிவான, நிம்மதியளிக்கக்கூடிய கண்ணோட்டம். இது ஒவ்வொருவரையும் செயல்படத் தூண்டுகிறது, நிராசையிலிருந்து காப்பாற்றுகிறது. “நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”

இவை ஆதமின் சம்பவத்திலிருந்து வெளிப்படும் விசயங்களின் ஒரு பகுதி. நாம் இந்தப் புத்தகத்திலே இத்தோடு நிறுத்திக் கொள்வோம். இந்த ஒரு பகுதி மட்டுமே அடிப்படையான உண்மைகளையும் சரியான கண்ணோட்டங்களையும் அறிவுரைகளையும் நிரம்பக் கொண்டுள்ளது. இது கூறும் அடிப்படையான அம்சங்களைக் கொண்டே சமூகக் கண்ணோட்டம் நிலைபெற்றுள்ளது. நற்பண்புகளும் நன்மைகளும் சிறப்புமே அதனை ஆட்சிசெய்கிறது. இந்தப் பகுதியிலிருந்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதில், அடிப்படையான மதிப்பீடுகளைத் தெளிவுபடுத்துவதில் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சம்பவங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. பிரதிநிதித்துவ ஒப்பந்தம், அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதோடு, வாழ்க்கையில் அவனது மார்க்கத்தைப் பின்பற்றுவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஒன்று மனிதன் அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்று அதற்குக் கீழ்ப்படிபவனாக இருக்க வேண்டும் அல்லது ஷைத்தான் கூறுவதைச் செவியேற்று அதனைப் பின்பற்றக்கூடியவனாக இருக்க வேண்டும். இங்கு மூன்றாவது பாதை எதுவும் இல்லை. ஒன்று அவன் அல்லாஹ்வைப் பின்பற்றுவான் இல்லையெனில் ஷைத்தானைப் பின்பற்றுவான். ஒன்று நேர்வழியில் இருப்பான். இல்லையெனில் தவறான வழியில் இருப்பான். ஒன்று சத்தியத்தில் இருப்பான். இல்லையெனில் அசத்தியத்தில் இருப்பான். ஒன்று வெற்றியடைவான் இல்லையெனில் தோல்வியடைவான். இதுதான் திருக்குர்ஆன் முழுவதும் சொல்லப்பட்டுள்ள உண்மை. இதனை அடிப்படையாகக் கொண்டே அனைத்து கண்ணோட்டங்களும் வழிமுறைகளும் மனித உலகில் நிலைபெறுகின்றன.

(தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரி)

Related posts

Leave a Comment