தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)

Loading

கருத்துரை

திருக்குர்ஆனில் தேவையான சந்தர்ப்பங்களில் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவை கூறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களே அவற்றின் நோக்கத்தை, அவை எந்த பகுதியிலிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன என்பதை, அவற்றின் வடிவத்தை, எடுத்துரைக்கப்படும் வழிமுறையை நிர்ணயம் செய்கின்றன. இந்த வழிமுறையினால் ஆன்மரீதியான, சிந்தனைரீதியான மற்றும் அவை எடுத்துரைக்கப்படும் கலைரீதியான சூழலில் ஒத்திசைவு காணப்படுகிறது. அதன்மூலம் அவை தம் பங்களிப்பை நிறைவேற்றி நோக்கத்தை நிலைநிறுத்துகின்றன, தாம் விரும்பும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

சிலர், திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்கள். ஒரே சம்பவம் பல அத்தியாயங்களில் வந்துள்ளதே அவர்கள் இவ்வாறு கருதுவதற்கான காரணம். ஆனால் கொஞ்சம் கவனத்தோடு பார்க்கும்போது ஒரே வடிவில் எந்தச் சம்பவமும் மீண்டும் மீண்டும் கூறப்படவில்லை என்பதையும் மீண்டும் மீண்டும் வந்துள்ளவை யாவும் புதிய விசயங்களைத் தெளிவுபடுத்தக்கூடியவை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

“குர்ஆனில் சில சம்பவங்கள் கலைக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. அவை கலையின் அழகியலுக்காக புனையப்பட்டவையாக அல்லது மாற்றம் செய்யப்பட்டவையாக இருக்கலாம், அவை உண்மையானவை அல்ல” என்றும் சில மூடர்கள் கூறுகிறார்கள். ஆனால் சரியான இயல்புடைய, திறந்த பார்வையுடைய யாராயினும் திருக்குர்ஆனை வாசித்துப் பார்ப்பாரேயானால் சொல்லப்படும் தலைப்புதான் சம்பவத்தின் அளவை, அது எடுத்துரைக்கப்படும் வழிமுறையை நிர்ணயம் செய்கிறது என்பதை அறிந்துகொள்வார். திருக்குர்ஆன் அழைப்பியல் வேதமாகவும் வாழ்வியல் வழிகாட்டியாகவும் சமூகத்தின் சட்டமாகவும் இருக்கின்றது. அது கலையை அடிப்படையாகக் கொண்ட நாவலோ வரலாற்று புத்தகமோ அல்ல. அழைப்பு விடுக்கப்படும் வசனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பவங்கள் போதுமான அளவோடு, அந்த சூழலுக்கு உகந்த வழிமுறையோடு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அவை கலையின் உண்மையான அழகியலையும் வெளிப்படுத்துகின்றன. அதன் கலை புனைவையோ கற்பனையையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. அது சத்தியத்தின் வலிமையையும் அழகிய முறையில் எடுத்துரைத்தலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.” (விரிவாக வாசிப்பிற்கு பார்க்க, அத்தஸ்வீருல் ஃபன்னீ ஃபில்குர்ஆன் என்ற புத்தகம்)

குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது. மேலும் அதன் தூய்மையையும் பிரபஞ்சத்தில் அதன் அசலான தன்மையையும் உணர்த்துகிறது. அதேபோன்று அது ஈமானியக் கண்ணோட்டத்தின் எதார்த்தத்தைத் தெளிவுபடுத்தி புனையப்பட்ட எல்லாவகையான கண்ணோட்டங்களைவிட்டும் உள்ளத்தில் அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆகவேதான் கண்ணியமிக்க அழைப்பியல் வேதத்தின் பெரும்பகுதியை சம்பவங்கள் பெற்றுள்ளன.

அந்த முதல் மனிதரின் சம்பவம்

நாம் மேற்குறிப்பிட்டுள்ள இந்த தெளிவுரையின் ஒளியில் முதல் மனிதர் ஆதமின் சம்பவத்தைக் காணலாம்.

இதற்கு முன்னர் வந்துள்ள வசனங்கள் மனித வாழ்க்கையைக் குறித்து, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தைக் குறித்துப் பேசுகின்றன. பின்னர் அவை பூமியைக் குறித்துப் பேசுகின்றன. இந்த பூமியிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. பின்னர் இந்தச் சூழலில் ஆதமுக்கு பூமியில் வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ அந்தஸ்துகுறித்தும் அல்லாஹ்விடம் அவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பூமியின் பொக்கிஷங்கள் அவர்வசம் ஒப்படைக்கப்பட்டதுகுறித்தும் இந்த பிரதிநிதித்துவ பணியை நிறைவேற்றுவதற்கான அறிவு வழங்கப்பட்டதுகுறித்தும் பேசுகின்றன. பின்னர் பேச்சு இஸ்ராயீலின் மக்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்களுக்கு பூமியில் வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ அந்தஸ்துகுறித்தும் அந்த பொறுப்பிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டதுகுறித்தும் திரும்புகிறது. சம்பவம், எடுத்துரைக்கப்படும் சூழலோடு முற்றிலும் ஒத்துப் போகின்றது.

வாருங்கள், அந்த முதல் மனிதரின் சம்பவத்தோடு அது உணர்த்தும் படிப்பினைகளோடு சில நிமிடங்கள் வாழலாம்.

ஆதமுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ அந்தஸ்து

வாருங்கள், நாம் அனைவரும் விண்ணுலகில் முதல் மனிதர் தோன்றிய வரலாற்றைக் கேட்கலாம். அங்கு நடைபெற்ற உரையாடலைச் செவியுறலாம். அகக்கண்கொண்டு அதனைக் காணலாம்.

2:30-39. “உமது இறைவன் வானவர்களிடம், “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்“ என்று கூறியபோது அவர்கள், “பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடிய மக்களையா நீ ஏற்படுத்தப் போகின்றாய்!?. நாங்களோ உன்னைப் புகழ்ந்து உன் தூய்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவன், “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்றான். அவன் ஆதமுக்கு அனைத்தின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துரைத்து, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குக் கூறுங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா, நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத்தந்ததைத்தவிர நாங்கள் எதையும் அறியமாட்டோம். நிச்சயமாக நீ நன்கறிந்தவனாகவும் ஞானம்மிக்கனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார்கள். “இவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக” என்று அவன் கூறினான். அவற்றின் பெயர்களை ஆதம் அறிவித்தபோது, “வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைப்பவற்றையும் நன்கறிவேன் என்றும் நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று அவன் கேட்டான்.

“ஆதமுக்கு சிரம்பணியுங்கள்“ என்று நாம் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத்தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். அவன் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்து நிராகரிப்பாளர்களில் ஒருவனாகிவிட்டான். நாம் கூறினோம்: “ஆதமே, நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.” ஆனால் அந்த மரத்தின்மூலம் ஷைத்தான் அவ்விருவரையும் சறுகச் செய்தான். அவர்கள் இருந்த சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியெறச் செய்தான். அப்போது நாம் கூறினோம்: “இங்கிருந்து இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். பூமியில் குறிப்பிட்ட நாள்வரை தங்குமிடமும் வாழ்க்கை வசதிகளும் உங்களுக்கு உண்டு.” ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். அவன் அவரை மன்னித்துவிட்டான். அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்பவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.”

“உமது இறைவன் வானவர்களிடம், “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்“ என்று கூறியபோது…”

இந்த வசனத்திலிருந்து தெளிவாகக்கூடிய விசயங்கள் பின்வருமாறு:

  1. பிரபஞ்சத்திலுள்ள இந்த புதிய படைப்பின்வசம் பூமியின் பொறுப்பை ஒப்படைத்து அதில் அந்த படைப்பை சுதந்திரமாகச் செயல்பட விட்டுவிட வேண்டும் என்றும் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும் அது எவ்வாறு முன்மாதிரியின்றி படைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதில் ஏற்படும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் பொறுப்பையும் இந்த பூமியிலுள்ள ஆற்றல்கள், பொக்கிஷங்கள், கருவூலங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் இறைவன் நாடினான். இந்த பூமியிலுள்ள அனைத்தும் அவன் மனிதனிடம் ஒப்படைத்த பெரும் பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவனுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டது.
  2. இந்த பூமியிலுள்ள ஆற்றல்களை, பொக்கிஷங்களை, கருவூலங்களை வெளிப்படுத்தும் அளவுக்கு இந்த புதிய படைப்பிற்கு மறைமுகமான ஆற்றல்கள், திறமைகள் வழங்கப்பட்டுள்ளன. இறைநாட்டத்தை நிலைநிறுத்தும் அளவுக்கு அவனுக்கு மறைவான ஆற்றல்கள் வழங்கப்பட்டுள்ளன.
  3. இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் விதிகளுக்கும் இந்த புதிய படைப்பான மனிதனை ஆட்சி செய்யும் விதிகளுக்குமிடையே ஒத்திசைவு காணப்படுகிறது. இரண்டிற்குமிடையே ஒருபோதும் மோதல் நிகழாது. இந்தப் பிரபஞ்சத்தின் பெரும் ஆற்றலால் மனித ஆற்றல் நசுக்கப்பட்டு விடாது.
  4. பரந்து விரிந்த இந்த விசாலமான பூமியில் மனிதனுக்கு உயர்ந்த அந்தஸ்தும் கண்ணியமும் வழங்கப்பட்டுள்ளது. இது கண்ணிமிக்க படைப்பாளன் அவனுக்கு வழங்கிய கண்ணியமாகும்.

இவைதாம் “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்” என்ற இறைவாசகத்திலிருந்து வெளிப்படும் சில மின்னல்கள், குறிப்பாக நாம் அகக்கண்கொண்டும் புறக்கண்கொண்டும் இந்த விசாலமான பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்ட மனிதன் செய்த பணிகளைப் பார்க்கும்போது.

“பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடிய மக்களையா நீ ஏற்படுத்தப் போகின்றாய்!?. நாங்களோ உன்னைப் புகழ்ந்து உன் தூய்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறோம்”

வானவர்களின் இந்தக் கூற்று, அவர்களிடம் விசயத்தை அறிவதற்குரிய ஏதேனும் சாட்சியோ அல்லது பூமியில் முன்னர் வாழ்ந்தவர்களின் அனுபவமோ அல்லது இந்தப் படைப்பின் இயல்பை வெளிப்படுத்தும் அளவுக்கு அகப்பார்வையோ இருந்திருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. பின்னர் அவர்கள் – நன்மையை மட்டுமே நாடும் அவர்களின் தூய இயல்புக்கேற்ப – அல்லாஹ்வைப் புகழ்வதையும் அவனது துதிபாடுவதையுமே தங்களின் நோக்கமாகக் காண்கிறார்கள். அது அவர்களின்மூலம் நிலைபெற்றுவிட்டதாகக் கருதுகிறார்கள். அவர்கள் அவனைப் புகழ்ந்து அவனது தூய்மையைப் பறைசாற்றுகிறார்கள். இடைவிடாமல் களைப்படையாமல் அவனை மட்டுமே வணங்குகிறார்கள்.

இந்த பூமியைப் படைத்து அதனை செழிப்படையச் செய்து அதில் மனிதனுக்கு பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கிய இறைநாட்டத்தின் நோக்கத்தை அந்த வானவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இந்த மனிதன் சில சமயங்களில் குழப்பம் செய்யலாம், இரத்தம் சிந்தலாம். ஆனால் வெளிப்படையான இந்த சிறிய தீமைக்குப் பின்னால் மிகப்பெரும் நன்மை அடங்கியுள்ளது. அந்த நன்மை நிரந்தர வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பெறக்கூடியது; இடைவிடாத முயற்சியையும் இயக்கத்தையும் உடையது; இந்தப் பரந்து விரிந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

அப்போது எல்லாவற்றையும் குறித்து நன்கறிந்த இறைவனிடமிருந்து மறுமொழி வருகிறது, “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்”

“அவன் ஆதமுக்கு அனைத்தின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துரைத்து, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குக் கூறுங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா, நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத்தந்ததைத்தவிர நாங்கள் எதையும் அறியமாட்டோம். நிச்சயமாக நீ நன்கறிந்தவனாகவும் ஞானம்மிக்கனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார்கள். “இவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக” என்று அவன் கூறினான். அவற்றின் பெயர்களை ஆதம் அறிவித்தபோது, “வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று அவன் கேட்டான்.”

ஆம். விண்ணுலகில் வானவர்களுடன் நடைபெற்ற உரையாடலை அகக் கண்கொண்டு நம்மால் பார்க்க முடிகிறது. ஆம். அல்லாஹ் இந்த மனிதனுக்கு பிரதிநிதித்துவ பொறுப்பை வழங்கும்போது அவனுக்கு அளித்த இரகசியத்தின் ஒரு பகுதியை நம்மால் உணர முடிகிறது. அவன் பெயர்களைக் கொண்டு குறிப்பிடும் ஆற்றலை, இடங்களுக்கும் மனிதர்களுக்கும் பெயரிடும் ஆற்றலை மனிதனுக்கு வழங்கினான். அந்தப்பெயர்களை மனிதர்கள் மற்றும் பொருள்களை அறிந்துகொள்ளும் குறியீடுகளாக ஆக்கினான். இது பூமியில் மனிதனின் வாழ்வில் பெரும் முக்கியத்துவமுடைய ஆற்றலாகும். மனிதனுக்குப் பெயர்களைக் கொண்டு குறிப்பிடும் இந்த ஆற்றல் வழங்கப்படவில்லையெனில் என்னவாகும்? என்பதை எண்ணிப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவத்தை, அவசியத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதும் அணுகுவதும் சிரமமாகியிருக்கும். ஒருவர் மற்றவருக்கு ஏதேனும் ஒன்றை புரிய வைக்க விரும்பினால் அந்த விசயத்தையே கண்முன்னால் கொண்டுவர வேண்டியிருக்கும். பேரீச்சை மரம் என்று கூறுவதற்கு பேரீச்சை மரத்தையே கண்முன்னால் கொண்டு வர வேண்டியிருக்கும். மலை என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வதற்கு மலைக்குச் செல்ல வேண்டிருக்கும். யாரேனும் ஒருவரைக் குறித்து இன்னொருவரிடம் கூற வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட அந்த மனிதரையே கண்முன்னால் நிறுத்த வேண்டிருக்கும். மனித வாழ்வே சிரமமாகிவிடும். அல்லாஹ் பெயர்களைக் கொண்டு அறிந்துகொள்ளும் ஆற்றலை மனிதனுக்கு வழங்கவில்லையெனில் மனித வாழ்வு அதன் பாதையில் இலகுவாகப் பயணிக்க முடியாது.

வானவர்களுக்கு இந்த தனித்தன்மை தேவையில்லை. ஏனெனில் அவர்களின் பணிக்கு இது அவசியமில்லை. அதனால் அவர்களுக்கு அது வழங்கப்படவும் இல்லை. அல்லாஹ் இந்த இரகசியத்தை ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தபோது வானவர்களுக்கு முன்னால் அவர்கள் அறியாத பெயர்களையெல்லாம் எடுத்துரைத்தார். மனிதர்களுக்கும் பொருள்களுக்கும் எவ்வாறு பெயரிட வேண்டும் என்பதை அவர்கள் அறியாமல் இருந்தார்கள். தம் இயலாமையை ஒத்துக்கொண்டு தம் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அவன் தங்களுக்கு கற்றுத் தந்ததின் வரம்பையும் ஆதமுக்கு எந்த அளவு கற்றுக்கொடுத்துள்ளான் என்பதையும் அறிந்துகொண்டார்கள். பின்னர் தொடர்ந்து வரும் பதில் அவர்களை நன்கறிந்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய இறைவனின் நோக்கத்தை உணர்ந்துகொள்ளச் செய்தது:

“வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”

(தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரி)

Related posts

Leave a Comment