தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

யூதர்களும் இஸ்லாமிய அழைப்பும்

கருத்துரை

இங்கிருந்து இஸ்ராயீலின் மக்களுடன் உரையாடல் தொடங்குகிறது. அவர்கள்தாம் மதீனாவில் இஸ்லாமிய அழைப்பை மிக மோசமான முறையில் எதிர்கொண்டவர்கள். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அதனை எதிர்த்து நின்றார்கள். மதீனாவில் இஸ்லாம் உதயமானதிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல் அதற்கு எதிராக சூழ்ச்சிகள் செய்துகொண்டிருந்தார்கள். அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரிடையே ஒற்றுமை ஏற்பட்டதிலிருந்தே அதிகாரம் முஸ்லிம்களிடம் சென்றடைகிறது என்பதையும் அவர்கள் பெற்றிருந்த பொருளாதார, இலக்கிய தலைமைகளும் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது என்பதையும் மதீனாவில் வாழ்ந்த அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரிடையே இதுவரை அவர்கள் ஊடுருவி வந்த பாதையும் அடைக்கப்பட்டுவிட்டது என்பதையும் புதிய வேதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்களுக்கென தனித்துவமிக்க மார்க்கத்தையும் பெற்றுவிட்டார்கள் என்பதையும் அவர்கள் மிகத் தெளிவாக அறிந்துகொண்டார்கள். வரலாற்றின் ஆரம்பம்தொட்டே இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது யூதர்கள் தொடுத்த அந்த தாக்குதல்கள் இன்றுவரை ஓயாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் வழிமுறைகளும் சாதனங்களும்கூட இன்றுவரை மாறவில்லை. அவை வடிவத்தில் மட்டுமே மாற்றத்தை கொண்டிருக்கின்றனவே அன்றி அசலில் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றின் இயல்பு ஒன்றாகவே இருக்கின்றன. இத்தனைக்கும் உலக நாடுகள் அவர்களை எங்கும் அனுமதிக்காமல் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருந்தபோது வெற்றி கொள்ளப்பட்ட இஸ்லாமிய உலகில்தான் அவர்கள் தங்களை அரவணைக்கும் உள்ளங்களைப் பெற்றார்கள். இஸ்லாமிய உலகம் இஸ்லாத்திற்குத் தீங்கிழைக்காத, முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாத அனைவருக்காகவும் தம் கதவுகளை திறந்துதான் வைத்திருந்தது.

மதீனாவில் யூதர்கள்தாம் முதலில் இந்த மார்க்கத்தையும் தூதரையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் குர்ஆன் தவ்ராத்திலுள்ளவற்றை உண்மைப்படுத்தியது. அவர்களும் புதிய தூதரை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களின் வேதத்தில் தூதரைக் குறித்த முன்னறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் அந்த தூதரைக் கொண்டே இணைவைப்பாளர்களை அச்சுறுத்திக் கொண்டும் இருந்தார்கள்.

இந்தப் பாடம் இஸ்ராயீலின் மக்களுடன் செல்லும் நீண்ட சுற்றின் ஒரு பகுதி. மாறாக இது அவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அவர்களின் நிலைப்பாட்டையும் சூழ்ச்சியையும் வெளிப்படுத்தி அவர்களின்மீது தொடுக்கப்படும் அனைத்தையும் தழுவிய தாக்குதல்.

**********

இந்தப் பாடம் அல்லாஹ் இஸ்ராயீலின் மக்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டி அழைப்பதைக் கொண்டு தொடங்குகிறது. தன்னிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் தனக்கு மட்டுமே அஞ்சும்படியும் அவர்களிடம் இருக்கின்ற வேதத்தை உண்மைப்படுத்துகின்ற இந்த குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளும்படியும் அவன் இஸ்ராயீலின் மக்களை அழைக்கிறான். அவர்கள் தனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தானும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அவன் வாக்களிக்கிறான். அவர்களின் நிலைப்பாட்டை கண்டித்து நிராகரிப்பவர்களில் முதலாமானவர்களாக ஆகிவிட வேண்டாம் என்றும் சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்துவிட வேண்டாமென்றும் முஸ்லிம்களிடையே, புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களிடையே குழப்பத்தையும் சந்தேகத்தையும் பரப்பிக் கொண்டு திரிய வேண்டாம் என்றும் அவர்களை எச்சரிக்கிறான். தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை வழங்கும்படியும் தொழுகைக்காக குனிபவர்களுடன் சேர்ந்து குனியும்படியும் தங்களின் மன இச்சைக்கு எதிராக தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடும்படியும் அவன் அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். அவர்கள் இணைவைப்பாளர்களை ஈமானின் பக்கம் அழைக்கும் அதேசமயம் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைத்துக் கொள்ளாததையும் அவன் கண்டிக்கிறான்.

பின்னர் அவர்களின் நீண்ட வரலாறு முழுமையும் அல்லாஹ் அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகள் நினைவூட்டப்படுகின்றன. அச்சமயத்தில் இருந்த அவர்கள்தாம் இந்த அருட்கொடைகளைப் பெற்றவர்களைப்போன்று அவர்கள் விளித்து  உரையாடப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சமூகமாக, ஒரே தலைமுறையாகக் கருதப்பட்டு விளித்து உரையாடப்படுகிறார்கள். உண்மையில் அவர்களின் பண்புகளும் நிலைப்பாடுகளும் எல்லா காலகட்டங்களிலும் ஒன்றுபோலவே இருக்கின்றன. மறுமைநாளைக் கொண்டு அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்த நாளில் யாரும் யாருக்கும் எந்த நன்மையும் அளிக்க முடியாது. யாருடைய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாரிடமிருந்தும் ஈட்டுத்தொகையும் பெறப்பட மாட்டாது. அந்த நாளில் அவர்கள் தங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையோ வேதனையிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கூடியவர்களையோ பெற மாட்டார்கள்.

அவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது கூட்டத்தாரிடமிருந்தும் காப்பாற்றப்பட்டமையும் தொடர்ந்து அவர்கள்மீது பொழியப்பட்ட அருட்கொடைகளான மேகத்தைக் கொண்டு நிழலமைத்தல், மன்னூ, சல்வா என்னும் உணவுகள், பாறையிலிருந்து நீருற்று பீறிட்டெழுதல் ஆகியவையும் அவர்களுக்கு முன்னால் காட்சிகளாக படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. பின்னர் அவர்கள் தொடர்ந்து தவறான வழிகளையே தேர்ந்தடுத்தமை நினைவூட்டப்படுகிறது. ஒன்றிலிருந்து விடுபடுவதும் இன்னொன்றில் அகப்படுவதுமாக இருந்தார்கள். ஒரு பாவத்திற்கு மன்னிப்பு வழங்கப்படும் முன்பே இன்னொரு பாவத்தில் மூழ்கினார்கள். அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்ட கோணலும் பிடிவாதமும் அப்படியே இருந்தன. இந்தப் பலவீனம்தான் அவர்களை பொறுப்பை நிறைவேற்ற முடியாமல் செய்தது; தங்கள் இறைவனுடன் தங்கள் தூதர்களுடன் செய்த ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியபின் மீறச் செய்தது. எந்த அளவுக்கு அவர்கள் வரம்புமீறினார்கள் எனில் தங்களின்பால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களையே அநியாயமாகக் கொலை செய்தார்கள்; இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள்; அவனை விட்டுவிட்டு காளைக்கன்றைக் கடவுளாக்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வைக் கண்ணால் காணும்வரை நம்ப மாட்டோம் என்று தங்களின் தூதரிடம் முரண்டுபிடித்தார்கள். அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டார்கள். வாக்குறுதிகளை மறந்தார்கள். பசுமாட்டை அறுக்குமாறு அல்லாஹ் இட்ட கட்டளையை நிறைவேற்றாமல் அதனைத் தட்டிக்கழிக்க வீண்விதண்டாவாதம் செய்தார்கள்.

இத்தனையையும் தாங்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பவர்கள் என்றும் அல்லாஹ் தங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வான், தங்களைத்தவிர அனைவரும் வழிகெட்டவர்கள்தாம் என்றும் கூறிக் கொண்டே செய்தார்கள். குர்ஆன் அவர்களின் இந்த வாதத்தை பொய்யென நிறுவுகிறது. யாரெல்லாம் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு என்பதையும் அவர்களுக்கு அச்சமோ கவலையோ இல்லை என்பதையும் நிலைநிறுத்துகிறது.

**********

இந்த தாக்குதல் – அது இந்தப் பாடத்தில் வந்துள்ளதாக இருக்கட்டும் இதற்கு அடுத்துள்ள பாடங்களில் வந்துள்ளதாக இருக்கட்டும் – யூதர்களின் வாதங்களை முறியடிப்பதற்கு, அவர்களின் சூழ்ச்சியையும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவர்கள் எதிர்ப்பதற்கான உண்மையான காரணங்களையும் வெளிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. அதேபோன்று முஸ்லிம்களுக்கு, அவர்களின் புதிய மார்க்கத்திற்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சிகளைக் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும் அவசியமானதாக இருந்தது.

அது மற்றொருபுறம் முஸ்லிம்களுக்கு முன்னர் பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கப்பட்ட சமூகத்தினர் சறுக்கிய சந்தர்ப்பங்களைத் தெளிவுபடுத்தி முஸ்லிம்களை எச்சரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இவற்றினூடாக முஸ்லிம்களுக்கு  வெளிப்படையான, மறைமுகமான அறிவுரைகளும் கூறப்படுகின்றன.

அன்று மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் இந்த அறிவுரைகளின்பால் மிகவும் தேவையுடையதாக இருந்தது. எல்லா காலகட்டங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகம் இந்தக் குர்ஆனை அகப்பார்வையோடு ஆழ்ந்து படிக்கவும் அதிலிருந்து தலைமைத்துவ இறைவழிகாட்டுதல்களைப் பெறவும் எப்போதும் அவர்களுக்கு எதிராக தீட்டப்படும் எதிரிகளின் பயங்கரமான, மோசமான சூழ்ச்சிகளை எவ்வாறு முறியடிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும் தேவையுடையதாக இருக்கின்றது. ஈமானிய ஒளியைப் பெறாத, இரகசியமானதையும் வெளிப்படையானதையும் அறிவிக்கும் இந்தத் தலைமையிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறாத உள்ளத்தால் இந்த சூழ்ச்சிகளையும், சதித் திட்டங்களையும் அறிந்துகொள்ள முடியாது.

பின்னர் குர்ஆன் எடுத்துரைக்கும் முறையிலும் அது எடுத்துரைக்கும் விசயங்களிலும் ஒத்திசைவு காணப்படுவதை நம்மால் காணமுடிகிறது. ஆதமின் சம்பவம் முடிவடைவதோடு இந்தச் சுற்று தொடங்குகிறது. ஆதமின் சம்பவத்திலிருந்து கிடைக்கும் படிப்பினைகளையும் பாடங்களையும் நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளோம். குர்ஆனில் கூறப்படும் சம்பவங்களுக்கும் அவை எடுத்துரைக்கப்படும் சூழல்களுக்கும் மத்தியில் முழுமையான ஒத்திசைவு காணப்படுகிறது. (விரிவாக வாசிக்க, பார்க்க அத்தஸ்வீருல் ஃபன்னீ ஃபில் குர்ஆன்)

முதலில், இந்த பூமியிலுள்ள அனைத்தையும் அல்லாஹ் மனிதனுக்காகவே படைத்துள்ளான் என்பதை வசனங்கள் நிறுவுகின்றன. பின்னர் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்ட ஆதமின் சம்பவம் தொடங்குகிறது. அதில் அல்லாஹ் அவரிடம் வாங்கிய வாக்குறுதி, வானவர்களைவிட அவரைக் கண்ணியப்படுத்தியது, அவர் தம் வாக்குறுதியை மறந்து பாவம் செய்தல், அதன்பிறகு வெட்கப்பட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல், அவன் அவருக்கு மன்னிப்பு வழங்கியது, பின்னர் இந்த அனுபவத்தோடு அவரை பூமிக்கு அனுப்பியது, தீமையின் குழப்பத்தின் அழிவின் ஆற்றல்கள் இப்லீஸின் வடிவில் வெளிப்படுதல், நன்மையின் சீர்திருத்தத்தின் ஆற்றல்கள் நம்பிக்கைகொண்ட மனிதனின் வடிவில் வெளிப்படுதல் ஆகிய விசயங்கள் கூறப்படுகின்றன.

பின்னர் வசனங்கள் இஸ்ராயீலின் மக்களுடன் பயணிக்கின்றன. அவை அவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதி, பின்னர் அவர்கள் அந்த வாக்குறுதியை மீறியது, அவன் அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகள், அவர்களின் நன்றிகெட்டத்தனம், அதன் காரணமாக அவர்கள் பிரதிநிதித்துவ அந்தஸ்திலிருந்து விடுவிக்கப்படுதல், அவர்களின்மீது இழிவு விதிக்கப்படுதல், அவர்களின் சூழ்ச்சியிலிருந்தும் அவர்கள் சறுக்கிய சந்தர்ப்பங்களிலிருந்தும் நம்பிக்கையாளர்கள் எச்சரிக்கப்படுதல் ஆகியவற்றைக் குறித்து குறிப்பிடுகின்றன. இங்கு, பிரதிநிதியாக ஆக்கப்பட்ட ஆதமின் சம்பவத்திற்கும் பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கப்பட்ட இஸ்ராயீலின் மக்களின் சம்பவத்திற்கும் வெளிப்படையான தொடர்பு காணப்படுகிறது. இரு சம்பவங்களுக்கு இடையிலும் அவை எடுத்துரைக்கப்பட்ட முறையிலும் தெளிவான ஒத்திசைவு காணப்படுகிறது.

இங்கு குர்ஆன் இஸ்ராயீலின் மக்களுடைய சம்பவத்தை அப்படியே எடுத்துரைப்பதில்லை. அது குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களை, நிகழ்வுகளை சுருக்கமாக அல்லது தேவையான சமயங்களில் விரிவாக எடுத்துரைக்கிறது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களிலும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவற்றில் குறைவான எண்ணிக்கையில் இருந்த நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்தும் நோக்கில் அழைப்பியல் அனுபவங்களாகவும் ஆரம்ப காலம்தொட்டு ஈமானியப் பயணம் எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும்விதமாகவும் மக்காவின் சூழலுக்கு ஏற்றவாறு முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும்விதமாகவும் எடுத்துரைக்கப்பட்டன. ஆனால் மதீனாவில் அருளப்பட்ட இந்த அத்தியாத்தில் யூதர்களுடைய எண்ணங்களை, அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தும்விதமாகவும் அவர்கள் சறுக்கிய சந்தர்ப்பங்களை எடுத்துரைத்து அவற்றிலிருந்து முஸ்லிம்களை எச்சரிக்கும்விதமாகவும் வசனங்கள் அருளப்பட்டன. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களின் நோக்கமும் மதீனாவில் அருளப்பட்ட  அத்தியாயங்களின் நோக்கமும் வேறுவேறாக இருப்பதால் அவற்றில் எடுத்துரைக்கப்படும் முறையும் வேறுபடுகிறது. ஆயினும் இங்கும் அங்கும் எடுத்துரைக்கப்படும் யூதர்களின் வழிகேடுகளும் கீழ்ப்படியாமையும் ஒன்றுதான்.

மக்காவிலும் மதீனாவிலும் அருளப்பட்ட இஸ்ராயீன் மக்களின் சம்பவத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, அவை எடுத்துரைக்கப்படும் முன்பின் வசனங்களோடு முழுமையாக ஒத்துப் போகக்கூடியவை என்பதையும் அவற்றின் நோக்கங்களை முழுமைப்படுத்தக்கூடியவை என்பதையும் அறிந்துகொள்ள முடியும். இந்தச் சம்பவம் இதற்கு முன்வந்துள்ள விசயங்களோடு முழுமையாக ஒத்துப் போகிறது. இதற்கு முன்னுள்ள வசனங்கள், மனிதன் கண்ணியப்படுத்தப்பட்டது,  அவனிடம் வாங்கப்பட்ட வாக்குறுதி, அவன் வாக்குறுதி மறந்து பாவம் செய்தல், மனித சமூகத்தின் ஒரே மூலம், அல்லாஹ்வின் மார்க்கங்களுக்கிடையே ஒத்திசைவு, மனிதனிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதிநிதித்துவ பணியிலிருந்து அவன் நீங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைக் குறித்துப் பேசுகின்றன. அதனை நிராகரிப்பவன் மனிதனின் தனித்தன்மையையே நிராகரிக்கிறான். அவன் விலங்குகள் உலகில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.

இஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.

இந்த சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு நாம் நேரடியாக குர்ஆனிய வசனங்களை அணுகுவோம்.

(தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரி)

Related posts

Leave a Comment