உரைகள் கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஜப்ரிய்யா, கதரிய்யா, முர்ஜிஆ சிந்தனைப் பள்ளிகள்
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

Loading

எல்லா முஸ்லிம்களும் ஒரே வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்றும், ஒரே நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நாம் ஏற்கனவே கூறினோம். பல்வேறு  முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டாலும் அவர்களுக்கென தனி வரலாறோ நாகரிகமோ இல்லை என்பதையும், அனைவரும் ஒரே வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்பதையும் முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, அனைவரும் இந்த வரலாறை எந்த அளவுக்கு கவனமாக ஆய்வுசெய்ய முடியுமோ அந்த அளவுக்கு கவனமாக ஆய்வுசெய்ய வேண்டும். அடுத்ததாக, இவ்வரலாற்றை மூன்று பரிமாணங்களில் அணுகலாம் என்றும் பார்த்தோம். இதனடிப்படையில் முதலாவதாக ஆரம்பகால இஸ்லாத்தின் அரசியல் கூறுகளை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். பிரிவினைகளும் பொருந்திப் போகாத கருத்துகளும் உருவான காலகட்டம் அது.

நம் வரலாற்றின் இரண்டாவது பரிமாணம், — அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வார்த்தைகள் பிரதிநிதித்துவம் செய்யும் விரிந்த பொருள் கொண்ட — இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் கொண்டுள்ள கோட்பாடுகளோடு தொடர்புடையது ஆகும். இதைத்தான் இந்த அத்தியாயம் உட்பட அடுத்த சில அத்தியாயங்களில் நாம் பார்க்க உள்ளோம். ஆரம்பகாலங்களில் தோன்றி இன்றுவரை நம் மத்தியில் நீடிக்கும் — சச்சரவுகளை ஏற்படுத்தி, உள்நாட்டுப் போர்களைத் தூண்டி, சில முஸ்லிம்களின் மனதில் ‘இது நம் பள்ளிவாசல் அல்ல’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஒரு பள்ளிவாசலை தவிர்த்து மற்றொரு பள்ளிவாசலுக்கு செல்லத் தூண்டுகிற — அரசியல் வேற்றுமைகளைப் போலன்றி, மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் பொதுப்புத்தியில் வேரூன்றாத சில கோட்பாட்டுரீதியான வேற்றுமைகளும் நம் வரலாற்றில் உள்ளன. இத்தகைய வித்தியாசங்களை ஒருவர் ஆங்காங்கே காண முடியும் என்றாலும் அவை முஸ்லிம்களை தனித்தனியாக வரையறுக்கும் அளவுக்கு தீவிரமடையவில்லை.

இதைத் தொடர்ந்து, நம் வரலாற்றின் மூன்றாவது பரிமாணமான சட்டவியல்ரீதியிலான (ஃபிக்ஹு) வேறுபாடுகளை அடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம். பல வகை சட்டவியல் சிந்தனைப் பள்ளிகள் இருப்பதை நாம் மேலோட்டமாக அறிவோம். எனினும், அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நம்மிடையே ஒரு மேலோட்டமான கருத்தே நிலவுகிறது. ஆதலால் அதுகுறித்து பின்னர் விளக்கமாகப் பார்ப்போம்.

இப்போது, இஸ்லாத்தின் ஆரம்பகாலங்களில் முஸ்லிம்கள் தோற்றுவித்த கோட்பாட்டு வேறுபாடுகளின் மீது ஒரு பார்வையைச் செலுத்தியவர்களாக இந்த அத்தியாயத்தைத் தொடங்குவோம். நாம் அறிந்த பெரும்பாலான வேறுபாடுகள், அநேகமாக கொள்கையளவில் மட்டுமே வெளிப்படுகின்றன. இவற்றில் நடைமுறை சம்பந்தமானது எதுவும் இல்லை. பிற மதங்களில் காணப்படும் சமயக் கொள்கை சார்ந்த வேறுபாடுகளைப் போல, அல்லது பிற மெய்யியல் சிந்தனைகளில் காணப்படும் தத்துவ விவாதங்களைப் போலத்தான் இந்தக் கோட்பாட்டு வேறுபாடுகளை நாம் அணுக வேண்டும்.

இறைவன் யார்?

ஆரம்பமாக நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம்பகமான வரலாற்று ஆவணங்களின் வரிசையில் மைய ஆதாரமாக விளங்கும் திருக்குர்ஆன் வழியாகவும் பிற வரலாற்று நூல்களின் வழியாகவும் இறைத்தூதரின் காலத்துக்கு சென்று பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படுகிறது. அதாவது அந்தக்கால மக்கள் யாரும் இறைத்தூதரிடம், “அல்லாஹ் யார் என்று நீங்கள் எங்களுக்கு விளக்க முடியுமா?” என்று கேட்டதே இல்லை. அவர்கள் இறைத்தூதரை அணுகி பல விஷயங்களைப் பற்றி கேட்டுள்ளார்கள் என்பதை திருக்குர்ஆனின் பல வசனங்களில் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக, “ يَسْـــَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ  — பிறையைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்” (திருக்குர்ஆன் 2:189), மேலும் “يَسْـــَٔلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ — மாதவிடாய் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்” (திருக்குர்ஆன் 2:222), “وَیَسۡءَلُونَكَ عَن ذِی ٱلۡقَرۡنَیۡنِۖ — துல்கர்னைன் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்” (திருக்குர்ஆன் 18:83), மேலும் “يَسْــٴَــلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَـرَامِ قِتَالٍ فِيْهِ‌ؕ — புனித மாதங்கள் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்” (திருக்குர்ஆன் 2:217) போன்ற பல வசனங்களை நாம் திருக்குர்ஆனில் பார்க்க முடியும். இப்படி பல விஷயங்களைப் பற்றி அவர்கள் கேட்ட போதிலும், யாருமே — அவர்கள் மக்கா, மதீனாவாசிகளாக இருந்தாலும் சரி, அல்லது யூதர்களாக இருந்தாலும் சரி — “இறைவன் யார் என்று நீங்கள் விளக்க முடியுமா? எதனால் அவன் இறைவன் ஆகிறான்?” போன்ற கேள்விகளைக் கேட்டதாக ஒரு வசனம் அல்லது வரலாற்றுக் குறிப்புகூட இல்லை. ஆரம்பத்திலேயே இதைக் குறிப்பிடுவது மிக அவசியமாகிறது. ஏனெனில், நாம் பார்க்கப் போகும் பல கோட்பாட்டுத் திரிபுகள் அல்லது வித்தியாசங்கள் அல்லது முரண்பாடுகள் அனேகமாய் இதை ஒட்டியே உள்ளன.

விதி

தலைப்புக்குள் நுழையும்முன், இஸ்லாத்திலிருக்கும் பல்வேறு கோட்பாட்டுச் சிந்தனைகளுடன் தொடர்புடைய முதன்மையான ஒரு விஷயத்தைக் குறித்து நாம் பார்க்க வேண்டும். அதுதான் ‘அல்கதர்’. இப்பதம் பொதுவாக ‘விதி’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ‘மனிதனின் செயல்பாடுகளில் அல்லாஹ்வின் தலையீடு உள்ளதா என்று அறிய முற்படுவது’ என்று இதற்கு விளக்கமளிக்கலாம். இதுகுறித்து முஸ்லிம்களிடையே பல கருத்துகள் உருவாகி நாளடைவில் இணக்கம் காண முடியாத அளவுக்கு எதிர்எதிராக அவை வளர்ந்து சென்றன. இவற்றை விரிவாகப் பார்க்கும்முன் அத்தியாயம் ஆலஇம்றானில் வரும் இவ்வசனத்தை நினைவுபடுத்த வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகாலங்களில் முஸ்லிம்கள் கொண்டிருந்த பல்வேறு கோட்பாடுகளை அறியும் முயற்சியில் இறங்கியுள்ள நாம், மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய வசனம் இது. இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுவதாவது,

“அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை முதஷாபிஹாத் (பல அந்தரங்கங்களைக் கொண்ட வசனங்கள்) ஆகும். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனை பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள், ‘அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதாம். நாங்கள் அவற்றை நம்பிக்கை கொள்கிறோம்’ என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 3:7)

அதாவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள வேதமாகிய திருக்குர்ஆனில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்காத, தெளிவான அர்த்தம் கொண்ட வசனங்கள் (முஹ்கமாத்) கணிசமான அளவில் உள்ளன. அதேவேளை வெவ்வேறு விளக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வசனங்களும்  (முதஷாபிஹாத்) இதில் உள்ளன. இத்தகைய வசனங்களை நீங்கள் ஒரு விதத்தில் புரிந்துகொள்ளக்கூடும்; அதேசமயம் மற்றொருவர் மற்றொரு விதத்தில் புரிந்துகொள்ளக்கூடும். அல்லாஹ்வே கூறாமல் இச்செய்தியை நாம் அறிய முடியாது. இதைச் சொல்வதன் மூலம் இவற்றை கவனமாக அணுகுமாறு அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான். எனினும், ‘வெவ்வேறு விளக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வசனங்கள்’ என்று சொல்வதால், அவை முரண்படும் விளக்கங்களைக் கொடுக்கும் என்றோ, எதிர்எதிர் கருத்துகளை வெளிப்படுத்தும் என்றோ பொருள் அல்ல. மாறாக இணங்கிச் செல்லும் தனித்தனி விளக்கங்களாகவோ, அல்லது ஒன்றையொன்று பலப்படுத்தும் கருத்துகளாகவோதான் அவை இருக்கும். அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பாடுகள் இல்லை என்பது தெளிவு. உறுதியான அறிவு உள்ளவர்கள் இதை, ‘திருக்குர்ஆனின் பெரும்பான்மையான வசனங்களில் பொதிந்துள்ள தெளிவுத் தன்மையானது, பிற — தெளிவு குறைவான — வசனங்களை தாங்கிச் சுமக்கும்’ என்று புரிந்துகொள்வார்கள்.

அடுத்து, மற்றொரு வசனத்தைப் பார்ப்போம். அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பரம எதிரிகளான இணைவைப்பவர்களின் (முஷ்ரிகீன்) பண்பை இது தெளிவுபடுத்துகிறது.

(அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள்) “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணைவைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) விலக்கி இருக்கவும் (ஹறாம்) மாட்டோம்” என்று கூறுவார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும்வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) “இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  (திருக்குர்ஆன் 6:148)

இந்த வசனம் முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. இதன்மூலம் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் தத்துவ விவாதங்கள் புதிதானவை அல்ல என்றும், ஏற்கனவே இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்பட்டன என்றும் அறிய முடிகிறது. அதாவது நிராகரிப்பாளர்கள் “அல்லாஹ் நாடாமல் நாங்கள் இணைவைப்பவர்கள் ஆகிவிடவில்லை” என்று கூறினர். ‘அல்லாஹ்வின் நாட்டத்தால் நடந்த ஒன்றுக்கு எங்கள்மீது ஏன் பழி சுமத்துகிறீர்கள்!’ என்பது அவர்களின் வாதமாக இருந்தது. தங்களுடைய வாழ்க்கை முறைகளுக்கும் சொந்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்க முடியாமல் பிறர்மீது பழி சுமத்தும் சுபாவத்தை இங்கு நாம் பார்க்க முடிகிறது.

‘மனிதன் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென்பது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளதா’ என்பது போன்ற கேள்விகள் இறைத்தூதர் காலத்திலும் எழுந்தன. “நாங்கள் இணைவைப்பவர்களாக (முஷ்ரிகீன்) இருக்க வேண்டும் என்று எங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள்மீது பழி சுமத்தாதீர்கள்” என்று அவர்கள் கூறினர்.

உமரின் ஆட்சிக் காலத்தில், இன்றைய ஜோர்டான் நாட்டுப் பகுதியில் ஒரு தொற்று நோய் பரவியது. அப்போது இராணுவத்தினருக்கும் பிற மக்களுக்கும் ‘அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனித விவகாரங்களில் இறைவனின் தலையீடு, மனிதனுக்கு சுயவிருப்பத் தீர்மானம் இருக்கிறதா அல்லது என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீருமா என்பது போன்ற கேள்விகள் அப்போது எழுந்தன. விதியை வேறு விதத்தில் புரிந்துகொண்ட சில மக்கள் மத்தியில் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியது. “அல்லாஹ்வின் விதியிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறீர்களா? தொற்று நோய் பாதித்த இடத்திலிருந்து விலகியிருப்பதன்மூலம் அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?” என்று அவர்கள் கேட்டனர். இதற்கான பதில் ஃகலீஃபா உமரிடமிருந்தே வந்தது. அவர் கூறினார்: “நாங்கள் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து மற்றொரு விதிக்குச் செல்கிறோம் — நஃபிர்ரு மின் கதரில்லாஹ் இலா கதரில்லாஹ்.” விதிகுறித்து கண்மூடித்தனமாக இல்லாமல் அறிவுபூர்வமான ஒரு புரிதலை இங்கு காண முடிகிறது.

இதேபோல் மற்றொரு சம்பவம் உஸ்மான் காலத்தில் நடந்தது. அவரது இல்லத்தில் அவரைச் சிறைப்பிடித்த கிளர்ச்சியாளர்கள், அவர்மீது கற்களை வீசத் துவங்கினர். அப்போது அவர்களிடம், “நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இவரை எங்களுக்குப் பிடிக்கவில்லை. இவரை பதவியிலிருந்து அகற்ற விரும்புகிறோம். ஆகவே, இவரை எதிர்த்து இவர்மீது கற்களை வீசுகிறோம்”, என்றனர். மேலும், “இதை நாங்கள் செய்யவில்லை. அல்லாஹ்தான் இதைச் செய்கிறான். இது மனிதனின் செயல் அல்ல” என்று கூறினர். பின்வரும் வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டதால் அக்குழப்பம் ஏற்பட்டது.

“(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்லர், அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள்மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவனாகவும், (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.” (திருக்குர்ஆன் 8:17)

அவர்கள் இந்த வசனத்தின் அர்த்தத்தை அதன் பின்னணியிலிருந்து பிரித்தெடுத்து தவறாக விளக்கம் அளிக்க முற்பட்டனர். ஆனால், இதற்கு பதிலளித்த  உஸ்மான், “சரி, அல்லாஹ்தான் என்மீது கல் வீசுகிறான் எனில் எல்லா கற்களும் என்னைத் தாக்கியிருக்க வேண்டுமே? மாறாக ஏன் பலமுறை குறி தவறி எங்கோ வீசுகிறீர்கள்?” என்று கேட்டார்.

இவ்வாறாக ‘அல்லாஹ் விதித்ததால்தான் நாங்கள் இதைச் செய்கிறோம். நாங்களாக எதையும் செய்யவில்லை. ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதில் எங்கள் தெரிவு எதுவும் இல்லை. அல்லாஹ்தான் இதைச் செய்கிறான்’ என்று சொல்லும் மனநிலை மக்கள் மத்தியில் அன்றே இருந்ததை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. எனினும், அந்தக் காலகட்டத்தில் அவை முதிர்ச்சியடையாத எண்ணங்களாக மட்டுமே இருந்தன. இம்மக்களின் எண்ணங்களை விளக்கும் வகையிலான கோட்பாடுகளோ தத்துவங்களோ அப்போது உருவாகவில்லை. பிற்காலத்தில்தான் இதுகுறித்த விவாதங்களும், கொள்கைகளும் உருவாயின.

இஸ்லாமிய மெய்யியல்

ஃகவாரிஜ்களின் காலத்தில் இந்த விவகாரம் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தது. இஸ்லாமியச் சட்டவியலில் பெரும்பாவங்கள் செய்தவர்கள் ‘முர்தகிபுல் கபீறா’ என்று அழைக்கப்பட்டனர். ஃகவாரிஜ்கள் இவர்களை நிராகரிப்பவர்கள் (காஃபிர்கள்) என்றனர். அதாவது பெரும்பாவங்களைச் செய்தவர்கள் ‘நிராகரிப்பாளர்கள்’ என்றனர். இது சில முஸ்லிம்களை சிந்திக்கச் செய்தது. இதற்கு முன்னர் இதுகுறித்து யாரும் பெரிதாகச் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். எனினும், இப்போது இஸ்லாம் பல திசைகளிலும் விரிவடைந்துகொண்டிருந்தது. இதுவரை மக்கா, மதீனா பகுதிகளைச் சுற்றியே பரவியிருந்த இஸ்லாம் இப்போது பல்வேறு சிந்தனைகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கொண்ட பல பகுதிகளிலும் பரவிக்கொண்டிருந்தது. பாரசீக, கிரேக்க, ரோம, எகிப்திய நாகரிகங்கள் கோலோச்சிய பகுதிகளிலும் இஸ்லாம் விரிவடைந்தது. இதனால் மக்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. ஏற்கனவே முஸ்லிம்களாக இருந்தவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்வதும் புதிய முஸ்லிம்கள் மக்கா, மதினாவுக்கு வருவதுமாக நிலைமை மாறியது. இதனால் பலவகை சிந்தனைத் தாக்கங்களுக்குள்ளான மக்கள், பல விஷயங்கள்குறித்து கேள்வி எழுப்பினர்.

இதுதான் சிலர் சொல்லும் ‘இஸ்லாமிய மெய்யியலின்’ தொடக்கம் ஆகும். நாம் அறிந்த வரையில் இறைத்தூதர் காலத்தில் இஸ்லாமிய மெய்யியல் (Islamic Philosophy) என்ற ஒன்று இருக்கவில்லை. அன்று திருக்குர்ஆனின் வார்த்தைகள், இறைத்தூதரின் சொற்கள் என எல்லாமே மக்கள் மனதில் தெளிவாகப் பதிந்திருந்தன. அவர்களின் தாய் மொழியான அறபியில்தான் இறைவனின் சொற்களும் இறைத்தூதரின் சொற்களும் இருந்தன. இவற்றை விளங்கிக்கொள்வதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.  இதனால் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்புகுறித்து அவர்களின் மனதில் எந்தக் கேள்வியும் எழவில்லை.

ஆனால், அறபியாவிற்கு உள்ளும் புறமும் மக்கள் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில் பல கேள்விகள் எழுந்தன; புதிய சிந்தனைகள் உருவாயின. இவ்வாறு உருவான இஸ்லாமிய மெய்யியலின் முதல் பிரச்சினை அல்லாஹ்வின் பண்புகள் பற்றியதாக இருந்தது. அதாவது, அல்லாஹ் இருக்கின்றான். அது அல்லாஹ்வின் சாரம் (தாத்து). அதேபோல அல்லாஹ்வின் பண்புகளும் (ஸிஃபத்) இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறானவையா என்று சிலர் கேள்வி எழுப்பினர். அல்லாஹ்வையும் அவனது பண்புகளையும் விவரிப்பது எப்படி என்று அவர்கள் கேட்டனர். நம்மிடையே உருவான வித்தியாசங்களும் மாற்றுக் கருத்துகளும் இங்குதான் தொடங்கின. அல்லாஹ்வைப் பற்றி கிட்டத்தட்ட விரிவான, மனித அறிவுக்கு உட்பட்ட விளக்கங்களை மனிதன் தேட முற்படும்போது இதுதான் நடக்கும். இதை நாம் எல்லா காலங்களிலும் பார்க்க முடியும்.

இறைத்தூதரிடமோ முதல் தலைமுறை முஸ்லிம்களிடமோ இக்கேள்வி கேட்கப்பட்டிருந்தால் என்ன பதில் கிடைத்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். ‘அவை ஒன்று என்று நிறுவினாலும் சரி, இல்லை வெவ்வேறானவை என்று நிறுவினாலும் சரி. இதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? இது தேவையற்ற கேள்வி’ என்றுதான் அவர்கள் பதிலளித்திருப்பர். ஆனால் மெய்யியல் அறிவில் முற்றிய சிலர், இத்தகைய விவாதங்களைச் செய்வதன்மூலம் ‘மகத்துவமிக்க அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிந்துகொள்வது எவ்வாறு?’ என்ற கேள்விக்கு திருப்திகரமாக பதிலளித்துவிட்டதாக நினைத்தார்கள்.

அடுத்ததாக அவர்களின் பார்வை குர்ஆனின் பக்கம் திரும்பியது. ‘குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு (கலாமுல்லாஹ்) எனில், அது அவனது பண்புகளின் ஒரு பகுதியா?’ என்று கேள்வி எழுப்பினர். ஏனெனில், குர்ஆன் என்பது மனிதன் பயன்படுத்தும் சொற்களால் ஆனது. எனில் ‘மனிதச் சொற்கள் இறைவனின் ஒரு பகுதியா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் நடைபெற்றன. இந்த விவாதம் வளர்ந்து சென்று அப்பாசியாக்கள் காலத்தில் உச்சத்தை அடைந்து ‘குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா?’ என்ற கேள்வி எழுந்தது. அதாவது ‘அல்லாஹ்வின் வாக்கு படைக்கப்பட்டதா? இல்லையா?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு இருவேறு பதில்கள் அளிக்கப்பட்டன. ஒரு குழு, ‘குர்ஆன் (அல்லாஹ்வின் வாக்கு) படைக்கப்பட்டது அல்ல’ என்றது. மற்றொரு குழு, ‘இல்லை. அது படைக்கப்பட்டதுதான்’ என்றது.

இவ்வாறாக, முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையவை அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில் போதுமானளவு விவரிக்கப்படாத விவகாரங்கள்’ என்று சிலர் நினைத்த விஷயங்களை விவரிக்க முற்படுவதோடு தொடர்புடையது என்று பார்க்க முடிகிறது.

மனிதன் சுதந்திரமானவனா, இல்லையா என்ற கேள்வியைச் சுற்றி இவை விவாதிக்கப்பட்டன. நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், அவை ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டது என்பதால் செய்கிறோமா, அல்லது நம் சுயவிருப்பத் தீர்மானத்தை செயல்படுத்துவதால் செய்கிறோமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அக்கால மக்கள் சொன்னவற்றை ஆராயும்போது இதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்று அறிகிறோம். இவற்றுள் சில அரசியல், சட்டரீதியான பிரச்சினைகளையும் உள்ளடக்கியவையாக இருந்தன. வெறுமனே கோட்பாட்டளவில் மட்டும் நாம் இதைப் பேசவில்லை. ஏனெனில், சில விவகாரங்கள் சட்டரீதியான விளைவுகளையும், சிலசமயம் சமூக அளவிலான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன.

எடுத்துக்காட்டாக, ‘பெரும்பாவங்கள் செய்த ஒருவர் (முர்தகிபுல் கபீறா) முஸ்லிமா அல்லது நிராகரிப்பவரா?’ என்ற கேள்வியை எடுத்துக்கொள்ளலாம். அவர் முஸ்லிம் என்றால் ஒருவகை சட்டங்கள் அவருக்குப் பொருந்தும்; முஸ்லிம் அல்லாதவர் என்றால் வேறுவகைச் சட்டங்கள் பொருந்தும். ஆகவே, இவ்விவகாரங்கள் எப்போதும் கோட்பாட்டளவில் மட்டுமின்றி, நடைமுறைரீதியான விளைவுகளையும் ஏற்படுத்துவதாக இருந்தன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற இரண்டுவகை சிந்தனைப் பள்ளிகளைப் போலன்றி, கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் நீடித்து நிலைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, அரசியல் சிந்தனைப் பள்ளிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இன்றும்கூட ஒருவரைப் பார்த்து ‘சுன்னீ’ என்றோ, ‘ஷீஆ’ என்றோ, ‘ஃகாரிஜீ’ என்றோ அழைக்கிறோம். இன்றும்கூட இவை செல்வாக்கு செலுத்துகின்றன. அதேபோலத்தான் சட்டவியல் சிந்தனைப் பள்ளிகளும். நம்மிடையே ஹம்பலீ, ஜஅஃபரீ, ஷாஃபிஈ அல்லது ஸைதீ என்று பலர் இருப்பதைப் பார்க்கிறோம். இவையனைத்தும் இன்றும் உயிரோடு இருக்கின்றன. ஆனால் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை.

ஜப்ரிய்யா

முதல் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளியான ‘ஜப்ரிய்யா’வை எடுத்துக்கொள்வோம். இவர்களின் கருத்துப்படி மனிதன் சுயவிருப்பத் தீர்மானம் கொண்டவன் அல்லன். அதாவது, மனிதனின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் விதித்ததால் மட்டுமே நடக்கிறது; மனிதனின் தீர்மானம் எதுவும் இதில் கிடையாது. இத்தகைய வாதங்கள் உமையா, அப்பாசிய்யா ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டன. இவற்றை அவ்வரசுகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில், முஸ்லிம் சமூகத்தை அடக்கி அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆட்சியாளர் ஒருவர், “அல்லாஹ் விதித்ததால்தான் நான் இதைச் செய்கிறேன்” என்று சொல்லி தப்பித்துக்கொள்ள இது உதவும். அத்தகைய ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழத் தயாராகும் மக்களைக் கட்டுப்படுத்த இத்தகைய வாதங்கள் துணைபுரியும்.

இப்படியாக இது சில காலம் நீடித்தது. ஆனால், இன்றைய உலகை எடுத்துக்கொள்ளுங்கள். பள்ளிவாசல்களிலோ இஸ்லாமியக் கூட்டங்களிலோ ஒருவரை பார்த்து, ‘இவர் ஒரு ஜப்ரீ’ என்று சொல்ல முடியுமா? இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால், ஒரு காலத்தில் இது நிதர்சனமாக இருந்தது. ஆக, இச்சிந்தனைப்பள்ளி மறைந்துபோனது வரலாற்றுப்போக்கில் நடந்த ஒரு நன்மை என்றே சொல்ல வேண்டும். அதன் கூறுகள் வேண்டுமானால் ஆங்காங்கே இருக்கக்கூடும். மனதளவில் ஒரு எல்லைக்குத் தள்ளப்பட்ட ஒருவர் இத்தகைய கருத்துகளை சொல்லக்கூடும். எனினும், பள்ளிவாசல்களில் அறிஞர்களோ ஆசிரியர்களோ இத்தகைய கருத்துகளைப் பரப்புவதை நாம் பார்க்க முடிவதில்லை. ஆனால் இதன் பொருள், இத்தகைய ஒன்று மீண்டும் உருப்பெறாது என்பது அல்ல. அதற்கான சூழல் உருவாகும்போது அத்தகைய சிந்தனைகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எனினும், இப்போதைக்கு இது இல்லை என்றே சொல்லலாம்.

இத்தகைய சிந்தனைப்போக்குக்கு பதிலளிக்கும் வசனங்கள் திருக்குர்ஆனில் இருக்கவே செய்கின்றன. அத்தியாயம் அஃறாஃபில் உள்ள ஒரு வசனத்தைப் பார்ப்போம்: அல்லாஹ் கூறுவதாவது,

“எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்துவிடுவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் — ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை (தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக்கொள்வார்கள்; ஏனெனில், அவர்கள் நம் அத்தாட்சிகளை பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றை புறக்கணித்தும் இருந்தார்கள்.” (திருக்குர்ஆன் 7:146)

இது ஒரு ‘சுன்னாஹ்’. ‘சுன்னாஹ்’ என்றால் சமூக நியதி என்று பொருள். சிலர் சுன்னாஹ்வின் பொருளை வெறும் ‘பாரம்பரியம்’ என்ற அர்த்தத்தில் சுருக்கிவிடுகிறார்கள். ஆனால், இச்சொல்லின் குர்ஆனிய அர்த்தம், ‘சமூக நியதி’ என்ற விரிந்த பொருளில் அமைந்துள்ளது. “உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கும் சமூக நியதிகள் இருந்தன — கத் ஃகலத் மின் கபுலிகும் சுனன்” (திருக்குர்ஆன் 3:137) என்கிறது குர்ஆன். எனவே மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறவருவது, ‘அகங்காரம் மக்களின் சமூகப் பண்பாகவே மாறிவிடும்போது, அவர்களுக்கு இறை அதிகாரத்தின் வெளிப்பாடு மறைக்கப்பட்டுவிடுகிறது. என்னதான் முயற்சி எடுக்கப்பட்டாலும் அவர்கள் அதைப் பார்க்க முடியாது.’ மூசாவை எடுத்துக்கொள்ளுங்கள். அன்று எகிப்தின் வல்லாட்சிக்கு எத்தனை முறை அற்புதங்கள் காட்டப்பட்டன?! தண்ணீர் சிவப்பாக மாறியது; பேன்களும் தவளைகளும் நிரம்பி வழிந்தன. எப்படியாவது மூசாவை வீழ்த்திவிட வேண்டும் என்று அழைக்கப்பட்ட மந்திரவாதிகளிடம் அவர் சவால்விட்டு வென்றதையும் அவர்கள் பார்த்தனர். இத்தனைக்குப் பிறகும் என்ன நடந்தது! அகங்காரத்தோடு அதிகாரத்தில் திளைத்திருந்த அம்மக்கள் இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆகவே அல்லாஹ், “எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்துவிடுவேன்” (திருக்குர்ஆன் 7:146) என்று சொல்வதால்  ‘அல்லாஹ்வின் அத்தாட்சிகளுக்கும் அவனுடைய அதிகாரத்துக்கும் அவர்கள் செவிசாய்க்காமல் இருக்குமாறு அவன் விதித்துவிட்டான்’ என்பது இதன் பொருள் அல்ல. ஆகவே, இம்மக்கள் புரிந்து வைத்துள்ளது போல, நினைத்ததைச் செய்துவிட்டு ‘அல்லாஹ் விதித்ததால்தான் நாங்கள் இதைச் செய்தோம். ஆகவே, அல்லாஹ்வும் இதை அனுமதித்துள்ளான்’ என்று சொல்வதற்கு குர்ஆனில் எந்த அடிப்படையும் இல்லை.

கதரிய்யா

அடுத்து, ‘ஜப்ரிய்யா’வுக்கு நேர் எதிரான சிந்தனைப் பள்ளியாக ‘கதரிய்யா’ இருந்தது. இதன்படி, ‘மனிதனின் எந்தச் செயலிலும் அல்லாஹ்வின் தலையீடு சிறிதும் இல்லை. மனிதன் தானாகவே எல்லாவற்றையும் செய்கிறான்’. இதுவும் ஒரு துல்லியமான கோட்பாடு இல்லை. ஏனெனில், நாம் செய்யும் பல செயல்கள் அல்லாஹ்வின் நாட்டத்தாலேயே நடக்கின்றன. எனினும் ‘ஜப்ரிய்யா’வில் இருந்த ஒரு கோளாறை கதரிய்யா சரி செய்தது. ‘ஜப்ரிய்யா’ கோட்பாட்டில், மனிதன் தன் செயல்களுக்குப் பொறுப்பேற்காமல் தப்பித்துக்கொள்ள வழியிருந்தது. ஆனால் ‘கதரிய்யா’ கோட்பாட்டில் அவ்வாறு செய்வதற்கு வழி இல்லாமல் போனது.

இவ்வாறாக ‘ஜபரிய்யா’விலிருந்த பிழை ‘கதரிய்யா’வில் சரிசெய்யப்படுவதைப் பார்க்கிறோம். எனினும், மனிதனின் செயல்களிலிருந்து அல்லாஹ்வை விலக்கும்போது, அது கொஞ்சம் பாதை மாறிவிட்டதாகவே பார்க்கிறோம். இதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இன்று தன்னை ‘கதரீ’ என்று அழைத்துக்கொள்ளும் யாரையும் நாம் பார்க்க முடியாது. முஸ்லிம்களிடையே இருந்த இந்தப் பிரிவினை காலப்போக்கில் அழிந்துவிட்டது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

முர்ஜிஆ

கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் வரிசையில் அடுத்து வருவது ‘முர்ஜிஆ’. நான் இதைச் சொல்ல விரும்பவில்லை என்றாலும், இன்று தம்மை ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்’ என்று அழைத்துகொள்வோரின் விதிக்கப்படாத கோட்பாடாக ‘முர்ஜிஆ’ கோட்பாடு மாறிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் சொன்னது இதுதான்: “ஒருவர் எத்தகையவர் என்று தீர்மானிப்பதில் நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை.” இதுவும் பெரும்பாவங்கள் செய்த ஒருவர் (முர்தகிபுல் கபீறா) தொடர்புடையதாகவே இருந்தது.

ஜப்ரிய்யாவின் கருத்துப்படி, ஒருவர் தன் சுய விருப்பத் தீர்மானமின்றி பெரும்பாவத்தைச் செய்வதால், அல்லாஹ்வின் சம்மதத்துடனேயே அச்செயலைச் செய்கிறார். எனவே, அவர் ஒரு முஸ்லிம். கதரிய்யாவின் கருத்துப்படி, அவர் முழுச் சுதந்திரத்துடன், தன் சுய விருப்பத் தீர்மானத்தை செயல்படுத்தியவராக அச்செயலைச் செய்கிறார். எனவே, அவர் ஒரு நிராகரிப்பவர் (காஃபிர்). ஆனால் முர்ஜிஆக்கள், “அவரை முஸ்லிம் என்றோ நிராகரிப்பவர் (காஃபிர்) என்றோ நாங்கள் கூற மாட்டோம். இதை நாங்கள் அல்லாஹ்விடமே விட்டுவிடுகிறோம். நடந்த விஷயங்களை நாங்கள் புரிந்துகொண்டோம். எனினும், அவர்பற்றிய கருத்தை நாங்கள் தள்ளிப்போட விரும்புகிறோம். அவருடைய பண்பைத் தீர்மானிப்பதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்றனர். ‘முர்ஜிஆ’ என்றால் ‘தள்ளிப் போடுபவர்கள்’ என்று பொருள்.

ஃகவாரிஜ்களும் கொலை போன்ற பெரும்பாவங்கள் செய்தோரை நிராகரிப்பவர்கள்  என்றே அழைத்தனர் என்று அறிகிறோம். ஃகவாரிஜ்கள் மேற்கண்ட கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளை சார்ந்தவர்களுக்கு முன்னர் அல்லது அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்தபோதிலும், அவர்கள் தங்களை ‘கதரிய்யா’ என்றோ, ‘ஜபரிய்யா’ என்றோ, ‘முர்ஜிஆ’ என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இதே காலகட்டத்தில் தோன்றவிருக்கும் ‘முஃதஸிலா’ சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவர்களும் முர்ஜிஆக்களைப் போன்றே கூறினர். அவர்கள் கூறியதாவது, “பெரும்பாவம் செய்த ஒருவரை நிராகரிப்பவர் (காஃபிர்) என்றோ, முஸ்லிம் என்றோ நாங்கள் சொல்ல மாட்டோம். நாங்கள் சொல்வதெல்லாம் ‘அவர் நம்பிக்கையாளர் அல்லர் (ஃகைரு முஃமின்)’. தயவுசெய்து எங்களை நிர்பந்திக்காதீர்கள். மறுமையில் அல்லாஹ் அவர் குறித்து தீர்ப்பு கூறுவான். அவர் குறித்த கருத்தில் நாங்கள் பெரும்பான்மை முஸ்லிம்களோடு ஒத்துப்போகிறோம்”. பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து முர்ஜிஆக்களின் கருத்தாகவே இருந்தது.

இன்றும் நிலவும் இத்தகைய மனப்பாங்கை சுருக்கமாக, ஆனால் தெளிவாக எடுத்துச் சொல்லும் ஒரு வாக்கியம் பல நூல்களில் உள்ளது. மீண்டும் சிறிது தயக்கத்துடனேயே இதைச் சொல்கிறேன். ‘முர்ஜிஆ’க்கள் என்ற தலைப்பில் அது வராதபோதும், இன்று அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று அழைக்கப்படுவதன் கோட்பாடுகளில் அது இரகசியமாகப் பொதிந்து உள்ளது. அந்த வாக்கியமாவது, “நம்பிக்கை (ஈமான்) இருக்குமிடத்தில் எந்த தீமையான செயலும் அந்த நம்பிக்கையை களங்கப்படுத்திவிடாது. அதேபோல, நிராகரிப்பு (குஃப்ர்) இருக்குமிடத்தில் எந்த நற்செயலும் அந்நிராகரிப்பை மட்டுப்படுத்திவிடாது — லா யலுர்ரூ மா அல்ஈமானி தம்புன் கமா லா யன்ஃப ம பில்குஃப்ரி தா’அ.” முர்ஜிஆக்களும் இத்தகைய கருத்தையே  கொண்டிருந்தனர் என்று பார்க்கிறோம்.

மக்கள் இத்தகைய விவகாரங்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. தங்களை ‘சுன்னீ’கள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடம் ஓட்டகைப்போர், ஸிஃப்ஃபீன் போர் அல்லது உமையாக்களுக்கு எதிராக ஃகவாரிஜ்கள் நடத்திய போர் போன்றவற்றைப் பற்றி கேட்டால் அவர்களின் பதில் இப்படித்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, “யஸீது செய்ததுபற்றி எங்களுக்குத் தெரியும். ஆனால் அதுபற்றி நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை” என்றுதான் அவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் அவர்கள் யஸீதின் செயலை அங்கீகரிக்கிறார்கள் என்பதல்ல. மாறாக நடந்த விஷயங்கள்பற்றி வெளிப்படையாகக் கருத்து கூற அவர்கள் விரும்பவில்லை. மேலும், ஒரு அணியோடு அடையாளப்படுத்தப்பட அவர்கள் விரும்பவில்லை என்றும் கொள்ளலாம். பிரச்சினைகளை சரியாக அணுகாமல் தப்பித்துக் கொள்வதற்கான எளிதான வழி இது. இத்தகைய மனப்பாங்குதான் அவர்கள் மத்தியில் மறைவாக வியாபித்து இருக்கிறது.

ஒருசிலர் இதை உஸ்மானின் காலத்தில் சிலர் கொண்டிருந்த மனப்பாங்கின் நீட்சி என்று பார்க்கின்றனர். ஒட்டகை, ஸிஃப்ஃபீன் போர்களின் போது, அவற்றில் கலந்துகொள்ளாமல் ஒரு குழு இருந்தது. சஅது இப்னு அபீ வக்காஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அப்துர் றஹ்மான் இப்னு அபூபக்கர், அபூ பக்றதா (ஹதீஸ் அறிவிப்பாளர்) போன்றோர் மிகக் கறாராக நடுநிலை பேணினர். ஒரு சாரார் சரியானவர்கள், மற்றொரு சாரார் தவறானவர்கள் என்று சொல்ல அவர்கள் விரும்பவே இல்லை. “இவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் எங்களுக்குத் தெரியும். எனினும் யார் சரி, யார் தவறு என்று நாங்கள் சொல்லப்போவதில்லை” என்றனர்.

இத்தகைய மனப்பாங்கு, முக்கியமாக பின்வரும் சூழலில் வெளிப்பட்டது. அன்று போர், பிற காரணங்களுக்காக பல முஸ்லிம்கள் மக்கா, மதீனா, ஹிஜாஸ் பகுதியைவிட்டு வெளியேறி இருந்தனர். பத்துப்பதினைந்து ஆண்டுகள் கழித்து அவர்கள் திரும்பி வந்தபோது நிலைமை முற்றிலும் மாறியிருந்தது. அவர்கள் இவ்வாறு கூறினர்: “என்ன ஆயிற்று உங்களுக்கு! நாங்கள் இங்கிருந்து கிளம்பும்போது, எல்லாம் சரியாகத்தானே இருந்தது? இப்போது ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறீர்கள். இதில் எங்களையும் பங்கெடுக்கக் கூறுகிறீர்கள்! இல்லை! நாங்கள் இதில் பங்கெடுக்கப் போவதில்லை.” சில வரலாற்று நூல்களில் இத்தகையோர் ‘ஃகுஸா’ என்று அழைக்கப்படுகின்றனர். ‘ஃகுஸா’ என்றால் புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றுவதற்காகச் சென்ற வீரர்கள் என்று பொருள். இவர்கள் ‘ஷக்காகீன்’ என்றும் அழைக்கப்பட்டனர். ‘ஷக்’ என்றால் சந்தேகம் என்று பொருள். அவர்கள் சில விஷயங்களை சந்தேகத்தோடு அணுகியதால் ‘சந்தேகிப்பவர்கள் — ஷக்காகீன்’ என்று அழைக்கப்பட்டனர்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் சஅது இப்னு அபீ வக்காஸ் இவ்வாறு கூறினார், “பேசும் வாளை என்னிடம் கொடுத்து, அது யாரைக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறதோ, அதைக் கேட்டு நான் அவரைக் கொலையும் செய்வேன். ஆனால், இந்த விவகாரத்தில் என்னைத் தலையிடச் சொன்னால், நிச்சயமாக அது என்னால் முடியாது” (இவை அவருடைய அசல் வார்த்தைகள் அல்ல. அவர் கூறியவற்றின் கருத்தை இங்கே நாம் சொல்கிறோம்).

இதை அவர்கள் வெறும் வாயளவில் சொல்லவில்லை. உண்மையாகவே அவர்கள் அப்படித்தான் உணர்ந்தார்கள். அவர்களின் ஆழ்மனதிலிருந்து வந்த நிலைப்பாடு இது. ஆகவே சிலர் ‘முர்ஜிஆ’ கொள்கையை இவர்களோடு தொடர்புபடுத்திப் பார்க்க முற்பட்டனர்.

சில முர்ஜிஆக்கள் இவ்வாறு கூறினர், “ஆழமான கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ள இம்மக்கள், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் — அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் றசூலுல்லாஹ்’ என்று மொழிந்தவர்கள்தானே?! அப்படியிருக்க இவர்களை நிராகரிப்பவர்கள் (குஃப்ஃபார்) என்றோ, இணைவைப்பவர்கள் (முஷ்ரிகீன்) என்றோ எப்படி அழைக்க முடியும்?! ஒருபோதும் நாங்கள் அப்படி சொல்லவே மாட்டோம். அவர்களும் முஸ்லிம்கள்தாம். எனினும், ‘அவர்கள்பற்றிய தீர்ப்பை நாங்கள் அல்லாஹ்விடமே விட்டுவிட்டோம். அவர்களின் உள்ளத்தில் இருப்பதை அவனே நன்கு அறிவான். அதன்படி அவனே அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவான் — முர்ஜிஉ ஹுக்மகும் இலல்லாஹ் அல்லதி யஃலமு சறாயிறன்னாஸ வ யுஹாஸிபுகும் அலைய்ய’.” இத்தகைய கருத்து பிரபலமடைந்து, சமூக அளவில் பலர் இதைப் பின்பற்றத் தொடங்கினால் என்ன நடக்கும்? சமூகத்தின் மேல்மட்டத்தில் இருக்கும் பல குற்றவாளிகள் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், ‘அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன்’ என்று மொழிந்துவிட்டால்போதும். மக்கள் அவர்கள் செய்பவற்றைக் கண்டுகொள்ளாமல் நடுநிலை பேணுவார்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் ஸைது இப்னு அலீ (இமாம் ஹுசைனின் பேரர்) இவ்வாறு கூறினார்: “ஃபுஸ்ஸாக்களுக்கு நம்பிக்கையைத் தூண்டும் விதமாகச் செயல்பட்ட முர்ஜிஆக்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை — ‘அப்றா மினல் முர்ஜிஆ அல்லதீன அத்மஉல் ஃபுஸ்ஸாக ஃபீ அஃப்வில்லாஹ்‘.” அல்லாஹ் தங்களை மன்னித்து விடுவான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட கேடுகெட்ட ஆட்சியாளர்களை ‘ஃபுஸ்ஸாக்’ என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய கோட்பாடு தனிமனித அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் சமூக அளவில் பார்த்தால், குற்றங்களுக்கு துணைபோகும் வகையில் மக்களை வழிகெடுக்கிறது. இதற்கெதிராகத்தான் ஸைது இப்னு அலீ குரலெழுப்பினார்.

முஃதஸிலாக்களும் ஃகவாரிஜ்களும் அபூ ஹனீஃபா, அவரது முக்கிய மாணவர்களான அபூ யூசுஃப், முஹம்மது ஆகியோரை முர்ஜிஆக்கள் என்று குற்றம் சுமத்தினர். ஆனால் இது உண்மையல்ல. இவர்களை மட்டுமில்லாமல், அலீயின் பேரரான ஹசன் இப்னு முஹம்மது, அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரலெழுப்பிய சஈது இப்னு ஸூபைர் ஆகியோரையும் முர்ஜிஆக்கள் என்று அவர்கள் குற்றம் சுமத்தினர். அபூ ஹனீஃபாவும் பிற சுன்னீ சிந்தனைப் பள்ளியை சார்ந்த அறிஞர்களும் உமையா, அப்பாசிய்யா ஆட்சியாளர்களுக்கு எதிராக எதுவுமே பேசவில்லை என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இதுவும் உண்மை அல்ல. சுன்னீகளும் சரி, ஷீஆக்களும் சரி இதுபற்றி பேச மறுக்கிறார்கள்.

(உரை நிகழ்த்திய பின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இமாம் அல்ஆஸி அளித்த பதில்கள்)

தந்திரசாலியான முஆவியா பதவிக்கு வந்ததும் இறைத்தூதரைச் சுற்றியிருந்த முதல் தலைமுறை முஸ்லிம்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை வைத்து அரசியல் செய்தார். இறைத்தூதருக்குப் பிறகு கேள்விக்கிடமின்றி, இமாம் அலீயும் நபி வீட்டார் (அஹ்லுல் பைத்) என்று அழைக்கப்படுபவர்களும்தான் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

உஸ்மான் ஆட்சி காலத்தில், அவரை ஆதரித்தோர் – எதிர்த்தோர் என முஸ்லிம்கள் இருதுருவங்களாகப் பிரிந்து கிடந்ததையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இதில் இமாம் அலீ நேரடியாக எந்தப் பக்கமும் சார்ந்திருக்கவில்லை என்றும், அவரை ஆதரித்த பெரும்பாலோர் உஸ்மானுக்கு எதிரணியில் இருந்தனர் என்றும் நாம் அறிவோம். இந்த இயங்கியல்களை முஆவியா நன்கு புரிந்துவைத்திருந்தார். எனவே பதவிக்கு வந்தவுடன் — பள்ளிவாசல்கள், கஅபா, ஹஜ், மக்களின் பொதுப் புத்தி என அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த — அவர், இறைத்தூதர் காலத்தில் எழுப்பப்பட்ட கட்டமைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என அரசு எந்திரங்களுக்கு உத்தரவிட்டார். அதாவது ‘கதீர் ஃகும்‘ குறித்த ஹதீஸ் உட்பட இமாம் அலீயை மற்ற நபித்தோழர்களிடமிருந்து உயர்த்திக்காட்டும் பிற ஹதீஸ்களை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்றார். எனவே, பிற நபித்தோழர்களை இமாம் அலீ அளவிற்காவது உயர்த்திவிட்டால் சமநிலையை அடைந்துவிடலாம் என்றும், இதை அடைந்துவிட்டால் அதிகாரம், ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றின் துணைகொண்டு தன் எதிரிகளை வீழ்த்திவிடலாம் என்றும் நினைத்தார்.

இதனடிப்படையில் பல ஹதீஸ்கள் புனையப்பட்டன. அரசின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் அரசவை அறிஞர்கள் பலர் பணியமர்த்தப்பட்டனர். இப்படியாக தனக்குப் பின் ஆகத்தகுதியானவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் இறைத்தூதர் விதைத்த கருத்து நாளடைவில் மங்கலாக்கப்பட்டது. தலைமையும் சமூகமும் சேர்ந்தே இயங்க முடியும். ஆனால், முஆவியா வெற்றிகரமாக இவற்றை தனித்தனியே பிரித்து ஒன்றோடொன்று தொடர்பின்றி இயங்கச் செய்தார். அன்றைய முஸ்லிம் சமூகம் ஆகத்தகுதியானவரால் வழிநடத்தப்பட விரும்பும் பட்சத்தில் அதற்குப் பொறுத்தமானவர் இமாம் அலீதான் என்ற கருத்தை முன்னிறுத்துவதில் இறைத்தூதர் தன்னால் இயன்றதைச் செய்துவிட்டார் என்று சொல்வதில் உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

மேலும், இறைத்தூதரைச் சுற்றி அவருக்கும் அவருடைய கருத்துகளுக்கும் நேர்மையாக இருந்தவர்கள் இருந்தனர். ஆனால், அந்த நேர்மையோடு அவர்கள் விஷயங்களை தவறாகக் கணித்திருக்கக்கூடும். இங்குதான் இரு சாராரும் தவறிழைக்கின்றனர். ஒரு சாரார், ‘அவர்கள் அனைவரும் நபித்தோழர்கள். எனவே அவர்கள் தவறிழைக்க வாய்ப்பே இல்லை’ என்கின்றனர். மற்றொரு சாரார், ‘நபி வீட்டார், உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருந்தனர்’ என்கின்றனர்.

நபித்தோழர்களும் இறைத்தூதரின் உறவினர்களும் ஒருவருக்கொருவர் ஒவ்வாதவர்கள் என்ற கருத்து எப்படியோ அன்றிலிருந்து இன்றுவரை நிலவி வருகிறது. அவர்களிருவரும் பரம வைரிகள்போல கருதப்படுகின்றனர். இந்தக் கருத்து முஆவியாவிடமிருந்துதான் வந்தது. இஸ்லாம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறதெனில் அதற்கு காரணம் இறைத்தூதரைச் சுற்றி இருந்தவர்களிடமிருந்து பீறிட்டெழுந்த நேர்மையே ஆகும். இவர்கள் பரம வைரிகளாக இருந்திருந்தால் இத்தகைய நேர்மை சாத்தியமாகி இருக்குமா? இதை நாம் மீள்பார்வையிட்டு பிரச்சினையின் மூலகர்த்தாவை அடையாளம் காண வேண்டும்.

♦ ♦ ♦ ♦ ♦

சுன்னீ சிந்தனைப் பள்ளியின் சட்டவியலாளர்களும் இமாம்களும் உமையாக்கள், அப்பாசியாக்களை எதிர்த்து ஷீஆக்கள் நடத்திய போராட்டத்தின் ஆதரவாளர்களாக இருந்தனர். சுன்னீ வரலாற்று நூல்களில் இந்தச் செய்தி சொல்லப்பட்டுள்ள போதிலும் அது வெளிப்படையாக இல்லை. அதே போலத்தான் ஷீஆ நூல்களிலும். இதில்தான் சுன்னீகளும் ஷீஆக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் போலும்! அவர்கள் இருவருமே முஆவியாவை ‘அரசர்’ என்று அழைக்க விரும்பவில்லை. அபூ ஹனீஃபா, ஷாஃபிஈ, மாலிக், ஹம்பல் ஆகியோர் தத்தம் கால அரசாங்கத்துக்கு எதிராக இருந்தனர் என்று இரு தரப்புமே சொல்ல விரும்பவில்லை.

உமையாக்களுக்கு எதிராக ஸைது இப்னு அலீ நடத்திய போராட்டத்துக்கு அபூ ஹனீஃபா ஆதரவளித்தார். ஸகாத், ஸதகா என எல்லா செல்வமும் உமையாக்களுக்கு எதிரான போராட்டத்துக்காக கொடுக்கப்பட வேண்டும் என தன் மாணவர்களிடம் அபூ ஹனீஃபா ரகசியமாகச் சொன்னார்.

ஷாஃபிஈ 10 அல்லது 15 புரட்சியாளர்களோடு இருந்தார். எல்லோரும் கைது செய்யப்பட்டு இவரைத் தவிர மற்ற எல்லோரும் கொலை செய்யப்பட்டனர். அதிசயமாக இவர் மட்டும் கொலை செய்யப்படவில்லை. இப்படியாக இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு எதிரானவர்களாகவே இருந்தனர். ஆனால், அபூ ஹனீஃபா அல்லது ஷாஃபிஈயை அரசியல்ரீதியாக ஷீஆ என்று யாரும் சொல்வதில்லை. ஏனெனில், அவர்கள் சட்டவியல் வல்லுனர்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர்.

எந்தவொரு ஷீஆ அல்லது சுன்னீயிடமும், அபூ ஹனீஃபாவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது. இதுகுறித்து அறியாமையே வியாபித்திருக்கிறது. இந்த அறியாமை களையப்பட வேண்டும்.

தமிழில்: ஜுந்துப்

(நன்றி: மெல்லினம்)

ஆங்கிலத்தில்: Islamic History, Aqeedah & School of Thought

Related posts

Leave a Comment