கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பொதுவாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மட்டுமே விழித்துக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, இம்முறை சற்று முன்னதாகவே களத்தில் இறங்கியுள்ளது. களத்தில் இறங்கியதோடு மட்டுமல்லாமல், பெரியண்ணன் மனோபாவத்தை ஓரமாக வைத்துவிட்டு உருப்படியான சில காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டது பா.ஜ.க.விற்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக மாண்புகளை காலில் போட்டு மிதிக்கும் பா.ஜ.க., அனைத்து அரசியல் ஏஜென்சிகளையும் தனது தேர்தல் முகவர்களாக பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை என அனைத்து ஏஜென்சிகளின் நம்பகத்தன்மையும் இன்று மக்கள் மன்றத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. விமர்சனங்களையும் எதிர்கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாத ஃபாசிச இந்துத்துவவாதிகள் இந்தியாவில் ஜனநாயகத்தை மெல்லமெல்ல அழித்துவருகின்றனர்.

இந்நிலையில்தான், எப்போதும் முரண்பாடுகளை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகள் அவற்றை சற்று ஓரமாக வைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு ஓரணியில் திரண்டிருக்கின்றன. முந்தைய காலத்தைவிட காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருப்பது உண்மைதான். எனினும், பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறனையும் இந்தியா முழுவதும் உறுப்பினர்களையும் கொண்ட ஒரே கட்சி இன்றளவில் அது மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட்ட சில மாநிலக் கட்சிகள்கூட கர்நாடகாவில் அதன் வெற்றியைத் தொடர்ந்து அதனுடன் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பீகாரில் நடைபெற்றதைத் தொடர்ந்து, அடுத்த கூட்டத்தில் ஒருசில கட்சிகளேனும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் பா.ஜ.க.விற்கு மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் இருந்தது. ஆனால் ஜூலை 18 அன்று கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்துகொண்டதானது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையையும் பா.ஜ.க.விற்கு பயத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. டெல்லி அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசாங்கம் கொண்டுவர முயற்சி செய்யும் மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை இறுதி நேரத்தில் ஏற்றுக்கொண்டு அக்கட்சியையும் கூட்டணிக்குள் தக்கவைத்துக் கொண்டது காங்கிரஸ்.

ஒருங்கிணைப்புக் குழுகளை உருவாக்குவது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயார்செய்வது, பா.ஜ.க.வை தோற்கடிக்கும் வகையில் புரிந்துணர்வின் அடிப்படையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப கூட்டணிகளை முடிவுசெய்வது, வேட்பாளர்களை நிறுத்துவது, அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிராவில் நடத்துவது என எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் பா.ஜ.க. கூடாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தங்களின் அணிக்கு எதிர்க்கட்சிகள் தேர்வுசெய்த பெயர் இந்தக் கலக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ‘இந்திய தேசிய வளர்ச்சி அரவணைப்பு கூட்டணி’ (Indian National Development Inclusive Alliance – I.N.D.I.A) என்பது கூட்டணியின் பெயராக இருந்தாலும் அதன் சுருக்கம் ‘இந்தியா’ என்று வருகிறது. வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வை அவர்களின் மொழியிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்கொள்வார்கள் என்பதை பா.ஜ.க.வினரும்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதனை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி, “பயங்கரவாத அமைப்பான ‘இந்தியன் முஜாகிதீன்’ அமைப்பின் பெயரிலும் இந்தியா இருக்கிறது, கிழக்கிந்தியக் கம்பெனியின் பெயரிலும் இந்தியா இருக்கிறது” என்று ஏதேதோ சொல்லி சொந்தக் கட்சியினரையும் குழப்பிவிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் யாரும் பதில் அளிக்காதது பா.ஜ.க.வினருக்கு இன்னும் ஏமாற்றத்தை அதிகரித்துவிட்டது.

இங்கு மற்றொரு விசயத்தையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணி தனது கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்து, அதனை விமர்சிக்கும் நோக்கில் தற்போது மோடி கூறியதைப் போல் வேறு யாரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் இதனை பலநாள் விவாதமாக மாற்றி, கருத்து சொன்ன அந்த தலைவரை கட்சியை விட்டும் நீக்க வைத்திருப்பார்கள்.

வெறுப்பை மூலதனமாகக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தி நாட்டை பா.ஜ.க. சீர்குலைத்து வரும் சூழலில் அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைத்து அழைத்துச் செல்லும் வகையில் பெயரை தேர்வுசெய்தது ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு நம்பிக்கையையும் நிம்மதியையும் அளித்துள்ளது.

நிலைமை மோசமடைந்துவருவதை கண்ட பா.ஜ.க. தலைமை, அவசர கதியில் கூட்டணிக் கட்சிகளை அழைத்து அதே தினத்தில் டெல்லியில் ஒரு கூட்டத்தை நடத்தியது. எதிர்க்கட்சிகள் 26 கட்சிகளை அழைத்த நிலையில் பா.ஜ.க. 38 கட்சிகளை அழைத்து தனது பலத்தைக் காட்ட முயற்சி செய்தது. 2024இல் தனித்து ஆட்சி அமைப்போம், 350 இடங்களைப் பிடிப்போம், 400 இடங்களைப் பிடிப்போம் என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசிவந்த நிலையில், இப்போது மூன்று டஜன் கட்சிகளை இணைத்து கூட்டணியை அமைத்திருப்பதே அதன் முதல்கட்ட தோல்வியைக் காட்டுகிறது.

இந்த 38 கட்சிகளில் 16 கட்சிகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட கிடையாது. இதையாவது ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கூட்டணியில் உள்ள ஒன்பது கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட போட்டியிடவில்லை என்ற அவலத்தை எங்கே சென்று சொல்வது என்று பா.ஜ.க.வினரே நொந்து புலம்பும் நிலை உள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் வேடிக்கையாகக் கூறியதைப் போல், ‘இது தானா சேர்ந்த கூட்டம் அல்ல; அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, என்.ஐ.ஏ. என எல்லாத்தையும் வச்சு மிரட்டி சேர்த்த கூட்டணி’.

இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள்தாம் இந்த இந்துத்துவ ஃபாசிசவாதிகள். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியவற்றுக்கு மாற்றாக ஒற்றைக் கலாசார தேசியவாதத்தை முன்வைப்பவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்தாக்கத்திற்கு எதிரானவர்கள்.

பா.ஜ.க. தற்போது சற்று பின்தங்கியிருப்பதுபோல் தோன்றினாலும் எதிர்க்கட்சிகள் கவனமற்று இருந்துவிடக் கூடாது. யாருடைய வாக்கையும் விட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே பா.ஜ.க. மெகா கூட்டணியை அமைத்துள்ளது. பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் 2019இல் இருந்த கூட்டணிகள் தற்போது பா.ஜ.க.விற்கு இல்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைத்ததன் மூலம் தங்கள் கூட்டணிக்கு போதிய வாக்குகள் கிடைக்கும் என்று பா.ஜ.க. கணக்கு போடுகிறது. அதேபோல், பீகாரில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளைப் பெற்ற இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, 3.6 சதவிகித வாக்குகளைப் பெற்ற ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் 6 சதவிகித வாக்குகளைப் பெற்ற லோக் ஜனசக்தி கட்சி ஆகியோரையும் தமது கூட்டணிக்கும் இழுத்து அவ்வாக்குகளையும் பெறும் நம்பிக்கையில் இருக்கிறது. ஏனைய மாநிலங்களிலும் இதுபோன்ற சிறு கட்சிகளின் சொற்ப வாக்குகள்கூட தனக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க. அனைவரையும் வளைத்து வருகிறது.

பீகாரில் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவிற்குப் பின் அவரின் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஆனால் தற்போது இருபிரிவினரும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. அறிவிக்கும்வரை நான் அவர்கள் கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று கூறியிருப்பது அவரும் அழைப்பை எதிர்பார்த்து நிற்கிறார் என்பதைக் காட்டுகிறது.

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் ஏற்கெனவே சிறையில் இருக்கிறார். மற்றொருவர் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். டெல்லி துணை முதல் அமைச்சரும் மற்றுமொரு அமைச்சரும் திகார் சிறையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளை உடைத்தது போக, நவாப் மாலிக் போன்ற மூத்த தலைவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஏற்கெனவே ஒரு வழக்கு தலைமேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது. லாலுவின் குடும்பத்திற்கும் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. இந்த நெருக்கடிகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு உறுதியுடன் முன்னோக்கிச் செல்வதில்தான் எதிர்க்கட்சிகளின் வெற்றி அமைந்திருக்கிறது. உறுதியான சித்தாந்தமும் தெளிவான புரிதலும் இருந்தால் மட்டுமே அமைச்சர்களாலும் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் இதனை எதிர்கொள்ள முடியும். இல்லையென்றால் ‘நாட்டின் வளர்ச்சிக்காக மோடி தலைமையை ஏற்க முடிவு செய்துள்ளேன்’ என்று எவ்வித வெட்கமும் இன்றி அவர்களில் சிலர் பா.ஜ.க. கொடியை உடல்மேல் சுற்றிக்கொள்வதை மக்கள் பார்க்க வேண்டியிருக்கும். நாட்டைச் சூழ்ந்திருக்கும் காவி இருளின் அடர்த்தி இன்னும் கூடிவிடும். அது நடந்துவிடக் கூடாது என்பதே நாட்டை நேசிக்கும் அனைவரின் எதிர்பார்ப்பும்!

Related posts

Leave a Comment