ஏன் மணிப்பூர் பற்றி எரிகின்றது?
மணிப்பூர் கலவரம்பற்றிய செய்திகள் நம்மைக் கலவரப்படுத்தியுள்ளன. அதுவும் வன்முறைக் கும்பல் பழங்குடிப் பெண்களை நிர்வாணப்படுத்தி, கொடுமைக்குள்ளாக்கியதை பதிவுசெய்துள்ள காணொளி ஒன்று அனைவரின் மனங்களையும் பற்றி எரியச் செய்துள்ளது. அதிலிருந்து ஏன் மணிப்பூர் பற்றி எரிகின்றது என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் தீப்பிழம்பாகியுள்ளது.
எங்கிருந்து தொடங்கியது?
முதல் கேள்வி, மணிப்பூரில் இப்போது நடப்பவை எங்கிருந்து தொடங்கியது ? இந்தக் கேள்விக்கு எளிய பதில் இதுதான்:
மெய்த்தி சமூகத்தை பட்டியல் பழங்குடிப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, All Tribal Students’ Union of Manipur (ATSUM) அமைப்பு ‘பழங்குடி மக்கள் ஒற்றுமை பேரணி’க்கு அழைப்பு விடுத்தது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான பேரணிகள் நடத்தினர். இப்பேரணிகள்மீது பல இடங்களில் அநாமதேய மெய்த்தி இனவெறிக் குழுக்கள் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்தன. இத்தாக்குதல்களை மாநிலக் காவல்துறை கண்டும் காணாமல் இருந்து ஊக்குவித்தது. ஒருகட்டத்தில் வன்முறைக் குழுக்கள் அரசுப் படைகளின் ஆயுதங்களை எடுத்துக்கொணடு போய் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்களை மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கமும் முதலமைச்சர் பிரேன் சிங்கும் தடுக்கவில்லை என்பது மட்டுமில்லை, ஊக்குவித்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினர். மெய்த்தி இனவெறியை ஊதிப் பெருக்கினர். இதன் விளைவாக மாநிலத் தலைநகர் இம்பாலில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் கலந்துகொண்ட பேரணிமீது ‘அநாமதேயர்கள்’ தாக்குதல் நடத்தி, பெரும் கலவரமாக மாற்றினர். இம்பால் சமவெளி முழுவதும் பழங்குடி மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். பழங்குடி மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த மெய்த்தி மக்களும்கூட தாக்கப்பட்டனர்.
உடனடிக் காரணம்
2012இல் மணிப்பூரின் ‘பட்டியல் பழங்குடியினர் கோரிக்கைக் குழு’ (STDCM) என்கிற அநாமதேய அமைப்பு ஒன்று மெய்த்திகளுக்கு பழங்குடி அந்தஸ்து கோரத் தொடங்கியது. இந்தக் குழு மெய்த்தி மக்களை சார்ந்த குழு அல்ல; சங்கப் பரிவாரப் படைகளில் ஒன்று.
மணிப்பூர் மாநிலத் தேர்தலில் வெற்றி ஈட்டவும் தக்கவைத்துக் கொள்ளவும் முதலில் பா.ஜ.க பழங்குடிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோலவும், காங்கிரஸ் கட்சி மெய்த்திகளின் நலன்களை மட்டுமே பாதுகாத்து வருகின்றது என்றும் குற்றம் சாட்டியது. இன்னொருபுறம் மெய்த்தி இனப்பெருமித உணர்வு வெறியை ஏற்கனவே இருந்த அமைப்புகளைக்கொண்டும் புதியதாக அமைப்புகளை உருவாக்கியும் வளர்த்தது. இவ்வாறான குழுக்களில் ஒன்றுதான், மெய்த்திகளை பழங்குடிப் பட்டியலில் சேர்க்கக் கோரியது.
மெய்த்திகள் பழங்குடிகள் அல்லர். பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில், மெய்த்திகள் தங்களை ‘நாகரிக’ மக்கள் என்று கூறிக் கொண்டனர். உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தினர் என வகைப்படுத்தப்படுகின்ற சாதிச் சமுதாயங்களில் ஒன்றே மெய்த்தி சமூகமும்கூட. மெய்த்தி உயர் சாதியினர் மணிப்பூர் மாநில அரசியலிலும் நிர்வாகத்திலும் இன்னும் பிற துறைகளிலும் — இடஒதுக்கீடு இருந்தபோதிலும் பழங்குடி மக்களுக்குரிய பங்கை அளிக்காமல் — தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாக பழங்குடி மக்களுக்கு 31 சதவிகிதம் இடஒதுக்கீடு இருந்துவந்தபோதிலும், அதனால் ஒருபயனும் ஏற்படவில்லை. மணிப்பூர் பல்கலைக்கழக பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைவர் ஹெல்கோமங் டௌத்தாங், மணிப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதிய திறந்த மடலில் வெளியிட்டுள்ள பின்வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தப் பணியாளர் 130 பேரில் மூன்று பேர் மட்டுமே பழங்குடிகள்; 322 ஆசிரியரல்லாத பணியாளர்களில் 38 பேர் மட்டுமே பழங்குடிகள்; 165 ஆசிரியர்களில் 3 பேர் மட்டுமே பழங்குடிகள்.
உள்கட்டமைப்பை வளர்க்கும் மாநிலத் திட்டமிடலில் மிகப் பெரும்பகுதி நிதியை — 100க்கு 95 சதவிகித நிதியை — மெய்த்திகள் வாழும் சமவெளிப் பகுதிக்கு மட்டுமே செலவிட்டு வருகின்றனர். பழங்குடிகள் வாழும் மலைப்பகுதிகளுக்கு வெறும் 5 சதவிகிதம் நிதி மட்டுமே. இதன்மூலம் ஒடுக்கப்படும் மக்களில் மிகப் பெரும்பான்மையினரான பழங்குடி மக்களுக்கு எவ்வளவு பெரிய அநியாயத்தை இழைக்கின்றனர் எனப் புரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றம், பெரும்பான்மையான மெய்த்தி சமூகத்தை பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்குப் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பழங்குடி மக்கள் எதிர்த்துப் பேரணிகள் நடத்தினர். அப்பேரணிகள்மீதே சங்கப் பரிவார அமைப்புகள் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்தனர். அதையே அந்நியர்களை, ஊடுருவல்காரர்களை எதிர்த்து, இந்துச் சமுதாயத்தை, இந்தியாவைப் பாதுகாக்க நடக்கும் போராட்டம் என்கின்றனர்.
பா.ஜ.க என்றொரு புல்லுருவி
மணிப்பூர் மாநிலத்தில் இப்போது நிலவும் அமைதியின்மைக்கு முக்கியமானக் காரணம் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. பழங்குடி மக்களின் மாவட்ட சுயாட்சி நிர்வாக அலகுகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் ‘ஒரே மாநிலம் ஒரே நிர்வாகம்’ என்று பா.ஜ.க முழங்கி வருகின்றது; அது மட்டுமே மாநிலத்தை ‘வளர்ச்சி’க்கு இட்டுச்செல்லும் பாதை எனக் கதையளக்கின்றது; வன்முறைக்கு தூபம் போடுகின்றது.
ஒன்றியத்திலும் மணிப்பூர் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க கட்சியும் அரசாங்கங்களும் உண்மையான மக்களின் வாழ்க்கைப் பாடுகளை விட்டும் கவனத்தை திசை திருப்புவதற்காக தொடர்ச்சியாக பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுக்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க இந்து-மெய்த்தி ஆதிக்கவெறி உணர்வை ஊக்குவிக்கின்றது.
எவ்வாறு மணிப்பூர் மாநிலத்தில் சங்கப் பரிவார அமைப்புகள் செயல்பட்டு, அம்மாநிலத்தை வன்முறையில் அமிழ்த்தியுள்ளன என்று அறிந்துகொள்வது நமக்கு நல்ல படிப்பினையைத் தரும். 1949ஆம் ஆண்டு ‘அகில மணிப்பூர் இந்து மகாசபை’ காங்கிலிபாக் (மணிப்பூரின் உண்மையான பெயர்) மன்னரை வற்புறுத்தி இந்தியாவுடன் இணையவைத்தது. இதை ஏற்றுக்கொள்ளாத காங்கிலிபாக் மக்களான மெய்த்திகள், ‘சுதந்திர சுய ஆட்சி இயக்கத்தை’ முன்னெடுத்தனர். இந்த மெய்த்தி மக்களிடம், “உங்களுடைய எதிரிகள் ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும்’, ‘வெளிநாட்டினருமான’ பழங்குடிகளே. அவர்கள்தாம் மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர். பழங்குடிகளுடைய நிர்வாக சுய ஆட்சி உரிமையை ஒழித்துக்கட்டிவிட்டால், மாநில நிலப்பரப்பில் 90 சதவிகிதம் உள்ள மலைப்பகுதி நிலங்களை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். அதன்மூலம் நீங்கள் வளர முடியும்” என ஆசையூட்டினர். இவ்வாறு மாநில அரசியலில் மெய்த்தி மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே இருந்த முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி பழங்குடி மக்களை அழிக்கும் அரசியலை நோக்கி அழைத்துச் சென்றனர். அத்துடன் மணிப்பூர் (காங்கிலிபாக்) மக்களின் விடுதலை அரசியல் உணர்ச்சியையும் கொன்றொழித்து வருகின்றனர்.
மெய்த்தி சமூகத்தின் Meitei Leepun, Arambaai Tengol ஆகிய இரண்டு வலதுசாரி அமைப்புகளே பழங்குடி மக்களின் அமைதியான பேரணிமீது வன்முறைத் தாக்குதலை மேற்கொண்டன. இந்த அமைப்புகள் மெய்த்திகளின் உரிமைகளுக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொள்கின்றனர்; இந்த இரண்டு அமைப்புகளும் அவற்றின் தலைவர்களும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை தலைமேல் தூக்கிக்கொண்டு திரிகின்றனர். தங்கள் அமைப்பினருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர். இத்தகைய அமைப்புகள் பழங்குடிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், பழங்குடிகளுடன் ஒற்றுமையைப் பேண விரும்பும் மெய்த்தி அமைப்புகளையும் செயல்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். கலவரத்தை தொடங்குவதற்கு முன்பு, Meitei Leepun தலைவர் பிரமோத் சிங் பழங்குடிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு வெளிப்படையாகவே சமூக ஊடகங்களில் பதிவிட்டார். வன்முறைத் தாக்குதல்களுக்குப் பின்னர், ‘இது உலகு தழுவிய போர்’ என்றும், ‘வடகிழக்கில் இந்துக்களைப் பாதுகாக்க நடக்கும் போராட்டம்’ என்றும், ‘ஊடுருவல்காரர்களுக்கு எதிரான போராட்டம்’ என்றும் பலவாறாக இந்துத் தேசியவாத மொழியில், தேசிய ஊடகங்களில் பேசி வருகின்றார்.
பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டம்
மெய்த்தி சமூகத்திற்கான ‘பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து’ கோரிக்கையை மணிப்பூரில் உள்ள பழங்குடி மக்கள் அமைப்புகள் எதிர்க்கின்றனர். காரணம் என்னவென்றால், ஏற்கனவே மாநில மக்கள்தொகையில் மெய்த்திகள் பெரும்பான்மையினராகவும், அதிக அளவில் வளர்ச்சி பெற்றவர்களாகவும், முன்னேறிய சமுதாயத்தினராகவும், ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாகவும் உள்ளனர் என்பதுதான். பழங்குடி மக்களுடன் ஒப்பிடும்போது மெய்த்தி சமூகம் கல்வியிலும் சமூகத்திலும் மிகவும் முன்னேறியுள்ளனர் என்பதை எல்லா விவரங்களும் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்நிலையில் மெய்த்திகளுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது, ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை பறிக்கவே வழிவகுக்கும் என்பதால்தான் பழங்குடி அமைப்புகள் எதிர்த்துப் போராடி வருகின்றன. பழங்குடியினர்மீது அரசியல் ஆதிக்கம் செலுத்துவதைத் தொடரவும், மாநிலத்தின் மலைப்பகுதி நிலங்களை அபகரித்துக்கொள்ளவுமான மெய்த்திகளின் நியாயமற்றக் கோரிக்கையே ‘பழங்குடி அந்தஸ்து கோருதல்’ என பழங்குடி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக பழங்குடி மக்கள்மீது இனஅழிப்பு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் பா.ஜ.க
பா.ஜ.க ஆளும் கட்சியாக உள்ள மணிப்பூர் அரசாங்கம், காடுகளிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்றுவதற்கு விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. சுராசந்த்பூர்-கௌபும் ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், சுராசந்த்பூர்-நோனி மாவட்டங்களில் அமைந்துள்ள 38 பழங்குடிக் கிராமங்களை ‘சட்டவிரோதக் குடியேற்றங்கள்’ என்று முத்திரை குத்துகின்றது.
பாதுகாக்கப்பட்ட வனங்கள் என்கிற பெயரில் காடுகளிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்றும் பா.ஜ.க அரசாங்க நடவடிக்கை பழங்குடி மக்களுக்கு எதிரான இனஅழிப்பு நடவடிக்கை என்றே பழங்குடி மக்கள் கருதுகின்றனர். இதனைக் கடுமையாக எதிர்த்துப் போராடியும் வருகின்றனர். ஏனென்றால், காடுகளும் மலைகளுமே பழங்குடி மக்களின் பிழைப்பு ஆதாரமாக உள்ளன. அவற்றிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்றுவதென்பது, தண்ணீரிலிருந்து மீன்களை வெளியே எடுத்துப்போட்டு தரையில் நன்றாக நீந்துங்கள் என்று சொல்வது போலாகும். இவ்வாறு பழங்குடி மக்களை இனஅழிப்பு செய்யும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாளுக்கின்றனர். ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’, ‘ஊடுருவல்காரர்கள்’, ‘அந்நியர்கள்’ என்கிற பலவகையான பச்சைப் பொய்க்கதைகளை வலதுசாரிகள் பிரச்சாரப் பீரங்கிகள் கொண்டு முழங்கிவருகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, வடகிழக்கு இந்தியா இந்தியக் குடியரசுடன் இணைந்துகொள்ள விரும்பவில்லை. நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசும் அனைத்து நாகர் பழங்குடிகளையும் இணைத்து சுதந்திரமான நாகலாந்து நாட்டை நாகர் பழங்குடிகள் உருவாக்க விரும்பினர். இன்று மணிப்பூர் என்று அழைக்கப்படும் மக்கள் சுதந்திரமான காங்கிலிபாக் நாட்டை உருவாக்கினர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத இந்திய ஆட்சியாளர்கள் பல்வேறு வகையான தந்திரங்களைக் கையாண்டு மிரட்டியும் உருட்டியும், வாக்குறுதிகள் வழங்கியும் இந்தியக் குடியரசுடன் வடகிழக்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைத்துக்கொண்டனர். சங்கப் பரிவார அமைப்புகள் அகண்ட பாரத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த நூறு ஆண்டுகளாக வடகிழக்கில் செயல்பட்டு வருகின்றனர். இப்போது வடகிழக்கின் சில இடங்களில் மிக மோசமான தந்திரங்களைக் கையாண்டு ஆளும் கட்சி ஆகியுள்ளனர்.
வடகிழக்கில் நாகர் இனப் பழங்குடிகளிடையேயும், மற்ற மக்களிடையேயும் தொடர்ந்து இந்துமயமாக்கலைச் செய்துவருகின்றனர். பழங்குடிகளிடையே உள்ள முரண்பாடுகளை ஊதிப்பெருக்கி, பெரும் சண்டைகளுக்கு வழிவகுகின்றனர். பழங்குடிகளும் சமவெளிப் பகுதி மக்களும் முரண்பாடுகளையும் வேறுபட்ட விருப்பங்களையும் கொண்டுள்ளனர். இதையும் வன்முறைத் தீயின் எரிபொருள் ஆக்கியுள்ளனர்.
இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மெய்த்தி மக்களுக்கும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல சிக்கல்கள் தொடந்து இருந்து வருகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, நில உரிமை. இப்போது மெய்த்தி மக்களுக்கு மலைப்பகுதிகளில் நில உரிமையை பெற்றுத் தருவதாகக் கூறும் பா.ஜ.க, பழங்குடி மக்களின் மலை நிலங்களின் மீது கூட்டுரிமையை முற்றாக ஒழித்துக் கட்ட விரும்புகிறது. அதற்காகவே ‘ஒரே மாநிலம்! ஒரே நிர்வாகம்!’ என்று முழங்குகிறது.
மணிப்பூரில் உள்ள குக்கிகள் என அழைக்கப்படும் சோலங் என்கிற பழங்குடியினர் மணிப்பூர் மாநிலத்தில் சுயாட்சி நிர்வாக அலகுகளைப் பெற்றுள்ளனர். ஆயினும் உரிமையையும் வளர்ச்சியையும் பெற இயலவில்லை என்பதற்காக தனி மாநிலம் வேண்டும் எனக் கோரிப் போராடி வருகின்றனர். மற்றொரு நாகர் இனப் பழங்குடிகளான சோமி (மிசோரம் மாநிலத்தில் உள்ள மிசோ பழங்குடியினரின் சகோதரப் பழங்குடி) மிசோரத்துடன் இணைய விரும்புகின்றனர். மெய்த்தி மக்கள் காங்கிலிப்பாக்கின் சுதந்திரத்திற்கும் சுய ஆட்சி உரிமைக்கும் போராடும் அதே வேளையில், பிரிந்துசெல்ல விரும்பும் நாகர் இனப் பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து, தம்முடைய நிலவியல் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள விருப்பார்வம் கொண்டுள்ளனர். இந்த உணர்ச்சியை இன்று பழங்குடி மக்களுக்கு எதிரான உணர்ச்சியாக பா.ஜ.க மாற்றியுள்ளது; அப்பகுதியில் நிலவும் சிக்கல்களைப் பயன்படுத்தி, மாநில நிலவியல் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் ‘அந்நியர்களான’ பழங்குடிகளை முற்றிலும் துடைத்தெறியுமாறு மெய்த்திகளுக்கு இனவெறி ஊட்டி, வன்முறையை நடத்துகின்றது பா.ஜ.க.
இந்த வன்முறையைக் காட்டி, வட இந்தியா முழுவதும் அந்நிய ஊடுருவல்காரர்களுக்கு எதிராகப் போராடி வருகின்றோம், வளர்ச்சிக்காகப் போராடி வருகின்றோம், இந்துப் பண்பாட்டைக் காக்கப் போராடி வருகின்றோம் என்கிற வழக்கமான இந்துத் தேசிய வெற்றுக் கூச்சல்களை அதிகப்படுத்தி வருகின்றது. இத்தகைய பேச்சுகளின் மூலம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என பா.ஜ.க தலைவர்களும் தேர்தல் யுக்தி வகுப்பாளர்களும் தந்திரக்காரர்களும் முயன்று பார்க்கின்றனர். இந்த வெற்றுக் கூச்சல் தமிழ்நாட்டில்கூட கேட்கின்றது.
இக்கட்டுரை எழுத பயன்பட்டவை:
Arkotong Longkumer – Reform, Identity and Narratives of Belonging: The Heraka Movement in Northeast India (Continuum Advances in Religious Studies) (2010)
Edward Anderson & Arkotong Longkumer – ‘Neo-Hindutva’ : evolving forms, spaces, and expressions of Hindu nationalism (2018) [Contemporary South Asia 2018-oct 02 vol. 26 iss. 4].
Lalsanglen Haokip – Culture, ethnicity and territoriality : A cultural history of imagined land in Manipur, 1950s–1990s (2018) [Asian Ethnicity 2018-jan 15 vol. 19 iss. 3].
Komol Singha – Understanding Ethnicity-based Autonomy Movements: A Study of Manipur (2017) [Studies in Indian Politics 2017-apr 20 vol. 5 iss. 1]
Ngamjahao Kipgen & Arnab Roy Chowdhury – ‘Contested State-craft’ on the Frontiers of the Indian Nation [Studies in Ethnicity and Nationalism 2016-oct vol. 16 iss. 2]
Anita Lama – Ethnic Inequality in the Northeastern Indian Borderlands: Social Structures and Symbolic Violence (2020, Routledge)
Arkotong Longkumer – The Greater India Experiment: Hindutva and the Northeast (2022, Navayana).
Baruah & Sanjib – In the Name of the Nation: India and Its Northeast (2020, Stanford University Press)
(நன்றி: ஊடாட்டம்)