நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும் – நூல் அறிமுகம்

’ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்’ அபுல் அஃலா மௌதூதியின் முக்கியமான ஆக்கங்களில் ஒன்று. இஸ்லாத்தின் அரசியல் பார்வை குறித்து யாரும் பதிலளிக்கத் தயங்கும் சிக்கலான கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் மௌதூதி விரிவான பதில்களை அளிக்கிறார். இஸ்லாத்தின் அரசியல் பார்வை குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு திறப்பாக அமையும் என்று கருதுகிறேன்.

புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களில் திருக்குர்ஆனின் வசனங்களிலிருந்து இஸ்லாத்தின் அரசியல் போதனைகளை அவர் முன்வைக்கிறார். அதற்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியின் அடிப்படையான விதிகள் என்ன? ஃகிலாஃபத் என்றால் என்ன? அதன் தனித்தன்மைகள் என்ன? ஃகிலாஃபத் எப்படி நிலைபெற்றது? பிறகு அது எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது? ஃகிலாஃபத்தும் மன்னராட்சிக்குமான வேறுபாடுகள் என்ன? என ஒவ்வொரு கேள்விகளுக்கும் விரிவான பதில்கள் அளித்துக்கொண்டே செல்கிறார்.

பலரும் பதில் சொல்லத் தயங்கும் ஒரு கேள்வி, ஃகிலாஃபத் எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதற்கு அளிக்கப்படும் மழுப்பலான பதில்கள் தெளிவின்மையை, குழப்பத்தை அதிகரிப்பவை. அது தாமாகவே அந்த நிலையை அடைந்துவிட்டது என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தக்கூடியவை. இங்கு அது தானாக மாறவில்லை. தனிமனிதர்களின் சுயநலத்தால் அது வலுக்கட்டாயமாக மன்னராட்சியாக மாற்றப் பெற்றது என்பதை உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு உடைத்துச் சொல்லப்படவில்லையெனில், அது இஸ்லாத்தின் குறைபாடாக புரிந்துகொள்ளப்படலாம். சிந்தனைப் பள்ளிகள் உருவாக்கிய அரசியல் நிலைப்பாடுகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் அல்ல.

முஸ்லிம் உலகில் இந்தப் புத்தகம் வரவேற்பைப் பெற்ற அளவுக்கு கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டது. அபுல் அஃலா மௌதூதி நபித்தோழர்களை இழிவுபடுத்திவிட்டார் என்றது ஒரு தரப்பு. அவர் ஷீஆக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் எனக் கூறியது இன்னொரு தரப்பு.

தம்முடைய இந்தப் புத்தகம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள், ஆட்சேபனைகள் அனைத்திற்கும் அபுல் அஃலா மௌதூதி விரிவான பதில்கள் அளித்துள்ளார். அது புத்தகத்தின் பின்னிணைப்பாகவே இடம்பெற்றுள்ளது. அதில் அவர் கூறுகிறார்:

“இந்தப் புத்தகத்தில் நான் முன்வைத்துள்ள வரலாற்றுச் சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றின் ஆதாரபூர்வமான புத்தகங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவை. ஆதாரம் இல்லாமல் எந்த ஒன்றையும் நான் குறிப்பிடவில்லை. அறிஞர்கள் மூல நூல்களை ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வரலாறு எங்கோ மறைந்திருந்தது. நான் அதனைத் திடீரென வெளிப்படுத்திவிட்டேன் என்று கிடையாது. இது நூற்றாண்டுகளாக உலகில் பரவியிருந்தது. அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்குமான நவீன வடிவங்களின் மூலம் அது கோடிக்கணக்கான மனிதர்களைச் சென்றடைந்து கொண்டுதான் இருக்கிறது. நம்பிக்கையாளன், நிராகரிப்பாளன், நண்பன், எதிரி என அனைவரும் அதனைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஓரியண்டலிஸ்டுகள் மேற்கத்திய மொழிகளிலும் நம்முடைய மொழிகளிலும் மொழிபெயர்த்தும் எழுதியும் பெரிய அளவில் அதனை வெளியிட்டுள்ளார்கள். ஆகவே இப்போது நாம் அதனை மறைக்க முடியாது.

இஸ்லாமிய வரலாற்றின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்காதீர்கள் என்றோ, அது குறித்து விவாதிக்காதீர்கள் என்றோ நாம் மக்களுக்குக் கூற முடியாது. நாம் சரியான, அறிவுபூர்வமான, ஆதாரபூர்வமான, சமநிலையான முறையில் அதனைத் தெளிவுபடுத்தி அதன் சரியான விளைவுகளை முறைப்படி மக்களுக்கு முன்னால் வைக்கவில்லையெனில் மேற்கத்திய ஓரியண்டலிஸ்டுகள், நடுநிலையற்ற முஸ்லிம் எழுத்தாளர்கள் இதற்குத் தவறான வடிவம் கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது…”

Related posts

Leave a Comment