சிறுகதை முக்கியப் பதிவுகள் 

சங்குத்தவம் (சிறுகதை)

Loading

அன்றைய நூருல் இஸ்லாம் பத்திரிகை, ‘முத்து நகரத்தில் முதல் திருப்பம்’ எனத் தலையங்கத்தை கல்லுப்பள்ளியின் முகப்போடு செய்தி வெளியிட்டிருந்தது.

நிகழ்ச்சி நிரல்: திறந்து வைத்து உரையாற்றுபவர் – பிரிட்டிஷ் துரை நார்மன் ஸ்டார்த்தி அட்வைசர், வாழ்த்துரை – வள்ளல் சின்னதம்பி மரைக்காயர் என நிஜாமிய்யா நடுநிலைப் பள்ளிக்கூடத்தின் துவக்கவிழா செய்தியறிந்து திருப்புல்லாணி, திருப்பாலைக்குடி, மண்டபம், அழகன் குளம் என மக்கள் கூட்டம் கூட்டமாய் மாட்டுவண்டிகளில் ஊரைநோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

கப்பலில் புனிதயாத்திரை செல்லும் ஹாஜிகள் தங்கி மெக்காவுக்குச் செல்லும் ஹாஜி லேனில்தான் மொத்தமாகத் துணி வியாபாரம். அடுக்கடுக்கான வரிசைக் குடியிருப்புகள், பழைய குஜராத் அங்கோலியா பட்டேல் வணிகர்களின் சில்க் துணிவியாபாரக் கடைகள், தோப்புத்துறை வெளிநாட்டு நாணயமாற்றுக் கடை, முத்துப்பேட்டை நகுதா பலசரக்கு வியாபாரம் என சுல்தான் பள்ளிவாசலுக்குச் சுற்றியமைந்த கம்போங் க்ளாம்.

கம்போங் க்ளாமில் துணி மொத்த வியாபாரம் வாப்பா காலத்திலிருந்து நடத்திவருகிறோம்.  துணிகளில் வரையும் ஓவியக்கலைகளுள் இந்தியாவின் கலம்கரி கலைக்கு ஒத்த கலை, பாதிக் கலை. கையால் வரையப்பட்ட ஓவியங்கள் அடங்கிய துணிகள், உருளை உருளையாய்த் துணிகள் சுரபயாவிலிருந்து மொத்தமாகக் கடைக்கு இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. பழைய தாய்லாந்து துவாரவதி காலத்துத் தொன்மையான சித்திரங்களில் வரும் நான்கு இதழ் கொண்ட பெரிய மலர், ஜலம்பிராங் எனும் எட்டுமுனைகொண்ட தாமரை, மெனங்கெபாவ் எனும் உடைத்த நிலக்கடலை வடிவம்  என அதில் இடம்பிடிக்கும். ஆரம்பத்தில் இவ்வகையான துணிகளை வாங்கி விற்பனை செய்துகொண்டிருந்தபோது வியாபாரத்தின் நுட்பங்கள் புரிய ஆரம்பித்தன.

சோலோவில் இருக்கும் சாயப்பட்டறை போய்வந்தபிறகு, சில புதிய உத்திகளைப் புகுந்த விரும்பினேன். அதற்கு ஏற்றாற்போல் சுரபயா சுனான் க்ரேசிக் சந்தையில் கிட்டங்கி, நல்ல விலைக்குச் சாயப்பட்டறை உடன் சல்லீசாக வந்தது. பெரிய தொகைக்குக் கைமாற்றிவிட்டு கிட்டங்கியை கைக்குள் போட்டுக்கொண்டேன்.  துவாரவதி மலர், ஜலம்பிராங், மெனாங்கெபாவ் ஓவியங்களுக்கு ஒத்த அறபியும் தமிழும் கலந்த அர்வி எழுத்துருக்களில் வெளியான பழைய சித்திரக்கவி வடிவங்களை கூம்பு வடிவமாகவும், செவ்வக உருளை வடிவமாகவும் துணிகளில் பதித்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இவ்வகை மந்தம் என்றாலும், ஒருமுறை கேலாங் செராய் ஹரிராயாவிற்கு, அர்வி இலக்கியங்களில் பிரசித்திப்பெற்ற மகானந்த அலங்கார மாலை, அதில் இடம்பெறும் கண்ணாரசக்கரபந்தம் எனும் சக்கரவடிவம், மாலை மாற்று எனும் சங்குமாலை ஆபரணவடிவம் வரையப்பட்ட துணிகளை சொந்தக் கிட்டங்கியிலிருந்து இறக்குமதி செய்ததில் நல்ல வியாபாரம். இவ்வகை வடிவங்களும் ரகங்களும் மலேயா மக்களைக் கவர்ந்தன.  அர்வி சித்திரங்களன்றி, அர்வி பிறந்ததுபோல் மறுபுறம் ஜாவாவும் அறபியும் கலந்த கூட்டுக்கலை ஜாவி. அதன் இலக்கிய உருக்களும் அடுத்ததாக பாதிக் நெசவில் இடம்பிடித்தன. தாய்லாந்திலும் மலேயாவிலும் பெரிய வியாபாரம் இதன் மூலம் எனக்கான எல்லைகளைத் துணிச் சந்தையில் திறந்துவிட்டன.

திராவிடக் கட்டிடகலையின் உச்சம் கல்லுப்பள்ளி. மலையைக் குடைந்த தூண்கள், கதிரவன் உதயம்-உச்சம்-மறைவு நிலைகளின் மூலம் தொழுகையின் நேரத்தைக் கணக்கிட உதவும் மீசான் கல், ஓங்கிய மினாரா என அதன் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. அதன் பழுப்பேறிய தூண்கள் பூமியின் அடியாழம்வரை வேரிட்டு நிற்கிறது. அரிக்கேன் விளக்கு வெளிச்சம், உள்வளைந்த மிஹ்ராபின் மையத்தில் குவியமாய் நின்றது. அதற்கு நேரெதிராய், முழங்கால்கள்மீது இருப்பு. எனது பிரார்த்தனையில் இருகரங்களையும் ஏந்தியிருந்தேன். மிஹ்ராப் மையக் குவியத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தியிருந்தேன். பின்னால் கணக்கப்பிள்ளை அழைக்கும் குரல், ”ஹாஜியார்…!” பிரார்த்தனை ஒழுங்கு எனக்கும்  மிஹ்ராபிற்கும் நடுவே நித்தியமாய் நின்றுகொண்டிருந்தது. நீர்ப்பரப்பில் மீன்கள் துள்ளிக்குதித்துக்  குளத்தின் பேரமைதியை கலைப்பதுபோல் மீண்டும் குரல், ”ஹாஜியார்… ஹாஜியார்’!‘.

திரும்பிப் பார்த்தேன், கணக்கப்பிள்ளை. என் கைகளைப் பிடித்து நேரத்தோடு உறங்கவேண்டினார். ”எல்லாம் நல்லபடியாக முடியும், காலையில் நிகழ்ந்ததை எண்ணிக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நாளை காலை எதுவேண்டுமானலும் நிகழலாம். நிறைய சோலி கிடக்கிறது. மனதைத் தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள். இறைவன் நமக்குப் பக்கபலம்!” என்று சொல்லிவிட்டு  பள்ளிவாசலின் படிகளில் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு விடைப்பெற்றார்.

அறிவு சாஸ்வதமானது. மனிதனுக்கு அறிவு தரும் வெளிச்சம் அவனை அவலத்திலிருந்தும் இழிவிலிருந்தும் வெளியேற்றுகிறது. நம்பிக்கையைக் கூட்டுகிறது என்பதை வள்ளல் ஹபீபு மரைக்காயர் பாய்மரக் கப்பலில் வாப்பாவோடு பிராயணித்த கணம் உணர்ந்திருக்கிறேன். அலையெழுப்பும் சுவர், அதை முட்டி உதைத்துத் தள்ளி கப்பலை முன்னேற்றும் சுங்கான். தர்க்கத்தின் பிறப்பிடம் அறிவு,  அறிவு கேள்விகளாலேயே முளைக்கிறது.

”இந்தக் காலத்தில் அறபியை மட்டும் படிச்சாப் போதுமா? உலகம் பூரா இங்கிலீஷ்காரன் தன்னோட பாஷையைத் திணிச்சி வச்சிருக்கான்… அதுலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று மக்கள் கூடியிருந்த நிஜாமியா வளாகத்தில் நான் காலையில் முழங்கியபோது ஊர் மக்களுக்குக் கலகக்காரனாகத் தெரிந்தேன். ”கால் காசு படிப்புனாலும் இங்கிருந்து இராம்நாட் கிறிஸ்துவ ஸ்வார்ட்ஸ் ஸ்கூலுக்குத்தான் போகணும்” என்றேன்.

”அதெல்லாம் சரிதான்.. யஹூதி நஸ்ரானி படிப்பு நமக்கெதுக்கு? அறபுலகத்துக்கு இணையாகப் பாண்டித்துவம் பெற்ற அறபு அறிஞர்கள் பிறந்த ஊர் இது. இங்க இங்கிலீஷா …? நீ துரையாகிடலாம்ணு பாக்குறாயா?” என்றார் தோளில் கிடந்த துண்டை உதிறிய கானா மூணா மரைக்காயர் நக்கலுடன்.

”கானா மூணா… எழுதி வச்சிக்குங்க: ஒரு காலம் வரும். இந்த மொழி இல்லாம இங்கே எதுவும் நடக்காது. குறஞ்சது இங்கிலீஷ எதிர்க்கிறதுக்காவது இங்கிலிஷ் தெரிஞ்சுக்கத்தான் வேணும்” என்றேன். ”அந்தக் காலம் வாரப்ப பாத்துக்கலாம்” என்றார் மரைக்காயர்.

”மரைக்கா… கொஞ்சம் மனசு வையுங்க. அறபியர்கள் கப்பல்ல வர்த்தகம் செய்ய நம்ம ஊர், காயல்பட்டிணம் வந்தப்ப, தமிழும் அற்பியும் கலந்து அர்வி மொழி பிறந்தது. சின்ன ஹதீது மாலை, பெரிய ஹதீது மாலை, அஹ்காமுல் முஸ்லிமீன், மக்தூம் மீரான் வலி, ஷைக் அப்துல் காதிர் தைக்கா லெப்பை, காயல் பட்டணம் புலவர் நாயகம் ஷைக் அப்துல் காதிர் நைனா லெப்பை ஆலிம் இவைலாம் அந்த மொழி தந்த கொடை. புரட்சிகர மொழி அறபு வேணாம்னு ஒதுங்கியிருந்தா, இவ்வளவும் நமக்குக் கிடைச்சிருக்குமா? இப்ப நம்ம காலம். பிரிட்டிஷ் காலம். நம்முடைய ஆக்கங்கள் உலகம் முழுசுக்கும் போகணும்னா … மதரசாவில் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பது அவசியம்” என்றேன். கூட்டம் அமைதியாக இருந்தது.

தொடர்ந்து, ”எனக்கோ என் வீட்டுப் பிள்ளைங்களுக்கோ போய்ப் படிக்க வசதியிருக்கு. ஆனா, எளியமக்கள் …? நம்மள்ட இருக்குறது பழைய அண்ணாவியார்கள் ஆரம்பிச்ச திண்ணைப்பள்ளிதான். மணல்ல எழுதிப் படிக்கிற இந்த நிலைமை மாறணும். இதை அறபியும் ஆங்கிலமும் சொல்லித் தார ஸ்கூலா மாத்திரலாம். நான் கேட்பதெல்லாம் உங்களிடம் ஒருபிடி முட்டி அரிசி. தினசரி வீட்டிற்குச் சமையல் போடும் அரிசி மரக்காலில் முட்டிநிற்கும் தலை அரிசியைத் தட்டி,  வீட்டு வாசலில் நாளை முதல் பாத்திரத்தில் வையுங்கள். அந்த அரிசியை ஏலம்விட்டு இந்தப் பள்ளிக்கூடத்தை நான் நடத்திக் காட்டுகிறேன். பள்ளிக்கூடத்திற்குத் தேவையான விளையாட்டு மைதானத்திற்கு ஊர் தனவந்தவர்கள் உதவவேண்டும்” என்றவுடன் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டே நகர்ந்தனர். கூட்டம் வடிந்தபோது, என்னோடு அப்துல்லா மாஸ்டரும், அப்பாஸ் வாத்தியாரும், ஊரின் வாலிபர்கள் சிலரும் மட்டுமே இருந்தனர்.

கல்லுப்பள்ளியின் மகிழம்பூ மரத்தில் அமர்ந்திருந்த காக்கைகளின் நள்ளிரவுத் தூக்கத்தை ஒடிந்துவிழுந்த கிளையொன்று கலைத்துப்போட்டது. காகங்கள் கரைந்துகரைந்து மெல்ல அடங்கின. வீட்டிற்குப் போக மனமின்றி, மகிழம்பூ மரத்திலே தலைசாய்த்திருந்தேன். இரவின் ரம்மியம், வருடிய தென்றல் … தூக்கம் ஆட்கொண்டு உறங்க ஆரம்பித்தேன்.

மெல்லிய வெண் திரை விலகியது. உறக்கத்தின் மயக்கம் தெளிந்தவன், முத்துக்களும் பவளங்களும் பதித்த மாளிகை அது. அகர்கட்டைகள் எரித்த புகைச்சுருள் எனக்கு முன்னே சுழலும் பற்சக்கரம்போல் போய்க்கொண்டிருந்தது.  ஜைத்தூன் எண்ணையில் ஒளிர்விடும் விளக்குகள்,  சிவப்பும் மஞ்சளுமாய்  சுடர்,  ஒரு கங்கு பறந்து சட்டைப்பையில் ஒட்டிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. அகம் அதன் வழியுணர்ந்து அங்கிருந்த ஒவ்வொரு பொருளின் பெயர்களும் மனிதர்களும் எனது மூளைக்குப் புலனாகி கொண்டே வந்தது. அத்தர் வாசனையையும் அகில் கட்டைத் தூபங்களையும் கடந்து, மாளிகையின் மையத்தில் கோளரங்க அவையை எட்டியிருந்தேன். அவையைப் பிரிந்தாற்போல் மாடத்தில் ஒருவர் கையில் தடியை வைத்துக்கொண்டு ஒட்டகையை மேய்த்துக்கொண்டிருந்தார். ”மாடத்திலா ஒட்டகம் மேய்ப்பது, முரணல்லவா?” என்றேன். ”அப்படியென்றால் நீர் மட்டும் செல்வத்தைச் செலவழிக்காமல், மக்களுக்குப் பள்ளிகூடம் ஆரம்பிக்கலாம் என எண்ணுவது முரணில்லையா?” என்றார். தடித்த கனமான வெள்ளைத்தூண்களின் உயர்த்தைக் கண்டு மலைத்தேன். தூண்களின் உச்சிக்கொழுவத்தில் மாட்டப்பட்டிருந்த திரைச்சீலைகள் சட்டென நிலத்தை நோக்கி விழ ஆரம்பித்தன. ஒன்றோடொன்று மோதாமல் ஊஞ்சாலாடும் சர்கஸ் பெண்களைப்போல் திரைச்சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாக விரிந்து ஆட ஆரம்பித்தன. திரைச்சீலைகளைத் தாண்டி ஓடுகையில் நீர்வீழ்ச்சி கொட்டும் ஒலி கேட்டது. வெளியே தாண்டி எட்டிப்பார்த்தேன். உயர் தேக்குவகை மரத்திலான தேக்குக் கதவுகள் திறந்திருந்தன. உள்ளே சத்தம். வாசல் கதவை அடைந்திருந்தேன். வாயிற்காவலன் எனைத் தடுத்து நிறுத்தி, ”உள்ளே நீ போக அனுமதியில்லை. ஆனால் இங்கே நிற்க அனுமதியுண்டு” என்றார்.

தலையை நீட்டிப் பார்த்தேன். தீர்க்கதரிசிகளும் இறைநேசர்களும் நபிகள் நாயகம் தலைமையில் கூடியிருந்தார்கள். உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்த நபிகள் கோமான் முகத்தைக் கால்பெருவிரலை நிலத்தில் அழுத்தி உடலை தூக்கிப் பார்த்தேன். முகத்தைச் சிம்மாசனம் மறைத்திருந்தது. ஒரு குரல் பூமியைப் பிளக்கும் அளவு உலுக்குகியது. தீர்க்கதரிசி மூசாவின் குரல். ”பெருமகனார் நபிகள் கோனே! உங்களைப் பின்பற்றுவோரில் அறிஞர்கள் அறிவிலும் முதிர்ச்சியிலும் தீர்க்கதரிசிகளுக்கு ஒப்பானவர்களாமே?! அதைத் தாங்கள் நிரூபிக்க முடியுமா?” என்றார். சிம்மாசனத்திலிருந்து சுட்டுவிரல் திசையை நீட்டுகிறது. அறிஞர் ஒருவர் எழுந்து நின்றார். ”உம் பெயரென்ன?” என்றார். ”என் பெயர் அபூ முஹம்மத் இப்னு முஹம்மத் அத்துஷைல் அல் கஸ்ஸாலி.” சற்று அதிசயித்த தீர்க்கதரிசி மூசா, நான் கேட்டது உங்கள் பெயரை மட்டும்தானே?! உங்கள் மூதாதையர்கள் பெயரெல்லாம் எதற்கு?”

”நீங்கள் மட்டும் …” என ஆரம்பித்த அறிஞர், ”மன்னிக்கவும் தீர்க்கதரிசியே. தங்களிடம் இறைவன், உங்கள் கையில் என்ன இருக்கிறது எனக் கேட்டான்.  தடி என்று முடித்திருக்கலாம். ஆனால் நீங்களோ, இதை வைத்து ஆடுமேய்ப்பேன் … ஆடுகளுக்குக் கிளைகளை முறித்துப்போடுவேன் …களைப்பான நேரத்தில் சாய்ந்துகொண்டு உறங்குவேன் என்று உரையாடலை வளர்த்தன் ரகசியம் என்ன?  இதெல்லாம் இறைவனோடு நீங்கள் விரும்பி உரையாடலை வளர்க்கும் திட்டம்தானே?! ஐயன்மீர் மன்னிக்கவும். அதேபோல் தீர்க்கதரிசியான தங்களோடு விரும்பி உரையாடலை வளர்க்க நினைத்தேன்” என  முன்பு தூர்சீனா மலையில் தீர்க்கதரிசி மூசா இறைவனோடு நிகழ்த்திய உரையாடலைச் சபையோர்க்கு நினைவூட்டினார் அறிவுலக மேதை கஸ்ஸாலி. அவரது பதிலைக் கேட்ட தீர்க்கதரிசி மூசா புன்முறுவலிட்டு ஆமோதித்து அமர்ந்தார்கள். இமாம் கஸ்ஸாலியின் பதிலில் நான் மட்டுமல்ல சபையோர் அனைவரும் அசந்துப்போனர். இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைவீச்சு,  தர்கத்திற்கும் மெய்யியலுக்கும் இடையே குத்திநிற்கும் மெய்நிலையை அடையாளம் காணும் கத்தியல்லவா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

சபைக்கு வந்தோர்களின் பட்டியல் வாசிக்கப்பட்டது. பெயர் வாசிக்க ஒவ்வொருவராய் எழுந்து நபிகள் நாயகத்திடம் விடைபெற்றுக்கொண்டிருந்தார்கள். அதே வரிசையில் பாரசீக ஞானிகள் ஹசனுல் பஸரி, ராபியா அம்மையார், அபுல் ஹசன் ஷாதுலி, ஜலாலுத்தீன் ரூமி, ஃபக்ரூத்தீன் ராஸி, இதோ தென்னகத்து ஒளிவிளக்கு நாகூர் சாகுல் அமீது, வஹ்ததுல் உஜூத் இப்னு அறபி, காயல்பட்டிணம் உமரொலி , மூன்று தோட்டத்தை விற்கப் போய் தாமதாக அவைக்கு வந்துசேர்ந்த நபித்தோழர் செல்வந்தர் அப்துர் றஹ்மான் பின் அவ்ஃப் … எனக் கண்கொள்ளகாட்சி! அதோ அங்கே திருடராய் வீட்டில் இறங்கி, ஒரு பெண் குர்ஆன் ஓதும் வசனத்தைக் கேட்டு மனம் திருந்திய ஃபுழைல் இப்னு இயால், திஜ்லா நதிக்கரையில் வாடிக்கொண்டிருந்த பூனைக்குத் தன் ஆடையைப் போர்த்திவிட்டு இரவுமுழுதும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஞானி ஜூனைதுல் பக்தாதி, இச்சைக்கும் அறிவுக்கும் இடையேயான நீசதூரத்தைக் கண்ட ராபியா அம்மையார், தலைமைத்துவம் தாங்கும் கெளதுல் அஃலம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அவையின் அறிவு அலங்காரமாய் அலியார் என ஒருவரையொருவர் முகமன் கூறி பானங்களைக் கோப்பைகளில் பருகிக்கொண்டிருந்தனர். சிரியாவிலிருந்து சிவப்பு அங்கியணிந்து நாற்பது தகைமைகள், சிறப்பு வரிசையில் நகர்ந்துகொண்டிருந்தார்கள். நானும் நகர்ந்து உள்ளே செல்ல யத்தனித்தபோது வாயிற்காவலர் வாளால் தடுத்து நிறுத்தினார்.

ஒவ்வொருவராக அவர்களது முறையில் எழுந்துச்சென்றார்கள். இறுதியாக என் பெயர் கேட்டதும் அதிர்ந்துவிட்டேன். உறைந்த மயக்கம் மீண்டும்மீண்டும் பெயர் மூன்று முறை கூறப்பட்டதில் மயக்கம் களைந்தேன். ஏதோவொரு திசையிலிருந்து ஒரு குரல், ”அவர் இன்னும் நம்மிடம் வந்துச்சேர சில காரியங்கள் நிகழ்த்த வேண்டியதுள்ளது” என்றது. 

மகிழம்பூ மரத்தின் மேலிருந்த ஆலாக்குருவி இரைச்சலில், திடுக்கிட்டு எழுந்தேன். கனவு ஸ்படிகமாகக் கண்முன் சீனா சவக்காரம்போல் காட்சிகள் உருண்டுகொண்டிருந்தன. திஜ்லா நதிக்கரையில், பக்தாதில், இஸ்தான்புல்லில் கல்வியிலும் ஞானத்திலும் புரட்சி நிகழ்த்திய ஞானிகளின் பெயர்கள். அதற்குப் பின்னால் என் பெயர். நம்பமுடியவில்லை. தோளில் கிடந்த துண்டை உதறிவிட்டு நெட்டிமுறித்து எழும்பினேன். இரவின் மூன்றாவது பகுதியது. வைகறையின் தென்றல் மகிழம்பூ கிளைகளை அசைத்துவிட்டது. தூரத்தில் நிஜாமியாவின் சுவற்றில் கரியால் எழுதிப்பழகும் பாலகர்கள்,  சிரிப்பொலியோடு ஓடி ஒளியும் சத்தம்.

அறபுலகத்திற்கு ஈடு இணையான சதக்கத்துல்லா அப்பா, மாப்பிள்ளை லெப்பை ஆலிம், சின்னயீனா போன்ற மகத்தான அறிஞர்களை மண்ணில் வேர்விட்ட ஞானத் தொன்மையின் நிலம். மறுபுறம் முத்து, சங்குகளைக் கடலுக்கடியில் சென்று முக்குவர் மூழ்கும் நீலக்கடலின் இயற்கையின் முகத்துவாரம். கல்லுப்பள்ளியைத் தாண்டி நடந்துக்கொண்டிருந்தேன். சங்கு வாணிபம் நிகழும் அஞ்சுவாசல் கிட்டங்கி, முஸ்லீம் பஜார், ஜமாலியா சங்கு கொள்முதல் மண்டி என அடுக்கடுக்காய் வீதிகள். யாருமற்ற வீதியில் தூரத்தில் சங்கொலி ஒலித்துக்கொண்டிருந்தது. நிலவொளி வெளிச்சத்தில் தரையில் தேங்காய் மூடியளவு உருவம் நகர்ந்துகொண்டிருந்தது. மிகவும் அரிதாகக் கரீபியன் கடலுக்குள் மட்டுமே வாழும் ராணிச்சங்கு. நான் முன்னே செல்லசெல்ல, சவளைக் குழந்தையின் தலை அளவுக்குப் பெரிதாக இருந்த அந்தச் சங்கு முன்னகர்ந்து கடற்கரைக்கு வழிவிட்டிருந்தது.

முச்சங்கு வாழ்வின் மூன்று அங்கம். பாலூட்டும் சங்கு, திருமண வைபவத்தில் சங்கொலி, நீத்தார்களின் சவக்கிடப்பில் ஊதும் சங்கு. ஞானமும் முத்தும் பவளமும் சங்குமாலையும் ஒருசேர ஒப்புமை கொண்டவை. முத்து, பவளம், வைரங்கள் வியாபாரியாக இருந்துகொண்டு மெய்யியல் தளத்தில் புதிய சிந்தனையை உருவாக்கியவர் ஞானி இப்னு அறபி. இரண்டையும் ஒருசேர அவரிடம் பெற்று மூழ்கியோர் எத்துணை பேர்! அவரின் சிந்தனைகள் எத்துணை ஆழத்தில் மூழ்கினாலும் அழியாச் சொரூபங்கள். கடலின் ஆழத்தில் தேடலும் வேட்கையும் யுகம்யுகமாய்த் தவம்கிடக்கும் சங்கு ஆபரணங்கள் ஞானப்பெறுமதியின் ஆபரணக்குறியீடுகள். வீதியைத் தாண்டிக்கொண்டிருக்கும்போது சங்குகளுக்குப் பாலீஷ் தேய்க்கும் சுண்ணாம்பு நெடி மூக்கினைத் துளைக்க முகத்தில் துணியை வைத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தேன்.

வெட்டுப்பட்ட நாவல்பழ நிறத்தில் இருள் கடலைக் கவ்வியிருந்தது. விடாது கரையில் மோதும் அலையின் துதி, நினைவுகளை நுரைத்துக் கரையில் ஒதுக்கியது. கடலை நோக்கி அமர்ந்தேன். வாப்பா ஆரம்பித்த பத்திக் துணி வியாபாரம் நல்ல நிலையில் வளர்ந்துகொண்டிருக்கும் வியாபாரத்தை விட்டுவிட்டு இந்நேரத்தில் ஊர் போகாதே எனப் பழனியப்ப செட்டியார் மாமா எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டேன். எத்தனையோ முறை பிரிட்டிஷ் துரையிடம் மன்றாடி கிடைக்காத வாய்ப்பு, இம்முறை வெண்ணை திரண்டு வந்திருக்கிறது. எப்படியும் நடுநிலைப் பள்ளிக்கூடமாக மாற்றிவிடலாம். இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது எனக் கப்பலேறி நாகப்பட்டிணம் வந்து இறங்கிவிட்டேன்.

அரசாங்க ஒப்புதலுக்குப் பெரிய விளையாட்டுத் திடல் இருக்கவேண்டியது அவசியம் என்றால்  சுரபயா கிட்டங்கியை விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பாஸ் வாத்தியாருக்கும் அப்துல்லா மாஸ்டருக்கும் மாதச் சம்பளத்தை மன்னார் மரிச்சுக்கட்டி முத்து சிலாபத்திலிருந்து அனுப்பச் சொல்லிவிடலாம், பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துவிடலாம் என ஓவியனின் கூரிய கண்களைப் போல் ஒவ்வொன்றாகக் கோர்த்து ஒரு வடிவத்தை எட்ட மனம் முயன்றது. பின்பு பெரியவர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பனுமே என்றதும், மீண்டும் கானா மூணா மரைக்காயர் … டிஇஓ அப்பர் சுந்தர முதலியாருக்கு அவர் போட்ட  மொட்டைக் கடுதாசிகள் … மனக்கணக்குகள் குறுக்குமறுக்குமாய் ஓடி அந்த வடிவத்தைச் சிதைத்துக்கொண்டே வந்தன. கிழக்கில் செவ்வானம் மெல்லத் தலைத்தூக்கிக் கொண்டிருந்தது. மீன் மார்க்கெட் பள்ளியிலிருந்து அதிகாலைத் தொழுகை அழைப்பிற்காக நகரா சத்தம் கொந்தளிப்பாக முழங்கிக்கொண்டிருந்தது.

தூரத்தில் இரண்டு கரிய உருவங்கள். அவர்களைப் பின்தொடர்ந்து நான்கு. மெல்லமெல்ல என்னை நெருங்கின. துவர்ப்பான இருளில் முதலில் தெரிந்தது கணக்கப்பிள்ளை. தொடர்ந்து குப்ப மரைக்காயர், தீனா மூவான்னா ஹாஜியார், பின்னால் நான்கு இளைஞர்கள். அவர்கள் ஓடிவந்ததில் பெரும் களைப்பாக இருந்தார்கள். ”உங்களை எங்கெல்லாம் தேடுவது?” எனச் சற்று இளைத்த குரலில் கணக்கப்பிள்ளை. சீக்கிரம் போகணும் … மதுரையிலிருந்து டிரைன் புக் பண்ணச் சொல்லிட்டேன். நாளைக்கே  நுங்கம்பாக்கம் போய் பிரிட்டிஷ் துரை நார்மன் ஸ்டார்த்திய சந்திச்சு, ஸ்கூலுக்கு ஆகவேண்டிய பொறுப்புகள பார்த்திடலாம்” என்றார். நான் பதட்டத்துடன் ஒன்றுமறியாமல் அவரின் கைகளைப் பிடித்தேன். எனது வலக்கையைப் பிடித்துக்கொண்டு கடற்கரை உப்புக்காற்றைக் கிழித்துக்கொண்டு ஊருக்குள் இழுத்துச் சென்றார் தீனா மூவண்ணா. மக்கள் வாசல்களில் காத்திருந்தனர். ஒவ்வொரு வீட்டு வாசலில் வெங்கலப் பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் அரிசி குவியல்குவியலாக. அதன் மேல் எரியும் சிம்னி விளக்கு. கண்ணாடிச் சிமிழுக்குள் எரியும் தீபத்தை ஒருமுகப்படுத்திப் பார்த்தேன். எங்கோ பார்த்ததுபோல் உணர்வு. மாளிகையின் மாடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜைத்தூன் விளக்கு நினைவுக்கு வந்தது. சற்று நிதானித்துப் பின்னால் திரும்பி கடலைப் பார்த்தேன். வழிப்போக்கனாய் வந்த ராணிச்சங்கு, வலம்புரி இடம்புரி சங்குகளுடன் இணைந்து கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

***

Related posts

Leave a Comment