கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

Loading

இந்தியாவில் கல்வி என்பது வெகுகாலம் சமய நிறுவனங்களின் பிடியிலேயே இருந்தது. குருகுலங்களும் மடாலயங்களும் பௌத்த விகாரைகளும் சமணப்பள்ளிகளும் மதரசாக்களும் திருச்சபைகளும்தான் இந்தியக் கல்விமுறைக்கான ஆதார அமைப்புகளாக விளங்கின. இதன் காரணமாகவே யார் கல்வி கற்க வேண்டும் என்பதைவிட யார் கல்வி கற்கக்கூடாது என்பதில் காட்டப்பட்ட அக்கறை அதிகமாகவே இருந்தது. மாற்றுச் சிந்தனைப் பள்ளிகள் தாக்கப்பட்டதும் தகர்க்கப்பட்டதும் இந்தக் காழ்ப்பில்தான். வேதகாலத்தில் (கிமு 2500 – 1000) வேதங்களைக் குரு வழியாகக் கற்று அவற்றின் வழிநடப்பதே பிரதான கல்விமுறையாக இருந்தது. மோட்சத்தை அடையும் ஆன்மிகப் பயிற்சியே இக்கல்வியின் பாடத்திட்டம். வேதங்களைக் கற்றறிந்து, தர்மங்கள் வழிநின்று வாழும் நற்குடி பிறந்த, நன்னடத்தையாளர்கள் பிரம்மத்தை அடையும் முயற்சியே சமயம் சார்ந்த கல்வியின் குறிஇலக்காக இருந்தது.

பண்டைய காலத்தில் கற்பித்தலும் கற்றலும் உயர்குடியின் குலத்தொழிலாகவே அமைந்திருந்தன. இச்சூழலில், பரப்புரை செய்யப்படும் மதங்களாக இந்தியாவில் தோன்றிய பௌத்தம், சமணம் ஆகியவை கல்வியின் வாசல்களை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கும் திறந்துவிட்டன. கலாச்சார, பண்பாட்டுத் துறைசார் பாடங்களுடன் சிறப்புத் தொழிற் பாடங்களான சட்டம், வானவியல், மருத்துவம், கட்டடக்கலை, ஓவியம் போன்றனவும் முதன்முதலாக கல்வியில் இணைக்கப்பட்டன. இருப்பினும், இக்கல்விக் கூடங்களிலும் தத்தம் சமயப் போதனையே பிரதானமாக இடம் பெற்றது. பின்னர், கிபி 8ம் நூற்றாண்டில் முஸ்லிம் அரசர்களால் அறிமுகமான மதரசாக் கல்விமுறை, (மதரசா என்பது எல்லா வகையான கல்விக்கூடங்களையும் குறிக்கும் அறபிச் சொல் – சமய பாடசாலைக்கும், பொதுக் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கும் மதரசா என்றுதான் பெயர்) நிறுவனமயமான கல்வித் திட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்துவதில் பரவலான வெற்றியைப் பெற்றது. அதிகார மையங்களில் இஸ்லாமியர்களை ஆற்றல்படுத்தும் நோக்கமே முதன்மையாக இருந்தாலும், மதரசாக்கள் கல்வியை இந்தியச் சமூகத்தில் ஜனரஞ்சகமாக ஆக்கின.

முகலாயர் காலத்தில், குறிப்பாக அக்பரின் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரசாக்களில் ஒருசேர கல்வி பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஏழ்மை அறிவுத் தேட்டத்திற்கான தடைகல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக மேல்படிப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நடைமுறையும் முதன்முதலாக மதரசாக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதரசாக்களின் மாணவர்கள் நல்லொழுக்கம், கணிதம், அளவையியல், வேளாண்மை, வடிவியல், எண்சோதிடம், வானவியல், அரசியல், பொதுநிர்வாகம், மருத்துவம், தர்க்கவியல், இயற்பியல் உள்ளிட்ட 18 வகையான பாடங்களைக் கற்றுத்தேற வேண்டியிருந்ததாக அபுல்ஃபஜல் தனது அய்ன் இ அக்பரியில் குறிப்பிடுகிறார். நவீன பாரதத்தின் தந்தை, இந்து மதச் சீர்திருத்த சிற்பி என்று புகழப்படும் ராஜாராம் மோகன்ராய் இத்தகைய இஸ்லாமியக் கலைக்கூடத்தில் பயின்றவரே. அவரது முதல் படைப்பு ’துஹ்ஃபதுல் முவஹ்ஹிதீன்’ பாரசீக மொழியில் இயற்றப்பட்டு 1803-04ல் வெளியானது. அதனை 1884ல் மௌலவி உபயதுல்லா உருதுவில் மொழிபெயர்த்தார். இவ்வாறான ஒரு பரந்துபட்ட அறிவின் வாசல்களை மதரசாக்கள் திறந்து வைத்தன.

ஆங்கிலேயர்கள் காலூன்றிய பிறகு ஏற்றமடைந்த மிஷினரி கல்விதான் இந்தியாவில் கல்வியைப் பொதுத்தளத்திற்குக் கொண்டு வந்தது. 1854ல் வெளியிடப்பட்ட சர் சார்லஸ் உட் அறிக்கையின் மூலம்தான் கல்வி வளர்ச்சி அரசின் பொறுப்பாக்கப்பட்டது. இருப்பினும், ஏகாதிபத்திய ஆதிக்க நலன்களுக்கான அடிமைகளை உருவாக்குவதே அந்தக் கல்வியின் நோக்கமாகும். அரசபீடங்களை அண்டியிருந்த குழுவும் ஆதிக்க சக்திகளும் அதிகார வர்க்கமும்தான் கல்வி பெற்றன. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் பெரும்பாலும் விலக்கியே வைக்கப்பட்டனர். சமயபீடங்களில் வழிவழியாக வந்த குரு – சிஷ்ய பண்பே மேற்சொன்ன கல்வி அமைப்புகளில் பரவலாக நிலவியது. Disciple (சீடன்) என்பதிலிருந்து இறக்குமதியான discipline (ஒழுங்கமைவு) என்பதே ராணுவ ஒழுங்குடன் கல்விக்கூடங்களில் கட்டமைக்கப்பட்டது. கல்வியின் வழி மதங்கள் மற்றும் இயக்கங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது உலகமெங்கும் வழக்கமாகவே தொடர்ந்து வந்திருப்பதற்கு இந்த குரு – சீடன் பாணி உறுதுணையாக நின்றுள்ளது.

1830ல் லண்டனின் திருச்சபை தங்கள் பள்ளிகளில் சமய போதனைக்கென்று தனிவகுப்புகள் இல்லையென்றாலும், ஆங்கிலக் கல்வித் திட்டமே கிருத்துவத்தைப் பரப்பும் வேலையைச் செய்யும் என அறிவித்தது. இன்றும் மதரசா உள்ளிட்ட இறையியல் கல்லூரிகளில் சனநாயக வகுப்பறைகளை (Democratic classroom) நீங்கள் மருந்துக்குக்கூட தேடிக் கண்டுபிடிக்க முடியாது. இதில் எந்த சமயமும் விதிவிலக்கல்ல. வகுப்பறை சனநாயகம் மிக சமீபகாலமாகத்தான் நமது பள்ளிகளில் லேசாக எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. கையக்கட்டு – வாயைப் பொத்து என்பதுதானே நமது கற்றலுக்கான முதற்படியாக இருந்தது. இதைக் கண்டுபிடித்தவன்தான் ஆகப் பெரிய ஆண்டை. ஆக, இந்தியக் கல்விச் சூழல் என்பதே அமைப்பை மையப்படுத்தியது தானேயன்றி மாணாக்கனின் விருப்பத்தையொட்டி அமைந்தது அல்ல. இதற்கு ஒத்துவராத அனைவரும் இக்கல்விச் சூழலை விட்டு ஏதாவது ஒரு காரணத்திற்காகப் புறந்தள்ளப்பட்டனர் என்பதே நிதர்சனம்.

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

இஸ்லாமிய அமைப்புசார் கல்வித் திட்டத்தின் அழகிய முன்மாதிரியாக கிபி 859ல் – இன்றைய மொராக்கோவில் – பாத்திமா அல்ஃபிஹ்ரி என்ற பெண்மணியால் தோற்றுவிக்கப்பட்ட ஜாமிஆ அல் கராவியீன் என்ற கலாசாலையை வைத்து அறியலாம். அன்று தொடங்கப்பட்ட இந்த மதரசாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் கலாசாலையாகவும் பாரம்பரிய சின்னமாகவும் யுனஸ்கோ அங்கீகரித்துள்ளது மதரசாக் கல்வியின் விசாலப் பார்வைக்குச் சான்றாகும். இப்போது இந்தியா உட்பட உலகெங்கும் பரவலாக நடைமுறையில் இருக்கும் நிஜாமிய்யா மதரசாக் கல்வித் திட்டத்தை நிறுவியவர் 11ம் நூற்றாண்டின் அப்பாஸிய ஆட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த நிஜாமுல் முல்க் ஆவார். இந்த மதரசாக் கல்வித் திட்டத்தில் இஸ்லாமிய தத்துவயியல் பேரறிஞர் கஸ்ஸாலி தர்க்கவியலைப் புகுத்திய காலம்தான் மதரசாக்களின் பொற்காலமாகக் கருதப்படுகிறது (11 – 14ம் நூற்றாண்டுகள்).

அதேபோல், 9ம் நூற்றாண்டில் அப்பாஸிய கலீஃபா அல்மாமூன் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பைத்துல் ஹிக்மாவில் தத்துவம், மருத்துவம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய அறிவுச் செல்வங்கள் அறபியில் மொழிபெயர்க்கப்பட்டதிலிருந்து இஸ்லாமியக் கல்வித் திட்டம் சடங்காச்சாரமான சமய போதனைகளோடு முடங்கிவிடுவதல்ல என்பது தெளிவாகிறது. “சிறந்த நாகரிகத்தின் அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த முஸ்லிம் ஸ்பெயின் கலைஞானத்தின் தலைவாசலாகத் திகழ்ந்தது” என்கிறார் வரலாற்றறிஞர் ஸ்டான்லி லேவன்புல். இந்த அறிவுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வந்தவைதாம் இந்தியாவின் மதரசாக்கள். முஸ்லிம் ஆட்சியில் இந்த மதரசாக்கள் அரசின் பெருத்த ஆதரவைப் பெற்றிருந்தன. அவற்றின் வளர்ச்சிக்காக பல லட்சம் தீனார்களை முகலாய மன்னர்கள் ஆண்டுதோறும் ஒதுக்கித் தந்தனர்.

நாமெல்லாம் கரித்துக்கொட்டும் கஜினி முஹம்மதுகூட கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக ஒதுக்கிய நிதி 4,00,000 தீனார்கள் ஆகும். அவரது அரசவையில் இடம்பெற்றிருந்த அறிஞர் குழுவைப்போல் இந்தியாவில் வேறெந்த ஆட்சியிலும் இருந்ததில்லை என்று வரலாற்றறிஞர்கள் வியந்து போற்றுகின்றனர். அதேபோல், அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் டெல்லியின் மதரசாக்கள் ஞானிகளின் தோட்டமாக விளங்கியது. எழுத்துலக மேதை அமீர் குஸ்ரு, அமீர் ஹசன், ஷம்சுல் முல்க் ஆகியோர் கல்வித்துறையை அலங்கரித்த சான்றோர்களாக இருந்தனர். இவர்கள் யாரும் இஸ்லாமிய சமயக் கல்வியோடு தங்கள் பாடத்திட்டத்தைக் குறைத்துக் கொண்டவர்கள் இல்லை. அப்படி சமயக் கல்வியோடு அறிவுத் தேட்டத்தைச் சுருக்கிவிடுவதும் இஸ்லாமியக் கொள்கைத் திட்டமாக இருந்ததில்லை. இறையியல் கல்வியை இஸ்லாம் வலியுறுத்தினாலும், போரில் சிறைபிடிக்கப்பட்ட எதிரிகளிடமிருந்தும் கல்வியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சமுதாயத்திற்குக் கொள்கைத் திட்டமாகவே வரையறுத்தவர் நபிகள் பெருமானார். சீனா சென்றாயினும் சீர்கல்வி தேடு என்று நபிகள் சொல்வது நிச்சயமாக சமயக் கல்வியை அல்ல என்பதை நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

பரந்துபட்ட நோக்கில் செயலாற்றிய இந்த மதரசாக்களில் கல்வி பயில விரும்பாத மாற்று மத மாணவர்களுக்கு இந்து சமயம் சார்ந்த கல்விநிலையங்களை பனாரஸ், நாதியா, மிதிலை, மதுரா, ஹரித்துவார், உஜைன், அயோத்தி, மதுரை, தஞ்சை போன்ற பல நகரங்களில் முகலாய அரசு தொடர்ந்து ஆரம்பித்தது. கல்விப்புலத்தில் அனைவரையும் அரவணைத்து உள்ளிழுத்துக் கொண்ட மதரசாக்களின் இந்த அணுகல்முறையால் கவரப்பட்டு, ஆங்கிலேயர்களும் ஒரு மதரசாவை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தோற்றுவித்தனர். இந்த மதரசாவிலிருந்து அறபி, பார்சி நூல்கள் வெளியிடப்பட்டன. பிற்காலத்தில் இது உயர்நிலைப் பள்ளியாகவும் கல்லூரியாகவும் வளர்ச்சி பெற்று இன்றைய மாநிலக் (பிரசிடென்சி) கல்லூரியாக உயர்ந்து நிற்கிறது. மதரசா என்ற பெயரைக் கேட்டாலே காழ்ப்பும் சந்தேகமும் எழும் நிலையெல்லாம் மிகச் சமீபத்திய சமாச்சாரங்களாகும்.

ஆங்கிலேய ஆட்சியில் மதரசாக்கள் அரசு உதவி பெறுவதைவிட்டு விலக்கப்பட்டதாலும், ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்ட உலமா எனும் மார்க்க அறிஞர்கள் கலகக்காரர்களாக கருதப்பட்டதாலும் மதரசாக்கள் அரச ஆதரவை இழந்து முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ளொடுங்க ஆரம்பித்தன. “முஸ்லிம் இதயத்தின் எழுச்சிமிக்க உள்ளுணர்வுகளைப் பொருட்படுத்தாத ஆங்கிலேயக் கல்விமுறையை அவர்கள் சிறிதும் விரும்பவில்லை” என்று W.W.ஹன்டர் 1871ல் தெரிவித்தார். அந்நிய ஆட்சியின் மீதான இந்த வெறுப்பு, ஆங்கிலக் கல்வித் திட்டத்தின் ஒவ்வாமையாக மாறி மதரசாப் பாடதிட்டங்களைச் சுருக்கியது.

இருப்பினும், சென்ற தலைமுறை மார்க்க பேரறிஞர்கள்வரை பலவிதமான பாடங்களையும் மதரசாக்களில் பயிற்றுவிப்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்கள். சான்றாக, தமிழ் மொழிப்பாடத்தில் மார்க்க அறிஞர்கள் காட்டிய அக்கறையின் வெளிப்பாடாக, 1956ம் ஆண்டு “காலங்காட்டும் இடைநிலை” எனும் இலக்கண நூலை எழுதி வெளியிட்டுள்ளார் லால்பேட்டை மௌலானா ஜியாவுத்தீன் அமானி ஹஜ்ரத் அவர்கள். அந்நூலின் முன்னுரையில் அவர்கள் குறிப்பதாவது: “நம் அறபிக் கல்லூரி மாணவர்கள் இறந்த காலங்காட்டும் இடைநிலை – நான்கில் எதை எங்கே பிரயோகிப்பது – குறித்து வினவினார்கள். நன்னூலில் இதுகுறித்து விவரமில்லாததைப் பிரஸ்தாபித்து தமிழறிஞர்களிடம் விளக்கம் கேட்டு எழுதியிருந்தோம். அதற்கு அண்ணாமலை சர்வ கலாசாலையின் தமிழ்த்துறை தலைவர் சிதம்பரநாத செட்டியார், ’தங்கள் கடிதம் கிடைத்தது. நன்னூலில் இறந்த காலம் குறித்த 4 எழுத்துகள் சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், எவ்வாறு பிரயோகிப்பது என்பதற்கான விவரங்கள் இல்லை’ (1.12.55) என்று பதில் அனுப்பினார். அதேபோல், திருநெல்வேலி சைவ சித்தாந்த சங்கத்தைச் சார்ந்த பெருநாவலர் பேராசிரியர் புன்னைவநாத முதலியார், இராமானுஜ கவிராயர் எழுதிய நன்னூல் கண்டிகையுரையில் மேற்படி இடைநிலை சம்பந்தமான சூத்திரத்தின் கீழ்தரப்பட்ட விவரத்தை எழுதி அனுப்பி, ’சொற்கள் பாகுபாட்டில் வினை இடைநிலைகள் பற்றி தாங்கள் கேட்கப் போந்தது எங்கட்கு ஓர் புதிய உணர்வையும் எழுச்சியையும் கொடுத்துள்ளது’ என்று எழுதியுள்ளார்கள் (5.1.56)”.

பிறகு தாமே முயன்று மேற்படி இலக்கணக் குறிப்பை வரையப் போந்த அமானீ ஹஜ்ரத் மேலும் குறிப்பதாவது: ”காலங்காட்டும் இடைநிலை குறித்து ஒரு பொதுமுறையைக் கண்டுபிடிப்பது அவசியமாகிறது. தற்போது நான் இந்த வேலையை ஒரு வகையில் ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன். தமிழறிஞர்கள் மேற்கொண்டு வேலை செய்ய இது தூண்டுகோலாய் இருக்கும் என நான் நினைக்கிறேன்”. தமிழை இலக்கணச் சுத்தமாக எழுதவும் பேசவும் அக்கறை கொண்டிருந்ததைப்போல் கணிதம், வரலாறு, புவியியல் பாடங்களையும் மதரசாக்கள் சிறப்பாகப் பயிற்றுவித்தன. இன்றைக்கு மூன்றாம் வாய்ப்பாடுக்கே நாக்குத்தள்ளி கால்குலேட்டரைத் தேடும் நமக்கு பின்ன வாய்ப்பாடு குறித்து ஏதாவது தெரியுமா? படத்தில் உள்ள வீசம் பின்ன வாய்ப்பாடெல்லாம் உள்ளூர் போர்டு பாடசாலையில் (மதரசா உள்ளடக்கியது) 50 ஆண்டுகளுக்கு முன்புவரை பயிற்றுவிக்கப்பட்டது என்பதை யாராவது அறிவார்களா? இஸ்லாமியச் சொத்துப் பங்கீடு விவகாரங்களில் இந்த பின்ன கணக்குகள் இல்லாமல் வேலைக்காகாது என்பதையும் இந்த இடத்தில் பொருத்திப் பார்த்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

பின்ன வாய்ப்பாடு

இதுபோன்று மதரசாவில் பயிற்றுவிக்கப்பட்ட பல்வேறு பாடங்களையும் “பிச்சைக்காரனுக்குப் பயந்து சமைக்காமல் விட்ட மாதிரி” மதரசாப் பாடத்திட்டத்தை விட்டும் விலக்கி வைத்தார்கள் நம் அறிஞர்கள். இத்தகைய குறை அறிவு மிகைத்த காரணத்தால் தகுதியற்ற பலர் மார்க்க வியாக்கியானம் செய்ய வந்தார்கள். ஆனால், இன்றும் மதிநுட்பத்தோடு தீர்க்கமான மார்க்கத் தெளிவுமிக்க ஆலிம்களும் சத்தியத்தை இயம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மதரசாக்களின் தயாரிப்பே என்பதையும் நாம் மறக்கலாகாது.

உலகத்து ஞானங்கள் வாய்க்கப் பெறாமல் மக்களை நேர்வழியின் பக்கம் அழைக்கவே முடியாது என்பதே இஸ்லாத்தின் அறிவுப்பார்வை. அந்தளவில் மதரசாக்கள் கல்வியில் – பாடதிட்டங்களில் எந்தப் பாகுபாட்டையும் புகுத்தியதில்லை. முஸ்லிம் நாடுகளில் காலனி ஆட்சி ஏற்பட்ட பிறகே அரசியல் நிர்பந்தம் காரணமாக உலகக் கல்வி – மார்க்கக் கல்வி என்று கல்வி சாதி பிரிந்தது. பிரிட்டிஷ் சிற்பியும் எழுத்தாளருமான ரோம் லான்டோ, “இஸ்லாத்தில் மதமும் விஞ்ஞானமும் வெவ்வேறு வழியில் பயணிக்கவில்லை. இஸ்லாத்தில் தத்துவமும் அறிவியலும் மதக்கோட்பாடுகளை பகுத்தறிவுக்கு உட்பட்டு விளக்கி இஸ்லாத்தை ஆற்றல்படுத்தின” என்று எழுதுகிறார். (Islam & Arabs)

இதே நிலையில் டாக்டர் ஆர். பி. பராஞ்ச்பே தனது ‘இந்தியாவின் குறைபாடுகள்’ எனும் நூலில் இப்படி குறிப்பிடுகிறார். ”மத சம்பந்தமான சடங்குகளை சரியாகச் செய்ய கற்றுக்கொள்வதே இடைக்கால இந்தியக் கல்விமுறை என்ற நிலையை முஸ்லிம் ஆட்சியாளர்களே புரட்டிப்போட்டனர். அதற்கு முந்தைய கல்விமுறையைவிட மதரசாக் கல்வி நிச்சயம் மேம்பட்டதாகவே இருந்தது.” ஆனால் பிற்காலத்தில் உலகளாவிய நிலையில் முஸ்லிம் சமூகம் ஒடுக்குதலுக்கு ஆளாகியபோது தலைதூக்கிய பதுங்குக் குழி மனோபாவம் இந்திய மதரசாக் கல்வியில் குறுகிய எல்லைக் கோடுகளை வகுத்துக்கொள்ள காரணமாக அமைந்தது.

அரசியல் காரணங்களுக்காக கல்வியைக் காவு கொடுக்கத் துணிந்த இந்தப் பேதமையை சர் சையது அஹ்மது கான் 27.12.1886 அன்று நடைபெற்ற முஸ்லிம் கல்வி மாநாட்டில் குறிப்பிட்டு கடுமையாகச் சாடினார். அவரும்கூட மதரசாக்களின் தேவையை முற்றிலும் உணர்ந்து மாற்றங்களை மட்டுமே பரிந்துரைத்தார். இன்றைக்கு அறபி மதரசாக்களில் போதிக்கப்படும் பாடங்களை வரிசைபடுத்தும் மௌலவி ஹாரிஸ் ஜமாலி குறிப்பிடுவதாவது: ”அறபி இலக்கணம், பேச்சுக் கலை, பொருள்கலை, இஸ்லாமியச் சட்டம், குர்ஆன் – ஹதீஸ் விளக்கவுரைகள், சொத்துப் பங்கீட்டு பாடங்கள் ஆகியவை மட்டுமே இன்று அறபிக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதில் எங்கு தீவிரவாதம் வருகிறது? மதரசாக்கள் போதிப்பது அன்பின் வழிபட்ட ஆன்மிகக் கல்வி மட்டுமே” என்று தெளிவு படுத்துகிறார். இருந்தும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கச் சூறாவளிகள் அவ்வப்போது மதரசாக்களில் மையங்கொண்டு சுழன்றடிக்கத் தவறுவதில்லை.

(இரு பகுதிகளாக அமைந்த கட்டுரையின் முதல் பகுதி இது. அடுத்த பகுதி நாளை வெளியிடப்படும்.)

Related posts

Leave a Comment