கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்”

Loading

தமிழ்நாட்டில் ”தமிழ் அகதிகள்” என்பது வித்தியாசமான தலைப்புப் போல தெரியலாம். ஆனால், முப்பது ஆண்டுகாலமாக இதுவே எதார்த்தமாக உள்ளது. இலங்கையில் இன மோதல் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசு, சட்டம் மற்றும் முகாம் அமைப்புகள் எப்படி உள்ளன என்பதில் சில புரிதல்களை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது அந்த மக்கள் சந்தித்து வரும் சிக்கலான நிலையை வெளிப்படுத்த உதவும் என்று நினைக்கின்றேன்.

“தமிழ் அகதிகள்” என்ற சொல் தொடர், தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சார்ந்த அனைத்து தமிழ் மக்களையும் குறிக்கின்றது. இவர்கள் அனைவரையும் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்வதைவிட, ஈழத் தமிழர்கள் என்று சொல்வதைவிட, தமிழ் அகதிகள் என்ற சொற்பதம் அனைவரையும் உள்ளடக்கியதாக, அனைவரையும் ஒற்றைப் புள்ளியில் இணைப்பதாக உள்ளது.

அகதிகள் என்பவர்கள் இன, மத, தேசிய அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுக்கள் என்ற காரணத்திற்காக அல்லது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக, அவர்களது நாட்டில் இருக்க முடியாத அல்லது ஆபத்தைச் சந்திக்கும் சூழலில் மற்ற நாடுகளுக்குத் தஞ்சம் கோருபவர்கள் என்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனம் கூறுகிறது. அப்படி இலங்கையிலிருந்து வந்தவர்களே தமிழ் அகதிகள். அதில் காலனிய காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நாடற்றவர்களாக மாற்றப்பட்டு, மீண்டும் இங்கும் நாடற்றவர்களாக இருக்கும் தமிழ் அகதிகளும் இதில் அடக்கம்.

ஐக்கிய நாடுகள் சாசனம், அகதிகளின் விருப்பத்திற்கு எதிராக தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மத உரிமை போன்றவற்றை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது. மேலும், சட்ட விரோதமாக நாட்டுக்குள் வந்ததற்காக அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்றும், அவர்களை நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ விடவேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

இன மோதலால் தமிழ்நாட்டிற்கு வந்த தமிழ் அகதிகள் சட்ட விரோதமாகக் குடியேறியதால் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதும், அவர்களை வெளியே செல்லவிடாமல் கண்காணிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்து போடவில்லை என்றாலும், அகதிகளுக்கான சாசனம் கூறுவது அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளாகும். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அப்படியில்லாமல் சட்ட விரோதக் குடியேறிகள் எனத் தொடர்ந்து தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

தமிழ் அகதிகள் தொடர்பான இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை நாம் கவனிக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ் அகதிகள் தொடர்பில் தனித்த கொள்கை முடிவு எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்களிடம் எந்த விதமான நிலைப்பாடும் இல்லை என்றே சொல்லலாம். இருக்கும் சட்ட விதிமுறைகளில் தமிழ் அகதிகளைப் பொருத்தி விளக்கம் தரப்படுகின்றதே தவிர, அவர்களுக்கென்று எந்தவித கொள்கை முடிவுகளோ, சட்டங்களோ இல்லை.

இந்த இடத்தில் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், இந்திய ஒன்றிய அரசு எதன் அடிப்படையில், எந்தச் சட்டங்கள் அடிப்படையில் தமிழ் அகதிகளை நடத்துகின்றது என்பதே. இங்கு இரண்டு சட்டங்கள் முதன்மையானவை. ஒன்று இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, அடுத்தது அயல்நாட்டினர் சட்டம் 1946.

இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ல் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் கருதப்படுகின்றது. அதன்படி, 1987க்குப் பின்னர் ஆவணங்கள் ஏதுமில்லாமல் இந்தியாவுக்குள் வரும், வந்த ஒருவர் சட்ட விரோதக் குடியேறியாகக் கருதப்படுவார். அப்படி கருத்தப்படும் ஒருவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்தாலும், இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருந்தாலும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அது மட்டுமல்ல, இந்தியக் குடியுரிமை கொண்டவரை சட்டவிரோதக் குடியேறி திருமணம் செய்து, அதன் மூலம் பிறக்கும் குழந்தையும் இந்தியக் குடியுரிமை பெற தகுதியற்றதாகவே கருதப்படும். குடியுரிமைச் சட்ட மசோதா 2020ல்கூட இந்த வரையறை உள்ளது. மோசமான இந்த வரையறையைக் கொண்டே ஆவணங்களின்றி வந்த தமிழ் அகதிகள் சட்ட விரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர்.

முன்னர் குறிப்பிட்டதுபோல், குடியுரிமைச் சட்டம் 2020ல் தமிழ் அகதிகள் பற்றிய குறிப்பு எதுவுமில்லை என்றாலும், அந்த மசோதா விவாதத்தில் தமிழ் அகதிகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சட்ட விரோதக் குடியேறிகள் வரையறையைக் காரணம் காட்டியே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகளை, அகதிகள் என்று விளிப்பதும்கூட நம் வசதியே தவிர, இந்திய ஒன்றிய அரசால் அவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகவே கருதப்படுகின்றனர். தமிழ்நாட்டு அரசும் அவர்களை அப்படியே கருதிக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் அவர்கள் முப்பது வருடங்களாக வாழ்ந்து வரவேண்டிய நிலைமையும், கியூ பிராஞ் என்ற தமிழக அரசின் உளவுப் பிரிவின் கண்காணிப்பிலும், வருவாய்த் துறை அதிகாரிகளின் நிர்வாகத்திலும் அவர்கள் இருக்க வேண்டிய அவல நிலையும் தொடர்கின்றது.

இந்த அணுகுமுறையால் எவ்வித அடிப்படை உரிமைகளும் இல்லாமல் குற்றவாளிகள் போல் மூன்று தலைமுறையாக வாழ்ந்துவரும் தமிழ் அகதிகள் கல்வி, வேலை வாய்ப்பின்றி, சரியான வாழிட வசதிகளின்றி அவதியுற்று வருகின்றனர்.

அயல்நாட்டினர் சட்டம் 1946 பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி இங்கே கூறவேண்டும் என்று நினைக்கிறேன். அந்தச் சட்டத்தின் பிரிவு 3(2)E-ல் வழங்கப்பட்டுள்ள அயல்நாட்டவரைக் கையாளும் முறைகளைக் கொண்டே தமிழகத்தில் 1990ம் ஆண்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தமிழ் அகதிகள் சந்திக்கும் இன்னொரு கொடுமை. இந்தச் சிறப்பு முகாம்கள் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டாலும், பெரும்பாலும் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் அகதிகளே.

சிறப்பு முகாம்கள் சிறைச்சாலைகள் போன்றவை. ஆனால், சிறைச்சாலை நிர்வாகத்திற்குள் வராது. இதுவும் கியூ பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வழக்குகளில் சிக்கும் தமிழ் அகதிகள் எவரும் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டாலோ, தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தாலோ கியூ பிரிவு அதிகாரிகளால் சிறப்பு முகாம்களுக்கு கைது செய்து அனுப்பப்படுவார்கள். வழக்குகள் நடக்கும் நபர்கள் வழக்கு தீர்ப்பு வரும்வரை சிறப்பு முகாகளில் வைத்திருக்கப்படுவர். இந்திய நீதிமன்றங்களில் வழக்குகள் நடக்கும் கால அளவு நாம் அறிந்ததே. குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் இருக்க வேண்டி வரும். ஆனால், இந்த சிறப்பு முகாம் சிறை தண்டனை காலம் எல்லாம் வழக்கில் வழங்கப்படும் தண்டனையிலிருந்து எந்த வித கழிப்பும் வழங்காது. அதேபோல் வழக்கு முடிந்தவர்கள் எத்தனை காலம் சிறப்பு முகாம்களில் இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் இருப்பதில்லை. அனைத்தும் கியூ உளவுப் பிரிவின் கையில் உள்ளது.

சிறை தண்டனை என்பது இத்தனை காலம் என்ற கால வரையரைக்குள் இருக்கும். ஆனால், அகதியாக வந்த ஒரே காரணத்திற்காக எப்போது விடுதலை என்றுகூட தெரியாமல் இருக்கும் சிறப்பு முகாம் சிறை என்பது, ஈழத்தில் இருந்த முள்வேலி முகாம்களைவிட மோசமானது.

தற்போது சிறப்பு முகாம்களில் பெரும்பாண்மையாக இருப்பவர்கள் முகாம் வாழ்க்கையிலிருந்து எப்படியாவது பிழைத்து ஆஸ்திரேலியாவிற்குச் சென்று நல்ல வாழ்க்கை கிடைத்துவிடாதா என்று முயற்சி செய்தவர்களே.

ஒரு பக்கம் திறந்த சிறைச்சாலைகளாக இருக்கும் முகாம்கள், இன்னொரு பக்கம் சிறைச் சாலையைவிட மோசமான சிறப்பு முகாம்கள். அதனோடு நிச்சயமில்லா வாழ்க்கை என தமிழ் அகதிகள் நிலைமை தமிழ் நிலத்தில் பாழ்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழ் அகதிகள் வேண்டுவதெல்லாம் மனிதர் என்ற அடிப்படையில் கண்ணியமான வாழ்வே. அதற்கு இந்தியக் குடியுரிமையை அவர்கள் கோருகின்றனர்.

இந்த இடத்தில் இன்னும் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. இந்திய அரசியல் அமைப்பே அகதிகளுக்கான உரிமைகளை வழங்குகிறது என்பது பற்றியதே அது. அதாவது, திருச்சி கொட்டப்பட்டு முகாம் மற்றும் மதுரை, பெரம்பலூர், கரூர், மண்டபம் முகாம்களிலுள்ள அகதிகள் (இந்திய வம்சாவழியினர்) தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது என்னவென்றால், ‘மனுதாரர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்கு வந்ததால் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ன்படி அவர்கள் சட்ட விரோதக் குடியேறிகள்; எனவே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முடியாது எனக் கூறி மனுதாரர்களின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரியது.

ஒன்றிய அரசும் அதன் பங்குக்கு அதே சட்டத்தைக் காட்டி 1983ம் ஆண்டுக்குப் பிறகு ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள் சட்ட விரோதக் குடியேறிகள் என்றே அழைக்கப்படுவார்கள் எனக் கூறியது. அவர்கள் குடியுரிமை விண்ணப்பிக்கத் தகுதி இல்லை எனவும் கூறியது.

வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன், இந்திய, தமிழ்நாட்டு அரசுகளின் நிலைக்கு எதிராக இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21ஐ குறிப்பிட்டு, மனுதார்களைக் கிட்டத்தட்ட 35 வருடங்களாக முகாம்களில் கண்காணிப்பிலும், கட்டுப்படுத்தப்பட்டும் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21க்கு எதிரானது எனக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு, ”ஃபெலிக்ஸ் ஸ்டெபான் கேயா எதிர் அயல்நாட்டவர் மண்டல அலுவலகம்” தீர்ப்பை எடுத்துக்காட்டி, குடியுரிமைச் சட்டம் 1955ல் தேவைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய மத்திய அரசுக்குக்கு முழு அதிகாரம் இருப்பதாகக் குறிப்பிட்டு, ஒன்றிய அரசு மனுதாரர்களை (தமிழ் அகதிகளை) சட்ட விரோதக் குடியேறிகளாக அணுகாமல் இருக்கவும் அறிவுறுத்தினார்.

அத்தோடு ஒன்றிய அரசு தமிழ் அகதிகள் பிரச்னையை, குறிப்பான அதன் தன்மையைக் கருதி முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தியது. தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குதல் என்பது இந்திய ஒன்றிய அரசு நினைத்தால் முடியும் என்று கூறினார். இந்தத் தீர்ப்பு கவனிக்கத்தக்கது. தமிழ் அகதிகள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கப்பட்ட தீர்ப்பு.

தீர்ப்பு வழங்கப்பட்டது 2019 ஜூன் மாதம். ஆனால், இன்றுவரை எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. முகாம்களின் நிலையிலும் எந்த மாற்றமும் வரவில்லை. தற்போது தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்திய ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்திருக்கின்றது. இது தமிழ் அகதிகள் நிலை எந்த அளவுக்குச் சிக்கலாக இருக்கிறது என்பதை உணர்த்தும்.

இந்தியாவிலேயே பல அகதிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் இந்திய ஒன்றிய அரசு அவர்களின் தனித்த நிலையைக் கொண்டு அணுகுகிறது. தமிழ்நாட்டில் வாழும் தமிழ் அகதிகள் மட்டுமே இருக்கும் சட்ட விதிமுறைகளுக்குப் பொருத்திப் பார்த்து வரையறுக்கப்படுகின்றனர். அவர்களே தொடர் கண்காணிப்பிலும், முகாம் என்ற கொடுமையிலும், சிறப்பு முகாம் என்ற சித்தரவதையிலும் சிதைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகள் என்பவர்கள் மனிதர்கள். அவர்களுக்கும் அடிப்படையான உரிமைகள் உண்டு. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அணுகப்பட வேண்டும். அவர்கள் தொடர்ந்து குற்றவாளிகளாக நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தற்போதைய தமிழ்நாட்டு அரசு ஒன்றிய அரசிடம் தமிழ் அகதிகளுக்கான குடியுரிமையை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றது. அவை மிக சரியான செயல்பாடே. அதே நேரத்தில், தமிழ்நாட்டு அரசின் தமிழ் அகதிகள் குறித்த நிலைப்பாடு மாற வேண்டும். தமிழ் அகதிகள் மனிதர்களாக வாழ முகாம் என்ற கண்காணிப்பு அமைப்பு இல்லாமல் ஆக்குவதில்தான் அது உள்ளது.

கடைசியாக நீதிபதி சாமிநாதன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு குறிப்பைக் குறிப்பிட்டு முடிக்கலாம் என்று நினைக்கின்றேன். அநேகமாக அகதிகள் நிலையில் இது மிக முக்கியமான நிலைப்பாடாக இந்திய ஒன்றிய அரசுக்கும், முக்கியமாக தமிழ்நாட்டு அரசுக்கும் இருக்கும். அகதிகள் இந்தியக் குடிமக்கள் இல்லை, அவர்களுக்கு இங்கு உரிமைகள் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு அது சொல்லும் பதில் என்னவென்றால், “மனுதாரர்கள் (தமிழ் அகதிகள்) இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 21 வழங்கும் தனிமனித உரிமையைக் கோர முடியும். அது அனைவருக்குமானது. அதில் குடியுரிமை பெற்றவர்கள், குடியுரிமை இல்லாதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. அது அகதிகளுக்கும், புகலிட கோரிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அத்தோடு மனுதாரர்கள் இந்த மண்ணில் வேர் கொண்டவர்கள், நம் மொழி பேசுபவர்கள், நம் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்கள் உரிமை கோர முடியும்”

Related posts

One Thought to “தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்””

  1. […] கையாளும் சட்ட மூலங்கள் பற்றி “தமிழகத்தில் தமிழ் அகதிகள்” என்ற கட்டுரையில் காண்க. இந்தக் […]

Leave a Comment