கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி முகாம்

“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”   தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு இரத்தம்  வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல; கிட்டத்தட்ட 80 குரல்கள். இதில் 21 பேர் அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது எல்லாம் என்ன என்று கேட்போருக்கு பதில் இதுதான்: இவை அனைத்தும் தமிழ்நாட்டில்  திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அகதிகள், தங்களை விடுதலை செய்யக் கோரி நடத்தும் போராட்டங்கள் இவை.

தற்கொலைப் போராட்டம் ஈழத்தில் மட்டும் அல்ல, சிறப்பு முகாம்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு விடையான விடுதலை மட்டும் எங்கும் எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. ஏற்றுக்கொள்ள முடியாத எதார்த்தம் இதுவே. அதேபோல், தமிழ்நாடு நேர்கொண்டு பார்க்காதவொரு எதார்த்தமாகவும் உள்ளது.

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கைகளை வெட்டிக்கொள்வது, தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொள்வது, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது, தீர்வுகிடைக்காத நிலையில் தற்கொலை செய்துகொள்வது என அவர்கள் வேறு வழியின்றி முன்னெடுக்கும் ஆபத்தான இந்தப் போராட்டங்கள் சில முகநூல் பதிவுகளோடும், செய்தித்தாள் பெட்டிச் செய்திகளோடும் முடிந்துவிடுகின்றன.  அவர்கள் எதிர்பார்க்கும் விடுதலை இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் சிறப்பு முகாம்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பல காலமாய்க் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஏழுக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் 1990 முதல் இருந்துவந்திருக்கின்றன. இந்திய வெளிநாட்டவர் சட்டம் 1946ல் வெளிநாட்டவரை குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக் கண்காணிக்கலாம் என்ற பிரிவு 3(2)Eஐக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் படிப்படியாக மூடப்பட்டு, தற்போது திருச்சி மத்திய சிறையின் ஒரு பகுதியில் திருச்சி சிறப்பு முகாம் மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு கிட்டத்தட்ட 80 தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்து சமீபமாக வந்தவர்கள்வரை அடக்கம்.

தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் உருவாக்கத்திற்கு இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் கையாளும் சட்ட மூலங்கள் பற்றி “தமிழகத்தில் தமிழ் அகதிகள்” என்ற கட்டுரையில் காண்க. இந்தக் கட்டுரை சிறப்பு முகாமின் கொடுமையான நிலை என்ன, அது ஏன் மூடப்பட வேண்டும் என்பதில் மட்டும் கவனம் கொள்கிறது.

கடந்த காலங்களில் சிறப்பு முகாம்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு முகாம் வரலாறு மிகுந்த கொடூரங்களைக் கொண்டதாகவே உள்ளது. வேலூரில் சிறப்பு முகாம் இருந்தபோது விடுதலை வேண்டிப் போராடியவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில்  பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் மீது பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறப்பு முகாம்களில் விடுதலை வேண்டிப் போராடுவோர்மீது வழக்குகள் பதிவு செய்தல் அல்லது போராட்டங்களைத் தடுக்க காவல்துறை வன்முறையைப் பயன்படுத்துதல், அவர்களின் குடும்பங்களை மிரட்டுதல், தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்திக்கத் தடை விதித்தல், நாடு கடத்துவதாக மிரட்டுதல், நாடு கடத்துதல் எனப் பல வகைகளிலும் அவர்கள்மீது கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவை பல வகைகளில் இன்றும் தொடருவதாகவே சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் கூறுகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுக்கப்பட்டவர்கள்

தமிழ்நாட்டிற்கு வந்த தமிழ் அகதிகளில் ஏதாவது வகையில் வழக்கில் சிக்கி பின் விடுதலை பெற்றவர்கள், பிணை கிடைத்தவர்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்கள் என்று இருப்பவர்களை  மேலே குறிப்பிட்ட வெளிநாட்டவர் சட்ட பிரிவின் கீழ் வெளிநாட்டவரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறோம் எனும் பெயரில் பலரை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

அதேபோல் இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு மூலம் தமிழகம் வந்து விசா காலாவதியானவர்கள், கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள், திசைமாறிய இலங்கை மீனவர்கள், மேலும் நேபாளம், சீனா, பல்கேரியா, பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்களும் கடவுச்சீட்டு தொடர்பான வழக்குகளுக்காக இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த மாதம் இலங்கை மீனவர்கள் பத்துப் பேர் மட்டும் இங்கிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாம்

தற்போது இருக்கும் திருச்சி சிறப்பு முகாம் திருச்சி மத்திய சிறையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இங்கு இருப்பவர்கள் சுற்றிலும் மின்சார வேலி அமைப்பப்பட்டு,  8X9 என்ற அளவில் தனிச்சிறைகளில்  250க்கும் மேற்பட்ட காவலர்களின் 24 மணிநேரக் கண்காணிப்பில், 35க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் காமிராக்களின் பார்வையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் எந்தச் சொந்த வேலைகளும் செய்ய முடியாது. அவர்களுக்கென்று எந்த வருமானமும் இல்லை.

இங்கு இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.175 பணத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் இருந்தே உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

வெளியில் விற்கப்படும் காய்கறி, மளிகை, பிற பொருட்கள் இரட்டிப்பு விலையில் சிறப்பு முகாம்களில்  இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படுவதாலும், குடிநீர் உட்பட அனைத்தையும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளதாலும், வழங்கப்படும் தொகை போதாமல் அன்றாட வாழ்விற்கே மிகுந்த சிரமப்படும் நிலையில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஒரு நாளைக்கு இரு வேளை உணவே அவர்கள் உண்பதாகக் கூறுகிறார்கள். 

பணக் கொடுப்பனவைத் தவிர வேறு எந்த உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய யாரும் அவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் வர அனுமதி உண்டு; வேறு யாருக்கும் அனுமதி இல்லை. தடுத்து வைக்கப்பட்டவர்களில் குடும்பம் இல்லாதவர்கள் யாரையும் பார்க்க அனுமதி இல்லை. குடும்பத்தினரால் வழங்கப்படும் பொருட்கள் மிகுந்த தணிக்கைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

சிறப்பு முகாமில் இருப்பவர்கள் வழக்கு அல்லது மருத்துவமனைக்காக வெளியே செல்லும் போது ஆறுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார், இரண்டுக்கும் மேற்பட்ட வாகனப் பாதுகாப்புடன் தீவிரவாதிகள்போல் சித்தரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இப்படிப் பயங்கரவாதிகள்போல் அவர்கள் நடத்தபடுவது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

சிறப்பு முகாமைப் பொறுத்தவரை முதலுதவி, மருத்துவ சிகிச்சை எதுவும் இல்லை. உடல்நிலை சரியில்லை எனில் மனு அளித்த பின் அனுமதி பெற்ற பிறகு செல்ல வேண்டும். உடனடியாகச் செல்ல முடியாததால் அண்மையில்கூட மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனால் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் கடுமையான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

குடும்பங்களைப் பிரிந்தும், என்று முடியும் என்று தெரியாமலும் தொடரும் சிறப்பு முகாம் வாழ்வினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அதற்கான சிகிச்சைகள், மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவதில்லை.

அமைதி வழியில் முகாமில் தங்களை வருத்தி உரிமைக்காகப் போராடும்போது; போலீசார் அவர்களைக் கலைப்பது, மிரட்டுவது , வழக்குகள் போடுவது எனப் பலவாறு காவல்துறை மற்றும் க்யூ பிரிவினால் இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள்.  

கடந்த ஜூன் மாதம் விடுதலை வேண்டி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 24 பேர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் போட்டுள்ளனர். இப்படித் தொடர்ச்சியாக அவர்கள் மீது வன்மம் கொண்டு பல மிரட்டல்களையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இப்படிப் போராடியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் எல்லாம் போடப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம் மூடப்பட வேண்டும்

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 20(1)ல் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், ஒருவர் ஒரு குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் வழக்குப் போடப்படுவதும், தண்டனை அளிப்பதும் கூடாது. ஆனால், சிறப்பு முகாம் வெளிநாட்டவர் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது இன்னொரு சிறைச்சாலையாகவே விளங்குகிறது.  வழக்கில் வழங்கப்படும் தண்டனையோடு சேராமல் இதுவும் தனியான ஒரு சிறைத்தண்டனையாக உள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனை கால வரையறையைக் கொண்டது. சிறப்பு முகாம் தடுப்பு எந்தவிதக் கால வரையறையையும் கொண்டது அல்ல. க்யூ பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ளது.  நீதிமன்றத்திற்கு வெளியே தண்டனை வழங்கும் ஒரு முறைதான் இந்தச் சிறப்பு முகாம். எனவே, சிறப்பு முகாம் அமைப்பு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது. இது அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட மீறல். அதாவது ஒரு குற்றத்திற்கு இரு தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

அகதிகளாக வந்த ஒரு காரணத்திற்காக, குறைந்தபட்ச மனித உரிமைகள்கூட இல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் சட்டங்களை உருவாக்கி அவர்களைச் சித்தரவதை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

சிறப்பு முகாம்கள் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் (WP 15044/91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப் சிங் வழங்கிய தீர்ப்பைப் பார்க்க வேண்டும். அதாவது,

  • சிறப்பு முகாம்களில் வைக்கப்படுபவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தபட்டுள்ளதே அன்றி அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
  • சிறப்பு முகாமில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களை வைத்துக்கொள்ள விரும்பினால் அவர்களை அழைத்துக்கொள்ளலாம். அவர்களின் செலவீனங்களையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் சிறைகளில் இருப்பதுபோல் அடைத்து வைக்கப்படக் கூடாது. வளாகத்திற்குள் நடமாட அனுமதி இருக்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். எந்தவித நேரக் கட்டுப்பாடுமின்றி விரும்பிய நேரம் பேசுவதற்கும், பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
  • காவல்துறையினர் வெளிப்புறத்தில் மட்டுமே காவலுக்கு இருக்க வேண்டும். தாசில்தார் நிர்வாகத்தில்தான் சிறப்பு முகாம் நிர்வகிக்கப்படும்.
  • நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்தச் செலவிலோ அல்லது அரசின் செலவிலோ அனுப்பிவைக்கப்படும். (’சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்’ நூல் பக்கம் 16)

இது தமிழ்நாட்டு அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. இது நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாட்டு அரசு நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்றுவரை இவை வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. சிறப்பு முகாம் சிறைச்சாலையை விட மிக மோசமாக உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி இல்லாமல் மேற்குறிப்பிட்ட வகையில் சிறப்பு முகாம் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்.

குடும்பங்களில் இருந்து ஆட்களைப் பிரித்துச் சிறப்பு முகாம் என்ற கொடுமையில் வைத்திருக்கும்போது அந்தக் குடும்பங்களின் நிலை என்ன ஆகிறது என்ற அக்கறைகூட யாருக்கும் இருப்பதில்லை. குடும்பங்களின் சிதைவைப் பார்த்தும் எதுவும் செய்யமுடியாத நிலையானது சிறப்பு முகாம் தடுப்புவாசிகளை மிக ஆபத்தான முடிவுகளை எடுக்க வைக்கின்றது.

ஈழத்தின் முள்ளிவாய்க்கால், அமெரிக்காவின் குவாண்டமோ சிறைகளுக்கும், தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு நடத்தப்படும் அநீதியான சிறப்பு முகாம்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

உலகம் கண்ணீர்விடும் எந்த மனித உரிமை மீறல்களுக்கும், தமிழ் நிலத்தில் தமிழ் அகதிகள் இப்படிக் கொடுமைப்படுத்தப்படுவது எந்த விதத்திலும்  சளைத்தது இல்லை. இது மிக மோசமான மனித உரிமை மீறல். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சிறப்பு முகாம் பற்றிய பதிவுகள் என்பது மிக அரிதானவை. அதில் ”சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்ற, தோழர் பாலன் எழுதிய நூல் முக்கியமானது.

இறுதியாக

இலங்கை சிங்கள பெளத்தப் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், ஒரே மொழி பேசும் மக்கள் உள்ள நிலம் என்று நம்பித் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், அவ்வளவு ஏன் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராகவும் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்களில் வதைக்கப்பட்டுக்கொண்டுள்ளனர்.

பிள்ளை இல்லாத் தாய்-தந்தை; தாய்-தந்தை இல்லாப் பிள்ளைகள், கணவன் இல்லா மனைவி, சகோதரர் இல்லாக் குடும்பம் என கைதொடும் தூரத்தில் உறவுகள் பிரிக்கப்பட்டுக் கொடும் சிறையில் கால எல்லையின்றித் தடுக்கப்பட்டிருப்பதை இன்னும் எத்தனை காலம் தமிழ்ச் சமூகம் அமைதியாகக் கடந்துசெல்லப் போகிறது எனத் தெரியவில்லை.

உயிரைக் கொடுத்துப் போராடும் சிறப்பு முகாம் தடுப்புவாசிகளின் விடுதலைக்கு நாமனைவரும் குரல்கள் கொடுக்க வேண்டும். சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சிறப்பு முகாம் என்ற கொடுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

Related posts

Leave a Comment