கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையில் கர்பலா

Loading

ஹிஜ்ரீ 61ம் ஆண்டு முஹர்றம் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய வரலாற்றில் உச்சகட்ட கொடூரங்களும் சோகங்களும் நடந்தேறியதை வரலாற்றுப் பக்கங்கள் படம்பிடித்திருக்கின்றன. அந்தப் பக்கங்களைக் கடந்து செல்லுகையில் எப்படிப்பட்ட இரும்பு மனிதராக இருந்தாலும் அவரின் கண்கள் குளமாகிவிடும். ஏனெனில், ஹிஜ்ரீ 61ம் ஆண்டு கர்பலாவில் நடந்த படுகொலைகள் நிராகரிப்பாளர்களால் நடத்தப்பட்ட ஒன்றல்ல; மாறாக, ஏகத்துவப் பிரகடனத்தை மொழிந்த முஸ்லிம்களால் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமானது, அண்ணல் நபியின் ஈரக்குலையான அன்னை ஃபாத்திமாவின் ஈரக்குலை இமாம் ஹுசைன் மீதும், நபிக் குடும்பத்தார் (அஹ்லுல் பைத்) மீதும் நடந்தேறிய மாபெரும் அநீதம் அது.

கர்பலாவைப் பற்றி பேசும் ஒவ்வொரு சாராரும் தத்தமது குழுவின் கண்ணோட்டத்தில் அதைப் பார்ப்போராகவும், எல்லைமீறி விமர்சனத்தை முன்வைப்போராகவும் இருக்கின்றனர். சிலர் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயலான மார்பிலும் முதுகிலும் கீறிக்கொண்டு ரத்தம் சிந்துகிறார்கள்; பாஞ்சா எடுத்து ஊர்வலம் செல்வது போன்ற சடங்குகளிலும் ஈடுபடுகிறார்கள். சிலர் யஸீதைத் தூற்றுவதோடு நிற்காமல், வேறு சில நபித்தோழர்களையும் அபாண்டமாக விமர்சிக்கிறார்கள். இன்னும் சிலரோ யஸீதை ”றளியல்லாஹு அன்ஹு” (”அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக!”) எனச் சொல்லும் அளவிற்குச் சென்றுவிட்டார்கள். இந்நிலையில், கர்பலா நிகழ்வை நாம் எப்படி பார்ப்பது, அல்லாஹ் நமக்கு அதில் என்ன படிப்பினையை வைத்திருக்கிறான், இமாம் ஹுசைன் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார் போன்றவற்றை அறிய முயல்வது அவசியமாகும்.

கர்பலா குறித்த ஷீஆக்களின் பார்வையை ஒருபுறம் வைத்துவிட்டு, அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையை இங்கு காண்போம். அஹ்லுஸ் சுன்னாஹ்வைப் பொறுத்தவரையில், சங்கைக்குரிய இமாம்கள், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள், மரியாதைக்குரிய வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரபூர்வமாக கர்பலா வரலாற்றைப் பற்றி உண்மைகளைப் பதிவு செய்துள்ளார்கள். இமாம் தபரீ, இப்னு கஸீர், ஜலாலுத்தீன் சுயூத்தீ, இமாம் தஹபீ போன்றோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

ஹளறத் முஆவியா ஹிஜ்ரீ 60ம் ஆண்டு இறந்துவிடுகிறார். அவர் உயிருடன் இருந்தபோதே யஸீதை அடுத்த ஃகலீஃபாவாக நியமிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். அதன் அடிப்படையில் யஸீது ஃகலீஃபாவாக பதவியேற்றுக்கொண்டபோது நபித்தோழர்களில் இமாம் ஹுசைனும் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் போன்றோரும் யஸீதுக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) செய்வதற்கு மறுத்தார்கள். இமாம் ஹுசைனுக்கு கூஃபாவிலிருந்து தொடர்ச்சியாகக் கடிதங்கள் வந்தன, இமாம் ஹுசைனிடம் பைஅத் செய்வதற்கு மக்கள் காத்துக் கொண்டிருப்பதாக. இந்தப் பின்னணியில் அவர் கூஃபாவிற்குக் கிளம்பிச் சென்றார். ஹிஜ்ரீ 60ம் ஆண்டு றஜபு மாதம் மதீனாவிலிருந்து மக்கா சென்று அங்கு சில மாதங்கள் தங்கியிருந்துவிட்டு, ஹிஜ்ரீ 60 துல்ஹஜ் மாதம் கூஃபாவை நோக்கிப் புறப்பட்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் போன்ற நபித்தோழர்கள், கூஃபாவுக்குச் செல்ல வேண்டாம் என இமாம் ஹுசைனுக்கு ஆலோசனை வழங்கினார்கள். எனினும், அவர் நன்கு யோசித்த பிறகே இந்த முடிவிற்கு வந்தார்கள். தான் புறப்படாமல் தங்கிவிட்டால் ஹறமைனாகிய மக்காவிலோ மதீனாவிலோ ஏதேனும் பிரச்னை வந்துவிடும் என்று இமாம் ஹுசைன் அஞ்சினார். மேலும், நபியவர்கள் இமாம் ஹுசைனின் கனவில் தோன்றி, அவர் கர்பலாவில் கொல்லப்படுவார் எனும் முன்னறிவிப்பையும் செய்திருந்தார். இவை யாவும் அவரது பயணத்தைச் செப்பனிட்டன. (பார்க்க: தாரீஃகுத் தபரீ)

உண்மையில் கர்பலாவை ’போர்’ என்று குறிப்பிட முடியாது. பெண்கள், குழந்தைகள், உற்ற தோழர்கள் என 72 பேர்களுடன் இமாம் ஹுசைன் கூஃபாவிற்குப் புறப்பட்டுச் செல்கிறார். இந்நகர்வை அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும்கூட எந்தவொரு நபித்தோழரோ, அதற்குப் பின்வந்த தலைமுறையைச் சேர்ந்த அறிஞரோ (தாபிஈ) குறைகாணவில்லை. அவரைத் தடுத்த நபித்தோழர்களும்கூட, ’இப்போது இம்மாதிரியான காரியத்தில் இறங்குவது விவேகம் அல்ல’ என்ற எண்ணத்தில்தான் தடுத்தார்கள்.

கூஃபாவிற்குள் இமாம் ஹுசைன் நுழையாத வகையில் ஆளுநர் இப்னு ஸியாதின் படைகள் அவரை இடையிலேயே தடுத்து நிறுத்தின. தண்ணீர் கிடைக்காவண்ணம் எல்லாப் பகுதிகளையும் அடைத்து கர்பலா மைதானத்தில் அவரைத் தடுத்து நிறுத்தியதுடன், உமர் இப்னு சஅதின் தலைமையில் 4000 பேர்களைக் கொண்ட படையொன்று அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அச்சமயத்தில் எதிரிகளில் சிலர் இமாமுக்குப் பின் நின்று தொழவும் செய்தார்கள். இரவு-பகல் என நாள்கள் நகர்கையில் இமாம் ஹுசைன் கூடாரமிட்டுத் தங்கிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முஹர்றம் 10ம் தேதியை அடைந்தபோது கடைசி நேரத்தில் பின்வரும் கோரிக்கையை வைத்தார்.

 1. ஒன்று, தன்னை மதீனா திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும்,
 2. அல்லது, நாட்டின் எல்லைப்புறத்திற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்,
 3. அதுவும் இல்லையென்றால், யஸீதிடம் செல்லவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ஹளறத் ஹுசைன்.

இமாமின் கோரிக்கை மறுக்கப்பட்டதுடன், திரும்பத்திரும்ப இப்னு ஸியாதிடம் சரணடையச் சொன்னார்கள் எதிரிகள். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவருக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்தார்கள். கடைசி நிமிடம்வரை தனது தரப்பிலிருந்து போரைத் தொடங்காமல் அமைதி காத்தார் இமாம் ஹுசைன். கயவர்கள் முதலாவதாகத் தாக்குதலைத் தொடுத்தார்கள். அதையும் அல்லாஹ்விடம் சாட்சியாக்கினார் இமாம் ஹுசைன். மேலும், அவரோடு வந்த ஒவ்வொரு தோழரும் தீரத்துடன் போராடினார்கள். எதிரிகளால் அவ்வளவு எளிதாக அவர்களை நெருங்க முடியவில்லை. இமாமும் அவரின் குடும்பத்தாரும் வீரத்தின் ஜோதியாக அன்று மிளிர்ந்தார்கள். காலையில் தொடங்கிய போர் மாலை மக்ரிபு நேரத்தை நெருங்கியது. ஒவ்வொருவராக எல்லோருமே உயிர்த் தியாகியானார்கள், பெண்களைத் தவிர. இமாம் ஹுசைன் தன்னந்தனியாக மைதானத்தில் நிற்கும்போதுகூட 4000 பேர் கொண்ட படை அவரை உயிருடன் பிடிக்க முடியாதா என்பதுதான் கேள்வி. சிங்கத்திற்குப் பிறந்த சிங்கமாக அன்றைய தினம் நெஞ்சுரத்துடன் போராடினார் இமாம் ஹுசைன். முன்பும் பின்பும், மேலும் கீழும் எனப் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இறுதியில் ஹளறத் ஹுசைன் உயிர்த்தியாகம் எய்தினார். ஃபாத்திமாவின் ஈரக்குலை சுவனம் சென்றது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாம் இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே திரும்பிச் செல்வோம்!).

அவரும் அவரது குழுவினரும் தங்கியிருந்த கூடாரங்கள் சூறையாடப்பட்டன. அவரோடு வந்த பெண்களின் திரைச்சீலைகள் கிழித்தெறியப்பட்டன. ஹுசைனின் தலை காட்சிப்பொருளாக வைக்கப்பட்டது. ஜாமிஆ மஸ்ஜிதின் மிம்பர்மீது நின்றுகொண்டு இப்படி அறிவிப்பு செய்யப்பட்டது: “சத்தியத்திற்கும், சத்தியத்தின் சொந்தக்காரர்களுக்கும் வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! நம்பிக்கையாளர்களின் தலைவர் யஸீதுக்கும் அவருடைய படையினருக்கும் அவனே உதவிபுரிந்தான். பொய்யன் அலீயுடைய மகனான பொய்யன் ஹுசைனையும் அவனுடைய கூட்டத்தையும் அவனே கொன்றொழித்தான்.” அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பிறகு கர்பலாவில் கொல்லப்பட்டோரின் தலைகள் டமாஸ்கஸ் அனுப்பிவைக்கப்பட்டு யஸீதிடம் காண்பிக்கப்பட்டது. அரசவையில் அவற்றைக் காட்சிப்பொருளாக வைத்தார் அவர். (பார்க்க: அல்பிதாயா வந் நிஹாயா)

ஹளறத் ஹுசைன் மற்றும் அவரது தோழர்களின் தலைகளைக் கண்டதும் யஸீதின் கண்களில் நீர் மல்கியதாகக் கூறப்படுகிறது. “நான் ஹுசைனைக் கொல்லாமலேயே நீங்கள் என்னைப் பின்பற்றுவீர்கள் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். இப்னு ஸியாதின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அங்கு இருந்திருந்தால் ஹுசைனை மன்னித்திருப்பேன்!” (பார்க்க: தாரீஃகுத் தபரீ)

யஸீதின் இந்த வார்த்தைகள் தொடர்பாக அறிஞர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள்: “இத்தகைய கொடுமையான அநீதியைச் செய்தவர்களுக்கு அவர் என்ன தண்டனை வழங்கினார்?” இப்னு கஸீர் கூறுகிறார், “இப்னு ஸியாதுக்கு யஸீது எந்தத் தண்டனையும் அளிக்கவில்லை. அவனைப் பதவியிலிருந்து நீக்கவும் இல்லை. அவனைக் கண்டித்து ஒரு கடிதம்கூட எழுதவில்லை!” (அல்பிதாயா வந் நிஹாயா – பாகம் 8, பக்கம் 203)

இமாம் ஹுசைனின் கொலைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத யஸீதை, நீலிக்கண்ணீர் வடித்த யஸீதை உலகம் கண்டுகொண்டது. இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகம் மட்டுமல்லாமல், அதற்குப் பின் நடந்த இரு சம்பவங்களும் இஸ்லாமிய உலகை உலுக்கியெடுத்தன. அது ஹிஜ்ரீ 63ல் மதீனா மக்கள் யஸீதுக்குக் கட்டுப்பட மறுத்துக் கிளர்ச்சி செய்ததால் முஸ்லிம் பின் உக்பாவின் தலைமையில் 12,000 பேர் கொண்ட படை யஸீதால் அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் கட்டுப்பட மறுத்தால் போர் செய்யவேண்டும் என்றும், வெற்றிபெற்ற பிறகு மூன்று நாள்களுக்கு மதீனா அந்த இராணுவத்திற்கு ’ஹலால்’ ஆகும் என்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அப்படியே நடக்கவும் நேர்ந்தது. மதீனாவும் முழுவதும் சூறையாடப்பட்டதுடன், 10,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகளில் புகுந்து அப்பாவிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது யஸீதின் படை.

இப்னு கஸீர் கூறினார்: “அந்நாட்களில் சுமார் 1000 பெண்கள் தங்கள் கணவன்மார்கள் அல்லாத வேறு நபர்களால் கர்ப்பவதிகளாக்கப்பட்டார்கள்.” (அல்பிதாயா வந் நிஹாயா – பாகம் 8; அத்தபரீ – பாகம் 4)

மதீனாவை நிர்மூலமாக்கிய பிறகு அதே படையினர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரோடு போராட மக்கா சென்றனர். கற்களை வீசித் தாக்கும் இயந்திரம் மூலம் கல்மாரிப் பொழிந்தனர். அதன் மூலம் கஅபாவின் ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. (அத்தபரீ பாகம் 4; அல்பிதாயா பாகம் 8)

இப்னு கஸீர் கூறுகிறார்: மதீனா மக்களைத் துன்புறுத்துவதால் அல்லாஹ் வழங்கும் தண்டனை குறித்து உள்ள நபிமொழிகளை முன்வைத்துதான் அறிஞர்களில் ஒரு பிரிவினர் யஸீதின் மீது சாபமிடுவதை (லஅனத்) ஆகுமாக்கியுள்ளார்கள். இமாம் அஹ்மது இப்னு ஹம்பலும் இதே கருத்தையே கொண்டுள்ளார்கள். எனினும், இது இப்படியே தொடர்ந்தால் யஸீதின் தந்தையில் தொடங்கி பிற நபித்தோழர்களையும் தூற்றுவதற்கு வழிவகுத்துவிடுமே என்று அஞ்சி அறிஞர்களில் ஒரு சாரார் இவ்வாறு சாபமிடுவதை த் தடை செய்துள்ளனர். (பார்க்க: அல்பிதாயா – பாகம் 8)

நடந்த தவறுகளை மறைக்காமல், நடுநிலை தவறாமல் அஹ்லுஸ் சுன்னாஹ்வின் அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒருமுறை உமர் இப்னு அப்துல் அஸீஸுக்கு முன்பு, ”அமீருல் மூஃமினீன் யஸீது இப்னு முஆவியா” என்று ஒருவர் கூறியதற்காக அவருக்கு 20 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். (பார்க்க: தாரீஃக் அல்ஃகுலஃபா – ஜலாலுத்தீன் சுயூத்தீ)

யஸீதைப் போன்று சுகபோக வாழ்க்கையில் ஊறித்திளைத்த, ஒழுக்க விழுமியங்களில் பின்தங்கிய ஒரு நபரை ஃகலீஃபாவாக ஏற்று உறுதிப் பிரமாணம் வழங்குவதென்பது ஒருக்காலும் ஏற்புடையதாக இல்லை என்று இமாம் ஹுசைனைப் போன்ற கண்ணியவான்கள் கருதியிருக்கிறார்கள். தனிநபர் ஒழுக்கத்தைவிட ஃகிலாஃபத் எனும் இஸ்லாமிய ஆட்சியின் எதிர்காலம் மன்னராட்சியாக மாறுவதும், அதன் தரம் இன்னும் வீழ்ச்சி அடைவதும்தான் இமாம் ஹுசைனின் கவலையாக இருந்திருப்பதை அறிஞர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் ஹுசைன்தான் ஆட்சி செய்யவேண்டும், அவர்தான் அதற்குப் பொருத்தமானவர் என்று அவர் கருதியதாலேயே கர்பலா சம்பவம் நடந்ததாகச் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் உண்மை அவ்வாறில்லை. அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தார் ஒருபோதும் அப்படி நினைத்ததுமில்லை. ஹளறத் அலீ எப்போது ஆட்சிக்கு வந்தார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஒருவேளை இமாம் ஹுசைன் யஸீதுக்கு பைஅத் செய்திருந்தால் முஸ்லிம் உம்மத்திடம் அது அங்கீகாரமாகவும் ஒப்புதலாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனம். ஃகிலாஃபத் எனப்படும் இறையாட்சியானது அல்லாஹ்வின் மார்க்கம் இந்தப் பூமியில் நிலைநாட்டப்படுவதற்கான மகத்தான பொறிமுறையாகும். மனிதர்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நீதமானவொரு வாழ்கையமைப்பில் பயணிக்கும் உன்னதச் சமூக ஒழுங்கு ஃகிலாஃபத்தில் மட்டும்தான் சாத்தியம். அப்படிப்பட்ட ஓர் ஒழுங்கின் போக்கு சிதைவடையக் கூடாது என்றே ஹுசைன் எண்ணினார். ஃகிலாஃபத் என்ற இஸ்லாமிய ஆட்சிமுறையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பின்வரும் ஏழு கொள்கைகள் இருந்தன. அவை அனைத்தும் யஸீதின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டன என்றே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 1. நீதமான தேர்தல்
 2. ஷூறா (கலந்தாலோசனை) முறை
 3. கருத்துச் சுதந்திரம்
 4. அல்லாஹ்விற்கும் மக்களுக்கும் பதிலளிக்கும் பொறுப்பு
 5. பைத்துல்மால் (பொதுக் கருவூலம்)
 6. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி
 7. உரிமைகள், அந்தஸ்துகளில் சமத்துவம்

இந்த ஏழு விஷயங்களும் சிதைந்துவிடும்பொழுது இஸ்லாமிய ஆட்சி அதன் இலக்கை விட்டுத் திசை திரும்பிவிடுகிறது. அப்படிப்பட்ட அநீதியைப் பார்த்துக்கொண்டு வாழ்வதைவிட அல்லாஹ்வின் பாதையில் உயிரை விட்டுவிடுவது மேல் எனக் கருதினார் இமாம் ஹுசைன். அவருக்காக உலகம் முழுவதும் துக்கத்தை அனுஷ்டிக்கும் அனைவரும் அவர் எதற்காக உயிரை ஈகம் செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் தன் இன்னுயிரை அர்பணித்தார், தனது பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் உயிர்களை ஏன் தியாகம் செய்தார் எனும் கேள்விகளில்தான் நமக்கான படிப்பினை அடங்கியுள்ளது.

“ஹுசைன் என்னில் உள்ளவர், நான் ஹுசைனில் உள்ளவன்” என்றார்கள் நபிகள் நாயகம். அந்த மாமனிதரின் தியாகத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஒரு மாபெரும் செய்தி உள்ளது. அநீதிக்கும் கொடுங்கோன்மைக்கும் என்றும் தலைசாய்க்காத இமாம் ஹுசைன், நீதிக்குப் பகரமாகத் தனது தலையையே கொடுத்துவிட்டார். அவரது உயிர்த்தியாகம் சத்தியத்திற்கானது, நீதிக்கானது, இறையாட்சிக்கானது.

இந்தியத் துணைக் கண்டத்தின் அறிஞர் மௌலானா முஹம்மது அலீ ஜவ்ஹர் கூறினார்: “ஒவ்வொரு கர்பலாவுக்கும் பிறகு இஸ்லாம் உயிர்பெற்றெழுகிறது.” அதேபோல், இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகத்தை ’சத்தியத்திற்குச் சான்று பகர்தல்’ (ஷஹாதத்தே ஹக்) என்று வர்ணித்தார் பேரறிஞர் மௌலானா மௌதூதி. வரலாறு நெடுக எல்லா அறிஞர்களும் இமாம் ஹுசைனின் நோக்கம் மிக உயர்ந்தது, உன்னதமானதென்று கூறிவந்துள்ளார்கள். நாம் அதை ஆழமாக நம் உள்ளத்தில் ஏந்தக் கடமைபட்டுள்ளோம்.

முஸ்லிம் சமூகம் என்றென்றும் அநீதிக்கெதிராய் நெஞ்சுரங்கொண்டு நீதிக்குத் துணை நிற்க, இமாம் ஹுசைனின் வழி வாழ எல்லாம் வல்ல இறைவன் வழிவகுப்பானாக!

Related posts

3 Thoughts to “அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையில் கர்பலா”

 1. இஸ்மாயில் S. A. T. அன்சாரி

  இப்னு திலாவருடைய எழுத்துக்கள் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து இவரை எழுத ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அவருடைய ஆக்கங்களை மெய்ப்பொருள் தளத்தில் தொடர்ந்து வெளியிட வேண்டும்

 2. Thaha Muzammil

  Unbiased great article.

 3. Mohamed Razmi

  இராக்கில் தன் பணியைத் துவங்கியவர் மக்காவில் தனது திருப்பலியை செலுத்தத் துணிந்தது வரலாற்றில் ஒரு பெரு நிகழ்வானது. அதன் மறுதலையாய் இமாம் ஹுஸைன் மக்காவில் அதுவும் துல்ஹஜ் மாதத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து இந்த உம்மத்துக்காக தன்னை இராக்கில் ஒப்புக் கொடுக்கிறார். இப்ராஹீம் (அலை) அவர்களது தியாகத்தைப் போலவே இதிலும் ஒரு பெரும் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. கொல்லப்பட்டது இமாம் ஹுஸைன் மாத்திரமல்ல. இஸ்லாத்தின் சாராம்சமான மக்களாட்சிதான் அன்றைய தினம் பலியிடப்பட்டது.

  மன்னராட்சிக்கு வாக்காலத்து வாங்குவோருக்கு என்றைக்குமே இமாம் ஹுஸைன் அவர்களது தியாகம் தொண்டையில் சிக்கிய முள் தான். அது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஏகனாகிய அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

Leave a Comment