குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான்களை மையப்படுத்தி மீண்டும் சூடுபிடிக்கும் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

Loading

ஆப்கானிஸ்தானில் இருந்த ஏனைய ஆட்சியாளர்களைவிட தாலிபான்கள் சிறந்தவர்கள்தாம். வழிப்பறியும் ஊழலும் மலிந்திருந்த அந்த தேசத்தில் அவர்களால் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வழங்க முடிந்திருக்கிறது. அவர்களால் மக்களுக்கு நியாயமான, பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை வழங்க முடியும். அவர்களிடம் காணப்பட்ட கடும்போக்குவாதமே அவர்களுக்கு எதிரான வெறுப்பு அலையை அதிகப்படுத்தியது. அந்த கடும்போக்குவாதம் அவர்களின் பழங்குடி மனநிலையிலிருந்து உருவானது. இஸ்லாம் அதற்கு பகடையாக ஆக்கப்பட்டது. கடும்போக்குடன் அணுகப்படும் எந்தவொன்றும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மார்க்கம் உள்ளத்திற்கானது. அது உள்ளத்தைத்தான் ஆட்சி செய்யும். உள்ளத்தில் இயல்பாக ஏற்படும் மாற்றம் மட்டுமே நீடிக்கக்கூடியது. அதிகாரத்தின் துணை கொண்டு ஏற்படுத்தப்படும் மாற்றம் கானல் நீர் போன்று மறைந்துவிடும். தாலிபான்களின் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அதன்மூலம் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். தங்களின் கடும்போக்குவாதத்தை அவர்கள் உணர்ந்திருந்தால், அது எப்படி தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பெண்ணுரிமைக்கும் எதிராக இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தால் நியாயமான, அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் ஆட்சியை அவர்களால் வழங்கியிருக்க முடியும்.

துரதிருஷ்டவசமாக தங்களின் கடும்போக்குவாதத்தை அவர்கள் புரிந்துகொள்ளவும் இல்லை. அதனால் ஏற்படும் மோசமான விளைவு இஸ்லாத்திற்கு ஓர் அவப்பெயரை ஏற்படுத்தித் தரும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இப்போது சர்வதேச உலகுடன் இணைந்து அமைதியாக வாழ விரும்புவதாகவும், தங்களின் கடந்த கால தவறுகளைத் திருத்திக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்கள். இனி, பொறுத்திருந்து பார்க்க வேண்டும், அவர்கள் தங்களின் கடும்போக்குத்தனத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்களா? இல்லை, அதே மனநிலையோடுதான் நீடிக்கிறார்களா? என்பதை. அவர்களின் சமீபத்திய நகர்வுகள் அவர்கள் பக்குவமடைந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றன.

தாலிபான்களை மையப்படுத்தி இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாலிபான்களின் முந்தைய செயல்பாடுகள் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலாளர்களுக்குப் பெரும் தீனி. தாலிபான்கள் தங்களின் முந்தைய கடும்போக்குத்தனத்துடன் இப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் உளமாற விரும்புகிறார்கள்போலும். அப்போதுதான் இஸ்லாமிய ஷரீஆ மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டேயிருக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்போலும். இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் இந்த அளவு மூர்க்கமான தாக்குதல்கள் அவர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்பையே காட்டுகின்றன.

அவர்களின் போராட்ட வரலாறு சிலிர்ப்பூட்டக்கூடியது. இஸ்லாம் ஒரு சமூகத்திற்கு வழங்கும் ஆச்சரியமான மனவலிமையை நினைவூட்டக்கூடியது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பல வருடங்கள் அவர்கள் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரும் வல்லரசு என்று பெயர் பெற்ற நாடு அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இடத்தை காலி செய்துவிட்டு ஓடியிருக்கிறது. ஆப்கான் மக்களின் மீது அதற்கு எந்த அக்கறையும் இருந்ததில்லை. அவர்களை நம்பியிருந்த மக்களையும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டு அது தன் இடத்தை காலி செய்திருக்கிறது. அந்த மக்களுக்கு அது செய்தது அப்பட்டமான துரோகம். அங்கு அந்த வல்லரசு நிகழ்த்திய படுகொலைகளைக் குறித்துப் பேச யாருக்கும் அவகாசமும் இல்லை, ஆர்வமும் இல்லை. அது தன்னிடம் இருக்கும் அதிகாரத்தால் ஊடக பலத்தால் தன்னை மீட்க வந்த காப்பானாக சித்திரித்துக் கொண்டிருக்கிறது.

இங்கு தாலிபான்களைக் குறித்துப் பேசுவதற்கு எங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் அவர்களை மையப்படுத்தி முன்வைக்கப்படும் இஸ்லாத்தின் மீதான வெறுப்புதான் இங்கு எங்களை பேசும் நிர்ப்பந்த நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர்களைக் குறித்து வரக்கூடிய செய்திகளின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து யாரும் பேசுவதில்லை. அவர்களுக்கு எதிரான செய்திகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டு வேகமாகப் பரப்பப்படுகின்றன. ஓரிருவரின் தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது ஓர் அமைப்பின் அனுபவங்களைக் கொண்டு தாலிபான்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் அளவிட்டுவிட முடியுமா? அந்தச் செய்திகளும் தாலிபான்களை முழுமூச்சாக எதிர்க்கும் தரப்பிடமிருந்துதான் வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் பெரும்பாலோர் அவர்களை விரும்புகிறார்கள்தானே?

Related posts

Leave a Comment