“ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் பாடம் பெற வேண்டும்” – JIH தேசியத் தலைவர் கருத்து
ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக அங்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் அமைதியற்ற சூழலுக்கும், ரத்தக் களரிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், அந்த நாட்டில் அமைதியும் இணக்கமும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கும் ஆஃப்கன் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கும் இந்த மாற்றங்கள் துணை நிற்கும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற பத்திரிகை அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இருபதாண்டுகளுக்கு முன்பு ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்ட படையெடுப்புகளைத் தொடர்ந்து அங்கு இருந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அந்த நாட்டின் அப்பாவி மக்களின் உயிர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் வேட்டையாடப்பட்டன. எந்தப் பாவமும் செய்யாத, நிராயுதபாணியான மக்கள் மீது ஆக்கிரமிப்புப் படைகள் சொல்லொண்ணா கொடுமைகளைத் தொடர்ந்து இழைத்து வந்தன. குண்டுகளை வீசியும் குண்டுவெடிப்புகளை நடத்தியும் ஆக்கிரமிப்புப் படைகள் பேயாட்டம் போட்டன. மேலும், அப்பாவி மக்கள் மீது தங்களின் விருப்பங்களை வலுக்கட்டாயமாகத் திணிப்பதிலும் ஆக்கிரமிப்புப் படைகள் இடைவிடாமல் நடவடிக்கைகளை எடுத்து வந்தன. இந்தக் கொடுமைகளும் நிகழ்வுகளும் சமீபத்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயங்களாய் வேதனையான, கண்டனத்துக்குரிய பக்கங்களாய் பதிந்திருக்கின்றன. ஆஃப்கன் மக்களின் நிலைகுலையாமை, தொடர் போராட்டம் ஆகியவற்றின் விளைவாக ஆக்கிரமிப்புப் படைகள் அந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றமாகும். ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இந்த நிகழ்விலிருந்து பாடம் பயில வேண்டும். வலிமையான நாடுகளின் தலையீட்டையும் கொடுமைகளையும் தடுத்து நிறுத்துவதற்காக வலுவான கட்டமைப்புக்கான ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும்.
எந்தவிதமான ரத்தக்களரிக்கும் இடம் தராமல் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படிருப்பது குறித்து ஜமாஅத் தலைவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வெளிப்படுத்தி இருக்கின்றார். இன்று ஒட்டுமொத்த உலகத்தாரின் பார்வைகளும் தாலிபான்கள் மீது குவிந்திருக்கின்றன. தாலிபான்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது. மிகமிக நுட்பமாக ஆய்வு செய்யப்படுகின்றது. இத்தகைய நிலையில், இஸ்லாத்தின் அருள்வளம் நிறைந்த வாழ்க்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்கான முன்மாதிரியை உலகத்தாருக்குக் காண்பிப்பதற்கான ஒளிமயமான வாய்ப்பு தாலிபான்களுக்குக் கிடைத்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில், “இஸ்லாம் அமைதியின் பக்கமும் இணக்கத்தின் பக்கமும்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது; ஒவ்வொரு மனிதருக்கும் தாம் விரும்புகின்ற மார்க்கத்தை ஏற்று நடப்பதற்கான சுதந்திரத்தையும் இஸ்லாம் வழங்குகின்றது; சிறுபான்மையினர் உட்பட குடிமக்கள் அனைவருடைய உடல், உயிர், உடைமை, மானம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதை இஸ்லாம் மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மாண்பாகக் கொண்டாடுகின்றது; பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற விஷயத்திலும் இஸ்லாம் அதிதீவிர கவனமும் அக்கறையும் கொண்டிருக்கின்றது” என்கிற விவரங்களை நாம் தாலிபான்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நினைவூட்டவும் விரும்புகின்றோம்.
ஆஃப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் இந்தச் சிறப்பான போதனைகளைப் பேணி நடப்பதிலும், அவற்றைக் கட்டிக்காப்பதிலும் முழுமையான கவனத்துடன் நடந்துகொள்வார்கள்; நாட்டு மக்கள் அனைவரையும் அச்சம், பீதி, பயங்கரம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து, வளர்ச்சி, முன்னேற்றம், செழிப்பான வாழ்க்கை ஆகியவற்றுக்கான சமமான உரிமையையும் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் குடிமக்கள் அனைவருக்கும் உறுதி செய்கின்ற முன்மாதிரியான மக்கள் நல அரசாங்கத்தை புதிய ஆட்சியாளர்கள் நிறுவி நடத்துவார்கள் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், இஸ்லாம் அறிவுறுத்துகின்ற மக்களின் ஆதரவையும் கலந்தாலோசித்தலையும் உயிர்நாடியாகக் கொண்டு இயங்குகின்ற நடைமுறைக்கேற்ப அங்கு வெகுவிரைவில் மக்களின் ஆதரவையும் ஓட்டுகளையும் அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம். நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவத்தை அளிக்கக்கூடியதாய், ஆஃப்கன் மக்களுக்கு இடையில் நிலையான, வலுவான ஒற்றுமையையும் இணக்கத்தையும் பிணைப்பையும் உறுதிப்படுத்தக் கூடியதாய் அந்த அரசாங்கம் மலரும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
தாலிபான்கள் எல்லோருக்கும் பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாகவும் சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு அமைதியும் பாதுகாப்பும் உறுதி செய்திருப்பதாகவும், உலகின் எல்லா நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒத்துழைப்புக்கான உறுதியை அளித்திருப்பதாகவும் வருகின்ற தகவல்கள் வரவேற்கத்தக்கதாய், மகிழ்வூட்டுவதாய் இருக்கின்றன.
இந்திய – ஆஃப்கன் உறவுகளைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் தொடர்பும் பல நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டவையாகும். கடந்த சில ஆண்டுகளாய் ஆஃப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கான, கட்டுமானப் பணிகளுக்கான ஏகப்பட்ட திட்டங்களை நம் நாடு அங்கே மேற்கொண்டு வந்துள்ளது. முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இந்நிலையில், இந்திய – ஆஃப்கன் உறவுகள் மேன்மேலும் வலுப்பெறும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இரு தரப்பிலும் இது தொடர்பாக பேரார்வமும் ஈடுபாடும் வெளிப்படுத்தப்படும் என்றும் நம்புகின்றோம். ஆஃப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடனான ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக்கொள்வதிலும், ஆஃப்கானிஸ்தானில் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகளிலும், ஒட்டுமொத்த தெற்காசியாவில் அமைதியையும் இணக்கத்தையும் ஏற்படுத்துவதிலும் தம்முடைய பொறுப்பை நிறைவேற்ற முன்வருமாறு இந்திய அரசாங்கத்துக்கு நினைவூட்டுகின்றோம்.
இவ்வாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி தம்முடைய அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி: Jamaat-e-Islami Hind Tamil Nadu (முகநூல் பக்கம்)