குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான் ஆட்சியை சர்வதேசச் சமூகம் ஏன் ஏற்க வேண்டும்?

Loading

[பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் 5Pillars இதழாசிரியருமான ரோஷன் முஹம்மது சாலிஹ், Independent எனும் இங்கிலாந்தின் பிரபல இணைய இதழுக்கு வழங்கிய கருத்தை இங்கு தமிழாக்கம் செய்து தந்துள்ளோம். இவர் ஊடகத்துறையில் 22 ஆண்டுகாலம் அனுபவம் மிக்கவர். மத்திய கிழக்கு உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செய்தி சேகரித்து அல்ஜஸீறா, பிரஸ் டீவி போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.]

பல்லாண்டுகால வெளிநாட்டுத் தலையீடுகளால் ஆஃப்கானிஸ்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளது. முதலில் ரஷ்யாவாலும், பிறகு அமெரிக்கா, பிரிட்டிஷ், நேட்டோ ஆகியவற்றாலும் அது பாதிப்புக்குள்ளானது. இந்தக் காலனியத் தலையீடுகளெல்லாம் அந்நாட்டையே நாசமாக்கி விட்டிருக்கின்றன; உயிரிழப்புகளையும் அழிவையும் தவிர அவை ஈட்டியது வேறொன்றுமில்லை. காலனியச் சக்திகள் தோற்க வேண்டியவைதாம்; ஏனெனில், தம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சட்டபூர்வ உரிமை ஆஃப்கானியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

நான் அனைத்து முஸ்லிம்களின் சார்பாகவும் பேசவில்லை என்றாலும், எங்களில் பலர் இப்போது அமைதியும் பாதுகாப்பும் ஆஃப்கானிஸ்தானில் திரும்பும் என்று நம்பவும், அதற்காகப் பிரார்த்திக்கவும் செய்வதை நான் அறிவேன். அது சாத்தியமாவதற்குச் சிறந்த வழி, தாலிபான்கள் கூடியவிரைவில் வெற்றி பெற்று, ஆஃப்கானிஸ்தானின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான். அங்கே தாலிபான்கள் முன்னேற்றமடைவது குறித்த மேற்கத்திய நாடுகளின் எதிர்மறையான எதிர்வினைகளெல்லாம் அவற்றின் மிகப் பெரிய, வரலாற்றுச் சிறப்புமிக்க படுதோல்விக்குப் பிறகே ஆக்ரோஷமாய் வெளிப்படுகின்றன. உண்மையில், மேற்கு நாடுகளில் வரி செலுத்துபவர்கள் தங்கள் அரசுகள் வெல்ல முடியாத போரில் ஏராளமான பணத்தை வீணடித்ததற்காக அவற்றின் மீதுதான் அறச்சீற்றம் கொள்ளவேண்டும். ஏனெனில் நாட்டின் வளங்களை வற்றச் செய்ததைத் தவிர வேறெதையும் போர்கள் பதிலீடாகப் பெற்றுத்தரவில்லை.

இறுதியாக நான் சொல்லிக்கொள்வது, இஸ்லாமியச் சட்டவியலின் சில அம்சங்கள் குறித்த தாலிபான்களின் பொருள்கோடல்களை முஸ்லிம்கள் பலர் மறுதலிக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் வேலைக்குச் செல்வதற்குக் கட்டுப்பாடு விதிப்பது போன்ற விஷயங்களில். 90களிலிருந்த தாலிபான் ஆட்சியின் கடுமையான அம்சங்கள் மீண்டும் நடைமுறைக்கு வராது என்று நம்புகிறோம். தங்கள் மதம், கலாச்சாரத்துக்கு ஏற்ப, எந்தச் சட்டதிட்டங்களுக்குக் கீழ் வாழ வேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை ஆஃப்கானியர்களையே சாரும். மேற்கத்தியத் தாராளவாதத்தை ஆஃப்கானியர்கள் மீது திணிக்க முடியாது.

ஆஃப்கானிஸ்தான் மேற்குலகைத் தாக்குவதற்கான ஒரு தளமாகப் பயன்படாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தாலிபான்கள் தங்கள் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுள்ளார்கள் என்பதும், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவார்கள் என்பதும் நல்ல அறிகுறிகளாகத் தெரிகின்றன. சர்வதேசச் சமூகம் புதிய தாலிபான் அரசை உடனடியாக அங்கீகரித்து, அது சீரான பாதையில் வளர்ந்து செல்ல உதவ வேண்டும்.

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

தாலிபான் டைம்லைன்

Related posts

Leave a Comment