கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமநிலையற்றுப் பாயும் ‘குருதி’: சில விமர்சனக் குறிப்புகள்

Loading

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இணக்கம் குலைந்து சந்தேகமும் அவநம்பிக்கையும் நிலவும் சூழலை, பாலம் உடைந்து மரணங்கள் நிகழும் குறியீட்டுக்காட்சியாகத் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறது, அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘குருதி’ மலையாளப்படம்.

இந்துத்துவ வன்முறை, இஸ்லாமிய வன்முறை இரண்டும் கண்டிக்கத்தக்கவை என்பதிலும் இந்த வன்முறைகளால் இருதரப்பிலும் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் இந்த வன்முறைகளைப் பொத்தாம்பொதுவான மனிதநேயம், மத நல்லிணக்கம் ஆகிய மதிப்பீடுகளால் மட்டும் அணுகிவிட முடியாது. ‘குருதி’ படத்தின் முக்கியமான சிக்கல் அப்படிப்பட்ட அணுகுமுறைதான்.

அடிப்படையில் இந்துத்துவம் ஓர் அரசியல் தத்துவம். மதத்தைவிடவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அதன்மூலம் ‘உயர்சாதியினர்’ நலன்களைக் காப்பாற்றுவதும்தான் அதன் நோக்கம். ஒரு சிறுகுழுவால் கிட்டத்தட்ட நூற்றாண்டுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட இந்துத்துவ அரசியல் செயற்பாடுகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள், பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள், காந்தியவாதிகள், தேசிய இன உரிமைப் போராளிகள் என இந்துத்துவத்துக்குப் பல எதிரிகள் உண்டு என்றாலும் அவர்களால் உடனடி எதிரிகளாகக் கட்டமைக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்களே. ஒருபுறம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களைச் சாதியத்திலிருந்து மீளமுடியாதபடி அழுத்தினாலும், இன்னொருபுறம் மதக்கலவரங்களுக்கு அவர்களையே திரட்டும் சாதுர்யம் இந்துத்துவத்திற்கு உண்டு.

இதற்கு எதிர்வினையாகத் தீவிரமடைந்தது இஸ்லாமிய ஆயுதக்குழுக்களின் வன்முறை. இந்துத்துவ வன்முறை தீவிரமாக இருக்கும் காலகட்டத்திலும் நிலத்திலும் மட்டும்தான் இஸ்லாமிய வன்முறையும் தீவிரமாக இருப்பதைக் காணலாம். 1990-2000 காலகட்டத்தில் நிலவிவந்த சூழல் தமிழகத்தில் இப்போது மாறியிருப்பதைக் கவனிக்கலாம். வன்முறை – எதிர்வன்முறை இரண்டின் விளைவுகள் பலசமயங்களில் ஒன்றுதான் என்றாலும் இரண்டையும் ஒரே தட்டில் வைத்துவிட முடியாது. இந்தியச் சூழலில் மதவாத வன்முறையின் வேர்கள் பற்றிய புரிதலுணர்வு இல்லாவிட்டால் அது பொத்தாம்பொதுவான மனிதநேய அறைகூவலில்தான் போய் முடியும் என்பதற்கு ‘குருதி’யும் ஓர் உதாரணம்.

இருதரப்பு வன்முறையாளர்கள் குறித்த சித்திரிப்புகளிலேயே சமநிலை தவறத்தொடங்குகிறது ‘குருதி’. இந்துத்துவ வன்முறை இளைஞன் முஸ்லிம் வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுகிறான். “இதை மட்டும் எப்படி சாப்பிடுகிறாய்?” என்ற ரசூலின் கேள்விக்கு, “வடக்கு வேற, தெற்கு வேற” என்கிறான் அந்த இந்துத்துவ இளைஞன். ஆனால் இஸ்லாமிய வன்முறையாளனான லாயிக், இந்துப்பெண் பரிமாறும் உணவை ‘காஃபிர் பரிமாறிய உணவு’ என்று எடுத்த எடுப்பில் விசிறியடிக்கிறான். ‘இனவெறியில் ஊறிப்போன பூனைகண்காரியை இவளும் நினைவுபடுத்துகிறாள்’ என்று சுமதியை முன்தீர்மானத்துடன் நிராகரிக்கிறான். (இறுதியில் லாயிக்கின் அனுமானம் சரிதான் என்பது வேறுவிஷயம்!)

இந்துத்துவ இளைஞனின் வன்முறைகள் வெறுமனே வார்த்தைகளில் மட்டுமே விவரிக்கப்படுகின்றன. ஆனால் லாயிக், கரீம் மற்றும் இன்னொரு முஸ்லிம் இளைஞன் ஆகியவர்கள் கொடூரத்தின் எந்த எல்லைக்கும் செல்பவர்களாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இந்துத்துவ இளைஞன் கிராமத்து ஏழைப் பூசாரியின் பேரன். லாயிக்கோ முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தில் சேர்ந்து, அது தடைசெய்யப்பட்டவுடன் வெளிநாடு செல்லும் அளவுக்கு வசதியானவன். எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை, இந்துத்துவ இளைஞன் எந்த அமைப்பைச் சேர்ந்தவனாகவும் காட்டப்படுவதில்லை. ‘இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக’ உணர்ந்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தவன். ஆனால் லாயிக்கோ இஸ்லாமிய வன்முறை அமைப்பில் செயல்படுபவன். வெளிநாட்டில் இருந்ததன்மூலம் அவனுக்கு வெளிநாட்டு ஆயுதக்குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கான மௌனமும் பிரதியில் உண்டு. காவல்துறை முதலான நிர்வாக அமைப்புகள், மத நிறுவனங்கள், கார்ப்பரேட் ஆதரவு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்ட இந்துத்துவத்தை இப்படி எந்தப் பின்புலமும் அற்ற வெற்றுவன்முறையாகக் காட்டுவது நியாயமே அல்ல. லாயிக், கரீம், ரசூல் என்று இஸ்லாமிய வன்முறையாளர்கள் அவர்கள் மதப்பெயர்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால் இந்துத்துவ வன்முறை இளைஞனின் பெயர்கூட நம் நினைவில் பதிவதில்லை.

ஆனால் சுமா என்னும் சுமதியின் பாத்திரப்படைப்பு நுட்பமானது. லாயிக், கரீம், ரசூல், இப்ராஹிம், அவனது தந்தை ஆகியோர் என்ன மனநிலையில் உள்ளனர் என்கிற சித்திரிப்பு முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. ஆனால் சுமதி இந்துத்துவ மனநிலையில் இருப்பவள் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாத, ஆபத்தானவள். தன் மதத்துக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிபவள். மறுபுறத்தில் இவை எதையும் அறியாமல் அவளிடமே துப்பாக்கியை இப்ராஹிம் கொடுக்கிறான். மதவாதம் எப்படி சாதாரண மக்களின் குருதியில் நஞ்சு பாய்ச்சியிருக்கிறது என்பதன் அடையாளம் சுமா.

சிதைந்த பாலத்தில் தொடங்கும் திரைப்படம், இறுதியில் ஒரு பாலத்திலேயே முடிவடைகிறது. இந்து – இஸ்லாமியர் இருதரப்பிலும் ஆயுதப்பாதையை நாடும் இரு இளைஞர்கள் அந்தப் பாலத்தில் சந்திப்பதுடன் படம் முடிவடைகிறது; உண்மையில் முடிவடைவதுமில்லை. ஆனால் இதிலும் ஒரு சிக்கல். இந்துத்துவ இளைஞன், படத்தின் இறுதியில் மதவாத மனநிலையில்தான் இருக்கிறானா, அதிலிருந்து மீண்டுவிட்டானா என்பது உணர்த்தப்படுவதில்லை. ஆனால் ரசூல் வன்முறையாளனாக மாறிவிட்டான் என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது. இந்துத்துவ வன்முறை கைவிட்டாலும் இஸ்லாமிய வன்முறை தொடரும் என்பதாகப் பார்வையாளர்கள் உணரும் சாத்தியங்கள் உண்டு.

‘குருதி’ படத்தின் முக்கியமான பாத்திரம் இப்ராஹிமின் தந்தை மூசா காதர். ‘எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன’ என்ற பொதுபுத்திக் கூற்றுக்கு மாறாக, ”மனிதர்களின் குருதியிலேயே வெறுப்பு ஊறியிருக்கிறது. மனிதர்களின் முதல் பாவம் விலக்கப்பட்ட கனி அல்ல. வெறுப்பால் விளைந்த சகோதரப்படுகொலை” என்கிறார். ரசூலும் இந்துத்துவ இளைஞனும் நிற்பது அப்படிப்பட்டதொரு வெறுப்பின் பாலத்தில்தான்.

அதேபோல் மூசாபாய் இன்னொரு மகத்தான உண்மையையும் சொல்கிறார். ” ‘நாம்’, ‘பிறர்’ என்று கட்டப்படுவதன் மூலம்தான் வெறுப்பு வளர்கப்படுகிறது”. மூசா காதர் சொல்வது மதவாதத்துக்கு மட்டுமல்ல, தேசியத்துக்கும் பொருந்தும்.

Related posts

Leave a Comment