சிறுகதை முக்கியப் பதிவுகள் 

உம்மாவின் துப்பட்டி (சிறுகதை)

“டன்லப் ஸ்டரீட்டுக்குள் முழுக்க அலசியாச்சி… துப்பட்டி பூ டிசைன்ல, நீ கேக்குற மாதிரி பெரிய பூ டிசைன் இல்ல. என்ன பண்ணலாம் ?” எனக் கேட்டான் பாரதி. “தேடுவோம் கிடைக்காமலா போய்டும். வா பிஸ்மி கடையில கிடைக்குதான்னு பார்ப்போம்” என்றான் இஸ்மாயில். சிங்கப்பூர் ரெஸ்டாரண்டில் வேலைக்கு வந்த மூன்று மாதங்களில் டன்லப் ஸ்டரீட்டுக்குள் நுழைவது இதுவே இஸ்மாயிலுக்கு முதல் முறை. தமிழ்நாட்டு கோரைப்பாய்கள், சென்னிமலைப் போர்வைகள், சிவப்பு கருப்பு கோடுகளாக தலைதுடைக்கும் தேங்காய்ப்பூ டவல்கள், கடல்பாசி, இந்தியச் சப்பாத்துகள், கயிறு தாம்புகள், அட்டைப் பொட்டி ரேப்பர்கள் என முழுமையாகக் கடையே தெரியாத அளவிற்கு மூடிக்கிடக்கும் கடைகளில் ஏறி இறங்கி இருவருக்கும் உடல் களைத்துப்போனது.

டன்லப் ஸ்ட்ரீட்டின் தலைமாட்டில் நுழையும்போது இளையராஜா பாடலொன்றின் சரணம், பின்பு அடுத்தடுத்து நுழைந்த கடையொன்றில் இமான் இசைப்பாடல் என ஞாயிற்றுக் கிழமை அவரவர் அவசரத்தில் அனிருத்தும் ரஹ்மானும் என தன்பங்கிற்கு இந்தியத் தொழிலாளர்களின் சந்தோசத்தின் டெம்போவை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தார்கள் .

டன்லப் ஸ்ட்ரீட் தோற்றுவாயில் நின்றுகொண்டு அந்த வீதி முழுவதையும் பார்த்தான் இஸ்மாயில். குடும்பத்தைப் பிரிந்து வீதியில் உலாவும் இந்தியத் தொழிலாளர்களின் துயரம், பிரிவு, வலி என ஆற்றாமையை இந்த வீதி பங்குபோட்டுகொண்டிருந்தது. அந்தக் கணத்தில் நீண்ட சீன டிராகன் வீதியின் தலைமாட்டிலிருந்து சீறிப் பாய்ந்து நுழைந்து எல்லோரையும் கடித்துத் துப்புகிறது. அதன் பல்லிடுக்கில் ஏராளமானோர்களின் இளமை செரித்துக் கிடக்க, ரொக்கத்தை அனுப்பிவிட்டு துக்கத்தைப் புதைத்துக்கொண்டு திரியும் நடைப்பிணங்களால் நிறைந்து கிடக்கிறது டன்லப் ஸ்ட்ரீட் எனும் அங்காடித்தெரு. அதன் நீட்சியில் ஞாயிற்று கிழமையின் தற்காலிகச் சந்தோசத்தை தேடிக்கொண்டிருந்தனர். பீர் டின் போத்தல்களை சிலர் மறைவாகவும், சிலர் பகிரங்கமாகவும் ஊத்திக்கொள்கிறார்கள். சிலர் புகையிலையை உள்ளங்கையில் கசக்கித் தனது பல்லிற்கும் நாக்கிற்கும் இடையில் செருகிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் புட்டாமாவு பூச்சுபூசி, வளையல்களை உலுக்கிச் சிரித்துப் பேசும் விலைமாதுக்களிடம் பல்லைக் காட்டிப் பேரம் பேசி வாழ்க்கையின் துயரத்தை மதப்புக்குள்ளாக்குவதற்குரிய வழிகளை அங்கே தேடிக்கொண்டிருந்தார்கள். வீதியில் எல்லாக் காட்சிகளும் அட்டைப்பூச்சிகளாய் நெளியும்போது, இஸ்மாயிலுக்கு இங்கே வந்து இறங்கிய காட்சிகள் கண்முன்னே வந்துபோயின ,

திருச்சி ஏர்போர்ட்டில் தம்பி லக்கேஜ் கொண்டுபோக ட்ராலி எடுக்கப் போயிருந்தான். உம்மா மெதுவாகக் காதில் கூறினாள்:

”இஸ்மாயிலு… இந்த பண்டாரி வேலை சூன்யம். நம்மள சும்மாவிடாது. உங்க அத்தா பினாங்குல பண்டாரியா இருந்து உங்கள வளர்த்தாரு. இந்த அடுப்புல வேகுறது என்னோடவே போகட்டும். இவனுங்களாவது படிச்சு வேற உத்தியோகம் போகணும்னு பிராயசப்பட்டாரு” எனத் தனது வெறுமையைத் துப்பட்டியின் ஓரத்தில் ஒத்தி நகல் எடுத்துத்துக்கொண்டே விசும்பிய காட்சிகள் அவன் மனதைப் பிசைந்தன.

ஏஜென்டிற்குக் கொடுக்க வேண்டிய பணம் பாக்கியிருந்தபோது, ஒழுகும் கூரைக்கு அருகே நின்ற ஒன்பது ஆடுகளை வந்த விலைக்கு விற்றுக் கட்டிய பணம் கல்லாய் முதுகில் எந்நேரமும் கனத்துக் கிடக்கும் உணர்வில் கிடக்கிறான் இஸ்மாயில். தன் அத்தா பினாங்கிற்குப் பிழைப்பிற்காகச் சென்றதையும், மலக்கா புலாவ் பசார் மக்காம் அருகே இருந்த சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்து, பின்னாளில் அங்கேயே இறந்துபோனதையும், வீட்டுவேலை செய்து வயிற்றைக் கழுவிய உம்மாவிற்கு உறுதுணையாய் நிற்க இஸ்மாயிலுக்குப் பள்ளிகூடக் கல்வி உதவிக்கு வராத கசப்பான கடந்த காலத்தையும் ஒரு தஸ்பீஹ் மணியைப்போல் அவனது மனம் உருட்டிக்கொண்டிருந்தது.

அவ்வப்போது கனவில் தோன்றும் இறந்துப்போன அத்தா, அவனது ஜோப் பாக்கெட்டில் வெங்காயம், பச்சை மிளாகாய் எனக் கனவில் மடித்துவைத்துப்போனதைப் பலிக்கும் கனவாக உருமாற்றி உள்ளுக்குள் தன் நன்னா ‘தேங்காய்ச் சோறு பஷீர்’ போல பேர் எடுக்க வேண்டும் என்று மனதிற்குள் கூறிய காலமும் நினைவுக்கு வர, கரிசல்பட்டி-துவரங்குறிச்சி சுற்று வட்டாரத்தின் திருமண, கந்தூரி விழாக்களில் கை பண்டாரி ஆகி, நளபாகப் பாரம்பரியத்தைத் தொடர்ந்த இஸ்மாயில், இப்போது சிங்கப்பூர் உணவகத்தில் பண்டாரி வேலை பார்ப்பதற்கு விமான நிலையத்தில் காத்திருந்தான்.

கண்களைத் துடைத்துக்கொண்டே இருந்த உம்மாவின் துப்பட்டியை உற்றுப் பார்த்தான். உஜாலா நீலத்தில் முழுதும் குளித்திருந்தது. நீலத்தின் பின்னணியில் துப்பட்டி அதன் பழுப்புப் பக்கங்களோடு வெளிறிப் போயிருந்தது. துப்பட்டிப் பூக்கள் பாதி உதிர்ந்தும் உதிராமலும் ஒட்டிக் கிடந்தன .

ஒருமுறை வெளிநாட்டிலிருந்து ஊர்திரும்பியபோது ஆசையாசையாய் மலேசியா மஸ்ஜித் இந்தியாவில் இருந்து அந்தத் துப்பட்டியை உம்மாவிற்கு அத்தா வாங்கி வந்திருந்தார். அவரது பயணப்பெட்டி இரண்டு மூன்று சென்ட் பாட்டில்கள் மற்றும் கோடாலி தைலங்களோடு இந்தத் துப்பட்டி மடிந்துகிடந்ததாகத் தம்பி கள்ளத்தனமாய் பொட்டியை உடைத்து மிட்டாய் திருடியபோது பார்த்த காட்சி அவன் நினைவுக்கு வந்தது,

அம்மா அதை அணிந்ததும் முகம் மலர்ந்த விதம், துப்பட்டியின் வெண்மையைவிடப் பிரகாசமாக இருந்தது. புதிதாக வந்த வெளிநாட்டுத் துப்பட்டி அதுவரை உம்மா உடுத்தியிருந்த ரேசன்கடை இலவச வெள்ளைத்துணிக்கு விடைகொடுத்திருந்தது. உறவுக்காரர்களின் திருமணத்திற்கு இனி சென்றால் பக்கத்துவீட்டு சைனம்புவிடம் இரவல் துப்பட்டி வாங்கி ஏழ்மையை மறைக்கத் தேவையில்லை என்ற உற்சாகம் உம்மாவிற்குப் புதுத்தெம்பைக் கொடுத்தது. அதன் ஓரப்பூக்களில் அத்தாவின் வாசம் இருந்திருக்க வேண்டும். அவரது ஸ்பரிசத்தை அவள் அணியும்போது அது கொடுத்திருக்க வேண்டும். அதன் பூக்களைத் தேடி வந்தடையும் வண்ணத்துப்பூச்சிகள் எங்கோ ஒரு தூரத்தில் புலாவ் பசார் தீவில் சோற்றுப் பானையைக் கிண்டிக்கொண்டிருக்கும் அத்தா அனுப்பியதாக உம்மா உணர்ந்திருப்பாள். அதுதானே அத்தா இறந்து ஏழுவருடங்களுக்குப் பின்னும் அந்தத் துப்பட்டியை உம்மா உடுத்தி வருவதன் காரணமாக இருக்கும் என்று இஸ்மாயிலின் மனம் சொன்னது. பால்யத்தை மீட்டு எடுக்கும் தன் அத்தாவின் வாசனை இஸ்மாயிலுக்கு வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சூட்கேஸ் உட்பட பொதிகளின் மணம், அந்த வாசனையில் அத்தா புகைக்கும் கூடாங்கரம் புகை மணம், கோடாலித் தைல வாசனை, உம்மாவிற்குத் தெரியாமல் அவரது அக்கா கலிமா குப்பிக்கு தனியாகக் கொண்டு வந்த லக்ஸ் சோப்பு வாசனை, புதிய வாக்கர் செருப்பின் மணம், ஜவ்வுமிட்டாய், ஜெல்லிமிட்டாய் போத்தல்களின் மணம் எனக் கலவையாகக் கலந்திருக்கும். பிந்தைய இரவுகள் அவர் மார்புமீது அணைத்து உறங்கும் வேளையில் தான் உணர்ந்த எல்லாவற்றையும் மீறிய ஒரு வாசனை அத்தாவிடம் அவனுக்குத் தெரிந்தது. அது அவரது ஆன்மாவின் வாசனை. அத்தா என்றாலே வாசனைதானே?! தம்பி ட்ராலியை எடுத்து லக்கேஜ் எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு இஸ்மாயில் அருகில் வந்து கைகளைப் பிடித்தபோது தன் உணர்வுக்கு மீண்டு வந்தான் இஸ்மாயில். உம்மாவிடம் ஏதும் வழியனுப்புகையில் பேசவில்லை. தம்பியை இறுக அணைத்து விடைக்கொடுத்தபோது தன்னால் படிக்கமுடியாமல் போன அத்தாவின் கனவையும் தம்பியின் தோள்களில் பாரமாக ஏற்றிவிட்டு விமானம் ஏறினான்.

”பெரிய பூ இருக்குறமாதிரி வெள்ளத்துப்பட்டியா எடுத்துப்போடுங்க” என முஸ்தபா சேல்ஸ்மேனிடம் கேட்டான் இஸ்மாயில். அவர் துணிக்கட்டை உடைத்துச் சரித்துப்போட்ட துப்பட்டிகளில் ஒன்று வித்தியாசமானதாகவும் உம்மாவின் பழைய துப்பட்டியை ஒத்ததாகவும் இருந்தது. வெள்ளை செம்பருத்திப் பூக்கள் வாய்பிளந்து துப்பட்டி முழுதும் வியாபித்திருந்தன. அதனை பேக் செய்து ’கரிசல்பட்டி ஆட்டுப்பட்டி பாத்திமா வசம் கொடுக்கவும்’ எனக் கொட்டை எழுத்தில் எழுதி ஊர்போகும் நண்பரிடம் அனுப்பிவைத்தான்.

”உம்மா… துப்பட்டி நல்லாருக்காம்மா”‘ என நீண்ட நாள்கள் கழித்து உம்மாவிடம் பேசுகையில் ஆர்வத்துடன் கேட்டான் இஸ்மாயில். உம்மா பக்கத்துவீட்டு ராபியத்து அக்காவிற்கு வரன் கிடைத்த சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டாள். கரிசல்பட்டி பஜாரில் டீக்கடை போட்டிருக்கும் ராபியத்து தந்தைக்கு ஐந்தும் பெண்பிள்ளைகள். ஆண்பிள்ளை கிடைக்காத வருத்தத்தில் வெறுத்துப்போய், எல்லாமே பொட்டப் புள்ளங்க, இதுவே போதுமெனத் தனது ஐந்தாவது மகளுக்கு ‘போதும் பெண்’ என்றே பெயரிட்டவர் என்று ஊரில் பேச்சுவழக்கு உண்டு.

”எல்லாம் கைகூடி வந்திருக்கு இஸ்மாயிலு… செலவு பெருசா இல்ல. கல்யாணம் அன்னைக்கு வெறும் தேத்தண்ணி போட்டுக் கொடுத்தாப் போதும். மாப்பிள திருப்பூர் பனியன் கம்பனில வேலை பாக்குறாராம்” என்றாள் உம்மா.

தொடர்ந்து, ”ரொம்ப சிரமப்படுதுக. ஜமாத் தலைவர்ட சீட்டு வாங்கி சுத்து வட்டாரத்துல பணக்கார வீடுகள்ல ஏறி இறங்கி கிடச்சத வச்சும், அக்கம்பக்கம் நம்ம வீடுகள்ல கிடச்சத வச்சும் இந்தக் கல்யாணம் நடத்தனும் இஸ்மாயிலு. நான்கூட பட்டில கிடக்குற இரண்டு ஆட்டையும் இழுத்துட்டு போகச் சொன்னேன். ஏதோ நம்மாள முடிஞ்சது.”

உம்மா கூறியதை இஸ்மாயில் ஆமோதித்தான்.

”அப்பொறம் இஸ்மாயிலு… ராபியத்த நம்ம வீட்டுல வளர்ந்த புள்ள. உனக்கே தெரியும். வீட்டுக்கு வந்தவ கொடில கிடந்த நீ அனுப்புன துப்பட்டிய ரொம்ப நேரம் பார்த்துட்டு இருந்தா. ஒண்ணும் சொல்லல. ரொம்ப ஏக்கமா இருந்தது. உன்னமாதிரி அவளுக்கு ஒரு தம்பி இருந்திருந்தா அவளுக்கும் ஏதோ மனசுல கிடக்குற ஆசையச் சொல்லியிருப்பா. அதனால…”

”அதனால… ?”

”நீ அனுப்புன செம்பருத்தித் துப்பட்டிய அவளுக்கே கொடுத்துடுறேன்.”

”உம்மா உனக்கு ஆசையா வாங்கினது அது!”

”இருக்கட்டும் இஸ்மாயிலு. நான் வாழ்ந்து முடிச்சவ. இனிமேதான் அவ வாழப்போறவ. ஒண்ணு கொடுத்தா படச்ச ரப்பு ஒம்பது தருவான். எனக்குனு எத்துனை துப்பட்டி வந்தாலும் உங்க அத்தா முதன்முதலா வாங்கித்தந்த துப்பட்டி மாதிரி செளகர்யமா வேறு ஏதும் இல்லை.”

”இந்த வீட்டில மூணே மூணுதான் இறந்துபோன உங்க அத்தா ஞாபகத்தை எனக்குக் கொடுக்குது. நீ, உன் தம்பி, அப்பொறம் இந்தத் துப்பட்டி” என்றாள் உம்மா.

இஸ்மாயில் போனை அணைத்தபோது, ராபியத்து வீட்டில் ஒளிரிக் கொண்டிருந்த செம்பருத்தித் துப்பட்டியை பீரோவிலிருந்து எடுத்து அதை அணைத்துக்கொண்டாள். தனது நீண்ட கனவின் நீட்சியான பாதுகாப்புணர்வு அவளைக் கவ்வியது. துப்பட்டியின் செம்பருத்திப் பூக்களைத் தேடி வண்ணத்துப்பூச்சிகள் அவள் வீட்டிற்கு வர ஆரம்பித்தன.

(நன்றி: தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ்)

Related posts

Leave a Comment