தாழிடப்பட்ட நாட்களின் அகவல்
வரள்நிலங்களை உழுகின்றது
நோய்மையின் தவாளிப்பு
தொடுப்பறுந்த செய்திகளில்
துண்டிக்கப்படுகின்றது
தொலைதேசப் பறவையின்
சஞ்சாரம்
மலையெனக் குவியும் எண்களில்
மயானம் தோய்ந்து
காரிருள் கவ்வியிருக்கும் காலமாக
பகலில் தாலாட்டைச் சப்திக்கின்றது
மழைமேகங்கள் மறுதலித்த வெய்யில்
அனல் கனலும் அடவிகளைத்
தீமூட்டிக்கொள்கின்றன
பாதங்களற்ற வீதிகள்
சக்கரங்களின் உருளும்
சுமை நீங்கி ஓய்கின்றன
முளைத்த பசி
விழுங்கிய பசி
வீங்கிய பசியென சாதம் பிசைந்து
உருண்டைகளாகப் பிடித்துவைக்கிறாள்
ஏழைத்தாய்
விடுபடுதலின்றிப் பிழைக்கும்
வீடடைத்த காற்றில் சிறை வாசம்
சுவர்களில் களிம்பேற்றுகின்றது
தொடுதிரையில் சிந்திக்கொள்ளும் யாவும்
உலகநியதியில் ஒன்றென
பற்றற்று ஓலமிடுகிறது அகமனம்
கூடுகள் நிறைக்கும் முகாரி இராகம்
மூச்சுத்திணறச் செய்கின்றன பட்சிகளை
நிறமற்று வழியும்
கண்ணீர் அப்பிய செய்திகள்
குருதியின் நிறமாகின்றன
உறையச் செய்யும் திடம்
நெருங்கிய ஒருவரின் இழப்பில்
தோய்ந்த வாசம் ஊரை
இருட்கிடங்கில் அமிழ்த்துகின்றது
உலகக்கூரை கொரோனாவின் வார்த்தையால்
ஒழுகிச்சொட்டி வீடு காடு மேடெல்லாம்
வழிந்து நிறைக்கின்றது
எதிரொலிக்கும் சப்தங்கள்
எனக்குள்ளிருந்து என்னையும்
என்னிலிருந்து இன்னும் என்னையும்
வரவழைத்து கதிரைகளில் அமரச்செய்து
நலம் விசாரித்துக் களைத்துவிட்டோம்
விடியலுக்காய் காத்திருந்த கண்கள்
விடிய விடிய ஜன்னலில் உலர்கின்றன
உரத்து ஒலிக்கப்படும் குரல் அயலில்
பல வீட்டுச்சுவர்களைத் தகர்க்கின்றது
வீதிகளுக்கு மனித சஞ்சலமற்ற அமைதி
கால்த்தடங்களை ஒற்றி நீங்கலாக
வெறுமையின் செய்தியை
இலைசிலிர்த்த மரங்களுக்கு
தூது செல்கிறது காற்று!