குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

காபூல் பயங்கரவாதத் தாக்குதல்: யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே?

Loading

கடந்த வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை 13 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே / ஐஎஸ்-கே (இஸ்லாமிய அரசு – குராசான் மாகாணம்) பொறுப்பேற்றுள்ளது. யார் இந்த ஐஎஸ்-கே?

2015ம் ஆண்டு ஜனவரியில் அங்கே உருவான இந்த அமைப்பு, மேற்குலக ஆக்கிரமிப்பை எதிர்க்கும் குழுக்களிலேயே மிகவும் தீவிரமான, வன்முறைத்தன்மை கொண்ட ஒன்றாய்க் கருதப்படுகிறது. பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பில் செயல்பட்ட ஹஃபிஸ் சயீத் கான் என்பவரைத் தலைவராகவும், ஆஃப்கான் தாலிபானின் முன்னாள் படைத்தளபதி அப்துல் ரவூஃப் அலீஸாவை இணைத் தலைவராகவும் 2015ல் நியமித்தது ஐஎஸ்-கே. அதே ஆண்டு பிப்ரவரியில் அலீஸா அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே பாணியில் 2016 ஜூலை மாதம் கான் கொல்லப்பட்டார்.

3000 பேரைக் கொண்ட குழுவான ஐஎஸ்-கே, ஆஃப்கானிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் தனக்கான உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஆஃப்கான் தாலிபானிலிருந்து விலகியோரை தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறது. சமீப காலங்களில் நடந்த பல கொடிய சம்பவங்களில் இந்த அமைப்பு தொடர்புபடுத்தப்படுகிறது. பெண்கள் பள்ளிக்கூடங்கள், ஷிஆ பள்ளிவாசல், மருத்துவமனைகள் போன்றவை இவர்களால் இலக்காக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

ஆஃப்கானிஸ்தானோடு தாலிபானின் செயல்பாடுகள் முடிந்துவிடுவதுபோல இவர்களின் செயல்பாடுகள் இருப்பதில்லை. சர்வதேச அளவில் இயங்கும் ஐஎஸ்-ன் ஒரு பகுதியாக இவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவுடன் போரிடாமல் கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துகொள்வதாக தாலிபான்களை இவர்கள் சாடுகிறார்கள். முன்னதாக, இந்த அமைப்பினர் அமெரிக்காவுடன் மட்டுமின்றி, ஆஃப்கான் பாதுகாப்புப் படைகளுடனும் தாலிபான்களுடன்கூட மோதி குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றனர்.

அமையவுள்ள தாலிபான் அரசுக்கு ஐஎஸ்-கே ஒரு தலைவலியாகவும் சவாலாகவும் இருக்கக்கூடும். அது இப்போது நிகழ்த்தியுள்ள பயங்கரவாதத் தாக்குதலானது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு இன்னும் காலம் எடுத்துக்கொள்ள இடமளிக்கிறது. ஒருவேளை, வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவான ஆகஸ்ட் 31க்குள் அவை வெளியேற மறுத்தால் அது தாலிபான்களுக்கும் அவற்றுக்கும் பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. அதிலும், அமெரிக்கா இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி தருகிறேன் என்று இறங்கினால் பிரச்னை இன்னும் உக்கிரமாகும்.

Related posts

Leave a Comment