கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை – நூல் அறிமுகம்
திருக்குர்ஆன் இறைவனின் வேதமாகும். அது இறைவேதம் என்பதற்கு அதுவே சான்றாகவும் இருக்கின்றது. தன்னைப் போன்ற ஒரு வேதத்தை யாராலும் உருவாக்கி விட முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறது. நீங்கள் இந்தக் கூற்றை பொய்யெனக் கூறினால் அப்படியொரு வேதத்தை உருவாக்கிக் காட்டுங்கள் என்று அறைகூவல் விடுகிறது. அது விடுக்கும் அறைகூவல் இன்றளவும் அப்படியேதான் இருக்கிறது. அந்த அறைகூவலை யாராலும் முறியடிக்க முடியாது என்று அது உறுதியாகக் கூறுகிறது.
அதன் அற்புதங்கள் என்றும் முடிவடையாதவை. அது அருளப்பட்டதிலிருந்து இன்றுவரை மனிதர்கள் அதிலிருந்து பயனடைந்து கொண்டும் அதில் மறைந்திருக்கும் கருவூலங்களை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். அது ஒரேயடியாக வாசித்து முடிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டியது. கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கப்பட வேண்டியது. எந்த அளவு நாம் அதன் பக்கம் திரும்புகிறோமோ எந்த அளவு நாம் அதில் ஆழ்ந்து கவனம் செலுத்துகிறாமோ அந்த அளவு அதன் கருவூலங்கள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு பொதுத்தன்மையோடு நெகிழ்வுத்தன்மையோடு காணப்படுவது அதன் மகத்தான அற்புதங்களில் ஒன்று.
அது என்றும் மாறாத மனிதனின் இயல்புகளை விளித்து உரையாடுகிறது. அது கூறும் போதனைகள், வழிகாட்டல்கள், சட்டங்கள் மனிதனின் இயல்புகளோடு முழுக்க முழுக்க பொருந்திப் போகக்கூடியவை. மனிதன் என்றும் மாறாதவன். அன்றிருந்த அதே மனிதர்கள்தாம் இன்றும் இருக்கிறார்கள். மனிதர்கள் அப்படித்தான் என்றும் இருப்பார்கள். அவர்களின் புற வாழ்க்கையில் பெரும் மாற்றங்களில் ஏற்பட்டிருக்கலாம். அக வாழ்க்கையில் அவர்கள் அதே இயல்புகளோடு இருக்கின்ற மனிதர்கள்தாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் குர்ஆனுக்கான விரிவுரைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மனிதர்கள் தங்களின் கண்டடைவுகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அதில் கவனம் செலுத்தக்கூடிய, அதை ஆராயக்கூடிய ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு கருவூலங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. அதன் வசனங்களுக்கு மத்தியில் வெளிப்படையான, நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதல் இறுதிவரை நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அதன் அத்தியாயங்களுக்கு மத்தியிலும் தொடர்புகள் இருக்கின்றன. அதன் அத்தியாயங்கள், வசனங்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதற்கு ‘இல்முல் முனாஸபாத்’ என்று பெயர். இது திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் ஹமீதுத்தீன் ஃபராஹியின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இது பற்றி அதிகம் பேசுகிறார்கள். இந்தத் துறை குறித்து அவர்கள் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்கள். அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி எழுதிய ‘ததப்புருல் குர்ஆன்’ இந்த அம்சம் குறித்து அதிகம் பேசுகிறது. சையித் குதுபும் தம்முடைய ‘திருக்குர்ஆன் நிழலில்’ என்ற நூலில் இது குறித்து அதிகம் பேசுகிறார். திருக்குர்ஆனின் இந்த அம்சம் தொடர்பாக ஏராளமானோர் பேசியிருந்தாலும் இதன் அடிப்படையில் அதற்கு விரிவுரை வழங்கியவர்கள் குறைவானவர்களே.
இந்த வகையில் ஷெய்க் முஹம்மது கஸ்ஸாலி தம்முடைய ‘கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை’ என்ற நூலை முன்வைத்துள்ளார். அவர் ஷெய்க் முஹம்மது அப்துல்லாஹ் தர்ராஸ் எழுதிய ‘அந்நபுவுல் அழீம்’ என்ற புத்தகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தம்முடைய இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
குர்ஆன் தொடர்பாக வாசிக்கக்கூடியவர்களுக்கு, குர்ஆனை முறையாகக் கற்க விரும்புவர்களுக்கு, அறிஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி. அது அவர்களுக்குப் புதியதொரு பாதையைத் திறந்து காட்டலாம். தம்முடைய இந்தப் புத்தகம் குறித்து முன்னுரையில் அவர் முன்வைக்கும் சில வரிகள்: “நான் மிகக் குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளேன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வேன். நான் நீர் பருகிய நீரோடையில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எனது இந்தப் பணி நீங்கள் முன்னேறிச் செல்வதற்குத் தூண்டுகோலாய் அமையும். திருக்குர்ஆனுக்குச் சேவையாற்றுவதில், அதன் மீது படிந்துள்ள திரைகளை அகற்றுவதில், அதன் அழகை வெளிப்படுத்துவதில் அறிவுடையோரு வெகுதூரம்வரை செல்ல முடியும்.”
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை