நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – நூல் அறிமுகம்

இஸ்லாம் ஒரு மனிதனுக்கு வழங்கும் மிகப் பெரிய அருட்கொடை அது வழங்கும் கண்ணோட்டங்கள்தாம். அவை மனிதனுக்குத் தோன்றக்கூடிய அடிப்படையான, இயல்பான கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளிக்கின்றன. அந்தப் பதில்களைக் கொண்டு மனம் திருப்தியடைகிறது, அமைதி பெறுகிறது. இறைமார்க்கமே அந்தக் கேள்விகளுக்கு மனம் திருப்தியடையும் வகையில் பதிலளிக்க முடியும். வேறு எந்த வகையான பதில்களைக் கொண்டும் மனம் திருப்தியடையாது. மாறாக அவை மேலும் மேலும் கேள்விகளையே உருவாக்கும்.

மனிதர்கள் தங்களைப் படைத்தவன் குறித்து, இந்த உலகம் குறித்து, மனித வாழ்வு குறித்து, அதன் நோக்கம் குறித்து, மரணம் குறித்து, தங்களைச் சுற்றிக் காணப்படும் படைப்புகள் குறித்து, தங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் குறித்து தெளிவான கண்ணோட்டங்களைக் கொண்டிராமல் இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட முடியாது. சிற்றின்பங்களிலிருந்து விடுபட்டவுடன் அவர்கள் பெரும் வெறுமையில் சலிப்பில் சிக்கிக் கொள்வார்கள். வாழ்க்கையின் ஆதாரமான கேள்விகள் அவர்களை அச்சுறுத்தத் தொடங்கிவிடும். அவற்றை எதிர்கொள்ளத் தேவையில்லை என்ற எண்ணத்தில் அவற்றை கண்டும் காணாமல் சென்றாலும் அவை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டேயிருக்கும்.

நம்பிக்கையாளனையும் மற்றவர்களையும் வேறுபடுத்தும் அடிப்படையான அம்சம், அவன் கொண்டிருக்கும் மனத்தெளிவுதான். அதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. அந்த மனத்தெளிவு இஸ்லாம் வழங்கும் கண்ணோட்டங்களினால் உருவாவது. அவையே வாழ்க்கையின் மூடுமந்திரங்களிலிருந்து அவனை விடுவிக்கின்றன. தெளிவான இலக்கை, அந்த இலக்கை அடையக்கூடிய சரியான பாதையை, அந்தப் பாதையில் செல்வதற்குரிய தேவையான முன்னேற்பாடுகளை அவனுக்குச் சொல்லித் தருகின்றன.

சையித் குதுப் எழுதிய புத்தகங்களில் முதன்மையான புத்தகமாக ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற புத்தகத்தையே கூறுவேன். தமிழில் 260 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்ட மிகச் சிறந்த புத்தகம். ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒரு பாடத்திட்டமாகக் கருதி பயில வேண்டிய புத்தகம் அது. இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு – குறைந்தபட்சம் பொறுப்பாளர்களுக்கு – இந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி பரிந்துரைக்க வேண்டும். இஸ்லாம் குறித்து வாசிக்க விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

சையித் குதுப் ஈமானிய உத்வேகத்துடனும், ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் இந்தப் புத்தகத்தில் இஸ்லாம் முன்வைக்கும் அடிப்படையான கண்ணோட்டங்களின் தனித்தன்மைகளைத் தெளிவுபடுத்துகிறார். அவை நிச்சயம் நம்பிக்கையாளர்களின் வாழ்வில் வெளிச்சம் தரக்கூடியவை. இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் இஸ்லாம் எப்படி ஒரு நம்பிக்கையாளனிடம் பெருமையற்ற உயர்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Related posts

Leave a Comment