கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகமும் மனித வாழ்வும் – ஒரு தத்துவார்த்த பார்வை

நாத்திகம் என்றால் என்ன? கடவுள் இல்லை என்ற ‘நம்பிக்கை’யைத்தான் நாம் நாத்திகம் என்கிறோம். கடவுள் இல்லை என்பது ஒரு நம்பிக்கையா? ஆதாரமின்றி அல்லது தர்க்க ரீதியான சரியான காரணமின்றி முன்வைக்கப்படும் கூற்றுகள் அனைத்துமே நம்பிக்கைகள்தானே!

கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் உண்டா என்று நாத்திகர்களிடம் கேட்டால், இருப்பதற்குத்தான் ஆதாரம் கொடுக்க முடியும்; இல்லாததற்கு ஆதாரம் கொடுக்கத் தேவையில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். இவ்வாதம் ஏற்புடையதன்று. கடவுள் இல்லை என்று அவர்களுக்கு எப்படி தெரியும், அதைத் தக்க ஆதாரத்துடன் அவர்கள் முன்வைத்தால் நாமும் தெரிந்துகொள்ளலாம் அல்லவா!

கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, திரிசூலத்தை வைத்திருக்கும் பண்டைய கிரேக்க கடவுள் பொசைடன் (Poseidon) இல்லை என்பதா? எந்தக் கடவுளும் இல்லை என்பதுதான் நாத்திகம் என்ற வாதம் இங்கு முன்வைக்கப்படலாம். கடவுளில் விதங்கள்/வகைகள் எல்லாம் உள்ளனவா என்று குழப்பமடைவோருக்கு, கடவுள் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று பொருள்.

ஏனெனில், கடவுளுக்கு மதங்கள் தரும் வரைவிலக்கணங்களுக்கு வெளியேகூட கடவுளை அறிந்துகொள்ளவும் வரையறுக்கவும் முடியும். அது சரியா, தவறா என்பது வேறு பிரச்னை. இறையியல் துறையில் ‘இயற்கை இறையியல்’ என்ற வகைப்பாடு உண்டு. ஆங்கிலத்தில் அதை Natural Theology என்பார்கள். இயற்கை இறையியல் என்றால் இயற்கையை வணங்குவது என்பதல்ல, மதங்கள் இல்லாமல் தர்க்க ரீதியாகவே கடவுளை அறிந்துகொள்வதாகும்.

இஸ்லாத்தின்படி கடவுள் என்றால் யார் என்று நமக்குத் தெரியும். சரி, ஒரு நாத்திகர் சிவன், பொசைடன் போன்ற கடவுள்களை மறுக்கிறார் என்றால் அதில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாமும் அவற்றை மறுக்கவே செய்கிறோம். கடவுள் என்றால் சிவன் என்று புரிந்துவைத்துக் கொண்டு, அந்தப் புரிதலின் அடிப்படையிலிருந்து ஒருவர் இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை மறுத்தால், அவர்களுக்குக் கடவுள் என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தம். நாம் அவர்களின் புரிதலையே கேள்விக்குள்ளாக்குவோம்.

பெரும்பாலும் நாத்திகர்கள் கடவுளை மறுப்பதற்குக் காரணம், அவர்கள் வாழும் சமூகத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் அநியாயங்களை எதிர்ப்பதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு, பெரியார் இந்து மதத்திலுள்ள சாதிக் கொடுமைகளை எதிர்க்க நாத்திகத்தை ஏற்றுக்கொண்டார். அதேபோல், நீங்கள் மேற்குலகின் நாத்திக வரலாற்றைப் பார்த்தாலும், சமூகச் சிக்கல்களை கிறித்துவ அறவிழுமியங்களிலுள்ள சிக்கல்களாகக் கருதியே பலர் நாத்திகத்தை ஏற்றிருப்பது தெரியவரும். இப்போதுள்ள புது நாத்திகம் (New Atheism) பரவலான பின்னணியைப் பார்த்தாலும் இந்த உண்மை புலப்படும்.

சில நாத்திகவாதிகள் கடவுளே கண்முன் வந்தாலும் ஏற்கமாட்டோம் என்பர். தாமஸ் நேகலை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதற்கு முரணாக, பெரியார் கடவுளை நேரில் கண்டால் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அறிவியல்பூர்வமாகப் பார்த்தால் கடவுள் இல்லையென்பது தெரியவரும் என்பதாக புது நாத்திகர்கள் வாதிடுகின்றனர். “பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஆதம்-ஏவாள் கதையைப் பொய்யாக்கியுள்ளது. உங்கள் மத நூல் சொன்னது தவறு. ஆதலால், உங்கள் மதமும் தவறு. கடவுள் இல்லை என்பதே நிஜம்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஓரளவுக்கு தர்க்கம் (Logic) தெரிந்தோர்கூட எளிதில் இதிலுள்ள தர்க்கப் பிழையைக் கண்டுகொள்வார்கள். ஒருவேளை, மத நூல் தவறு என்றாலும் கடவுள் இல்லை என்பது தர்க்கப் பிழை.

புது நாத்திகர்களிடம் இருக்கும் பிரச்னையே அவர்கள் மதத்தை ஓர் அறிவியல் கோட்பாடு (scientific theory) போல அணுகுவதுதான். பண்டைய காலத்தில் வாழ்ந்த பல கிறிஸ்தவ மத அறிஞர்களே ஆதம்-ஏவாள் கதையை ஓர் உருவகமாக (metaphor) பார்க்க வேண்டும் என்றனர். இதையெல்லாம் புது நாத்திகர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆதம்-ஏவாள் கதை உருவகமா, இல்லையா என்பது இங்கு பேசுபொருளல்ல. மதத்திலுள்ள நெகிழ்வுத்தன்மையையும் புது நாத்திகத்தின் கோளாறையும் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

வரலாற்றில் நாத்திகர்கள்

உலக வரலாற்றில் எப்போதும் நாத்திகர்கள் இன்று இருப்பதுபோன்று அதிக எண்ணிக்கையில், கூட்டாக, இயக்கமாக, நிறுவனமாக இருந்ததில்லை. ஆங்காங்கே இருந்துள்ளார்கள். நாத்திகர்கள் என்றாலே அவர்களுக்கென்று ஓர் அறவிழுமியம் கிடையாது; அவர்கள் கொடுக்கும் வாக்கை நிறைவேற்றுவார்கள் என்று நம்ப முடியாது; அவர்களை எவ்வகையிலும் ஒரு சீர் ஒழுங்கு நிலையில் வைத்திருக்க முடியாது என்றெல்லாம் பண்டைய சமூகங்களில் ஒரு பார்வை இருந்தது. இன்று pedophile எப்படி கருதப்படுகிறாரோ அவ்வாறே அன்று நாத்திகர் கருதப்பட்டார். ஓர் 300-400 வருடங்களுக்கு முன்பு தன்னளவில் மதங்களைப் புறக்கணித்து, மதத்தின் சட்டதிட்டங்களைப் புறக்கணித்து மக்கள் இருந்துள்ளார்களே தவிர, கடவுள் இல்லை என்று கருதியவர்கள் மிகவும் அரிதானவர்களாகவே இருந்துள்ளார்கள்.

இந்தியச் சிந்தனை மரபில் நாத்திகச் சிந்தனைப் பள்ளிகள், தத்துவங்கள் இருந்துள்ளன. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய மேற்கின் சிந்தனைத் தந்தைகளாக விளங்கும் இம்மூவரும் அவர்களின் சமூகத்திலிருந்த பலதெய்வ வழிபாட்டைப் புறக்கணித்து ஓரிறைக் கொள்கையை நம்பியவர்கள். அவர்கள் நாத்திகர்கள் அல்லர். அவர்களின் ஓரிறைக் கொள்கை இஸ்லாத்தைப் போன்றதுமல்ல.

முதன்முதலில் பிரான்சில்தான் கடவுள் இல்லை என்ற கோஷம் பகிரங்கமாகவும் பெருமிதத்துடனும் எழுந்தது. அது பிரபல்யமாகிய சமயத்தில் பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் ஹூம் என்ற தத்துவவியலாளர் பிரான்சில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகுவதையும், வெளிப்படையாக அவர்கள் செயல்படுவதையும் கண்டு வியந்துபோனார்.

இன்று நாத்திகத்தில் பல வகைகளும் போக்குகளும் இருக்கின்றன. சமகாலத்தில் கோலோச்சும் புது நாத்திகத்திற்கு முன்னோடிகளாக பின்வரும் நால்வரையும் அவர்களின் ஆக்கங்களையும் குறிப்பிடலாம். சாம் ஹாரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், டேனியல் டென்னெட், கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ்.

சாம் ஹாரிஸ் 2004ம் ஆண்டு End of Faith என்ற மதங்களுக்கு எதிரான (குறிப்பாக இஸ்லாத்திற்கெதிரான) நூலை எழுதுகிறார். அதில் மதம் (குறிப்பாக இஸ்லாம்) என்றாலே வன்முறை என்று காட்டமாகப் பதிவு செய்கிறார். இதில் நகைமுரண் என்னவென்றால் இந்த மேதாவி “அப்பாவி முஸ்லிம்களைக்கூட கொல்வது தவறில்லை” என்று சொல்லக்கூடியவர் என்பதுதான்.

இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்ற அவரின் வாதம் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில், நாத்திகம் அமைதி மார்க்கமா?

நாத்திகம் என்பது மார்க்கம் எல்லாம் இல்லை, அது ஒரு நிலைப்பாடு மட்டுமே என்றும், அவரவர் அவர்களின் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்துகொள்வார்கள் என்றும் சில நாத்திகர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இக்கூற்றில் கடுகளவும் உண்மையில்லை. அவர்களின் நிலைப்பாடு பற்றியும், அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது.

நாத்திகம் அதனளவிலேயே வன்முறையானதும் சகிப்புத்தன்மையற்றதும் ஆகும். நாத்திகர்கள் நமக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பார்கள். ஆனால், அவர்கள்தாம் சிறிதளவும் சகிப்புத்தன்மையற்றவர்கள். உதாரணத்திற்கு, பிரான்சில் கத்தோலிக்க ஆட்சியைக் கவிழ்த்த பிறகு அங்கிருந்த நாத்திகவாதிகள், கத்தோலிக்க மத வழிபாட்டுத் தளங்களை அடித்து உடைத்ததோடு மட்டுமின்றி, பல மத குருமார்களைக் கொன்று குவித்தனர். இதே பாணியில்தான் சீனாவில் மாவோ தலைமையிலான அரசு வந்த பிறகு, பல வழிபாட்டுத் தளங்களை இடித்துத் தள்ளினார்கள்.

இதெல்லாம் நாத்திகத்தினால் ஏற்பட்ட விளைவல்ல, அரசியல் விளைவு என்று நாத்திகவாதிகள் சொல்லக்கூடும். உண்மையில் இது நாத்திகத்தின் பிரச்னையே. இஸ்லாமிய தீவிரவாதம் என்று இவர்கள் சொல்வதுதான் ஏகாதிபத்திய அரசியல் மேலாதிக்கம் சார்ந்த பிரச்னை. இஸ்லாமியக் கோட்பாடுகளால் நேர்ந்த பிரச்னை அல்ல அது. எண்ணெய் வளத்திற்காக மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடுத்ததும், ஒஸாமா பின் லாடன் உருவானதற்குக் காரணமாக அமைந்ததும் யார்? அமெரிக்கா அல்லவா! காஃபிர்களைக் கொல்வதே நோக்கமென்றால், ஒஸாமா ஏன் அமெரிக்காவைத் தாக்கவேண்டும், அருகிலிருக்கும் முஸ்லிம் அல்லாத நாட்டைத் தாக்கியிருக்கலாம் அல்லவா? இதுபோன்ற விஷயங்களை சாம் ஹாரிஸ் போன்ற நாத்திகவாதிகள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் ’பகுத்தறிவு’ கிடையாது. ஆம், நாத்திகவாதிகளுக்கு பகுத்தறிவு என்பதே கிடையாது.

நாத்திகமும் ஒரு மதமா?

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, அரசைக் கைப்பற்றிய செக்யூலர் நாத்திகவாதிகள் பிரான்ஸின் நோட்ரே டேம் தேவாலயத்தை பகுத்தறிவின் கோவில் என்று கூறி, பகுத்தறிவின் கடவுள் எனும் சிலையையும் நிறுவி, பகுத்தறிவு திருவிழா கொண்டாடினர்.

பிறகு, ஆகஸ்ட் கோம்டே (August Comte) என்பவர் Religion Of Humanity (மனிதாபிமான மதம்) என்ற மதத்தைத் தொடங்குகிறார். அதற்கான சடங்கு சம்பிரதாயங்கள், கோவில் எல்லாம் நிறுவுப்பட்டது.

இப்படி கடவுளே இல்லாமல் மதம் இருக்க முடியுமா? நம் நாட்டில் தோன்றிய புத்த மதம்கூட கடவுள் கொள்கை இல்லாமலேயே உருப்பெற்றது. ஜப்பான் நாட்டில் கடவுள் கொள்கை இல்லாத மதம் உள்ளது.

இன்றுள்ள நாத்திகவாதிகள் தமக்கென கோவில் கட்டவில்லை என்றாலும், அறிவியலையும் விஞ்ஞானிகளையும் கடவுளைப் போல்தான் பாவிக்கிறார்கள்! நேரடியாக பூஜை செய்யாமலும் கும்பிடாமலும் வேண்டுமானால் அவர்கள் இருக்கலாம். ஆனால், அதிலிருக்கும் பூஜிக்கும் தன்மைகள் அனைத்தும் பல நாத்திகவாதிகளிடம் காணப்படுகிறது. எந்தவொரு கொள்கைக்கும் தனிமனித, சமூக விளைவு நிச்சயம் இருக்கும் என்பதையும் நினைவில்கொள்க.

நாத்திகவாதிகளும் பிரபஞ்சத்தின் தோற்றமும்

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த நாத்திகவாதிகளின் கருத்தைப் பார்ப்போம். ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் இல்லை; சொல்லப் போனால், தொடக்கத்தில் எதுவுமே இல்லை. திடீரென்று ஏதோவொரு பாறை தோன்றியது என்கிறார்கள். அது எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது, எப்படி வந்தது என்றெல்லாம் நாம் அவர்களைக் கேட்க கூடாது! அது வந்துச்சு அவ்ளோதான்.

அந்தப் பாறை சும்மா இருந்ததா? இல்லை, திடீரென்று அது வெடித்தது. ஏன் வெடித்தது, எப்போது வெடித்தது, வந்ததற்கும் வெடிப்பதற்கும் ஓர் இடைவெளி இருந்ததல்லவா அந்த இடைவெளியில் அது ஏன் வெடிக்காமல் காத்திருந்தது என்றெல்லாம் நாம் குறுக்குக் கேள்வி கேட்க முடியாது.

வெடித்த பிறகு உருவான பூமி, சூரியன், சூரிய மண்டலம், பால் வெளி முதலான அனைத்தும் வெறும் கல் குவியல் என்று அவர்கள் வாதிடுகின்றனர். நாம்தான் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து அழைக்கிறோம் என்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுவது, இந்தப் பூமி என்கிற கல்லில் மட்டும் திடீரென்று உயிர் என்று ஏதோ ஒன்று தோன்றியதாம். உயிரற்ற பாறையிலிருந்து உயிர்! ஆஹா, என்ன ஒரு சுவாரஸ்யமான கதை. இதைவிட சுவாரஸ்யமானது என்னவென்றால், அந்த உயிரற்ற, சிந்திக்கத் தெரியாத, பகுத்தறிவில்லாத பாறையிலிருந்து சிந்திக்கத் தெரிந்த, பகுத்தறிவுள்ள உயிரினம் தோன்றியதாம். பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அவர்களின் கண்ணோட்டம் இதுதான்.

நாத்திகமும் நிறவெறியும்

நாத்திகத்தால் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அறிவியல் நிறவெறியை (scientific racism) அதன் சமூக விளைவாகச் சொல்ல முடியும்.

ஆதம்-ஏவாள் எல்லாம் கிடையாது என்று கூறும் நாத்திகவாதிகள், பரிணாம வளர்ச்சிதான் மனிதர்கள் தோன்றக் காரணம் என்பர். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின்படி, எந்த ஓர் உயிரினம் எந்தளவுக்கு வெற்றிகரமாக உயிர் வாழ்ந்து, அடுத்த சந்ததிகளை உருவாக்குகிறதோ அந்த அளவுக்கு அது உயர்ந்த பரிணாம வளர்ச்சியை அடைகிறது. இந்தப் பின்னணியில், மேற்கத்திய மனிதர்கள்தாம் வெள்ளையாக, உயரமாக, அழகாக, புத்திசாலியாக, இருக்கின்றனர் என்றும் பல விஞ்ஞானப் படைப்புகளைக் கண்டுபிடித்துள்ளதோடு, உலகின் வல்லரசாகவும் உள்ளனர் என்றும் வாதிடப்பட்டது. இதனடிப்படையில், வெள்ளை இனத்தவர்கள் உயர்ந்தவர்கள்; பழுப்பு நிறத்தவர்கள் இடைப்பட்ட நிலையிலிருப்பவர்கள். இதுவே பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிறவெறியாகும்.

கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தவர்கள், சரியாக பரிணாம வளர்ச்சியடையாதவர்கள், மிருகத்துக்கு ஒப்பானவர்கள் என 17ம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்ற பல மேற்கத்திய அறிவுஜீவிகள் நம்பியுள்ளனர். அவ்வாறே செயல்பட்டும் உள்ளனர். ஒரு நீக்ரோ மனிதரை விலங்கியல் பூங்காவில் அடைத்து, “இவர்தான் மனிதருக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட பரிணாம சங்கிலி” என்று கூறினர். அந்த நீக்ரோ அவமானம் தாங்காமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

நாத்திகத்தின் தனிமனித விளைவு

இறைவன் இல்லையென்றால் வாழ்க்கைக்கு ஓர் உண்மையான அர்த்தம் இல்லாமலாகிவிடும். இறைநம்பிக்கையாளன் வாழ இறைவன் என்ற காரணம் இருக்கிறது. ஒரு நாத்திகவாதி வாழ என்ன காரணம் இருக்க முடியும்?

இதுபோன்ற அடிப்படையான விஷயங்கள் குறித்தெல்லாம் தற்கால நாத்திகவாதிகள் சிந்திப்பதில்லை. அவர்களுடைய பகுத்தறிவானது இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்றால் இறைவனை யார் படைத்தது என்ற ஒற்றைக் கேள்வியுடன் சுருங்கிவிடுகிறது.

தற்கால நாத்திகவாதிகள் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். அப்படியானால் முன்னர் வாழ்ந்த நாத்திகவாதிகள் இப்படியெல்லாம் சிந்தித்துள்ளார்களா? ஆம், தத்துவவியலாளர் நீட்சே இக்கோணத்தில் சிந்தித்துள்ளார். இறைவன் இல்லாத உலகில் அர்த்தத்தை எப்படி உருவாக்கிக்கொள்வது, எப்படி வாழ்வது, சூன்யவாதம் (nihilism) என்ற அர்த்தமற்ற வாழ்கை நிலையை எவ்வாறு கடப்பது போன்றவற்றுக்குப் பதில் தர முயற்சித்துள்ளார்.

எதற்கும் அர்த்தமில்லை, வாழ்வதே வீண், வாழ்வதே துன்பமும் துயரமும்தான் என்பதை முன்வைக்கும் கருத்தாக்கமே சூன்யவாதமாகும். மேலும், அது வாழ்வதைவிட தற்கொலையே சிறந்தது எனும் நிலைக்குக் கொண்டு செல்லும் கருதுகோள். நாம் துன்பத்தில் இருக்கும்போது இது சரியாகிவிடும், இறைவன் இருக்கிறான் என்ற ஆறுதலையும் நம்பிக்கையையும் நாத்திகம் தருவதில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது.

நாத்திகர்களை எவ்வாறு அணுகுவது?

நாத்திகர்கள் எந்தச் சிந்தனை மரபிலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் அவர்களிடம் உரையாட வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு நாத்திகரிடம் இறைவன் உள்ளான் என்று நிரூபித்தால் நீங்கள் நம்புவீர்களா, எவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்று கேட்கலாம். அவர் அறிவியல்வாதியாக இருந்தால் அறிவியல் ஆதாரம் கேட்பார். இறைவன் உள்ளான் என்பதை அறிவியல் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக அதற்கு நாம் மறுமொழி தரலாம். அறிவியலால் இறைவனை நேரடியாக நிரூபிக்க முடியாது என்றும் கூறி நிறைவு செய்யலாம்.

ஒருவர் மார்க்ஸியச் சிந்தனை கொண்ட நாத்திகவாதி என்றால், அவரிடம் இங்கேயுள்ள சாதி, வர்க்கப் பிரச்னையைத் தீர்க்க இஸ்லாம்தான் சரியானது என்பதை அறிவார்ந்த முறையில் நிறுவ முயலலாம். இதை உணர்ந்த மார்க்சிஸ்ட் சமூக ஆர்வலரும், அவரின் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். மெய்ப்பொருள் வலைத்தளத்தில் அவரின் நேர்காணல் உள்ளது.

நாத்திகர்களின் கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்வது?

மூன்று வகையில் நாத்திகர்களுக்குப் பதிலளிக்க முடியும் என்று கருதுகிறேன்.

  1. உண்மையைப் பக்குவமாகவும் முழுமையாகவும் எடுத்துச் சொல்வது.
  2. அவர்களின் சட்டகத்திலிருந்தே பதில் கொடுப்பது.
  3. உண்மையை உள்ளது உள்ளபடி உடைத்துச் சொல்வது.

முதல் வகை: புர்கா அணிவது பெண்களுக்குக் கடினமானது, அசௌகரியமானது எனச் சொல்லப்படுவதாகக் கொள்வோம். தனிமனித அளவிலும் சமூக ரீதியாகவும் புர்கா அணிவதிலுள்ள நன்மைகளையும் முக்கியத்துவங்களையும் நாம் எடுத்துரைக்கலாம். பல நடிகைகளும் மாடல்களும் புர்கா அணிந்து தங்களைச் சுதந்திரமாக உணர்ந்து இஸ்லாத்திற்கு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டலாம். இஸ்லாமிய உலக நோக்கில் தனிமனித, சமூக-அரசியல் கண்ணோட்டத்தில் புர்காவை எப்படி அணுகுவது என்பதையும் விளக்கிக் கூறலாம்.

இரண்டாவது வகை: அவர்கள் பாணியில், அதெல்லாம் தனிமனித சுதந்திரம்தானே? ஆண்கள் பெண்களை வற்புறுத்தவில்லை, அவர்களேதான் அணிகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களின் தனிமனித உரிமைகளில் குறுக்கிடுகிறீர்கள்? நீங்கள் சொல்வதுபோல்தான் ஆடை அணிய வேண்டுமா, ஏன் இவ்வளவு ஆணாதிக்கத்துடன் நடந்துகொள்கிறீர்களே என்று அவர்களின் சட்டகத்திலிருந்தே பதிலளிக்கலாம்.

மூன்றாவது வகை: இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், எது சௌகரியம் / அசௌகரியம் என்பதை நீங்கள் எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்? மேற்கில் பெண்கள் குட்டைப் பாவாடை, ஒரு டாப்ஸ் மட்டும் அணிகிறார்கள். இதை சேலையுடன் ஒப்பிட்டால் அதுதான் சௌகரியமாக இருக்கும். மேற்கத்திய நாடுகளிலுள்ள ஒருசில இடங்களில் நிர்வாணமாக இருக்க முடியும். அது இன்னும் சௌகரியமானது என்றுகூட ஒருசிலர் சொல்லக்கூடும். அந்த அளவுகோலின்படி பார்த்தால் சேலை அணிவதுகூட ஒடுக்குமுறையாகிவிடும்.

முடிவுரை

நாத்திகக் கொள்கையை / மதத்தைப் பிரச்சாரம் செய்து மக்களை நாத்திகராக மாற்ற முயலும் நாத்திகவாதிகளிடம், நாத்திகம்தான் உண்மை என்பதற்கு ஆதாரம் என்னவென்று கேளுங்கள்.

ஆதாரமில்லாமல் எவ்வாறு நம்புவது? அவ்வாறு நம்பினால் அது மூடநம்பிக்கை ஆகிவிடாதா? நாத்திகத்தால் என்ன பயன்? பிற கொள்கைகள் / மதங்கள் வழியாக அந்தப் பயனை அடைய இயலாதா? இயலாதெனில் ஏன் எனக் கேட்பதன் மூலம் நாத்திகர்களின் “பகுத்தறிவை”, அவர்களின் நாத்திக மூடநம்பிக்கையை கேள்விக்குட்படுத்துங்கள்.

“படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!” (திருக்குர்ஆன் 52:35-36)

உதவிய நூல்கள்:

  1. Seven types of Atheism – John Gray
  2. Atheism: What everyone needs to know – Michael Ruse
  3. The Divine Reality – Hamza Tzortzis
  4. God’s Undertaker, Has science buried God? – John Lennox

Related posts

Leave a Comment