“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”
இந்து சாதியத்தால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவத்திற்கான தேடலில் இன்றுவரை களைப்படையவில்லை. சமயம், தத்துவம், அரசியல் எனத் தங்களின் விடுதலைக்கு உதவும் எந்த வழிமுறைக்கும் அவர்கள் செவிமடுத்திருக்கிறார்கள். அவற்றோடு இணைந்து நிற்கிறார்கள்; இரண்டறக் கலந்தும் விடுகிறார்கள். மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே! ஆனால், தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி அருகே கொடிக்கால் கிராமத்தில் பிறந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘இஸ்லாம் ஏமாற்றவில்லை’ என்கிறார். அநீதியாகத் தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவைத் துடைத்தெறிய இலக்கியம், ஊடகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித உரிமை எனப் பயணப்பட்டு, வழியெல்லாம் ஏமாற்றத்தில் கரைந்து, இறுதியில் இஸ்லாத்தின் மூலம் தனது இழிவு நீங்கியதைப் பெருமையுடன் விவரிக்கிறார். ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக, அவர் அனுபவத்தில் தேக்கியவற்றைத் தன் தாய்ச் சமூகத்திடம் வாஞ்சையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாவாக மாறினீர்கள்?
1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8, 9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். ‘உயர்சாதி’ என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள்தான். சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறையாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்ற தனித் தமிழ் நாடு விடுதலைப் போராட்டத்தில், 1954ஆம் ஆண்டு கலந்து கொண்டு சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிக முக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக் கூடிய நிலை வரும்போது, எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது. எந்தச் சமுதாயம் எங்களை அவமானப்படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.
அடிமை இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது ஒரு செய்தியைச் சொல்கிறார் : ‘‘எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றைவாடை தியேட்டரில் ‘ஆரியமாலா’ என்ற நாடகம் நடத்த இருப்பதாகவும், அது குறித்த செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு அடிக்குறிப்பொன்று அதில் சொல்லப்பட்டிருந்தது. தொழுநோயாளிகள் மற்றும் பஞ்சமர்களுக்கு எக்காரணம் கொண்டும் நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.” ஒரு சமுதாயம் எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டிருந்தது என்பதைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. இது, அடிமை இந்தியாவில் நடந்த விஷயம்.
இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜெகஜீவன்ராம் அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், செல்வாக்குமிக்கத் தலைவராகவும், துணைப் பிரதமராகவும் இருந்து, அவர் ராணுவ அமைச்சராக இருக்கும்போது, ஒரு சம்பவம் நடக்கிறது. காசியிலே சம்பூராணந் சிலையை அவர் திறந்து வைத்துவிட்டு வந்த பிறகு, அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் அங்கு இருக்கிற சனாதனவாதிகள் எல்லாம் கங்கைக்குப் போய் தண்ணீர் கொண்டு வந்து சிலையைச் சுத்தம் செய்து கழுவி, உலகிற்குப் பகிரங்கமாகத் தெரிவித்தார்கள். இதை உலகமே பார்த்தது. எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்தால், இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கக்கூடிய காலத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது. அவர், முப்படைக்கும் தளபதியாக இருந்த காலத்திலேயே இது நடந்தது.
நீங்கள் மதம் மாறுவதற்கான சமூகக் காரணங்களைச் சொல்கிறீர்கள். சமூகக் காரணங்களால் நீங்கள் மதம் மாறினீர்களா? அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட அனுபவங்களால் மதம் மாறினீர்களா?
சமூகத்தில் நானும் ஒரு அங்கம்தானே! சமூகம் பாதிக்கப்படும்போது அதில் நானும் ஒரு ஆள்தானே! அதை நான் பிரித்துப் பார்க்கவில்லை. பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ஒரு ஆளைச் சந்திக்கும்போது, ஒரு வீட்டிற்குப் போகும்போது, என்னை நடத்திய நடைமுறைகள், எனக்கு ஒரு காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காயம் நிரந்தரமாகவே உள்ள காயம். சமூகக் காரணங்களால்தான் நான் மதம் மாறினேன். முதன் முதலாக நான் மட்டும்தான் மதம் மாறினேன். நான் ‘கன்வின்ஸ்’ ஆனதால் மதம் மாறினேன். என்னுடைய மனைவி கிறித்தவப் பெண். கம்யூனிஸ்ட் இயக்கத்திலேயே அந்தக் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்ததுனாலே, என்னுடைய மனைவி நாத்திகவாதி. அவர் சர்ச்சுக்குப் போவது கிடையாது; சடங்கு சம்பிரதாயங்களில் பங்கெடுத்தது கிடையாது. அப்போது நான் இப்படி ஒரு முடிவு எடுத்த பிறகு, அதை நான் என் மனைவியிடம் சொல்லும்போது, என்னைத் திட்டினாங்க. இருந்திருந்து ஒரு மதவாதியாக மாறிட்டீங்களே! பகுத்தறிவு ஊட்டினவங்க, காலம் முழுவதும் அதற்காகவே பாடுபட்டவங்க, சமூகத்தில் என்னென்னவோ செய்தீங்க. இருந்திருந்து மதவாதியாக மாறிட்டீங்களே என்று வருத்தப்பட்டார்.
அதற்கு உங்களுடைய பதில் என்ன?
அதற்குப் பிறகுதான் அவருக்குச் சில நூல்களை எல்லாம் கொடுத்தேன். நான் என் மனைவியிடம் சொன்னேன்: நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்றால், அந்த இயக்கம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையில்தான் நீயும், நானும் இரவு பகலாகப் பாடுபட்டோம், உழைத்தோம், கஷ்டப்பட்டோம். பலநாள் ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் நடந்தது. இதில் ஏதாவது ஒரு மாற்றம் உனக்கு வந்திருப்பதாகத் தெரிகிறதான்னு கேட்டேன். யோசித்த பிறகு, ஆமாம் நம்முடைய தோழர்கள் எல்லாம் தோழமையோடுதான் இருக்காங்க. ஆனால், அவங்க வீட்டில் அப்படியில்லை. நம்ம வீட்டுக்கு வருகிற கட்சித் தோழர்கள் அக்கா, தங்கச்சி என்கிற உறவோடு, அந்த பந்தத்தோடு நம்மிடம் அன்பு செலுத்துறாங்க, அதெல்லாம் சரிதான். ஆனால், அவங்க அப்பாவோ, அம்மாவோ, தம்பியோ, தங்கச்சியோ நம்மள அப்படிப் பார்த்ததில்லையே! இதில் ஒரு உண்மை என்னவென்றால், இதை மாத்தணும்ங்கிறதுதானே எனக்கும் உனக்கும் நோக்கம். ஆமாம். அதற்கு ஒரு வழி என்னன்னு சொன்னா? மதமாற்றம்தான்.
நம்முடைய எல்லாவிதமான முன்னேற்றத்திற்கும் இங்கு தடையாக இருப்பது ஜாதிதான். இந்த ஜாதியை ஒழிக்கணும், இந்த ஜாதி மாறணும். இது எங்கு போனாலும் இருந்திட்டு இருக்கில்ல. இது மாறுவதற்கு ஏதாவது வழி உண்டா? அது கம்யூனிசத்தின் மூலம் முடியும் என்று நம்பினோம். நம்பிக் கொண்டிருந்தோம். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். உனக்கு நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டேன். ஜாதி ஒழியாது. ஜாதி ஒழியவில்லை என்று சொன்னால், மக்களுக்கு அந்தஸ்து எப்படி கிடைக்கும்? அப்ப கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லையே. அது நம்ப இஸ்லாத்து மூலமாக கிடைக்குமா என்று ஒரு கேள்வியை என் மனைவி கேட்டார். அது கிடைக்கும். எப்படிக் கிடைக்கும் என்று சொன்னால், கம்யூனிசத்தின் மூலமாக இந்தியாவைப் பொறுத்தவரை சாதி ஒழியும் என்பது சாத்தியமில்லை. அந்தத் தத்துவம் சரியா, தப்பான்னு நான் அங்கு போகவில்லை. இந்தியச் சூழ்நிலையில எல்லாவிதமான மாற்றத்திற்கும் தடையாக இருப்பது ஜாதி அமைப்பு முறை. இந்த ஜாதிகள் ஒழியாமல், இங்கு வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியிருக்கும்போது, நம் எண்ணங்கள் நிறைவேறாத ஒரு இயக்கத்திலே, ஒரு கொள்கையிலே ஏன் விடாப்பிடியாக நாம் இருக்கணும்? இதுதான் நான் அவருக்குச் சொன்ன பதில்.
நீங்கள் சொல்கிற இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உண்டா?
கம்யூனிச இயக்கங்களின் செயல்பாட்டு முறை, சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போதுமானதாக இல்லை. அதற்குக் காரணம் ஜாதி அமைப்பு முறை. பொதுவாக ஒரு பிரச்சனை என்று வரும்போது, கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய, மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் தலைமை ஏற்க வருகிறார்கள். அவர்கள் ஒரு பொறுப்புக்கு வரும்போது, ஒரு சில தீர்மானகரமான தெளிவான முடிவு எடுக்காமல், ஒவ்வொரு காலகட்டத்திலும் தயக்கம் காட்டுகிறார்கள். அது குறித்துச் சொன்னாலும் கூட, அது எடுபடக்கூடிய நிலையில் இல்லை.
நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தும், அம்பேத்கர் தழுவிய பவுத்த மார்க்கத்தைத் தேர்வு செய்யாமல் இஸ்லாத்திற்குச் சென்றது ஏன்?
‘நான் இந்துவாக சாகமாட்டேன்’ என்று அம்பேத்கர் ஏற்ற உறுதிமொழியின் அடிப்படையில் அவர் பவுத்தராக மாறினார். பவுத்தம் சரியா, தவறா என்ற கருத்துக்குள் நான் செல்லவில்லை. ஆனால், நடைமுறையில் பவுத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தானே கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பெரியவர் சக்திதாசன், டாக்டர் சேப்பன் இவர்கள் எல்லாம் இந்து மதம் வேண்டாமென்று பவுத்தத்திற்குப் போனார்கள். ஆனால், பழையபடி மீண்டும் எங்களுக்குச் சாதி ஒழிய வேண்டும்; சாதிச் சலுகைகள் எங்களுக்கு வேண்டும் என்று போராடுகிறார்களே! கிறித்தவமும் பல நல்ல செய்திகளைச் சொன்னாலும், நடைமுறையில் சாதியத்தை வேரறுக்க முடியவில்லையே. பவுத்தத்தை ஏற்றால் சாதி ஒழியும் என்று சொன்னார்கள். ஆனால், ஒழியவில்லையே! இதற்கு யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
அந்தக் காலத்தில், அஜிதா என்ற நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு போராளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் அவரைப் பற்றிய செய்தி வராத நாட்களே இருக்காது. அவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டவர். நீங்கள் பல்வேறு சிரமத்துக்கிடையில் பல தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள்; நானும் என்னுடைய சக்திக்கேற்றவாறு பல தியாகங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், நாம் விரும்பிய அந்த இலக்கை அடைவதற்கு சாதி அமைப்பு முறை தடையாக இருக்கிறதே. அதை ஒழிக்காமல் நாம் எப்படி வெற்றி பெற முடியும் என்று நான் கேட்டேன். அதற்கு அந்தம்மா சொன்னார்கள் : ‘இங்கு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை’. இங்கு ஏற்றத்தாழ்வு எல்லாம் சாதி அடிப்படையில் இல்லை என்று சொன்னார்கள். ‘இதை நான் நம்ப முடியாது’ என்றேன். நம்பூதிரியும், நாயரும் கேரளத்திலே உண்டா என்றேன். ‘ஆம்’ என்றார்கள். ‘தோட்டி’ வேலை செய்கிறவர்கள் அங்கு உண்டா என்றேன் ‘ஆம்’ என்றார்கள். இந்த வேலையை நாயரும் நம்பூதிரியும் செய்வார்களா என்றேன். ‘இது அவர்களுடைய வேலை அல்லவே’ என்றார்கள். அப்ப நான் சொன்னேன், ‘ஜாதி நம்மிடையே பல வடிவங்களில் இருக்கிறது. ஆனால், நாம் ஏதோ ஒரு வகையில் இதை எல்லாம் மறைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றேன். ஆனால், இதை எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்டார். நான் சொன்னேன், ஒரே நொடியில் சாதியை ஒழிக்க முடியும். ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லிவிட்டால், ஒரே நொடியில் சாதி ஒழிந்துவிடும். நான் அப்படி ஒரே நொடியில் சாதியை ஒழித்து முஸ்லிமானேன்.
இருப்பினும், நடைமுறையில் மதம் மாறியவர்களை ஏற்றுக் கொள்கிறார்களா?
நானும் ‘முரசொலி’ அடியாரும் சென்னையில் இருந்து வேலூர் செல்கிறோம். அங்குள்ள இஸ்லாமிய மய்யத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அவர் இன்னும் இஸ்லாத்திற்கு வரவில்லை. ஆனால், தொப்பி அணிந்திருந்தார். பார்க்க முஸ்லிம் போலவே இருப்பார். நான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அவருடைய தொப்பியை அணிய வேண்டும் என்ற ஆசையில், உங்களுக்குத் தாடி இருக்கிறது. எனவே, அந்தத் தொப்பியை எனக்குக் கொடுங்களேன் என்றேன். அதற்கு அவர் இன்னொரு நூல் தொப்பி இருக்கிறது; அதை நீ வைத்துக் கொள் என்று அதைக் கொடுத்தார். நான் பயணத்தின்போது, அதைக் கழற்றுவதும் போடுவதுமாக இருந்தேன். பிறகு, தொப்பியைக் கழற்றுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். ஊர் வந்ததும் அவருக்குப் பின்னால் நான் இறங்குகிறேன். நான் பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் அங்கிருந்த ரிக்ஷாக்காரர் முதல் முதலில் என்னைப் பார்த்து, ‘‘பாய் உங்களுக்கு எங்க போகணும்?” என்றார். நான் ‘கலிமா’ சொல்லவில்லை; முஸ்லிமாக மாறவில்லை; பெயர் மாற்றவில்லை. ஆனால், இந்தத் தொப்பி கொடுத்த அங்கீகாரத்தை வைத்து அந்த ரிக்ஷாக்காரர் ‘‘பாய்” என்று என்னை அழைக்கிறார்.
பிறகு அந்த இஸ்லாமிய நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கு தென் மாவட்டங்களில் இருந்து முஸ்லிமாக மாறிய பலபேர் இருக்கிறார்கள். 5 லிருந்து 80 வயது பெரியவர்கள் வரை இருக்கிறார்கள். இந்தத் தொப்பியை அதற்குப் பிறகு தூக்கத்திலும் நான் எடுக்கவில்லை. எனக்குள் ஒரே பூரிப்பு. அடுத்த நாள் காலை வெளியே கிளம்பி, அங்குள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அங்குள்ள டீ கடைக்குச் சென்றேன். அந்தக் கடையில் நிறைய இந்து சாமிப் படங்களை கடைக்காரர் வைத்திருந்தார். அங்கு போனதும், ‘கல்லா’வில் இருந்தவர் வாங்க பாய் உட்காருங்க! ‘டேய் பாய்க்கு ஒரு டீ போடு’ என்றார். இதைத்தான் மிகப் பெரிய சமூக அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். இவை எல்லாம்தான் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக பலப்படுத்தியது.
நான் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, எனக்குச் சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. எங்கள் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கல்லூரி, 46 ஜமாத்துகளுக்குத் தொடர்புடைய ஒரு கல்லூரி. அது 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய புகழ்பெற்ற கல்லூரி. அந்தக் கல்லூரியில் ஆட்சிமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது நண்பர்கள், நீங்களும் ஆட்சிமன்றக் குழுவுக்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னார்கள். நீங்களும் போட்டிப் போடுங்கள் என்று வலியுறுத்தினார்கள். நான் தயங்கினேன். இருப்பினும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். நான் இன்றளவும் அந்த ஆட்சிமன்றக் குழுவில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறேன். இன்றைக்குத் தமிழ் நாட்டில் மிக முக்கியமாக அறியப்படக்கூடிய தலைவர்கள், இஸ்லாம் பற்றியும் அதன் தத்துவம் பற்றியும் அறைக்குள்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய சமூகம், மதம், பொருளாதாரம் எல்லாம் அந்தப் பள்ளிவாசலுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. மற்ற சமூகம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யாருக்கும் விளங்காமல் இருந்தது. அவர்கள் எல்லாம் நான் முன்வைக்கக் கூடிய சமூக சீர்திருத்தத்திற்கான செயல்திட்டங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான சமூகக் காரணங்களைக் கூறுங்கள்.
ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு மதியம் இரண்டு மணி இருக்கும். அந்த வழியா ‘ஜனாஸா’ ஒன்று கொண்டு வருகிறார்கள். ‘ஜனாஸா’ என்றால் சாவு. அந்த வழியே கொண்டு வருகிறார்கள். அதை அடக்கம் செய்யக்கூடிய நேரம் வந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அந்த அடக்கத்தில் நாங்கள் எல்லோரும் கலந்து கொள்கிறோம். அந்த நேரத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டது. இறந்துவிட்ட அந்தப் பெரியவர் பேர் தெரியாது. எந்த ஊர் என்றும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளு அங்க ஒரு அனாதையா இறந்து கிடந்தார்.
அதுமாதிரி இறந்து கிடப்பவர் முஸ்லிம் என்று தெரிந்தால், உள்ளூர் போலிசோ, அல்லது மருத்துவமனையோ அங்கிருக்கும் ஜமாத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பார்கள். உடனே ஜமாத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்றால் (இன்றும் எல்லா ஜமாத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்), ஒரு மனிதனுக்கு அடக்கத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்து அதற்கு மரியாதை செலுத்துவார்கள். அதே மாதிரி, அன்றைக்கு முழு மரியாதை அந்த இறந்துபோன பெரியவருக்குச் செய்யப்பட்டது.
ஆனால், அதே நேரத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெரியவர் இறந்து போய்விட்டார். அந்தப் பெரியவரை அடக்கம் செய்வதற்கு எல்லோரும் போகிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று ஒன்று இல்லை. இக்காலத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறது. அப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் திரு. பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் திரு. ராமு, அம்மாவட்ட எஸ்.பி.யும் ஒரு தலித்துதான். இந்த மூன்று பேருக்கும் மாநில அளவில் முழு அதிகாரம் இருக்கிறது. அதிலும் தலைமைச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
அப்படிப்பட்ட நேரத்தில், அந்தப் பெரியவரின் உடலை அடக்கம் செய்யக் கொண்டு போகிறார்கள். அங்கிருந்த சாதி இந்துக்கள் சாலையை இடைமறிக்கிறார்கள். பெரும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் கூடி விட்டார்கள். கலவரம் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுகிறது. இரண்டு நாளாகப் பிணம் கிடக்கிறது. புதைக்க ஆளில்லை. சாதி இந்துக்கள் புதைக்கவே அனுமதிக்கவில்லை. தோழர்களே, என்ன நடந்தது தெரியுமா? எஸ்.பி.யும், கலெக்டரும் தலித் தலைவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, எங்களுக்காக, எங்களுடைய வேலையைக் காப்பாற்றுவதற்காக, தயவு செய்து விட்டுக் கொடுங்கள்; நாங்கள் ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கிறோம். ஆட்சியுமில்லை; எனவே, நாங்கள்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் பிரச்சினை செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். தெருவில் இருந்த பிணத்தை அவருடைய வீட்டு முற்றத்திலேயே அடக்கம் செய்தார்கள் என்பதுதான் கொடுமையான வரலாறு.
இந்தப் பிரச்சினை இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. யாராவது மறுக்க முடியுமா?
ஆனால், ஒருவர் முஸ்லிமாகி விட்டால், அவருக்கு அந்தச் சமூகத்தில் அங்கீகாரம் இருக்கிறது. அவருக்கு முழு மரியாதை கிடைக்கிறது. அவன் ஒருபோதும் அனாதையாகச் சாக அந்தச் சமூகம் அனுமதிக்காது. ஆற்றங்கரையிலோ, குளத்து ஓரத்திலோ, ரோட்டு ஓரத்திலோ அல்ல, அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் அவனை அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் மிக முக்கியமான சமூகக் காரணம்.
இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான வேறு சமூக நிகழ்வுகள் உண்டா?
இன்னொரு செய்தியையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய ஜாதிக் கலவரம் நடந்தது. இதில் தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அங்குள்ள துரைராஜபுரம் என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘எங்க ஊர்ல ஒட்டுமொத்தமாக நாங்க எல்லோரும் முஸ்லிமாக மாறப் போறோம்’ என்று அதில் பிரகடனப்படுத்தி இருந்தார்கள். இந்தச் செய்தி, தமிழ்நாட்டின் பிரபலப் பத்திரிகைகளில் வெளி வந்தது. அப்போது நாங்கள் அம்மக்களுடன் இணைந்து களப்பணிகளைச் செய்து வந்தோம். இந்தச் செய்தி வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம். அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் மதமாற்றம் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு வயசான அம்மா பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்: “அய்யா எங்க காலத்தில நாங்க இந்த அழுக்குத் துணியை கட்டிக்கிட்டு எப்படியோ காலத்தைக் கழிச்சிட்டோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் காலேஜிக்குப் போகுதுங்க. பள்ளிக்கூடத்திற்குப் போகுதுங்க. அதுக எல்லாம் வெள்ள துணி கட்டணும், பேண்ட் போடணும், செருப்புப் போடணும்னு நினைக்கிறாங்க. ஆனால், இந்த ஊர்ல அதப் போடக்கூடாதுண்ணு சொல்றாங்க. இந்தத் துணிமணிகள நாங்க யாருக்கிட்டயும் போய் கேக்கல; வாங்கல. நாங்க உழைக்கிறோம்; உடுத்தணும்னு ஆசைப்படறோம். குழந்தைங்க நல்ல துணி உடுத்தணும்னு ஆசைப்படறாங்க. ஆனால், குழந்தைங்க இப்படி நல்ல துணி போடக் கூடாதுன்னு சொல்றாங்கய்யா!”
“சரி, இதெல்லாம் நீங்கள் முஸ்லிமாக மாறினால் கிடைச்சிருமா?”ன்னு பத்திரிகைகாரங்க அந்த அம்மாவ கேட்கிறாங்க. அப்போ அந்தம்மா சொன்னாங்க, ‘எங்க சொந்த பந்தங்கள் இதுக்கு முன்னால சில ஆண்டுகளுக்கு முன்னால முஸ்லிமுக்குப் போயிருக்காங்க’ என்று தேனீ மாவட்டத்தில் சில ஊர்களைக் குறிப்பிட்டு, அந்தம்மா பதில் சொன்னாங்க. ‘அப்படி மாறினவங்க எல்லாம், முட்டிக்குக் கீழே வேட்டி கட்டுறது, செருப்புப் போடுறது என்றெல்லாம் மாறியிருந்தாங்க’ என்று சொன்னாங்க. நாங்க எதெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் அங்கு கிடைக்கிறது என்று சொல்லிவிட்டு, ஒரு சுவையான செய்தியை அந்தம்மா சொன்னாங்க. ‘எங்க ஊர்ல ஒரு பெண்ணைக் கற்பழிச்சுக் கொன்ற பிறகுதான் அதையொட்டி கலவரம் நடந்திச்சு. முஸ்லிமா மாறினா இதெல்லாம் நடக்காதான்னு நீங்க கேட்கிறீங்க. நீங்க இந்த ஊருக்கு வந்து மொதல்ல என்ன செஞ்சீங்க? நாங்க எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தோம். முதல்ல எங்க போனீங்க?’ ‘நாங்க அந்த டீக்கடையில் டீ குடிக்கப் போனோம்’ என்றார்கள் நிருபர்கள். ‘அந்த டீக்கடை யார் டீக்கடை தெரியுமா?’ ‘அது ஒரு முஸ்லிம் கடை’ என்று சொன்னார்கள். ‘அவரு பேரு உங்களுக்குத் தெரியுமா?’ ‘தெரியலையே’ என்றார்கள் நிருபர்கள். அந்த டீக்கடை பாய்க்குப் பேரு அல்லா பிச்சை. அவர் மூன்று வருஷத்திற்கு முன்னால, எங்க சமூகத்தில, எங்க பக்கத்து வீட்ல இருந்த ஆளு. அவரும் அவருடைய குடும்பமும் இப்ப முஸ்லிமா மாறிட்டாங்க. அவரு கடையில எல்லாரும் டீ குடிப்பாங்க. அவருடைய கூடப் பிறந்த தம்பிதான் இன்னொரு கடை வைச்சிருக்காரு. அவர் பேரு துரைப்பாண்டி. அவர் கடையில் நாங்களும் எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களும் டீ குடிக்கலாம். ஆனால், வேற யாரும் டீ குடிக்க மாட்டாங்க. ஒரே தாய் தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள்தான். ஆனால், எவ்வளவு பெரிய வேறுபாடு பார்த்தீங்களா… இத நீங்க பார்த்து, கேட்டு, தெரிஞ்சி உண்மைன்னு உங்களுக்குப் பட்டா நீங்க உங்க பேப்பர்ல எழுதலாம். எழுதுவீங்களா?’ என்று அந்த அம்மா ரொம்பவும் இயல்பாகக் கேட்டார்கள்.
இஸ்லாத்திற்குச் சென்றவர்களுக்கு சம அங்கீகாரம், சம உரிமை கிடைக்கிறதா?
இரண்டு செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மதம் மாறிட்டார் என்றால், அவர் முஸ்லிம் குடும்பத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். மற்ற மதத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு இஸ்லாத்திற்குள் எந்தப் பாகுபாடும் இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். சரத்த ராவுத்தர் என்பவர் மதம் மாறியவர்தான். உத்தமபாளையத்தில் இருக்கிறார். தலித்தாக இருந்தவர்தான். அவர் இன்றைக்கு அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கிறார். இவையெல்லாம் இந்த அய்ம்பது ஆண்டுகளுக்குள் நடந்த சம்பவங்கள்தான்.
தமிழ்நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் ஒரு 63 ஆண்டுகளுக்கு முன்னால சீலயம்பட்டி கிராமம்தான். இந்தக் கிராமத்திற்கு அய்யா பெரியார் போகிறார். மதமாற்றம் நடந்தது பற்றிக் கேள்விப்பட்டு, அந்த மக்களை எல்லாம் கூட்டிவைத்துப் பெரியார் பேசுகிறார். ரொம்ப உணர்வுப்பூர்வமாகப் பெரியார் பேசுகிறார்: “நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்ததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கிவிட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் இதுவரை எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டுத்தான் பேசுவதற்குப் போவேன். ஆனால், இப்போது என்னுடைய சொந்தச் செலவில் நான் உங்களை வந்து பார்த்துப் பாராட்டிவிட்டுப் போக இங்கு வந்திருக்கிறேன்’ என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். பெரியார், மனந்திறந்து பேசக்கூடிய மிகச் சிறந்த மனிதாபிமானி அல்லவா! சமூக விடுதலை பெற்ற அந்த மக்களைப் பார்ப்பதற்காகத் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரு மாமனிதன் தன்னுடைய சொந்த செலவிலேயே அந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்றால், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், மனிதப் பண்புக்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரைத்தான் சொல்ல முடியும்.
எனக்கும் எனது குடும்பத்திற்கும் என்று சொந்தமாக நிலபுலன் இல்லை. ஆனால், ஒரு கோடீஸ்வரன் எப்படி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ, அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வந்த இடத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமக்கு மதிப்பும் மரியாதையும். இரண்டாவது, மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அப்படி எதிர்பார்த்தாலே நமது லட்சியம் தோற்றுப் போய்விட்டது என்று அர்த்தம். நானாக உருவாக்க வேண்டும், நானாக உழைக்க வேண்டும், நானாக முன்வந்து எல்லாக் காரியத்தையும் செய்ய வேண்டும். அதுக்குள்ள ‘லைசென்ச’ மதமாற்றம் வழங்கியது. ஒரு தலித் டீ கடை போட வேண்டும் என்றால், பலமுறை யோசிப்பார். ஏனெனில், அவருக்குப் பழக்கமும் பயிற்சியும் இல்லை. ஆனால், இஸ்லாம் சுய முயற்சிக்கான தன்னம்பிக்கையை, அந்த தைரியத்தைக் கொடுக்கிறது. இடஒதுக்கீட்டை வைத்துதான் இந்த தலித் சமூகம் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தது. இப்பொழுது, அதுவும் இல்லை என்று ஆனபிறகு, அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நிலமும் நம்ம கையைவிட்டுப் போயிடுச்சி. அப்ப நிலமும் இல்லாமல் நீங்கள் எப்படி வாழ முடியும்?
ஆனால், முஸ்லிம் சமூகத்தைப் பார்த்தீர்கள் என்றால், நடைபாதையில் கடை வைத்திருப்பார்கள். சோப்பு, சீப்பு, கண்ணாடி, பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு ஒரு கடை வைத்திருப்பார். அதற்குப் பெரிய மூலதனம் வேண்டியதில்லை. ஒரு அய்ந்நூறு ரூபாய் இருந்தால் போதும். பெரிய நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் இந்த வியாபாரத்திற்குத் தேவையில்லை. ஆனால், துணிச்சலாக ஒரு கடையை பிளாட்பாரத்தில் போட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்திவிட்டுப் போகிறான். இதில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது, இஸ்லாம் அந்தத் தன்னம்பிக்கையை அவனுக்கு அளிக்கிறது. அது ரொம்பவும் முக்கியமானது என்று சொல்ல வருகிறேன். நாடார் சமூகம்கூட இதைவிட மோசமான ஒரு நிலையில் இருந்த ஒரு சமூகம்தான். ஆனால், இன்றைக்குப் பொருளாதாரத்தில், அந்தஸ்தில், அரசியலில் அந்தச் சமூகம் முன்னேறி இருக்கிறது. திட்டமிட்ட ஒரு சமுதாய முன்னேற்றம்தான் அது.
நாடார் சமூகம் மதம் மாறாமலேயே இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறதே?
அதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது ஒரு அடிமைச் சமுதாயம் அல்ல. பல ‘மேல் சாதி’ ஆதிக்கத்தினால் அவர்கள் பல கொடுமைக்கு ஆளானார்கள். ஆனால், நிலம் அவர்களிடம் இருந்தது. பல அரசுகள் குறிப்பாக காமராசர் ஆட்சி அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் பல நல்ல திட்டங்களை அந்தச் சமூகம் உள்வாங்கி, முன்னேறி இருக்கிறது. ஆனால், தலித் சமூகம் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து தலித்துகள் விடுபட வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இன்னும் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை நான் சொல்வேன். எந்த ஒரு அரசியல் கட்சியும் வளர்வதற்கு கொடி தூக்குவதும், அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யும் போக்கும் இன்னும் தலித்துகளிடம் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகப் புரட்சியை உண்டுபண்ணுவதற்கு நீங்கள் எழுதணும், பேசணும், சிந்திக்கணும், சேரியில் போய் வேலை செய்யணும். இப்படியெல்லாம் செய்வதற்கு ஒரு பெரிய திட்டத்தைச் செய்வதற்கு ஒருத்தர் இருவராவது துணிவுடன் முன்வந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். அரசாங்கம் இந்த மக்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் ஒருபோதும் நம்பாதீர்கள். இந்த மக்கள் இப்படியே காலங்காலமாக இருக்க வேண்டும்; நம்மிடம் கையேந்த வேண்டும் என்று நினைக்கிறவர்கள்தான் ஆட்சியிலே இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று நம்புவது எப்படிச் சரியாகும்?
ராவுத்தர், மரைக்காயர் என்று முஸ்லிம்களிடையேயும் பாகுபாடுகள் நிலவுகின்றதே?
தேனீ மாவட்டத்தில் தேவதானப்பட்டிக்குப் பக்கத்தில் துலுக்கன்பட்டி என்றொரு இடம் இருக்கிறது. இங்கு 700, 800 பேருக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் தலித் குடும்பமும் அங்கு இருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் அப்துல் காதர். அவரும் அவருடைய பிள்ளைகளும் இஸ்லாத்திற்கு வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நாங்கள் எல்லாரும் போயிருந்தோம். அப்போது முஸ்லிம்களில் ஒருவர் சொன்னார், ‘அய்யா பெயர் வைக்கிறதும் வைக்கிறீங்க… அப்துல் காதர், ராவுத்தர் என்று வைங்கோ’ என்றார். அவர் இன்றைக்கும் அப்துல் காதர் ராவுத்தர்தான். அவருடைய பிள்ளைகள் ‘இமாமு’க்குப் படித்து, இப்பொழுது பல இடங்களில் ‘இமாமாக’ இருக்கிறார்கள். திருநெல்வேலியில இருக்கக்கூடிய பெரிய ஜமாத்தில் அவர் பையன் ‘இமாமாக’ இப்பொழுது இருக்கிறார். நீங்கள் யார் கள ஆய்வுக்குச் சென்றாலும், இந்தக் குறிப்பை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, இந்த மனிதர்களை எல்லாம் அவசியம் சந்திக்க வேண்டும்.
ராவுத்தர், மரைக்காயர் என்பது எதைக் குறிக்கிறது?
ராவுத்தர் என்றால் குதிரை வியாபாரம் செய்தவர்கள்; குதிரையை வைத்திருந்தவர்கள் என்று பொருள். மரைக்காயர் என்றால், கடற்கரையோரம் மரக்கலங்களை தொழில் ரீதியாக வைத்து முன்னுக்கு வந்தவர்கள் என்று பொருள். ஆனால், கொடுத்தல் வாங்கலோ, பெண் கொடுத்து, பெண் எடுப்பதிலோ இவர்களுக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே, மதம் மாறிய யார் வேண்டுமானாலும் ராவுத்தர், மரைக்காயர் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், குற்றாலம் பிள்ளை என்றோ, சுப்பிரமணிய அய்யர் என்றோ, அய்யங்கார் என்றோ, நாடார் என்றோ பெயர் வைக்க முடியுமா?
ஒரு இஸ்லாமியர் இறந்து கிடந்தால், அவர் அனாதையாக இருந்தால்கூட, அதை வாரி அணைத்துக் கொள்ளும் சமூகம், அதேவேளை முஸ்லிம் அல்லாத ஒருவர் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாத போக்கு இந்தச் சமூகத்திடம் காணப்படுகிறதே?
அப்படி இருந்தால், அது முற்றிலும் தவறு. இந்தச் சமூகத்தில் இத்தகைய மனோபாவம் இருக்கிறது என்பதையும் நான் மறைக்கவில்லை. இதற்குக் காரணம், அவர்களின் அறிவின்மைதான்! குர்ஆன் இப்படியான மனோபாவம் தவறு என்றுதான் சொல்கிறது. நபிகள் நாயகம் ஒரு யூதரின் பிணம் போவதைப் பார்க்கிறார். அவர் உடனே எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்தினார். சாதாரண மக்கள், ‘நீங்கள் ஏன் இந்தப் பிணத்திற்கு மரியாதை செலுத்துகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘இது அல்லாவின் படைப்பு’ என்று நபிகள் நாயகம் பதில் சொல்கிறார். இதை எல்லாம் தெரிந்த பிறகும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். அறைக்குள்ளேயும், மதரசாவுக்குள்ளேயும், பள்ளிவாசல்களிலும் உட்கார்ந்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தது போக, இப்பொழுது அடுத்த தலைமுறை மக்கள் சமூகத்தோடு, அவர்கள் துன்ப துயரங்களில் பங்கெடுக்கக்கூடிய நிலை வந்திருக்கிறது. இப்பொழுதுதான் எழுத, பேச, களத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலை விரைவாக மாற வேண்டும்.
பெரியார் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றொரு சர்ச்சை கிளப்பப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?
இஸ்லாமியர்கள் பெரியாரை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். இஸ்லாத்தின் பல கருத்துகளைப் பெரியார் பிரச்சாரம் செய்திருக்கிறார். திருமண உறவு, ஒப்பந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கருத்தைப் பெரியார் வலியுறுத்தினார். திராவிட இயக்கம் பலப்படுவதற்கு இஸ்லாமியர்கள் பொருளாதார உதவி முதல் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்; தலித்துகள் அந்த இயக்கத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். பெரியார் மீது குற்றம் சுமத்துவதற்கு எந்தவித நியாயமும் இல்லை. இது, என்னுடைய அழுத்தமான கருத்து. அவர் உள்ளும் புறமும் தெளிவாக இருந்தார். பெரியார் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று கம்யூனிஸ்டுகள்கூட, அவர் மீது ஒரு காலத்தில் குற்றம் சுமத்தினர். ஆனால், இது அவர்களின் அனுமானம்தானே தவிர, அப்படி எந்த நிலப்பிரபுவுக்கும் அவர் ஆதரவாக இருந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பெரியார் கொள்கைகளை கம்யூனிஸ்டுகள்தான் பெருமளவில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதன் அவசியத்தை உணர்ந்து, அவர்கள் இன்று காலங்கடந்தாவது எடுத்திருக்கிறார்கள்.
தலித்-இஸ்லாமியர் ஒற்றுமையை நீங்கள் வலியுறுத்துகின்றீர்களா?
தலித்துகளிடம் நெருங்கி வருவதன் மூலம் மற்றவர்களின் கோபதாபங்களுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று முஸ்லிம்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. தொழில் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரிடம்தான் அதிகளவு தொடர்பு வைத்திருக்கிறார்கள். களத்தில் அவர்கள் தலித்துகளிடம் இணையாததற்கு இது ஒரு காரணம். ஆனால், இந்த உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. தலித்-முஸ்லிம் கூட்டணியை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனியொரு சாதியோ, மதமோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எல்லோரும் இணைந்துதான் அதைக் கைப்பற்ற முடியும். எனவே, இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு சில புதிய செயல்திட்டங்களை வகுக்கவில்லை எனில், நெருக்கடி நேரங்களில் அவர்கள் தவிக்க வேண்டிவரும்.
இஸ்லாத்திற்குச் சென்ற பிறகு தங்களின் தாய்ச் சமூகமான ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஏதேனும் பணியாற்றி இருக்கிறீர்களா?
1989 செப்டம்பர் மாதத்தில், தேனீ மாவட்டக் கிராமங்களில் நடைபெற்ற கலவரத்தில், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டு நேரில் சென்று களப் பணியாற்றினேன். கண்டமனூர் கிராமத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்கள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவல் துறையை வழக்குப் பதிவு செய்ய வைத்தோம். அம்மாப்பட்டி கிராமத்தில், அருந்ததிய சமூகத் தோழர்கள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கெல்லாம் மக்களைச் சந்தித்து தேவையான உதவிகளை செய்திருக்கிறேன். கொடியங்குளம் கலவரத்தில் யாருமே ஊருக்குள் செல்ல முடியாதபோது நான் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி சக்திகளை வீழ்த்த முஸ்லிம்-தலித் ஒற்றுமையை வலியுறுத்தி, எஸ். நடராசன், ஏ.பி. வள்ளிநாயகம் ஆகியோருடன் இணைந்து சமூக விழிப்புணர்வு முகாம்களை நடத்தினோம். சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்காகவும், தலித்துகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.
நேர்காணல் : பாண்டியன், யாக்கன்
(நன்றி: தலித் முரசு, அக்டோபர் & நவம்பர் 2005)
மிகச்சிறந்த மனிதர் கொடிக்கால் சேக்அப்துல்லாஹ் அவர்கள் அவர்களிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் அவ்வளவு அனுபவமும் அறிவும் உடையவர் இந்த சமூகம் அவரை பயன்படுத்த தவறிவிட்டது.