நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உலகத் தொழிலாளர்களே, ஓய்வெடுங்கள்!

Loading

[அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் – ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா அருவப் பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆள்கின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான (digital world) வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஹான். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளரான ஹான், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

ஆங்கிலத்தில் வெளிவரவிருக்கும் ஹானின் ‘அபொருள்’ (Non-Objects) புத்தகத்தில், இருப்புக்கான தேவைகள் உண்டாக்கும் அழுத்தங்களால் துயருறும் நம் சமூகத்தை, சிறந்த அறிஞர்களின் கோட்பாடுகளையும் கலாச்சாரக் கூறுகளையும் கொண்டு ஆராய்கிறார். மக்களின் சுயமோகத்தைச் சாடும் ஹான், நவமுதலாளித்துவ அமைப்பிடம் சரணடையும் உளவியலையும் பொழுதுபோக்குகளின் புதிய வடிவங்களையும் கவனப்படுத்துகிறார்.

சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணப்படும் இச்சுயமோகம், தன்னிலையை முதன்மைப்படுத்தி சக மனிதர்களை மறையச் செய்கிறது. தனிமனிதர்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம் என்ற தோற்றத்தையும் தருகிறது என்கிறார் ஹான். அன்றாட வாழ்க்கையின் நெருங்கிய உறவுகளை மீட்டெடுக்கப் போராடும் ஹான், தோட்டம் அமைப்பது, தனக்கான பொருட்களை தானே செய்துகொள்வது, அமைதியாக ஓய்வெடுப்பது போன்ற செயற்பாடுகளால் கவனிக்கப்படுகிறார். சடங்குகள் மறைந்துபோனதாலேயே சமூகம் தன்னைத் தொலைத்திருக்கிறது. நோயுற்ற கொடூரமான சமூகத்தில் தனிநபராக நம்மை நாமே காணாமலாக்கியிருக்கிறோம் என்று கவலைப்படுகிறார் ஹான். அவரிடம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து வழங்குகிறோம்.]

அதீத உற்பத்தி – நுகர்வு ஆகியவற்றால் துயருறும் அதேவேளையில், பொருளுலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இது எப்படி சாத்தியமானது?

தேவைக்கதிகமாக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பொருட்கள் இங்கே நிறைந்துள்ளன. இருப்பினும் அவை செலவழிப்பதற்கானவை. ஆதலால், அவற்றோடு நமக்கு எந்த உறவுமில்லை. இன்றைய காலத்தில் நாம் பொருட்களை கண்டுகொள்வதில்லை. மாறாக தகவல்களையும் தரவுகளையுமே கொண்டாடுகிறோம். தகவல்பித்தர்களாக இருக்கிறோம். தனிப்பட்ட வாழ்க்கைபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் நமக்கிருக்கும் ஆர்வத்தின் விளைவாக Datasexuals என்ற கருத்தாக்கமே தோன்றியிருக்கிறது.

நுகர்வுக் கலாச்சாரத்தால் உறவுகளை இழக்கும் இவ்வுலகில், நாம் நேசிக்கும் பொருட்களும் சடங்குகளும் முக்கியமானவை என்று சொல்லியிருக்கிறீர்களே?

தகவல்களால் சிதைந்துபோன அமைதியை மீட்டெடுக்க வல்லது நாம் நேசிக்கும் பொருட்கள். நம் கையில் உள்ள திறன்பேசி (smart phone) தகவல்களை உருவாக்கி, அதைச் செயலாக்குகிறது. உளத்தூண்டுதல்களையும் பரபரப்பையும் உருவாக்குகிறது. சடங்குகளோ இவ்வாழ்விற்கு சில நிலைத்ததன்மைகளை வழங்குகின்றன. பெருந்தொற்றுக் காலம் இந்த தற்காலிக அமைப்பைச் சிதைத்துவிட்டது. காலம் தன் கட்டமைப்பை இழக்கும்போது, மன அழுத்தம் கூடுகிறது. உதாரணமாக, பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் உருவானது. அப்போது எட்டு மணி நேர வேலை என்ற கட்டமைப்பு உடைந்து, பணி நேரம் என்ற வரையறை மாறுகிறது. இதனால் மன அழுத்தம் கூடுகிறது.

எண்ம உலகில் (digital world) வேலையைவிட விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக மாறுவோம் என்று புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பணி நிரந்தரமற்ற சூழலில் இந்தச் செயல்முறை சாத்தியமா?

அதில் வேலைவாய்ப்பின்மைபற்றி பேசியிருக்கிறேன். எண்மமயமாக்கல் பெரும் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும். மனிதர்களின் எதிர்காலம் அடிப்படை வருமானத்தையும் கணினி விளையாட்டுகளையும் கொண்ட அமைப்பாக மாறுமா? அப்படி நடந்தால் அது மிக மோசமானது. ‘Bread and Circuses’ என்ற உவமை மூலமாக அரசியல் செயற்பாடற்ற தனது சமூகத்தை விமர்சித்திருப்பார் ஒரு ரோமானியக் கவிஞர். உணவையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குவதன்மூலம் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள். சமூகம் விளையாட்டில் மட்டுமே ஈடுபடும்போது அதிகாரம் நுழைகிறது. அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ஸ்கிவிட் கேம்’ (Squid Game) தொடர் இக்கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

அத்தொடரின் கதாபாத்திரங்கள் பெரும் கடனில் இருப்பார்கள். பெருந்தொகையை பரிசாகக் கொண்ட மரண விளையாட்டை ஆடுவதன் வழியாக கடனை அடைக்க விழைவார்கள். Squid Game தொடர், முதலாளித்துவத்தின் மையக்கருத்தை அதன் தீவிர வடிவத்தில் பிரதிபலித்துள்ளது. முதலாளித்துவம் உங்களைப் பலியிடாது; மாறாக கடனில் (நன்றிக்கடன்) தள்ளும் என்பார் வால்டர் பெஞ்சமின். நவீன யுகத்தின் தொடக்க காலத்தில் வேலை என்பது விளையாட்டுபோல இருக்க வேண்டும் என மக்கள் கனவு கண்டனர். யதார்த்தத்தில், மக்களின் இந்த ஆர்வத்தை நவமுதலாளித்துவம் இரக்கமில்லாமல் சுரண்டிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொள்ளுங்கள், பயனர்களை அடிமைப்படுத்தவென்றே விளையாட்டுத்தனமான கூறுகளை அது கொண்டுள்ளது.

திறன்பேசிகள் சில சுதந்திரங்களை வழங்கியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாம் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறோம் அல்லவா?

திறன்பேசி, ஒன்று வேலைக்கருவியாக இருக்கிறது, அல்லது வாக்குமூலம் தரும் கருவியாக இருக்கிறது. ஒவ்வொரு கருவியும், அதிகாரத்தின் ஒவ்வொரு தொழில்நுட்பமும் அடிபணிதலுக்குரிய குறியீடுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இப்படித்தான் அதிகாரம் வலுப்பெறுகிறது. நவீன அதிகாரத்தின் முதன்மைச் சாதனமாக திறன்பேசி இருக்கிறது. ஜெபமாலைபோல, உடலின் இன்னொரு உறுப்புபோல அது எப்போதும் நம் கைகளில் இருக்கிறது. வலைத்தளங்களில் நாம் இடும் விருப்பக்குறி (‘like’) அதிகாரத்திற்கு நாம் சொல்லும் ‘வாழ்க’ ஆகிறது. வலைத்தளங்களில் தொடர்ந்து நம் வாக்குமூலங்களைச் (தனிப்பட்ட தகவல்களை) சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நம்மை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். பிறர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவற்றைச் செய்கிறோம், வேறு நோக்கமில்லை.

பொருட்கள் மனிதர்களுக்கெதிராகப் புரட்சி செய்யும் என்ற அச்சம் நிலவுகிறதே.

நிச்சயமாக வாய்ப்பில்லை. ஒன்றடோடொன்று இணைக்கப்பட்ட பொருட்கள் கொண்ட திறன் வீடு (smart home) என்பது நவீனச் சிறை. திறன் படுக்கை என்பது தூங்கும்போதும் நம்மைக் கண்காணிக்கும் கருவி. இயல்பான ஒன்று என நாம் நினைக்கும் அளவுக்கு இந்தக் கண்காணிப்பு நம்மீது திணிக்கப்பட்டிருக்கும். நவீனப் பொருட்கள் யாவும் திறமையான உளவாளியாக நம்மைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கின்றன, செய்யும்.

வேலை என்பது விளையாட்டுபோல மாறியிருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். சமூக வலைத்தளங்கள் நம்மைச் சுதந்திரமாக உணர வைக்கின்றன. மாறாக, முதலாளித்துவம் நம்மைச் சுரண்டுகிறது. ஒருவேளை, அதிகாரத்திற்குள்ளாவதை நாம் விரும்பும் வகையில் இந்த அமைப்பு மாற்றிவிட்டதா?

அடக்குமுறையான ஆட்சிதான் எதிர்ப்புணர்வைத் தூண்டும். நவதாராளவாதமோ சுதந்திரத்தை ஒடுக்காது, எதிர்ப்பு தோன்றாத வகையில் சுரண்டும். இது அடக்குமுறை அல்ல; மயக்கும் தந்திரம். சுதந்திரம் என்று தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ளும் (நம்பவைக்கும்) தருணத்தில் அதிகாரம் முழுமையடைகிறது.

பாதுகாப்பற்றதன்மையும் சமத்துவமின்மையும் நிறைந்திருக்கும் சூழலில், உண்மையில் மேற்குலகம் சொர்க்க பூமியாக, நன்னம்பிக்கை நிலமாகத் தோற்றமளிக்கிறதா? ஏன் அது அழிவுநிலமாக தோற்றமளிப்பதில்லை?

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ நாவல் சமீபமாக நல்ல விற்பனையைக் கண்டுள்ளது. அந்நாவலில் டிஜிட்டல் உலகத்தின் சௌகரியத்தில் ஏதோ தீமை இருப்பதாக மக்கள் உணர்கின்றனர். ஆனால், நம் சமூகம் ஆல்டஸ் ஹக்ஸ்லீயின் ‘Brave New World’ போலவே இயங்குகிறது. ‘1984’ நாவலில் மக்கள் அச்சுறுத்தலால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பார்கள். ‘Brave New World’ கதையிலோ தாங்கள் நிர்வகிக்கப்படுகிறோம் என்பதில் மக்கள் மகிழ்ந்திருப்பர். அப்படியாக அரசு மக்களை மயக்கி அவர்களைக் கட்டுப்படுத்தும். இதுதான் நமது எதிர்கால நிலையும்கூட.

செயற்கை நுண்ணறிவோ பெருந்தரவுகளோ அறிவின் வளர்ச்சி அல்ல, அவை அடிப்படைக் கூறுகள் என்று தெரிவித்திருக்கிறீர்களே?

பெருந்தரவு என்பது அறிவின் முதல்நிலை வடிவம் மட்டுமே. இது நடந்தால் இது நடக்கும் என்ற இரு செயல்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் அடிப்படைக் கூறு மட்டுமே. செயற்கை நுண்ணறிவால் சிந்திக்க முடியாது. அதனால், அதுகுறித்து வியப்படைய ஒன்றுமில்லை.

“அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருக்க முடியாத தன்மைதான் மனித குலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்” என்கிறார் பிரெஞ்சு எழுத்தாளரும் கணித அறிஞருமான பிளெய்ஸ் பாஸ்கல். ஓய்வு நேரத்திலும் உற்பத்தி செய்யக்கூடிய காலகட்டத்தில் வாழ்கிறோம். ஓய்வு நேரத்தை மீட்டெடுப்பதை நம் அரசியல் செயற்பாடாகக் கருத வேண்டுமா?

மனிதனின் சமகால இருப்பு என்பது முழுக்கமுழுக்க உழைப்பால் நிறைந்திருக்கிறது. அதனால், அது சுரண்டப்படுகிறது. முதலாளித்துவ ஆதிக்க அமைப்பில் செயலற்றதன்மை மீண்டும் வெளிப்படுகிறது. அது உழைப்பிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் ஓய்வு நேரம் என கருதப்படுகிறது. செயலற்றிருத்தல்குறித்த அரசியல்ரீதியான கொள்கைகள் நமக்குத் தேவைப்படுகின்றன. இது உற்பத்தியிலிருந்து நம்மை மீட்டு, உண்மையான ஓய்வு நேரத்தைச் சாத்தியப்படுத்தும்.

பிறரைக் காட்டிலும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்று பெரும்பாலான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தொடர்ந்து மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்த ஒப்பீடு அனைவரையும் ஓரே மாதிரியானவராக மாற்றுகிறது. இப்படிச் சொல்லாம்: தனித்துவமாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், அனைவரும் ஒரே மாதிரியானதாக இருக்கும் நரகத்தில் தள்ளுகிறது.

நாம் அமைதியாகி, பிறரைக் கவனிக்கும்தன்மை தற்போது தேவைப்படுகிறதா?

தகவல்கள் அமைதியாக வேண்டும். அதுதான் இப்போதைய தேவை. இல்லையென்றால் மூளை வெடித்துவிடும். தகவல்கள் மூலமாகவே உலகை அவதானிக்கிறோம். அதனாலேயே வாழ்தல் அனுபவத்தை தொலைத்துவிடுகிறோம். உலகுடனான தொடர்பை தொடர்ந்து துண்டித்துக்கொண்டிருக்கிறோம். தகவல்களைத் தாண்டியும் உலகம் இருக்கிறது; திரை (கணினி, திறன்பேசி) என்பது உலகின் குறைந்தபட்ச பிரதிபலிப்பு மட்டுமே. நாம் நம்மையே சுற்றிக்கொண்டிருக்கிறோம். திறன்பேசிகள் இதைத்தான் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. உலகுடனான உறவு குறைவது மன அழுத்தத்தின் முதன்மை அறிகுறி ஆகும்.

மனித இனம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளுள் மன அழுத்தமும் ஒன்று. இது எப்படி இயங்குகிறது?

மன அழுத்தத்தில் இருக்கும்போது பிறருடனான உறவை நாம் இழக்கிறோம். எண்மமயமாக்கலும் திறன்பேசியும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. சில பல் மருத்துவர்கள் சொல்கிறார்கள், தங்கள் பெற்றோர்கள் சிகிச்சைக்கு வரும்போது வலி தெரியாமலிருக்கக் கைப்பேசிக்குள் மூழ்கிவிடுகின்றனர் என்று. ஏன் அப்படிச் செய்கிறார்கள்? ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வை திறன்பேசிகள் ஏற்படுத்துகின்றன, அதனாலேயே இது போன்ற சிகிச்சைகளின்போது கைப்பேசியை வைத்துக்கொள்கிறோம். சிறுவயதில் என் தாயின் கையைப் பிடித்துக்கொள்வேன். இன்று தாய் தன் கையை குழந்தைக்குத் தருவதில்லை, மாறாக திறன்பேசிகள் அவ்விடத்தைப் பிடித்துக்கொண்டன. இதுதான் நோய்மையை உருவாக்குகிறது. நமக்கான ஆறுதலையும் ஆதரவையும் பிறரிடமிருந்து பெற வேண்டும். அப்படியல்லாமல் நமக்கு நாமே ஆறுதல் என்பது மன அழுத்தத்தைக் கூட்டுகிறது.

முதலாளித்துவத்தின் அழிவைக் காட்டிலும் உலகின் அழிவைப் பார்ப்பது எளிது என்பார் ஜெர்மன் தத்துவவியலாளர் ஃப்ரெடரிக் ஜேம்ஸன். பின்முதலாளித்துவத்தின் சரிந்துகொண்டிருக்கும் ஏதேனும் ஒரு வடிவத்தைச் சொல்ல முடியுமா?

மனிதனின் உள்ளார்ந்த சிந்தனைகளுக்கு முதலாளித்துவம் பதிலளிக்கிறது. ஆனால், மனிதன் உள்ளுணர்வுசார்ந்து மட்டுமே இயங்குவதில்லை. நாம் முதலாளித்துவத்தைச் சீர்படுத்தி மனிதத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். அது சாத்தியமே. சமூக சந்தைப் பொருளாதாரம் அதற்கான எடுத்துக்காட்டு. ஆனால், இப்போதைய பொருளாதாரம் நிலைத்ததன்மையை (sustainability) நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மனித எண்ணங்களின் பல்வேறு வடிவங்களை ஆராய்ந்த ஜெர்மன் தத்துவவியலாளர் மார்டின் ஹெய்ட்கர் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அவரது சிந்தனைகள் எளிய மனிதர்களுக்கானவை அல்ல. இருப்பினும், அவற்றை அனைவரும் உள்வாங்கக்கூடிய அளவில் நீங்கள் விளக்கியிருப்பீர்கள். தத்துவங்கள் பெரும்பான்மை மக்களையும் உள்ளடக்கியவையாக இருக்க வேண்டுமா?

பிரெஞ்சுத் தத்துவ அறிஞர் மைக்கேல் ஃபோகால்ட் தத்துவங்களை தீவிர இதழியலாக விவரிப்பார், தன்னையும் பத்திரிகையாளனாகக் கருதுவார். தத்துவ அறிஞர்கள் சமகாலத்தோடு உரையாட வேண்டும். இவ்விஷயத்தில் நான் ஃபோகால்ட்டை பின்பற்றுகிறேன். சமகாலத்தை என்னுடைய பார்வையில் விளக்க முனைகிறேன். இப்பார்வைகளே நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தரும்.

தமிழில் : சிவராஜ் பாரதி

நன்றி : (அகழ் இணைய இதழ்)

ஆங்கிலத்தில் : english.elpais.com

Related posts

Leave a Comment