உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஃகவாரிஜ் சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

Loading

[இமாம் அல்ஆஸீயின் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள்பற்றிய தொடர் உரையின் இப்பகுதி, இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதலாவது கடுபோக்காளர்களாக அறியப்படுகிற ஃகவாரிஜ்களின் சிந்தனைப் போக்கு, அதன் சிக்கல், அவர்களுக்குள்ளே காணப்பட்ட வேறுபட்ட குழுக்கள்குறித்த முழுமையான சித்திரத்தை வழங்குவதுடன் சம காலத்தில் அப்போக்குகளின் நீட்சியையும் சுட்டிக் காட்டுகிறது. நடுநிலையுடன் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இது பயனளிக்கக் கூடும்.]

முந்திய அத்தியாயத்தில் தஷய்யு எனப்படும் ஷீஆ சிந்தனைப் பள்ளி துவங்கிய காலகட்டத்தை நம்மால் இயன்றவரை அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். இந்த அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு முன் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாம் பல்வேறு நம்பிக்கைகளை மனதில் ஏற்றிக்கொண்டு அவற்றை கேள்விக்கு உள்ளாக்காமலேயே வளர்ந்து வந்துள்ளோம். ஆனால், இங்கு என்னுடைய உரைகளைக் கேட்க வருமுன், நீங்கள் உங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் கேள்விப்படாத பல விஷயங்களைக் கேட்பதற்குத் தயாராக வர வேண்டும். அதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது நம் அனைவரின் பணியையும் எளிதாக்க உதவும்.

இந்த அத்தியாயத்தில் வரலாற்று ஆசிரியர்களாலும் சட்டவியலாளர்களாலும் ‘ஃகவாரிஜ்’ என்று அழைக்கப்படும் இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய வரலாற்றைப் பார்க்க இருக்கிறோம். நம் தொடர் உரையின் இப்பகுதி ஒருவிதத்தில் எளிதானது. ஏனெனில், தங்களை ‘ஃகாரிஜீ’ என்று கூறிக்கொள்ளும் நபர்கள் யாரும் நம்மிடையே இல்லை.

தன்னை ஒரு ‘ஷீஆ’ அல்லது ‘சுன்னீ’ எனக் கூறிக்கொண்டு காலங்காலமாக அச்சொற்கள் ஏற்றுள்ள பல்வேறு அர்த்தங்களையும், இன்றுவரை அவை பிரதிபலித்துக்கொண்டிருக்கும் அர்த்தங்களையும் ஏற்றுநிற்கும் ஒருவரைப் போலன்றி, யாரும் சாராத ஒரு இயக்கத்தைப் பற்றி பேசுவது எளிதானது. முஸ்லிம்களாகிய நம் பொது வரலாற்றின் ஒரு அங்கமாக தோன்றிய இவர்கள் ‘ஷீஆ’வும் அல்ல ‘சுன்னீ’யும் அல்ல. எனவே, முந்திய அத்தியாயத்தைவிடவும் பின்வரும் அத்தியாயங்களைவிடவும் இது எளிதானது என்று கருதுகிறேன்.

ஃகவாரிஜ் சிந்தனையின் தோற்றம்

ஃகவாரிஜ் என்றால் ‘எதிர்ப்பவர்’ என்று பொருள். இதற்கு ‘கிளர்ச்சியாளர்’ அல்லது ‘போராளி’ என்றும் பொருள் கொள்ளலாம். எனவே, இம்மூன்று சொற்களையும் ஒன்றிணைத்து வரும் அர்த்தத்தை ஃகவாரிஜ் எனும் சொல்லின் பொருளாகக் கொள்ளலாம். இவர்கள் எப்படித் தோன்றினார்கள்? இவ்வகை முஸ்லிம்களை நமக்கு அளித்த வரலாற்று நிகழ்வுகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம். அந்நிகழ்வுகளின் நுணுக்கமான விவரங்களை நாம் காண வேண்டியுள்ளது.

முஸ்லிம்களில் இரு பிரிவினர் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரில் ஈடுபட்ட ஸிஃப்ஃபீன் போரை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இஸ்லாமிய வரலாற்று நூல்களைப் படித்தால் அவை கூறுவது இதுதான்: ‘அப்போரில் ஈடுபட்ட ஒரு அணி இமாம் அலீயுடையது; மற்றொன்று முஆவியாவுடையது.’ இது ஓரளவிற்கு உண்மையென்றாலும் சிறிது சிந்தித்தால் இதை இரு ஆளுமைகளுக்கிடையிலான போர் என்ற வகையில் சுருக்கிவிட முடியாது என்பது தெளிவாகும். அதையும் தாண்டி, இது சமூகத்தின் இரு அரசியல், பொருளாதார போக்குகளுக்கிடையிலான மோதலாக இருந்தது.

சமூகத்தில் பலவகை மக்கள் உள்ளனர். சிலர் தங்களை தேசியவாதிகள் என்றும், உயர் அந்தஸ்து உடையவர்கள் என்றும், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதுவர்; மேலும் சிலர் தங்களை இவற்றுக்கு அப்பாற்பட்டவராகக் கருதுவர். இத்தகைய இரு அணியினர்தான் ஸிஃப்ஃபீனில் போரில் ஈடுபட்டனர். ஒரு அணிக்கு முஆவியா தலைமை தாங்கினார்; மற்றொன்றிற்கு இமாம் அலீ தலைமை தாங்கினார். எனினும், இவ்வரலாற்றை மீளாய்வுசெய்வதில் நாம் செய்யும் தவறு என்னவெனில், இதை இரு ஆளுமைகளுக்கிடையிலான மோதல் என்ற வகையில் சுருக்கி விடுகிறோம். இது உண்மைதான் என்றாலும் அதையும் தாண்டி, அது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல் என்றோ, இரு பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையிலான மோதல் என்றோ நம் பார்வையை விசாலமாக்கத் தவறிவிட்டோம். இவ்விஷயத்தில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஸிஃப்ஃபீனில் இவ்விரு ஆளுமைகளும் தம் படையினரோடு சேர்ந்து போர் செய்துகொண்டிருந்தனர். போர்ச் சூழல் முஆவியா அணிக்கு பாதகமாகத் திரும்பிக்கொண்டிருந்தது. அவர்கள் தோல்வியடையப்போவதை உணர்ந்தனர். அவர்களின் வீழ்ச்சி மிக அருகில் இருந்தது. அப்போது அவர்களின் இரண்டாம்நிலைத் தலைவரான அம்ரூ இப்னு ஆஸ் எனும் நபரின் அறிவுறுத்தலின்படி ஒரு தந்திர உத்தியைக் கையாண்டனர். அவர்கள் இவ்வாறு கூறினர், “நாம் ‘முஸ்ஹஃப்’களை (காகிதத்தில் எழுதப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளை) உயர்த்திப் பிடித்துக்கொண்டு நம்மிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு இதன்மூலம் மத்தியஸ்தம் செய்ய அழைப்பு விடுப்போம்”.

சிலர் இவ்வாறு கூறலாம், “பாருங்கள்! எப்படி இவர் அம்ரூ இப்னு ஆஸை ‘நபர்’ எனக் குறிப்பிடுகிறார்!” என்று. எனினும் நிகழ்வுகளின் போக்கில், இச்சம்பவம் நிகழ்ந்த கணப்பொழுதில், இவரை இவ்வாறு குறிப்பிடுவதே பொருத்தமானது எனக் கருதுகிறேன். நாம் அவர் வாழ்வில் நிகழ்ந்த பிற நிகழ்வுகளையோ அல்லது அவரது முந்தைய – பிந்தைய செயல்களையோ கருத்தில் கொள்ளவில்லை. இங்கு நாம் பல நுணுக்கமான விவரங்களைத் தவிர்த்துவிட்டு ஃகவாரிஜ்கள் தோன்றிய நிகழ்வுகளை மட்டுமே கூறுகிறோம். அதுவரை ஃகவாரிஜ்கள் என்ற ஒரு குழுவினர் உருவாகியிருக்கவில்லை. இந்தத் தந்திர உத்தியை அவர்கள் பிரயோகித்தபின் நிகழ்ந்த சம்பவங்கள் நம் கவனத்தைக் கோருகின்றன. இங்கிருந்துதான் இமாம் அலீயின் படையில் மிகப் பெரிய பிளவு ஏற்படவிருந்தது.

இமாம் அலீ போர் அடிப்படையிலேயே இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட விரும்பினார். எனினும், அவரது படையில் இருந்தவர்கள் வேறு விதமாக எண்ணினர். உயர்த்தப்பட்ட குர்ஆன் பிரதிகளை பார்த்தவுடன் அவர்கள் “நம் பிரச்சினைகளுக்கு குர்ஆனின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும்; திருக்குர்ஆனுக்கு முக்கியத்துவம் அளித்து அதனைக் கொண்டு மத்தியஸ்தம் செய்வதுதான் பொருத்தமானது” என்றனர். இமாம் அலீயின் அணியில் இது பிளவை ஏற்படுத்தியது. போர்ச் சூழலில் இப்பிளவின் தன்மையை உணர இமாம் அலீக்கு அதிக அவகாசம் இருக்கவில்லை. எனினும், அவரது படையிலிருந்த பெரும்பாலானவர்கள் மத்தியஸ்தத்திற்கு உடன்பட்டதை அவர் சரியாகவே புரிந்துகொண்டார். அதனால் வேறு வழியின்றி இமாம் அலீயும் அதற்கு இசைவு தெரிவித்தார்.

இங்கு நாம் ஒரு கணம் நின்று, ஏன் இமாம் அலீ பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு இசைவு தெரிவித்தார் என்று சிந்திக்க வேண்டும். நான் வாசித்த எந்த வரலாற்றாசிரியரும் இக்கேள்விக்கு ஏற்புடையதான ஒரு பதிலைத் தரவில்லை. இமாம் அலீ எதிரிகளுக்கு முடிவுகட்ட விரும்பினார். ஆனால், அவரது படையிலிருந்த பெரும்பாலோர் அதை விரும்பவில்லை. இதை உணர்ந்த அவர், அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டார். இது போர்ச் சூழலில் அவர்மீது திணிக்கப்பட்ட கருத்து. இதுபற்றி அதிகம் சிந்திக்காத ஒருவர் இவ்வாறு கேட்கக் கூடும்: “பெரும்பான்மை மக்களின் கருத்து இமாமைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லையே?! அவர்களின் கருத்துக்கு ஏன் இமாம் இசைவு தெரிவிக்க வேண்டும்?!” என்று. இத்தகையவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: “பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு ஏன் இமாம் அலீ சம்மதம் தெரிவித்தார்?”

எனினும் வேறுசில மக்கள், “இல்லை, இது சரியல்ல. எதிரிகள் தோற்கடிக்கப்படும்வரை நாம் போரைத் தொடர வேண்டும்” என்றனர். ஆனால் இக்கருத்து பெரும்பான்மைக் கருத்தோடு ஒத்துப்போகவில்லை. இதை உணர்ந்த இமாமும் மத்தியஸ்தம் செய்யும் முடிவை ஏற்றுக்கொண்டார். நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட இது அவர்மீது திணிக்கப்பட்ட முடிவு; அவரது சிறந்த அறிவுக்கு ஏற்பற்ற ஒரு முடிவு; விருப்பமின்றி எடுக்க நிர்பந்திக்கப்பட்ட முடிவு. நடைபெற்றுக்கொண்டிருந்த போரின் திசைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு. பிற்காலத்தில் ஃகவாரிஜ்களாகத் தோன்றி இஸ்லாமிய வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இம்மக்கள் அதிக அளவில் இல்லையென்றாலும் அவர்களின் தோற்றத்தைத் தொடக்கிவைத்த அரசியல் அல்லது கோட்பாட்டுக் கணம் இதுதான்.

வளர்ச்சி

இத்தகைய மக்கள் தங்கள் சிந்தனையை வளர்த்தெடுப்பதற்கு, பின்னர் நடந்த ஒரு சம்பவமும் காரணமாயிற்று. இப்போதுவரை இவர்கள் இமாம் அலீயின் அணியிலேயே உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு அவர்கள் பாராமுகமாக இல்லை. அதாவது, அவர்கள் இமாம் அலீயின் இராணுவ, அரசியல் முயற்சிகளில் ஒன்றியிருந்தனர். பின்னர், மத்தியஸ்தம் செய்வதற்கு முன்னிலை வகிப்பவரின் (முஹக்கிம்) தெரிவுபற்றிய கேள்வி எழுந்தது. மத்தியஸ்த (தஹ்கீம்) முடிவுக்கு உடன்பட்டபின், இவ்வணியை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது, எதிர் அணியை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. இமாம் அலீயின் அணியைப் பொறுத்தவரையில், அவர் தன் சார்பாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸை நியமிக்க விரும்பினார். ஆனால், அதிக எண்ணிக்கையில் இருந்த மற்றொரு கூட்டத்தினர், “இல்லை, நாங்கள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டோம். நம் சார்பாக அபூ மூசா அல்அஷ்அரீ தான் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும்” என்றனர். மீண்டும் இமாம் அலீ பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு சம்மதம் தெரிவிக்க நிர்பந்திக்கப்பட்டார்.

இங்குதான் இவ்வகை மக்களின் சிந்தனையில் எதிர்மறையான எண்ண ஓட்டங்கள் தோன்றின. நிகழ்வுகள் தவறான திசையில் செல்வதாக அவர்கள் கருதினர். உறுதியான கோட்பாடாக அல்லாமல், வெறும் கருத்துப் படிவங்களாக அப்போது அவை உருப்பெற்றன. ஒருபுறம் இமாம் அலீ — தனக்கு உடன்பாடில்லாத — மத்தியஸ்தம் செய்யும் முடிவை ஏற்றுக்கொள்வதையும், மறுபுறம் தனக்கு உடன்பாடற்ற பிரதிநிதியை நியமனம் செய்வதையும் அவர்கள் அவதானித்தனர். இங்கு நாம் மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கிறோம்: தன் பக்கம் இருக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளிக்காத ஒரு இமாம், தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பார். இவ்விரு விஷயங்களிலும், “நான் இவர்களின் கருத்தை நிராகரிக்கிறேன்” என்று இமாம் அலீ கூறியிருக்க முடியும். ஆனால் நிகழ்வுகள் அவ்வாறு நகரவில்லை. ஃகவாரிஜ்களின் தோற்றத்தை, இத்தகைய உள்ளார்ந்த இயங்கியல்களோடு நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

தங்கள் நிலையை இறுக்கமாக்கிக்கொண்டு பின்னாள்களில் ஃகவாரிஜ்களாக உருவாக இருக்கும் இத்தகைய மக்களுள் பெரும்பாலானவர்கள், மத்தியஸ்தத்தை விரும்பியவர்களோடு இருந்தனர். எனவே, இமாம் அலீக்கும் முஆவியாவுக்கும் இடையில் நடந்த தீர்மானகரமான போரின்போது, அவர்கள் இருபக்கமும் இருந்ததைக் காணலாம். அதாவது, சிலர் போர் தொடர வேண்டும் என விரும்பினர்; சிலர் போரை நிறுத்த விரும்பினர். இவர்கள்தான் பின்னாள்களில் “இது பெரும் குற்றமும் தவறும் ஆகும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் இது” என்றனர். எனினும், ஆரம்பத்தில் அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. பின்னர் இவர்கள் இமாம் அலீயிடம் வந்து, “நாங்கள் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறோம். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. மத்தியஸ்தத்திற்கு நாங்கள் உடன்பட்டிருக்கக் கூடாது. அதற்கு உடன்பட்டதால் நாங்கள் நிராகரிப்பவர்களாகி (காஃபிர்களாகி) விட்டோம்” என்றனர். இப்போதெல்லாம் சில முஸ்லிம்களால் பிற முஸ்லிம்களுக்கு எதிராக இச்சொல் சரளமாகப் பயன்படுத்தப்படுவதை நினைத்துப் பாருங்கள்.

வரலாற்றில் முதன்முறையாக ‘காஃபிர்’ என்னும் சொல் அலட்சியமாகப் பயன்படுத்தப்படுவது இந்தச் சம்பவத்தின்போதுதான் என்பதை கவனத்தில் கொள்ளவும். இங்குதான் நிராகரிப்பின் (குஃப்ர்) அடிப்படையில் ஒருவரை குற்றம் சாட்டுவதும் அவமதிப்பதும் இத்தகைய மக்கள் மத்தியில் நடைமுறைக்கு வருகிறது. அவர்கள் மேலும் தொடர்ந்தனர்: “நாங்கள் தவறிழைத்துவிட்டோம். அந்தக் கணத்தில் நிராகரிப்பவர்களாகிவிட்டோம். எங்கள் தவறுகளுக்கு வருந்தி உளமாற அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (தவ்பா) கோரிவிட்டோம். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்”. அதாவது இவர்கள் இமாம் அலீயை நிராகரிப்பவர் எனக் குற்றம் சுமத்தி, எப்படி தாங்கள் பாவமன்னிப்பு கோரினார்களோ அதேபோல் அவரையும் மன்னிப்பு கோர நிர்பந்தித்தனர்.

ஃகவாரிஜ்களின் கொள்கை

நடந்தவற்றையெல்லாம் பார்த்தபின் ஸிஃப்ஃபீனின் சவால்மிக்க, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தோன்றிய இம்மக்களின் முழக்கம் ‘லா ஹுக்ம இல்லா லில்லாஹ்’ என்பதாக இருந்தது. ‘அல்லாஹ்வுடையதன்றி வேறு எந்த ஆட்சியும் இல்லை’ என்று பொருள்படும் இவ்வாக்கியத்தை அவர்கள் திரும்பத்திரும்ப முழங்கிக்கொண்டே இருந்தனர். அதாவது ‘யாரும் தன்னை ஆட்சியாளர் அல்லது சட்டத்தை நிர்வகிப்பவர் என்று கோர முடியாது. மனிதனன்றி அல்லாஹ்தான் அதைச் செய்ய முடியும். மனிதர்களாகிய நமக்கு ஆட்சியில் பங்கு அறவே இல்லை’ என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது. இது அபத்தமான கருத்து என்பதில் சந்தேகம் இல்லை.

சட்டம் என்ற ஒன்று இருந்தால் அதை நிர்வகிப்பவர்களும் இருக்கத்தான் வேண்டும். சட்டம் தனித்து நின்று தாமாக செயல்படப் போவதில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் இருக்க வேண்டும். அக்கால அரசியல் சூழலில் அவர்களின் நிலையை இந்த முழக்கம் தெளிவுபடுத்தியது. அதாவது, “அலீ இப்னு அபீ தாலிபு, முஆவியா இப்னு அபீ சுஃப்யான், அம்ரூ இப்னுல் ஆஸ் அல்லது அபூ மூசா அல்அஷ்அரீ என யாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை. அல்லாஹ்தான் இதை விதித்தான்; இவ்விஷயத்திலும் மற்ற எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வே தனது விதியைச் செயல்படுத்துகிறான்” என்றனர்.

ஸிஃப்ஃபீனில் தொடங்கி இமாம் அலீயின் மரணம்வரை, அவர்கள் அவரோடு மோதல் போக்கையே கையாண்டனர். இமாம் அலீ பள்ளிவாசலில் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது எழுந்து நின்று அவரை இடைமறிப்பர்; ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குழுமியிருக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே அவரை எதிர்த்துப் பேசுவர். மேலும் சில அறிவிப்புகளின்படி, இமாம் அலீ தொழுகையில் தலைமை தாங்கும்போது (இமாமத்) கூட இடையூறு செய்வர்; தொடர்பில்லாத விஷயங்களைச் சொல்லியோ அல்லது குறுக்கே நடந்து திரிந்தோ தொழுகைக்கு இடையூறு செய்வர். ஏதாவது செய்து இமாம் அலீயின் தலைமையை செல்லாததாக்க முயற்சி செய்வர்.

இவ்விஷயங்களை நாம் புரிந்துகொள்வது மிகமிக அவசியம். ஏனெனில், இது வெறும் வரலாறு மட்டுமல்ல. நாம் வரலாற்றை ஆய்வு செய்கிறோம் என்றாலும், இன்றுகூட நாம் இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்க முடிகிறது. ஒரு தலைவர் அல்லது இஸ்லாமிய இயக்கம் அல்லது இஸ்லாமிய அரசு செயல்படும்போது, ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தில் இஸ்லாமியத் தலைமை எடுக்கும் முடிவை சிலர் எதிர்ப்பதும், பின்னர் எப்படி முஸ்லிம்களின் உளவியல் உள்ளுக்குள்ளாக தமக்கெதிராகத் திரும்புகிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த வரலாற்றிலும் இதுதான் நடந்தது. முஸ்லிம் உளவியலின் ஒரு பகுதி தனக்கெதிராகவே திரும்பியிருந்தது. இந்த வரலாற்றைப் படித்து ஆராய்ந்து பகுப்பாய்வுசெய்து புரிந்துகொள்ளவில்லையெனில் நாம் வேறு என்னதான் செய்யப் போகிறோம்?

நிராகரிப்பும் கைதுறத்தலும்

ஃகவாரிஜ்களுக்கு வேறுவிதத்தில் விளக்கமளிக்க முற்பட்டால், அவர்கள் இமாம் அலீ மீது நிராகரிப்பாளர் (குஃப்ர்) பட்டத்தைச் சூட்டியவர்கள் என்று கூறலாம். அவர்கள் அதோடு நிற்கவில்லை. அவரை ‘பறாஆ’ செய்தனர். ‘பறாஆ’ செய்வதென்பது ஒருவரை கைதுறப்பது ஆகும். அதாவது, அவர்கள் இமாம் அலீயிடம் “உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, நீங்கள் எங்கள் தலைவரும் அல்லர்; நாங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்களும் அல்லர். உங்களிடமிருந்து நாங்கள் முழுமையாக விலகிக்கொண்டோம்” என்றனர். மேலும் உஸ்மான், தல்ஹா, ஸுபைர், இன்னும் பிற எல்லா உமையா ஆட்சியாளர்கள்குறித்தும் இவ்வாறே கூறினர். ஏனெனில், உமையாக்கள் காலத்தில்தான் இவர்கள் வீரியத்தோடு செயல்பட்டனர். அதன் பிறகு வந்த அப்பாசிய்யாக்கள் காலத்தில் ஃகவாரிஜ்களின் வீரியம் குறைந்துவிட்டது. அவர்களின் கண்ணோட்டத்தில் அவர்களுடையது மிக நீண்ட நெடிய போராட்டமாக  இருந்தது. அதில் பலர் கொல்லப்பட்டனர். அவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உமையாக்களின் ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில், ஃகவாரிஜ்களின் வீரியம் மிக்க — சிலரின் கூற்றுப்படி வன்முறை நிரம்பிய — எதிர்ப்பும் வலுவிழந்திருந்தது.

அதேவேளை, அவர்கள் புரட்சியாளர்களாக — இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன் — இருந்தபோதிலும் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். உமையாக்களிலேயே மிகச் சிறந்தவரும் நீதியான ஆட்சியாளருமான உமர் இப்னு அப்துல் அஸீஸிடம் ஒருமுறை ஃகவாரிஜ்கள் வந்து, “நாங்கள் உங்களிடம் சில விஷயங்களைக் குறித்து பேச வேண்டும்” என்றனர். அவரும், “சரி. இதன்மூலம் நாம் ஒரு சமாதானத்திற்கு வரலாம்” என்றார். பேச்சுவார்த்தையின்போது ஃகவாரிஜ்கள், “நீங்கள் உங்களுக்கு முன் ஆட்சிபுரிந்த எல்லா உமையா ஆட்சியாளர்களையும் கைதுறக்க வேண்டும். அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி உங்களுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்க வேண்டும்” என்றனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “அவர்கள் செய்த பல செயல்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயற்றிய பல சட்டதிட்டங்களை நான் ஏற்கனவே ரத்து செய்துள்ளேன். நீதி குறித்தும் நான் அக்கறையோடு இருக்கிறேன். எனினும், கைதுறப்பது போன்ற விஷயங்களில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை” என்றார். அதற்கு ஃகவாரிஜ்கள், “அப்படியெனில் நீங்களும் அவர்களைப் போன்றவரே. கிட்டத்தட்ட நீங்களும் மற்றொரு நிராகரிப்பவர் (காஃபிர்)” என்றனர்.

ஃகவாரிஜ்களுக்கு முன் முஸ்லிம்களைப் பார்த்து பிற முஸ்லிம்கள் ‘நீங்கள் நிராகரிப்பவர்கள்’ என பரவலாகக் குற்றம் சுமத்தியது இல்லை. எனினும், வரலாற்று நூல்களில் காணப்படும் ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. உஸ்மானுக்கு எதிரான கலகம் உச்சத்தை அடைந்தபோது அவரது எதிர்ப்பளர்கள் மத்தியில் ஒரு வாசகம் பரவலானது: ‘உக்துலூ நஅஸலன் ஃபகத் கஃபர — நஅஸலைக் கொன்றுவிடுங்கள் ஏனெனில், அவர் நிராகரிப்பாளர் (காஃபிர்) ஆகி விட்டார்.’ ‘நஅஸல்’ என்பது புத்தி சீர்கெட்டு எல்லா நிகழ்வுகளிலிருந்தும் தொடர்பறுந்து இருக்கும் ஒருவரைக் குறிக்க பயன்படும் சொல். எனினும், இவ்வாசகம் உஸ்மானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த மக்களுள் ஒரு சிலருக்கு மத்தியில் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அது — ஃகவாரிஜ்களைப் போல — ஒரு கொள்கையாகவோ அல்லது சிந்தனைப் பள்ளியாகவோ வளரவில்லை.

அடுத்து, அபூபக்ரு காலத்தில் நிகழ்ந்த ‘ஹுறூபுர் ரித்தா’ போர்பற்றியும் தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறேன். இதன் பொருள் ‘இஸ்லாத்தைத் துறக்க முயற்சிப்பவர்களுக்கு எதிரான போர்’ என்பதாகும். இதை, நிராகரிப்பாளர்களாக மாறிவிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான போர் என்ற ரீதியில்தான் பலரும் அறிந்து வைத்துள்ளோம். ஆனால், அம்மக்கள் கூறியது இதுதான்: “நாங்கள் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்கள்தான். எனினும், இஸ்லாமிய அரசுக்கு பொருளாதாரப் பங்களிப்பை மட்டும் செலுத்த மாட்டோம்.” இவர்கள் விஷயத்தில் ‘சமயத் துறப்பு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனினும், இச்சொல் இஸ்லாத்தின் சமூக, சிவில், அரசியல், கொள்கைசார் அர்த்தங்களை உள்ளடக்கியதாக இல்லை. இது வெறும் மதரீதியான, நம்பிக்கை சார்ந்த அர்த்தத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஆனால், அம்மக்கள் இஸ்லாத்தின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எதையும் துறக்கவில்லை. மாறாக, அவர்கள் அவற்றை உறுதிப்படுத்தினர். அவர்கள் “நாங்கள் நோன்பு நோற்போம், ஹஜ் செய்வோம், பிற எல்லா கடமைகளையும் நிறைவேற்றுவோம். ஆனால் இஸ்லாமிய அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய செல்வத்தை மட்டும் வழங்க மாட்டோம்” என்றனர். இதற்கெதிராகத்தான் அவர்களை எதிர்த்து போர் தொடுக்கப்பட்டது. ஏனெனில், பொருளாதாரக் கொள்கையும் இஸ்லாத்தின் முக்கிய அங்கம் ஆகும். அம்மக்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், மிக விரைவில் இஸ்லாத்தை ஒவ்வொன்றாக நிர்மூலமாக்கி விடக் கூடும். எனினும், ‘இவர்கள் நிராகரிப்பவர்கள் (காஃபிர்கள்). வாருங்கள்! இவர்களைக் கொன்றுவிடுவோம்’ என்று யாரும் அழைப்பு விடுக்கவில்லை. அபூபக்ரு காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இப்படித்தான் இதைப் புரிந்துவைத்திருந்தனர்.

கடும்போக்கு நிலை

பிரெஞ்சுப் புரட்சிபற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் . அதில் மூன்று குறிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன: சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம். அதேபோல ஃகவாரிஜ்களும் மூன்று குறிச்சொற்களைப் பயன்படுத்தினர். அவை ஈமான் (நம்பிக்கை), நான் முன்னர் குறிப்பிட்ட சொற்றொடரான ‘லா ஹுக்ம இல்லா லில்லாஹ் (அல்லாஹ்வுடையதன்றி வேறு எந்த ஆட்சியும் இல்லை)’. மற்றும் ‘அத்தபர்ரு மினல் ழாலிமீன்’ (நீதியற்ற ஆட்சியாளர்கள், ஒடுக்குமுறையாளர்கள் அனைவரையும் கைதுறப்பது)’. இதை ஒரு இணைச் செய்தியாகவே இங்கு குறிப்பிடுகிறேன்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது ஆத்திரக்காரர்களான ஜாகோபின்கள் அக்குறிச்சொற்களை முன்னெடுத்துச் சென்றனர். அச்சொற்களை தீவிரப் பொருளில் புரிந்துகொண்டு தங்களோடு கருத்து வேறுபட்ட அனைவரையும் சரமாரியாகக் கொன்று குவித்தனர். ஃகவாரிஜ்களும் கிட்டத்தட்ட இதையேதான் செய்தனர். தம் குறிச்சொற்களை அவற்றின் நேர்ப்பொருளில் புரிந்துகொண்டு, தம்மோடு கருத்து வேறுபட்டவர்களை தாக்கி அவர்களின் ரத்தத்தைச் சிந்தினர். அச்சொற்களின் ஆழ்ந்த அர்த்தங்களை அவர்கள் புரிந்துகொண்டவர்களாக இருக்கவில்லை; அவற்றை மேம்போக்காகவே பார்த்தனர். கருத்து வேறுபாடு கொண்டவர்களைக் கொல்வது அவர்களுக்கு மிகச் சாதாரணமாக இருந்தது. அதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை; கொஞ்சமும் சிந்திக்காமல் மனசாட்சியின்றி எளிதாக இக்கொலைகளைக் கடந்து செல்பவர்களாக இருந்தனர்.

நம்மால் இயன்றவரை விருப்பு வெறுப்பின்றி இவர்களைப் பற்றி வாசித்து புரிய முயன்றால், இவர்கள் தியாகம் செய்வதில் மனக்கிளர்ச்சி அடையும் ஒருவகையான மக்கள் என்பதை அறிய முடிகிறது. சாதாரண மனிதர் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி, “நான் இதுபற்றி யோசித்துச் சொல்கிறேன்” என்று கூறினால், இவர்களைப் பொறுத்தவரை ‘யோசிப்பது’ என்பதே கிடையாது; ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்றிருந்தால் அதைச் செய்துதான் ஆக வேண்டும்; அவர்கள் அதைச் செய்தே தீருவார்கள்; அதைச் செய்வதற்கு தியாகம் தேவைப்பட்டால், ‘இருந்துவிட்டுப் போகட்டும்’ என்பதே அவர்களின் இயல்பாக இருந்தது. அவர்கள், மரணத்தின்பால் கிட்டத்தட்ட மனவயப்பட்டவர்களாக இருந்தனர்; மரணிக்க விரும்பினர். சவால்களையும் அபாயங்களையும் சந்திக்க நேர்ந்தால் விருப்பத்தோடு அவற்றைச் சந்திப்பவர்களாக இருந்தனர். ஏதாவது ஒரு விஷயம்குறித்து ‘இது சவால் மிக்கது; அபாயம் நிறைந்தது’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அது அவர்களை அதைவிட்டும் விலக்குவதை விடுத்து அதன்பால் அவர்களை ஈர்த்தது; அதைச் செய்ய அவர்களைத் தூண்டியது.

இன்று, அபாயமான மலைக்குன்றுகளில் ஏறுவதையும் ஆபத்தான சறுக்குகளில் சறுக்குவதையும் மரணத்தையும் பொருட்படுத்தாமல், அதனால் ஏற்படும் சிலிர்ப்புக்காக விரும்பும் சில மக்களைப் போலத்தான் அவர்களும் இருந்தனர். ஒரு ஆளுநரைக் கொல்லும் சவாலை எடுத்துக்கொண்டால், அவரைச் சுற்றி பாதுகாவலர்கள் அதிகம் இருப்பதால் அது ஆபத்தானது என்று ஒருவர் நினைத்தால், அவர்களைப் பொறுத்தவரை அந்த ஆபத்துதான் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்த விஷயத்தில் அவர்கள் கிட்டத்தட்ட மனநோய் பீடித்தவர்கள்போலவே இருந்தனர்.

இன்றைய உலகின் சில நிகழ்வுகளை இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு நினைவூட்டக் கூடும். இத்தகைய செயல்களையும் பாத்திரங்களையும் இன்றும் நீங்கள் காணலாம். அந்தலூசில் (முஸ்லிம் ஸ்பெயின்) வாழ்ந்த சில கிறிஸ்தவர்களையும் இது நினைவூட்டுகிறது. முஸ்லிம்கள் ஐபீரியாவில் (இன்றைய ஸ்பெயின், போர்ச்சுகல்) ஆட்சிபுரிந்தபோது, சில கிறிஸ்தவர்கள் தங்கள் மத விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உயிரைக் கொடுத்தாவது நிரூபிக்க வேண்டும் என்று உந்தப்பட்டனர். அதற்காக அவர்கள் இறைத்தூதரை (ஸல்) வசைபாடத் தொடங்கினர். அன்று அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் அது ஒரு சமூகப் போக்காகவே மாறியது. இறைத்தூதரை இழிவுபடுத்துவது, அவரைச் சபிப்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத புதுப்புது அவச்சொற்களால் அவரைத் தூற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இக்குற்றத்திற்கு மரணதண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே அவர்கள் இதைச் செய்தனர். இறைத்தூதரைச் சபிக்கும் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அன்று இருந்தபோதும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை.

“நாங்கள் எங்கள் நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். அதற்காக இறைத்தூதரை இழிவுபடுத்துவோம். தண்டனை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை” என்றனர். அவ்வாறு சிலர் தண்டிக்கவும் பட்டனர். இதன் தீவிரத்தை சில வரலாற்று நூல்கள் இவ்வாறு விவரிக்கின்றன: அந்த மக்கள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்படும்போது, குற்றத்தை உறுதி செய்து மரணதண்டனை விதிப்பதற்காக அவர்களின் சபித்தலையும் இழிசொற்களையும் அவர் கேட்டாக வேண்டும். அவர்களின் வசைச்சொற்கள் உளறல்கள் என்று கருதப்படும் அளவிற்கு இருந்தன. அவர்களை பைத்தியக்காரர்கள் என்று தவறாகக் கருதிவிடுவோமோ என்று அஞ்சி அந்த நீதிபதி தன் விரல்களால் காதுகளை மூடிக்கொள்வார். ஏனெனில், பைத்தியக்காரர்களுக்கு மரணதண்டனை அளிக்க முடியாதல்லவா?

இப்போது இவர்களுக்கும் ஃகவாரிஜ்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைப் பார்த்தால், அவர்களும் இத்தகைய சில பண்புகளை வெளிப்படுத்தியதை நாம் பார்க்கலாம். ஃகவாரிஜ்களும் மரணத்தைப் பொருட்படுத்தாமல் தங்கள் கொள்கை விசுவாசத்தை நிரூபிக்க விரும்பினர். அவர்களிடமிருந்த மற்றொரு பண்பு, முஸ்லிம் சமூகத்தின் பொதுக்கருத்தை வெல்ல நினைத்தது. அன்று — குறிப்பாக அப்பகுதியில் — வாழ்ந்த முஸ்லிம்களின் பொதுக்கருத்து இமாம் அலீ மீது அனுதாபம் கொண்டதாக இருந்தது. இதை எதிர்க்கும் நோக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இமாம் அலீயை அவர்கள் சபிக்கத் தொடங்கினர். இதன்மூலம் முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் இமாம் அலீக்கு இருக்கும் ஆதரவைத் தகர்க்க நாடினர். இதை அவர்கள் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினர். அவர்கள் ஈராக்கிற்கு வெளியே பிற பகுதிகளுக்குச் செல்லும்போது, அப்பகுதி மக்கள் உஸ்மானுக்கு பரிவிரக்கம் காட்டுவதைக் கண்டால் அவரையும் சபிப்பர். இன்னும் ஒருபடி மேலே சென்று யாரெல்லாம் இமாம் அலீ, உஸ்மானை நல்லவர்கள் என்று நம்புகிறார்களோ, அவர்கள் அனைவரும் நிராகரிப்பவர்கள் (முஷ்ரிக்) என்றனர். தம் கருத்தோடு ஒத்துப்போகாத மக்கள்மீது நிராகரிப்பு (குஃப்ர்) அல்லது இணை வைப்பு (ஷிர்க்) என்னும் வார்த்தைகளை தகுந்த காரணமின்றி திட்டமிட்டுப் பிரயோகிக்கும் போக்கை நாம் மீண்டும் இன்று காண்கிறோம்.

இவர்களின் தன்மையை விளக்குவதற்கு, அன்று நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்க விரும்புகிறேன். ஒருமுறை ஃகவாரிஜ்கள் அப்துல்லாஹ் இப்னு ஃகப்பாபு இப்னுல் அறத் என்பவரை எதிர்கொள்ள நேர்ந்தது. இவர் இறைத்தூதருக்கு நெருக்கமான முக்கியமான தோழர் ஒருவரின் மகனாவார். அவருடன் கருவுற்றிருந்த அவரின் மனைவியும் இருந்தார். ஃகவாரிஜ்கள் அவரை விசாரிக்கத் தொடங்கினர். அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். முதலில் “அபூபக்ரைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?” எனக் கேட்டனர். அதற்கு அவர் தன் மனசாட்சிப்படி “அவர்மீது குறையெதுவும் இல்லை” என பதிலளித்தார். பின்னர் “உமர் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?” எனக் கேட்டனர். அதற்கும் அவர் உமரைப் பற்றி நல்லதையே கூறினார். பின்னர் அவர்கள் “உஸ்மானின் முதல் ஆறு வருட ஆட்சியில் அவர்குறித்து உம் கருத்து என்ன?” எனக் கேட்டனர். அதற்கும் அவர் “எல்லாம் நல்லதுதான்” என பதிலளித்தார். பின்னர், “உஸ்மானின் இறுதி ஆறு வருடங்களில் அவர்பற்றி உம் கருத்து என்ன?” என்றனர். அதற்கும் அவர், “அதுவும் நல்லதுதான்” என்றார். அவர்களுக்கிடையே நடந்த உரையாடலின் சாரத்தை மட்டுமே நான் கூறுகிறேன். பின்னர் அவர்கள், “சரி. மத்தியஸ்தத்திற்கு முன் இமாம் அலீ பற்றி உம் கருத்து என்ன?” எனக் கேட்டனர். அதற்கும் அவர் நற்கருத்தையே பதிலாக அளித்தார். பின்னர் அவர்கள் மீண்டும், “மத்தியஸ்தம் முடிந்த பிறகு இமாம் அலீ பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?” எனக் கேட்டனர். அதற்கவர் “அவர்மீது நான் குறை எதுவும் காணவில்லை” என பதிலளித்தார். பின்னர் ஃகவாரிஜ்கள், “அப்படியா?! இதுதான் உம் கருத்தா?”, எனக் கேட்டு அவரை அருகிலிருந்த ஆற்றங்கரையோரம் இழுத்துச் சென்று படுகொலை செய்தனர். அவர்கள் அவரின் மனைவியையும் விட்டுவைக்கவில்லை. அவரையும் கொன்று, வயிற்றைக் கிழித்து உயிரற்ற கருவை வெளியே எடுத்தனர். ஆரோக்கியமாக சிந்திக்கும் எவரும் ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமோடு இப்படியா நடந்துகொள்வார்? இது வரம்பு மீறிய செயல்’ என்றே எண்ணுவார்.

பின்னர் சிறிது தூரம் நகர்ந்து வந்த அவர்கள் கிறிஸ்தவர் ஒருவரைச் சந்தித்தனர். நடந்த சம்பவங்களை பார்த்துக்கொண்டிருந்த அவர் அதிர்ந்து போயிருந்தார். “உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “நீர் பயந்துவிட்டீரா?” எனக் கேட்டனர். அவர், “நிச்சயமாக. சரி, உங்களுக்கு என்ன வேண்டும்?” என மீண்டும் கேட்டார். அவர்கள் “உம் மரத்திலிருந்து சில பேரீத்தம் பழங்கள் வேண்டும்”, என்றனர். பயத்தில் உறைந்துபோயிருந்த அவர், “இதோ முழு மரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அதற்கு அவர்கள் “இல்லை. முழு மரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றால், என்ன சொல்ல வருகிறீர்?” என்றனர். பின்னர் “நீர் யார்?” எனக் கேட்டனர். அவர், “நான் ஒரு கிறிஸ்தவன்” என பதிலளித்தார். அதற்கு அவர்கள், “நல்லது. நீர் அல்லாஹ், அவனது தூதரின் பாதுகாப்பில் (அஹ்லுத் திம்மா) உள்ளவர். “உம்முடைய மரத்திலிருந்து பழுத்த பழங்களை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதற்கான விலை என்ன என்று சொன்னால் அதைக் கொடுத்து விடுகிறோம்” என்றனர். இதற்கு மேல் அவர் அவர்களிடம் விவாதித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். ‘என்ன விந்தையான மனிதர்கள் இவர்கள். இப்போதுதான் ஒரு அப்பாவி முஸ்லிமையும் அவரின் மனைவியையும் கொன்று போட்டனர். எனக்கோ இவ்வளவு மரியாதை!’ என அவர் நினைத்திருப்பார். நேரெதிராக மாறியிருக்கும் இன்றைய சூழலில், சில முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களை நடத்தும் விதமும் ‘பாதுகாப்பில் உள்ளவர்களை’ அவர்கள் கருதும் விதமும் நம் நினைவுக்கு வருகிறது. இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஸியோனிசவாதிகளுக்கும் ‘பாதுகாப்பில் உள்ளவர்’ என்ற அந்தஸ்தை அளிக்கின்றனர். ஆனால், நிலத்தில் உழும் பாமர கிறிஸ்தவரைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்வதில்லை.

நஹ்றவான் போர்

இந்தச் சம்பவம்தான் நஹ்றவான் போர் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்தது. இன்றைய தெற்கு ஈராக்கில் நடந்த அச்சம்பவம் இமாம் அலீயின் காதுகளுக்கு எட்டியது. அவர், “இதற்கு அவர்கள் பொறுப்பேற்று கொலைக்கான நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இதற்கு அவர்கள் பதிலளித்தே ஆக வேண்டும்” என்றார்.  அக்கூட்டத்தில் ஒரு 30-40 பேர் இருந்திருந்தாலும் அனைவரும் சேர்ந்து கொலையில் ஈடுபட்டிருக்க முடியாது; ஒரு சிலர்தான் இத்தகைய மாபாதகச் செயலில் நேரடியாக ஈடுபட்டிருப்பர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க இமாம் அலீ விரும்பினார். ஆகவே கொலையாளிகள் யார் என்று விசாரிக்க அவர்களிடம் சிலரை அனுப்பினார். அவர்களோ, “நாங்கள் எல்லோரும்தான் கொலையாளிகள். நாங்கள் அனைவரும் சேர்ந்து அவர்களைக் கொன்றோம்” என்றனர். இத்தகைய அணுகுமுறையை அவர்கள் கையாண்டபோது, அவர்களைக் கட்டுப்படுத்துவது அவசியமாயிற்று. இதைத் தொடர்ந்துதான் நஹ்றவான் போர் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 3000 ஃகவாரிஜ்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பார்வையில் ‘இமாம் அலீ ஒரு நிராகரிப்பவர் (காஃபிர்)’ என்னும் தவறான கருத்தை இப்போர் மேலும் வலுப்படுத்தியது. ஏனெனில், ‘இப்போது அவர் முஸ்லிம்களைக் கொல்கிறார்; அதுவும் (அவர்களின் பார்வையில்) முஸ்லிம்களிலேயே ஆகச்சிறந்தவர்களான எங்களைக் கொல்கிறார்’ என்றனர்.

முரணியக்கம்

இதனைத்தையும் படித்துவிட்டு சிலர் உணர்ச்சிப் பொறிகளில் சிக்கி விடுகின்றனர். அத்தகைய உணர்ச்சிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு  ஃகவாரிஜ்களை புரிந்துகொள்ள முயற்சித்தால், அவர்களுடைய பண்புகள், நோக்கம் போன்றவற்றைப் பார்த்தால் அவர்களுடைய செயல்கள் அனைத்திலும் ஒரு நேர்மை இருந்ததைப் பார்க்கிறோம். அவர்கள் ரத்தக் களரியோடு செய்த ஒவ்வொரு செயலையும் நேர்மையோடு செய்ததாகவே எண்ணினர் என்பதுதான் இங்கு நகைமுரணாக இருக்கிறது. எனினும், இத்தகைய நேர்மை அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதில் ‘இச்செயல் நமக்குச் சாதகமாக இருக்கப்போகிறது; நம் தரத்தை உயர்த்தப்போகிறது; தகுதியில்லாதவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்கப்போகிறது’ போன்ற எண்ணங்கள் கலப்படம் ஆகியிருக்கக் கூடும். எனினும், மாசுபட்டதாகவே இருந்தாலும் அவர்களிடம் ஒரு நேர்மை இருந்ததை உணர முடிகிறது.

ஆகவே, ஃகவாரிஜ்களிடம் உள்ளுக்குள்ளாகவே முரணான இருகூறுகள் இருப்பதை உணர முடிகிறது. ஒருபுறம் அவர்கள் இறைபிரக்ஞையை (தக்வா) வெளிப்படுத்தினர்; மறுபுறம் பிற முஸ்லிம்களைக் குறித்து அவர்களிடம் ஒரு கோணல் பார்வை இருந்தது. நிச்சயமாக, அவர்கள் இறைபிரக்ஞையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். அவர்கள் உலகின் எந்தச் சக்தியையும் பொருட்படுத்தவேயில்லை. மரணம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை, மக்களின் பொதுக்கருத்தையும் அவர்கள் சட்டை செய்யவேயில்லை. அல்லாஹ் என்ற ஒரேயொரு சக்திக்கு மட்டுமே அவர்கள் பதிலளிப்பவர்களாக இருந்தனர். இவற்றோடு அவர்களிடம் இருந்த நேர்மையும் சேர்ந்து இறைபிரக்ஞையின் (தக்வா) சிறப்பான வெளிப்பாடாகத் தோன்றின. நான் ஏற்கனவே கூறியதுபோல இது மாசுபட்டிருக்கவும் கூடும்.

இந்த நேர்மையோடு சேர்ந்து அவர்களிடம் பிற முஸ்லிம்கள்குறித்து ஒரு கோணல் பார்வையும் இருந்தது. இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம். அத்தோடு ஒரு வகையான தீவிரத்தன்மை அல்லது வெறித்தனமும் அவர்களிடம் காணப்பட்டது. பிற முஸ்லிம்களிடம் அவர்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து இதை அறிய முடிகிறது. பிற முஸ்லிம்களைக் கண்டால் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக, அவர்கள் தங்கள் கருத்துகளை பிறர்மீது திணிக்க முயற்சித்தனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்கக்கூட விரும்பவில்லை. ‘பிற முஸ்லிம்களின் கொள்கை என்ன?’ என்பதை அறிந்து அதன்மூலம் அவர்களை இணைத்துக்கொள்ள அல்லது கொன்றுவிட மட்டுமே நாடினர்; அவர்களோடு கலந்துரையாட விரும்பவில்லை. ‘நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், ஆகவே, எங்களோடு வந்துவிடுங்கள். அல்லது நீங்கள் எங்களோடு ஒத்துப்போகவில்லை, ஆகவே, உங்களை கொன்றுவிடுவோம்’ என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. நாம் இதிலிருந்து பாடம் பெற வேண்டும். நாம் பிற முஸ்லிம்களைப் புரிந்துகொள்வதை விடுத்து, நம் பிரிவு சார்ந்த தனிமையில் சிறைபட்டுக் கிடக்கிறோம். இத்தகைய செறிவான வரலாற்றைப் பெற்றுள்ள நாம் இத்துன்பங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றிலிருந்து பாடம் பெற்றாலே போதும்.

சமூகப் பின்னணி

அடுத்து ஃகவாரிஜ்களின் சமூகப் பின்னணி எப்படி இருந்தது எனப் பார்ப்போம். அவர்கள் நகரங்களில் வாழ்ந்த மக்களாக இருக்கவில்லை. அவர்கள் பாலைவனங்களில் தனித்து வாழ்ந்த நாடோடிக் குழுக்களாக இருந்தனர். வளர்ச்சியடைந்த அல்லது பண்பட்ட வாழ்க்கை முறைகளை அறியாதவர்களாக இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கை முறையும் சமூகச் சூழலும் அதீத வறுமையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தன. வரலாற்றை வர்க்க முரண்பாடுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும் சிலருக்கு இது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். எனினும், ஃகவாரிஜ்களின் விஷயத்தில் காணப்படும் ‘சுயமாக தம்மீதே ஏராளமான நன்மைகளைச் சாட்டும்’ பண்புக்கும் (self-righteousness) வர்க்க முரண்பாடுகளுக்கும் பழமைவாத முறைகளில் வாழ்க்கையைக் கழிப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. நான் முடிந்தவரை பக்கச்சார்பு எடுக்காமல் இவர்களின் விஷயத்தில் உண்மையாக இருக்கவே முயல்கிறேன். நான் ஒரு ஃகாரிஜீயும் அல்லன். இஸ்லாமிய வட்டத்தில் தோன்றிய இந்த அரசியல் போக்கின் முக்கிய நபர்களின் சுவடுகளை நாம் ஆராய்ந்தால், அவர்களுடைய குடும்பம், முன்னோர்கள் என அனைவரும் — இஸ்லாத்திற்கு முன்னரும் சரி, இஸ்லாத்திற்குப் பின்னரும் சரி — வறுமை நிலையில் வாழ்ந்ததையே பார்க்கிறோம். இந்தச் சமூக இயங்கியல் அவர்கள்மீது ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை ஒரு கேள்வியாகவே விட்டுவிடுகிறேன்.

இந்தச் சமூக இயங்கியல்களில் செயல்படும் மற்றொரு கூறு என்னவெனில், அறபிய்ய தீபகற்பத்தில் இரு வகை கோத்திரப் பிரிவுகள் இருந்தன. ஒன்று ‘முளர்’, மற்றொன்று ‘றபீஆ’. மக்காவின் குறைஷிக் குலம் முளரைச் சேர்ந்தது. ஆனால், பிற்காலங்களில் ஃகவாரிஜ்களின் ஆதாரமாகத் திகழவிருந்த நாட்டுப்புற அறபிகள் றபீஆ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். நாம் இங்கு முஸ்லிம்களைப் பற்றித்தான் பேசுகிறோம் என்றாலும் இஸ்லாத்திற்கு முந்தைய இந்த நிலை, பிற்காலங்களில் அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடுமா? ஏனெனில் பிற்காலங்களில், முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும் விஷயத்தில் இவர்கள் எப்படி குறைஷ், மக்கா, மதீனா, கோத்திரம் அல்லது மொழி என எதையும் பொருட்படுத்தாமல் இருந்தார்கள் எனவும் பார்ப்போம்.

பிற முஸ்லிம்கள் மேற்கோள் காட்டும் ஒரு ஹதீஸ் ‘அல்அஇம்மத்து மின் குறைஷ்’ என்கிறது. அதாவது ‘தலைமைத்துவம் குறைஷிகளிடமிருந்துதான் வரும்’ என்பது இதன் பொருள். எனினும் ஃகவாரிஜ்கள் “இல்லை இல்லை. இது உண்மையான ஆதாரபூர்வமான (ஸஹீஹ்) ஹதீஸ் அல்ல. இதில் உண்மை எதுவும் இல்லை” என்றனர். ஆக நான் சொல்ல வருவது என்னவெனில், முற்காலங்களிலிருந்த அறபிய்ய குல முறைமைகளின் அடிப்படையில், ஃகவாரிஜ்கள் றபீஆ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் குறைஷிகள் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் அவர்களின் இலட்சியவாத அல்லது கற்பனாவாதக் கொள்கைகளுக்கான ஒரு காரணியாக இருந்திருக்குமா? இங்கு நான் ‘இலட்சியவாதம்’ என்று சொல்வதால் சிலரும், ‘கற்பனாவாதம்’ என்று சொல்வதால் வேறுசிலரும் சங்கடப்படக் கூடும். எனினும், முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்புகுறித்த விஷயத்தில் ஃகவாரிஜ்கள் உலக நலன்கள் எதையுமே பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. தலைவர் தேவைப்படும் பட்சத்தில் ‘தகுதி பெற்றவர் தலைமை தாங்கலாம்’ என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது. ‘தலைவர் தேவைப்படும் பட்சத்தில்’ என்று சொல்வதன் நோக்கம் அவர்களுள் சிலர் இமாம் (தலைவர்) தேவையே இல்லை என்றும் கூறினர். இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

மேலும் அவர்களுள் சிலர் சிறந்த பேச்சாளர்களாகவும் இருந்தனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அவர்களால் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முடிந்தது. இதனால் சில உமையா ஆட்சியாளர்கள் அச்சமடையவும் செய்தனர். எனினும், இந்தப் பேச்சாற்றல் நாட்டுப்புற மக்களிடையே மட்டுமே செல்வாக்கு பெற்றதாக இருந்தது. ஃகவாரிஜ்களை சிந்திக்க மறுப்பவர்கள் என்று சொல்வதைவிட சிந்திக்கப் பழக்கப்படாதவர்கள் என்று சொல்லலாம். இதன் காரணமாக சாதாரண மக்களிடையே அவர்களின் பிரச்சாரம் வலிமை வாய்ந்ததாக இருந்தது. பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் ஃகவாரிஜ் இயக்கம் நாடோடி அறபுகளைக் கொண்டே தொடங்கியது. எனினும் ‘அறபுகளும் அறபு அல்லாதோரும் சமம்; குறைஷிகளுக்கு தனி அந்தஸ்து இல்லை’ போன்ற அவர்களின் பிரச்சாரம், முஸ்லிம்களாக மாறிய அறபு அல்லாதவர்களான பாரசீகர்கள், எகிப்தியர்கள், பைசாந்தியர்கள் போன்றோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படியாக ஃகவாரிஜ்கள் தங்கள் இறுதிக் காலத்தில் அறபு அல்லாத முஸ்லிம்கள் (மவாலீகள்) மத்தியில் செல்வாக்கு பெற்றனர். பிற்காலத்தில் அறபு அல்லாத முஸ்லிம்கள் (மவாலீகள்) வருகைக்குப் பின்னரே அவர்கள் நாகரிகமடைந்தனர் அல்லது நகரக் கலாச்சாரத்துக்குப் பழக்கப்பட்டனர் என்று கூறலாம்.

இங்கே மற்றொரு சம்பவத்தையும் கூறுவது முக்கியம் எனக் கருதுகிறேன். ஒருமுறை ஒரு ஃகாரிஜீ பெண் ஒரு அறபு அல்லாத முஸ்லிமோடு (மவ்லா) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டார். இதை அறிந்த ஃகவாரிஜ்கள் ‘நீ எங்களை அவமதித்துவிட்டாய்’ என்றனர். அதாவது ஒரு அறபு அல்லாத முஸ்லிமை — மவ்லாவை திருமணம் முடிப்பது அவமானம் என்று கூறினர். இவர்கள்தான் சமத்துவம், ஏற்றத்தாழ்வு இல்லை என முழங்கியவர்கள்; எனினும், திருமணம் என வரும்போது அவர்கள் அவமானம் என்கின்றனர். இந்த முரண்பாடும் இருக்கத்தான் செய்தது.

ஆண்-பெண் சமத்துவத்தை முழுமையாகப் பேணிய ஒரே சிந்தனைப் பள்ளி ஃகவாரிஜ் எனலாம். பெண்கள் தகுதியின் அடிப்படையில் தொழுகைக்குத் தலைமை தாங்கலாம் என்றும், மக்களை வழிநடத்தும் தலைவர்களாகவும் ஆக முடியும் என்றும் கூறினர்.

ஃகாவரிஜ்கள் மத்தியிலான இணைப்புப் புள்ளி

இன்று சுன்னீகள் — என அறியப்படுவோர் — மத்தியில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் அல்லது போக்குகள் இருப்பதைப் போல, அல்லது ஷீஆக்கள் — என அறியப்படுவோர் — மத்தியில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் அல்லது பள்ளிகள் இருப்பதைப் போல ஃகவாரிஜ்கள் மத்தியிலும் பல சிந்தனைப் பள்ளிகள் இருந்தன. ஃகவாரிஜ்கள் அனைவரும் ஒரே சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மத்தியிலும் வேறுபாடுகள் இருந்தன. எனில், அவர்கள் அனைவரையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்த கொள்கைகள் எவை? இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் ஃகலீஃபா அல்லது இமாம் — இன்றைய அரசியல் சொல்வழக்கில் சொல்லப்படும் — சுதந்திரமான, நீதியான, வெளிப்படையான தேர்தல்மூலம் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றனர்.

முஸ்லிம்களில் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது மேல்தட்டு முஸ்லிம்களை மட்டும் கொண்ட ஒரு வர்க்கம் பங்கெடுக்கும் தேர்தலாக அல்லாமல் எல்லா முஸ்லிம்களும் பங்குபெறும் தேர்தலாக அது இருக்க வேண்டும் என விரும்பினர். இது எதைக் குறிக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். அத்தேர்தல் எல்லா இடங்களிலும் எல்லா பகுதிகளிலுமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பங்குபெறக்கூடியதாக இருக்கும். இதன்மூலம் நம்மிடையே சட்டபூர்வ, செயல்பூர்வ தலைவர் அமைந்துவிடுவார். நீதியாகவும் இஸ்லாமியச் சட்டங்களுக்குப் பொறுப்பேற்று அவற்றை நடைமுறைப்படுத்தி ஆட்சி புரியும்வரை அவர் தலைவராக நீடிப்பார். ஆனால், அவர் திசைமாறி தன் பொறுப்பை மீறிச் சென்றால், அவரைத் தேர்ந்தெடுத்த அதே முஸ்லிம் சமூகம்மீது ‘அவரது பதவியைப் பறிப்பது அல்லது கொல்வது கடமையாகிவிடும்’ என்றனர்.

மேலும் அவர்கள் குடும்பத்தினர், கோத்திரத்தார், வாரிசுகளுக்கு பதவி பொறுப்புகளில் எந்த முன்னுரிமையும் இருக்க முடியாது என்றனர். அதாவது ‘குறைஷி அல்லது அறபு என்பதெல்லாம் தலைமைப் பதவிக்கான தகுதி ஆகிவிடாது. இத்தகைய குலப்பெருமை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ என்பதுதான் இதன் கருத்து. சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, இமாம் அல்லது ஃகலீஃபா குறைஷி குலத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் இருப்பதே விரும்பத்தக்கது என்றனர். ஏனெனில், குறைஷி அல்லாத ஒருவர் தவறு செய்யும்பட்சத்தில் அவரை பதவி நீக்குவது அல்லது கொல்வது எளிது. மாறாக, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு இமாம், குர்ஆனுக்கும் தூதரின் வழிகாட்டுதலுக்கும் (சுன்னாஹ்) மாறு செய்து தவறு செய்யும்பட்சத்தில் அவரை நீக்குவதே பெரும் போராட்டம் ஆகிவிடும் எனக் கருதினர். அவர்கள் இக்கொள்கைகளை வெறும் முழக்கங்களாக மட்டும் முன் வைக்கவில்லை; நடைமுறையும் படுத்தினார்கள். அவர்களுடைய முதல் தலைவரான அப்துல்லாஹ் இப்னு வஹ்பு அர்றாசிபீ, குறைஷி அல்லாதவராகவே இருந்தார்.

ஃகவாரிஜ்களின் மற்றொரு முக்கியமான வரைவிலக்கணம் என்னவெனில், ‘தன்பு’ செய்கிறவர்கள் அனைவரையும் நிராகரிப்பவர்கள் (காஃபிர்) எனக் கூறுவது. ‘தன்பு’ என்பது சில சமயம் ‘பாவம்’ என்றும், சில சமயம் ‘குற்றம்’ என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. ஃகவாரிஜ்கள் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் அரசாங்கம் அல்லது முஸ்லிம் இமாமிடமிருந்து விலகிக்கொள்வதும், நண்பர் ஒருவரிடம் சிறு பொய் சொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே சமமானதுதான். அவர்கள் ஒரு ‘தன்பு’வுக்கும் மற்றொரு ‘தன்பு’வுக்கும் இடையே வித்தியாசம் பார்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் அவர்கள் இமாம் அலீயை நிராகரிப்பவர் என்றனர். ஏனெனில், மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் அவர் பாவம் செய்துவிட்டார் என்றனர். அப்பாவத்துக்கு அளவு எதுவும் கிடையாது. அது கடுமையானதா, அல்லது கடுமையற்றதா? அது இஜ்திஹாதா? அது அவருடைய சொந்தக் கருத்தா, அல்லது பிற முஸ்லிம்களால் அவர்மீது திணிக்கப்பட்ட கருத்தா? போன்ற கேள்விகளை அவர்கள் கருத்தில் கொள்ளவேயில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளத் தெரியாத, அடிப்படையில் நாடோடிகளான மக்களைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்தால் இவர்களைப் புரிந்துகொள்ள முடியும்.

இஸ்லாமியச் சட்டவியல் கோட்பாடுகளில் பெரும்பாவங்கள் (கபாயிர்), சிறு பாவங்கள் (சகாயிர்) என்று உள்ளன. ஃகவாரிஜ்கள் இவற்றைப் பிரித்துப் பார்க்க அறிந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனைத்திறன் அந்த அளவுக்குத்தான் இருந்தது. ‘இஜ்திஹாத்’ என்பது ஒருவரது பகுப்பாய்வின் முடிவில் அவர் அடையும் ஆகச்சிறந்த கருத்து அல்லது ஆகச்சிறந்த முடிவு ஆகும். காலப்போக்கில்தான் இது சரியானதா, அல்லது அதைவிடக் குறைவானதா என்பது தெரியவரும். ஆனால், அவர்கள் காலத்திற்காகக் காத்திருக்க விரும்பவில்லை. அவர்கள் காட்டும் அவசரத்தில் ஒரு ‘இஜ்திஹாது’கூட ‘தன்பு’ ஆகிவிடும்; அதனால் ஒருவர் நிராகரிப்பவராகி விடுவார்.

இஜ்திஹாதும் ஒருவரை நிராகரிப்பவராக மாற்றிவிடும் பாவத்துக்குச் சமமாகிவிட்டது. இங்கு நாம் மிகக் கடுமையான ‘தீவிரவாதி’களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க நான் விரும்பவில்லை. ஏனெனில், இன்று இது முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், வேறுவார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. பகுத்தறிவு இல்லாதவர்கள், மட்டுமீறியவர்கள், தர்க்க முரணானவர்கள் என்று கூறலாமா? இச்சொற்களின் அர்த்தங்களையெல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு காந்தத்தைப் போலத்தான் அவர்கள் இருந்தனர். இப்படியாக அவர்கள் இமாம் அலீ நிராகரிப்பவர், தல்ஹா நிராகரிப்பவர், ஸுபைர் நிராகரிப்பவர் என்று கூறினர். எனினும், நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷாவைப் பற்றி ஃகவாரிஜ்களின் கருத்து என்ன என்பதை விளக்கும் எந்தச் செய்தியையும் நான் காணவில்லை. அவர்கள் இமாம் அலீக்கு எதிராக, உஸ்மானின் இறுதி ஆறு ஆண்டுகள்பற்றி, தல்ஹாவிற்கு எதிராக, முஆவியா, அம்ரூ இப்னு ஆஸுக்கு எதிராக நிறையப் பேசியிருக்கிறார்கள். எனினும், ஆயிஷா பற்றி அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை.

அடுத்து, மற்றொரு விஷயத்தை மீண்டும்மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஃகவாரிஜ்கள் உமையா அரசாங்கத்தோடு தொடர்ச்சியான போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலகக்காரர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். பெயர், புகழுக்காக அவர்கள் போர் செய்யவில்லை. ஒருமுறை மக்காவில் வைத்து ஹஜ்ஜின்போது, அன்றைய முஸ்லிம்களைப் பீடித்துள்ள சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என அவர்கள் கருதிய மூன்று நபர்களைக் கொல்வதற்கான சதித்திட்டத்தை தீட்டினர். இமாம் அலீ, முஆவியா, அம்ரூ இப்னுல் ஆஸ் ஆகியோர்தான் அம்மூவர். இப்படித்தான் அவர்களின் போர் தொடங்கியது. எனினும், அது அத்தோடு நிற்கவில்லை. இமாம் அலீ இறைவனிடம் சென்ற பின்னர் முஆவியா, அவர்களை எதிர்த்துப் போர் தொடுத்தார். அப்போதும் அவர்கள் உக்கிரமாகப் போரில் ஈடுபட்டனர். வெறுமெனே ‘உமையா ஆட்சியாளர்கள் தவறு செய்துவிட்டார்கள்; அவர்கள் எல்லோரும் நிராகரிப்பவர்கள்’ என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் மட்டும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. மாறாக, அவர்களை எதிர்த்து தொடர்ச்சியான போரில் ஈடுபட்டனர்.

அவர்கள் நாற்பது பேர் சேர்ந்துவிட்டால், அது ஒரு போர்ப்படை என்றனர். அதைவிட ஒன்றிரண்டு குறைந்தால்கூட போர் செய்யமாட்டார்கள்.  ஆனால், நாற்பது பேர் சேர்ந்துவிட்டால் அவர்களால் போர் செய்யாமல் இருக்க முடியாது. எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல் போர் செய்தே தீர்வார்கள். இதுவும் ஃகவாரிஜ்களிடமிருந்த பொதுப்பண்பு எனலாம். உமையா ஆட்சியாளர்களை இப்படித்தான் இவர்கள் கையாண்டனர். இப்படியாக இவர்களின் கையால்தான் ஏராளமான உமையா ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஃகவாரிஜ்களின் உட்பிரிவுகள்

நான் ஏற்கனவே சொன்னதுபோல ஃகவாரிஜ்கள் மத்தியில் உட்பிரிவுகளும் உள்ளன. நான் உட்பிரிவு என்ற சொல்லைப் பிரயோகிக்க விரும்பவில்லை. எனினும், இது புழக்கத்தில் இருப்பதால் இவ்வாறு கூறுகிறேன். அதுகுறித்து இப்போது பார்ப்போம்.

அஸாரிகா

முதலாவது அஸாரிகா. இவர்கள் நாஃபி இப்னுல் அஸ்றக் என்பவரைப் பின்பற்றியவர்கள். ஒரு காலத்தில் இவர்கள் ஃகவாரிஜ்கள் மத்தியில் மிக முக்கியமானவர்களாகத் திகழ்ந்தனர். அதிக எண்ணிக்கை கொண்டவர்களாகவும் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். இவர்களின் கொள்கைகளை சுருக்கமாகப் பார்ப்போம். அவர்கள் ‘அஸாரிகாவை எதிர்ப்பவர்கள் அனைவரும் நிராகரிப்பவர்கள் (காஃபிர்கள்); அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்குவர்; அவர்களை எதிர்த்துப் போர் புரிவது ஆகுமானது’ என்றனர். அதாவது தங்களை எதிர்ப்பவர்களை எதிர்த்துப் போர் புரிந்து அவர்களைக் கொல்வது அனுமதிக்கப்பட்டது என்றனர். ஃகவாரிஜ்கள் முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்த்துப் போர் புரிந்த நிகழ்வு எதையும் நான் அறியவில்லை என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே ‘தங்களை எதிர்ப்பவர்கள்’ என அவர்கள் கூறும்போது அது முஸ்லிம்களையே குறிக்கிறது. எனவே, அவர்களைப் பொறுத்தவரை தங்களை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் புரிவதும் அவர்களைக் கொல்வதும் முற்றிலும் சட்டபூர்வமானது.

சட்டவியல் (ஃபிக்ஹு) நூல்களில் போர்ப் பிரதேசம் (தாருல் ஹர்பு) இஸ்லாமியப் பிரதேசம் (தாருல் இஸ்லாம்) என்று சொல்லப்படுவது உண்டு. அஸாரிகாவின் சட்டவியல்படி அவர்களை எதிர்ப்பவர்களின் பகுதிகள் அனைத்துமே போர்ப் பிரதேசத்தில் அடங்கும். நாம் அறிந்து வைத்துள்ள இஸ்லாமியப் பிரதேசம் என்பது — அகன்ற அர்த்தம்கொண்ட — எல்லா முஸ்லிம்களையும் உள்ளடக்கிய இஸ்லாமியப் பகுதிகளைக் கொண்டது. ஆனால், இப்போது இந்த ஃகவாரிஜ்களின் பார்வையில், இஸ்லாமியப் பிரதேசத்துக்கு உள்ளேயே ஒரு போர்ப் பிரதேசத்தைப் பார்க்கிறோம். மேலும், இந்தப் போர்ப் பிரதேசத்தில் முஸ்லிம்களால் பிற முஸ்லிம் அல்லாத பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் அனைத்தும் பொருந்தும். அதாவது போர்ச் சட்டம், போர்க் கைதிகள்பற்றிய சட்டம் என எல்லாவற்றையும் முஸ்லிம் பகுதிகளுக்குள்ளாகவே அவர்கள் அமல்படுத்தினர். ‘பிற முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரியலாம்; அவர்களை சிறை பிடிக்கலாம்; அவர்களின் பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைப்பற்றலாம்’ என்றனர்.

மேலும், அவர்கள் தங்களை எதிர்ப்பவர்களின் குழந்தைகளும் நிரந்தரமாக நரகத்தில் தங்குவர் என்றனர். குழந்தைகள்! அதாவது அவர்களை எதிர்க்கும் முஸ்லிம்களின் குழந்தைகளும் தம் பெற்றோரைப் போலவே நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்றனர். உறவின் அடிப்படையில் நிராகரிப்புக் குற்றத்தைச் சுமத்தி குழந்தைகள் என்றபோதிலும், நிராகரிப்பவர்களின் குழந்தைகள் என்பதால் அவர்களும் நிராகரிப்பவர்களே என்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் தங்களோடு சேர்ந்து போரில் ஈடுபடாத பிற ஃகவாரிஜ்களையும் நிராகரிப்பவர்களாகவே கருதினர். எனினும், பாதுகாப்பு பெற்றவர்கள் — முஸ்லிம்களோடு வாழ்ந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் (அஹ்லுத் திம்மா) — விஷயத்தில் இவர்களின் கொள்கை முரண்பட்டு இருந்தது. பாதுகாப்பு பெற்றவர்களின் உயிரும் அவர்களின் குடும்பத்தினரின் உயிரும் புனிதமானவை என்றும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவர்களின் இரத்தத்தைச் சிந்துவது தடுக்கப்பட்டது என்றும் நம்பினர். ஒரு பக்கம் நிராகரிப்பாளர்கள் என அவர்கள் கருதிய முஸ்லிம்களின் குழந்தைகளைக் கொல்வது ஆகுமானது என்று கூறிய அஸாரிகாக்கள், மறுபக்கம் பாதுகாப்பு பெற்றவர்களைக் கொல்லக் கூடாது என்றும் கூறினர்.

இவர்களின் சட்டவியலில் நாம் காணும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், இவர்கள் ‘றஜ்ம்’ என்னும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘றஜ்ம்’ என்பது திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை முறை ஆகும். அவர்களின் கூற்றுப்படி, இது குர்ஆனிலும் இல்லை; இறைத்தூதரின் வழிகாட்டலிலும் (சுன்னாஹ்) நிறுவப்படவில்லை. ஆதலால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இவர்கள், இறைத்தூதர்கள்கூட பெரும்பாவங்களுக்கும் (கபாயிர்), சிறுபாவங்களுக்கும் (சகாயிர்) ஆட்பட்டவர்கள் என்றனர். இதற்குச் சான்றாக ‘இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹம் முபீனா லி யக்ஃபிற லகல்லாஹூ — நிச்சயமாக உமக்கு வெளிப்படையான வெற்றியளிப்போம். எனவே, உம் முந்தைய-பிந்தைய பாவங்களை (தன்பு) அல்லாஹ் மன்னிப்பான்’ (திருக்குர்ஆன் 48:1) என வரும் வசனத்தை மேற்கோள் காட்டினர். இதைக் கொண்டு அவர்கள் கூறியதாவது, “இறைத்தூதர் முந்தைய, பிந்தைய பாவங்களை (தன்பு) கொண்டுள்ளார். எனினும், அல்லாஹ் அவற்றை மன்னித்துவிட்டான்; எவ்வாறாயினும் இறைத்தூதர் பாவம் செய்தார்; செய்வார் என்பதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது”. இத்தகையவர்கள்தான் அஸாரிகாக்கள்.

அந்நஜ்தாத்

அடுத்தது, அந்நஜ்தாத் வகை ஃகவாரிஜ்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் நஜ்தா இப்னு ஆமிர் என்பவரைப் பின்பற்றியவர்கள். அஸாரிகாவைவிட வன்முறை குறைந்த கொள்கைகளைக் கொண்டிருந்த இவர்கள், பின்வரும் ஒரு சில கொள்கைகளைத் தவிர மற்றவற்றில் ஏறத்தாழ அஸாரிகாவைப் போலவே இருந்தனர். அஸாரிகாவைப் போல இவர்கள் தங்களோடு சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போரில் ஈடுபடாத பிற ஃகவாரிஜ்களை நிராகரிப்பவர்களாகக் கருதவில்லை. மேலும், குழந்தைகளைக் கொல்வது தடுக்கப்பட்டது என்றனர். அதாவது, தங்களை எதிர்ப்பவர்களைக் கொல்லலாம்; ஆனால், அவர்களின் குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றனர். பாதுகாப்பு பெற்றவர்கள் விஷயத்திலும் இவர்கள் அஸாரிகாவோடு வேறுபட்டனர். பிற விஷயங்களில் பரந்த மனப்பான்மையோடு செயல்பட்ட நஜ்தாத், இவ்விஷயத்தில் “பாதுகாப்பு பெற்றவர்கள் எதிரிப் பிரதேசத்தின் அங்கமாக இருப்பதாலும் நாம் போர் செய்யும் எதிரி மக்களைச் சார்ந்திருப்பதாலும் அவர்களையும் கொலை செய்யலாம்” என்றனர்.

நஜ்தாத்துகளின் மற்றொரு முக்கியக் கொள்கை, முஸ்லிம்களுக்கு இமாம் அல்லது ஃகலீஃபா தேவையில்லை என்று கூறியது. இன்று தீவிர வலதுசாரிகள், தீவிர இடதுசாரிகள் மத்தியில் அரசாங்கம் என்ற கருத்தாக்கம் இல்லாமலேயே மக்கள் பொதுவாழ்க்கையை நடத்த முடியும் என்ற ஒரு சிந்தனை நிலவுகிறது. அரசியல் கல்வி பயிலும் மாணவர்கள் இதை அறிந்திருக்கக் கூடும். இங்கு அமெரிக்காவில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் அரசாங்கத்தின் பெரும்பகுதியை அகற்றிவிட விரும்புகிறார். வலதுசாரிச் சிந்தனைகொண்ட அவர் அத்திசையில்தான் செல்கிறார். அதேபோல, “இறுதியில், அரசு உதிர்ந்து விடும்” என்பது கார்ல் மார்க்ஸின் கூற்று. இதைச் சொல்வதன் மூலம் ஃகவாரிஜ்களை வலதுசாரிகள் என்றோ இடதுசாரிகள் என்றோ நான் கூறவில்லை. ஃகவாரிஜ்கள் அன்று கூறிய அக்கருத்து இன்று வாழும் நமக்குப் புதிதல்ல என்பதையே இங்கு சுட்டிக் காட்டுகிறேன். இன்று எதிர்காலத்துக்காகத் திட்டமிடும் அரசியல் கோட்பாட்டாளர்களும் கொள்கைவாதிகளும் ‘நாம் வலுவான சமூகச் சிந்தனை கொண்டவர்களாக இருந்தால் அதிபர், அரசர், இமாம் அல்லது ஃகலீஃபா போன்றவர்களை தலைவராகக் கொண்ட அரசாங்கம் என்ற கட்டமைப்பு இல்லாமலே நம் பிரச்சினைகளை சரி செய்துவிட முடியும். இத்தகைய பதவிகள் தேவையற்றவை’ என்று கூறுவதை நாம் பார்க்கிறோம். இதைத்தான் ஃகவாரிஜ்களும் கூறினர். எனினும், ‘மக்கள் தங்களுக்குத் தாங்களே நீதம் செய்து, அன்றாட வாழ்வில் நீதி நேர்மையை நிலைநாட்டும்படியான சமூகப் பிணைப்புடன் வாழ்வார்களெனில் மட்டுமே இமாம் அல்லது ஃகலீஃபா தேவையில்லை’ என்றும் அவர்கள் கூறினர். மேலும், “வாழ்க்கை என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலசமயம் மேற்கூறியது சாத்தியமில்லாது போய்விடலாம். அப்போது தலைமை தேவைப்படும்” என்றனர். இதை அவர்கள், ‘அல் இமாமத் ஜாயிஸா வ லைசத் வாஜிபா (தலைமை அனுமதிக்கப்பட்டது, கடமையானது அல்ல)’ என்று கூறினார்கள். அதாவது “தலைமையற்ற சமூகத்தை முயற்சி செய்து பின்னர் முஸ்லிம்கள் தமக்குத் தலைமை வேண்டும் என்று விரும்பினால் அவர்களின் தேவையை (மஸ்லஹா) பொறுத்து அது கடமை ஆகி விடும்” என்றனர்.

மேலும், இவர்கள் ‘தகிய்யா’ கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினர். அதாவது, அவர்கள் ‘காஃபிர்கள்’ எனக் கருதும் பிற முஸ்லிம்கள் மத்தியில் இருக்கையில், தங்கள் கொள்கைகளை வெளிப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சினால் அதை மறைத்துவிடுவர். பிற முஸ்லிம்களைப் போலத்தான் தாங்களும் எனப் பாசாங்கு செய்வர்.  இவ்வாறு செய்வது ஒருவகையான நயவஞ்சகம் அல்லது நேர்மையின்மை என நினைக்கும் பிற ஃகவாரிஜ்களைப் போலன்றி, இத்தகைய சந்தர்ப்பத்தில் தங்கள் அடையாளத்தை மறைப்பதில் தவறேதும் இல்லை என்று நஜ்தாத்துகள் கூறினர். ஹிஜ்ரீ 66இல் நஜ்தாத்துகளின் கட்டுப்பாட்டில் பஹ்றைன், ஹளற மவ்த், யமன், தாயிஃப் ஆகிய பகுதிகள் இருந்தன.

இபாதிய்யா

அடுத்ததாக இபாதிய்யா ஃகவாரிஜ்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள், அப்துல்லாஹ் இப்னு இபாத் என்பவரைப் பின்பற்றுபவர்கள். இன்று ஃகவாரிஜ் எனும் பொதுப் பிண்ணனி கொண்ட முஸ்லிம்களுள் ஏறத்தாழ 99% பேர் இபாதிய்யாக்களாகவே இருப்பர். நான் இவ்வகை ஃகவாரிஜ்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடி இருக்கிறேன். உண்மையைச் சொன்னால், ஃகவாரிஜ் என்று அழைக்கப்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. யாராவது அவ்வாறு குறிப்பிட்டால் இவர்கள் மனம் புண்படுவதைக் காணலாம். சிலசமயம் அவர்கள் சீற்றமடையவும் கூடும். ஃகவாரிஜ்களின் மத்தியில் மிகவும் நடுநிலையானவர்கள் எனக் கருதப்படுபவர்கள் இவர்களே. பிற ஃகவாரிஜ்களிடம் காணப்படும் தீவிரத்தன்மையோ, பகுத்தறிவற்ற போக்கு அல்லது பொறுப்பற்ற தன்மையோ இவர்களிடம் காணப்படுவதில்லை. இவர்கள் தங்களை எதிர்ப்பவர்களை நிராகரிப்பவர்கள் (காஃபிரீன்) என்று சொல்வதில்லை. அதேசமயம் அவர்களை நம்பிக்கையாளர்கள் (முஃமினூன்) என்றும் சொல்வதில்லை. இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள், “சரி, நீங்கள் முஸ்லிம்கள்தான். எனினும், தீவிரமாக ஒருபக்கம் சாய்ந்து உங்களை நிராகரிப்பவர்கள் என்றோ, அல்லது மறுபக்கம் சாய்ந்து நம்பிக்கையாளர் என்றோ நாங்கள் சொல்லப்போவதில்லை” என்கின்றனர்.

எனினும் சிலசமயம் இவர்கள், பிற முஸ்லிம்களைக் குறித்து நிராகரிப்பவர்கள்  (குஃப்ஃபார் அல்லது காஃபிரீன்) என்ற சொல்லைப் பிரயோகிப்பதுண்டு. அப்படிச் செய்கையில் அவர்கள் நம்பிக்கை அல்லது கொள்கையில் (அகீதா) நிராகரிப்பவர்கள் என்ற அர்த்தத்தில் அச்சொல்லைப் பிரயோகிப்பதில்லை. மாறாக இறைவனின் அருட்கொடைகளை (நிஃமா) நிராகரிப்பவர் என்ற அர்த்தத்திலேயே அதை பயன்படுத்துகின்றனர். ஃகவாரிஜ்களுள் சிந்திக்கத் துவங்கும் மக்களை இங்குதான் நாம் சந்திக்கிறோம். இவர்கள் விஷயங்களை மேலோட்டமாக அல்லது முன்யோசனையின்றி கையாளவில்லை.

நம்பிக்கையில் நிராகரிப்பு (குஃப்ர் ஈமான்) என்றும் இறைவனின் அருட்கொடைகளில் நிராகரிப்பு (குஃப்ர் நிஃமா) என்றும் பிரித்துப் பார்க்கிறார்கள். அதாவது அவர்கள் பிற முஸ்லிம்களைப் பார்த்து, ‘நீங்கள், அல்லாஹ், அவனது தூதரின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் (காஃபிர்) என்று சொல்லாமல் ‘இறைவனின் அருட்கொடைகளை (நிஅமத்) நிராகரிப்பவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நிராகரிப்பாளர்கள் (காஃபிர்)’ என்கின்றனர். மேலும், இறைவனின் அருட்கொடைகளை நிராகரித்தல் என்பது நம்பிக்கை அல்லது கொள்கையை நிராகரிப்பதற்குச் சமமாகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, அவர்கள் சொல்வதாவது ‘பிற முஸ்லிம்கள், அல்லாஹ் விதித்த சில பொறுப்புகளை நிராகரிப்பவர்கள் (அவர்களின் வார்த்தைகளில் ‘காஃபிறூன பி தன்பில்லாஹ்’); எனினும், அவர்கள் அல்லாஹ்வையே நிராகரிப்பவர்கள் அல்லர். ஆதலால் அவர்கள் நிராகரிப்பு எனும் தண்டனைக்குரிய கருதுகோளுக்கு குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்’. மேலும் அவர்கள் தங்களோடு முரண்படும் முஸ்லிம்களின் உயிர் மதிப்பு மிக்கது என்றும், பிற முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இஸ்லாமியப் பிரதேசங்களாகவே கருதப்படும் என்றும் கூறுகின்றனர். ஆகவே, பிற ஃகவாரிஜ்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் உண்மையான, ஆழமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்.

அவ்வாறெனில், இவர்களை ஃகவாரிஜ் என அடையாளப்படுத்துவது எது, பிற முஸ்லிம்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்துவது எது என்று நான் அவர்களிடம் கேட்டுள்ளேன். அதற்கு அவர்கள் கூறியதாவது, “அபூபக்ரு, உமரின் ஆட்சி நன்றாகவே இருந்தது. உஸ்மானின் முதல் ஆறு ஆண்டுகால ஆட்சியிலும் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகள் பிரச்சினைக்குரியவை. அதேபோல், மத்தியஸ்தத்திற்கு முன் இமாம் அலீயும் சரியாகவே இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவர்மீது எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு”. பிறரைப் போல அவர்கள் ஒரு தீவிரத்திற்குச் செல்லவில்லை என்றாலும் அவர்களுக்கு இமாம் அலீ மீது விமர்சனங்கள் இருந்தன. ஆகவே ‘ஷீஆ’, ‘சுன்னீ’களோடு இணங்கிச் செல்லாத ஒரு நிலைபாட்டை அவர்கள் கொண்டுள்ளனர்.

ஃகவாரிஜ்கள் தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டிருந்தனர் எனப் பார்த்தோம். இத்தகைய போர்களில் ஈடுபட்ட மற்ற ஃகவாரிஜ்கள், “போரில் கிடைக்கும் எல்லா வெற்றிப் பொருட்களும் எங்களுக்குத்தான் சொந்தம்” என்றனர். ஆனால் இபாதிய்யா வகை ஃகவாரிஜ்கள் கூறியதாவது, “இல்லை. இத்தகைய போர்களில் கிடைக்கும் வெற்றிப் பொருட்களை நாங்கள் சொந்தம் கொண்டாட மாட்டோம். அதில் கைப்பற்றப்படும் ராணுவத் தளவாடங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் தவிர்த்து பிற பொருட்களனைத்தும் அம்மக்களுக்கே உரியன. இவ்விரண்டை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்வோம். இவையல்லாத நிலம், வீடு போன்ற பிற உடமைகள் அவர்களுக்கே சொந்தம்” என்றனர். ஏனெனில், இவர்கள் யாரை எதிர்த்துப் போர் செய்தார்களோ அவர்கள் அனைவரும் முஸ்லிம்களே — அதாவது அவர்களுடைய பார்வையில், தவறான அரசியல் பாதையில் இருக்கும் முஸ்லிம்கள்.

மேலும், பிற ஃகவாரிஜ்களைப் போலன்றி இபாதிய்யாக்கள் தங்களோடு கருத்து வேறுபாடு கொண்ட பிற முஸ்லிம்களின் சாட்சியங்களையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ‘காபீலூ ஷஹாதத்தல் முஃகாலிஃபீன்’ என்றனர். “நீங்கள் எதிர் தரப்பினர்; ஆதலால் உங்கள் சாட்சியத்தை ஏற்கமாட்டோம்” என்று கூறிய பிற ஃகவாரிஜ்களைப் போலன்றி இபாதிய்யாக்கள் பிற முஸ்லிம்களின் சொற்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சாட்சியங்களும் நீதிமன்றங்களில் செல்லுபடியாகும் என்றனர். இபாதிய்யாக்கள் பிற முஸ்லிம்களோடு கலப்புத்திருமணமும் செய்தனர்; வாரிசுரிமைச் சட்டங்களும் சமமாகப் பொருந்தும் என்றனர். ஆனால், பிற வகை ஃகவாரிஜ்கள், இவை கூடாது என்றனர்.

மைமூனிய்யா

மைமூனிய்யா என்று அறியப்பட்ட மற்றொரு வகை ஃகவாரிஜ்கள், குர்ஆனில் தடுக்கப்படவில்லை என்று காரணம் காட்டி பேரப்பிள்ளைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றனர். இதைத் தோற்றுவித்தவர் மைமூன் அல் அஜ்றதீ என்பவர். இருபக்கமும் உள்ள பேரப்பிள்ளைகளை (பனாத் அல் அவ்லாது) மணம் முடிப்பது கூடும் என்று அவர்கள் கூறினர். அதாவது ஒரு பாட்டனார் உள்ளார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இருப்பார்களெனில், அவர்களிருவரின் பேரப்பிள்ளைகளும் இவருக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்பதே இதன் கருத்து.

அத்தியாயம் அந்நிசாவில் ஹுர்ரிமத் அலைக்கும் உம்மஹாதுகும் வ ஃகாலாத்துக்கும்…’ என வரும் வசனத்தில் பேரப்பிள்ளைகள் என்று குறிப்பிடப்படவில்லைதான். எனினும், குர்ஆன் இதை மேலோட்டமான அர்த்தத்தில் சொல்லவில்லை. வார்த்தைக்கு வார்த்தை பொருள்கொண்டு, இவ்வாறு மணமுடிப்பது அனுமதிக்கப்பட்டது என அவர்கள் பொருள் கொண்டனர். இறைவன் ‘ஃகாலா, ‘அம்மா’ எனச் சொல்லும்போது அதன் விரிந்த பொருளில் அவர்களின் பிள்ளைகளையும்தான் குறிப்பிடுகிறான். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?! ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இவ்வாறு மணமுடிப்பது தடுக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருக்கும்போது, இவர்கள் மட்டும் ‘நாங்கள் புதிதாகக் கண்டுபிடித்துவிட்டோம்’ என்ற ரீதியில் பேசுகின்றனர். உண்மையில், அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை; மாறாக அவர்கள் அவ்வசனத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது அவர்களிடம் உள்ள கோளாறு.

மேலும், மைமூனிய்யா வகை ஃகவாரிஜ்கள், யூசுஃப் அத்தியாயம் திருக்குர்ஆனிலேயே இல்லை என்றனர். அதை ஒரு காதல் கதை என்றனர். சதா போர் செய்துகொண்டே இருந்த அவர்களின் மனநிலை யூசுஃப் அத்தியாயத்தை குர்ஆனோடு பொருத்திப் பார்ப்பதை அனுமதிக்கவில்லை. “யூசுஃப்! ஒரு இறைத்தூதர் ஃபிர்அவ்னின் அரசாங்கத்தில் பங்கு பெறுவதா?! இது குர்ஆனாக இருக்க முடியாது. நிச்சயமாக இது ஒரு காதல் கதைதான்” என்றனர்.

சதாவும் போரில் ஈடுபட்டிருந்த இவர்கள் ‘கஸ்ரு, ஜம்உ’ தொழுகைகளை தங்கள் வாழ்வின் அங்கமாகவே ஆக்கிக் கொண்டனர். நான்கு றகஅத்துகளுக்கு பதிலாக எப்போதும் அவர்கள் இரண்டு றக்அத்துகள்தான் தொழுவர். காரணம் கேட்டால், “நான்கு றக்அத்துகள் தொழ வேண்டுமெனில் பாதுகாப்பாக உணர வேண்டும். ஆனால், நாங்கள் வீட்டில் இருந்தாலும் பாதுகாப்பாக உணர்வதில்லை. என்றுமே தேடப்படுபவர்களாகவும் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருக்கிறோம். எனவே, இரண்டு றக்அத்துகள்தான் தொழுவோம்” என்றனர்.

இவையனைத்தும் வினோதமாக உள்ளன. எனினும், நம் ஆரம்பகாலப் பிரிவின் ஒரு உண்மைப் பகுதிதான் இது. எனவே, இவர்களை முஸ்லிம்கள் அல்ல என்று சொல்லப் போகிறீர்களா?

யஸீதிய்யா

ஃகவாரிஜ்களின் வரிசையில் அடுத்து வருவது யஸீதிய்யா. நாம் என்னதான் திறந்த மனப்பான்மையுடன், எல்லோரையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம்களைக் கருதி, இயன்றவரை எல்லோரோடும் இணங்கிச் செல்ல முயன்றாலும் சிலர் தங்கள் கொள்கைகளில் ஒரு எல்லைக்குச் சென்று விடுகின்றனர். ஃகவாரிஜ்களிலும் இவ்வாறு சிலர் இருந்தனர். அவர்களை ‘இஸ்லாமிய வட்டத்துக்குள்தான் இருக்கின்றனர்’ எனத் தயக்கமின்றிக் கூற முடிவதில்லை — யஸீதிய்யாக்களைப் போல. இவர்களுக்கும் முஆவியாவின் மகன் யஸீதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யஸீத் இப்னு அபீ அனீஷா என்பவரின் காரணமாக இவர்கள் இப்பெயரைப் பெற்றனர்.

இவரையும் இவரைப் பின்பற்றியவர்களையும் பிற ஃகவாரிஜ்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய ஒரு அம்சம் என்னவெனில், இவர் ‘அல்லாஹ் அறபு அல்லாத (அஜமீ) மற்றொரு இறைத்தூதரை அனுப்புவான்; அவர் அறபு அல்லாதவர்களிடமிருந்து தோன்றுவார்; அவருக்குப் புதிதாக ஒரு வேதம் வழங்கப்படும். மேலும் முஹம்மதிய ஷரீஅத் சட்டத்தை ரத்து செய்வார். மற்ற இறைத்தூதர்களுக்கு நடந்ததுபோலவே திருக்குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தொடர்பான அனைத்தும் அழிக்கப்படும்’ என்றார். நிச்சயமாக இவற்றைக் குர்ஆனோடும் இறைத்தூதரின் வாழ்வோடும் பொருத்த முடியாது.

ஃகவாரிஜ்கள் மத்தியில் இருந்த ஒருசில மட்டுமீறிய, வெறுப்புக்குரிய அம்சங்கள் இவை. இதன் பொருள், எல்லா ஃகவாரிஜ்களும் இப்படி இருந்தார்கள் என்பதல்ல. இதை ‘சிறு எண்ணிக்கை கொண்ட, இப்போது இல்லாத ஓரிரு பிரிவுகள் இத்தகையை கொள்கைகளை ஒருகாலத்தில் கொண்டிருந்தன’ என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது அவர்கள் சென்றுவிட்டார்கள். நாம் கூறிய புதிய இறைத்தூதர் வருவது, பேரப்பிள்ளைகளைத் திருமணம் செய்ய அனுமதிப்பது போன்ற கொள்கைகளை பிற ஃகவாரிஜ்கள் கொண்டிருக்கவில்லை. இவை குறிப்பிட்ட இரு பிரிவுகளுக்கு மட்டுமே உரியன. அவர்கள் காலப்போக்கில் தேய்ந்து அழிந்துவிட்டனர்.

ஃகவாரிஜ்களின் மொத்த எண்ணிக்கை

ஃகவாரிஜ்களின் எண்ணிக்கை என்னவாக இருந்தது? அவர்கள் எப்படி மக்களை தம் பக்கம் ஈர்த்தனர் என்று பார்ப்போம்.

ஃகவாரிஜ்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அஸாரிக்கா, நஜ்தாத், இன்னபிற எல்லா ஃகவாரிஜ்களையும் சேர்த்துப் பார்த்தாலும் ஆரம்பத்தில் அவர்கள் குறைவாகவே இருந்தனர். இவர்களின் எண்ணிக்கையை கூறும் நூல் எதையும் நான் காணவில்லை. எனினும் யூசுஃப் அத்தியாயத்தைப் பற்றிப் பேசியவர்களை ஒரு 40 அல்லது 50 பேர் என்றும் அதேபோல் பேரப்பிள்ளைகளை மணமுடிக்க அனுமதித்தவர்களை ஏறக்குறைய 100 பேர் என்றும் கணிக்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல ஹிஜ்ரீ 66இல் ஃகவாரிஜ்கள் தம் உச்சத்தில் இருந்தனர். பஹ்றைன், ஹளற மவ்த், யமன், தாயிஃப் பகுதிகளில் அதிகாரம் செலுத்தினர். அதன் பிறகு அவர்களிடம் எதுவும் இல்லை; தங்கள் கருத்துகளைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களிடம் ஒரு சமூகம்கூட இருக்கவில்லை.

1960-70களில் இருந்த கருஞ்சிறுத்தைகள் (Black Panthers) போன்ற தலைமறைவுக் குழுக்களோடு இவர்களை ஒப்பிடலாம். தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால், அவ்வப்போது பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகள், நாட்டுப்புற அறபுகள் மத்தியில் தோன்றி பிரச்சாரம் செய்வர். இதைவிடுத்து அவர்கள் நகரங்களில் தோன்றியதாக எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை. இமாம் அலீயோடு கருத்து வேறுபாடு கொண்டபோதிலும், அவர்கள் கூஃபா அல்லது பஸ்றா போன்ற நகரங்களுக்குச் சென்று தங்கள் வாதங்களை எடுத்து வைக்கவில்லை. மாறாக தங்களுக்கென ஒரு தனிப் பகுதியை ஏற்படுத்திக்கொண்டு அங்கேயே பிரச்சாரம் செய்தனர்.

இன்று, அவர்களின் எண்ணிக்கையை நாம் ஊகித்தால் அதிகபட்சம் 40 அல்லது 50 இலட்சம் இருக்கக் கூடும். முஸ்லிம் உலகில் இத்தகைய கணக்கெடுப்புகள் நடப்பதில்லை. எனினும், அறிவார்ந்த ஊகத்தின் அடிப்படையில் இதை நாம் கூறுகிறோம். அறபிய்ய தீபகற்பத்தில் தோன்றிய இவர்கள் இன்று ஒமான் நாட்டில் மட்டுமே காணப்படுகின்றனர். இவர்கள்தாம் நான் முன்னர் குறிப்பிட்ட ‘இபாதிய்யாக்கள்’. இது தவிர பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால், அவர்கள் வட ஆப்பிரிக்கா — அதாவது அறபிய்ய அல்ஜீரியா, மொறாக்கோ, துனீசியா, லிபியா, ஸன்ஜிபார் (இன்றைய தான்ஸானியாவின் ஒரு பகுதி) — பகுதிகளில் இவர்களைக் காணலாம்.

கவாரிஜ்கள் குறித்து இமாம் அலீ

இஸ்லாத்தில் இத்தகைய ஃகவாரிஜ்கள் உருவாகத் தொடங்கியபோது, இமாம் அலீ இவர்களைக் குறித்து கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொலை செய்யும் எண்ணத்தோடு தன்னைக் கத்தியால் குத்தியது இவர்களில் ஒருவர் என்று அறிந்த அவர் இவ்வாறு கூறினார்:  “சத்தியத்தைத் தேடி அதை அடையும் முயற்சியில் வழிபிறழ்ந்தவர்களையும், அசத்தியத்தைத் தேடி அதை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவர்களையும் நாம் சமமாகப் பார்க்க முடியாது — லைச மன் தலபல் ஹக்க ஃப ஃகாதபஹு கமன் தலப அல்பாதிலஹு ஃப நாலஹூ”.

இதன் பொருள் என்னவெனில், ஃகவாரிஜ்களாகிய முதல் வகையினரையும், உமையாக்கள் மற்றும் இப்போரில் இமாம் அலீக்கு எதிராக இருந்த பிறரையும் உள்ளடக்கிய இரண்டாம் வகையினரையும் நாம் சமமாகப் பார்க்க முடியாது. அக்காலத்தில் தோன்றியவர்கள், இப்போது தோன்றியுள்ளவர்கள், மேலும், இவர்கள் எப்போதெல்லாம் முளைப்பார்களோ அப்போதெல்லாம் இத்தகையவர்களை இக்கூற்றின் அடிப்படையில்தான் நாம் பார்க்க வேண்டும் எனக் கருதுகிறேன்.  தீவிரவாதம் தலைதூக்கும் இன்றைய காலத்திலும் அது தலைதூக்கும் பகுதிகளிலும் இதுதான் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இருக்க வேண்டும். நாம் படிக்கும் வரலாறு மீண்டும் நிகழாது என்று நினைத்துவிடாதீர்கள். நம்மைச் சுற்றி நம் கண் முன்னே இப்போது இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் படித்துக்கொண்டிருப்பது நம் வரலாற்றை மட்டும் அல்ல; நம் நடப்பு நிகழ்வுகளையும்தான்.

இமாம் அலீ இவர்கள்குறித்து ஒரு விசாலமான பார்வையைக் கொண்டிருந்ததை நாம் பார்க்கிறோம். தன்னைத் தாக்கியவர் ஒரு ஃகவாரிஜ் என்பதை அறிந்தும் அக்குற்றத்தை அவர் பொதுமைபடுத்தவில்லை. இதிலிருந்து இமாம் அலீயின் மேன்மையை நாம் உணர முடிகிறது. அசத்தியத்தை நாடி அதை அடைந்துவிட்டவர்கள் — உமையாக்கள் — இருக்கையில், இவர்களை எதிர்கொள்ளும் முக்கியப் பணியை உணர்ந்து, ஃகவாரிஜ்கள் மீது பிற முஸ்லிம்கள் பொத்தாம்பொதுவான தாக்குதல் நடத்துவதை அவர் தடுத்தார். அவர் மரணத் தருவாயில்கூட பிரதான எதிரிக்கெதிரான தன் கவனத்தைச் சிதற விடவில்லை. ஆகச்சிறந்த ஆளுமைகளுக்கும்கூட இது மிக அரிதாகவே சாத்தியப்படும். எனினும், இமாம் அலீ தனிச்சிறப்பு வாய்ந்தவராயிற்றே.

இறுதியாக, இவ்வரலாறுகளைப் பார்க்கையில் இத்தகைய ‘ஷீஆ’, ‘சுன்னீ’, ‘ஃகவாரிஜ்’ போன்ற வகைப்படுத்தலானது அரசியல்ரீதியாக ஏற்பட்டது என்பது தெளிவாகிறது. இவை தோன்றிய அக்காலத்துக்குச் சென்று பார்த்தால், எப்படி தலைவரைத் தேர்ந்தெடுப்பது அல்லது எதன் அடிப்படையில் முடிவெடுப்பது போன்ற கேள்விகள்தாம் முன்னிலையில் இருந்தன. இன்றுபோல மக்கள் தொழும் முறைகளைக் கொண்டோ அல்லது அவர்களுடைய பிற சடங்கு முறைகளைக் கொண்டோ அன்று முஸ்லிம்களை பிரித்து அறிந்திருக்க முடியாது. அன்று வெவ்வேறு முறைகளில் தொழும் மக்கள் எல்லா ‘பிரிவு’களிலும் காணப்பட்டனர்.

காலப்போக்கில் இந்த அரசியல் வரையறுக்கப்பட்ட பின்னர், சடங்குகள் அதில் பொருந்திக்கொண்டன. அதன் பிறகு முஸ்லிம்களை அவர்களின் தொழுகை முறைகளைக் கொண்டு அடையாளம் காணும் போக்கு ஏற்பட்டது. அன்று அது தொழுகைக்கான வெவ்வேறு முறைகள் என்றே அறியப்பட்டன. இன்றுபோல அதுவே ஒரு பிரிவினையாகப் பார்க்கப்படவில்லை. இரண்டுக்குமான வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழில் : ஜுந்துப்

(நன்றி : மெல்லினம்)

ஆங்கிலத்தில் : Islamic History, Al Khawarij

Related posts

Leave a Comment