கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அறுக்கும் முன்…

Loading

[”…என்றார் தர்வேஷ்” என்னும் நூலின் ஒரு பதிவு, பக்ரீதை முன்னிட்டு…]

பக்ரீத் என்னும் தியாகப் பெருநாளில் அறுக்கப்படும் பிராணிகளுக்கான சட்டங்கள் குறித்துச் சபையில் உரையாடல் நடந்தது. அறுக்கப்படும் ஆட்டின் வயது என்னவாக இருக்க வேண்டும் என்னும் சட்டத்தைப் பற்றி சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

நன்கு வளர்ந்த ஆட்டையே அறுக்குமாறு நபி (ஸல்) சொல்லியுள்ளார்கள். பிராணியின் மீது இரக்கம் காட்டுவதற்கு அதுவே சிறந்தது என்று ஒருவர் வாதாடினார்: “முழுமையாக வளர்ந்த பிராணியையே அறுப்பீராக. அது (கிடைப்பதில்) உங்களுக்குச் சிரமமாக இருந்தால் மட்டும், அப்போது ஆட்டுக்குட்டியை அறுக்கலாம்.” (சுனன் அபூ தாவூது #2797)

நபி (ஸல்) அவர்களே ஆட்டுக்குட்டி ஒன்றை ஒருவருக்குக் கொடுத்து அதனை அறுக்கச் சொன்னார்கள் என்பதை ஒருவர் சுட்டிக் காட்டினார். “இது ஜத’உ (ஓராண்டுக்குக் குறைந்த ஆட்டுக்குட்டி)” என்று நபித்தோழர் சொன்னபோது, “ளஹ்ஹ பிஹி (அதனை அறுப்பீராக)” என்று நபி (ஸல்) சொன்னார்கள். (சுனன் அபூ தாவூது #2798)

இன்னொரு சீடர் அடுத்த ஹதீஸைச் சுட்டிக் காட்டினார். அது ஒரு சூழலைக் குறிப்பிடுகிறது. அப்போது ஆடுகள் கிடைப்பதில் மிகவும் தட்டுப்பாடு நிலவிற்று. அப்படியான காலகட்டத்தில் எல்லோருக்கும் முதிராடுகள் கிடைக்காது என்ற நிலை இருந்தது. இது நபி (ஸல்) அவர்களின் கருத்துக்குச் சென்றபோது, முழுமையாக வளர்ந்த ஆட்டிற்குப் பகரமாக ஓர் ஆட்டுக்குட்டியை அறுக்கலாம் என்று மக்களுக்கு அறிவிக்கச் சொன்னார்கள் (சுனன் அபூ தாவூது #2799). எனவே, முதிராடு கிடைக்காத காலத்துக்கு வழங்கப்பட்ட சலுகைதான் அது, அதுவே எல்லாக் காலத்திலும் அனுமதியாகிவிடாது என்று அந்தச் சீடர் வாதிட்டார்.

நன்கு வளர்ந்த பிராணி (அல்முஸ்ஸினா) என்பதன் வயது என்ன என்பதை மார்க்க அறிஞர்கள் ஆராய்ந்து நிர்ணயித்திருக்கிறார்கள். ஒட்டகம் எனில் ஐந்து வயது நிறைவு; மாடு எனில் இரண்டு வயது நிறைவு; வெள்ளாடு மற்றும் செம்மறி எனில் ஓராண்டு நிறைவு என்பது கணக்கு. இதன்படி சமுதாயம் செயற்படும். இதில் தடை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு ஹதீஸ்களை வைத்து உரையாடி முடித்த சபை அதுகாறும் மௌனமாக, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல் தலை குனிந்து அமர்ந்திருந்த தர்வேஷைப் பார்த்தது. சபை அமைதி ஆகிவிட்டதை உணர்ந்து அவர் முகத்தைத் தூக்கி அவர்களைப் பார்த்தார்.

”குர்பானி (பிராணியை அறுக்கும் வழமை) எப்படி வந்தது?” என்று கேட்டார்.

”நபி இப்றாஹீம் (அலை) தன் பிரியமுள்ள மகனார் நபி இஸ்மாஈல் (அலை) அவர்களைத் தனக்காக அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டான். அதனை அவர்கள் நிறைவேற்ற முனைந்தபோது நபி இஸ்மாஈலுக்குப் பகரமாக ஓர் ஆட்டை அறுக்குமாறு அனுப்பி வைத்தான். அந்த தியாகத்தை (குர்பானி) நினைவு கூர்ந்தே நாம் ஈதுல் அள்ஹா (என்னும் அதிகாலைப் பெருநாள்)-இல் கால்நடைகளை அறுத்து அர்ப்பணிக்கிறோம்” என்று சொன்னார் ஓர் இளம் பேராசிரியர்.

”ஆட்டுக் குட்டியையும் அறுக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் இறைச்சட்டத்தில் கொடுத்த அனுமதிக்கும் இதற்கும் தொடர்பு உண்டல்லவா?” என்று தர்வேஷ் கேட்டார்.

சீடர் குழாம் புருவம் உயர்த்தி விழித்துப் பார்த்தது.

”இஸ்மாஈல் (அலை) பிறந்தபோது இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வயது எண்பத்தாறு என்கிறார்கள். இறைவனுக்காக அறுபட ஆயத்தமானபோது இஸ்மாஈல் (அலை) அவர்களின் வயது பதின்மூன்று. அப்படியானால், அப்போது இப்றாஹீம் (அலை) அவர்கள் நூறு வயதை நெருங்கிவிட்டார்கள். இதைச் சொல்லக் காரணம், அப்போதெல்லாம் மனிதனின் சராசரி வயது நூறுக்கு மேல். அப்போது தியாகத்துக்குத் தயாரான சிறுவனுக்குப் பதின்பருவ வயது. பத்து சதவிகித வயது. ஒரு ஆட்டுக்கு சராசரி வயது பத்திலிருந்து பன்னிரண்டு. எனவே, அதில் பத்து சதவிகித ஆயுள் என்றால் ஓராண்டு வருகிறது. எனவே, அந்த வயது ஆடு அறுப்புக்கு உரியதாகிறது.

”இதெல்லாம் சட்டத்திற்கான விளக்கம். இது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் யார் என்று சிந்தித்தீர்களா?” என்று தர்வேஷ் சபையை நோக்கி வினவினார்.

சபையினர் ஒருவருக்கொருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர். ஒன்றும் பேசாமல் இருந்தனர்.

“நாம் ஏன் இளம் பிராணிகளை அறுக்கிறோம்? அதன் இறைச்சி மென்மையாக இருப்பதற்காக என்று சொல்கிறோம். அதுதான் ருசியாக இருக்கும் என்கிறோம். நாவு ருசி தேடி அலைவதில் சட்டங்களை நமக்குச் சாதகமாக வளைக்கிறோம். ருசியாகச் சாப்பிட்டால்தானே அல்லாஹ்வுக்கு மனமுவந்து நன்றி சொல்லலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறோம். சபாஷ்! அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வதில் நாம் அவ்லியாக்களை மிஞ்சிவிட்டோம் பாருங்கள்!

”ஓ! நம் உள்ளங்களில் பாவ எண்ணங்களை வளர விடுகிறோம். அது முதிர்ந்து முற்றித் தானாகத் தணியும்போது அதை வென்றுவிட்டதாகவும், இறைவனிடம் திரும்பிவிட்டதாகவும் (தவ்பா செய்துவிட்டதாகவும்) பீற்றிக்கொள்கிறோம். எத்தகைய சுய ஏமாற்று! மனத்தில் பாவங்களை அது தோன்றியதுமே நீக்க மாட்டோம். அதை மேயவிட்டு வளர்ப்போம். ஆனால் வயிற்றுணவுக்கு இளம் பிராணியை அறுப்போம். என்ன தகுதி இருக்கிறது நமக்கு?”

தர்வேஷ் மௌனமானார். சீடர்கள் பயந்துபோய் ஆடாமல் அசையாமல் இருந்தனர்.

“’இன்னன் நஃப்ச ல’அம்மாரத்தும் பிஸ்-ஸூஇ’ (12:53) என்கிறது குர்ஆன். நிச்சயமாக மனம் தீமையைக் கொண்டு தூண்டுகின்றது. அது இழிவான காரியங்களுக்குத் தூண்டும் மனம். ஆசாபாசங்கள் என்னும் மாயக் கோசங்கள் செழித்து அடர்ந்து கிடக்கும் மனம்.  நஃப்சுல் அம்மாரா என்னும் இவ்வகை மனம் கொண்டவன் ஃபிர்’அவ்ன் ஆவான்.

“இப்றாஹீம் நபி, இஸ்மாஈல் நபி ஆகியோரின் மனம் இறைவனின் கட்டளையைப் பொருந்திக் கொண்ட மனம் ஆகும். அது நஃப்சுர் ராளிய்யா. அந்த மனத்தை இறைவனும் பொருந்திக் கொள்கிறான். அது நஃப்சும் மர்ளிய்யா. “நண்பர்களே! உங்கள் மனம் நஃப்சுல் அம்மாராவாக இருக்கும் நிலையில் ஆட்டுக் குட்டியை அறுப்பீர்கள் என்றால் அது குழந்தைகளைக் கொல்லும்படி ஃபிர்’அவ்ன் கட்டளை இட்டதைப் போலாகும். உங்கள் மனம் நஃப்சுர் ராளிய்யாவாக இருக்கும் நிலையில் ஆட்டுக்குட்டியை அறுப்பீர்கள் என்றால் அது நபி இப்றாஹீம் (அலை) தன் இளம் புதல்வரான நபி இஸ்மாஈலை (அலை) அறுப்பதைப் போலாகும். முன்னது மோசடி. பின்னது தியாகம். புரிந்துகொள்ளுங்கள்” என்றார் தர்வேஷ்.

Related posts

Leave a Comment