குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஓர் அழகிய ஆவணம்

Loading

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளான ஹதீஸ்களின் தொகுப்பு நூல்களில் முதன்மை இடம்பெறுவது ‘ஸஹீஹுல் புஃகாரீ’. இத்தொகுப்பு அளவிலும் மிகவும் பெரியதாகும். அதில் ஏறத்தாழ 7563 நபிமொழிகள் உள்ளன. இந்நூலுக்கு மார்க்க அறிஞர் பலரும் விரிவுரை நூற்கள் எழுதியுள்ளனர். அவற்றுள் ஒன்று இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (இ.852 ஹிஜ்ரீ) அவர்கள் எழுதிய ‘ஃபத்ஹுல் பாரீ’ என்பதாகும். அறபி மொழியில் 13 பாகங்கள் (ஏறத்தாழ 9000 பக்கங்கள்) கொண்டுள்ள இந்தப் பெருநூலை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதி முடிக்க இருபத்தைந்து ஆண்டுகள் ஆனதாம்.

இந்தப் பெருநூலின் மூலக் கையெழுத்துப் பிரதியில் உள்ள தாள் ஒன்றின் புகைப்படத்தை முகநூலில் கண்டேன். இமாம் அவர்களின் அறபி எழுத்துக்களின் மீது கண்டபடி கிறுக்கப்பட்டிருந்தது! முகநூலில் அதை இட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த டாக்டர் அர்ஷத் அஹ்மது எம்.பி,பி.எஸ்., எம்.டி அவர்கள் அதுபற்றி ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். அதனைப் படித்தபோது என் மனத்தில் அந்த மகானின் மீது மேலும் மதிப்புக் கூடிவிட்டது. அவர் எழுதியிருந்த அந்த நிகழ்வு உண்மைதான் என்று என் மனம் நம்புகிறது. அது ஓர் அற்புத நிகழ்வுதான்.

மைக்கூட்டினுள் எழுதுகோலைத் தோய்த்துத் தோய்த்து மகான் அவர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அப்போது மதியத் தொழுகைக்கான பாங்கு ஓசை கேட்கிறது. எழுதிய தாளையும் எழுதுகோலையும் அப்படியே வைத்துவிட்டு இமாம் அவர்கள் பள்ளிவாசலுக்குப் போய்விடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து அவர்களின் அறைக்குள் நுழைகிறாள் மகானின் மகள். அவள் மூன்று வயதுச் சிறுமி. அப்போதுதான் எழுதக் கற்றுக்கொள்ளும் வயது. ஆர்வத்தால் தன் தந்தை எழுதிய தாளிலேயே அவளும் எழுதுகிறாள். அவள் செய்ததுதான் அந்தக் கிறுக்கல்கள்.

தொழுகை முடித்து அறைக்குத் திரும்பி வந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் ஹதீஸ் விரிவுரை எழுதப்பட்ட அந்தத் தாளைப் பார்க்கிறார்கள். தன் மகள் அதில் கிறுக்கி வைத்திருப்பதை அறிகிறார்கள். வேறொரு தாளில் அதை அப்படியே எழுதிக்கொண்டு அதைக் கிழித்துப் போட்டிருக்கலாம். கால் நூற்றாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதும் பணியில் ஒரேயொரு தாளை மீண்டும் படி எடுப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால், மகான் அவர்கள் தன் மகள் கிறுக்கிய அந்தத் தாளை அப்படியே தன் நூலில் சேர்த்துவிட்டார்கள். அது இன்றும் மூலக் கையெழுத்து ஆவணமாக  (manuscript) இருக்கிறது.

இந்தச் செய்தியைப் படித்த பிறகு ஆறு நாட்களாக அது என் சிந்தனையில் மீண்டும்மீண்டும் எழுந்துகொண்டே இருந்தது. மகான் அதை மாற்றாமல் அப்படியே இடம்பெறச் செய்தது ஏன்? இதன் பின்னணியில் அவர்களின் உள்ளத்தில் செயல்பட்ட இறைஞானம் என்ன? இதை நான் ஆழ்ந்து தியானித்தேன். சில விளக்கங்கள் என்னுள் வெளிச்சம் ஆயின.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் அருளப்பட்ட வேத வெளிப்பாடான சூறத்துல் அலக் என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிறான்:

”அவனே எழுதுகோலால் கற்பித்தான்; மனிதனுக்கு அவன் அறியாதவற்றை எல்லாம் கற்பித்தான்.” (96:4-5)

முதல் மனிதராம் ஆதம் (அலை) அவர்களுக்கு எழுத்துக்களைக் கற்றுத் தந்தவன் இறைவனே. ”அவனே ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்பித்தான்” (2:31) என்னும் திருக்குர்ஆன் வசனத்தினுள் இக்கருத்து பொதிந்துள்ளது.

 ஆதம் நபியின் வழியாக அவரின் பிள்ளைகள் கற்றிருக்கலாம். ஆனால், அவரின் வழியாக அவரின் பிள்ளைகளுக்கும் எதார்த்தத்தில் கற்பித்தவன் இறைவனே. இறைவன்தான் மனிதனுக்குக் கற்பித்து அவனை அறிவாளி ஆக்குகிறான். எக்காலமும், ஒரு மனித ஆசிரியரின் வழியாக கற்றாலும் அந்த ஆசிரியரின் வழியாக உண்மையில் கற்பிப்பவன் இறைவனே.

சரி, மகான் அவர்களின் சிறு மகள் அவர்களின் தாளில் கிறுக்கியபோது அவள் மட்டுமே இருந்தாள். வேறு எந்த ஆசிரியரும் அங்கே இல்லையே? அவள் தானாகவேதான் கிறுக்கினாள் அல்லவா? இதைச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய ‘பித்தன்’ என்னும் நூலில் உள்ள ‘சுவர்’ என்னும் பின்வரும் கவிதை நினைவுக்கு வந்தது

பித்தன்

சுவரில்

கிறுக்கிக்கொண்டிருந்தான்.

நான்

‘சுவரில் எழுதாதே’ என்ற

வாசகத்தைச்

சுட்டிக் காட்டினேன்.

“சுவரில்தானே

எழுத முடியும்?”

என்றான் பித்தன்.

அவன் மேலும் சொன்னான்:

… … …

“எழுத்துக்கள் என்பதென்ன?

அங்கீகரிக்கப்பட்ட

கிறுக்கல்கள்தாமே?

… … …

உங்களால்

படிக்க முடியாதபோது

எழுத்துக்களைக்

கிறுக்கல்

என்கிறீர்கள்.

எழுத்துக்களால்

எழுத முடியாதபோது

நான் கிறுக்குகிறேன்.”

இந்தக் கவிதை நினைவில் மின்னல் அடித்ததும் சட்டென்று புதிரின் முடிச்சுக்கள் அவிழ்ந்துவிட்டன. உண்மையில், அந்தக் குழந்தை செய்தது கிறுக்கல்தானா? அது எழுத்துக்கள் இல்லையா? அதற்கு ஓர் அர்த்தத்தை மனத்தில் யோசித்து, ‘இதை நான் எழுதுகிறேன்’ என்னும் சிந்தனையோடுதானே அந்தப் பிள்ளை அதை வரைந்திருப்பாள்? அப்படி என்றால் நமக்குப் புரியவில்லை என்பதற்காக அதைக் கிறுக்கல் என்று சொல்வது தகுமா?

முன்பு ஒரு தடவை முகநூலில் பார்த்த காணொளி ஒன்று நினைவுக்கு வந்தது. தமிழின் உயிர் எழுத்துக்களை எழுதக் கற்றுக்கொண்டிருக்கும் சிறுவன் ஒருவனுக்கு ‘இ’ என்னும் எழுத்தின் வரி வடிவம் இலகுவாக இல்லை. அவன் அதை வேறு தினுசாக ‘எழுதி’க்கொண்டு வந்து ஆசிரியரிடம் காட்டுகிறான். “இது என்னடா இப்படிக் கிறுக்கி வச்சிருக்க? இது என்ன ’இ’யா?” என்று அவனை அவர் திட்டுகிறார். அவன் ”ஆமாம் இது ’இ’ தான்” என்கிறான். “இது நல்லாவே இல்ல. ‘இ’ இப்படியா இருக்கும்?” என்று ஆசிரியர் கூறுகிறார். “எனக்கு இது அழகாத்தான் இருக்கு” என்கிறான் அவன். “இப்படி இருக்காது ‘இ’. நான் எப்படி எழுதியிருக்கேன்னு பார்” என்கிறார் ஆசிரியர். அதற்கு அவன் சொன்னான், “இந்த ‘இ’ என்னோடது!”

அதுபோல், அது அப்போது மகான் அவர்களின் சிறு மகளின் அறபி!

சிறு பிள்ளைகள் ஒழுங்காக எழுத வேண்டும் என்று அவற்றின் கைகளைப் பிடித்துப் பெரியவர்கள் எழுத வைப்பார்கள் அல்லவா? மகானின் மகள் எழுதுகோலைப் பிடித்து ‘எழுதிய’போது அங்கே அவளின் கையை இறைவனே பற்றியிருந்தான், அவனே எழுதக் கற்பித்தான். அந்த எழுத்தை அழிக்கவோ கிழிக்கவோ மகானுக்கு மனம் வருமா?

அந்தப் பிள்ளை எழுதுகோலைத் தானாகவே பிடித்ததா என்ன? ”அடியானின் கையாக நான் ஆகிவிடுகிறேன். அவன் என்னைக் கொண்டே பிடிக்கிறான்” (ஸஹீஹுல் புஃகாரீ, 6502) என்பதன்படி இறைவனைக் கொண்டே அல்லவா அந்தச் சிறுமி எழுதுகோலைப் பற்றினாள். அந்த எழுத்தை நீக்க மகானுக்கு மனம் வருமா?

பிள்ளைகள் பேசக் கற்கும்போது ஆரம்பத்திலேயே வளர்ந்தவர்களின் மொழியிலா பேசுகிறார்கள்? எந்த மொழியாக இருந்தாலும் அதன் ஆரம்ப நிலை மழலை அல்லவா? அதை நாம் எவ்வளவு ரசிக்கிறோம். அது குழலினும் யாழினும் இனிது அல்லவா? அதே போன்றுதானே பிள்ளைகள் எழுதிப் பழகுவதும்? மகானின் மகள் அந்தத் தாளில் கிறுக்கிவிட்டாள் என்று நாம் ‘புரியாமல்’ கருதுகின்ற அந்தக் கோடுகள் உண்மையில் மழலை மொழியின் எழுத்து வடிவம் அல்லவா? நபியின் ஹதீஸுக்கு மழலை மொழியில் அமைந்த தஃப்சீரை நீக்க மகானின் மனம் எப்படி ஒப்பும்?

இதில் இன்னொரு அகமியமான கோணமும் இருக்கிறது. மகான்களுக்கு ‘கஷ்ஃப்’ என்னும் அகநிலையை அருளி, பிறருக்குப் புலப்படாதவற்றை இறைவன் புலப்படுத்துவது உண்டு. அவ்வகையில் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் தன் மகள் எந்தச் சிந்தனையோடு அந்தக் கோடுகளை இட்டிருப்பார் என்று அறிந்திருக்கலாம்.

“இறைவா! என் தந்தையின் இந்தப் பணியை நீ ஏற்றுக்கொள்வாயாக!” என்னும் பிரார்த்தனையாக அது இருந்திருக்கலாம்! அதுவேகூட அந்தப் பணிக்குக் கிடைத்த மிகப் பெரிய நற்கூலி அல்லவா?

Related posts

Leave a Comment