உரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

Loading

முஸ்லிம்கள் தம் ஆரம்ப கால வரலாற்றில் மூன்று விஷயங்களில் வெவ்வேறு விதமான பார்வைகளைக் கொண்டிருந்தனர் என்று பார்த்தோம். முதலாவது அரசியல் சார்ந்தது என்றும், இரண்டாவது சித்தாந்தம் அல்லது தத்துவம் சார்ந்தது என்றும், மூன்றாவது சட்டவியல் (ஃபிக்ஹு) — அதாவது அல்லாஹ்வோடு நாம் கொண்டுள்ள ஈடுபாட்டின் செயலாக்கம் — பற்றியது என்றும் பார்த்தோம்.

அரசியல் சார்ந்த வரலாற்றில் ‘ஷீஆ கண்ணோட்டம்’ என்று அழைக்கப்படுவது குறித்தும், அதற்கடுத்து ஃகவாரிஜ் குறித்தும் ஆரம்ப கால வரலாறுபற்றிய அவர்களது பார்வை குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். அவ்வரிசையில் இந்த அத்தியாயத்தில் தங்களை அஹ்லுஸ் சுன்னா அல்லது ஜும்ஹூர் அல்லது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் எனக் கருதுபவர்களின் சிந்தனைப் பார்வையை இயன்ற அளவு தெளிவுபடுத்த முயல்வோம்.

இவ்வகை முஸ்லிம்களைக் குறிக்க இம்மூன்று பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றை இவர்கள் எப்படி வியாக்கியானம் செய்தனர் என்று பார்ப்போம். ஒரு கோணத்தில் பார்த்தால், தங்களை ‘ஷீஆ’ என கூறிக்கொண்டவர்கள் முக்கியமான இந்த காலகட்டத்தை நன்கு சிந்தித்து, முஸ்லிம்களின் தலைமையானது சாசன முறைப்படிதான் (வஸிய்யத்) நிறுவப்பட வேண்டும் என நம்பினர். அதாவது முன்னாள் தலைவர், தன் பொறுப்பை அடுத்த தலைவருக்கு ஒப்படைப்பதன் மூலம் முஸ்லிம்களின் தலைமை நிறுவப்படும் என்றனர்.

ரத்தக் களரியோடு பரபரப்பாகச் செயல்பட்ட ஃகவாரிஜ்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்க வேண்டிய தலைமையே, பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டதாகக் கருதினர். எனவே, மத்தியிலுள்ள இஸ்லாமியத் தலைமையின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று முஸ்லிம்கள் சில சமயம் தலைவர், அரசாங்கம் இல்லாமலேயே செயல்படலாம் என்றும் கூறினர். இங்கு நம் வரலாற்றின் அரசியல் கூறினை மட்டுமே பார்க்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தலைமை

இப்போது — இன்றைய மொழிவழக்கில் — தம்மை சுன்னீ என்று அழைத்துக்கொள்பவர்களைப் பற்றி பார்ப்போம். தலைமைகுறித்த கருத்தை இவர்கள் எப்படி அணுகினார்கள் என்பதை நியாயமாகவும் நேர்மையாகவும் அறிய முயல்வோம். முதலில் தலைமை என்பது இவ்வுலகில் செயல்படும் தெய்விக ஒழுங்கின் முழுமையான ஓர் அங்கம் என்று அவர்கள் நம்பினர். இஸ்லாமிய அரசாங்கம் இன்றி இஸ்லாமியச் சமூகம் இருக்க முடியாது என்றும், இஸ்லாமியத் தலைமை இன்றி இஸ்லாமிய மக்கள் இருக்க முடியாது என்றும் நம்பினர். மேலும், தலைவர்கள் குறைஷிகளிலிருந்தே வர வேண்டும் எனப் பொருள்படும் இறைத்தூதரின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டினர். ‘அல் அஇம்மத்து மின் குறைஷ்’ என்பது இறைத்தூதரின் ஒரு ஹதீஸ். இதே அர்த்தத்தில் வேறுபல ஹதீஸ்களும் உள்ளபோதிலும், இது மற்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே, இந்த ஹதீஸைக் கொண்டு ‘முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு தலைவரைக் கொண்டிருப்பது இன்றியமையாதது’ என்று நிறுவ முயன்றனர்.

பிற இலக்கியங்களைவிட சுன்னீ இலக்கியங்களில் ‘ஃகலீஃபா’ எனற சொல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனினும், நாம் முன்னர் மேற்கோள் காட்டிய ஹதீஸ் ‘இமாம்’, ‘அஇம்மா’ என்ற சொற்பிரயோகத்தையே கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். ஆகவே, சுன்னீ இலக்கியங்களில் இமாம் என்பதிலிருந்து ஃகலீஃபா என்பதாக அச்சொல் பெயர்ச்சி அடைந்துள்ளது என்று அறிய முடிகிறது. எனினும், நம் பேசுபொருளுக்கும் வரலாற்றின் இத்தகைய கருத்துருவாக்கத்துக்குக் காரணமாயிருந்த அறிஞர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டுமெனில், இவர்களைப் பொறுத்தவரை, ஃகலீஃபா என்பதும் இமாம் என்பதும் ஒருபொருள் தரும் இரு சொற்கள் என்றே கூற வேண்டும்.

நான்கு கூறுகள்

இமாம் அல்லது ஃகலீஃபா குறித்து இவர்களின் புரிதல் என்னவாக இருந்தது?  இவர்களைப் பொறுத்தவரை அது நான்கு கூறுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, நாம் ஏற்கனவே சொன்னதுபோல தலைவர் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; வேறு எந்தக் குலத்தைச் சேர்ந்தவரும் தலைவராக முடியாது. தலைமையை இஸ்லாமியத் தலைமையாக மாற்றும் இரண்டாவது கூறு, ‘பற்றுறுதி’ (பைஅத்) ஆகும். தலைவருக்கு மக்கள் பற்றுறுதி அளிக்கவில்லை எனில், அவர் உண்மையான தலைவராக முடியாது. ‘பற்றுறுதி’ என்பது தலைமைத்துவத்தின் உள்ளார்ந்த அடிப்படை அங்கம் ஆகும். இஸ்லாமியத் தலைமையின் மூன்றாவது கூறு ‘கலந்தாலோசனை’ (ஷூறா) ஆகும். பிற முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு, தலைமைக்கு வலுவூட்டி உண்மைப்படுத்துவதன் மூலம் அதைச் சட்டபூர்வமானதாக மாற்றுகிறது. நான்காவது கூறு நீதி (அதாலா) ஆகும்.

தன் பண்பு நலன்களில் நீதியை பிரதானமாகக் கொண்டிராத ஒருவர் தலைவராக முடியாது. நீதி எல்லா துறைகளிலும் வெளிப்பட வேண்டும். தனிமனித உறவுகளிலும் சரி, சமூக – பொருளாதார மட்டத்திலும் சரி, எல்லா இடத்திலும் அவர் நீதியை நிலைநாட்டுபவராக இருக்க வேண்டும். ஆகவே, இந்த எல்லா கூறுகளையும்  ஒன்றிணைத்துப் பார்த்தால் தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். இது ஃகலீஃபா அல்லது இமாம் என்பதற்கான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் (சுன்னீ) கோட்பாட்டுரீதியான விளக்கம் ஆகும்.

குறைஷி தலைவர்

திருக்குர்ஆனும் இறைத்தூதரும் கூறியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவையே இந்த நான்கு கூறுகளும். நாம் ஏற்கனவே குறைஷ் குறித்த ஒரு செய்தியை (ஹதீஸ்) பார்த்தோம். மற்றொன்றில் அக்கால மக்கள்குறித்து இறைத்தூதர் கூறியதாக அறிவிக்கப்படுவதாவது, “அன்னாசு தபவுன் லி குறைஷின் ஃபீ ஹாதஷ் ஷ’அன். முஸ்லிமுஹும் தபவுன் லி முஸ்லிமிஹிம் வ காஃபிருஹும் தபவுன் லி காஃபிரிஹிம் — ஏதோவொரு வகையில் குறைஷிகள் தலைவர்கள்தாம். குறைஷிகளில் உள்ள முஸ்லிம்கள், பிற முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்கிறார்கள்; குறைஷிகளில் உள்ள நிராகரிப்பவர்கள் (குஃப்பார்கள்) பிற நிராகரிப்பவர்களுக்கு தலைமை வகிக்கிறார்கள்.”

புஃகாரியில் வரும் மற்றொரு செய்தி (ஹதீஸ்) இவ்வாறு சொல்கிறது: “இன்ன ஹாதல் அம்ர ஃபீ குறைஷ். லா யுஆதீஹிம் அஹதுன் இல்லா கப்பலல்லாஹு அலா வஜ்ஹிக். மா அகாமுத் தீன் — நிச்சயமாக (இஸ்லாமிய அரசாங்கம்பற்றிய) இந்த விவகாரம் முழுமையாக குறைஷிகளுக்கே உரியது. அவர்கள் தீனை நிலைநாட்டும் வரையில் அவர்களுக்கு விரோதம் பாராட்டும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புற விழச் செய்வான்.”

புஃகாரீ அறிவிக்கும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் பொய்யர்கள் யாரும் இல்லை. இறுதியாக, இந்த ஹதீஸ் இறைத்தூதர் கூறியதாக முஆவியாவால் அறிவிக்கப்படுகிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். நான் இங்கு இந்த ஹதீஸ்களை மேற்கோள் மட்டுமே காட்டுகிறேன். இவை நம் வரலாற்றின் மேன்மையான பகுதிகள். என்னை அறிந்தவர்கள் இதுபற்றிய என் கருத்தை அறிவார்கள் என நம்புகிறேன். ஆதலால், இயன்றவரை இப்பேசுபொருளுக்கு நேர்மையாக இருக்க முயல்கிறேன்.

இதுவரை இமாமத் கோட்பாடு பற்றியும், யார் இமாம் ஆக முடியும் என்பது பற்றியும் பார்த்தோம். மேம்போக்காகப் பார்க்கையில் இதுவரையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே தோன்றுகிறது. இப்போது இவற்றை கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். குறைஷிகளிலிருந்தே தலைவர் வர வேண்டும் என்பதன் பொருள் என்ன? இத்தகைய ஹதீஸ்களை மேற்கோள் காட்டும் முஸ்லிம்கள், இறைத்தூதர் இவற்றைக் கூறினார் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை என்றே நம்புகிறேன். எனில், இது காலவரம்பற்ற கூற்றா? அதாவது என்றென்றைக்கும் முஸ்லிம்களின் தலைவராக ஒரு குறைஷிதான் இருக்க வேண்டுமா? அல்லது அவர் கூறியது, அன்றைய வாழ்வின் எதார்த்தத்தில் அமைந்த இயல்பான வாக்கியமா? இங்குதான் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்த ஹதீஸ்களை மேற்கோள் காட்டும் பிற மக்கள் கருத்து வேறுபடுகின்றனர். சிலர் “இது கால வரையறையற்ற கூற்று” என்கின்றனர். காலாகாலத்துக்கும் குறைஷிகளிலிருந்தே தலைவர் அமைய வேண்டும் என்கின்றனர். இன்றிலிருந்து லட்சம் ஆண்டுகள் ஆனாலும் சரி, அது அப்படித்தான் அமைய வேண்டும் என்கின்றனர். மேலும் சிலர் “இல்லை, இது தலைமுறை கடந்த கூற்று அல்ல. அது அக்காலத்து அறபியாவில் ஏற்பட்ட குறிப்பான சில சந்தர்ப்ப சூழல்களைக் கருத்தில் கொண்டு கூறப்பட்ட வாக்கியம். எனவே, அத்தகைய சூழலில் மட்டும் குறைஷியைத் தலைவராகக் கொள்ளலாம்” என்கின்றனர்.

அன்றைய மாறுபட்ட அறபுச் சூழலில் இக்கூற்றின் விளைவு என்னவாக இருந்தது? நாடோடிக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகம் பண்பாட்டு வளர்ச்சியடைந்து, நாகரிகமடைந்த சமூகமாக மாறியிருந்தது. இறைத்தூதர் மற்றும் திருக்குர்ஆனின் வருகைக்கு முன்னர் பல்வேறு குழுக்களாக, கோத்திரங்களாகப் பிரிந்து சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த சமூகம், இவர்களின் வருகைக்குப் பிறகு புதிய நிலை மக்களைக் கொண்டதாக மாறியது. இப்புதிய மக்கள், முந்தைய அறபு மக்களின் விவரணங்களை மாற்றியமைப்பவர்களாக மேலோங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நமக்குப் பரிட்சயமான அத்தகைய ஒரு மாற்றம், அன்ஸார் – முஹாஜிரீன் உருவாக்கம் ஆகும். இதற்கு முன்னர் இல்லாத இவ்விரு வகை மக்கள், இப்போது சமூகத்தின் முக்கிய அங்கங்களாக மாறினர். ‘அல் அஇம்மத்து மின் குறைஷ்’ எனக் கூறி இறைத்தூதருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களை நியாயப்படுத்துபவர்கள், மறைமுகமாகக் கூறுவது என்னவெனில், அன்ஸார்கள் தலைவர்களாவதற்கு தகுதியற்றவர்கள்’ என்பதே. ஏனெனில் அன்ஸார்கள் குறைஷிகள் அல்லர். இவ்வாறாக, ஒற்றை ஹதீஸைக் கொண்டு அன்ஸார்கள் தலைமைப் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இறைத்தூதருக்கு ஆதரவளித்து, முதல் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவ முயன்ற மதீனத்து மக்கள் இந்த ஹதீஸ் குறித்த இவ்விளக்கத்தைப் பற்றி எவ்வாறு உணர்ந்தார்கள் என விளங்க இது உதவும்.

இஸ்லாத்தின் நியதியோடு பொருந்தாத ஹதீஸ்: மேலும் சிந்தித்தால் இந்த ஹதீஸை இஸ்லாத்தின் நியதியோடு பொருத்துவது மிகக் கடினம் என்பது தெளிவாகிறது. ஏனெனில், திருக்குர்ஆனின் வசனங்களும் இறைத்தூதரின் பொன்மொழிகளும் முஸ்லிம்களை சமப்படுத்த வந்தவை. ஆனால், இந்த ஹதீஸ் ஒரு சிலருக்கு வேறு சிலரைவிட மேல் அந்தஸ்து கொடுப்பதாகத் தெரிகிறது; அல்லது சமத்துவ இஸ்லாத்தில் பாகுபாட்டை புகுத்துவதாகப்படுகிறது. இது பொதுவான இஸ்லாமிய அமைப்பில் பொருந்தாது.

இந்த ஹதீஸின் கருத்தோடு பொருந்தாத வேறு நம்பகமான ஹதீஸ்களும் உள்ளன. இத்தகைய ஹதீஸ்களின் முழுப்பட்டியல் அல்ல இது. அவற்றுள் சிலவற்றை மட்டுமே நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன். முதலாவதாக, அபூதர் அறிவிப்பதாவது, “இன்ன ஃகலீலி அவ்ஸானி அன் அஸ்ம’அ வ உதிய்ய வ லவ் உம்மிர் அலைக்கும் அப்துன் ஹபஷி முஜத்தவுல் அன்ஃப் — என் அருமை நண்பர் (இறைத்தூதர்) எனக்கு இவ்வாறு அறிவுறுத்தினார், சப்பை மூக்கு கொண்ட ஒரு ஆப்பிரிக்கர் உமக்குத் தலைவராக வந்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிவீராக.”

அதேபோல், புஃகாரியில் உள்ள மற்றொரு ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது: “இஸ்மவு வ அதீவு வ இனிஸ்து’மில அலைக்கும் அப்துன் ஹபஷி க அன்ன ர’ஸஹு ஸபீபா — உலர் திராட்சை போன்ற தலை கொண்ட ஒரு ஆப்பிரிக்கப் பணியாள் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படியுங்கள்.”

ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள மற்றொரு ஹதீஸ் பின்வருமாறு: “இனிஸ்து’மில அலைக்கும் அப்துன் அஸ்வது முஜத்த யகூலுக்கும் பி கிதாபில்லாஹி த’ஆலா ஃபஸ்மவு வ அதீவு — சப்பை மூக்கு கொண்ட ஒரு கறுப்பர் உயர்வார். அவர் அல்லாஹ்வின் நூலைக் கொண்டு உங்களை வழிநடத்தினால் அவருக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படியுங்கள்.”

இந்த ஹதீஸ்களை விளங்குவது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். இவற்றின் சொற்பிரயோகத்திலேயே இனவாதமும் பாகுபாடும் பொதிந்துள்ளதாக சிலர் உணரலாம். இறைத்தூதர் எப்படி இப்படிப்பட்ட ஹதீஸ்களைச் சொல்லலாம் என்றுகூட அவர்கள் கேட்கலாம். எனினும், இவை இஸ்லாத்துக்கு முந்தைய சமூக எதார்த்தத்தையே பிரதிபலிக்கின்றன. அன்று நிலவிய கலாச்சார முரண்பாடுகளைத்தான் இறைத்தூதர் குறிப்பிடுகிறார் என்றும், இஸ்லாம் இவற்றைக் களைந்துவிட்டது என்றும் உணர்ந்தால், இவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

இந்த ஹதீஸ்களின் மூலம் இறைத்தூதர் உணர்த்துவது என்னவெனில், ‘உங்கள் பார்வையில் கீழ்நிலையில் இருக்கும் ஒருவர் தகுதி பெற்று உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படியுங்கள்’ என்பதே. இத்தகைய விவரணங்கள் எதிலும் ஒரு குறைஷி அடங்கமாட்டார் என்பது தெளிவு. ஆகவே, இத்தகைய ஹதீஸ்களையும் நாம் முன்னர் கூறிய குறைஷிகளின் தலைமைகுறித்த ஹதீஸையும் அருகருகே வைத்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே உள்ள முரண் தெளிவாகிறது. இந்த ஹதீஸ்கள் அனைத்துமே அங்கீகரிக்கப்பட்ட சுன்னீ இலக்கியங்களிலும் மேற்கோள்களிலும் உள்ளவைதாம். யாரும் இவற்றுள் சிலதை எடுத்துக்கொண்டு சிலதை நிராகரிக்க முடியாது. ஏனெனில், எல்லாமே நம்பகமான, உண்மையான அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்கள். ஆகவே நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில், இத்தகைய ஹதீஸ்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே. தங்களை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள், தங்கள் நம்பகமான நூல்களிலுள்ள இந்த ஹதீஸ்களை அருகருகே வைத்து அவற்றிலிருந்து ஒரு அரசியல் வியாக்கியானத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

பற்றுறுதி (பைஅத்)

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தை (சுன்னீ) சார்ந்தவர்களின் தலைமைத்துவக் கோட்பாட்டின் இரண்டாவது கூறு, ‘பற்றுறுதி’ (பைஅத்) ஆகும். சுன்னீகள், தலைமை ஏற்கப் போகிறவரின் கோட்பாட்டு அளவிலான பண்புகளைக் கொண்டு மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. மாறாக அவர் மக்களின் பற்றுறுதியையும் உறுதிப் பிரமாணத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றனர். இந்தக் கூறு இல்லையெனில் தலைமையும் இருக்க முடியாது என்றனர். இதற்குச் சான்றாக, இறைத்தூதரைக் குறித்து கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினர். அவற்றைப் பார்க்கும் முன், இந்த விவாதங்களின் மூலம் நாம் இறைத்தூதரின் தலைமையைக் கேள்வி எழுப்பவில்லை என்று சொல்லிக்கொள்கிறேன். எந்த வரலாற்றுப் பின்னணியிலிருந்த வரும் முஸ்லிமும் “இறைத்தூதர் எங்கள் தலைவர் அல்லர்” என்று சொல்லவில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

இறைத்தூதர்குறித்து அல்லாஹ் கூறுவதாவது: “நிச்சயமாக எவர்கள் உம்மிடம் வாக்குறுதி (பைஅத்) செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி (பைஅத்) செய்கின்றனர். அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்துவிடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.” (திருக்குர்ஆன் 48:10)

இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தால், மக்களின் பற்றுறுதி இன்றி இறைத்தூதரே தலைவர் ஆகியிருக்க முடியாது என்று தெரிகிறது. சிலர் “அதெப்படி? எப்படியாயினும் இறைத்தூதர்தான் தலைவர்” என்று வாதிடலாம். ஆனால், தலைமை என்பது வழிநடத்துபவருக்கும் அவர் வழிநடத்தும் மக்களுக்கும் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது. அது ஆக்கபூர்வமான, இணக்கம் கொண்ட, ஒருங்கிணைந்த உறவு. இதில் ஒரு கூறு விடுபட்டால்கூட, அவர் பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்க முடியும்.

இறைத்தூதர், அறபியாவில் அன்று வாழ்ந்த மக்களின் பற்றுறுதியைப் பெறாமலேயே ‘நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுக்கு மரியாதை செலுத்துங்கள்; பள்ளிவாசல்களில் அவனைப் போற்றுங்கள்’ என்று கூற, அவர்கள் இது எதற்கும் கட்டுப்படவில்லையெனில், இதில் என்ன தலைமை இருக்கிறது? அவர் தன்னளவில் பேசிக்கொண்டே இருந்திருப்பார். குடிமக்கள் இல்லாத ஒரு தேசத்தில் தேசத் தலைமை மட்டும் எப்படி இருக்க முடியும்? இதை தலைவர்-தலைமை என்னும் கட்டுமானத்தை எழுப்புவதற்கு கற்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அவற்றை இணைக்கும் கலவையாக பற்றுறுதி அமைகிறது என்று புரிந்துகொள்ளலாம். அது வழிநடத்துபவரையும் வழிநடப்பவர்களையும் இணைக்கிறது.

மற்றொரு இறைவசனம் இவ்வாறு கூறுகிறது: “நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் வாக்குறுதி (பைஅத்) செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக்கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.” (திருக்குர்ஆன் 60:12)

இந்த வசனத்தை எடுத்துக்கொண்டால், ஒருவர் தலைவராகவும் அல்லாஹ்வின் தூதராகவுமே இருந்தாலும் சமூகத்தின் சரிபாதியான பெண்களின் பற்றுறுதி அவருக்கு இல்லையெனில் — எல்லா ஆண்களின் பற்றுறுதியைப் பெற்றிருந்தாலும் கூட — அவர் தலைவர் ஆக முடியாது என்று சொல்ல முடியும். நான் மேற்கோள் காட்டும் நூல்களில் இவ்வாறு சொல்லப்படவில்லை என்றாலும், எல்லோரையும் உள்ளடக்கிய விரிந்த பார்வை கொண்ட ஒருவருக்கு இப்படித் தோன்றலாம். மேலும், நாம் இங்கு தலைவர் எனக் குறிப்பிடுவது செயலூக்கம் உள்ள தலைவரை; வெறும் பெயரளவிலான தலைவரை அல்ல.

இங்கு நான் ஒரு வகையான தகவல்களின் போதாமையை உணர்கிறேன். இந்தப் பகுதிகளை ஷீஆ அல்லது ஃகவாரிஜ்களின் வரலாற்றில் பார்க்கும்போது, உளக்கேள்விகளை திருப்திப்படுத்தும் வகையிலான தகவல்கள் கிடைக்கின்றன. எனினும், இதுபற்றி சுன்னீ நூல்களைப் படிக்கும்போது, இந்தத் தலைப்புபற்றி அதிக தகவல்களைப் பார்க்க முடியவில்லை. வரலாற்றின் இந்தப் பக்கம் இருக்கும் நாம், திரும்பிப் பார்த்து இதற்குக் காரணம் அரசுகள்தாம் என்று இப்போது சொல்ல முடிகிறது. தம்மை சுன்னீகள் என்று அழைத்துக்கொண்ட மக்களின் முயற்சியை அந்த அரசாங்கங்கள் கடத்தி, அவர்கள் சார்பாக அவை பேச ஆரம்பித்தன. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசாங்கங்கள் பேசும்போது மக்களின் மனசாட்சியை விடுத்து தம் நலன்களைப் பற்றியே பேசும் என்பதை நாம் அறிவோம். இன்றும் இதுதான் நடக்கிறது; அன்றும் இதுதான் நடந்தது. சுன்னீ பொதுப்புத்தியை அரசாங்கங்கள் திருடிவிட்டதால் இங்கு தகவல் பற்றாக்குறை நிலவுகிறது.

தலைமையைத் தேர்ந்தெடுக்கும் முறை

இயல்பான தலைவர்: இந்தப் பின்னணியில், பின்னர் என்ன நடந்தது என்று பார்ப்போம். சுன்னீ வழக்கில் மூன்று விதமாக ஒருவர் தலைமைப் பதவிக்கு வர முடியும். முதலாவதாக, ஒருவர் தன்னியல்பாக தலைவராகிவிடுவது — அபூபக்கருக்கு நடந்ததைப் போல. இறைத்தூதர் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அன்றைய தினம் ‘ஸகீஃபா’ தினம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஸகீஃபா’வின் போது பல்வேறு மக்கள் அங்கு கூடி இருந்தனர். அப்போது இனிமேல் முஸ்லிம்களை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருந்தது. அன்றைய தினம் ஒருசில மணிநேரங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றித்தான் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்.

நம் வரலாற்றில் இன்றுவரை — வருந்தத்தக்க விதத்தில் கிட்டத்தட்ட எல்லோராலும் — சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு நாசூக்கான தருணம் அது. இறைத்தூதரின் வாழ்வில் இதுவரை நடந்த சம்பவங்களையும் அவற்றின் பின்னணியையும் முழுமையாக அறிந்த உமர் ஒரு முடிவெடுத்தார். அந்தக் கணத்தில் எப்படி மற்ற மக்கள் மீண்டும் தலைதூக்க எத்தனிக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், நேராக அபூபக்கரிடம் சென்று “உங்கள் கையை நீட்டுங்கள். நான் உங்களுக்கு பற்றுறுதி அளிக்கிறேன்” என்றார். எல்லோர் முன்னிலையிலும் இது நிகழ்ந்தது. அபூபக்கரும் அவ்வாறே தன் கையை நீட்ட, உமர் அவருக்கு பற்றுறுதி அளித்தார். அறபியில் இதற்கு ‘உபாயியுக’ என்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்ற அனைவரும் தாமாகவே முன்வந்து அபூபக்கருக்கு பற்றுறுதி அளிக்கத் தொடங்கினர். இவ்வாறாக ஸகீஃபா நிகழ்ந்த இடத்திலும் அதைத் தொடர்ந்து மதீனா முழுவதும் அபூபக்கரின் தலைமைக்கு ஆதரவான ஒருமித்த கருத்து உருவானது.

இதன் பொருள், இது இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அங்கிருந்த எல்லோரும் நினைத்தார்களா? இல்லை. அபூபக்கருக்கு எதிர்ப்பே இருக்கவில்லையா? இல்லை. அன்றைய நிகழ்வுகள்குறித்து கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது. அபூபக்கருக்கும் ஆரம்பம்முதல் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

அபூபக்கர் குறித்து சுன்னீ நூல்களில் மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. “இறைத்தூதர் தன் இறுதிக் காலங்களில் அபூபக்கரை தொழுகைக்குத் தலைமை தாங்குமாறு பணித்தார். ஆதலால், இறைத்தூதர் மறைந்த பின்னர் எங்கள் விவகாரங்களுக்கு தலைமைதாங்க நாங்கள் அபூபக்கரை நியமிப்போம்” என்று அவர்கள் கூறினர். இது உண்மைதான் என்றாலும் இறைத்தூதர் அபூபக்கரை தனக்கு அடுத்த தலைவராக ஒருபோதும் முன்மொழியவில்லை என்பதையும் சுன்னீ அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

அபூபக்கர் தனக்காகவோ, தன் கோத்திரத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு விதத்திலோ பதவியை விரும்பினார் என்று வரலாற்றில் எங்குமே பார்க்க முடியாது. அக்காலச் சூழலில் தன்னியல்பாக அவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஏற்புடையதே. மேலும், எந்த நிர்பந்தமும் இன்றி ஒருவர் தலைமையை ஏற்க வேண்டும். அபூபக்கர், உமர், உஸ்மான், இமாம் அலீ ஆகிய நால்வரும் எந்த நிர்பந்தமும் இன்றி பதவி ஏற்றனர். மக்களும் அவர்களை சுதந்திரமாகவே தேர்ந்தெடுத்தனர்; அவர்களும் சுதந்திரமாக அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

பரிந்துரை அடிப்படையில் தலைவர்: அடுத்ததாக, ஒரு தலைவர் தனக்கடுத்து வர இருக்கும் தலைவரை பரிந்துரை செய்யும் முறை. அவர் அத்தலைவரை நியமிப்பதில்லை; திணிப்பதில்லை. மாறாக பரிந்துரை மட்டுமே செய்கிறார் என்பதை கவனிக்கவும். இதுதான் உமர் விஷயத்தில் அபூபக்கர் செய்தது. அபூபக்கர் அளித்த நற்சான்றின் பேரில் உமர் தலைவரானார்; முஸ்லிம்களும் நல்லெண்ணம் கொண்டு அவரை ஏற்றுக்கொண்டனர். இதுவும் உமர் புறத்திலிருந்து சுயநலமின்றி, குடும்பத்தினர் ஈடுபாடின்றி, பதவிக்கான அதீத தேட்டமின்றிச் செய்யப்பட்டது. சிலர் இதில் பிரச்சினையைக் காண்கின்றனர். இது எப்படி சரி ஆகும் எனக் கேட்கின்றனர். சுன்னீ, ஷீஆ, ஃகவாரிஜ் என எல்லா தரப்பினரிடமும் நம் வரலாற்றின் இப்பகுதியில் ஒரு குழப்பம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுகிறது.

இதை விளக்கும் பொருட்டு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இறைத்தூதர் மறைந்த பிறகு, தலைமைப் பதவி ஆகத்தகுதியானவருக்கு மட்டுமே — எவ்விதப் பிரச்சினையுமின்றி பத்திரமாக — அளிக்கப்படலாம் என்ற அளவிற்கு முஸ்லிம் பொதுப்புத்தி பண்பட்டு, விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் நிறைந்து காணப்பட்டதா? அல்லது, இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு ஒரு இஸ்லாமிய அரசாங்கம் இருந்தது; இஸ்லாமிய அமைச்சு இருந்தது; போர்க்களத்தில் இஸ்லாமிய முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன; இஸ்லாமியப் பொருளாதரமும் கருவூலமும் இருந்தது; இஸ்லாமிய நிலம், வேளாண்மை என எல்லாமும் இருந்தது; எனினும், முஸ்லிம்களாக மாறிய மக்களைப் பொறுத்தவரை — குறிப்பாக அறபியத் தீபகற்பத்தில் இஸ்லாம் ஒரு சக்தியாக உருவாகிய கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளில் பெருமளவில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் — அவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்கள் ஆயினரா? அல்லது பெயரளவிற்கு, சம்பிரதாய அடிப்படையில் மட்டும் முஸ்லிம்கள் ஆயினரா? இக்கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. சிலருக்கு இது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.

இறைத்தூதருடைய மறைவின்போது முஸ்லிம்கள் தியாகம்செய்யும் அளவுக்கு பண்பட்டு அர்ப்பணிப்போடு இருந்திருந்தால் துளிர்விட்டுக்கொண்டிருக்கும் அன்றைய இஸ்லாமிய ஒழுங்கிற்கு, ஆகத்தகுதியான ஒருவர்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அப்படிச் செய்வதுதான் மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பையும் கிளப்பியிருக்காது. ஆனால், அப்போதிருந்த பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் தலைமைக்கெதிராக போர் தொடங்குவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் அறிய வந்தால், ஆகத் தகுதியானவரை தலைவராக்க வேண்டுமா அல்லது காத்துக்கொண்டிருக்கும் எதிர்ப்பை மட்டுப்படுத்தி அதை திணறச்செய்யும் திறன் படைத்த, இறைத்தூதரின் குடும்பத்தைச் சேராத ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அபூபக்கர், இறைத்தூதரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லர். அவரது தேர்வு ‘இங்கு குடும்ப ஆட்சி நடைபெறுகிறது’ என்று சொல்லும் வாய்ப்பை அறபியாவின் பிற கோத்திரங்களுக்கும் அதிகார மையங்களுக்கும் வழங்கவில்லை. இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்துவதற்கு அவர் மிகச்சிறந்தவராக இல்லாமல் இருக்கலாம்; எனினும், இஸ்லாமிய அதிகாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அத்தகைய மக்களின் திட்டத்தை முறியடிப்பதற்கு அவர் ஆகத் தகுதியானவர்தானே? இதுதான் இங்கு நாம் முன்வைக்கும் கேள்வி.

கலந்தாலோசனை அடிப்படையில் தலைவர்: சுன்னீ இலக்கியத்தில் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மூன்றாவது விதம், கலந்தாலோசனை அடிப்படையில் (ஷூறா) ஆகும். திருக்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகிறது. உதாரணத்துக்கு, ‘வ அம்ருஹும் ஷூறா பைனஹும்’ (திருக்குர்ஆன் 42:38) என்ற வசனத்தைக் கூறலாம். ‘வ ஷாவிர்ஹும் ஃபில் அம்ரி’ (திருக்குர்ஆன் 3:159) என்ற மற்றொரு வசனம் முடிவெடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களை ஈடுபடுத்தும்படி இறைத்தூதருக்குக் கட்டளையிடுகிறது.

உமர் தன் மரணத் தருவாயில் ஆறு பேரைக் குறிப்பிட்டு, தானறிந்தவரையில் அவர்களுள் யார் தலைவரானாலும் முஸ்லிம் பொதுப்புத்தி அதை ஏற்றுக்கொள்ளும் என்றார். அவர்கள் இமாம் அலீ, உஸ்மான், தல்ஹா, ஸுபைர், சஅது இப்னு அபீ வக்காஸ், அப்துர் றஹ்மான் இப்னு அவ்ஃப் ஆகியோர் ஆவர். இவர்களுள் யார் தலைவராக வேண்டும் என்பதை அவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அதிலும் குறிப்பாக மூன்று பேரிடம் உமர் தனியாகப் பேசினார். இமாம் அலீ, உஸ்மான், அப்துர் றஹ்மான் இப்னு அவ்ஃப் ஆகியோரிடம் “உங்களில் ஒருவர் முஸ்லிம்களின் தலைவராக நேர்ந்தால், உங்கள் குடும்பத்தினரை ஆட்சியதிகாரத்தில் ஈடுபடுத்தாதீர்கள்” என்று எச்சரித்தார். இஸ்லாமியச் சம்பிரதாயங்களின் போர்வையில் ஒளிந்திருந்த முஸ்லிம்களின் எதிரிகளுக்கு ‘இஸ்லாமிய அரசாங்கம் குலம்சார்ந்த அல்லது குடும்ப ஆட்சியை நிலைநாட்டும் அரசாங்கம்’ என்று சொல்லும் வாய்ப்பை அளிக்க அவர் விரும்பவில்லை. உமர் விடுத்த எச்சரிக்கை, தான் அஞ்சியது நடந்துவிடுமோ என்ற உள்ளுணர்வு கொண்டு மீண்டும்மீண்டும் அதுகுறித்து நினைவூட்டுவதுபோல இருந்தது. ஆனால், எதுகுறித்து உமர் அஞ்சினாரோ அதையே உஸ்மான் செய்தார்.

சுன்னீ பார்வையில் பார்த்தால், உஸ்மான் பதவிக்கு வந்த விதம் அவர் முஸ்லிம்கள்மீது திணிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் அன்று நிலவிய சூழலை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளுடன் அவரை தலைவராக்க ஒப்புக்கொண்டனர்; அவரும் அவற்றுக்குச் சம்மதம் தெரிவித்து அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆறு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை (ஷூறா) உமர் ஏற்படுத்தி அவர்கள் உஸ்மானை தேர்ந்தெடுத்தபோதிலும், பிற முஸ்லிம்கள் அவரை ஏற்கவில்லையெனில் உஸ்மான் தலைவராகியிருக்க முடியாது. இந்த இஸ்லாமிய விவரங்கள்குறித்த பகுப்பாய்வு, நம்மை இந்த முடிவுக்குத்தான் இட்டுச் செல்கிறது. முஸ்லிம் பொதுப்புத்தியில் அவர் தலைவராக வேண்டும் என்ற கருத்தொற்றுமை ஏற்பட்டதால்தான் உஸ்மான் தலைவராக முடிந்தது.

‘சுன்னீ முஸ்லிம்’ மனதில், அதிகாரத்தை மரபுரிமையாகப் பெறுவதற்கும், அதை ஷூறா நிகழ்முறை மூலம் முடிவுசெய்வதற்கும் இடையே எப்போதும் ஒரு முரண் இருக்கிறது. அதாவது தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், தலைவர், அவருக்கடுத்து அவரது மகன், பின்னர் அவருடைய மகன் என்று இப்படியே தொடரும்படியான தலைமையை — அன்றும் இன்றும் — இஸ்லாமிய பொதுப்புத்தி இயல்பாகவே ஏற்றுக்கொள்ளாது என்பது நிதர்சனம். இஸ்லாமிய அரசாங்கத்தை ஷூறா அடிப்படையில் நிறுவினால், அதிகாரம் மரபுரிமையாக மாற்றப்படுவது தானாகவே தடுக்கப்படும் என்று கிட்டத்தட்ட உறுதியாகக் கூறலாம்.

எனினும், நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்பட்டதா என்பது வேறு விஷயம். சுன்னீ வரலாற்று நூல்களிலும் வேறு சிலவற்றிலும் அபூபக்கர், உமர், சிலரின் கூற்றுப்படி உஸ்மான், மேலும் சிலரின் கூற்றின்படி இமாம் அலீ ஆகியோர் விஷயத்தில் ஷூறா என்னும் கூறு இருக்கத்தான் செய்தது என்று பார்க்கிறோம். உஸ்மான் நடைமுறைப்படுத்திய ஷூறா குறித்து கருத்துகள் இரு துருவங்களாகப் பிரிந்துகிடக்கின்றன. சுயகொள்கை ஆதரவு பேசும் சிலர், “ஆம். அவர் சரியாகத்தான் ஷூறாவை கையாண்டார்; அதில் குறை எதுவும் இல்லை” என்கின்றனர். இன்னும் சிலர், “அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் மிகத் தெளிவாக ஷூறாவின் நியமங்களை மீறினார்” என்கின்றனர்.

இஜ்திஹாது

அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோர் பதவிக்கு வந்த முறைகளைப் பார்த்தோம். இவை அனைத்தும் சுன்னீ பார்வையில், இஜ்திஹாது அடிப்படையிலான முறைகள் ஆகும். திருக்குர்ஆனிலோ இறைத்தூதரின் ஹதீஸ்களிலோ இது இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்று விரிவாக எதுவும் கூறப்படவில்லை. ‘நாம் செய்தது சரியாக இருக்கும்பட்சத்தில் அல்லாஹ்விடமிருந்து கூலியைப் பெறுவோம். அது தவறாகிவிட்டால், நம்மால் இயன்றவரை முயற்சி செய்தோம். அல்லாஹ் அதை மன்னிக்கக் கூடும்’ என்ற அடிப்படையில்தாம் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், நாம் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் நிறைந்த இருபதாம் நூற்றாண்டு அறபியாவைப் பற்றி இங்கு பேசவில்லை. இவையெல்லாம் கடினமாக இருந்த அறபியாவைப் பற்றிப் பேசுகிறோம். அதேவேளை அபூபக்கரிடமிருந்து உமர், அவரிடமிருந்து உஸ்மான், அலீயின் காலம்வரை இஸ்லாமியப் பிரதேசம் எட்டுத்திக்கிலும் விரிவடைந்துகொண்டே இருந்தது. ஆகவே, இன்று நடப்பதுபோல ஒரே நாளில் தேர்தல் நடத்தி சில மணி நேரங்களில் முடிவு அறிவிப்பதுபோல அன்றைய தேர்வு நடைபெறவில்லை. எனில் மதீனாவாழ் முஸ்லிம்கள்தாம் அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ ஆகியோரைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தனர். ஆகவே, கருத்தொற்றுமை எனச் சொல்லும்போது அது முதலில் மதீனாவாழ் முஸ்லிம்களின் கருத்தொற்றுமை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற பகுதி மக்கள் அனைவரும் மதீனாவாழ் மக்கள்மீது கொண்டிருந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்களது முடிவை ஏற்றுக்கொண்டனர். ஆகவே, மதீனாவில் தோன்றிய கருத்தொற்றுமை, பின்னர் பிற பகுதிகளிலும் பரவியது. இந்த அர்த்தத்தில்தான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முஆவியா

பிரச்சினை என்னவென்றால், தலைவருக்கான கூறுகள் என நாம் பார்த்த ‘குறைஷி’ ஆக இருத்தல்,  பற்றுறுதி (பைஅத்), ஆலோசனை(ஷூறா) ஆகியவை முஆவியாவை அடையும்போது தனி அழுத்தம் பெறுகின்றன. தனக்கு முன்னர் இருந்தவர்கள் தவிர்க்க முயற்சி செய்ததை அவர் வெளிப்படையாகவே செய்தார். அதாவது, இஸ்லாமிய அரசாங்கம் என்பது குடும்ப விவகாரம் என்ற பொதுப்பார்வையை நிறுவினார். இதுவரை இருந்த எல்லா நியதிகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டார். இது போதாதென்று, “இஸ்லாமிய அரசாங்கம், ஒரு குடும்ப விவகாரம்தான்; அதுவும் எங்கள் உமையா குடும்ப விவகாரம் என்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அறிவித்தார். இதன் காரணமாகத்தான் சுன்னீ நூல்களிலேயே முஆவியா குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

எனினும் சஊதி பணம், அறிவார்ந்த ஆய்வுகளைவிட சப்தமாகப் பேசும் இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் பொது மேடைகளிலும் விவாதங்களிலும் நீங்கள் கேட்க முடியாது. எனினும், உண்மையை யாரும் மறைக்க முடியாது. தெற்கு ஈராக்கின் பஸறாவில் வாழ்ந்த பிரபல சுன்னீ அறிஞரான ஹசனுல் பஸரியின் கூற்றை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். முஆவியா குறித்து அவர் கூறியதாவது: “அர்பவு ஹிசாலின் ஃபீ முஆவியா லவ் லம் தகுன் ஃபீஹி இல்லா வாஹிதத்துன் ல கானத் மு’பிக ஹுரூஜுஹு அலா ஹாதிஹில் உம்மத்தி பிஸ்ஸுஃபஹா ஹத்தப் தஸ்ஸஹா பி ஃகைரி மஷூறதும் மின்ஹா. இஸ்திக்லாஃபு இப்னஹூ யஸீது வ ஹுவ சிக்கீருன் ஃகம்மீருன் யல்பிஸுல் ஃகரீர் வ யல்ரிபு பித் தனாபீர்… — முஆவியாவிடம் நான்கு பண்புகள் இருந்தன. அவற்றுள் ஏதாவது ஒன்று இருந்தால்கூட அது அவரை நரகத்தில் புகுத்துவதற்குப் போதுமானது. முதலாவது ஆலோசனை (ஷூறா) நிகழ்முறை இன்றி மக்களை மிரட்டும் முட்டாள் கவர்னர்களையும் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திடமிருந்து விலகி இருந்தது.

இரண்டாவது தன் மகன் யஸீதை பட்டத்து இளவரசனாக நியமித்தது. அவரோ குடிகாரராகவும், போதைக்கு அடிமையானவராகவும், போரை வெறுப்பவராகவும், இசைக் கருவிகளை வாசிப்பவராகவும் இருந்தார். (அதுவரை பட்டத்து இளவரசர் என்றொரு பதவி இருக்கவில்லை. முஆவியாதான் இதை உருவாக்கினார்). மூன்றாவதாக ஸியாதை முஆவியா தன் சகோதரர் எனக் கூறியது. (அதாவது ஸியாது முஆவியாவின் சொந்த சகோதரன் இல்லாதபோதும் அவரை ‘தன் சகோதரன்’ எனக் கூறி ஸியாது இப்னு அபீ சுஃப்யான் என்று முஆவியா அழைத்தார். இது இறைத்தூதர் காட்டித்தந்த “ஒரு குழந்தை தன் தந்தையின் பெயரைக் கொண்டே குடும்பப் பெயரைப் பெறும்” என்ற வழிகாட்டுதலுக்கு மாறானது.)

நான்காவது ஹுஜ்ர் இப்னு அதீயை முஆவியா கொலை செய்தது. (ஹுஜ்ர் இப்னு அதீ, முஆவியாவை எதிர்த்தவர். இமாம் அலீக்கு அறம் சார்ந்த ஆதரவளித்து அவருக்காக வெளிப்படையாகப் பேசியவர். எந்தக் காரணமும் இன்றி, அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவரைக் கொலை செய்ய முஆவியா உத்தரவிட்டார்.) இது ஒரேயொரு சுன்னீ அறிஞரின் விமர்சனம் மட்டுமே. இதைப் போல பிற விமர்சனங்களும் காணக் கிடைக்கின்றன.

தலைவராவதற்கான தகுதிகள் எனச் சில கூறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். முஆவியாவைப் பொறுத்தவரை, குறைஷி என்பதைத் தவிர பிற கூறுகளை அவர் பூர்த்திசெய்யவில்லை. தலைமைப் பதவி குறைஷிகளுக்கே உரியது என்ற புரிதலை மறுக்கும் விதமான ஹதீஸ்களையும் நாம் பார்த்தோம். எனவே, இத்தகைய ஹதீஸ்களை அவற்றின் காலச்சூழல் எதையும் கணக்கில் கொள்ளாமல் கண்மூடி நம்பும் ஒருவர்கூட, குறைஷி என்பதாலேயே தலைவர் ஆவதற்கு முஆவியா தகுதி பெற்றுவிட்டார் எனச் சொல்ல முடியாது.

ஆகவே, இப்போது சுன்னீ பார்வையில், யார் ஆட்சிசெய்வது, அது எப்படி அமைய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதில் ஒரு வகையான நெருக்கடி உருவாகியுள்ளது போலத் தெரிகிறது. முஆவியாவைப் பொறுத்தவரை, அதிகாரத்தைக் கொண்டு — ஃகிலாஃபா என்று அவரே சொல்லிக்கொண்ட — பதவியை அபகரித்துக்கொண்டார் என்பதை சுன்னீ அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். தலைமைகுறித்த பிற கூறுகள், மற்ற முஸ்லிம்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் போன்றவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. அவர் முஸ்லிம்களின் தலைவராக தன்னை வலிந்து திணித்துக்கொண்டார். அவர்களும் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

நான் முஆவியாவை சட்டவிரோதத் தலைவர் என்று அழைக்கிறேன். இப்படிச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. முஆவியா குறித்து வேறுசிலர் கொண்டிருக்கும் கருத்துகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இஸ்லாமிய ஆட்சி முறையை அதன் உச்ச நிலையிலேயே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கிய முதல் நபர் முஆவியாதான். திருக்குர்ஆனையும் இறைத்தூதரையும் ஆழமாகப் படிக்கும் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்: “முஆவியா எதிர்க்கப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.”

சட்டவிரோதத் தலைவரை எதிர்த்தல்

எனினும், ஒரு சாதாரண சுன்னீ அறிஞரிடம், “முஆவியா, யஸீது, இவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் — போன்றவர்கள் தலைவர்களாகிவிட்டால் நாம் என்ன செய்வது? அவர்கள் எப்படி பதவிக்கு வந்தார்கள் என்று நமக்குத் தெரியும். தலைமைத்துவத்துக்கான உங்கள் இலக்கணப்படியே இவர்கள் தலைவர்கள் ஆக முடியாதே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டால் அவர், “அவர்களை எதிர்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்த்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். குழப்பம் ஏற்பட்டு நிலைமை கைமீறிவிடும்; அதைத் தவிர்க்க வேண்டும் (த ஜன்னுபல் லில் ஃபித்னா) எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். ஆகையால், இதை சகித்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களோடு உடன்படவில்லை; எனினும், அவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போரிடவும் மாட்டோம்” என்று கூறுவார்.

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஆட்சியாளருக்கு நாம் கீழ்ப்படியத் தேவையில்லை என்ற சிந்தனையும் சில சுன்னீகள் மத்தியில் நிலவுகிறது. அதாவது மிகத் தெளிவான விஷயத்தில் அவர் இஸ்லாமியச் சட்டத்துக்கு புறம்பாகத் தீர்ப்பு வழங்குகிறார் எனில் அவருக்குக் கீழ்ப்படியத் தேவையில்லை. உதாரணத்திற்கு, அரச துரோகம் செய்தவருக்கு (முர்தத்) மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பது தெளிவான இஸ்லாமியச் சட்டம். ஆனால், ஒரு ஆட்சியாளர் இத்தகைய ஒருவருக்கு பரிசளித்து கௌரவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இது வெளிப்படையான விதி மீறல். இத்தகைய சூழலில் அவருக்குக் கட்டுப்படத் தேவையில்லை.

இத்தகைய ஆட்சியாளரிடம் உண்மை, நீதியை எடுத்துரைப்பது மட்டுமே அவருக்குக் காட்டும் உச்சபட்ச எதிர்ப்பாக இருக்க முடியும் என்றும் சில சுன்னீகள் கூறுகின்றனர். அதாவது இத்தகைய ஆட்சியாளரை எதிர்த்து அதிகபட்சம் நாம் செய்யக்கூடியது என்னவெனில், அவர்களுக்கெதிராக பேசுவதற்கான ஒரு மேடையை அமைப்பதுதான். இதற்கு அவர்கள் “கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு எதிராக உண்மையை உரைப்பதுதான் மிகச் சிறந்த போராட்டம் — அஃப்ளலுல் ஜிஹாத் கலிமத்து ஹக்கின் இன்த சுல்தானின் ஜாஹில்” என்ற இறைத்தூதரின் ஹதீஸை மேற்கோள் காட்டுகின்றனர்.

நேர்வழி நடந்த ஃகலீஃபாக்கள் (ஃகிலாஃபத்துர் றாஷிதா)

இப்போது சிந்தனையைத் தூண்டும் சில விஷயங்களின் பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இறைத்தூதரின் காலம் சுன்னீ, ஷீஆ, ஃகவாரிஜ் என அனைவராலும் கண்ணியப்படுத்தப்படும் காலம். அதைத் தொடர்ந்து வந்த காலத்தில்தான் கருத்து வேறுபாடுகள் தோன்றின. நான் இங்கு ‘சுன்னீ’, ‘ஷீஆ’ அல்லது ‘ஃகவாரிஜ்’ என்று சொல்லும்போது அவற்றின் தூய அர்த்தத்தில் அச்சொற்களைப் பயன்படுத்தவில்லை. மாறாக, இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் அர்த்தத்தில்தான் இச்சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்பதை மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறேன். ‘சுன்னீ’ என்று சொல்லும்போது மிகப் பரந்த எல்லைகளைக் கொண்ட கருத்துகள் அதில் அடங்கியுள்ளன. ஃகவாரிஜ்களும் ஷீஆக்களும் தங்கள் கொள்கைகளுக்கு பல்வேறு விளக்கங்களைப் பெற்றிருப்பினும், சுன்னீகளுடையது அவற்றைவிடப் பரந்தது. கிட்டத்தட்ட மற்ற எல்லாவற்றிலும் நீங்கள் காணும் எல்லா கருத்துகளும் இவர்களின் எழுத்துகளிலும் காணக் கிடைக்கும். ஆனால், அவை நீர்த்துப் போயிருக்கும்.

இத்தகைய சிந்தனை கொண்ட மக்களுள் பெரும்பாலானவர்களிடம் தனித்து நிற்கும் ஒரு விஷயம், நேர்வழி நடந்த ஃகலீஃபாக்கள் (ஃகிலாஃபத்துர் றாஷிதா) என்று அழைக்கப்படும் காலகட்டம்குறித்து அவர்களிடம் காணப்படும் ஒருவித மரியாதை ஆகும். இறைத்தூதர் மறைந்த தினத்தில் தொடங்கி முஆவியா பதவி ஏற்றுக்கொண்டதுவரை நீடிக்கும் இக்காலம் ஒளிவட்டம் பொருந்திய காலமாகக் கருதப்படுகிறது. அதை விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல. எனினும், சில துணிச்சலான முஸ்லிம் உள்ளங்கள் அக்காலகட்டம்குறித்து சீரிய ஒழுங்குடன் ஆழ்ந்தப் பார்வையைச் செலுத்தியுள்ளனர். குறிப்பாக உஸ்மான் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால், அவர்களின் குரல் மிக மெல்லியதாக இருந்தது; இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இன்றும்கூட அக்காலகட்டம் ஏதோ ஒருவகையில் சிறப்பு வாய்ந்ததாகவே நீடிக்கிறது. இத்தகைய பின்னணியிலிருந்து வருபவர்கள் அல்லது சுன்னீ கொள்கையின்பால் மேலதிகமாகக் கவரப்பட்டவர்களை, இயலுமாயின் இந்தக் காலகாட்டம்குறித்த புனிதக்கூட்டிலிருந்து  வெளியே வந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

அடுத்து மற்றொரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆ’ அல்லது ‘ஃகவாரிஜ்’ மனநிலை கொண்டவர்கள் இதை எளிதாக எதிர்கொண்டுவிடுவர். இதற்கு ‘ஆம்’ என பதிலளிப்பவர்களோடு நான் முரண்படுகிறேன் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறேன். கேள்வி இதுதான்: நீங்கள் ‘சுன்னீ’ பின்னணியிலிருந்து வரவில்லையெனில், அபூபக்கர் ஒரு அரசர் என்று சொல்வது சரியாகுமா? அபூபக்கரையும் முஆவியாவையும் சமமாகப் பார்ப்பது சரியாகுமா? நேர்வழி நடந்த ஃகலீஃபாக்கள் காலத்தில் சிறப்பு எதுவும் இல்லை, மற்ற காலங்களைப் போலத்தான் இதுவும் என்று கருதுபவர்களுக்கு இக்கேள்விகள் சாதாரணமாகத் தோன்றிவிடும். ஆனால் ‘சுன்னீ’ பின்புலத்திலிருந்து வருபவருக்கு இத்தகைய கேள்விகளே எழாது. இத்தகைய கேள்விகள் சிலருக்குத் தோன்றுவதே, அவர்கள் பிற முஸ்லிம்களைப் புரிந்துகொள்ள முற்றிலும் தவறிவிட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. சக முஸ்லிமோடு நாம் கொண்டுள்ள உறவு முறிந்துவிட்டதன் வெளிப்பாடுதான் இது.

இன்னும் ஒருபடி மேலே செல்வோம். அபூபக்கர் தலைமை வகித்த அரசாங்கம் பதவிவெறி பிடித்த அரசாங்கமாக இருந்ததா? அது இரக்கமற்ற அரசாங்கமாக இருந்ததா? அல்லது முஸ்லிம் பொதுப்புத்தியின் பங்களிப்பை உறுதிப்படுத்திய, கலந்தாலோசனை, பற்றுறுதி, நீதி ஆகியவற்றை நடைமுறைப்படுத்திய அரசாங்கமாக இருந்ததா? இங்கு அபூபக்கர் எனச் சொல்லும்போது மற்ற மூவரையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். அவ்வரசாங்கம் ஒரு தேசியவாத அரசாங்கமாக இருந்ததா? அல்லது நில விரிவாக்க, காலனித்துவ, ஏகாதிபத்திய நோக்கங்களைக் கொண்டதாக இருந்ததா?

இந்த இடத்தில் மற்றொரு வரலாற்று உண்மையையும் சொல்லியாக வேண்டும். உமருடைய ஆட்சிக் காலத்தில் விடுதலைக்கான இஸ்லாமிய இயக்கம் கிழக்கு எல்லையில் வேகமெடுத்துச் செயல்பட்டது. ஒரு காலத்தில் பைஸாந்தியர்களும் பாரசீகர்களும், அறபியாவை ‘சீண்டுவதற்கே லாயக்கற்ற’ பகுதிகளாகக் கருதினர். ஆனால், உமருடைய காலத்தில், அறபியத் தீபகற்பத்தில் புதிதாகத் தோன்றியவர்களிடம் வெகுவிரைவாக பாரசீகப் பகுதிகள் தம் நிலப்பரப்பை இழந்துகொண்டிருந்தன. தேசியவாதத்தைத் தொக்கி நிற்கும் சில பாரசீக முஸ்லிம்களுடைய உணர்வுகளை இச்சம்பவம் சீண்டியிருக்கக் கூடும். தேசியவாதிகளுக்கும் — இன்றளவும் சமாதானப்படுத்த முடியாத — இந்த இஸ்லாமிய இயக்கம்குறித்து அவர்கள் கொண்டுள்ள கருத்துகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கக் கூடும்.

அபூ சுஃப்யான் கூறியதாக ஒரு செய்தி ‘சுன்னீ’ நூல்களில் மட்டுமின்றி பிற நூல்களிலும் உள்ளது. அவர் கூறியதாவது: “அறளீதும் யா பனீ அப்து மனாஃப் அன் யலிய அலைக்கும் தைமீயுன் வல்லாஹி ல’அம் ல’அன்னல் வாதி கைரிம் வ ரிஜ்லா — அப்து மனாஃப் கோத்திரத்தார்களே! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானா?! உங்களை ஆள்வதற்கு ஒரு ‘தைமீ’ (அபூபக்கர்) வந்துள்ளாரே! இந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் குதிரைகளையும் படைகளையும் கொண்டு நான் நிரப்பப் போகிறேன்.”

அப்து மனாஃப் என்பது உமையாக்களை உள்ளடக்கிய வலுவான ஒரு குறைஷிக் கோத்திரம். ‘தைமீ’ என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட கோத்திரத்தைக் குறிக்கும் சொல். இன்றைய அமெரிக்காவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளான மிசிசிபி, மேற்கு விர்ஜீனியா, அலபமா, லூயிசியானா போன்ற பகுதிகளிலிருந்து ஒருவர் அதிபர் ஆனால் எப்படியிருக்கும்?! அதேபோல, “தைமியைச் சார்ந்த அபூபக்கர் ஆட்சிக்கு வந்துள்ளாரே! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானா?! இதைத் தடுக்க நான் என்னால் இயன்ற முயற்சி செய்யப் போகிறேன்” என்று கூறி இஸ்லாம் தோன்றுவதற்கு முன் நிலவிய பகையையும் வெறுப்பையும் மக்கள் மத்தியில் அபூ சுஃப்யான் தூண்ட முயற்சித்தார்.

அபூபக்கர் எதிர்கொண்ட எதிர்ப்பு

அபூபக்கருக்கு எதிர்ப்பு இருந்ததா? ஆம், ‘அன்ஸார்’கள் அவரை எதிர்த்தனர். அவர்கள் ‘இஸ்லாமியத் தலைமைத்துவம் குறைஷிகளிலிருந்துதான் வர வேண்டும். அதனால் ‘முஹாஜிர்’கள் மட்டுமே தலைமை வகிக்க முடியும்’ என்பதை சமத்துவத்துக்கு எதிரான கருத்தாகப் பார்த்தனர். அடுத்து அபூ சுஃப்யானின் எதிர்ப்பையும், இஸ்லாத்தைத் தழுவி சில ஆண்டுகளே ஆன மக்கள் மத்தியில் அவர் எப்படி வெறுப்பை உமிழ்ந்தார் என்றும் பார்த்தோம். மறுபுறம் ஹாஷிம்கள், இமாம் அலீயின் —இன்றைய மொழியில் சொல்வதானால் சட்டபூர்வ எதிர்கட்சி என்ற அடிப்படையிலான — எதிர்ப்பும் இருந்தது. தலைமைத் தேர்வு இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது என்று இவர்கள் கருதினர். எப்படியாயினும் சில காலம் கழித்து இமாம் அலீயின் ஆதரவை அபூபக்கர் பெற்றார் என்று நாம் அறிகிறோம். எவ்வளவு காலம் என்பதுகுறித்து வெவ்வேறு நூல்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றன.

மேலும், இஸ்லாத்தைத் துறந்தவர்கள் (ரித்தா) இயக்கத்தினரிடமிருந்தும் அபூபக்கருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ‘ரித்தா’ என்றால் இஸ்லாத்தைத் துறத்தல் என்று பொருள். அன்று மிகப்பெரும் இயக்கமாகத் திரண்ட ஒரு பெரும் கூட்டம், தலைமைக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தது. ‘இவ்வியக்கம் உச்சத்தில் இருந்தபோது மக்கா, மதீனா தவிர பிற பகுதிகள் அனைத்தும் ஆயுதம் ஏந்திக் கிளர்ச்சியில் ஈடுபட்டன’ என்று ‘சுன்னீ’ வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களை எதிர்த்து நடந்த போர்களில் 1200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் இறைத்தூதரோடு வாழ்ந்தவர்கள்; குர்ஆனை மனனம் செய்திருந்தவர்கள்.

‘ரித்தா’ இயக்கத்தினரின் வாதம் இவ்வாறு இருந்தது: “நாங்கள் முஸ்லிம்கள்தாம். எங்களை எங்கள் போக்கில் விட்டுவிடுங்கள். எங்கள் விருப்பப்படி நாங்கள் முஸ்லிம்களாக இருந்துவிடுகிறோம். எங்கள் செல்வத்தை எல்லாம் கொடுக்கமாட்டோம். ஸகாத், ஸதகா, ஃகும்ஸ் என எதையும் கொடுக்க மாட்டோம்.” ஆனால், அபூபக்கர் இதற்கு இசையவில்லை. “இறைத்தூதர் நம்மோடு இருந்தபோது நாம் கடைப்பிடித்த இஸ்லாமிய ஒருமைப்பாடு இதுவல்ல. நான் தலைமை ஏற்றுக்கொண்டேன் என்பதற்காக நீங்கள் இந்த ஒருமைப்பாட்டிலிருந்து விலகிவிடுவீர்கள் என்றால், நான் அதை அனுமதிக்க மாட்டேன்” என்றார் அவர்.

அபூபக்கர் இரண்டு ஆண்டுகளும், ஏறக்குறைய இரண்டு மாதங்களும் ஆட்சி செய்தார். அக்காலத்தில் பல கடுமையான போர்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது எதைக் காட்டுகிறது? இறைத்தூதரின் மறைவின்போது அறபியா முழுக்க முஸ்லிம்களாக மாறியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அனைவரும், நாம் எதிர்பார்க்கும் நேர்மையான முஸ்லிம்களாகவா இருந்தனர்? இல்லை. அன்று நேர்மையான முஸ்லிம்கள் இருந்தபோதிலும், அப்பகுதி மக்களின் பொதுவானபோக்கு இஸ்லாத்துக்கு எதிராகவே இருந்தது என்பதையே இது காட்டுகிறது.

இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு உமர் இவ்வாறு கூறினார்: “இஷ்ற அப்பன் நிஃபாகு ஃபில் மதீனா வர்தததில் அர்ளு — இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு, மதீனாவில் நயவஞ்சகம் வீறுகொண்டு மீண்டும் எழுந்து வந்தது. அறபுகள் இஸ்லாத்தைத் துறந்துவிட்டனர்.”

முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சமூக, அரசியல், பொருளாதார, மக்கள் சூழலாக இது இருந்தது. உங்களை சிந்திக்கத் தூண்டும் விதத்தில் எளிதாகச் சொல்வதானால், ‘அன்று வாழ்ந்த ஆகச் சிறந்த முஸ்லிம் மிகவும் பிரபலமற்றவராகக் காணப்பட்டார்’ என்ற நிலை இருந்தது.

விதிமீறல்கள்

உஸ்மான் குறித்துச் சொல்லப்படும் கடுமையான விதிமீறல்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இறைத்தூதர் அல்ஹகம் இப்னு உமையா என்பவரை மதீனாவிலிருந்து நாடு கடத்தி இருந்தார். அபூபக்கர், உமரின் காலத்தில் பலர் அந்நபரை மீண்டும் மதீனாவிற்கு அழைத்துவர முயன்றனர். ஆனால் அவர்கள் இருவருமே, “இறைத்தூதர் அவரை வெளியேற்றிவிட்டால், அவ்வளவுதான். நாங்கள் அவரை அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆனால், உஸ்மான் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை மதீனாவிற்குள் அனுமதித்தார். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?! நியாயம் காண்பதை விடுங்கள். இதுபற்றிச் சிந்திக்கக்கூட வேண்டாமா?! இதுகுறித்துச் சிந்திக்கவே கூடாது என்று கூறுபவர்கள், ‘ஒருவர் தவறு செய்தபின் அதைப் பற்றி பேசவே கூடாது. அத்தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போகட்டும்’ என்ற ரீதியில் பேசுகிறார்கள். இத்தகைய தவறை ஒருவர் மீண்டும் செய்கிறார் எனில் அதை திருத்திக்கொள்ள முடியாத நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். இதுபற்றிச் சிந்திக்கவே வேண்டாம் என்று கூறும் ‘சுன்னீ’ சிந்தனையும் இப்படித்தான் உள்ளது. இதற்கு இறைவேதத்திலும் இறைத்தூதர் வாழ்விலும் எந்த வழிகாட்டலும் இல்லை.

உஸ்மான் தவறு செய்தார் என்றால் நாம் அதுகுறித்து பேசித்தான் ஆக வேண்டும். நம்மால் அவருடைய காலத்துக்குப் பின்சென்று அதை சுட்டிக்காட்ட முடியாதுதான். எனினும், இத்தனை ஆண்டுகள் கழித்தும் “ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. அல்ஹகம், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்ட விதம் காரணமாகவும் அவருடைய பண்பு காரணமாகவும், இறைத்தூதர் அவரை நாடு கடத்தினார். அவர் மதீனாவிற்கு வெளியிலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே. அவரை ஏன் மீண்டும் மதீனாவிற்குள் அனுமதிக்க வேண்டும்?” என்று சொல்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

அடுத்து, நாம் உஸ்மான் அபூதரை வலுக்கட்டாயமாக நாடு கடத்திய சம்பவம்பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆம். நான் சிந்திக்க மட்டுமே வேண்டுகிறேன். அதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை. மதீனாவிற்கு வெளியே அர்றப்தா என்னும் இடத்துக்கு அபூதரை உஸ்மான் நாடு கடத்தினார். “ஏன் இப்படிச் செய்தீர்கள், உஸ்மான்?!” நீங்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும், இக்கேள்வியைக் கேட்க வேண்டும்; இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும்.

அடுத்து, மர்வான் இப்னுல் ஹகம் என்ற நபர் விஷயத்தில் உஸ்மான் செய்தது என்ன? இஸ்லாத்துக்கு முந்தைய கருத்துகளையும் அன்றைய அதிகாரக் கட்டமைப்பையும் மீண்டும் நிறுவ முயன்ற ஒருவர்தான் மர்வான். உஸ்மான் இவருக்கு தன் மகளை மணமுடித்துக் கொடுத்தது மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்தார். இவ்வாறு செய்வதற்கு திருக்குர்ஆனில் எந்த அடிப்படையும் இல்லையே?! இறைத்தூதரின் பண்பிலும் இது பொருந்தாதது ஆயிற்றே?!

மேலும், அப்துல்லாஹ் இப்னு அபீ சர்ஹ் என்ற நபருக்கு உஸ்மான் அடைக்கலம் கொடுத்தார். இவர்குறித்து இறைத்தூதர், “இப்னு சர்ஹ் கொல்லப்படுவதற்குத் தகுதியானவர்” என்று கூறியிருந்தார். சமாதானம் செய்துகொள்ள முடியாத எதிரி என்று அறியப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு அரசாங்கப் பதவியையும் கொடுத்ததை என்னவென்று சொல்வது?! நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ‘ஃகவாரிஜ்’ அல்லது ‘ஷீஆ’ நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் ‘சுன்னீ’ நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவைதாம் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மேலும் வலீது இப்னு உக்பா என்ற நபரை உஸ்மான் கூஃபாவின் ஆளுநராக நியமித்தார். இவரைப் பற்றி ‘சுன்னீ’ நூல்கள் கூறும்போது, இவர் இரவு முழுவதும் ‘உயர் ரக கேளிக்கைகளில்’ ஈடுபடுபவர் என்று விவரிக்கின்றன. ஒருமுறை இரவு முழுவதும் இத்தகைய கேளிக்கைகளில் ஈடுபட்டபின் ஃபஜ்ரு தொழுகைக்கு அவர் வருகிறார். தொழுகை நடத்தும்போது கடமையான (ஃபர்ளு) தொழுகையை இரண்டுக்கு பதிலாக நான்கு றக்அத்துகள் நடத்துகிறார். மக்கள் அத்தவறைச் சுட்டிக்காட்டியபோது அவர், “என்ன நான்கு றக்அத்கள் போதாதா? வேண்டுமென்றால் மேலும் சில றக்அத்கள் தொழ வைக்கிறேன்” என்று போதையில் கூறுகிறார். அவர் பேசும்போது, போதையின் வாசனையை மக்கள் அவரிடம் நுகர்கின்றனர். இத்தகைய ஒருவரை முஸ்லிம்களின் ஆளுநராக நியமிக்கலாமா?

ஆளுமைகளின் வரலாறு அல்ல

சகோதர, சகோதரிகளே! பிரச்சினை என்னவென்றால், நாம் — எந்தப் பின்னணியைச் சார்ந்திருந்தாலும் — இவ்வரலாற்றை தனி ஆளுமைகளின் வரலாறாகவே பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக இது மனித சமூகங்கள், மனிதப் பண்பின் வரலாறு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். இறைத்தூதரின் இறப்பின் போது, அபூபக்கரும் உமரும், இமாம் அலீயின் தகுதிகள் குறித்தும் அவரைப் பற்றி இறைத்தூதரே கூறியிருந்த விஷயங்கள் குறித்தும் சந்தேகத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? நிச்சயமாக இல்லை. எனில், இமாம் அலீயை பதவியில் அமர்த்தாமல், அவர்கள் ஏன் பதவி ஏற்றனர்? இதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கலாம். ‘அவர்களிருவரும் சதிசெய்து, தீய எண்ணம் கொண்டு, சுயநலத்தோடு செயல்பட்டனர்’ என்று சொல்லலாம். அல்லது, ‘அவர்களிருவரும் இஸ்லாமியச் சமூகம் எதிர்நோக்கியிருந்த எதிர்ப்பைத் தடுப்பதில் கவனமாக இருந்தனர்’ என்றும் பதிலளிக்கலாம்.

ஒரு கணம் நாம் அனைவரும் ‘ஸகீஃபா’வில் இருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு முடிவெடுத்தாக வேண்டிய இக்கட்டான சூழலில் நாம் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இமாம் அலீ அங்கு இல்லை. இறைத்தூதரின் புனித உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யும் பாக்கியத்தைப் பெற்றவராக அவர் அப்பணிகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அபூபக்கர், உமர் மற்றும் அங்கிருந்த பிற மக்களின் உரையாடல்களை இவ்வாறு நாம் கற்பனை செய்யலாம்: “இமாம் அலீ, நீங்கள் எப்பேர்பட்டவர் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிடாதீர்கள். சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இதில்தான் எங்கள் அக்கறை முழுதும் குவிந்துள்ளது. இதை கவனிக்காவிட்டால், நாம் அனைவரும் சேர்ந்து வீழ்ந்துவிடுவோம்.” இது அங்கு நடந்த உரையாடல் அல்ல. உங்களுக்குப் புரிய வைப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.

அதாவது ‘ஸகீஃபா’ மக்களின் எண்ண ஓட்டம் இவ்வாறு இருந்தது: “இமாம் அலீ பதவி ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் நிச்சயமாக வீழ்ச்சியடைந்து விடுவோம். இமாம் அலீ இறைத்தூதர் அல்லர். இறைத்தூதருக்கே இது பெரும் போராட்டமாக இருந்தது. நாம் இப்போதுதான் வெற்றிபெற்று ஒரு நிலைக்கு வந்துள்ளோம். இப்போது இம்மக்களின் பொதுப்புத்தி, நம்மை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறது. எனவே, ‘இறைத்தூதர் நம்மிடமிருந்து பதவியைப் பறித்து தன் உறவினர்கள் கையில் அதை ஒப்படைத்துவிட்டார்’ என்று கூறும் வாய்ப்பை நாம் அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டாம். அவர்கள் இஸ்லாமிய மனம் படைத்தவர்கள் அல்லர், இஸ்லாத்துக்கு முந்தைய கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள்.”

மக்களின் பொதுப்புத்தி இமாம் அலீக்கு எதிராக இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொள்ள அபூ சுஃப்யான் முயற்சி செய்தார். ‘ஸகீஃபா’ தினத்தன்று அவர் இமாம் அலீயிடம் “உங்கள் கையை நீட்டுங்கள். நான் உங்களுக்கு உறுதிப் பிரமாணம் செய்கிறேன்” என்றார். ஏன் இவ்வாறு அவர் சொல்ல வேண்டும்? ஏனெனில், அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெளிவாகத் தெரியும். இப்படி ஒரு வலை விரித்து இமாம் அலீயை அதில் சிக்க வைக்க முயன்றார். ஒரு பக்கம் இமாம் அலீயை தலைவராக்கி விட்டு, மறுபக்கம் “இறைத்தூதரின் குடும்பத்தைப் பாருங்கள்! அவர்கள் தங்களுக்குள்ளேயே பதவியை தக்கவைத்துக் கொண்டனர்” என்று பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டார்.

அன்று அவர்கள் அத்தகைய வாய்ப்பை அம்மக்களுக்கு அளித்திருந்தால், இஸ்லாத்தின் எதிரிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு மதீனாவிலிருந்த சிறு முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும் போர் தொடுத்திருப்பர். ‘ரித்தா’ போர்களோடு ஒப்பிடுகையில் அது பல மடங்கு பெரிதாக இருந்திருக்கும். இவ்வாறு நிகழ்ந்திருக்காது என்று யாராவது சொல்ல முடியுமா? இல்லை.

இறைத்தூதரின் இறப்பிற்குப் பிறகு இமாம் அலீ பதவி ஏற்று, அன்றிருந்த இக்கட்டான சூழலில் அம்மக்களின் பொதுப்புத்தியை தனக்குச் சாதகமாக வென்றிருப்பார் என்று நினைப்பவர்கள் அன்று நிலவிய, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிராத பொதுப்புத்தியின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வேறு சிலர், அன்றிருந்த பொதுப்புத்தி தம்மை நசுக்கக் காத்திருக்கிறது என்று எண்ணினார்கள். பிற்காலங்களில் இது நிரூபணமானது. இறைத்தூதர் மறைந்து முப்பதே ஆண்டுகளில் அவர்கள் திரும்பி வந்தனர். கர்பலா எனும் துர்சம்பவம் நிகழ்ந்தது. இதுதான் அன்றைய பேசப்படாத வரலாறு. ஆளுமைகளின் மீது கவனம் செலுத்தப்படும்போது இந்த வரலாறு மறைந்து போகிறது.

ஆகத்தகுதியானவர் ஏன் பதவி ஏற்க முடியவில்லை?

இமாம் அலீயின் தகுதிகள்குறித்து யாரும் சந்தேகம் கொள்ளக் கூடாது. இறைத்தூதரே அவரை சிறப்பித்துக் கூறிய கூற்றுகள் ஏராளம் உள்ளன. அது மற்ற எல்லோரையும் விஞ்சி நிற்கிறது. இதுபற்றி வெள்ளிக்கிழமை உரைகளில் மிக விரிவாகப் பேசியுள்ளேன். முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு இமாம் அலீதான் ஆகத்தகுதியானவர் என்றும், அபூபக்கரும் உமரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் பார்த்தோம். அப்படியெனில் மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் கட்டுப்படுத்தவும் இமாம் அலீ தகுதி பெற்றிருப்பார்தானே. ‘அவ்வாறு இருக்கையில் அபூபக்கரும் உமரும் ஏன் முதலில் பதவி ஏற்க வேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறது.

அபூபக்கரும் உமரும், இமாம் அலீக்கு உரிய தலைமைப் பதவியைப் பறித்து அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதற்கு இமாம் அலீதான் ஆகத்தகுதியானவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால் — கொஞ்சம் மிகைப்படுத்திக் கூறினால் — அவர் வழிநடத்துவதற்கு ஏற்ற முஸ்லிம்கள்தாம் இல்லாமல் போய்விட்டனர். இறைத்தூதரின் இறப்பிற்குப் பிறகு இமாம் அலீ தலைமைப் பதவியை ஏற்றிருந்தால் உண்மையான ‘முஹாஜிர்’களையும் ‘அன்ஸாரி’களையும் சீராக வழிநடத்தவே செய்திருப்பார். மதீனாவில் கிளம்பும் எதிர்ப்பை வீரத்தோடு சிலகாலம் சமாளித்திருப்பார். எனினும் நாளடைவில், அவருக்கு எதிராக இருந்த பொதுக்கருத்து மேலும் வலுப்பெற்றிருக்கும். ஏனெனில் இப்போது அதிகாரம் ஒரு குடும்பத்தின் தனிச்சிறப்பாக மாறிவிட்டது.

சமீபத்தில் முஸ்லிம்களாக மாறிய அம்மக்களிடம் இதுகுறித்து விளக்கியிருக்க முடியாது. அவர்கள் இதைப் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இஸ்லாத்தை ஏற்று ஒரு நூறு ஆண்டுகள் ஆகியிருந்து, தங்கள் விசால மனப்பான்மையை வளர்த்தெடுத்துப் பண்பட்டிருந்தால், அப்போது அவர்கள் இதை விளங்கியிருக்கக் கூடும். மேலும் அன்றைய சமூகம் பின்தங்கிய சமூகமாக இருந்தது. தேள்களையும், புழுப் பூச்சிகளையும், ஒட்டகத்தின் ரோமத்தையும் உணவாக உண்டுகொண்டிருந்த சமூகம் அது. இவ்விஷயங்களின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அம்மக்கள் பெற்றிருக்கவில்லை.

இமாம் அலீயின் தகுதிகள் குறித்தோ அவரது பண்புகள் குறித்தோ அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களின் அக்கறையெல்லாம் அவர் எந்தக் கோத்திரம், எந்தக் குடும்பத்திலிருந்து வருகிறார் என்பதில்தான் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, எந்த அளவிற்கு அதிகாரம் பரவலாக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நீதி நிலைநாட்டப்படுகிறது என்று பொருள். ‘அதிகாரம் குடும்பச் சொத்தாக மாறிவிட்டால் அதை எதிர்ப்போம். நீதியான இறைவன், அதிகாரத்தை ஒரு குடும்பச் சொத்தாக இருப்பதை அனுமதிக்கமாட்டான்’ போன்ற கருத்துகளையே அவர்கள் கொண்டிருந்தனர்.

அன்று மட்டும் இமாம் அலீ பதவி ஏற்றிருந்தால் அதற்கான எதிர்வினை மிகக் கடுமையாக இருந்திருக்கும் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அன்று இமாம் அலீயை ஆதரித்த ‘அன்ஸார்’கள் சில நூறு பேர் இருந்திருப்பர். ‘முஹாஜிர்’கள் சில ஆயிரம் இருந்திருக்கக் கூடும். மற்ற முஸ்லிம்கள் ஓரிரு லட்சம் பேர் இருந்திருப்பர் என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு போர்ப்படையை நிறுவி இமாம் அலீயை எதிர்த்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். கர்பலாவுக்கு முன்னரே இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்பர். இவ்வாறு நடக்காமல் போனது இறைவனின் அருள் என்றே நான் சொல்வேன். நிலைமை அந்த அளவுக்கு உக்கிரமாக இருந்தது. இமாம் அலீ பதவி ஏற்றபோது அவருக்கு எதிராக ஒன்றுதிரண்ட கூட்டம், சில ஆண்டுகளுக்கு முன்னர் கூடியிருந்தால் அவர்களுடைய பழியுணர்வு இன்னும் மூர்க்கமாகவும் உக்கிரமாகவும் இருந்திருக்கும். அபூபக்கர், உமர், உஸ்மானின் பதவிக் காலம் அவ்வுணர்வை சில காலம் ஆறப்போட உதவியது. அது மட்டும் இல்லாமலிருந்தால் நிலைமை மிக மோசமாகி இருக்கும். அபூ சுஃப்யானின் வஞ்சகம் நிறைந்த சொற்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

இதை உணர்ந்த அபூபக்கரும் உமரும் இந்நிகழ்வுகளை சில காலம் தள்ளிப்போடலாம் என எண்ணினர். இமாம் அலீயோடு சேர்ந்து அவர்களும் வீழ்ந்து போக விரும்பவில்லை. இதை அவர்கள் பெருமளவிற்கு சரியாகவே கணித்தனர் என்று நான் கூறுவேன். காத்திருக்கும் எதிர்ப்பை முன்னறிந்து அதைத் தாமதப்படுத்தவாவது அவர்கள் நினைத்தனர் போலும்.

மேலும் உமையாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோரைவிட இமாம் அலீயை அதிகம் வெறுத்தனர். ஏனெனில் குறைஷிகளிலிருந்து கிளம்பிய இறைத்தூதரின் எதிரிகளை போர்களில் அதிகமாகக் கொன்றிருந்து இமாம் அலீதான். இதை மனதில் வைத்துதான் உமையாக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதை உணர்ந்துதான் உமர் தன் மரணத் தருவாயில்கூட இதுகுறித்து அறிவுரை செய்தார். குடும்பத்தினருக்கு பதவி பொறுப்புகள் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், உஸ்மான் பதவி ஏற்றவுடன் அபூ சுஃப்யான், அல்ஹகம், இப்னு அபீ சர்ஹ், இப்னு ஆமிர், முஆவியா போன்றோர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இங்குதான் நிலைமை கைமீறிப் போனது.

இறைத்தூதரின் கருத்து

மற்ற எல்லோரையும்விட இறைத்தூதர் அறிவு ஞானம் மிக்கவர். நிகழப்போகும் சம்பவங்கள், நடக்கப் போகும் உட்சண்டைகள்பற்றி எந்த அளவுக்கு அவர் முன்னறிந்திருப்பார்?

தனக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதுபற்றிய ஒரு உள்ளுணர்வு அவருக்கு ஓரளவு இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எனினும் எந்த தினத்தில், எந்த இடத்தில், என்ன நிகழும் போன்ற துல்லியமான விவரங்களை அறிந்திருந்தாரா என்பதை நான் அறியேன். ஆனால், தன் சமூகம் எப்படிப்பட்டது என்பதுகுறித்து ஒரு பொதுவான கருத்தை அவர் கொண்டிருந்தார். எப்படிப்பட்ட மக்களை அவர் வழிநடத்துகிறார் என்பதை அவர் அறிந்தே இருந்தார். இன்னும் சொல்லப்போனால், பிற்காலத்தில் வரலாற்றில் தடம் பதித்த இத்தகைய மக்களின் பண்புகளால் அவரே நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தார்.

ஒருமுறை ஒரு நபர் இறைத்தூதரிடம் வந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெருக்கி அவரை உலுக்கினார். பின்னர்,  “நீதமாக நடந்துகொள்ளும் முஹம்மது, நீதமாக நடந்துகொள்ளும்” என்றார். பள்ளிவாசலில் அனைவர் முன்னிலையிலும் இது நிகழ்ந்தது. அவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றனர்; “நீர் யார்? என்ன செய்கிறீர் என்று தெரிந்துதான் செய்கிறீரா?” எனக் கேட்டனர். அவர், “நீர் செல்வத்தை நீதமான முறையில் பங்கிடவில்லை என நான் சந்தேகம் கொள்கிறேன்” என பதிலளித்தார். இதைக் கேட்ட இறைத்தூதர், முதலில் அங்கிருந்த மக்களை சமாதானம் செய்தார். பின்னர், “நான் நீதமாக நடக்கவில்லை என்றால் வேறு யார்தான் நீதமாக நடக்கிறார் என்று நீர் கருதுகிறீர்?” என அவரிடம் கேட்டார். அந்த மக்கள் எளிதில் பற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட, ஒருநிலையற்ற மக்கள் என்பதை இச்சம்பவம் உணர்த்தவில்லையா?

மற்றொருமுறை, பள்ளிவாசலுக்குள் இறைத்தூதர் அமர்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே வந்து அனைவர் முன்னிலையிலும் சிறுநீர் கழித்தார்! பள்ளிவாசல் நடுவில். மக்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். எனினும், இறைத்தூதர் அவர்களை சமாதானம்செய்து, “அவரை விட்டுவிடுங்கள். ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றிவிடுங்கள்” என்றார். இப்படியாக அம்மக்களின் தன்மையை அவர் உணர்ந்திருந்தார்.

இப்போது கேள்வி என்னவென்றால், ‘இம்மக்களின் தன்மையை உணர்ந்த இறைத்தூதர் சுமூகமான ஆட்சி மாற்றம் நிகழும் வண்ணம் ஒரு முறைமையை நிறுவியிருக்கக் கூடாதா?’ இதற்கான பதில், ‘அவர் அதைத்தான் செய்ய முயன்றார்’ என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மக்களின் பண்புகளை அறிந்த அவர், ‘எனக்குப் பிறகு இமாம் அலீ தலைமைப் பொறுப்பை ஏற்பார்’ என்று வெளிப்படையாக சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சொல்லியிருந்தால் — ஏற்கனவே வெளியிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டிருந்த இறைத்தூதர்— இவர்களிடமிருந்தும் எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்.

அப்போது முளர், தமீம், அத்னானிய்யா, கஹ்தானிய்யா போன்ற அறபுக் கோத்திரங்களிடமிருந்து மட்டுமின்றி அறபியாவுக்கு வெளியிலிருந்து வந்த எதிர்ப்பையும் இறைத்தூதர் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே, எதிர்நோக்கியிருக்கும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இமாம் அலீ குறித்துப் பேசியபோதெல்லாம் அவரது தலைமைகுறித்த கருத்தை மக்கள் மத்தியில் விதைத்தார். இந்த விதை தக்க சமயத்தில் வளர்ந்து, தனக்குப் பின் மக்கள் ஆகத்தகுதியானவரை தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பினார். இதுதான் அவருக்கு நடைமுறைச் சாத்தியமாக இருந்தது. தக்க சமயம் வரும்போது மக்கள் ‘இமாம் அலீ இறைத்தூதரின் உறவினர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அவர் தகுதியுடையவர் எனில் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்க வேண்டும்’ என்று கூறுவர் என்று நம்பினார். ஆனால் தக்க சமயத்தில் அவ்விதைகள் முளைக்கவில்லை.

தக்க சமயத்தில் என்ன! இன்றும்கூட அவை முளைக்கவில்லை. அவ்விதைகள் உறுதியான கற்பாறைகளில் விதைக்கப்பட்டுவிட்டன போலும். 1400 வருடங்களுக்கு முன் இறைத்தூதர், அம்மக்களுக்கு கல்வி புகட்டி, நன்மை செய்ய வலியுறுத்தி அவர்களின் பொறுப்புணர்வை உயர்த்த முயன்றார் என்பதையெல்லாம் விட்டுவிடுங்கள். இன்றும்கூட இவற்றை சரியான கோணத்தில் நாம் பார்க்கத் தவறிவிட்டோமே. உங்களைச் சுற்றிப் பாருங்கள். எத்தனை பேர் இந்த வரலாறுகளின் மீது சரியாக கவனம் குவித்து அதிலிருந்து பாடம் படிக்க முயல்கிறார்கள்?

சில முஸ்லிம்கள் நம்பும் சில விஷயங்களைக் கொண்டு அவர்கள் ஒரு குழுவாகவும், வேறுசில முஸ்லிம்கள் நம்பும் வேறுசில கருத்துகளைக் கொண்டு அவர்கள் மற்றொரு குழுவாகவும்தானே இன்று நாம் உள்ளோம்! மேலும் ஒரு தரப்பைச் சார்ந்தவர் தன்னிச்சையாகவே பிற தரப்பினரை வெறுக்கிறார். இதுதானே நடக்கிறது! இத்தனைக்கும் மத்தியில் நாம் நம் சிந்தனையைத் தட்டி எழுப்பாமல் இருக்கிறோம். இதுபற்றிச் சிந்தித்து மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த யாரும் முயற்சி செய்வதில்லை. இதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

முடிவுரை

இந்த வரலாறுகளைப் பின்வருமாறும் பார்க்கலாம். இதைச் சொல்வதன் மூலம் சுன்னீ-ஷீஆ என இரு தரப்பு மக்களையும் நான் சங்கடத்துக்கு உள்ளாக்கப் போகிறேன். எனினும், உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். சுன்னீகளை பொறுத்தவரை அவர்கள் நேர்வழி நடந்த ஃகலீஃபாக்கள்  (ஃகிலாஃபத்துர் றாஷிதா) காலத்தை நீட்டித்து, உமையாக்களையும் அப்பாசிய்யாக்களையும் அதில் உள்ளடக்கி அவர்களை ‘ஃகலீஃபாக்கள்’ என்று அழைக்கின்றனர். இது தவறு. உமையாக்களும் அப்பாசிய்யாக்களும் தெளிவாகவே வழிதவறி இருந்தனர்.

ஷீஆக்களைப் பொறுத்தவரை அவர்கள் உமையா, அப்பாசிய்யா காலத்தில் நடந்த துர்சம்பவங்களையும் அத்துமீறல்களையும், இறைத்தூதர் இறந்து முதல் முப்பது ஆண்டு காலகட்டத்தில் பொருத்திப் பார்க்க முயல்கின்றனர். இதுவும் தவறு. இவர்கள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ஆக இவர்கள் இருவருமே நியாயமாக நடக்கவில்லை.

இந்த வரலாறுகளைப் படிக்கும் நாம், சாமானிய முஸ்லிம்கள் தங்களுக்கிடையே சதிசெய்து சண்டையிட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் சதி செய்தார்களா என்றால், ஆம், செய்தார்கள். ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினார்கள். சமயம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். தக்க சமயத்தில் தாம் நினைத்ததை சாதித்துக் கொண்டார்கள். இதுதான் வரலாறு. ஆனால், இதே கண்ணோட்டத்தில் பொது மக்களையும் பார்ப்பது தேவையற்ற கற்பனை என்றே கருதுகிறேன்.

இப்போது கேள்வி என்னவென்றால், இச்சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால், அன்று நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு நாம் அறிவை வளர்த்துக்கொண்டோமா என்பதுதான். இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமியச் செயல்பாடுகள் அனைத்தும் நாம் நம் வரலாற்றுப் பாத்திரங்களை மீட்க விரும்புகிறோம் என்பதையே காட்டுகின்றன. அத்தகைய ஒரு சூழலை அடைந்துவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் அதே தவறுகளைச் செய்யப் போகிறோமா? ஏற்கனவே இத்தகைய நிகழ்வுகளை நமக்குக் காட்டித் தந்து, இத்தகைய சூழலில் நம்மை வாழச்செய்து, அவற்றிலிருந்து பாடம் படிக்கும் வாய்ப்பை வழங்கியது அல்லாஹ் நமக்குக் காட்டும் கருணையின் வெளிப்பாடு இல்லையா? இதுதான் நம் முன் உள்ள கேள்வி.

வெறும் கோட்பாட்டளவில் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. இன்று உண்மையிலேயே பல இஸ்லாமிய இயக்கங்கள் செயல்படுகின்றன; ஒவ்வொன்றும் தனித்தனியாக கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து இயங்குகின்றன. ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவிவிட்டு, வரலாற்றுக் கால சந்தேகங்களின் அடிப்படையில் குத்தல் பேச்சுகளால் பிறரைத் தாக்குவதும், “நீங்கள் இதற்கு சரிபட்டு வர மாட்டீர்கள்” என்று பேசுவதும் அழகல்ல. எங்களைப் பார்த்து இப்படிக் கூறுகிறீர்கள் என்றால், நீங்கள் யார்? ஏன் இந்தத் தன்னலம்? ஏன் இந்த விசித்திரப் பண்பு?!

அன்றைய மக்கா-மதீனாவைப் பார்த்து அபூ சுஃப்யானையும் முஆவியாவையும் சுயநலக்காரர்கள் என்று கூறுவது இருக்கட்டும். இன்றும் அத்தகைய மக்கள் இருக்கிறார்களே! அன்று அவர்கள் கொண்டிருந்த அதே நோக்கத்தையும் மன நிலையையும் இவர்கள் கொண்டிருக்கிறார்களே! மேலும், ‘நீங்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று கூறி பிற முஸ்லிம்களை தகுதி நீக்கம் செய்கிறார்களே. இதன் பொருள்தான் என்ன? நம் தவறுகளிலிருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நீங்களே இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் எடுத்துப் பாருங்கள். இன்னும் வெளிப்படையாக இதைச் சொல்ல வேண்டுமா என்ன?

மக்களே! நாம் ஒரு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் சகோதரர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், 1400 வருடங்களாக நம் வரலாறை மீட்டிப் பார்க்காமல், அதிலிருந்து படிப்பினை பெறாமல், தவறுகளை திருத்திக்கொள்ளாமல் நம்மில் பலர் தனிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களால் கிளர்ச்சியடைந்தவர்களாக இருக்கின்றனர். இது என்னுடைய தவறோ உங்களுடைய தவறோ அல்ல. இது நம்முடைய தவறு; நம்முடைய பலவீனம்; நம்முடைய ஆற்றல். இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டால் இத்தவறை எளிதாகத் திருத்திக்கொள்ள முடியும். மாறாக, ‘நான்தான் சரியானவன், என் கருத்துதான் மற்ற முஸ்லிம்கள் கொண்டுள்ளதை விட சிறந்தது’ என்று ஒருவர் கருதுவாரானால், நம்மால் எதுவும் செய்ய இயலாது. இங்கு, யார் ‘மற்ற’ முஸ்லிம்? இச்சொல் எங்கிருந்து வந்தது?! அப்படிக் கூறும் ஒருவர் தன்னை மட்டுமல்ல, மற்றவரையும் சேர்த்துப் படுகுழியில் தள்ளுகிறார். நாம் வாழ்ந்தால் ஒன்றாகவே வாழ்வோம்; வீழ்ந்தாலும் ஒன்றாகவே வீழ்வோம்.

தமிழில் : ஜுந்துப்

(நன்றி : மெல்லினம்)

ஆங்கிலத்தில் : Islamic History, Ahl Al Sunnah wa Al Jama’ah

Related posts

Leave a Comment