குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம்களை மற்றமையாக்கும் லிபரல் சொல்லாடல்கள்

Loading

முஸ்லிம் பின்னடைதலுக்கான (backwardness) முக்கியமான காரணங்களாக புர்கா, ஷரீஆ, மதரசா, மௌலானா ஆகிய நான்கு காரணங்களைக் கூறுகிறார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. முஸ்லிம்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பின்னடைதலுக்கான காரணங்களாக முஸ்லிம்களின் பண்பாட்டை காரணம் காட்டுகிறார் கட்ஜூ. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிற்பட்ட நிலைக்கு அவர்களது திறமையின்மை, குடி போன்றவற்றைக் காரணம் காட்டும் சாதித் திமிருக்கும் மேற்கண்ட இந்து மேலாதிக்கத் திமிருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இங்கு மார்கண்டேய கட்ஜூவின் கருத்தை விமர்சிப்பது எனது நோக்கமல்ல. மாறாக, முற்போக்கு வெளிகளிலும், லிபரல் முஸ்லிம்களும் பரவலாக இதைத்தான் பேசுகிறார்கள். கட்ஜூவின் கருத்து பொதுப்போக்கின் ஒரு சாம்பிள் மட்டுமே.

மற்ற சமூகங்களைப் பற்றிப் பேசும்போது சாதி, வர்க்கம், அரசியல் பொருளாதாரம் என்று சமூகவியல் விதிகளை முன்வைத்துப் பேசுபவர்களும்கூட முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதார ரீதியான பின்னடைவுக்கு தொப்பி, தாடி, மதப்பற்று, புர்கா, மதரசா என்று பேசுவார்கள். ஏனைய எல்லாச் சமூகங்களும் எல்லாருக்கும் பொருந்தும் சமூக விதிகளுக்கு உட்படுபவர்கள் என்றும், குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் ஏனையோரிடமிருந்தும் வேறுபட்ட சாரத்தைக் (essence) கொண்டவர்கள் என்றும் கருதும் அடிப்படையிலிருந்துதான் எல்லா வகை மற்றமையாக்கலும் (otherization) இனவாதமும் தோன்றுகின்றன. இத்தகைய செயற்போக்கே நாஜி ஜெர்மனியில் யூதர்கள் அனுபவித்ததும்.

ஆனால், இக்கூற்றுக்கு மாறாக முஸ்லிம் சமய-சமூக கட்டமைப்புகள்தான் கொஞ்சமாவது முஸ்லிம்களின் (இதற்குள் முஸ்லிம் பெண்களும் அடக்கம்) ஆற்றல்படுத்தலை உறுதிப்படுத்துகின்றன. பார்ப்பன-சவர்ண மேலாதிக்கம், முஸ்லிம்களை முற்றுகைக்குள்ளாக்கும் தேச-பாதுகாப்பு அரசு நிறுவனம், அரசு உடன்பாட்டோடு நடத்தப்படும் முஸ்லிம் விரோத இந்து நாஜி வெகுஜன வன்முறை முதலானவற்றின் பாத்திரம் பற்றி சரியான விதத்தில் பேச வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கும், அவர்கள் மீதான வன்முறைக்கும்கூட கட்ஜூ செய்வது போன்று அவர்களையே காரணமாகக் காட்டும் இந்து நாஜி-இந்து லிபரல், இடது வட்டாரங்கள், கல்விப்புலங்களில் பொதுவாகப் பேசப்படும் சொல்லாடல்கள் மற்றும் பொது விவாதம் போன்ற அனைத்தும் சேர்ந்தே முஸ்லிம்களைப் பலவீனப்படுத்துகின்றது. இவ்வேளையில், மதரசா, முஸ்லிம் சமூகத் தலைமைகள் (அது தொண்டு நிறுவனம், அமைப்பு என சிறிதும் பெரிதுமான அனைத்தும்) ஆகியவைதாம் முஸ்லிம்களைக் கொஞ்சமாவது ஆற்றல்படுத்துகின்றன.

இன்று முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையிலானோரின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வது முஸ்லிம் சமய, சமூக உள்கட்டமைப்புகள்தான். அதாவது இதே ஷரீஆ, புர்கா, மதரசா, மௌலானா ஆகியவற்றில் தோய்ந்த முஸ்லிம் சமூக நிறுவனங்கள். நான் பணியாற்றும் கல்லூரியை நடத்தும் அறக்கட்டளையின் பெயரிலேயே மதரசா உண்டு. மதரசாவை மட்டும் நடத்திக்கொண்டிருந்த அறக்கட்டளைதான் இன்று பள்ளிக்கூடங்களையும் கல்லூரியையும் நடத்திக்கொண்டிருக்கிறது.

அந்தப் பகுதியிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளே இருந்ததால் இக்கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த, பின்னாளில் அமைச்சர்களாகவும் கட்சித் தலைவர்களாகவும் ஆன ஏராளமான ‘பொது’த் தலைவர்களும், படித்திருக்கிறார்கள். இதுதான் மதரசா, மௌலானாக்களினாலும் விளைந்த பெருங்கேடு. அதுமட்டுமல்ல, இன்று ஏராளமான புர்காக்களும் இந்தக் கல்லூரிகளில்தான் படித்து தங்களது அக-புற வளர்ச்சியைப் பெற்று வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், இப்படியெல்லாம் படித்துவிட்டு ‘பொதுவான’ மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குப் போகும்போது நடப்பது என்ன? தூக்கில் தொங்கவிடப்படுதல், இந்து நாஜி வன்முறைகளுக்கு உள்ளாதல், புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களின் மீது வலது, இடது முகாம்களுக்கு அப்பாற்பட்டு அவர்கள் முகமை இல்லாத முஸ்லிம் சமூகத்து ஆண்களின் அடிமைகளாகப் முன்தீர்மானத்தோடு பார்க்கப்படுதல்… இவையெல்லாம்தான் நடக்கிறது.

வலதுசாரிகள் இவர்களைத் தீவிரவாதி என்பார்கள். இன்னொரு சாரார் இந்துத்துவத்தினரையும், சமயப்பற்று கொண்ட முஸ்லிம் தன்னிலைகளையும் கோட்பாட்டளவில் சமமாகப் பார்த்துவிட்டு, நடைமுறையில் முஸ்லிம்களைத் தீவிரமாக எதிர்ப்பதும், ‘வகுப்புவாதி’ என்றெல்லாம் அடையாளப்படுத்துவதுமே நடக்கிறது. மேலும், ராமச்சந்திர குஹா போன்றவர்கள் திரிசூலமும் புர்காவும் ஒன்று எனச் சொல்லி, அரசியல் கூட்டங்களில் இவ்விரண்டும் இடம்பெறக்கூடாது என்று எழுதுவார்கள். இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் பொதுவெளியில் political agents-ஆக இருக்கும் வாய்ப்பைப் பறித்து அவர்களைப் பலவீனப்படுத்துகிறார்கள்.

ஆக, பொதுவாக முஸ்லிம் empowerment-யும், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆற்றல்படுத்தலையும் ஊக்குவிக்கும் காரணியாக முஸ்லிம் சமூகத்தின் சமய-சமூகக் கட்டமைப்புகள் செயல்பட முடியும். பொதுவாக முஸ்லிம் சமூகத்தையும், குறிப்பாக முஸ்லிம் பெண்களையும், பலவீனப்படுத்தும் வெளிகளாக ‘பொது’வெளிகளும் செயல்பட முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் புரிதல்கள் எதுவும் இல்லாமல் முஸ்லிம் பின்னடைவை ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் அகவயச் சிக்கல்களாக நிரல்படுத்துவது ஒரு முஸ்லிம் விரோதச் செயல்பாடு இல்லையா? முஸ்லிம் மற்றமையாக்கத்தின் ஆற்றல் வரட்டுத்தனமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்குள் இல்லை. மாறாக, முஸ்லிம் மற்றமையாக்கத்தின் உயிர், நவீனமாகவும் மதச்சார்பற்றதாகவும் தெரியும் லிபரல் சொல்லாடல்களுக்குள்தான் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

Related posts

Leave a Comment