கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் கதாநாயகியைக் கொண்ட மிஸ் மார்வல் தொடர் எப்படியிருக்கிறது?

Loading

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற கையோடு, பிரிவினைக் கோடு கிழிக்கப்பட்டு இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகள் இத்துணைக்கண்டத்தில் பிறந்தன. அதன் தொடர்ச்சியாக உருவெடுத்த மனிதத்தன்மையற்ற வன்முறைக் களியாட்டத்தால் இந்தியாவிலிருந்து இஸ்லாமியர்களும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் பெருந்திரளாக வெளியேறி நடந்தும் ரயிலில் ஏறியும் எல்லையைக் கடந்தனர். சொந்த மண்ணிலிருந்து அம்மக்களை வெளியேற்றிய வன்முறை, புலம்பெயர்தலின்போதும் அவர்களை விட்டுவைக்கவில்லை. அதுவரை வாழ்க்கையில் அவர்கள் சம்பாதித்த, சேமித்த அனைத்தையும் விட்டுவிட்டு உயிரையும் உறவுகளையும் மட்டுமே கூட்டிக்கொண்டு ரயிலேறிய அவர்களில் பலர் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர்.

அதிருஷ்டவசமாக சனா எனும் அந்தச் சிறுமி, கால் ஊனமுற்ற தன் தந்தையோடு ஏறிச் சென்ற ரயிலை யாரும் ஆயுதங்களோடு இடைமறிக்கவில்லை. அது நல்லபடியாகவே பாகிஸ்தான் சென்றடைகிறது. ஆனால் ரயிலைப் பிடிப்பதற்கு முன்னால் தன் அப்பாவின் கையை விட்டுவிடுகிறாள் சனா. அவள் அம்மாவும் கூட்டத்தில் தொலைந்து போகிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்பயத்துடன் அலைந்துகொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் சனா தன் பெற்றோர்களைக் காணாமல் கதறியபோது, ஒளிரும் நட்சத்திரக் கூட்டமொன்று சனாவைக் காற்றில் மிதக்கச்செய்து, ஜனநெரிசலைக் கடந்து அவள் அப்பாவிடம் சேர்ப்பிக்கிறது. பிறகே அவர்கள் இருவரும் அந்த ரயிலில் ஏறி பாகிஸ்தான் செல்கிறார்கள்.

வருடங்கள் ஓடின. சனாவிற்குத் திருமணம் நடந்து குழந்தைகள் பிறக்கின்றன. அவளின் ஒரு மகளான முனிபா தன் கணவன் யூசுஃப் கானுடன் அமெரிக்கா புலம்பெயர்கிறார். அங்கு அவர்களுக்குப் பிறக்கும் இரண்டாவது மகள்தான் கமலா கான். Ms. Marvel தொடரின் இளம் நாயகி.

பதின் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவி கமலா கான் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் முதலான உலகைப் பேரழிவுகளிலிருந்து ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களின் தீவிர ரசிகையாக இருக்கிறார். அத்தோடு தனக்கும் அவர்களைப் போன்ற சக்தி வேண்டும் எனும் ஆசையும் இருக்கிறது. அந்தச் சமயத்தில்தான் அவளுக்கு கராச்சியிலிருக்கும் தன் பாட்டி சனாவிடமிருந்து ஒரு வளையல் அன்பளிப்பாக வருகிறது. தன் அம்மாவின் உத்தரவை மீறி அதை அணிய, அந்த வளையல் அவளையும் ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றுகிறது.

அப்புறம் என்ன? தன் நண்பர்களுடன் சேர்ந்து குட்டிக்குட்டி சாகசங்கள் நிகழ்த்துகிறாள் கமலா கான். அற்புத சக்தியுடைய யாரோ ஒருவர் நியூயார்க் நகரத்தில் அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்த ‘டேமேஜ் கண்ட்ரோல்’ எனும் அரசு நிறுவனம் கமலா கானை துரத்துகிறது. கூடவே அந்தச் சக்தியைப் பற்றி நன்றாக அறிந்த வேறொரு மர்மக் கும்பலும். அவர்களிடமிருந்து தப்பிக்க முயல்வதோடு அந்த வளையலின் பின்னணியையும் அறிய முயல்கிறாள் கதாநாயகி. அதற்காக பாகிஸ்தான் வரை செல்கிறாள். தப்பித்தலும், அந்தக் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும்தான் மிஸ் மார்வலின் மீதிக் கதை. அது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலம் வரை நம்மைக் கூட்டிச்செல்கிறது.

Avengers End Game படத்திற்குப் பிறகு உலகம் முழுக்க இருக்கும் மார்வல் ரசிகர்களை Spider Man No-Way Homeஐத் தவிர வேறு எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. எனினும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிவரும் தொடர்கள் Marvel Cinematic Universeஐ அடுத்த கட்டத்திற்கு நகற்றிச் சென்றிருக்கின்றன. The Falcon and the Winter Soldier அகதிகள் பிரச்னையைத் தொட்டிருப்பதோடு, ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர் ’கேப்டன் அமெரிக்காவின்’ இடத்திற்கு வரும்போது எழும் சிக்கல்களைப் பேசுகிறது. பெரும் போரொன்று ஏற்படுத்தியிருக்கும் இழப்புகளைக் குறித்து WandaVision மற்றும் Hawkeye தொடர்கள் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோவொரு சீரியஸான விஷயத்தை எடுத்துப் பேசியிருப்பதோடு, நேர்த்தியாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் இணைந்திருக்கும் மிஸ் மார்வல் தொடரானது, அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை, பாகிஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்ட, ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளரும் ஒரு பதின் பருவத்துப் பெண்ணின் வழியே நமக்கு அறிமுகம்செய்ய முயன்றிருக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியர்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. சமீபத்தில்கூட நெட்ஃப்ளிக்சில் Never Have I Ever எனும் தொடர் ஒரு அமெரிக்கத் தமிழ்ப் பெண்ணின் கதையைச் சொல்லியிருக்கிறது. ஆனால் இதுவரை வெளியான பெரும்பாலான படங்களும் தொடர்களும் இந்தியர்களின், அதிலும் குறிப்பாக இந்துக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. My Name is Khan, The Reluctant Fundamentalist போன்ற வெகுசில படங்களே அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 9/11 சம்பவத்திற்குப் பிறகு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமோ ஃபோபியா அமெரிக்க முஸ்லிம்களின் அன்றாடத்தையும் இருத்தலையும் எப்படியெல்லாம் சிதைத்திருக்கிறது என்பதைத் தம் பேசுப்பொருளாகக் கொண்டிருந்தன.

அந்த வரிசையில் நாம் மிஸ் மார்வல் தொடரையும் சேர்க்கலாம். அமெரிக்க முஸ்லிம்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அடையாளச் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைத் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் கரிசனத்தோடு சித்தரித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் இருக்கும் பள்ளிவாசலையும், அதனுள்ளே இயங்கும் ஒரு பண்பாட்டு வெளியையும் மிக அழகாகப் பதிவுசெய்துள்ளது இத்தொடர். அதேபோல், பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகளையும் வீட்டு விஷேசங்களையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதைக் காட்டுவது நெகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. உதாரணமாக, கமலா கானின் அண்ணன் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்வார். அவரும், இஸ்லாமியர் அல்லாத கமலாவின் மற்ற நண்பர்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பண்பாட்டு உலகிற்குள் நுழைந்து, ஈத், திருமணம் முதலான அவர்களின் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு கலந்துகொள்ளும் காட்சி அத்தனை இனிமையாக இருந்தது.

இஸ்லாமியர்களின் மீது நடத்தப்படும் வன்முறையை அத்துணை வெளிப்படையாக மிஸ் மார்வல் பேசவில்லை என்றாலும், அதைச் சுட்டிக்காட்டாமலும் இல்லை. அங்கிருக்கும் பள்ளிவாசல்கள் எப்படி அமெரிக்க உளவுத்துறைகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றன என்பதோடு, சில காட்சிகளும் வசனங்களும் மிக எதார்த்தமாக அமெரிக்க முஸ்லிம்களின் நெருக்கடி மிகுந்த வாழ்க்கையைச் சற்று பதிவுசெய்துள்ளன.

தொடரின் கடைசி அத்தியாயத்தில் ஒரு குற்றவாளியைத் தேட அமெரிக்க உளவுத்துறை பள்ளிவாசலுக்குள் நுழைகிறது. அந்தப் பள்ளியின் இமாம் அவர்களைத் தடுக்க முற்படுகையில், அந்த உளவுத்துறையை வழிநடத்தும் ஒரு பெண்மணி, “நீங்கள் ஒரு சந்தேகத்திற்குறிய குற்றவாளியைப் பாதுகாப்பதாக இருந்தால் உங்கள் பக்கம் எவரும் நிற்க மாட்டார்கள்” என்கிறாள். அதற்கு அந்தப் பெரியவர், “எனக்குச் சாதகமாக யாரும் நிற்கவேண்டிய அவசியமில்லை. இவ்வளவு ஏன்? கடவுள் என் பக்கம் நிற்கிறாரா என்பது பற்றிகூட எனக்கு அக்கறை இல்லை. ஏனெனில் நான் எப்போதும் அந்தக் கடவுளின் பக்கமே இருக்கிறேன்” எனப் பதிலுரைத்தவுடன், “எனக்கு குர்ஆன் வாசங்களைக் கேட்க நேரமில்லை” எனச் சொல்லித் தன் படையுடன் பள்ளிக்குள் பிரவேசிப்பார் அந்தப் பெண். அவரைக் கொஞ்சம் நடக்கவிட்டு அந்த இமாம் சொல்வார், “இது ஆப்ரகாம் லிங்கன் சொன்னது. குர்ஆன் வசனமல்ல” என்பார். அமெரிக்க உளவுத்துறையினருக்கு எப்படி குர்ஆன் மட்டுமின்றி, தங்களின் ஆப்ரகாம் லிங்கன்கூட பரிச்சயம் இல்லை என்பதைக் கொஞ்சம் நய்யாண்டியோடு சொல்லும் தருணமாக இக்காட்சி இருக்கிறது.

இன்று நாம் பார்க்கும் இந்த Marvel Cinematic Universe (MCU) தொடக்கமான Iron Man படத்தின் முதலாம் பாகம் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் வழக்கமான ஹாலிவுட் தொனியில் இருக்கும். அப்படி தொடங்கிய MCU, இன்று இஸ்லாமியர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய முனைந்திருப்பதுடன், ஓர் இஸ்லாமியப் பெண்ணைக் கதாநாயகியாகக் கொண்ட தொடரைத் தயாரித்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமே.

ஆனால் இது தன்னியல்பாக, எந்த உள்நோக்கமுமின்றி உருவானதன்று. வணிக ரீதியாக மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டிருக்கும் மார்வல் படங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி மூன்றாம் உலக நாடுகளிலும் மிகப்பெரிய சந்தையிருக்கிறது. அச்சந்தையை இன்னும் விரிவாக்கம் செய்வதற்கு மூன்றாம் உலக நாடுகளிலிருந்து கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான பரிசோதனை முயற்சியாக, ஆஃப்ரிக்காவில் Wakanda எனும் கற்பனை தேசத்தைக் கட்டமைத்து அதிலிருந்து எழும்பிவரும் சூப்பர் ஹீரோ நாயகனை வைத்து Black Panther எனும் திரைப்படத்தை உருவாக்கியது மார்வல். அது வெற்றி பெறவே, சமீபத்தில் சீனத்தைப் பின்னணியாகக் கொண்ட Shang-Chi and the Legend of the Ten Rings, எகிப்திய தொன்மத்தை மையப்படுத்திய The Moon Knight போன்றவை தயாரிக்கப்பட்டன. எப்போதும் பேரழிவிலிருந்து உலகைக் காக்கும் இரட்சகர்கள் வெண்ணிறத் தோலுடன், அமெரிக்காவிலிருந்து மட்டும் எழும்ப வேண்டியதில்லை, உங்களில் ஒருவரும் சூப்பர் ஹீரோவாகலாம் எனச் சொல்லி மார்வல் படங்களை இன்னும் அதிகமாக விற்பதற்கான ஒரு வியாபார உத்தி இது.

இத்தகைய வணிக முயற்சியின் ஒரு பகுதியே பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா கான் எனும் இஸ்லாமியச் சிறுமியை நாயகியாகக் கொண்டு வெளியான மிஸ் மார்வல் தொடர். எனினும் இதை என் மனம் இவ்வளவு கொண்டாடத் துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் இன்றைய அரசியல் சூழலே. மிகப்பெரிய அளவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்று இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் அரசின் உதவியோடு நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அந்தத் தாக்குதல்களையும், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையையும் ஊக்குவிக்கும் வகையில் காஷ்மீர் ஃபைல்ஸ், சாம்ராட் பிரித்விராஜ், FIR போன்ற படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன (இவற்றில் FIR ஒரு தமிழ்ப் படமென்பதையும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸால் அது வெளியிடப்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்). இந்தப் பின்னணியில், வணிக நோக்கத்திற்காகவே மிஸ் மார்வல் தொடர் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதை நம்மால் வரவேற்க முடிகிறது.

நிச்சயம் இத்தொடரில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. மூன்றாம் உலக நாடுகளைப் பின்னணியாகக் கொண்டு உருவான மார்வல் திரைப்படங்களையும் தொடர்களையும் எடுத்துக்கொண்டால், அதன் நாயக, நாயகியரின் அற்புத சக்திகள் அந்தந்த தேசத்தின் பழந்தொன்மத்திலிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, மிஸ் மார்வலில் கமலா கான் ஜின்களுடன் தொடர்புடையவளாக இருப்பாள். மூன் நைட் தொடரில் நாயகன் எகிப்தியக் கடவுளிடமிருந்து தனக்கான சக்தியைப் பெறுகிறான். இதற்கு முற்றிலும் மாறாக, பெரும்பாலான முந்தைய மார்வல் படங்களின் நாயகர்கள் – ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், கேப்டன் மார்வல், ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன் போன்றவர்கள் – தம் அபார சக்தியை அறிவியலின் வாயிலாகப் பெறுகிறார்கள். இதில் தோர் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ் மட்டும் விதிவிலக்குகள்.

இத்தகைய கதையமைப்பானது, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் விஞ்ஞானத்தோடு தொடர்புடையவர்கள் எனும் சித்திரத்தையும், ஆசியர்களும் ஆஃப்ரிக்கர்களும் இன்னமும் தங்களை மயாஜாலத்துடனும் புராணக் கதைகளோடும் பிணைத்திருப்பவர்கள் எனும் உணர்வையும் தருவதாக இருக்கிறது. என்னதான் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்தவர்களே இப்படங்களையும் தொடர்களையும் எழுதி, இயக்குவதற்கான வாய்ப்பை மார்வல் தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தியிருந்தாலும், கீழைத்தேயவாதப் பார்வையில் (oriental gaze) இருந்து முழுமையாக விடுப்பட்டவையாக இப்படைப்புகள் இல்லை.

Related posts

Leave a Comment