The Evolution of Atheism: The Politics of Modern Movement tamil தமிழ்நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நாத்திகவாதத்தின் பரிணாமம் (நூல் அறிமுகம்)

Loading

சமகாலத்தில் தீவிரமாக அலசப்படும் ஒரு தோற்றப்பாடாக நவநாத்திகம் (New-Atheism) மாறியிருக்கிறது. அந்த வகையில், நவநாத்திகவாதத்தை அதன் அறிவுத் தத்துவம், பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக-அரசியல் பரிமாணம் எனப் பல்வேறு கோணங்களில் ஆராயும் மிக முக்கியமான புத்தகமாக சமூகவியல் ஆய்வாளர் ஸ்டிபன் லெட்ரூவின் The Evolution of Atheism: The Politics of Modern Movement உள்ளது. யோர்க் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்திற்காகச் சமர்பிக்கப்பட்ட ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, சமூகவியல் பரப்பில் மத நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், சமூக-அரசியல் விவகாரங்களை அணுகுவதில் அவர்களது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதிலேயே ஆய்வாளர்கள் அதிகம் கரிசனம் கொள்கிறார்கள். ஆனால், மதத்தைத் துறந்தவர்கள் அல்லது நாத்திகர்களின் சமூக நடத்தை எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் சமூகவியல் துறையில் மிக அரிது. அந்த இடைவெளியை இப்புத்தகம் பூர்த்தி செய்ய முயல்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்தப் புத்தகம் ஆரம்பமாக நவநாத்திகவாதத்திற்கு முந்தைய சமூக-அரசியல் சூழலில் நாத்திகவாதத்தின் போக்குகள் பற்றி பேசுகிறது. தொடர்ந்து, நவநாத்திகவாதத்தின் அறிவு, பண்பாடு மற்றும் அரசியல் தத்துவம் பற்றி விரிவாக அலசுகிறது. கடைசியாக, பொதுத் தளத்தில் நவநாத்திகம் ஏற்படுத்தியிருக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களை ஆராய்கிறது.

மேற்குலக வரலாற்றில் நாத்திகம் என்பது சார்பளவில் நூறாண்டு வரலாற்றைக் கொண்டதொரு புதிய தோற்றப்பாடாகும். நவீன விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வந்துள்ளதாக நவநாத்திகவாதிகள் குறிப்பிடுவதுண்டு. அதற்கூடாக நாத்திகம் என்பது நவீன ஜரோப்பா உருவாகியதிலிருந்து துளிர்விட ஆரம்பித்ததாக அவர்கள் பரப்புரை செய்வார்கள். இக்கருத்து 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில நாத்திகவாத அறிஞர்களால் பரப்பப்பட்டதொரு வரலாற்றுத் திரிபு என்கிறார் நூலாசிரியர் ஸ்டீபன்.

உண்மையில், விஞ்ஞானப் புரட்சிக் கால அறிஞர்களான நியூட்டன், டேக்கார்ட், கலீலியோ கலீலி, ஸ்பேனோஸா போன்றவர்கள் தமது விஞ்ஞானக் கோட்பாடுகளை இறைவனுக்கு எதிரானதாக அறிமுகம் செய்யவில்லை. மாறாக, நவீன விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் கிறிஸ்தவ இறையியல் சிந்தனையில் மாற்றங்கள் வர வேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருந்தார்கள். மட்டுமன்றி, நவீன விஞ்ஞானத்தையும், கிறிஸ்தவ இறையியலையும் பிணைக்க நியூட்டன், லொக், டேக்கார்ட் போன்றோர் சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். 16ம், 17ம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற விஞ்ஞானப் புரட்சிக்கு (Scientific Revolution) வித்திட்டது இறையியல் புரட்சிதான் (Theistic Revolution) என்று சுட்டிக்காட்டும் நூலாசிரியர் ஸ்டீபன், விஞ்ஞானப் புரட்சியை வழிநடத்திய பெரும்பாலான விஞ்ஞானிகள் தமது புதிய கோட்பாடுகளை இறையியலின் துணைகொண்டுதான் பலபோது நிறுவியதாகக் குறிப்பிடுகிறார்.

மதமும் அறிவியலும் முரண்படும் இரு தோற்றப்பாடுகள் என்ற நாத்திகவாதிகளின் அடிப்படையான தர்க்கம் டார்வினின் பரிணாமவாதக் கோட்பாட்டுடனே தோற்றம் பெறுகிறது. அதற்கு அக்கால சமூக அரசியல் சூழல் பெருமளவில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. டார்வின் ஒரு நாத்திகராகவோ இறை நம்பிக்கையாளராகவோ இருக்கவில்லை. அதுகுறித்த ஒரு தெளிவின்மையுடனேயே அவர் இருந்திருக்கிறார். என்றாலும், அவருக்குப் பின்னர் வந்த ஹர்பட் ஸ்பென்ஸர், தோமஸ் ஹஸ்லி போன்றவர்கள் டார்வினின் சிந்தனையை நாத்திகவாதப் பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டதாக இந்நூல் வாதிடுகிறது.

நாகரிகத்தின் உச்சமாக மேற்குலக நவீனத்துவத்தை முன்னிறுத்தவும், தாராளவாத முதலாளித்துவ ஒழுங்கை மனிதகுல வளர்ச்சியின் அடைவாக நிறுவுவதற்கும் டார்வினின் பரிணாமவாதக் கோட்பாட்டை ஹேர்பட் ஸ்பென்ஸர் போன்றவர்கள் கருதியிருக்கிறார். எனவே, அந்தக் கோட்பாடு தோற்றம் பெற்ற காலம் முதலே அது அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

உயிர்களின் தோற்றம் பற்றிய கோட்பாட்டுடன் எழுந்த விஞ்ஞானவாத நாத்திகம் கார்ல் மார்க்ஸ், ஃப்ராய்ட் மற்றும் நீட்சே போன்றவர்களுடன் புதியதொரு பரிமாணத்தை எட்டியது. விஞ்ஞானவாத நாத்திகம் மனிதநேய நாத்திகமானது (Humanist Atheism).

மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விஞ்ஞானத்தை போதிப்பதால் மட்டும் களைய முடியாது. மாறாக, சமூகப் பாதுகாப்பின்மை, சமூக அநீதி மற்றும் வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது, அதைத் தாண்டிச் செல்வதற்கான ஒரு ஏற்பாடாகவே இறைவனை மனிதர்கள் கற்பனை செய்கிறார்கள். எனவே, சமூகநீதி, சமத்துவம், மனிதனின் நாட்ட சக்தியை நிறுவுவதன் வழியாக மதத்தின் செல்வாக்கிலிருந்து மனிதர்களை விடுவிக்க முடியும் என்ற கருத்தை மார்க்ஸ், நீட்சே போன்றவர்கள் முன்வைத்தனர். டார்வினின் உயிரியல் கோட்பாட்டை மையப்படுத்திய நாத்திகவாதத்தை இயற்கை விஞ்ஞான ஆய்வுகள் வழிநடத்தின; மனிதநேய நாத்திகவாதத்தை சமூக விஞ்ஞான ஆய்வுகள் வழிநடத்தின என்று டாக்டர் ஸ்டீபம் குறிப்பிட்டுக் காட்டுகிறார். கிட்டத்தட்ட மனிதநேய நாத்திகவாதத்தை ஓரங்கட்டி மீண்டும் விஞ்ஞானவாத நாத்திகத்தை மையநீரோட்ட உரையாடலாக மாற்றுவதற்கான முயற்சியையே நவநாத்திகம் மேற்கொள்கிறது என்ற வாதமானது புத்தகம் முன்வைக்கும் மிக முக்கியமான வாதமாகும்.

மனிதநேய நாத்திகவாதத்தின் பிரதான தர்க்கங்களான சமூகநீதியை நிலைநாட்டல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பன்மைத்துவம் பேணல் போன்ற முழக்கங்களின் மூலம் உலகில் மீண்டும் மதவாதம் தலைதூக்க மனிதநேய நாத்திகவாதமும், அத கோட்பாட்டாளர்களும் தம்மையறியாமல் உதவுகிறார்கள் என்பது நவநாத்திகர்களின் குற்றச்சாட்டு. விஞ்ஞானவாதத்திற்கு சவாலாய் மதம் மீண்டெழுந்துள்ளது என்றும், மதத்தை விஞ்ஞானத்தின் ராஜதந்திர எதிரியாகப் பிரகடனம் செய்து அதற்கெதிராய் ஒருமித்த அணியாகச் செயல்பட வேண்டும் என்றும் நவநாத்திகர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதி, நவீன மேற்குலக வரலாற்றில் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையிலான உரையாடல்கள் நடந்த பின்னணியில் நவநாத்திகவாதத்தை விளக்குகிறது. அதன் மற்றொரு பகுதி நவநாத்திகத்தின் பிரதான கதையாடல்களை விரிவாக அலசுகிறது. குறிப்பாக, விஞ்ஞானத்தை வெறுமனே இயற்கையை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளின் (Science of Methodology) தொகுப்பாக மட்டுமன்றி, அதையொரு தத்துவார்த்த நோக்காகவும் (Metaphysical Naturalism) நவநாத்திகம் கருதுகிறது. மேலும், பரிணாமவாதத்தை வெறுமனே உயிர்களின் ஆரம்பம் பற்றிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகப் பார்க்காமல், ஒழுக்கவியல், சமூக நடத்தை, பொருளாதாரக் கட்டமைப்புகள், மதம் பற்றிய பார்வை என சகல மானுடப் பரிமாணங்களையும் புரிந்துகொள்வதற்குத் துணைபுரியும் கருவியாகப் பார்க்கிறது.

மனித உடலில் ஏற்படும் உயிரியல் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கூடாக சகல மானுடச் செயல்பாடுகளையும் இயற்கை விஞ்ஞானத்தின் துணை கொண்டு விளக்க முடியும் என நவநாத்திகம் விவாதிக்கிறது. இன்னொரு வார்த்தையில் சொன்னால், பரிணவாதக் கோட்பாட்டை ஒரு கருத்தியலாக நவநாத்திகர்கள் காண்கிறார்கள். அதனோடிணைந்த வகையில், உயிரியல் தத்துவம் (Philosophy of Biology) என்ற ஆய்வுப் பரப்பைப் பயன்படுத்தி, ஏனைய தத்துவ மரபுகளை ஓரங்கட்டும் முயற்சியில் நவநாத்திகம் இறங்கியிருக்கிறது.

உயிரியல் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து மனிதன் எதிர்கொள்ளும் அடிப்படையான வாழ்வியல் கேள்விகளான உயிர் என்றால் என்ன, மனித வாழ்வின் இலக்கு என்ன, பண்பாடு என்றால் என்ன போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதே உயிரியல் தத்துவம் (Philosophy of Biology) செய்யும் பிரதான பணியாகும். அடுத்து நவநாத்திகம் முன்வைத்தியங்கும் பிரதான விஷயம் என்னவெனில், விஞ்ஞானத்தை அரசியல் தத்துவமாக நிறுத்துவதாகும். அதாவது, சமூகம் சார்ந்த அரசியல் தீர்மானங்கள் முழுமையாக விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் நெறிப்படுத்தப்பட வேண்டும் அது வாதிடுகிறது. மதம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த அனைத்து விவகாரங்களும் விஞ்ஞானத்தின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறது.

இப்படி நவநாத்திகம் என்பது ஒருவித மொத்தத்துவக் கருத்தியலாகவும் (Totalitarian Ideology) தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. பன்மைத்துவக் கலாச்சார மரபுகளை ஒழித்து, உலகை இணைக்கும் ஒற்றைக் கலாச்சாரமாக விஞ்ஞானத்தை முன்வைக்கிறார்கள் நவநாத்திகர்கள். இன்னொரு வார்த்தையில் சொல்வதானால், விஞ்ஞானவாதத்தை மையப்படுத்திய புதிய உலக ஒழுங்கொன்றைக் கட்டியெழுப்புவதும், அதற்காகப் பணி செய்யும் வகையில் நாத்திகர்களை ஒன்றுதிரட்டுவதுமே நவநாத்திகத்தின் இறுதி இலக்கு என்கிறார் டாக்டர் ஸ்டீபன். விஞ்ஞானவாதத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச சமூக இயக்கமாகவும் அது தொழிற்படுகிறது எனக் கோடிட்டுக் காட்டுகிறார்.

நவநாத்திகத்தின் வருகையையும் செல்வாக்கையும் மனிதநேய நாத்திகர்கள் சவாலாகப் பார்க்கிறார்கள். காரணம், அவர்களைப் பொருத்தவரை நாத்திகவாதம் என்பது மனித உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் இருக்க வேண்டுமே தவிர, அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்திலும், பிறரின் உரிமைகளை நசுக்கும் அமைப்பிலும் அமைய முடியாது என்பதாகும். இந்தப் பின்னணியில், தற்போது மூன்று அணிகளாகப் பிரிந்து இயங்கும் தோற்றப்பாடாக நாத்திகவாதம் மாறியிருப்பதாகக் கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர்.

  1. நவநாத்திகர்கள்: நேரடியாக மதத்தை உலகிலிருந்து துடைத்தெறிவதன் மூலம் உலகிற்கு விடிவு கிடைக்கும் என்கிறார்கள் இவர்கள்.
  2. மனிதநேய நாத்திகர்கள்: சமூக நீதியை மையப்படுத்திய இடதுசாரி நாத்திகவாதிகள் சமூக நீதிக்காக உழைப்பதே நாத்திகவாதம் என்கிறார்கள். விஞ்ஞானத்தை ஆதரிப்பதால் மட்டும் உலகில் நல்லதொரு எதிர்காலத்தை அடைந்துவிட முடியாது; சமூக நீதியை உறுதி செய்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். அத்தகையதொரு இலக்கை அடையத் துணைபுரியும் எல்லா சக்திகளையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்றும், சமூக நீதி என்ற இலக்கை அடைய மதம் சார்ந்த சக்திகளுடன் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்யவே வேண்டும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
  3. தாராளவாத நாத்திகர்கள்: தாராளவாத விழுமியங்களை சமூகமயப்படுத்தும்போது இயல்பாகவே மதத்தின் பிடியிருந்து மனிதர்கள் விடுபட்டு, சுதந்திரச் சிந்தனையுள்ளவர்களாக மாறுவார்கள் என்பது இவர்களது உலகநோக்காகும். எனவே, மதங்களின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்வதற்கு விஞ்ஞானத்தை விட தாராளவாத விழுமியங்களையே முற்படுத்த வேண்டும் என இவ்வகை நாத்திகவாதிகள் குறிப்பிடுகிறார்கள். அப்பொழுதுதான், தாராளவாத நோக்கில் மதங்களைப் புரிந்துகொள்ள முனையும் மதவாதிகளையும் இணைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர முடியும் என அவர்கள் வாதிடுகிறார்கள்.

இம்மூன்று தரப்பினருக்கும் இடையிலான கருத்து மோதல்களே தற்போதைய நாத்திகவாதத்தின் சமகாலப் போக்கை திசைப்படுத்திக் கொண்டிருப்பதாக நூலாசியர் டாக்டர் ஸ்டீபன் கூறுகிறார்.

நவநாத்திகவாதத்தின் பரிணாமம் என்ற இந்நூல் நவநாத்திகம் குறித்த முழுமையானதொரு பார்வையைப் வழங்கும் முக்கியமான ஆக்கம். மேலும், நவநாத்திகத்தின் அறிவு அடித்தளம், பண்பாட்டு மற்றும் அரசியல் அசைவுகளை மொத்தமாகத் தொகுத்துத் தரும் விரிவானதொரு ஆய்வு நூல். நாத்திகம் குறித்த விரிவானதொரு வரலாற்றுப் பார்வையையும் இதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், தமிழ்ப்புலத்திற்கு கட்டாயம் மொழிபெயர்க்கப்பட வேண்டியதொரு நூல் இது.

Related posts

Leave a Comment