நரக மாளிகை (நூல் அறிமுகம்)
முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளின் மீது சங் பரிவாரம் நிகழ்த்தும் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டங்களை, அதன் நாசகர சித்தாந்தத்தை பல புத்தகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. மேழி புக்ஸ் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூலான நரக மாளிகை அத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் இந்து தேசியவாத இயக்கத்தின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு பற்றியும், இந்து ராஷ்டிரக் கனவின் பெயரால் எத்தகைய மனித மிருகங்களை அது உருவாக்குகிறது என்பதையும் பதிவு செய்துள்ளது.
இந்நூலின் ஆசிரியர் சுதீஷ் மின்னி தனது சிறு பிராயத்திலிருந்து 25 ஆண்டுகாலம் முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்தவர். கேரளாவைச் சேர்ந்த இவர், அந்த இயக்கத்திற்குள் நடைபெறும் ஒழுக்க மீறல்கள், பணத்திற்காக நடைபெறும் கொள்ளைகள், இயக்கத்திற்காக பாடுபட்ட சக இயக்கத்தினரின் குடும்பங்களில்கூட அத்துமீறும் கொடுமைகள், உயர் சாதி ஆதிக்கம் போன்றவற்றைக் கண்டு நொந்துபோய் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகியிருக்கிறார். தீவிரமான ஊழியராகச் செயல்பட்டபோது தேச பக்தி, மதப்பற்று என்பதன் பெயரால், தான் செய்த தவறுகளை இப்புத்தகத்தில் ஒப்புதல் வாக்குமூலமாக அளிக்கிறார்.
ஆர்எஸ்எஸ் எப்படி மதத்தையும் தேசத்தையும் கருவியாக்கி குழந்தைகளின் மனத்தை மாசுப்படுத்தி, காட்டுமிராண்டிகளாக மாற்றி வருகிறது என்பதை அறிந்தால், ஹிட்லர் உருவாக்கிய கொலைப் படைகளின் நவீன வடிவங்கள்தாம் இவர்கள் என்பது புலனாகும். இந்தக் கொலைப் படைக்கு இளைஞர்களைக் காட்டிலும் கள்ளங்கபடமற்ற குழந்தைகளை இவர்கள் குறிவைத்து ஆள் சேர்ப்பில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகர யதார்த்தம்.
ராமாயண வகுப்பு, வேதக் கணிதம், விளையாட்டுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி குழந்தைகளை வசீகரித்து அவர்களைத் தங்களின் ஏவல் படையாக எப்படி மடைமாற்றம் செய்கிறார்கள் என்பதை இந்நூலில் சுதீஷ் விளக்குகிறார். மத விழாக்களை, கோவில்களை எப்படி திட்டமிட்டு தம் பயங்கரவாத அமைப்பின் தளங்களாக மாற்றுகிறார்கள் என்பதும், குழந்தைகளின் பெற்றோரை எப்படி தம் செயல்திட்டங்களின் ஆதரவாளர்களாக, நிதி அளிப்போராக மாற்றுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்க அம்சங்களாகும்.
ஆர்எஸ்எஸ் மிகமிக வலுவான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் என்பதை நாம் அறிவோம். குரு தட்சணை என்று சொல்லி அது வசூக்கும் ஒரு நாள் தொகையே பல்லாயிரம் கோடிகளாக உள்ளது. ஆர்எஸ்எஸ்-சின் ஷாகாவில் அதானி கலந்துகொண்டதாக நூலாசிரியர் சுதீஷ் சுட்டிக்காட்டும் செய்தி நம்மில் பலருக்கும் தெரியாத தகவல். அதானியும், அவரது நிறுவனமும் பாஜக ஆட்சியில் அடைந்திருக்கும் பல்லாயிரம் கோடி வணிக லாபங்கள் எப்படி ஆர்எஸ்எஸ்-சின் பயங்கரவாதப் பணிகளுக்கு முதுகெலும்பாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டால், எளிதில் எதிர்கொள்ள முடியாத பூதாகர சக்தியாக சங்பரிவாரம் உருவெடுத்திருப்பதை நாம் அறியலாம்.
நீதித்துறை, காவல்துறை, அரசதிகாரம் உள்ளிட்ட களங்களில் சங்பரிவாரம் ஊடுருவியிருப்பதால் அது நிகழ்த்தும் பல கொடூரங்களை மிக எளிதாக அதனால் மூடிமறைத்து விடுவதை சுதீஷ் கவனப்படுத்துகிறார். அதுபோல, எந்த அளவுக்கு சங்கிகள் இழிவான செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதற்கு புத்தகத்தில் ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. மதமாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் ஒருவரை இளம் பெண்கள் மூலம் வீழ்த்தி, அதை வீடியோ எடுத்து மிரட்டி அவரை மதம் மாற்றியிருக்கிறார்கள் சங்கிகள்!
நூலாசிரியர் கேரளாவைச் சார்ந்தவர் என்பதால் அதை மையப்படுத்தியே அவரது ஆக்கம் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் அரசியல், கல்வி, பொருளாதர வளர்ச்சியோடு திகழும், இடதுசாரி அரசியல் மேலோங்கியிருக்கும் கேரள மண்ணில் சங் பரிவாரத்தின் கட்டமைப்பு பலம் திகைக்க வைக்கிறது. காங்கிரஸ் அமைப்பிலுள்ள சில கருங்காலிகள், பணத்தாலேயே எல்லாப் பிரச்னைகளையும் முடிமறைத்துவிடலாம் என்று கருதும் சில முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார் சுதீஷ்.
ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு வெளியேறி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ள நூலாசிரியர் ஆர்எஸ்எஸ்-க்கு மாற்றாக சிபிஎம் கட்சியைப் பார்ப்பது அவரது தனிப்பட்ட அரசியல் உரிமை; அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ்-ன் முதல் எதிரிகளாகக் குறிவைக்கப்படும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக இயங்கும் இஸ்லாமிய இயக்கங்களை தீவிரவாத இயக்கங்கள் என அவர் சுட்டுவது கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்கள் விஷயத்தில் சிபிஎம் கட்சிக்கே உரிய தட்டையான பார்வைகள் நூலாசிரியரிடமும் வெளிப்படுகிறது. இந்துத்துவத்தையும் அதன் முழு பரிமாணத்துடன் அணுகுவதில் அவரிடம் போதாமைகள் உள்ளன.
ராணுவக் கட்டுப்பாடோடு இயங்குவதாக பீற்றிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ்-சின் அலுவலகங்களில் பாலியல் அத்துமீறல்கள், அமைப்பின் நலத்திட்டங்களில் நடக்கும் ஊழல்கள், இவற்றையெல்லாம் கேள்விக் கேட்பவர்களை ஒற்றை உத்தரவின் மூலம் அடக்குதல் என ஒருபக்கம் நடக்க, சர்வாதிகாரக் கட்டமைப்பும், ஜனநாயக மறுப்பும் அந்த அமைப்பின் அடித்தளங்களாக இருப்பதை சுதீஷின் வாக்குமூலம் புலப்படுத்துகிறது.
அதுபோல, இத்தனை காலமாக உயர் சாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும், பனியா கும்பலின் தொழில் வளர்ச்சிக்கும் மட்டுமே தனது தொடர்புகளையும் செல்வாக்கையும் ஆர்எஸ்எஸ் பயன்படுத்தி வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள், பழங்குடியினரை இந்து வெறியூட்டி தங்களின் கட்டமைக்கப்பட்ட முஸ்லிம், கிறிஸ்தவ, கம்யூனிச எதிரிகளைக் கொல்லும் காலாட்படையாக மட்டுமே பயன்படுத்துகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நூலாசிரியரும் இதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நூலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால், ஆர்எஸ்எஸ் எனும் இந்தக் கொடூரக் கொலைகார உற்பத்திக் கூடத்தில் உருவாகி வரும் பல்வேறு படித்தரத்திலான அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் இருப்பும் பொறுப்பும் என்ன என்பதை உணர்ந்தே நம்மிடையே உலவுகிறார்கள். இவர்களோடு நட்பு பாராட்டுவதும், அரசியல் நாகரிகம் என்ற பெயரில் தடவிக் கொடுப்பதும் மிகவும் ஆபத்தானது.
ஆனால், ஆர்எஸ்எஸ் தீவிர தொண்டனும் முன்னாள் பிரதமருமான வாஜ்பேயி மறைவுக்கு நமது மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் கண்ணீர் சிந்தினர். தமிழகத்தில் 24 மணி நேரமும் கலவரத்தை ஏற்படுத்துவதிலும், மதவெறி தீவிரவாதிகளை உருவாக்குவதிலும் முன்னணியில் இருந்த ராமகோபாலன் மறைவுக்கு இவர்களின் சூழ்ச்சிகளை நன்கு அறிந்த திராவிட இயக்கத் தலைவர்களே கண்ணீர் வடித்து அறிக்கை விட்டனர். இதுவெல்லாம் வெட்கக்கேடானது இல்லையா?
சங்கி கும்பல் மனித இனத்தில் சேர்த்து எண்ணத்தக்க ஒரு கூட்டமல்ல; மனித உயிர்களைக் குடிப்பதை மதக் கடமையாக, தேச பக்தியாக எண்ணும் ஒரு ரத்த வெறிப்பிடித்த ஜோம்பி கூட்டம். அவர்களை அவர்களது பாணியிலேயே களத்தில் எதிர்கொள்வதும், இவர்களின் பிரச்சாரக் கொடூரங்களை முறியடிப்பதும் ஜனநாயக இயக்கங்களின் கடமை.
இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ஓர் அரசியல் கட்சியாக, ஆளும் அரசாக இந்தக் கொடிய வலைப்பின்னலின் அபாயங்கள் அறிந்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வளரவிட்டதுதான் இதுவரை ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த காங்கிரஸ் செய்த மாபெரும் தவறு. மாநிலங்களை ஆளும் மதச்சார்பற்ற கட்சிகளும் இவர்கள் விஷயத்தில் பாராமுகமாகவே இருந்துள்ளன. அதற்குக் காரணம் பெரும்பான்மை உணர்வும், சுய மதப்பற்றும், சிறுபான்மை மதங்கள் மீதான உள்ளார்ந்த வெறுப்பும் என்பதை அடித்துச் சொல்ல முடியும்.
மதச்சார்பற்ற கட்சிகளின் தவறுகளின் மீதுதான் தனது இந்துத்துவ சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பி இருக்கிறது ஆர்எஸ்எஸ். நாட்டை ஆரிய பார்ப்பனிய மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் இந்த நச்சுப் பாம்புகளுக்கு எவ்விதத்திலும் இடம் கொடுத்துவிடாமல் ஒரேயடியாகத் துடைத்தெறிவதுதான் இந்தியாவின் அமைதிக்கும், சக வாழ்வுக்கும் நல்லது.
சங் பரிவாரத்தின் உள்கட்டமைப்பு குறித்து அறிய விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் நரக மாளிகை.