அறிவியல் என்றால் என்ன?நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (1)

Loading

சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவியல் என்றால் என்ன? என்ற நூலை நண்பர் கொள்ளு நதீம் மூலமாகப் பெற்றேன். பொறுமையாக ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அறிவியல் குறித்துப் பல்வேறு புரிதல்கள் நமக்கு இருக்கலாம். பொதுவாக தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அறிவியலை நாம் புரிந்து வைத்திருப்போம். ஆனால், உண்மையில் அறிவியல் என்றால் என்ன, எவையெல்லாம் அறிவியல், எவையெல்லாம் அறிவியல் இல்லை, அறிவியல் எப்படி இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்துகிறது, மனிதர்களுக்கு இவ்வுலகம் குறித்த புரிதலை எப்படி மாற்றியமைக்கிறது என்பன பற்றி மிக விரிவாக இந்நூல் விளக்குகிறது.

இந்தக் கட்டுரையை புத்தக விமர்சனமாக அன்றி, எனக்குப் புரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதுகிறேன். இந்தப் பகுதி முதல் அத்தியாயம் பற்றியது. மீதமுள்ள அத்தியாயங்கள் குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

நான் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தபோது, அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கான விடை பிடிபடாமலேயே இருந்தது. பேராசிரியர்கள் இயற்கையை அறிவது என்று ஒரு வரியில் சொல்வார்கள் அல்லது ஒளி, வெப்பம், மின்சாரம் குறித்துப் படிப்பது என்று வரையறுப்பார்கள். ஒரு துறை பற்றி முழுமையாக அறியும் முன் அதுகுறித்த ஒரு ஆரம்பக்கட்டப் பிடிமானம் வேண்டுமல்லவா? அதைக் கொண்டுதானே மேற்கொண்டு அந்தத் துறையில் மேற்செல்ல முடியும்! இல்லாவிட்டால் நடுக்காட்டில் விட்டது போல்தான் ஆகும்.

சிறு வயதிலிருந்து இறை வழிபாடு, ஆன்மிக நாட்டம் அதிகம் என்பதால் அறிவியலை, குறிப்பாக இயற்பியலை ஆன்மிக அம்சங்களில் புகுத்தி, ஒன்றிணைத்துப் புரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவேன். தெளிவாகச் சொன்னால், அறிவியலாளர்களை ஆன்மிக அனுபவம் பெற்ற ஞானிகள் என்ற மதிப்பை எனக்குள் கொண்டிருந்தேன். அறிவியல், அறிவியலாளர்கள் ஆகியன குறித்த என் வரையறை சரிதானா என்று கேட்டால், பாதி சரி, பாதி தவறு!

தொடக்க காலம் முதல் தற்காலம்வரை அறிவியல் குறித்த வரையறைகளைப் பார்த்தால், குறிப்பிட்டு இதுதான் அறிவியல் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. ஏனெனில், அறிவியல் ஒன்றுபோல் இருப்பதில்லை. நாமறிந்த துறைகளான இயற்பியலின் கருத்தாக்கங்கள் உயிரியல் கருத்துகளோடு பொருந்துவதில்லை. அது வேறு, இது வேறு எனச் சொன்னாலும் இயற்பியலும், வேதியியலும், உயிரியலும் அறிவியல் என்ற வகைமைக்குள்தான் வருகின்றன. அவ்வாறே வரையறுக்கப்படுகின்றன.

என்னைக் கேட்டால், நாம் சிந்திக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏன் என்கிற கேள்விக்குள்ளும் அறிவியல்தான் உள்ளது. அறிவியக்கச் செயல்பாடுகள் அனைத்தும் அறிவியலே. ஆனால், இது அறிவியலாக அங்கீகரிக்கப்படுமா? இல்லை. முன்பு சொன்ன இயற்பியல், வேதியியல், உயிரியல், என எல்லாமும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து செயல்படும் ஒரு மாபெரும் நிறுவனமாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டுவிட்டது. இந்நூலின் முதல் அத்தியாயத்தில் என்னை ஆர்வம் கொள்ள வைத்தது என்னவென்றால் அறிவியல் அதிகாரத்தின் கையிலிருப்பதாக நூலாசரியர் குறிப்பிடுவது. “இதுதான் அறிவியல்” என்று நிர்ணயிக்கும் அதிகாரமுடையவர்கள் சொல்லும் வரையறைதான் அறிவியலா?

ஒரு தேசம் தனக்கான எல்லையை, மக்களை அடையாளப்படுத்துவது போல் அறிவியலும் தனக்கென ஒரு விதிமுறைகளை, அடையாளத்தைக் கொண்டுள்ளது. மட்டுமின்றி, அறிவியல் முழுமையாக எல்லா விஷயத்திலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

எனக்கு அறிவியல் கூற்று ஒன்று நினைவிற்கு வருகிறது. எட்டாம் வகுப்புப் புத்தகத்தில் பருப்பொருள் (matter) என்றால் என்ன என்ற கேள்விக்கு “Anything which occupies space is matter” என்று விளக்கம் கொடுத்திருப்பார்கள். அதாவது, இந்த வெளியில் எது இருந்தாலும் அது பருப்பொருள் என்று அர்த்தம். அதுபோல எல்லா விஷயத்திலும், இயற்கை பற்றிய தேடலிலும், விடைகளிலும், அரசு இயங்கும் விதங்களிலும், ராணுவச் செயல்பாடுகளிலும் , தனிமனித வாழ்க்கை போக்கிலும் அறிவியல் முழு செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. அது தொழில்நுட்பத்தோடும் உறவாடுகிறது. எதிலும் அறிவியலைத் தவிர்த்து நம்மால் இந்த உலகின் ஒரு நொடியைக்கூட தள்ள முடியாது.

வானம் பார்த்து பொழுதைச் சொன்னதும் அறிவியல்தான். ஆனால், கடிகார நேரம் மட்டுமே அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்படும். தெளிவாகச் சொன்னால், உண்மையை அறிவதில் பொத்தாம் பொதுவான சிந்தனையை அறிவியல் ஏற்பதில்லை. துல்லியத்தை (accuracy) அறிவியல் தேடுகிறது. துல்லியம் என்றால் அது முற்றிலுமான உண்மை என்று அர்த்தமில்லை. உண்மைக்கு நெருக்கமான பதில் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

இந்நூலின் முதல் அத்தியாயத்தை முடித்தபோது, தத்துவார்த்த புரிதல் என்ற இடத்திற்கு நான் செல்லவில்லை. அறிவியலின் வரையறை எல்லாவற்றிலும் உள்ளது என்ற புரிதலைப் பெற்றேன். குறிப்பாக, அறிவியல் அதிகாரத்தின் பிடியில் இருப்பது அல்லது அதுவே அதிகாரமாக மாறுவதுதான் என்னைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. இதே உணர்வு ஐன்ஸ்டினின் Ideas and Opinions நூலைப் படித்தபோதும் ஏற்பட்டது.

அரசியல் அதிகாரத்தோடும் ஆளும் வர்க்கத்தோடும் அறிவியல் ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் அவசியம் ஏன் ஏற்படுகிறது? மாபெரும் கண்டுபிடிப்பை தனிமனிதன் கண்டுபிடித்தால் அல்லது அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு உயரிய கருத்தாக்கத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அதிகாரத்தின் பக்கம் நெருங்க வேண்டியுள்ளது. அதற்கு அங்கீகாரம் பெற ஒரு குழுவை நாட வேண்டியுள்ளது. விளைவாக, ஓர் அறிவியலாளர் அங்கீகரிக்கப்படும்வரை அறிவியலாளரே அல்ல என்று சொல்வது போல் உள்ளது அல்லவா?

அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசின் நிதியைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதாலேயே அறிவியல் அரசோடும் அதிகார வர்க்கத்தோடும் ஒன்றிணைகிறது என்ற எண்ணம் இந்நூலின் முதல் அத்தியாயத்தை முடித்தவுடன் எனக்கு ஏற்பட்டது. மட்டுமின்றி, அறிவியல் வளர்ச்சியையும் கண்டுபிடிப்பையும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கத்தைக் குறித்த பார்வையையும் முதல் அத்தியாயம் வழங்கியது.

அறிவியலின் துணைகொண்டு ஒரு சமூகத்திற்குத் தீங்கு உண்டாகிறது என்றால் அதற்கும் அறிவியலார்களுக்கும் பொறுப்பு உண்டா என்றால் அவர்கள் பொறுப்பாக முடியாது என்பதே என் பார்வை. உதாரணத்திற்கு, மின்சாரம் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை நாம் எப்படி அறிந்தோம்? அதையும் நமக்கு ஓர் அறிவியலாளரே சொன்னார். காப்பர் கம்பியில் மின்சாரம் பாய்ந்து நம்மைத் தாக்காமல் இருக்க மின்சாரம் கடத்தாத பொருளைக் கண்டுபிடித்ததும் அறிவியலாளர்தான். அப்படியானால், ஒரு மனிதன் சக மனிதனைக் கொல்ல திட்டமிட்டு அந்த மனிதர் மேல் மின்சாரத்தைக் கொண்டு கொன்றால், அதற்கு மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானி எப்படி பொறுப்பாவார்? இந்த இடத்தில்தான் அரசும் அறிவியலும், சமூகமும் அறிவியலும் ஒன்றிணையும் புள்ளியில் அறம் சார்ந்த கேள்வி எழுகிறது.

(தொடரும்)

Related posts

One Thought to “அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (1)”

  1. பழனி

    தெளிவாக , நல்ல எழுத்துநடையில் உள்ளது.

Leave a Comment