குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஸியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதம்

Loading

ஃபலஸ்தீனின் கஸ்ஸா பகுதியின் மீது சென்ற ஆண்டு மே மாதம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தொடுத்தது. 11 நாட்கள் அது நிகழ்த்திய கோரத் தாண்டவத்தில் சுமார் 250 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். தற்போது அதேபோன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் கட்டவிழ்த்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் 31 ஃபலஸ்தீனர்களை அது கொன்றுள்ளது. 250க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர்.

அல்ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் முஹம்மது அபூ சல்மியா, காயமுற்றோரில் சிலர் ஐசியூவில் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் கூறுகையில், 2007 தொட்டு கஸ்ஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டிருப்பதால் அங்குள்ள மருத்துவமனைகளுக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் 40 சதவீதம் பற்றாக்குறை நிலவுகிறது. அவசர சிகிச்சைக்குத் தேவையானவற்றில் 30 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. இது ஃபலஸ்தீனர்களின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்கிறார்.

இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் திடீரென தொடுக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஃபலஸ்தீன் விடுதலைக்காகப் போராடும் ஆயுத இயக்கமான ஃபலஸ்தீன் இஸ்லாமிய ஜிஹாது (PIJ) மூத்த தலைவர்களில் ஒருவரான பஸ்ஸாம் அல்சாஅதி சில தினங்களுக்கு முன் வடக்கு மேற்குக்கரையில் உள்ள ஜெனினில் கைது செய்யப்பட்டார். இதற்கு பலமான எதிர்வினை வரும் என்று இஸ்ரேல் எதிர்பார்த்தது. எதிர்வினை ஏதும் வராத நிலையில், தனது வழமையான அட்டூழியங்களை அது கட்டவிழ்த்துவிடத் தொடங்கிவிட்டிருக்கிறது. ராக்கெட் ஏவுகணைகள் மூலம் PIJ பதிலடியும் கொடுத்திருக்கிறது.

தற்சமயம் இஸ்லாமிய ஜிஹாது இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலித் மன்சூரைக் கொன்றுவிட்டதாகவும், அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்திருப்பதாகவும் மார்தட்டிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். PIJ இஸ்ரேலைத் தாக்கத் திட்டமிட்டதால்தான் நாங்கள் தாக்குதலைத் தொடங்கினோம் என்று பசப்புகிறது இஸ்ரேல். ஃபலஸ்தீனர்களின் மண்ணைக் களவாண்டு, அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்க PIJ இயக்கம் திட்டமிட்டிருந்தாலும் அதற்கான தார்மிக உரிமை அவர்களுக்கு உண்டு என்பது வேறு விஷயம். ஆனால் இஸ்ரேல் தனது தாக்குதலுக்கு வழக்கம் போல் போலியான நியாயங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறது.

அமைதி திரும்ப எகிப்து முயற்சி மேற்கொண்டு வருவதாக PIJயின் செய்தித் தொடர்பாளர் தாரிக் சில்மி கூறியுள்ளார். கஸ்ஸாவை ஆளும் ஹமாஸ் இயக்கம் தற்போதைய விவகாரத்தில் ஆயுத ரீதியான தலையீடு ஏதும் செய்யவில்லை. அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயீல் ஹனியா இஸ்ரேலின் தாக்குதல்களை கூடிய விரைவில் நிறுத்த முயற்சிகள் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஸியோனிச இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வரும் நிலையில், கஸ்ஸா மீதான அதன் தாக்குதல் நடந்திருப்பது எதேச்சையானதல்ல. அதிகாரத்தைச் சுவைக்க வேண்டுமென்றால், ஃபலஸ்தீனர்களைக் கொல்வதில் தங்களை சிறந்தவர்களாக நிறுவ வேண்டிய தேவை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. ஒரு இனவாத தேசத்தில் இப்படியான படுகொலைகள் அரசியல் அதிகாரம் தருவதாக அமைவது வியப்புக்குரியதன்று.

மே 2021ல் இஸ்ரேல் நிகழ்த்திய போர்க் குற்றங்களை ஐநா மனித உரிமை கவுன்சில் விசாரித்து வருகிறது. அதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தைக் கலைக்குமாறு ஸியோனிஸ்டுகளும், அவர்களின் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இச்சூழலில் தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் இஸ்ரேலால் தொடுக்கப்படுகிறது.

இறுதியாக ஒன்று. இஸ்ரேல் தீவிரவாதிகளால் உருவான நாடே. அதன் பயங்கரவாதத்தை ஆதரிப்போரும் பயங்கரவாதிகள்தாம். சிவிலியன்களைக் கொல்வது நியாயமற்றது, அறமற்றது. இப்படியான குற்றங்களை இழைக்கும் ஸியோனிச இஸ்ரேலும், அதன் பாதுகாவலர்களும் ஆதரவாளர்களும் குற்றவாளிகளே.

Related posts

Leave a Comment