கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலம் அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்த ஒன்று என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) போன்ற இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. இறைத்தூதர்களின் பூமி எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டதுவரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

தற்சமயம் அந்தப் புனிதமிகு மண்ணில் ஃபலஸ்தீனர்களுக்கு எதிராக ஸியோனிச இஸ்ரேல் நிகழ்த்திக்கொண்டுள்ள இனச்சுத்திகரிப்பு சர்வதேச முஸ்லிம்களிடையே கடும் கோபத்தையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு நாடுகளில் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கத்தார், குவைத், எகிப்து, பாகிஸ்தான், லெபனான், சவூதி அறபியா, ஈரான், துருக்கி, துனீசியா முதலான நாடுகளும் இஸ்ரேலுக்குத் தம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

றமளான் மாதத்தின் தொடக்கம் முதலே ஃபலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கெடுபிடி தொடங்கிவிட்டது. பொதுவாக இந்தப் புனிதமிக்க மாதத்தில் முஸ்லிம்கள் கிழக்கு ஜெருசலேமின் டமாஸ்கஸ் கேட் எனும் பகுதியில் பெருமளவில் ஒன்றுகூடுவது வழக்கமான ஒன்று. அதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. பிறகு நான்கு நாட்கள் கழித்து ஏப்ரல் 16ம் தேதி, றமளானின் முதல் வெள்ளிக்கிழமையென்று, 10,000 பேர் மட்டுமே மஸ்ஜித் அல்அக்ஸாவில் நுழைய முடியுமென்று கட்டுப்பாட்டு விதித்தது. இதனால் அங்கு தொழுகைக்காக வந்த பல்லாயிரக்கணக்கானோர் திருப்பியனுப்பப்பட்டனர்.

இப்படியே தொடர் பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 7) பூட்ஸ் கால்களுடன் அல்அக்ஸா பள்ளிவாசலினுள்ளே அராஜகமாக நுழைந்து இஸ்ரேல் காவல்துறை வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்தது. கண்ணீர்ப்புகை குண்டு வீசுதல், ரப்பர் குண்டுகளால் சுடுதல், ஸ்டன் கிரேனட்டை வீசுதல் போன்றவற்றால் 29 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் அஞ்சாமல் மறுநாளும் லைலத்துல் கத்ர் அன்று அல்அக்ஸாவில் 75,000 ஃபலஸ்தீனர்கள் தொழுகைக்காக ஒன்றுகூடினர். வாகனங்களை நகரினுள்ளே இஸ்ரேல் அனுமதிக்காதபோதும், நடந்துவந்து மக்கள் அங்கு திரண்டிருந்தனர். அன்றைக்கும் ஒரு வயது குழந்தை உட்பட 80 பேருக்கு காயம் ஏற்படுத்தியது இஸ்ரேல் காவல்துறை.

1967ல் நடந்த 6 நாள் போரில் ஜோர்டான் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் களவாடியதை ஒவ்வொரு ஆண்டும் ஸியோனிஸ்டுகள் ஜெருசலேம் தினம் என்ற பெயரில் கடைப்பிடிப்பார்கள். இஸ்ரேலியக் கொடிகளை ஏந்திக்கொண்டு ”அறபியர்கள் ஒழிக”, ”அறபுகளே வெளியேறுங்கள்” என்றெல்லாம் வெறிக்கூச்சலிட்டபடி முஸ்லிம்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் வருவார்கள். கடந்த திங்களென்று (மே 10) ஸியோனிஸ்டுகள் இப்படியான பேரணிக்குத் திட்டமிட்டது ஜெருசலேமில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருந்தது.

சமீபத்தில் செய்கு ஜர்ரா எனும் பகுதியில் 6 ஃபலஸ்தீனக் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து இம்மாதம் வெளியேறுமாறு நிர்பந்தித்த இஸ்ரேல் நீதிமன்றம், அங்கே யூதக் குடியேற்றத்துக்கு வகை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தது. போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தீர்ப்பை ரத்து செய்துவிட்டு அடுத்த மாதத்துக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது. இது ஃபலஸ்தீனப் போராளிகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ளப்படுகிறது. செய்கு ஜர்ராவில் இஸ்ரேலியக் குடியேற்றம் செய்வதற்கு எதிரான போராட்டத்தை காவல்துறை அதற்கே உரிய பாணியில் ஒடுக்கியது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது ஃபலஸ்தீன் பிரச்னை தீவிரமடைய இதுவொரு முக்கியக் காரணமாக விளங்குகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனிலுள்ள ஐநாவின் OCHA அலுவலகம் தரும் தகவலின்படி, கிழக்கு ஜெருசலேமில் மே 7 முதல் 10 வரையிலான நாட்களில் மட்டும் 1,000 ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படைகளால் படுகாயமுற்றுள்ளனர். அவற்றில் 735 பேர் ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள். மே 10ம் தேதி காயமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 657 என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போதைய பிரச்னையில் பெரிதும் விவாதிக்கப்படும் செய்கு ஜர்ரா விவகாரம் பற்றி இங்கு சுருக்கமாக விளக்குதல் தகும். பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து இஸ்ரேல் எனும் ஒரு களவு தேசம் உருவானபோது, ஃபலஸ்தீனர்களை பல பயங்கரவாத யூத இயக்கங்கள் இனப்படுகொலை செய்தன. மேலும், தங்களின் சொந்த மண்ணை விட்டே அவர்களை அண்டை நாடுகளுக்கு விரட்டியடித்தன. அப்போது 15,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு, 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டனர் (இதை நினைவுகூரும் விதமாகவே மே 15 நக்பா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது).

அச்சமயத்தில் தம் வீடுகளை இழந்த 28 குடும்பங்கள் 1956ல் செய்கு ஜர்ராவில் குடியேறின. மேற்குக்கரை ஜோர்டான் ஆட்சிக்குட்பட்டிருந்த அக்காலகட்டத்தில் (1951-1967) இக்குடியேற்றம் நடந்தது. இது ஜோர்டான் அமைச்சகம் மற்றும் ஐநா அகதிகள் முகமை (UNRWA) ஆகியவற்றுடன் உடன்படிக்கை செய்துகொண்டதன் அடிப்படையில் நடந்தது. தற்போது செய்கு ஜர்ரா இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை இஸ்ரேலுக்குரியதாக சர்வதேச சமூகம் ஏற்கவில்லை என்றாலும் ஸியோனிஸ்டுகள் வஞ்சகமாக அங்கு யூதமயமாக்கலைச் செய்ய பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். 1948க்கு முன்பு யூதர்கள் வசமிருந்த நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்ற இனவாதச் சட்டத்தை 1970ல் கொண்டு வந்தது இஸ்ரேல். இதே உரிமையை அது ஃபலஸ்தீனர்களுக்கு வழங்கவில்லை. ஸியோனிஸ்டுகள் தந்திரமாக நிலங்களை விலை கொடுத்து வாங்குவது, வன்முறையாக யூதக் குடியிருப்புகளைக் கட்டுவது மட்டுமின்றி இப்படி ’சட்டப்பூர்வமாக’வும் நில அபகரிப்பைச் செய்கிறார்கள்.

ஜெருசலேம் தினத்தன்று பதற்றமான சூழல் நிலவிய கடந்த திங்கள்கிழமை அல்அக்ஸா வளாகத்தினுள் இஸ்ரேலிய காவல்துறை மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அதில் 330க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர். குறைந்தபட்சம் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்கிறது ஃபலஸ்தீன் ரெட் கிரசெண்ட் அமைப்பு.

அச்சமயத்தில் இஸ்ரேலியப் படை பள்ளிவாசலிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது கஸ்ஸாவை ஆட்சிபுரியும் ஹமாஸ் இயக்கம். ஹமாஸ் தந்த காலக்கெடுவை மீறி இஸ்ரேல் தன் அட்டூழியங்களைத் தொடரவே ராக்கெட்டுகளை இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஏவியது ஹமாஸ். கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக ஜெருசலேம் பகுதியை ஹமாஸின் ராக்கெட்டுகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் தொடுத்து வருகிறது. உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை தற்போது 7, காயமுற்றோர் சுமார் 250.

மேலும், இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகள், பீரங்கிகள் முதலானவை மூலம் தாக்கியதில் இதுவரை 16 குழந்தைகள் உட்பட 65 பேர் பலியாகியிருக்கிறார்கள்; 365 பேர் காயமுற்றுள்ளார்கள். உக்கிரமாக இஸ்ரேல் கஸ்ஸாவைத் தாக்கி வருகிறது. அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் முதலான பல கட்டடங்களைத் தாக்கி அழித்திருக்கிறது இஸ்ரேல். சர்வதேச சட்டங்கள் எதையுமே பொருட்படுத்தாமல் தொடர்ந்து போர்க் குற்றங்களில் மூர்க்கமாக ஈடுபடுகிறது. ஹமாஸும் தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது. பொருளாதாரக் கேந்திரமாகக் கருதப்படும் டெல் அவிவ் மீது அது ராக்கெட் தாக்குதல் தொடுத்திருக்கிரது.

2014ல் கஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்திய கோரத் தாண்டவத்தை தற்போதைய நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன. அன்று கஸ்ஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்கியதோடு, 2,100 பேரைக் கொன்று குவித்தது இஸ்ரேல். ஆனாலும், எப்போதும்போல இப்போதும் இஸ்ரேலின் நாசகர ஆயுதங்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், இறைவன் மீது தவக்குல் வைத்து நெஞ்சுரத்துடன் ஸியோனிஸ்டுகளுக்கு எதிராக ஃபலஸ்தீன மக்கள் சண்டையிடுகின்றனர். அவர்களுக்கு வல்ல இறைவன் ஈருலகிலும் மகத்தான வெற்றியை நல்க வேண்டுமென்று நாம் பிரார்த்திப்போம்.

அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக கருத வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப்படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். (திருக்குர்ஆன் 14:42)

Related posts

One Thought to “என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?”

  1. […] மாதம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தொடுத்தது. 11 நாட்கள் அது நிகழ்த்திய கோரத் […]

Leave a Comment