கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

நடிகர் விவேக் மரணமும் கொரோனா தடுப்பூசி அச்சமும் – சில குறிப்புகள்

Loading

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இரு தினங்களுக்குமுன் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததற்குக் காரணம் அவர் அதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசிதான் என்ற அச்சம் இன்று பொது மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக இயற்கை மருத்துவம் போன்ற முறைகளை உயர்த்திப்பிடிப்போர் தடுப்பூசி அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி, நிலவும் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு எதிர்முனையில் தடுப்பூசி பாதுகாப்பானது; கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அது அவசியமானது என்று அரசும் மருத்துவர்களும் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலரும் அமைச்சரும் ஒரே குரலில் தெரிவித்திருக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை

கொரோனா இரண்டாவது அலை மேலுக்கு வந்திருப்பதும் இது முந்தைய அலையைக்காட்டிலும் அதிவேகமாகப் பரவுவதும் இந்நேரத்தில் மக்கள் ஒரு குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதும் துரதிருஷ்டவசமான ஒன்று. தமிழகத்தில் இம்மாதத்தின் தொடக்கம் முதலே கொரோனா பரவல் அதிகரித்திருப்பது தெரிகிறது. ஏப்ரல் 1ம் தேதிவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,89,490ஆக இருந்தது. அன்றைய தினம் மட்டும் புதிதாக தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 2,817ஆக இருந்தது. அன்றிலிருந்து 19 நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பின் எண்ணைக்கை 10,13,378ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10,986. இதன்படி பார்க்கும்போது, கடந்த 19 நாட்களில் மட்டும் 1,23,888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதும், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் வீதம் சரசரவென உயர்ந்துகொண்டிருப்பதும் தெரிகிறது.

இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 2,59,170 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முன்பைவிட இப்போது கொரோனாவின் வீச்சு அதிகரித்திருப்பதை தரவுகளுடன் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மேற்கூறிய தரவுகளும் அதையே நமக்கு உணர்த்துகின்றன.

பொதுவாகவே பெருந்தொற்று என்பது ஓய்ந்து, பிறகு மீண்டும் புது உத்வேகத்துடன் திரும்பவும் பரவும் தன்மை வாய்ந்தது என்பதைக் கடந்த கால அனுபவங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. சமீப கால வரலாற்றில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இன்ஃபுளுவென்சா (Influenza) இப்படியாகப் பரவிய ஒன்றுதான். அமெரிக்காவிலிருந்து பரவிய இந்நோய் ஸ்பானிஷ் ஃபுளு என்றும் அழைக்கப்பட்டது. இந்நோயால் உலகெங்கும் சுமார் 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள்; 5 கோடி பேர் இறந்துபோனார்கள். மூன்று அலையாக இன்ஃபுளுவென்சா மக்களைத் தாக்கியது. இரண்டாவது அலையில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது. இதுபோலவே கொரோனாவும் முதல் அலையைக்காட்டிலும் இரண்டாவது, மூன்றாவது அலையின்போது அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே இப்படியான கட்டங்களை கொரோனா கடந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உருமாறிய கொரோனாவின் தன்மை

கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் சஞ்சை ராய் நியூஸ் க்ளிக் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பல முக்கியமான விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியர்களில் 25% பேரும் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் 50% பேரும் ஏதோ ஒருவகையில் கொரோனாவைக் கடந்து வந்திருக்கிறார்கள் என்று கூறும் அவர், அதனால் இரண்டாம் அலை தொற்று இந்த அளவுக்குப் பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார். எதிர்ப்பு சக்தி மக்களிடம் தானாக உருவாகிவிடும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டதே அவர் இப்படிக் கூறக் காரணம்.

கொரோனா தொடர்பாக மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது என்பதைவிடவும் புதிய அலை தோன்றியதற்கு உருமாறிய வைரஸே காரணம் என்று வாதிடும் சஞ்சை ராய், தொடக்க காலத்தில் பரவிய வைரஸைவிட இதனுடைய பரவும் ஆற்றலும் இது ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார். உருமாறிய வைரஸ் மூன்று வகையில் இப்போது வகைப்படுத்தப்படுகிறது. யூகே, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் உருமாற்றம் (Variant) ஆகிய இம்மூன்றில் இந்தியாவில் யூகே வகையே 95% இருப்பதாகவும் 5% தென்னாப்பிரிக்க வகையும் 1% பிரேசில் வகையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவற்றுள் யூகே வேரியண்ட் மிகுந்த சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தடுப்பூசிகள் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்குமா?

இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கி பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா முதல் அலையால் பெரிய அளவுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் அவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக ஆராய்ச்சிகள் முறையாக நடத்தப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இன்று இரு நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைப்பதை நாம் அறிவோம். ஒன்று, பூனேவை மையமாகக் கொண்டு, அஸ்ட்ராஜெனகாவுடன் சீரம் நிறுவனம் (Serum Institute) இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட். மற்றொன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின். ரஷ்யா உள்நாட்டிலேயே தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சில தினங்களுக்குமுன் அரசு அனுமதியளித்துள்ளது. கூடியவிரைவில் அது புழக்கத்துக்கு வரக்கூடும். அதைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்களும் களமிறங்கலாம்.

அடிப்படையில் கொரோனா தடுப்பூசி என்பது ஒரு குறிப்பிட்ட வைரஸைச் செயலிழந்த / பலவீனமான வடிவில் மனித உடலுக்குள் செலுத்துவதன் மூலம், கொரோனாவுக்கு எதிராக பிறபொருளெதிரிகளை (antibodies) உருவாக்க உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்புக்குக் கற்றுத்தருவதுதான். தடுப்பூசி போட்டுக்கொள்பவர் உடலுக்குள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வைரஸ் நுழைந்தால் அவரின் நோயெதிர்ப்பு அமைப்பு உடனடியாக அதைக் கொன்றொழித்துவிடும். கோவேக்சின் என்பது செயலிழந்த வடிவில் கொரோனா வைரஸைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசியானது சிம்பன்சியில் காணப்படும் அடெனோ வைரஸின் பலவீனமான பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்த முறையில்தான் எல்லா வகையான தடுப்பூசியும் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அடிப்படையான விஷயம் என்னவென்றால், எந்தத் தடுப்பூசியும் 100% நோயைத் தடுக்கும் என்று உத்தரவாதமில்லை என்பது. அந்த வகையில், கோவேக்சின் 80% நோயைத் தடுக்கும் திறன்மிக்கது என்றும் அதேபோல் கோவிஷீல்ட் 70% திறன்மிக்கது என்றும் கூறப்படுகிறது. விகடனுக்கு ஏ.பி. ஃபரூக் அப்துல்லா எனும் மருத்துவர் அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார்:

”கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறைத் தடுப்பூசிகள் அனைத்தும் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவருக்குத் தீவிர நோய் ஏற்படாமலும் மரணத்தைத் தடுக்கும் அளவிலும் மட்டுமே செயல்படும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. அறிகுறிகளுடன் சாதாரண கொரோனாத் தொற்றும் ஏற்படலாம். கோவிஷீல்டு போட்டுக்கொண்ட ஒருவருக்கு 30% அறிகுறிகளுடன் கொரோனா வருவதற்கு வாய்ப்புண்டு. கோவேக்சின் போட்டுக்கொண்ட ஒருவருக்கு 20% அறிகுறிகளுடன் கொரோனா ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.”

தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா?

செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா, இல்லையா என்பதே இன்று காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, நடிகர் விவேக்கின் எதிர்பாரா மரணம் இந்த விவாதத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.

இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள் கொரோனாவின் யூகே வேரியண்டுக்கு எதிராகத் திறம்படச் செயல்படவல்லது என்று கருதப்படுகிறது. அவை பாதுகாப்பானதா என்றால் அலோபதி மருத்துவர்கள் ஆம் என்கிறார்கள்; இயற்கை மருத்துவம் போன்ற முறைகளை ஆதரிப்போர் இல்லை என்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி முதலான லேசான பக்கவிளைவுகள் வரும் என்பதை முன்னவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ரத்த உறைவு ஏற்படுதல் போன்ற தீவிரமான பக்கவிளைவுகள் அரிதினும் அரிதாகவே நடப்பதாக வாதிடுகிறார்கள். யூகேவின் மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 15% பேரில், அதாவது 1.8 கோடிப் பேரில் 30 பேருக்கு மட்டுமே ரத்த உறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்சொன்ன விகடன் பேட்டியில்கூட அந்த மருத்துவர் ஒரு புள்ளி விவரம் தருகிறார்: ”இந்தியாவைப் பொறுத்தவரை, மார்ச் 31, 2021 வரை 6.3 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அவர்களுள் தடுப்பூசி போட்டுக்கொண்ட 28 நாட்களுக்குள் 180 பேர் மரணமடைந்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் குறித்து தேசிய தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் குழு ஆய்வு செய்துவருகிறது. இந்த அளவு என்பது ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டால் 0.3 என்ற மிக மிகக் குறைவான அளவிலேயே வருகிறது” என்கிறார் அவர்.

அலோபதியும் மாற்று மருத்துவ முறைகளும்

கொரோனாவை அரசும் அலோபதி மருத்துவர்களும் எதிர்கொள்ளும் விதம் குறித்து பல்வேறு ஐயங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாற்று மருத்துவ முறைகள் பயில்வோர் அலோபதி உலகு மீது தொடர்ந்து கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர். அவற்றை ஒட்டுமொத்தமாக நாம் அலட்சியப்படுத்திவிட இயலாது.

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் அலோபதி முறையானது மற்ற எல்லா மருத்துவ முறைகளையும் மதிப்பிழக்கச் செய்து தந்திரமான வகையில் தன் இருப்பை நிறுவியிருக்கிறது. மாற்று மருத்துவ முறைகள் அதன் மீது வைக்கும் எல்லா விமர்சனங்களும் அவை எடுக்கும் முன்னெடுப்புகளும் establishment மூலம் பலவந்தமாக ஒதுக்கித்தள்ளப்படுகின்றன. முட்டாள்தனம், மூட நம்பிக்கைகள் என்றெல்லாம் அவை எள்ளிநகையாடப்படுகின்றன. இந்த அணுகுமுறை சிக்கலானது, தவறானது.

மாற்று மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் அக்கப்போருகள் குறித்தும் இங்கு சொல்லியாகவேண்டும். பொய்ச் செய்திகளையும் மக்களை அச்சுறுத்தும் வதந்திகளையும் பலர் இதன் பேரால் பரப்பி வருகின்றனர். இன்று இதுவொரு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி பலரின் உயிரோடு இவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இன்றைக்கு நாம் மாற்று மருத்துவ முறைகளின் தேவைகள், அதன் பிரச்னைகள் என பல கோணங்களில் விவாதங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா, வேண்டாமா?

கொரோனா, தடுப்பூசி பற்றியெல்லாம் ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் இன்றைக்கு நடந்துவருகின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றையே நாம் இதுவரை பார்த்தோம். ஆனால் சாமானிய மக்களுக்கு இருப்பது மிக எளிய கேள்வி, தடுப்பூசி போட்டுகொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் அது. முன்னர் குறிப்பிட்ட டாக்டர் சஞ்சை ராயின் நேர்காணலில், ஏற்கனவே கொரோனாவை எதிர்கொண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். இயற்கையாகவே அவர்களின் உடலில் இந்த வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்பதால் இக்கருத்து முன்வைக்கப்படுகிறது.

கொரோனா வராதவர்களுக்கு ஊசி போடுவதால் இறப்பு விகிதம் குறைக்கப்படும் என்ற கருத்தை அரசும் மருத்துவர்களும் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இந்தக் கருத்து பரிசீலிக்கத்தக்கது. ஏனெனில், தற்போதைக்கு நடைமுறை ரீதியாக இதற்கு மாற்று என உறுதியாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், நாம் அறிய வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், இந்தத் தடுப்பூசிகள் எல்லா வகையான உருமாறிய கொரோனாவையும் வீழ்த்திவிடும் என்பதற்கு இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, காலம்தான் சில வினாக்களுக்கான விடைகளைத் தர வல்லது என்றுதான் சொல்ல முடிகிறது.

இறுதியாக ஒன்று. தடுப்பூசி தயாரிப்பதற்கு அதிக எண்ணிக்கையில் மருந்து நிறுவனங்கள் உள்ளே வரயிருக்கின்றன என்கிறார்கள். அதற்கான தேவை அதிக அளவில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அது வணிகப் போட்டியை அந்நிறுவனங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. லாபத்தை மட்டுமே அவை இலக்காகக் கொள்வதால் நிச்சயமாக மக்கள் பெருமளவில் சுரண்டலுக்கு ஆட்படுவார்கள். என்ன செய்யப் போகிறோம் நாம்?

Related posts

Leave a Comment