கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவுற்ற பிறகும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வசித்து வருகிறார்கள். அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாததற்கு அவர்களின் ஊர்களிலிருந்து ராணுவம் முழுமையாக அகற்றப்படாதது, வலுப்பெற்று வரும் வலதுசாரி அரசு, வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு சரியான பொருளாதார வாய்ப்பின்மை எனப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இத்தனைக்கும் அவர்கள் தமிழ்நாட்டில் குறையற்ற வாழ்க்கையை ஒன்றும் பெற்றுவிடவில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் தீவிர நெருக்கடிக்கு உள்ளானார்கள்.  தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்போவதாக அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்படவில்லை என்றாலும், அதுவரையிலும் அவர்கள் இங்கு அனுபவித்த குறைந்தபட்ச சுதந்திரமும் சலுகைகளும் முற்றிலும் பறிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 115 அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் ஊருக்கு வெளியே, வாழத்தகுதியற்ற மோசமான நிலையில் இருக்கின்றன. அங்கு இருப்பவர்கள் காலையில் வேலைக்குக் கிளம்பினால் இரவு குறித்த நேரத்திற்குள் திரும்ப வேண்டும். ஒவ்வொரு முகாமில் இருக்கும் அகதிகளை எந்நேரமும் கண்காணிப்பதற்கு ’கியூ’ பிரிவு அதிகாரிகள் இருப்பார்கள். வெளியே சென்றவர்கள் சரியான நேரத்திற்குள் திரும்பவில்லையெனில் மறுநாளே தீவிர விசாரணை நடக்கும். முகாம்காரர்களை வெளியில் இருந்து உறவினர்களோ நண்பர்களோ பார்க்க வந்தால் உடனே கியூ பிரிவினரின் அறைக்கு அழைக்கப்படுவார்கள். முகாமில் வாழும் பெண்களுக்கும் எந்தப் பெரிய பாதுகாப்பும் இல்லை. பாலியல் சீண்டல்களை அவர்கள் அன்றாடம் உள்ளூர்க்காரர்களாலும் அரசு அதிகாரிகளாலும் அனுபவித்து வருகிறார்கள். முகாம்காரர்கள் அரிதாகவே பள்ளிப் படிப்பை முடித்தவர்களாக இருக்கிறார்கள். தப்பித்தவறி ஏதாவது சிறிய கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தாலும், கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அவர்களுக்கு இங்கே வழங்கப்படமாட்டாது. ஆண்களில் பெரும்பாலானோர் முகாம் அமைந்திருக்கும் ஊர்களிலும், அருகில் இருக்கும் பெரு நகரங்களிலும் கட்டட வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் போகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்பக் காசும் மதுபானக் கடைகளின் கல்லாவிற்குச் சென்று சேர்கிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்காக சிலர் ஆஸ்திரேலியாவுக்கும் ஏனைய முதலாம் உலக நாடுகளுக்கும் செல்வதற்கு முயற்சி எடுக்கிறார்கள். சிறிய மீன்பிடிக் கப்பல்களில் ஏறி பெருங்கடல்களைக் கடக்கும் முயற்சியில் அவர்களில் பலர் மூழ்கி இறந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளின் இத்தகைய வாழ்வியல் பிரச்னைகள் குறித்து தொ.பத்தினாதன், அ.சி.விஜிதரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தியக் குடியுரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இங்கிருக்கும் தமிழ் அகதிகள் நெடுநாட்களாக எழுப்பிவரும் கோரிக்கை. 1983ல் இருந்தே இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் ஒரு சாரர் தற்காலிக யுத்த நிறுத்தத்தின்போதெல்லாம் தாயகத்திற்குத் திரும்பிச் செல்வதுண்டு. ஆனால், பலரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். இவர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழ்நாட்டில் அகதிகளாக வசிக்கின்றனர்.  இவர்களுடைய பிள்ளைகளும் இங்கு அகதிகளாகவே பிறக்கிறார்கள். அவர்கள் எவரும் இலங்கையை நேரில்கூட பார்த்திராதவர்கள். தங்கள் மொத்த வாழ்க்கையையும் இந்தியாவிலேயே செலவழித்தவர்கள். எனவே, பல வகைகளிலும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனும் அவர்களது கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், எந்தப் பிரதான அரசியல் கட்சிகளும் இவர்களின் இந்தக் கோரிக்கைக்கு முகம் கொடுக்கவில்லை.

இவ்வாறு அடிப்படை உரிமைகளற்று, அன்றாடம் பெரும் நெருக்கடிகளுக்கிடையில் வாழ்க்கையை நகர்த்தியபடி, இத்தேசத்தின் குடிகள் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழ அகதிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கும் சீரியல்தான் ஃபேமிலி மேன் 2.

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இந்த சீரியலின் கதைப்படி, இலங்கையில் செயல்பட்ட தீவிரவாத இயக்கமொன்றின் தலைவர் பாஸ்கரன்; லண்டனில் வசித்து வருகிறார். இவரும் இவரின் தோழர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதை இந்தியாவும் அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். அந்தக் கோரிக்கையை இங்குள்ள அரசியல்வாதிகளிடம் முன்வைப்பதற்கு பாஸ்கரனின் தம்பி சென்னை வருகிறான். இலங்கையுடனான தன் நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கு, பாஸ்கரனின் தம்பியை இலங்கை அரசிற்குப் பிடித்துத்தர முடிவு செய்கிறார் இந்தியப் பிரதமர். சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் அவனைக் கைது செய்கிறார்கள். ஆனால், சீக்கிரமே ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்படுகிறான் அவன். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ISIS தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் என்பவரோடு இணைகிறான். அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்கள். அத்தாக்குதலை நடத்தவிருப்பவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஈழத் தமிழர்கள். அவர்கள் இலங்கையில் பாஸ்கரனின் இயக்கத்தில் தீவிரப் பயிற்சி பெற்ற போராளிகள் மட்டுமல்ல, தலைவரிடமிருந்து எப்போது உத்தரவு வந்தாலும் மனித வெடிகுண்டுகளாகவும் மாறக் காத்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள். பாஸ்கரனின் இத்திட்டம் குறித்து இந்தியப் புலனாய்வுத் துறைக்குத் தெரிய வருகிறது. எவ்வாறு பாஸ்கரனின் திட்டத்தை இந்தியப் புலனாய்வுத் துறை முறியடிக்கிறது எனபதுதான் ஃபேமிலி மேன் சீசன் 2வின் கதையும் திரைக்கதையும்.

தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, ராஜீவ் காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் ஈழ அகதிகளின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகள் மிகுந்ததாக மாற்றமடைந்தது. வீடு, வாசல், உறவு, நட்பு என அனைத்தையும் தாயகத்தில் விட்டுவிட்டு இந்தியப் பெருங்கடலைத் தோணியில் கடந்து ஏதுமற்றவர்களாய் இங்கு வந்துசேரும் இலங்கைத் தமிழர்கள் அனைவரையுமே இந்திய அரசு தீவிரவாதிகளாய்ப் பாவிக்கத் தொடங்கியது. எந்நேரமும் அவர்கள் துப்பாக்கியைக் கையிலேந்தலாம், முக்கிய அரசியல் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் குண்டு வைத்துக் கொலை செய்யலாம் என்ற பார்வையை இந்திய அரசு வளர்த்தெடுத்துக்கொண்டது. எனவேதான் அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகள் முகாம் எனும் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளைப் போல நடத்தப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலை இலங்கையில் யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் மாறவில்லை. இந்நிலையில், சென்னையில் வைத்து இந்தியப் பிரதமரை, இங்கு அகதிகளாக வாழும் ஈழ விடுதலைப் போராளிகள் கொல்ல முயற்சிப்பதைக் கதையாகக் கொண்டிருக்கும் ஃபேமிலி மேன் 2 சமூக அரசியல் தளத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை நினைக்கையில் அச்சம் மேலோங்குகிறது.

தமிழ் அகதிகள் இங்கே அனுபவிக்கும் அன்றாடத் துயரங்களைப் பற்றி எதையுமே பேசவில்லை இந்த சீரியல். தொடக்கக் காட்சிகளில் பெண் போராளியான ராஜி சென்னைப் பேருந்திலும் பணியிடத்திலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகச் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வர்க்க, சாதி, மத பேதமின்றி பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்திலாவது இக்கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பது கசப்பான எதார்த்தம். மற்ற பெண்களுக்குச் சட்டம் எழுத்தளவில் தரும் குறைந்தபட்ச பாதுகாப்புகூட அகதிப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும் எதார்த்தம்தான். ஆனால், ராஜி ஒரு அகதியாக இருப்பதால்தான் இவ்வாறு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறாள் எனும் ரீதியில்கூட காட்சிகள் அமைந்திருக்கவில்லை. இப்படி இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரத்தைத் துளியும் பதிவு செய்யாமல், அவர்களைப் பற்றி அரசு கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் கருத்தாக்கத்தையும் மறுஉற்பத்தி செய்யும் வேலையை மட்டுமே செய்கிறது ஃபேமிலி மேன் 2. அதிலும் இந்த சீரியலின் ஆறாவது எப்பிசோடில் ஒரு கடலோரக் கிராமமே ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக அக்கிராமத்தார்கள் துப்பாக்கி ஏந்தி காவல் நிலையத்தை அழித்தொழிப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அன்றும், இன்றும் ஈழ விடுதலைக்குத் தீவிர ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பது உண்மைதான். ஆனால், எந்த ஆதரவாளர்களும் எந்தக் காவல் நிலையத்தையும் இங்கு அழித்ததில்லை. திரைமொழியில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்தகைய பல காட்சிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த சீரியல். அவை ஈழ அகதிகள் பற்றியான பெரும் அச்சத்தைப் பொதுவெளியில் உருவாக்கும் பணியைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், உலகம் முழுவதுமே அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள்மீது வலதுசாரிகள் திட்டமிட்டு ஒவ்வாமையையும் எதிர்ப்பையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவிலும், வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போதெல்லாம்  பாரதிய ஜனதா கட்சியும், பிராந்திய வலதுசாரிக் கட்சிகளும் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளை ஊடுருவிகளாகவும் தீவிரவாதிகளாகவும் முத்திரை குத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.   

இந்த சீரியலின் முன்னோட்டம் (trailer) வெளியானதும் இணையதள தமிழ்ச் சமூகத்திடமிருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளும் கட்சிகளும் ஃபேமிலி மேன் தொடரைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பின. ஜூன் 5ம் தேதி இத்தொடர் வெளியானதையொட்டியும் காட்டமான விமர்சனங்கள் வந்தன. விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இழிவாகச் சித்தரிக்கும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக நாம் தமிழர் முதலான தமிழ்த் தேசிய அமைப்புகள் கருதினார்கள். ஈழப் போராளிகள் மது அருந்துவதாகவும் கெட்ட வார்த்தைகள் பேசுவதாகவும் காட்டியிருப்பது ஏற்புடையதாக இல்லை என்றார்கள். எனவே, ஃபேமிலி மேனைத் தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி அமேசானைப் புறக்கணிப்போம் (Boycott Amazon)  எனும் பிரச்சாரம் ட்விட்டரில் முன்னெடுக்கப்பட்டது. இத்தகைய எதிர்ப்புகள் இருந்தாலும், தமிழ்ப் பார்வையாளர்கள் பலரும் ஈழப் போராளிகள் இத்தொடரில் கண்ணியமாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கருதினார்கள்.  அதையொட்டி அவுட்லுக் இணைய இதழ் “The Family Man 2 Silences its Tamil critics with Enough Pro-Tamil Sentiments” எனும் தலைப்பில் கட்டுரையொன்றைக்கூட வெளியிட்டிருக்கிறது.

இதில் மாபெரும் சிக்கல் என்னவென்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதாரவான விஷயங்கள் இத்தொடரில் வெற்று வசனங்களாய் இடம்பெறுவதுதான். சினிமாவும் இத்தகு சீரியல்களும் காட்சி ஊடகங்கள். இதில் இடம்பெறும் வசனங்களைவிட சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளே பார்வையாளர்களிடம் அதிகத் தாக்கத்தைச் செலுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கின்றன. இந்த சீரியலில் ஈழப் போராளிகள் தங்கள் எதிரிகள் மீது நிகழ்த்தும் தாக்குதலும் வன்முறையும் மட்டும் நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள்மீது சிங்கள அரசு நடத்திய பயங்கரவாதமோ வெறும் வசனங்களாகக் கடந்து போகிறது.  எனவே, இலங்கை இன அழிப்பைக் குறித்து ஏதும் அறியாத பார்வையாளர் ஃபேமிலி மேன் தொடரைப் பார்க்கும்போது, இலங்கை அரசின் வன்முறையைக் காட்டிலும், ஈழ விடுதலைப் போராளிகளின் வன்முறைதான் பூதாகரமாகத் தெரியும். இதே சிக்கல் கமல் ஹாசனின் ’ஹே ராம்’ படத்திலும் இருந்தது. வங்கப் பகுதியில் பிரிவினையின்போது நடந்த ஹிந்து-முஸ்லிம் கலவரத்தை நேர்மையாகச் சித்தரிப்பதாகப் பறையசாற்றியது அப்படம். ஆனால், இந்துக்களின் மீது இஸ்லாமியர்கள் நிகழ்த்திய வன்முறையை மட்டும் அத்தனை விரிவாகவும் நுட்பமாகவும் காட்டிவிட்டு, இஸ்லாமியர்களை இந்துக்கள் கொல்லும் காட்சியை ரத்தினச் சுருக்கமாகவும் சின்னச் சின்ன வசனங்களில் புதைத்தும் வைத்திருப்பார் இயக்குநர்.

மேலும், இத்தொடர் முன்னிறுத்தும் தீவிர இந்திய தேசியவாதத்திற்கு எதிரான சில விமர்சனங்களும் உள்ளேயே பொதிந்துள்ளன. உதாரணமாக, கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி இந்த சீசனின் தொடக்கத்தில் புலானாய்வு அமைப்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐடி கம்பெனியொன்றில் பணிபுரியத் தொடங்குகிறான். காரணம், சென்ற சீசனில் துடிப்பான ஓர் இஸ்லாமிய இளைஞனை அவனும், அவன் குழுவும் தீவிரவாதியென நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். அவன் தீவிரவாதி அல்ல என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும், அது தேசத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால் ஸ்ரீகாந்தின் மேலதிகாரிகள் அதனை வெளியிட மறுக்கிறார்கள். இது கதாநாயகனுக்குக் குற்றவுணர்வைத் தந்து, புலானாய்வு வேலையை ராஜினாமா செய்வதற்கான காரணங்களில் ஒன்றாய் அமைகிறது. இதுபோலவே, அரசு மற்றும் அரசு இயந்திரங்களின் நியாயமற்ற போக்குகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறது ஃபேமிலி மேன். எனினும், அவையெல்லாம் இத்தேசப் பாதுகாப்பிற்குத் தேவையான Necessary Evil என்பது போன்ற சித்திரத்தையே நமக்கு இறுதியில் வழங்குகின்றன. ராணுவ பாஷையில் சொல்வதென்றால் போரில் வெற்றியடைய Collateral Damage தவிர்க்க முடியாதது.

இப்பிரச்னைகளைத் தவிர, ஃபேமிலி மேன் முதல் சீசன் முழுவதும் பரவிக்கிடந்த இஸ்லாமிய வெறுப்பு இதிலும் சிதறிக்கிடக்கிறது. இந்தியாவில் எந்தப் பிரச்னை நிகழ்ந்தாலும் அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பங்கு இருக்கும் எனும் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இரண்டாம் சீசன்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்துத்துவவாதிகள் இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் ‘லவ் ஜிஹாது’ செய்கிறார்கள் எனும் அயோக்கியத்தனமான குற்றசாட்டை முன்வைத்தார்கள். தலித்துகள், மற்ற சாதிப் பெண்களை நாடகக் காதல் செய்கிறார்கள் என மருத்துவர் ராமதாஸ் சொன்னதைப் போல, முஸ்லிம்கள் இந்துப் பெண்களைப் பொய்யாகக் காதலித்து, திருமணம் முடித்து மதமாற்றம் செய்கிறார்கள் எனும் கருத்தைப் பரப்பினார்கள். இந்த சீரியலில் கதாநாயகனின் பதின் பருவ மகளை ஒரு இஸ்லாமியச் சிறுவன், கல்யாண் எனும் இந்துப் பெயரைச் சூட்டிக்கொண்டு காதலிக்கிறான். அந்தச் சிறுவன் சாதாரண இஸ்லாமியச் சிறுவனல்ல, தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். தன் பெற்றோரைக் கொன்ற கதாநாயகனைப் பழிவாங்கவே அவன் மகளைக் காதலித்து, கடத்துகிறான். அதுபோன்று இன்னும் பல அபத்தங்கள் ஃபேமிலி மேன் 2 முழுவதும் நிரம்பியுள்ளன. தேர்ந்த நடிப்பும் சுவாரசியமான திரைக்கதையும் இந்த சீரியலை கூடுதல் ஆபத்து மிக்கதாக மாற்றுகின்றன.

Related posts

Leave a Comment